
அத்தியாயம் 26
வியாழக்கிழமை காலையில் ஆரவி தலையைத் துவட்டியவாறே, "விபு! காஃபி ரெடியா?" எனக் கேட்டவாறே கீழிறங்கும் போது, மிகச் சரியாக அதே நேரத்தில் விபுநந்தனின் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வந்தனர்.
விபுநந்தன் சமையலறையில் வழக்கம் போல் ஷார்ட்ஸூம் டீ-ஷர்ட்டுமாகவும், காதில் வாக்மேனுடனும் நின்று பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தான். குட்டிப் பையன் யதுநந்தன் ஓடி வருவதை திறப்பு வழியே கண்டவன், தோளில் கிடந்த கிச்சன் கிளாத்துடன் வெளியே வந்து அனைவரையும் பார்த்துவிட்டு ஆடு திருடிய கள்ளனைப் போல் திருதிருவென முழித்தான்.
ஆரவியையும் தம்பியையும் மாறி மாறிப் பார்த்த தான்யா, "அடப்பாவிஈஈ!!! சொன்ன மாதிரி நிஜமாவே இந்த பொண்ணைக் கடத்திட்டு வந்துட்டியா?" என்று அநியாயத்திற்கு அதிர்ந்து போய் வாயைப் பொத்தினாள்.
"என்னாதூஊஊ!!! பொண்ண…. கடத்திட்டு வந்துட்டானாஆஆ?? ம்மா! ம்மா!! இவன் செய்யாதது இந்த ஒரு வேலை தான்மா! இப்ப அதையும் செஞ்சிட்டான். போச்சு போங்க! நாளைக்கு நீங்க லேடீஸ் க்ளப்ல எப்டிமா தலை நிமிர்ந்து நடப்பீங்க? அய்யகோ!!!" என்று ரிஷிநந்தன் வேண்டுமென்றே ஏற்ற இறக்கத்தோடு கண்களை உருட்டி உருட்டிப் பேசினான்.
ரிஷி, தான் காதலித்த ஜப்பான் நாட்டுப் பெண்ணான டியானை தங்கள் பெற்றோர் மற்றும் பெண்ணின் பெற்றோர் சம்மதத்தோடு தம் பாதியாக கரம் பிடித்திருந்தான்.
இதில் எத்தனை நாள் அண்ணியிடம் தன் அண்ணனின் சைட்டுகளைப் பற்றி வத்தி வைத்திருப்பான் இந்த துரோகி விபுநந்தன்? அதற்கெல்லாம் சேர்த்து இன்று சிக்கிய சிக்கனை அண்ணன்காரன் சூப் வைத்து அதையும் ரசித்து, ருசித்து குடிக்கப் போகிறான்.
தான்யா, தான் உளறிவிட்டதை எண்ணி நுனி நாக்கைக் கடித்துக் கொண்டு, தலையை சொறிந்தவாறு விபுநந்தனைத் தவிர்த்து வேறெங்கோ பார்க்க,
"என்னடா நந்தா இது?" ரகுநந்தன் மகனின் செயலைக் கண்டு அதிர்ந்து நிற்க,
ரகுவின் நண்பரும், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளருமான வெங்கட், "என்னடா சொல்றா இவ?" என விபுநந்தனை தன்புறம் திருப்பி நிற்க வைத்துக் கேட்க,
அவன், "அங்கிள்… நான் சும்மா விளையாட்டுக்கு..." என்று இழுத்தான்.
போலீஸ் அடி கன்ஃபர்ம் என்றுதான் தெரிந்து போயிற்றே? இதற்கு மேல் என்னத்தைச் சொல்வதாம்?
வித்யாலட்சுமி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சோஃபாவில் அமர, வேகமாக அவர்முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், "மாம்! ஐ லவ் ஹெர் மாம்…" எனவும், அவனை ஓங்கி ஓர் அறைவிட்டார்.
ஆரவி செய்வதறியாது கைகளைப் பிசைந்தாள். என்னதான் சீதாவின் மூலமும் விபுநந்தனின் மூலமும் இக்குடும்ப நபர்களை அறிந்திருந்தாலும், அவர்களை பொறுத்தவரை நம் ஆரவி மூன்றாம் மனிதி தான் அல்லவா? எனவே நியாயமான அவர்களின் கோபத்தின் முன் அமைதி காத்தாள். எனினும் நிமிர்வாகவே நின்றாள்.
"ஸாரிம்மா."
"நான் முன்னாடியே சொன்னேன்மா. இதெல்லாம் வேணாம்டா, ரிஸ்க்னு! இவன் தான் அட்வென்ஞர், த்ரில்ன்னு பெரிய ஹீரோ மாதிரி பேசினான்." - தான்யா.
"இதுலாம் பண்றவன் கதைல வந்தா ஹீரோ'ன்னு ஒத்துக்குவ. அதுவே உன் தம்பி பண்ணிட்டா தப்பா?" என அநியாயமாய் நியாயம் பேசினான் விபு.
"நந்தா!!!" என்று கர்ஜனைக் குரலில் அதட்டல் போட்டவர், ரகுநந்தன்! எப்போதும் மகனின் விருப்பத்திற்கு இணங்கி அவன் குறும்பு செயல்களை ஆதரிப்பவர், இன்று ஒரு பெண்ணை ஏமாற்றி, விளையாட்டுப் பொருளாக்கி இருக்கிறான் என்பதைக் கண்டு ஏகத்துக்கும் கடுப்பாகிப் போனார்.
"டாட்…"
"பேசாத! நான் இதுவரை உங்க யாரையும் எதுக்கும் கண்டிச்சதே இல்ல. ஏன்னா என் வளர்ப்பு எப்பவும் தப்பாகிப் போகாதுனு நான் உங்க நாலு பேர் மேலயும் வச்ச நம்பிக்கை! பிள்ளைங்களை இறுக்க வேண்டிய இடத்துல இறுக்கி, பறக்க விட வேண்டிய நேரத்துல பறக்க விட்றணும் நினைக்கறவன் நான்! இத்தனை வருஷத்துல என் பிள்ளைங்க என்னை இறுக்கி பிடிக்கற நிலைக்கு கொண்டு வந்துவிட்டதே இல்ல. ஆனா இப்ப நீ பண்ணிருக்கறதுக்கு… " அவ்வளவு சீக்கிரத்தில் எதற்கும் கோபம் கொள்ளாத ரகுநந்தன் மகனின் செயலை ஏற்க முடியாமல், கண்கள் சிவக்க கொலைவெறியோடு நின்றார்.
"ஆமாம்ப்பா! இப்டி பொண்ணைக் கடத்திட்டு வந்துருக்கறது நம்ம பரம்பரைக்கே இல்ல. நம்ம பரம்பரையவே தலைகுனிய வச்சிட்டான்ப்பா இவன். நாளைக்கு வரலாறு நம்ம 'நந்தன்' ஃபேமிலிய பத்தி எப்டிலாம் அவதூறு பேசப் போகுதோ..?" - ரிஷி.
"எனக்கு தெரியும். இவன் குடும்பத்தைத் தலைகுனிய வைக்கவே தான் பிறந்திருக்கான்." - வித்யா.
ஆரவியிடம் சென்ற வெங்கட், "நீ இவன் மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடும்மா. மத்ததை நான் பார்த்துக்கறேன். நாட்டுல பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாகிடுச்சு." என்று, தான் ஓய்வு பெற்றதையும் மறந்து மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.
"பிஸினஸை எப்டி அடுத்த லெவலுக்கு கொண்டு போகலாம்னு எனக்கே ஐடியா சொல்ற நீ, லைஃப்ல எப்பவும் தவறான பாதையவே ச்சூஸ் பண்றியேடா? என் வளர்ப்பு எங்க தப்பாகிப் போச்சு?" உள்ளக் கொதிப்போடு கேட்டார், ரகுநந்தன்.
அதுவரையிலும் அமைதியாக நின்றிருந்த ரிஷியின் மனைவி டியான், "லீவ் இட் மாமா! நந்தா செஞ்சது தப்பு தான். ஆனா அவனுக்கு நம்ம தட்சிணாவுக்கு இப்டி ஆகும்னு தெரியாது இல்லையா? அவனும் இந்த ஒரு வாரமா என்னாச்சோன்னு பயந்துட்டு தானே இருந்துருப்பான்? அந்த தண்டனையே அவனுக்கு போதும் மாமா! அதுவும் இந்த பொண்ணை நம்ம நந்தா கஷ்டப்படுத்திருந்தா இப்ப அவ இவ்ளோ அமைதியா இருப்பாளா? அதனால உங்க வளர்ப்பு தப்பாகிடுச்சேன்னு நீங்க வருத்தப்பட வேணாம், மாமா!" என்று ஆங்கிலத்தில் மைத்துனனுக்காக பேச,
அப்போது தான் முதன்முதலாக ஆரவியை ஏறிட்டு பார்த்தார் ரகுநந்தன். பிறை சூடிய இறை முன், எரியும் பொன் சுடரென இருந்தது பெண்ணவள் தீபமுகம். அவர் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, சற்று தலையை இறக்கி டியானின் கூற்றை ஆமோதித்து, மில்லிமீட்டர் அளவு மரியாதை செய்யும் வண்ணம் புன்னகைத்தாள் ஆரவி.
அதன்பின்னே தான் சற்று கோபம் தணிந்தார் மனிதர். அண்ணியை நன்றியோடு பார்த்த விபுநந்தன், தட்சிணா நிலையைக் கேட்டு மிகவும் வருந்தினான். தன்னால் அல்லவா அவனுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றவுணர்வு வேறு ஆட்டிப் படைத்தது.
இந்த ஐந்து நாட்களில் தட்சிணாவை திட்டாத நாளில்லை. அவன் ஏன் அரைமணி நேரத்தில் வரவில்லை என்று யோசிக்கவில்லை. அவனுக்கு இது போல் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கும் என்ற ரீதியில் கூட சிந்திக்கவில்லையே! இவ்வாறாக தன்னை நொந்து கொண்டிருந்த விபுநந்தன் உடனடியாக தட்சிணாவைப் பார்க்க வேண்டுமென கிளம்பப் பார்த்தான்.
மருத்துவமனையில் இப்போது பார்வையாளர்கள் நேரம் இல்லை எனக் கூறி அவனை அடக்கிவைத்தார் வித்யா.
இப்போது அனைவரும் சற்று இலகுவாக பேசிக் கொண்டிருந்தனர். வெங்கட் வெளியே சென்று தனக்கு உதவிய சைபர் கிரைம் நண்பருக்கு அலைபேசியில் நன்றி கூறிக்கொண்டிருந்தார்.
வித்யா மகனின் மேல் இன்னமும் கோபமாகவே இருக்க, முதலில் அம்மாவை சமாதானப்படுத்த ஆயத்தமானான். இவன் சமாதானம் செய்ய முயல அதை ரகுநந்தனும் ரிஷியும் வெற்றிகரமாக தகர்த்துக் கொண்டிருந்தனர்.
"ம்மா! ம்மா! ஸாரிமா. நான் சும்மா விளையாட்டுக்கு தான்மா செஞ்சேன். நம்ம தட்சிணாவை ஆஃப் ஆன் ஆர்-ல வர சொன்னேன். அவனுக்கு இப்டி ஆகிருக்கும்னு தெரியலம்மா." என்று வித்யாலட்சுமியின் நாடியைப் பிடித்துக் கெஞ்சினான்.
"எல்லாத்துலயும் உனக்கு விளையாட்டா? இப்ப பாரு உன் விளையாட்டால ஒரு வயசு பொண்ணு தெரியாத இடத்துல ஒரு தடிமாடு கூட, ஒரு வாரமா அடைஞ்சு கிடந்திருக்கா!"
"ஆரவிக்கு ஒரு வயசில்லம்மா. இருபத்துமூணு வயசு!" எனவும்,
அருகிலிருந்த ரிஷி, "ஜோக்கு ரொம்ப கேவலமா இருக்குது." என்றான்.
தலையைத் திருப்பி அவனை முறைத்து விட்டு, மீண்டும் அன்னையிடம் தன் பிட்டை ஆரம்பித்தான் விபுநந்தன்.
"நீ எவ்ளோ பிட்டு போட்டாலும் வேலைக்காகாது." - ரகுநந்தன்.
"அப்ப்ப்பாஆஆ!!!" என்று பல்லைக் கடித்தவன், "மாம்! பாருங்க டாடி பிட்டு, கிட்டுனு பேசறார். நான் என்ன அப்டிபட்டவனா?" என்று அப்பாவியாக கேட்க,
தயவு தாட்சண்யமே இல்லாமல், "பின்ன இல்லயா? நான் பெத்ததுலயே எனக்கு நெஞ்சுவலி வர வைக்கறவன் நீதான்! வாயத் திறந்தா ஒரே பொய்!" என்று புகைந்தார் வித்யாலட்சுமி.
"ஒரே பொய்யை எங்க வித்யா சொல்றான்? லட்சக் கணக்குல டிஸைன் டிஸைனால்ல சொல்றான்?" - ரகுநந்தன்
"இப்ப உங்க ஜோக் படுகேவலமா இருக்குது டாடி." - ரிஷி.
இங்கே விபுநந்தன் அம்மாவை சமாதானப்படுத்த, அவர் முகம் திருப்ப, அதைக் கண்டு ரிஷியும் ரகுநந்தனும் கவுன்டர் குடுக்கவென இருக்க, மறுபுறம் ரிஷியின் மகன் யதுநந்தனை மடியில் அமர்த்தியிருந்த ஆரவியோடு ஐக்கியமாகியிருந்தனர், தான்யா மற்றும் டியான்.
விபுநந்தனிடம் ஒரு எரிக்கும் பார்வையை தந்து விட்டு, ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மற்ற மூவரின் அருகே சென்று அமர்ந்தார் வித்யா. மகன் காதல் என்கின்றான்! எனில், அந்த பெண்ணைப் பற்றி அறிய வேண்டியது அன்னையின் கடமையல்லவா?
அவர் அருகே வந்ததுமே ஆரவி மென்மையாக அவர் கண்களைப் பார்த்து புன்னகைத்தாள்.
"உன் பேரென்ன மா?"
"ஆரவி."
'என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' எனும் கேள்விக்கு ஆரவியை முந்திக் கொண்டு தான்யா பதிலளித்தாள்.
"பெரிய ரைட்டர்மா. நான் ஆரவியோட ஸ்டோரி எதையும் மிஸ் பண்ணவே மாட்டேன் தெரியுமா? லவ் ஸ்டோரியும் த்ரில்லர் ஸ்டோரியும் சூப்பரா, சுவாரஸ்யமா எழுதுவா. இவ கதையைப் படிச்சுதான் நம்மாளு ஃப்ளாட் ஆகிட்டான்." என்று படபடவென பேசியவள் ஆரவியிடம் திரும்பி தயங்கியவாறே, "ஆரவி, ரொம்ப நேரமா கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்… எங்க நந்தாவை உனக்கு பிடிச்சிருக்கா?" என்று கேட்க,
அவள் பேசுவதை புன்னகை மாறாமல் பார்த்திருந்தவள், "பிடிச்சிருக்குக்கா. ஆனா இப்டி ப்ரொபோஸ் பண்ணதுதான் பிடிக்கல!" என்றாள், மிகத் தெளிவாக.
கேட்ட வித்யா இன்னமும் மகனை பார்வையால் எரித்தார். ஆரவியிடம், "நீயாவது அவனைக் கொஞ்சம் கண்டிச்சு, திருத்து ஆரவி!" என்று மறைமுகமாக மகனின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க,
ரகுநந்தன் வருங்கால மருமகளின் குடும்பம் பற்றி விசாரித்தார். ஏனெனில் சற்று முன்னர்தான் தான்யாவின் அலைபேசியில் இருந்து, ஆரவி அவள் அன்னையிடம் பேசியிருந்தாள். அவள் பேச்சில் இருந்து ஐயர் வீட்டுப் பெண் என்று தெரிந்தது.
அவர்கள் எப்படி இவர்கள் காதலை ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. எனினும் மகனுக்காக, தான் அவர்களிடம் பேசியாக வேண்டும். அதற்கு அவர்களைப் பற்றி முன்னமே அறிந்துகொள்வது நலம் என்றெண்ணி, அவளிடம் அது பற்றி கேட்க, "அம்மா எப்பவும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பா தான் ரொம்ப ஸ்டிரிக்ட்." என்றாள்.
ஆரவிக்கு விபுநந்தனிடமும் சீதாவிடமும் பேசியதைப் போல் இலகுவானப் பேச்சு இவர்களிடம் வரவில்லை. இன்னும் பழக வேண்டும் போலும்.
"யூ டோண்ட் வொர்ரி அபௌட் இட் பேபி. எல்லாம் எங்க டாடி பார்த்துக்குவாங்க." என்று வாய்சவடால் பேசினான் விபுநந்தன்.
ரகுநந்தன் மகனைப் பாவமாய் பார்த்தார். "ஏன் டாட்? ஓ! எங்க டாடினு சொல்லிட்டேன்னு பார்க்கறீங்களா? மாமான்னு சொல்லணும்ல?" எனவும்,
"நந்தாஆஆ!!" என்று பல்லைக் கடித்தார்.
"ஹிஹி… அது அப்டி இல்ல டாட்! எனக்கு நீங்க அப்பானா... என் ஆளுக்கு நீங்க மாமா தானே? அதை தான் நானும் சொன்னேன். ஆமா தானே ப்ரோ?" என்று ரிஷியை வம்புக்கிழுக்க,
அவன், "என்னை ஏண்டா இதுல மாட்டி விடற?" என்று அலறினான்.
"ஏன்னா நீதானே நம்ம டாடியை, தமிழ்ல மாமா'ன்னு கூப்பிடணும்னு அண்ணிக்கு கத்துக் குடுத்த?"
டியான், "நான் அல்கா தமில் கத்துகிறது. உன் ப்ரோ தான் இன்னும் ஜப்பானீஸ் கத்துக்கலை நண்டா (நந்தா)." என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.
"அண்ணி! அல்காவும் இல்ல. புல்காவும் இல்ல. அழகான்னு சொல்லணும். நாக்கை நல்லா வளைங்க!" - தான்யா.
"அது பரவால்லடா தானுக்குட்டி! கத்துகிறது சொல்றா பார்! 'கத்துக்கிட்டேன்' சொல்லணும். இந்த 'து' வ எப்போ தான் விடப் போறாளோ தெரியல." - ரகுநந்தன்.
"டாடி! முதல்ல என் பேர ஒழுங்கா சொல்ல சொல்லுங்க டாடி. அடேய் அண்ணா! உங்க ஃப்ர்ஸ்ட் நைட்லயே அண்ணிக்கு என் பேரை சரியா ப்ரனௌன்ஷேட் பண்ண சொல்லி கொடுன்னு சொன்னேன்ல? கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு. இன்னும் சரியா சொல்ல மாட்றாங்க." என்று குறைபட்டான் விபுநந்தன்.
அதற்கு ரிஷி பதில் கூறும் முன், டியான் ஆங்கிலத்தில், "நீ உன் ஃப்ர்ஸ்ட் நைட்டில் நான் சொல்லும் ஜப்பானீய பழமொழியை உன் மனைவிக்கு கற்றுக் கொடு! அதன் பிறகு உன் பெயரை நான் சரியாக உச்சரிக்கிறேன்." என்று போட்டுத் தாக்கினாள்.
"யார் இவனா? ஜப்பான்ல போய் வேணும்னா ஃப்ர்ஸ்ட் நைட்'அ செலபரேட் பண்ணுவான்." என்று கிண்டலடித்தார் ரகுநந்தன்.
"போதும் விடுங்களேன். அவளுக்கு எப்டி பேச வருதோ அப்டியே பேசட்டும்." என்று எப்போதும் போல் இப்போதும் மருமகளை விட்டுக்கொடுக்காமல் பரிந்து வந்தார் வித்யாலட்சுமி.
ரிஷி, "தட்'ஸ் மை மாம்!" என்று அம்மாவைக் கொண்டாடிவிட்டு, "அவ இப்டி பேசறது தான்டா தமிழுக்கே அழகா இருக்குது." என்று தம்பியிடம் ஜொள்ளினான்.
தன் தந்தையின் கடுமையைப் பார்த்து வளர்ந்திருந்த ஆரவி, ரகுநந்தன் எவ்வளவு இலகுவாக பிள்ளைகளிடம் பழகுகிறார் என்று வியந்து பார்த்திருந்தாள். கைகள் தாமாக யதுநந்தனின் சிகையை வருடிக்கொண்டிருந்தன.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment