
அத்தியாயம் 27
தன்னைத் தூக்கி வளர்த்த அங்கிள் வெங்கட்டின் கண்டிப்பு, தன் தாயின் முறைப்பு, அவரிடம் நந்தாவின் கெஞ்சல், அப்பாவின் கிண்டல், தன் தோழன் ரிஷிண்ணாவின் கேலி, தோழி டியானின் கொஞ்சும் தமிழ், தான்யாவின் சிரிப்பலை, குட்டி யதுவின் அழகு பாவனைகள் என்று நடக்கும் கூத்து அனைத்தையும் தாயின் அருகில் அமர்ந்து கண்கள் பனிக்க கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள் சீதா.
காலையில் ஆரவியை சேலை கட்ட வற்புறுத்திவிட்டு, அவள் அணிந்ததும் ரசித்துப் பார்த்தவள் பின், 'தன் பூக்களிடம் ஒரு ஹாய் சொல்லி விட்டு வருகிறேன்' என்று சொல்லி சென்றாள். மாடியில் பூக்காட்டை சுற்றி வருகையில், சாலையில் சற்று தொலைவில் தங்கள் வீட்டு கார்கள் வருவதைப் பார்த்துவிட்டு கீழே வந்திருந்தாள்.
நல்லவேளை நந்தா அம்மாவிடம் ஓர் அறையோடு தப்பித்துவிட்டான் என்று நினைத்தவள், தான்யாவின் தாய்மை தோற்றத்தில் நெஞ்சம் நிறைந்திருந்தாள். தான்யா இங்கு திருமணத்திற்கு முன்பு வந்ததுதான். அதன் பின் இப்பொழுதுதான் அவளைப் பார்க்கிறாள் சீதா.
டியானும் தன் மருமகன் யதுநந்தனும் வார இறுதிகளில் இங்கு வரும் போது தூரமாக நின்று பார்த்துவிட்டு போய்விடுவாள். இன்று தான் தன் மனதிற்கினிய வெங்கட் அங்கிள் உட்பட அனைவரையும் அருகேயிருந்து ஒன்றாகப் பார்க்கிறாள். உள்ளம் பேருவகையில் ததும்பியது.
அனைவரோடும் உரையாடிக் கொண்டிருந்தாலும் ஆரவி, அவ்வபோது சீதாவையும் கவனித்தவாறே தான் இருந்தாள். அப்போதிருந்து அவள் தன்னிடம் எதையோ யாசிப்பது அவள் கண்களில் இருந்தே புரிய, என்னவென்று இவளும் கண்களால் வினவினாள்.
"அம்மாவை மாடித் தோட்டத்தை பார்க்கக் கூட்டிட்டு வர்றியா ஆரவி?" என்று ஆசையோடு கேட்க,
'டன்!' என்று கண்கள் மூடித் திறந்தவள், "ஆன்ட்டி! நேத்து மொட்டைமாடில துணி காய வச்சிருந்தேன். எடுத்துட்டு வந்துடறேன்." என்று எழுந்துவிட்டு, "நீங்களும் வாங்களேன் ஆன்ட்டி." என்றழைத்தாள்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த அனைவரும் மௌனமாகிவிட்டனர். வித்யாலட்சுமி துக்கம் தாளாமல் கண்கள் துடிக்க, இதழ்கள் இறுக சோஃபாவில் சாய்ந்துவிட்டார்.
ரகுநந்தன் மனைவியின் தோள்களை அழுத்தி தட்டிக் கொடுக்க, விபுநந்தன், "அம்மா!" என்றழைத்து அவரருகே அமர்ந்து கையை அழுத்தி ஆற்றுபடுத்த முயன்றான்.
பின், "ஆரவிக்கு அக்காவைப் பத்தி எல்லாம் தெரியும்மா." எனவும், நிமிர்ந்து அவளைப் பார்க்க, வாஞ்சையோடு புன்னகைத்தாள் பெண்.
வித்யா நீர் நிறைந்து விட்ட கண்களோடு, "நான் மாடிக்கு போய் ஏழு வருஷம் ஆச்சு ஆரவி. என் பொண்ணு போனதுக்கப்புறம் நாங்க யாருமே அந்தப் பக்கம் போகல." என்று அதற்கு மேல் பேச முடியாமல், "நீ போய்ட்டு வாம்மா!" என்று விழிகளை மூடிக்கொண்டார்.
ஆரவி கைகளைப் பிசைய ஆரம்பிக்க… நந்தன், "நோ மாம்! யூ மஸ்ட் கம் டூ அவர் டெரஸ்! ஆரவி பார்த்ததுக்கப்புறம் தான் நானே போய் பார்த்தேன். நீங்க வாங்களேன். அ வெரி பிக் சர்ப்ரைஸ் இஸ் அவெய்ட்டிங் ஃபார் யூ இன் தேர்!" என்றான்.
டியான், "சர்ப்ரைஸ்? தோ… நா பார்க்குது." என்று மகனை கையில் பிடித்துக்கொண்டு எழுந்து ஓடினாள்.
ரிஷி, "ஏண்டா? மாடில வேற ஒரு பொண்ணு இருக்காளா?" என்று கேட்டு விபுநந்தனிடம் ஓர் எரிக்கும் பார்வையைப் பெற்றுக் கொண்டான்.
'அப்டி என்ன சர்ப்ரைஸ் டா?' என்று கேட்ட அன்னைக்கும், தந்தைக்கும் பதிலளிக்காமல் இருவரையும் கையோடு இழுத்துச் சென்றான்.
"பேயே, நில்லு! நீ மொட்டைமாடிக்கு போனேன்றதையே என்னால நம்ப முடியல? இதுல சர்ப்ரைஸ் வேறயா? என்னன்னு இங்கேயே சொல்லேன்டா நந்தா. என்னால ரெண்டு மாடிலாம் ஏற முடியாது." என்று சிணுங்கிய தான்யாவை, ஆரவி தான் உதவிக்கு உடன் வருவதாகக் கூறி, கைப் பிடித்து அழைத்துச் சென்றாள். பின்னாலேயே ரிஷியும் என்னவாக இருக்கக்கூடும் என்ற ஆவலில் எழுந்து சென்றான்.
மேலே சென்றவர்கள் முதலில் வாயடைத்துப் போய்தான் நின்றனர். பின்னே பார்த்து பார்த்து ஆட்களை வைத்து பராமரிக்கும்போது செழிக்காதது, தாங்கள் யாரும் கவனிக்காமல் கேட்பாரற்று கிடக்கும் பொழுது இப்படி பூத்து கிடக்கின்கிறதே?!
மௌனமாய் ஆளுக்கொருபுறம் நின்று பூக்களைப் பார்த்திருந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த ஒவ்வொரு பூவிலும் சீதாவின் முகமே தெரிந்தது. அவளோடு இங்கு பேசி சிரித்து, ஆடிக்களித்த நினைவுகள் ஒவ்வொன்றாக மேலெழுந்தன. ஒவ்வொரு பூச்செடிகளையும் நட்டு வைக்கும் போதும் மனம் நிறைந்து சிரிப்பாள். அது பூத்தால் அவள் முகமும் பூத்து, அது வாடினால் அவள் முகமும் வாடி என அப்பூக்களோடே வாழ்ந்தாள்.
அனைவரும் அவள் நினைவில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு, ஆழ்ந்த மௌனத்தில் அமிழ்ந்திருந்தனர்.
அன்று விபுநந்தனோடு முதல் முதலாக இங்கு வந்த போது அவனும் எதையோ நினைத்து கலங்கியது போல் தோன்றியதை இப்போது நினைத்துக் கொண்டாள், ஆரவி.
செர்ரி மரத்தினருகே வந்த போது வித்யா அடைத்தத் தொண்டையை செருமியவாறு, "சீதா தான் இங்கே இப்டியொரு பூந்தோட்டத்தை உருவாக்கினா ஆரவி. அவங்க அப்பா அவளுக்காகவே ஸ்பெஷலா நம்ம ஊர் சீதோஷ்ணத்துக்கு பூக்காதுன்னு தெரிஞ்சும் இந்த செர்ரி செடியை ஜப்பான்ல இருந்து ரிஷியை வாங்கிட்டு வர சொன்னார்." என்று மெதுவாக பேசிக் கொண்டிருந்தவர் திடுமென பெருங்குரலில், "அவ இருக்கும் போது இது பூக்கல. இப்ப இது பூக்கும் போது அவ இல்லயே… அவளுக்கு என்ன அவசரம்னு இவ்ளோ சீக்கிரம் என்னை விட்டு போனா ஆரவி?" என்று கேட்டு உடைந்து அழுதார்.
மகளைப் பெற்றவருக்கு அவளை நினைக்கையில் இப்போதும் கூட மார்பில் பால் கட்டிக் கொண்டது போல் வலியெடுத்தது. 'மீண்டும் என் கருவறைக்குள் வந்து விடமாட்டாளா? இனியொரு முறையும் காலனிடம் தராமல் என் சிறகுக்குள்ளேயே வைத்து என் மகளைப் பாதுகாத்து கொள்ளமாட்டேனா?' என்று நெஞ்சம் விம்மி தணிய அழுது தீர்த்தார். ஆரவி அவரை லேசாக அணைத்து சமாதானப்படுத்த முயன்றாள்.
அருகிலிருந்து அன்னையின் வாய்மொழியைக் கேட்டுக் கொண்டிருந்த சீதா கதறித் துடித்தாள். அழுவது பிடிக்காது என்றவள் அன்னை மடித் தேடி அழுது கரைந்தாள். என்ன கரைந்து என்ன செய்ய? மாண்டவர் மீள்வதில்லையே?
பார்த்துக் கொண்டிருந்த ஆரவிக்கு வாழ்வே வெறுத்தது. கடவுள் என்ற ஒருவன் இல்லையோ என நினைத்தாள். மூச்சுக்கு மூச்சு அவளழைக்கும் மீனாட்சியைக் கூட அக்கணம் சபிக்கவே செய்தாள்.
ஆரவி, 'உன்னிருப்பை அவர்களிடம் சொல்லட்டுமா?' என்று சீதாவிடம் கண்களால் வேண்ட பதறிப் போனாள்.
"நோ ஆரவி நோ! தே கான்'ட் பியர் டூ க்நோ மீ லைக் திஸ். (நான் இப்படி இருப்பது தெரிந்தால் அவர்களால் தாங்க முடியாது.) என் நேரம் எப்ப முடியுமோ அதுவரை நான் இப்டியே இருந்துட்டு போறேன். ப்ளீஸ்… நீ எதுவும் சொல்லாதே…" என்று மருகியவளுக்கு மீண்டும் கண்களாலேயே ஆறுதலளித்தாள்.
செர்ரி செடியைச் சுற்றி நின்றிருந்த அத்தனை பேரின் விழிகளும் சீதாவின் நினைவில் கலங்கியிருந்தது. தான்யாவிற்கு ஏங்கி அழுததில் மூச்சு வாங்கியது.
திருமணத்திற்கு முன், ரிஷி தன் காதலை சீதாவிடம் தான் முதலில் கூறியிருந்தான். எனவே, டியானும் கூட சிறிது நாட்களிலேயே தன்னோடு ஒரு நல்ல தோழியாய் பேசி, பழகியவள் திடுமென தவறியிருந்ததில் வருத்தம் மேலோங்க கண்ணீர் கசிந்தாள். யாரும் யாரையும் சமாதானம் செய்ய முடியாமல் அனைவருமே துக்கத்தில் ஆழ்ந்து தொலைந்து கொண்டிருந்தனர்.
அனைவருக்கும் எப்படி ஆறுதலளிக்க என்று ஒவ்வொருவராய் பார்த்த ஆரவிக்கு ஆபத்பாந்தவனாய் உதவினான், டியானின் இடுப்பில் இருந்த மூன்று வயது யதுநந்தன்! அது உதவியா? இல்லை, அவளுக்கு அவன் செய்த சதியா? தெரியவில்லை.
டியானின் கன்னத்தைப் பிடித்து திருப்பியவன், "ம்மா! ட்டீ… ஈ…." என்று கத்தி, அனைவரின் கவனத்தையும் தன்புறம் திருப்ப முயன்றான்.
யாரும் கண்டுகொள்ளவில்லை என்றதும், "ஒன்… ட்டூ…" என்று பெருங்குரலில் கூறி செர்ரி செடியை பிடித்து இழுக்கவும், அனைவரும் அழுத விழிகளோடு அவன்புறம் திரும்பினர்.
பேரனின் கணக்குப் பாடத்தைக் கேட்ட தாத்தாவிற்கு மனம் சற்று சமனப்பட்டிருக்க வேண்டும். "யதுக்குட்டி மேத்ஸ் படிக்கறீங்களா?" என்று அவனைத் தூக்க கை நீட்ட, அவரின் கையைத் தட்டிவிட்டவன், "தாத்தா! ஒன்... ட்டூ… ஃபோர்." என்று மீண்டும் செடியைப் பிடித்துக் காட்டியக் குழந்தைக்கு அதற்கு மேல் அங்குள்ளதை வாசிக்கத் தெரியவில்லை.
அப்பொழுதுதான் அருகிலிருந்த விபுநந்தன், குழந்தை பிடித்திருந்த கிளையை உற்று நோக்கினான். கிளையை நேராகப் பிடித்து, "My love T2E4." என்று வாசித்துவிட்டு புரியாமல் புருவம் சுருக்க, மற்றவர்களும் படித்து விட்டு, 'யார் எழுதியது? என்னவாக இருக்கும்?' என்ற ரீதியில் பார்த்திருக்க,
தன் சோகத்தில் இருந்து சட்டென வெளிவந்திருந்த சீதா, "சொல்லு ஆரவி! அன்னிக்கே கேட்டேனே… அதுக்கு என்ன மீனிங்?" என்று சீண்டினாள்.
குழந்தை யதுநந்தன் கிளையைப் பிடித்து வாசிக்க முயலும்போதே திருதிருக்க ஆரம்பித்துவிட்டாள் ஆரவி. இப்போது சீதாவும் சீண்டவே முகத்தை மறைத்துக் கொண்டு, அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது.
ஓரக்கண்ணால் தன்னவளைப் பார்த்த விபுநந்தன், அவளின் அவஸ்தை முகத்திலிருந்தே அந்த குறியீட்டு வார்த்தையை எழுதியவள் அவள்தான் என்பதைப் புரிந்துகொண்டான். அவள்தானே சதா சர்வ காலமும் மொட்டை மாடியே கதி என்று கிடந்தாள்?
மற்ற அனைவரும் விபுநந்தனைப் பார்த்திருந்தனர். தற்போது காதலில் விழுந்து எழுந்துகொள்ள மாட்டேனென அடம்பிடிப்பவன் அவன்தானே?
அவன் பார்வை அவளிடம் இருக்க, சரி தான்! இது அவர்களுக்குள்ளான ரகசிய பாஷையாய் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அனைவரும் என்ன ஏதென்று கேட்காமல் நாசுக்காக நகர்ந்தனர். சீதாவும் தாயின் பின்னோடே சென்றுவிட்டாள்.
ஆனால் தான்யா மட்டும் ஆரவியைத் தான் பார்த்திருந்தாள். இவள்தான் கதைகளிலும் இது போன்ற வார்த்தை விளையாட்டுகளை வாசக நட்புக்களுக்கு அறிமுகப்படுத்துவாள்.
ஆரவியின் இங்குமங்கும் நகர்ந்து கதை பேசிய நயனங்கள், அதை எழுதியது இவள்தான் என்று கட்டியம் கூற, "ம்ம்! ம்ம்… ரைட் ரைட்!" என்று நமுட்டுச் சிரிப்போடு கேலியாக ஆரவியின் தோளை இடித்து விட்டு சென்றாள் தான்யா.
வெட்க மிகுதியில் அங்கிருந்து ஓடப் பார்த்தவளைக் கைப் பிடித்து இழுத்து, "ஓய் மாமி! நீதான் எழுதினியா?" என்று கேட்டான்.
"ச்சு! கையை விடு விபு!"
"என்ன அர்த்தம்னு சொல்லு. விடறேன்."
"மீனாட்சிஈஈ!!" என்று பல்லைக் கடித்தவள், "அப்புறம் சொல்றேன். கையை விடு!" என்றவாறே திரும்பி அனைவரையும் பார்த்தாள். அனைவரும் சிதிலமாகிக் கிடக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் பார்த்தவாறு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். யதுநந்தன் டியானிடம் இருந்து இறங்கி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.
இவனும் அனைவரையும் பார்த்துவிட்டு, "எல்லாரும் அந்தப் பக்கம் தான் இருக்காங்க. நீ சொல்லு!" என்று அடம்பிடிக்க,
கண்கள் மூடி திறந்தவள் வேறு வழியில்லாமல், "T-னா தமிழ். E-னா இங்கிலீஷ்." என்றாள்.
"புரியலயே…"
"ப்ச் விபு! T2E4 -தமிழ்ல ரெண்டெழுத்து. இங்கிலீஷ்ல நாலெழுத்துன்னு அர்த்தம். கையை விடு!" என்று சன்னமான குரலில் கூறி, தன் கரத்தை அவனிடமிருந்து விடுவிக்கப் போராடினாள்.
சட்டெனப் புரிந்து கொண்டவன், "ம்ஹூம்ம்! கேக்கல." என்று வேண்டுமென்றே குறும்பு சிரிப்போடு வம்பிழுக்க, அனைவரின் முன்பும் மானத்தை வாங்குகிறானே என்று முறைத்தாள்.
அதற்குள் அவர்களின் அருகில் வந்திருந்த யதுநந்தன், "தமில்ல எண்து. இங்கீஸ்ஸ நாது." என்று மழலைக் குரலில் கூவியபடி ஓட, அவனின் கத்தலில் அனைவரும் திரும்பும்முன், கையை உதறிக்கொண்டு கீழே ஓடியே போனாள் பெண்.
"ஹாஹ்ஹாஹ்ஹா..." என்று வாய்விட்டு பலமாகச் சிரித்தான் விபுநந்தன்.
ஒருத்தி… அதுவும் தன் மனம் கவர்ந்தவள்… தனக்கே தனக்கென்று பிரத்யேகமாக சங்கேத வார்த்தையில், தன் பெயரை ஒளித்து எழுதியிருந்ததில், அவன் முகம் காதல் பெருமிதத்தில் மிளிர்ந்தது.
சீதா போன பின் மகனின் மனம் நிறைந்த, முதல் விரிந்த புன்னகையைக் கண்ட பெற்றோர், அவனின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டுமென வேண்டிக்கொண்டு, எப்பாடுபட்டேனும் ஆரவியோடான அவன் காதலை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
அப்போது அங்கு மெலிந்த தேகத்தோடு, கண்ணாடி அணிந்திருந்த ஒரு பெண் வந்தாள். இருபத்தைந்து வயதிலிருந்தவள் அனைவரிடமும் தன்னை அனிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் அடையாள அட்டையைக் காட்டினாள். அதில் நிறுவனப் பெயர் 'Invisible Detective Agency' என்று எழுதியிருந்தது.
விபுவையும் ரிஷியையும் மாறி மாறி பார்த்த அனிதா மிடுக்காகக் கேட்டாள். "ஹூ இஸ் விபுநந்தன்?"
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment