
அத்தியாயம் 29
செவ்வாய் கிழமை காலை, அனிதா தன் தேடுதலின் முதல்கட்டமாக புத்தகப் பதிப்பகத்தாரின் அலுவலகத்தில் விசாரிக்க, அவர்கள் பரமானந்தத்திடம் சொன்னதையே இவளிடமும் கூறினர்.
அந்த அலுவலகம் ஒரு ஒடுங்கிய தெருவில் இருந்தாலும், தெருவின் ஆரம்பத்தில் இருந்ததால் அருகில் தேநீர் கடை, ஆட்டோ நிறுத்தம், சாலையோர கடைகள் என்று அந்த இடமே திருவிழா கொண்டதைப் போல் ஜேஜே என்றிருந்தது. முதலில் தேநீர் கடையில் ஆரவியின் புகைப்படத்தைக் காட்டி, அவளின் இரு சக்கர வாகனத்தையும் அடையாளமாகக் கூறி விசாரித்தாள். எப்போதேனும் வந்து போகும் ஆரவியை அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஆட்டோ நிறுத்தத்திலும் அவ்வாறே பதில் கிடைத்தது. சற்றுநேரம் யோசித்துவிட்டு, சாலையோர கடைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு களைத்தாள். ஆரவி காணாமல் போன அன்று மாலையும், மறுநாளும் மழையின் காரணமாக யாரும் கடை போட்டிருக்கவில்லை. எனவே யாருக்கும் எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை.
நம்பிக்கையை விடாமல் மீண்டும் சில கடைகளில் விசாரித்தாள். அதிர்ஷ்டவசமாக ஒரு கடை நபரின் மகன், அனிதாவின் சிக்கலான நூல்கண்டின் முனையைப் பிரித்துக் கொடுத்தான். அது என்னவென்றால்,
"மூணு நாள் முந்தி சாயங்காலம் படா பைக்ல ஒருத்தன் வந்தான்க்கா. ஆள் 'இமைக்கா நொடிகள்' அதர்வா மாதிரி அட்டகாசமா இருந்தான்க்கா." என்றவன் தலையை சொறிய, அனிதா அவனை மேற்கொண்டு சொல்லுமாறு ஊக்கினாள்.
"அது வந்துக்கா… வந்தவன் என்னைக் கூப்பிட்டு, நீ சொன்ன ஸ்கூட்டில (ஆரவியின் ப்ளஷர்+ 110) இருந்து பெட்ரோல் எடுக்க சொன்னான்." என்றுவிட்டு அவள் முகத்தைப் பாராமல் குனிந்தவாறே, "ப…பணத்தை நீட்டினதும்… நானும் யோசிக்காம…" என்று இழுத்தான்.
அதைக் கேட்டதும் அனிதாவிற்கு கட்டுக்கடங்காத கோபம்! "பணத்தை நீட்டினா யார் என்ன சொன்னாலும் செஞ்சுடுவியா? நீ செஞ்ச காரியத்தால இன்னிக்கு பெத்தவர் பொண்ணைக் காணும்னு தவிச்சிட்டு இருக்கார் தெரியுமா?" என்று இரைந்தாள்.
"சாரிக்கா. பணமும் கொடுத்து, எடுத்த பெட்ரோலையும் நீயே வச்சிக்கோ சொல்லவும்… அப்டி செஞ்சுட்டேன். அப்புறம் என் நைனா வந்து திட்டுச்சு. ரொம்ப சாரி! எதுவும் பிரச்சினையாக்கா? பொண்ணுக்கு ஆபத்தா? செஞ்ச தப்பை சரி செய்ய முடிஞ்சா செய்யறேன். சொல்லுக்கா, என்ன செய்யட்டும்?"
"அவன் எந்த பைக்ல வந்தான்?"
"அது ஒரு யமஹா. நல்லா பெரிசா… ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருந்ததுக்கா."
'வாகன எண்ணைப் பார்த்தாயா?' என்ற கேள்விக்கு இல்லையெனத் தலையாட்டினான்.
ஆயாசமாக நிமிர்ந்தவளிடம், "ஆனா எதிர்ல அந்த ஜூஸ் கடையான்ட இருக்க, ஜெராக்ஸ் கடைல போய் யாருக்கோ போன் பேசினான்." எனவும், கண்களில் ஒளியோடு அவ்விடம் விரைந்தாள்.
'அங்கு சிசிடிவி கேமரா இருந்தால் வேலை சுலபமாகிவிடும். இன்றே வேலையை முடித்துக் கொடுத்து, அந்த சொட்டை தலையில் ஃபுட்பால் விளையாடிவிடலாம்.' என்று குதூகலித்து சென்ற அனிதா, ஒட்டடை குச்சியையே பல நாள் காணாத, சிலந்திகள் ஊஞ்சல் கட்டி தலைகீழாக பாலே ஆடிக் கொண்டிருந்த அந்த ஜெராக்ஸ் கடையைக் கண்டதும் தன் பேராசையைக் குழி தோண்டாமலேயே அழுத்தி மிதித்து புதைத்தாள். கடை உரிமையாளரிடம் தன் அடையாள அட்டையைக் காட்டி, தன்னைப் பற்றியும், வந்த காரியத்தைப் பற்றியும் சொல்லிவிட்டு, அத்தொலைபேசியின் எண் மற்றும் விலாசத்தைப் பெற்றுக் கொண்டாள்.
உடனேயே தொலைபேசி மாற்றகத்தில் அந்த எண்ணைக் கொடுத்து விசாரித்தாள். தேவ்-வை அறிந்திருந்தவர்களும் தாமதிக்காமல் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதிலிருந்து வெளியே சென்ற அழைப்பு எண்களின் பட்டியல் கையில் கிடைத்ததும் பரபரவெனத் தேட ஆரவியின் எண் கிடைத்தது. பின், அந்த தொடர்பு பற்றிய விவரங்களைக் கூறி, அதிலிருந்த உரையாடலைக் கேட்க வேண்டுமென சொல்ல, அனுமதிக் கிடைக்கப் பெற்ற பின் உரையாடலை மிகவும் பொறுமையாகக் கேட்டாள்.
அதில் அவன் (விபுநந்தன்), ஆரவியின் பாட்டிக்கு திடுமென வலிப்பு கண்டுவிட்டதாகவும், உடனே வந்தால் மருத்துவமனை அழைத்துச் செல்லலாமெனவும் கூறி, ஏதோ ஓர் தெளிவற்ற முகவரியைக் குறிப்பிட்டுவிட்டு, பின் வேகமாக கிளம்பி வருமாறும் அவசரப்படுத்துகிறான்.
இந்த ஆரவியும் மடசாம்பிராணியைப் போல் பதட்டமாக பேசிவிட்டு கிளம்புவதாகச் சொல்கிறாள். அத்தோடு உரையாடல் முடிந்து போயிருந்தது.
அனிதா ஆரவியின் அலைபேசிக்கு அதற்கடுத்து ஏதேனும் அழைப்புகள் வந்திருக்கிறதா என, அவள் உபயோகிக்கும் வலைப்பின்னல் நிறுவனத்திற்கு சென்று அறிந்துகொள்ளும் பொருட்டு, மறுநாள் அவர்களிடமும் தன்னைப் பற்றி தெரிவித்து அனுமதி கேட்டு கொண்டாள். அங்கு சென்று அதனை ஆராய… ஆம்! அழைப்புகள் வந்திருந்தன. பின் அவற்றிலும் உரையாடலைக் கேட்க வேண்டுமெனவும், அங்கிருந்த ஊழியரும் ஒத்துழைக்க, அவ்வாறே நூல் பிடித்துக் கொண்டு இதோ… இன்று காலை எழுந்ததும் கிளம்பி வந்துவிட்டாள்.
இங்கு வருவதற்கு முன்னரே விபுநந்தனைப் பற்றியும், இவ்வீட்டின் உரிமையாளர் யாரெனவும், அவர் பிண்ணனி, குடும்ப விவரங்களையும் சேகரித்து தெரிந்துகொண்டாள்.
அத்தோடு தன் முதலாளி தேவ்வின் முகத்தில் கரியைப் பூசும் பொருட்டு, ஆரவி இருக்கும் இடத்தையும் அவரிடம் பகிர்ந்திருந்தாள். அவரும் அவள் கூறிய விவரங்கள் அனைத்தையும் கேட்டு, இரண்டே நாட்களில் வேலையை திருப்திகரமாக முடித்துவிட்டாளென மனதினுள் மெச்சிக்கொண்டு ஃபெர்னாண்டஸிடம் வேலை முடிந்ததைச் சொன்னார். அவரும் காலையில் ஊர் வருவதாக இருந்த பரமானந்தத்தை அழைத்து வருவதாகச் சொல்லியிருந்தார்.
மேலே பூக்காட்டிற்குள் தானும் ஒரு பூவாய் மாறி, வீசும் காற்றுக்கு ஹலோ சொல்லிக் கொண்டிருந்த அனிதாவிற்கு திடுமென தேவ்வின் முகம் நினைவு வந்து கண்களை உருட்ட, 'ஹய்யய்யோ வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கேன்? இது மட்டும் அந்த ஓல்டு மேனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்!' என்று திரும்பி பார்க்க, அங்கு ஒருவரும் இல்லை. "எல்லாரும் எங்க போனாங்க?" என்று முழித்தவள், வேகவேகமாக கீழே ஓடி வந்தாள்.
அங்கு திரு.வெங்கட் அதீத உடல்மொழியோடு கித்தாய்ப்பாக இவளை அறிமுகப்படுத்தவே, கண்ணாடியை சரி செய்வதைப் போல் முகத்தை மீண்டும் மிடுக்காக மாற்றிக்கொண்டாள்.
புகைப்படத்தில் பார்த்திருந்ததால் இலகுவாகவே ஆரவியைக் கண்டுகொண்டாள். எனினும் அந்த நீலவண்ண சேலையில் அன்றலர்ந்த மலராய் நிற்பவளைப் பார்த்து, 'கடத்தி வரப்பட்ட பெண்ணா இவள்?' என்ற சம்சயம் உதித்தது.
"ஆரவி?" எனக் கேட்க ஆமோதிப்பாய் தலையாட்டினாள் அவள். "கடந்த வெள்ளிக்கிழமை நீ காணாம போயிட்டதா, அரை உசுரா ஓடி வந்த உங்கப்பா என் பாஸ்கிட்ட சொன்னார். ஆனா இங்க பார்த்தா அப்டி தெரியலயே…" என்று உறுத்து விழித்தவள் சுற்றி நின்ற அனைவரையும் பார்க்க,
சட்டென விபுநந்தன் முன்னால் வந்து, "நான்தான் ஆரவியை வரவழைச்சேன். அவளுக்கு எதுவும் தெரியாது." என்றான்.
"நீதான அவளுக்கு கால் பண்ணவன்?" எனக் கேட்க, அவனது மௌனமே பதிலானது.
"வாட் அ ப்ளானிங் ப்ரோ! உங்களை மாதிரி ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்கன்னா விளையாட்டு பொருளா தெரியறாங்க இல்ல?"
"ஹலோ! அவக்கிட்ட ஆல்ரெடி நான் ஸாரி கேட்டுட்டேன்." என்று விறைப்பாக சொன்னவன் திரும்பி ஆரவியை ஒருமுறை பார்த்துவிட்டு, "அவங்க வீட்லயும் யார்கிட்ட வேணும்னாலும் மன்னிப்பு கேக்கறேன்." என்றான், சின்னதாகிப் போன குரலில்.
குடும்பத்தினருக்கு தங்கள் பிள்ளை இவ்வாறு தலைகுனிந்து நிற்பதைக் காண சகிக்கவில்லை. இருப்பினும் அவன் செய்த அனர்த்தங்களின் விளைவல்லவா இது? அவன்தானே சரி செய்தாக வேண்டும்? பெண்ணைப் பெற்றவரைத் தவிக்க விட்டிருக்கிறானே?
எனினும் மனம் கேட்காமல் ரகுநந்தன் கோபமாக நின்றிருந்த அனிதாவிடம் சமாதானம் சொல்ல முன் வந்தார். அதற்குள் ஆரவியே அவளிடம் பேச ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கும் தன்னவன் அத்தனை சங்கடப்பட்டு நின்றதைப் பொறுக்க முடியவில்லை. அத்தோடு இங்கு வந்ததால்தான் இவள் சீதாவை உணர முடிந்தது. அவளை காணவில்லையெனில் இவளும் நந்தனை மன்னித்திருக்க மாட்டாளோ என்னவோ!
"ஏதோ ஒரு ஃபோன் கால் வச்சு இங்கே வந்து தெரியாம மாட்டிக்கிட்டேன். ஆனா இப்ப இங்கே எல்லாரையுமே நல்லா தெரியும். இந்த ஆறு நாளா எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. அப்பாகிட்ட நான் பேசறேன்." என்று தயங்கி தயங்கி கூறி முடித்தாள்.
அவளின் மனமாற்றத்தைக் கண்ட அனிதா, "அஞ்சு நாளைக்கு முன்னாடி யாருன்னே தெரியாத ஒருத்தன் மேல காதல்? ம்ம்??" என்று இருவரையும் மாறி மாறி பார்த்து நக்கலாகக் கேட்டுவிட்டு, "இதுக்கு ஃபேமிலி மொத்தமும் சப்போர்ட்?" என்றாள் எள்ளலாக!
இல்லை அவர்கள் இப்போதுதான் வந்தார்கள் என்று மறுத்துப் பேச வந்த ஆரவியின் கரத்தை அழுத்திய தான்யா, "ஆமாம்மா. நாங்களும் சப்போர்ட் தான்! அதனால தான் ஆரவி இப்ப இவ்ளோ சந்தோஷமா இருக்கா. இங்கே மழைனால சுத்தமா சிக்னல் இல்லாம அவங்க வீட்டுக்கு தகவல் கொடுக்க முடியல." என்று அவளுக்கும் சந்தேகம் வராமல், அதே நேரம் உண்மையை மட்டும் கூறினாள்.
அனிதா அவள் பணியின் அடிப்படையில், அவள் முதலாளி தேவ்விடம் அனைத்தையும் சொல்லியாக வேண்டுமல்லவா? இந்த ஒரு வாரமும் இருவரும் தனியாக இருந்திருக்கின்றனர் என்று தெரிந்தால் யாரென்றாலும் வேறு மாதிரியாக சிந்திக்கக் கூடுமே?
எதையோ நினைத்து தலையாட்டிக் கொண்ட அனிதா, "அன்னிக்கு நீ ஊருக்குள்ள இருந்திருந்தாலும் வீடு போய் சேர்ந்திருக்க முடியாது. சிட்டி ஃபுல்லா மழை தண்ணி. ரெண்டு நாளா பவர் ஷட்டவுன் வேற!" எனப் பேசிக் கொண்டிருக்கையிலேயே,
"ஆரவி! ஆரவி!! குழந்தே!!!" என்று பெருங்குரலில் ஓர் ஆனந்த ஆர்பரிப்போடு தட்டு தடுமாறி ஃபெர்னாண்டஸ் பின் தொடர ஓடோடி வந்தார், பரமானந்தன். ஆரவியும் அவரருகே விரைய மகளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்.
"உன் அம்மா பேச்சைக் கேட்காம உன்னை தனியா விட்டுண்டு போய் பாவியாகிட்டேனேடி…" என்று தழுதழுத்தார். கண்கள் சொல்லொணா வலியோடு கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தன. 'குழந்தே! குழந்தே!!' என்று அவளைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்து, மகளுக்கு துயரம் எதுவும் நேர்ந்துவிடவில்லை என நிம்மதியில் மேலும் மேலும் கண்ணீர் பெருகியது.
அத்தந்தையின் பரிதவிப்பைப் பார்த்ததும் விபுநந்தன் தலையில் ஓங்கி சம்மட்டியால் அடி வாங்கியதைப் போல் உணர்ந்தான். இதுவரை அவன் செய்த குறும்புத்தனங்கள் அனைத்தும் அடுத்தவரை பாதிக்காத வகையில்தான் இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது செய்த செயல் பெண்ணைப் பெற்றவருக்கு எத்தனை பெரிய துன்பத்தை தந்திருக்கிறது!
இப்போது அனிதாவிடம் பேசும் வரையிலும் கூட, தான் செய்த காரியத்தின் வீரியம் புரியாமல் விளையாட்டாகவே தான் இருந்தான். ஆரவி அப்பாவின் ஓய்ந்தத் தோற்றத்தைக் கண்ட பின் தன்னால் அல்லவோ அவருக்கு இத்தனை அல்லல் என்று புரிந்தது.
இவன் வீட்டுப் பெண்ணிற்கு இது போல் நேர்ந்திருந்தால் அவனை உயிரோடு விட்டு விடுவானா இவன்?
குற்றவுணர்வில் குமைந்தவன் உண்மையை ஒப்புக்கொண்டு, அனைத்தையும் ஒப்பித்துவிடும் வேகத்தோடு அவரருகே சென்றான்.
தந்தையும் மகளும் பாச காவியம் படைத்துக் கொண்டிருக்க, "சார்…" என்று சின்னக் குரலில் அழைத்தான். வெங்கட், அனிதா உட்பட அனைவருமே அவன் செயலைக் கண்டு விதிர்த்தனர்.
இப்போது உண்மையைச் சொன்னால் பரமானந்தன் இவர்களின் காதலுக்கு ஸ்வாஹா என்று மலர் தூவி மங்களம் பாடி விடுவாரே?
சற்று ஆசுவாசமடைந்திருந்த பரமானந்தன் இவனை கவனியாமல், ஆரவியிடம் என்ன ஏதென்று விசாரிக்க,
அவள் யாரையும் திரும்பி பார்க்காமல், "ஏதோ ஒரு ராங் கால் போலப்பா. நான் தெரியாம வந்து இந்த பக்கமா மாட்டிண்டேன். அப்… அப்போ… நான் தனியா நிக்கறதைப் பார்த்து இந்த மாமி தான் என்னை அவங்காத்துக்கு அழைச்சிண்டு வந்தா." என்று வித்யாலட்சுமியைக் கைக் காட்டியவள், "அப்புறமும் ஊருக்குள்ள வர முடியலப்பா. இதோ இப்போ தான் அம்மாகிட்ட பேசிட்டு கிளம்பிண்டிருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டேள்." என்று முடித்தாள்.
இவளின் அண்டப்புளுகைக் கைக்கட்டி இமைக்காமல், கூர்ப்பார்வை பார்த்திருந்த அனிதா மற்றும் வெங்கட்டை, கண்களால் ஓர் இறைஞ்சல் பார்வையைப் பார்த்துக் கவிழ்த்துவிட்டாள்.
வித்யா, 'அடிப்ப்பாவிஈஈ! அவன் எத்தனென்றால் நீ எத்தனுக்கு எத்தனாக இருக்கின்றாயே!' என்று முழித்தார்.
"அன்னிக்கு என்னான்ட பேசறச்ச ஏன்டி சொல்லல? உன் தோப்பனாரால என்ன பண்ணிட முடியும்னு நினைச்சின்டியோ?"
"அச்சோ அப்பா! நீங்க அப்போ தான் ஊர் போய் சேர்ந்திருந்தேள். எதுக்கு வீணா உங்களை கலவரப்படுத்துவானேன்னு நினைச்சேன்."
அவள் தந்தையின் கேள்விகளுக்கு மேலும் பதிலளித்துக் கொண்டிருக்க, விபுநந்தன் சோஃபாவில் ஓரமாக அமர்ந்துவிட்டான். தன்னை சுற்றியுள்ள அத்தனை பேரும் இப்படி நல்லவர்களாகவே இருந்து தொலைக்கிறார்களே! தன்னை அதிர்ஷ்டசாலி என்பதா? அல்லது யார் மனதையும் புரிந்துகொள்ளாத துரதிர்ஷ்டசாலி என்பதா? ஆரவி தன்னை அவள் தந்தையிடம் காட்டிக் கொடுக்காமல் இருந்ததில் மேலும் குற்ற உணர்வில் வெதும்பினான். இனியொரு முறையேனும் யாரிடமும் பொய்யுரைப்பதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துக் கொண்டான்.
பரமானந்தன் வித்யாவைப் பார்த்து நன்றி தெரிவிக்கும் வகையில் கைக் கூப்ப, அதற்குள் அவரருகே நின்றிருந்த ரிஷி, சட்டென அவர் கரங்களைப் பற்றி கீழே இறக்கியிருந்தான். செய்யாத உதவிக்கு எங்ஙனம் நன்றி ஏற்பதாம்?
அவன்புறம் திரும்பியவரிடம், "இவாள்லாம் அவாளோட பசங்க." என்று ரிஷி மற்றும் தான்யாவைக் கைக் காட்டினாள்.
இதற்குள் ரகுநந்தனை அடையாளம் கண்டுகொண்டிருந்த ஃபெர்னாண்டஸ் அவரிடம் வந்து பேச்சு கொடுத்தார். "நீங்க... ஹெவன்-இன் எம்.டி… ரகு சார்?"
ஆமென்ற தலையசைப்போடு நட்பாய் புன்னகைத்த ரகுநந்தன், "நீங்க..?" என்று கேள்வியாய் இழுத்தார். பரமானந்தனைப் பார்த்தப் பின், இவர் கழுத்தில் இருந்த செபமாலை அவ்வாறு கேட்க வைத்தது.
"நான் பரமாவோட ஃப்ரெண்ட் ஃபிரான்சிஸ் ஃபெர்னாண்டஸ்! ரொம்ப தாங்க்ஸ் சார்." என்றார், ஆரவியைக் காட்டி!
அதை ஆமோதிக்காமல், "நைஸ் டூ மீட் யூ, மிஸ்டர் ஃபெர்னாண்டஸ்!" என்று கரம் குலுக்கினார், ரகுநந்தன்.
அதற்குள் பரமானந்தன் அனிதாவிடமும் மற்றவர்களிடமும் நன்றி கூறிவிட்டு, நாளை நடைபெறும் திருமணத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் ஆரவியையும் அழைத்துக்கொண்டு செல்கிறேனென, ஃபெர்னாண்டஸிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார். ஐந்து வயது சிறுமியைக் காப்பது போல் ஆரவியை அழைத்துச் சென்றார். அவர் செயலில் மகளை இனி எங்கும் தொலைத்து விடுவோமோ என்ற பதட்டமும் அவசரமுமிருந்தது.
ஆரவியின் விழிகள் அலைபாய்ந்து தேடின. விபுநந்தனைத் தேடுகிறாளென நீங்கள் நினைத்தால் அது தவறு! அவள் தேடியது அவன் தமக்கை சீதாவை! அவளைப் பிரிய இயலாமல் ஏனோ மனதைப் பிசைந்தது.
சீதா, பரமானந்தனும் ஃபெர்னாண்டஸும் உள்நுழையும் பொழுதே இடத்தை காலி செய்திருந்தாள். அவள்தான் ஏற்கனவே சொல்லியிருந்தாளே, தெரியாத ஆட்கள் இருந்தால் அவ்விடத்தில் இருக்கமாட்டேனென!
ஆரவி, வெளியில் இருந்த தனது பையை முன்னமே எடுத்து வந்திருந்தாள். எனவே இப்போது என்னக் காரணத்தைச் சொல்லி தனியே செல்வது என சிந்திக்க, என்னை மறந்தாயே எனக் கோபித்துக் கொண்டது, அவள் அலைபேசி!
அலைபேசியை எடுத்துவிட்டு நிமிடத்தில் வந்து விடுகிறேனென தந்தையிடம் சொல்லிவிட்டு, புள்ளி மானாய் துள்ளி ஓடினாள். அவள் மேலே சென்று யாரையோ தேடுவதைப் போல் இங்குமங்கும் பார்த்துக் கொண்டும், இன்னும் சற்று கூர்ந்து பார்க்க, சன்னமான குரலில் யாரையோ அழைக்கிறாள் என்பதும் கீழே நீள்விரிக்கையில் அமர்ந்து தன்னவளை கவனித்து கொண்டிருந்த விபுநந்தனின் கண்களில் இருந்து தப்பவில்லை.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment