
அத்தியாயம் 28
யதுநந்தன் பிறந்த போது கூட சீதாவின் நினைவில் அமைதியாக மகிழ்வைக் கொண்டாடிய விபுநந்தன், இப்போதுதான் எல்லையில்லா சந்தோஷப் புன்னகையை உதிர்க்கின்றான். மகனின் இம்மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். அதற்கு ஆரவியை அவன் கைபிடிக்க வேண்டுமென எண்ணிய ரகுநந்தன் தம்பதியர், முதற்கட்டமாக ஆரவியின் பெற்றோரை சந்திக்க முடிவு செய்தனர்.
அப்போது அங்கே துப்பறியும் நிறுவனத்தில் இருந்து வந்த பெண் தன்னை அனிதா என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
இவர்கள் மொட்டைமாடியில் சீதாவின் நினைவில் துக்கத்தில் அமிழ்ந்திருக்கையில், கீழே ரகுநந்தனின் நண்பர் வெங்கட் இருந்தாரல்லவா? அவர்தான் அனிதாவைப் பற்றியும் அவள் வரவைக் குறித்தும், முழுதாக விசாரித்துவிட்டு அவளை மாடிக்கு அனுப்பியிருந்தார்.
சும்மா அனுப்பவில்லை. "நீ தேடி வந்த கல்பிரிட் பேரு விபுநந்தன்." என்று கூறி அனுப்பினார்.
அவளும் முன்னமே அவன் அலைபேசி எண்ணை வைத்து, அவன் ஜாதகத்தையே புரட்டியிருந்தாள். இவ்வீட்டின் உரிமையாளர் யாரெனவும் அவர் பிண்ணனி, குடும்ப விவரங்களையும் சேகரித்து தெரிந்து கொண்டிருந்தாள். அவ்வண்ணமே தட்சிணாவின் விபத்தைப் பற்றியும் அறிந்திருந்தாள்.
எனவேதான் அவள் மேலே வந்து, "ஹூ இஸ் விபுநந்தன்?" எனக் கேட்டாள்.
"இட்'ஸ் மீ." என்றவனின் புறம் பார்த்தவளின் முகத்தின் ஒவ்வொரு அணுக்களும் செர்ரிப் பூக்களாகப் பூத்தது.
அவள் பார்த்தது நந்தனின் தோளை உரசி நின்ற செர்ரீ பூக்களை! அதன்பின் சுற்றிலும் பார்த்துவிட்டு, வந்த வேலையை மறந்து முகம் மலர பூக்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். ரிஷி அவள் கவனத்தை கவராமல், கைக் காட்டி ஒவ்வொருவரையும் கீழே வர செய்தான்.
ஏதோ ஒரு பெண் மேலே செல்கிறாளே? அவள் யாரென வெங்கட்டிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள் ஆரவி. அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் மேலே செல்ல எத்தனிக்கையில் அனைவரும் கீழே வந்தனர்.
ரிஷி, "டாட், ஆரவி வீட்ல தான் டிடெக்டிவ் கிட்ட போயிருப்பாங்கன்னு நினைக்கறேன். ஃபர்ஸ்ட் ஆரவி இந்த ஆறு நாளா அவ வீட்டுக்கு போகாததுக்கு என்ன ரீஸன் சொல்லப் போறோம்?" எனக் கேட்க,
"தோழி வீட்டில் தங்கியதாக சொல் ஆர்வி!" என்றாள் டியான்.
"ம்ம்! இல்லனா உன் ஃப்ரெண்டுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு, ஹெல்ப் பண்ண போனேன்னு சொல்லிடு மாமி!" என்ற விபுவை யதுநந்தன் தவிர, அத்தனை பேரும் 'இவன் மண்டையை உடைத்தாலென்ன?' பார்வை பார்க்கவும், 'இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்டி முறைக்கறாங்க?' என்று மனதிற்குள்ளாவே நியாயம் கேட்டுக்கொண்டான்.
"பேசாம நம்ம வீட்டுல இருந்தான்னு சொல்லுவோமா?" - ரகுநந்தன்.
தான்யா, "கரெக்ட்ப்பா. இதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்குது. சொல்லவா?" எனப் பீடிகை போட்டாள்.
அனைவரும் அவள் முகம் பார்க்க, "அம்மாவுக்கு பிரஷர் அதிகமாகிடுச்சாம்..." என்று ஆரம்பித்தாள்.
"எப்ப? என்கிட்ட எதுவுமே சொல்லலயே?" - பதற்றத்துடன் ரகுநந்தன்.
"முழுசா சொல்ல விடுங்கப்பா." என்றுவிட்டு, "பிரஷர் ஜாஸ்தியானதுனால கோவிலுக்கு போயிருக்கும் போது மயங்கி விழுந்துட்டாங்களாம்." என்றாள்.
"அய்யோ அம்மா!" - ரிஷி.
"அப்போ பக்கத்துல இருந்தவர் சோடா வாங்கிட்டு வர முன்னாடி, தூ...ரமா நின்னுட்டு இருந்த நம்ம ஆரவி ஸ்லோமோஷன்ல ஓடி வந்தாளாம்."
"ஸ்லோமோஷன்லயா? ஈஈஈ…" என்ற விபு அந்நிகழ்வை மேலே பார்த்தவாறு கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டான்.
"அவ நம்ம அம்மாகிட்ட வர்றதுக்கும், சோடா வரவும் கரெக்ட்டா இருந்ததாம். உடனே இவ அவர் கைல இருந்த சோடாவைப் பிடுங்கி பதைபதைப்போட அம்மா முகத்துல தெளிச்சு, அவங்க மயக்கத்தைத் தெளிய வைக்கறாளாம்."
"எழுந்ததும் அம்மா நான் இப்ப எங்க இருக்கேன்னு கேட்டாங்களா?" - ரிஷி
"அச்சோ அது ஹாஸ்பிடல் பெட்ல இருக்கும் போது தான் கேக்கணும் ரிஷிண்ணா." என்றவள் கதையைத் தொடர்ந்தாள். "அம்மா எழுந்ததும் 'என் பையன் கல்யாணத்துக்கே ஒத்துக்க மாட்டேங்கறான். அவனை நினைச்சுதான் எனக்கு ரொம்ப கவலை. அதான் சாப்பிடாம விரதம் இருந்ததுல பிரஷர் அதிகமாகிடுச்சு. என்னை வீடு வரை கொஞ்சம் வந்து விட்டுட்டு போயேன்மா' அப்டினு சொல்லுவாங்களாம்."
"அம்மா தான் டிரைவர் அண்ணாவோட போயிருப்பாங்களே?" மீண்டும் சந்தேகம் கேட்டான் ரிஷி.
"ப்ச்! குறுக்க குறுக்க பேசாத ரிஷிண்ணா! அப்புறம் எனக்கு ஃப்ளோ வராது."
"அவன் கிடக்கறான். நீ சொல்லு தான்யாக்கா!" - விபுநந்தன்.
"ம்ம்! அப்புறம் ஆரவியை அம்மா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்களாம்…" என்று அவள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது விபுநந்தன் சின்னதாக சிரித்துக்கொண்டு, தரையைப் பார்த்து தலையை இப்புறமும் அப்புறமுமாக உருட்டினான். புரியவில்லையா உங்களுக்கு? அவன் வெட்கப்படுகிறானாம்.
ரகுநந்தன் ஐடியாவை விவரிக்கும் மகளையும், அதற்கு வெட்கப்படும்(?) மகனையும் மாறி மாறி ஏலியனைக் காண்பதைப் போல் கண்டு விட்டு, பின் அவரும் மேலே பார்த்து, 'இறைவா! இதுவும் உன் திருவிளையாடலா?' என்று கண்கள் கசிந்தார்.
"கோவில்ல இருந்து வீட்டுக்கு வர்ற அந்த அரைமணி நேரத்துலயே ஆரவியை அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்சிடுமாம். சோ, அப்புறமா அம்மா 'நான் இவ்வளவு பெரிய வீட்டுல தனியா தான் இருக்கேன்மா. உங்க அம்மா, அப்பா வர்ற வரை நீயும் இங்கேயே இரேன்!' அப்டின்னு ரொம்ப ரொம்ப வற்புறுத்தி நம்ம வீட்லயே இருக்க வச்சிடுவாங்களாம். எப்டி என் ஐடியா? சூப்பர்ல?" என்று அவள் கூறியதை அவளே மெச்சிக் கொண்டிருக்கையில்,
ஆரவி, "இந்த ஸீனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..!" என்று மலங்க விழித்தாள்.
"அட! இது உன்னோட 'பூச்சூடும் பூவை' ஸ்டோரில வர்ற ஸீன் தான். உனக்கே தெரியலயா?" என்று கூறி சிரித்தாள் தான்யா.
'நம்ம கதையா இவ்ளோ மொக்கையா இருக்கு?' என்று ஆரவி உள்ளுக்குள் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள்.
இப்படியே ஆளாளுக்கு ஒன்றை சொல்ல, கடைசியாக வாய் திறந்த வித்யாலட்சுமி, "யாரும் எந்த கதையும் சொல்ல வேணாம். உண்மை என்னவோ அதையே ஆரவி பேரண்ட்ஸ்கிட்டயும் சொல்லுவோம்." என்று தீர்மானமாகக் கண்டிப்புடன் கூறினார்.
அதைக் கேட்டதும் விபுநந்தனின் வதனம் காற்று போன பலூனாகிவிட்டது. எந்த தந்தை தன் மகளை ஏமாற்றி வரவழைத்தவனுக்கே கட்டித் தருவார்?
இவர்கள் இங்கே இப்படி பேசிக் கொண்டிருக்க, வெங்கட் மாடியில் இருந்து இறங்கி வந்த அனிதாவைப் பார்த்து விட்டு, "இவங்க மிஸ் அனிதா! இன்விஸிபிள் டிடெக்டிவ் ஏஜென்ஸில இருந்து வந்திருக்காங்க." என்றவர் நிறுத்தி அனைவர் முகத்தையும் பார்த்து விட்டு, "ஆரவியைத் தேடி!" என்றார்.
அதைக் கேட்டதும் அனைவரும் கவலையாய் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
முதல் நாள் வெள்ளியன்று மாலை ஆரவியிடம் பேசியிருந்த அவளின் தந்தை பரமானந்தம், அதன்பின் தன் தமக்கை மகளின் திருமண வேலைகளில் மூழ்கிவிட்டார். என்ன தான் பெண்ணை விட்டுவிட்டு வெளியூருக்கு சென்றாலும் அவள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் சென்றிருப்பாரா என்ன?
ஆரவியின் வீடு அவர்களின் ஆட்கள் மட்டும் வசிக்கும் பகுதியாய் அல்லாமல், ஊருக்குள் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் ஓர் காலனியாக இருந்தது. அங்கிருந்த அனைவருமே உறவுக்காரர்களைப் போல் பழகுபவர்களே! எனவேதான் பரமானந்தன் பெண்ணை அவ்வளவு தைரியமாக, தனியாக விட்டுச் சென்றார். அனைவரிடமும் ஒருமுறைக்கு இருமுறை கூறி, பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டே காலனியை விட்டு வெளியே காலை வைத்திருந்தார்.
எனவே, இவர்கள் ஊருக்கு சென்ற அன்றே ஆரவி வீட்டிற்கு வரவில்லை என்று காலனி ஆட்களுக்கு தெரிந்திருந்தது. அவளின் கைபேசிக்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு அன்று மழை வேறு கொட்டித் தீர்த்ததால் ஊருக்குள் எங்கும் வெள்ளம்! மின்சாரமும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
உடனேயே பரமானந்தனை அழைத்திருந்தனர். சற்றுமுன்னர் மாலை நேரத்தில்தான் அவர் ஆரவியிடம் பேசியிருந்ததால், அவர்களை பயப்பட வேண்டாம். சிநேகிதி வீட்டிற்கு கூட சென்றிருப்பாள் எனக் கூறிவிட்டு கல்யாண வேலைகளில் மூழ்கிவிட்டார்.
இவர்களும் 'சரி தான்! ஆரவி ஒன்றும் சின்னப்பிள்ளையல்லவே? வந்துவிடுவாள்' என்று இருந்துவிட்டனர். ஆனால் மறுநாளும் அவள் வீட்டிற்கு வராத நிலையில், அதற்கடுத்த நாள்… அதாவது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பரமானந்தனை அழைத்து விவரம் கூற, அவரும் ஆரவியின் எண்ணிற்கு அழைத்தார். அவர்கள் கூறியது போல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இப்போது உண்மையாகவே பயந்துவிட்டார்.
ஆரவி வெளியே எங்கு சென்றாலும் இப்படி ஒரு போதும் வெளியில் யார் வீட்டிலும் தங்குபவளில்லையே? அதுவும் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லையாம்! மழை நேரத்தில் எங்கேனும் போய் மாட்டிக்கொண்டாளோ?
வந்த இடத்தில் திருமணம் முடியாத நிலையில் தாய்மாமன் என்ற முறையில் அவரால் எங்கும் நகரவும் முடியாது. நான் ஊர் திரும்பியாக வேண்டும் என்றாலும், உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆரவியைக் காணவில்லை என்றால் அதுவே அவர்களின் வாய்ப் பேச்சிற்கு தீனியாகக்கூடும். ஏற்கனவே அவரின் மேல் உறவினர்கள் யாருக்கும் நன்மதிப்பு கிடையாது. அதற்கு காரணமுமிருந்தது.
ஆனால் அதற்காக பெற்ற மகளைத் தேடாமல் இருந்துவிட முடியுமா என்ன? எனவே, உறவினர்களிடம் அவசர வேலை காரணமாக ஊர் திரும்ப வேண்டும் என்றார்.
பரமேஸ்வரிக்குமே இது ஆச்சர்யம்தான். அவரிடம் பரமானந்தன் உண்மை நிலையைச் சொல்லியிருக்கவில்லை. கணவருக்கு உறவினர்களின் மேல் மனஸ்தாபம் இருந்தாலும் என்றுமே அவர்தம் சொந்தங்களை விட்டுக் கொடுப்பவரல்ல. ஆதலால் தான் அவரிடம் இந்த வியப்பு!
தனியே அழைத்துக் கேட்ட போதும், 'தான் பணிபுரியும் வங்கியில் முக்கியமான கோப்பைக் கேட்கிறார்கள். எனவே தன் டேபிள் இழுப்பறைக்குள் இருக்கும் கோப்பை எடுக்க, தன்னிடமுள்ள சாவியை எடுத்துக் கொடுக்க வேண்டும். போய் சாவியை கொடுத்துவிட்டு அடுத்த பேருந்திலேயே திரும்பிவிடுவேன்' என்றார்.
"ஞாயித்துக் கிழமை எந்த பேங்க்காரன் ஃபைலைப் புரட்டிண்டு இருக்கானாம்?"
"அது பெரிய இடத்து ஆள் ஒருத்தரோட ஃபைல் பரமி! இப்டி திடும்னு கேட்பான்னு நேக்கு தெரியுமா என்ன? நான் போய் எடுத்து தந்துட்டு வந்துடறேன்." என்று வாய்க்கு வந்ததை உளறிவிட்டு, நில்லாமல் கிளம்பி வந்துவிட்டார். அதாவது ஞாயிற்றுக்கிழமை இரவில் பரமானந்தன் ஊர் வந்து சேர்ந்தார்.
வந்தவர் நேரே ஆரவி முதல்நாள் அலைபேசியில் சொல்லியிருந்தபடி, முதலில் புத்தகப் பதிப்பகத்தாரை சந்தித்து பேச எண்ணினார். ஞாயிற்றுக்கிழமையாதலால் அலுவலகத்தை விடுத்து பதிப்பகத்தாரின் அலைபேசியைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர், 'நேற்றைக்கு முன் தினம் மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டாள். ஆனால் வெளியேறும்போது ஏதோ ஒரு அலைபேசி அழைப்பின் காரணமாக சற்று அவசரமாக சென்றாள்.' என்று சொல்ல, இவருக்கு ஒன்றும் புரியவில்லை.
மகளை யார் அழைத்திருப்பார்கள்? அப்படியே அழைத்தாலும் அவள் ஏன் தன்னிடம் பேசும் போது இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை? சிந்தித்தவருக்கு அப்போதுதான் நினைவு வந்தது, அன்று ஆரவி பேசும் போது குரலின் வேறுபாட்டைப் பற்றி கேட்டதற்கு என்னவோ கூறி சமாளித்தாளே? தான் அப்போதே என்ன, ஏதென்று சற்று அழுத்தி விசாரித்திருக்க வேண்டுமோ? மனைவி பேச்சைக் கேளாமல் பெண்ணைத் தனியே விட்டுச் சென்றது தவறோ? பகவானே! என் குழந்தை எங்கே போய் சிக்கிக் கொண்டிருக்கிறாளோ? இப்போது எங்கே என்று அவளைத் தேடுவேன்?
இனி என்ன செய்வது? காவல்துறையிடம் செல்ல வேண்டுமா? அவர்கள் கேட்கும் அபத்தக் கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க முடியுமா? அவர்களிடம் சென்றால் உறுதியாக தன் பெண்ணை கண்டுபிடித்துவிடுவார்களா? பதட்டத்தில் நிதானமாக சிந்திக்கவும் இயலவில்லை. இந்த கலிகாலத்தில் பெற்ற பெண்ணைக் காணவில்லை என்றால் ஒரு தந்தையானவரின் உணர்வுகள் எத்துனை துயர் மிகுந்ததாக இருக்கும் என்பது நிச்சயம் சொல்லில் வடிக்க முடியாது. அதனால்தானோ என்னவோ பரமானந்தன் இவ்விடயத்தை பரமேஸ்வரியிடம் கூட பகிரவில்லை.
மனைவியின் பரிதவிப்பைக் காண இயலாதவர், தன் தோழனாகிய ஃபிரான்சிஸ் ஃபெர்னாண்டஸிடம் பிரச்சினையைப் பகிர்ந்தார். இங்கே ஃபெர்னாண்டஸ் - பரமானந்தன் நட்பைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். எனவே ஆரவியைப் பற்றிய இத்தந்தையின் தேடலை அடுத்ததாகக் காண்போம்.
அக்ரஹாரத்தில் ஆச்சாரமானக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பரமானந்தத்திற்கு அவர்கள் குலவழக்கத்தையும் நடைமுறைகளையும் குடும்ப கட்டமைப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. சம்பிரதாயங்களையும் பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொண்டவர், அக்ரஹார குடும்பங்களில் பிறந்ததால் இவர்கள்தான் கடவுளின் பிரதிநிதி போலவும் பிற பிரிவினரைத் தாழ்வாக எண்ணுவதையும் அறவே வெறுத்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இன்ன நபரென்று பாராது அனைவரோடும் நட்பு பாராட்டினார்.
பாடல்கள் புனையவில்லையே தவிர, ஒரு நவீன பாரதியாக அவதாரம் எடுத்திருந்த பரமானந்தத்தை அவர்கள் வீட்டினர் கடுமையாகச் சாடினர். சில சமயங்களில் அடியும் கிடைத்தது. அனைத்தையும் வாங்கிக்கொண்டு இவர் செய்வதை செவ்வனே செய்து கொண்டிருந்தார்.
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் அடியெடுத்து வைத்தவருக்கு ஃபிரான்சிஸ் ஃபெர்னாண்டஸின் நட்பு கிடைத்தது. ஓரிரு முறை வீட்டிற்கும் கூட அவரை அழைத்து வந்தார். ஆனால் இவர் வீட்டினர் வரவேற்று, நன்கு உபசரித்து வரவேற்பறையோடே திருப்பி அனுப்பினர். தன் நண்பனைக் கூடத்திற்கு கூட அனுமதிக்காத தன் பெற்றோரிடம் கோபம் கொண்ட பரமானந்தன் அதன்பின், தானே ஃபெர்னாண்டஸ் வீட்டிற்கு சென்று வர ஆரம்பித்தார். சில நாட்களில் வீடு திரும்பாமல் அங்கேயே தங்கிய நாட்களும் உண்டு.
இதைப் பற்றி ஃபெர்னாண்டஸ் கேட்கும் போது கூட, 'நீ கழுத்தில் மணிகள் கொண்ட நீளமான மாலை அணிந்து மார்பில் தவழ விடுகின்றாய். நான் அந்த மணிகள் கோர்க்கும் நூலை பூணூல் என்று தோளில் இருந்து மார்பில் தவழ விடுகின்றேன். இதில் பிரித்துப் பார்க்க என்ன இருக்கிறது?' என்று முடித்துவிடுவார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பரமானந்தன் வங்கி பரீட்சை எழுதியிருந்த சமயம் அது! அப்போது ஃபெர்னாண்டஸிற்கு எதிர்பாரா விபத்தில் ஏற்பட்ட இரத்த இழப்பிற்கு, பரமானந்தன் இரத்தம் கொடுக்க இவர்கள் வீட்டினர் மாபாதகம் செய்ததாகக் கருதி திட்டித் தீர்த்தனர்.
கேள்விப்பட்ட உறவினர்களும் முகம் சுளிக்கவே செய்தனர். அத்தோடு நில்லாமல் இப்படியே விட்டால் இவன் புரட்சி செய்வதாக எண்ணி, வேற்று இனப் பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தாலும் வந்துவிடுவான். அந்த மட்டுக்கும் இப்போதே நம் குலப் பெண்ணைக் கட்டி வைத்து விடலாம் என்று, இருபத்துநான்கே வயதாகியிருந்த பரமானந்தத்திற்கு பத்தொன்பது வயதான பரமேஸ்வரியை மணமுடித்து வைத்தனர். மணமுடித்து வைத்து இவரைத் தண்ணீர் தெளித்துவிட்டனர் எனச் சொல்வதே மிகச் சரி!
உறவினர்கள் அனைவரும் இவரைத் தள்ளி வைக்க, மனைவியை அழைத்துக்கொண்டு அந்த சிற்றூரில் இருந்து, பெரிய நகரத்திற்கு இடம் பெயர்ந்தார் பரமானந்தன். பரமேஸ்வரியும் 'புருஷன் எவ்வழி அவ்வழி என் வழி!' என்று இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே சச்சரவுகள் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்தது. இருவருமே சிறிய வயது என்று குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டனர். அதுவே முதல் குழந்தை பிறப்பதில் சிக்கலேற்படுத்தியது. எனவே இருவருக்குமே ஆரவி தவமிருந்து கிடைத்த குழந்தை தான்!
நண்பன் வேற்றூர் சென்றபின், ஃபெர்னாண்டஸிற்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையோ இழந்தாற் போன்றே சுற்றினார். ஃபெர்னாண்டஸிற்கு அது சொந்த ஊரல்ல! அவரின் தந்தையின் டிரான்ஸ்ஃபர் காரணமாக அங்கு வந்தவர்தாம். எனவே தந்தையின் வழியைப் பின்பற்றி தானும் செய்து கொண்டிருக்கும் வேலையில் மாற்றுதலுக்கு எழுதிப் போட்டு, மேலிடத்து உத்தரவு வந்ததும் அவரும் அவ்வூரில் இருந்து பெட்டியைக் கட்டிவிட்டார்.
இவ்வாறாக அன்றிலிருந்து இன்று வரை இருவரின் நட்பும், இன்னும் அழுத்தமான பிணைப்போடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் பரமானந்தத்தின் மனம் ஃபெர்னாண்டஸையேத் தேடியது. தாமதிக்காமல் அவரை அழைத்தார். அவரிடம் விவரம் கூற, உடனேயே இருவரும் சந்தித்தனர்.
கோவில்கள், தோழிகளின் வீடுகள் என ஆரவி செல்லும் இடங்களில் எல்லாம் கேட்டறிந்தனர். எங்கும் ஏமாற்றமே கிடைத்ததில் சோர்ந்துபோனார் பரமானந்தன்.
பின், ஃபெர்னாண்டஸின் வழிகாட்டுதலின் படி இருவரும் திங்கட்கிழமை மாலை இன்விஸிபிள் டிடெக்டிவ் ஏஜென்ஸியை அணுகினர். அந்நபர் திரு.தேவ், ஆரவியைப் பற்றிய விவரம் முழுவதையும் கேட்டு, அவள் புகைப்படத்தையும் வாங்கி அலைபேசியில் பதிந்துகொண்டார். நண்பர்களின் கோரிக்கைக்கிணங்க, பெண்ணைப் பற்றிய விஷயம் தன்னை விடுத்து வெளியே செல்லாது என உறுதியளித்தார் தேவ்!
பரமானந்தன் அவரிடம் பொறுப்பை விட்டுவிட்டு, மனமேயில்லாமல் திருமண வேலைகளைப் பார்க்கச் சென்றார். ஃபெர்னாண்டஸ் எதுவாக இருந்தாலும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி நண்பனைத் தேற்றி வழியனுப்பி வைத்தார்.
முதலில் சைபர் க்ரைமில் ஆரவியின் அலைபேசி விவரங்களை சமர்பிக்க எண்ணிய தேவ், தன்னிடம் புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் அனிதாவின் திறமையை சோதிக்க எண்ணி அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ஆரவியின் விவரங்கள் அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அனிதா வேலையில் சேர்ந்த இரண்டாம் நாள், மொட்டையாக இருக்கும் அலுவலக வராண்டாவில் ஒரு ரோஜா தொட்டியை வைத்ததற்கு தேவ், 'வந்திருக்கும் கேஸை ஆராயச் சொன்னால் மண்ணை ஆராயப் போகிறாயா?' என்று கத்தியிருந்தார்.
அப்போதிருந்தே இருவருக்குள்ளும் ஓர் பனிப்போர் ஆரம்பித்துவிட்டது. 'இந்த ஓல்டு மேன் நினைச்சா ஒரே ஃபோன் கால்ல அந்தப் பொண்ணு இருக்க இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஆனா என்னை வச்சு செய்றதுக்கு தான் இப்டி ப்ளான் பண்ணுது. சொட்டை! நான் போறதுக்குள்ள அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றது? ஆனா, அதுக்குள்ள நான் போய் அவளைக் கண்டுபிடிச்சு உன் சொட்டைத் தலைல மண்ணை வாரி கொட்டல… என் பேரு அனிதா இல்ல.' என்று கங்கணம் கட்டிக் கொண்டவள், "ஆரவியைத் தேடி அனீ...தா!" என்று ஸ்டைலாகக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு புறப்பட்டாள்.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment