Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 25

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 25


முதலில் தட்சிணாமூர்த்திக்கு என்னவாயிற்று என்று பார்த்துவிடுவோம். கதைமாந்தர்கள் வாய்மொழியாக கூறினால் கதை இன்னும் இழுக்கும்.‌ எனவே நானே சுருங்க கூறிவிடுகிறேன்.

பொதுவாக குடும்பத்தினர் யாரேனும் இங்கே தங்க வரும் போது வீட்டினைப் பராமரிக்கும் தட்சிணா, கிருஷ்ணாவிற்கு தேவையான சமையல் பொருட்களோடு தங்களின் தேவைக்கும் வாங்கி வந்துவிடுவர். அப்போது இருவரில் ஒருவருக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த சில நாட்களுக்கு மட்டும் விடுப்பிற்கு ஊருக்குள் இருக்கும் தங்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். காட்டிற்குள் ஒற்றை வீடாய் இருப்பதனால் வேலையில் இருக்கும் யாரும் குடும்பத்தோடு இங்கே தங்குவதை ரகுநந்தன் அனுமதிக்கவில்லை. எனவே இவர்கள் இருவர் மட்டும்தான் இங்கே! 

அனைவரும் அவரவருக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள, விபுநந்தன் மட்டும் தன் சோம்பேறித்தனத்தால் எந்த பொருளையும் வாங்கி வரமாட்டான். எதுவானாலும் தன் தேவைகளை தட்சிணாவிடம் கூற, அவன் ஊருக்குள் சென்று வாங்கி வந்து தருவான். அப்போது அவன் வீட்டிற்கு தேவையான பொருட்களும் வாங்கக் கிடைக்குமாதலால் மகிழ்ச்சியாகவே சென்று வருவான். 

இவர்கள் வீட்டில் யாரும் வேலைகாரர்கள் என்ற பதத்திலேயே விளிப்பதில்லை. பேச்சிலும் கூட 'நம் தட்சிணா, நம் கிருஷ்ணா' என்றுதான் சொல்வது. எனவே, விபுநந்தனுக்கு இந்த தட்சிணாமூர்த்தி நல்ல நண்பனும் கூட!

நந்தனின் சேட்டைகள் அனைத்திற்கும் துணை நிற்பவன் இவன்தான். நந்தன் இங்கு வருகை தரும் போது மட்டும் தட்சிணாவிற்கு விடுப்பில் செல்ல நாட்டமே இருக்காது. அவனோடு கழிக்கும் பொழுதுகளையே பெரிதும் விரும்புவான். ஆனால், வீட்டில் தட்சிணாவை அவன் அன்னைத் தேடக் கூடுமென விபுநந்தன் அடித்துத் துரத்தி விட்டுவிடுவான்.

அதுபோலவே அன்றும் பொருட்களை வாங்கி வர செய்து, அனைத்தையும் அடுக்கிவிட்டு வெளியே வந்தனர். 

மழையடிக்கக் காத்திருக்கையில் ஓர் மரத்தடியில் நின்று, தட்சிணாவின் தோள் மேல் கைப் போட்டுக் கொண்ட விபுநந்தன், "இந்தாப்பா தம்பி! (தட்சிணாவிற்கான நந்தனின் செல்ல விளிப்பு!) இப்ப ஒரு பொண்ணு வருவாங்க. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள வந்ததும் நீ வெளில இருந்து டோர் லாக் பண்ற! ஓகே?" எனக் கேட்க,

"என்ன தம்பி சொல்றீங்க? பொண்ணை உள்ள வச்சு பூட்டவா?" நந்தனின் கட்டளைகள் அனைத்தையும் சிரமேற்கொண்டு செய்பவன், ஏனோ இந்த கட்டளையில் ஓர் ஒவ்வாத தன்மையை முகத்தில் காட்டினான்.

"ஹே பயந்துட்டியா தம்பி? அவளை சும்மா ப்ராங்க் பண்ண போறோம் அவ்ளோதான். மேடம் பெரிய ரைட்டர் தெரியுமா?"

"சிநேகித பொண்ணுங்களா தம்பி?" நந்தனுக்கு பெண் தோழிகள் இருக்கிறார்களென தெரியும். ஆனால் இதுவரை எந்த பெண்ணையும் தனியாக இங்கு அழைத்து வந்ததில்லையே என்ற சிந்தனைதான், தட்சிணாவிற்கு.

"ம்ம்! சிநேகிதி ஆகப் போற பொண்ணு!" பார்வை எங்கோ தூரத்தில் மிதக்கக் கூறியவனின் முகம் பிரதிபலித்த மென்மை உணர்வுகளை, வயதில் மூத்தவனான தட்சிணா நொடியில் கண்டுகொண்டான். சீதா சென்ற பின்னர், தன் பிரியமான சின்னத்தம்பியின் முகம் காட்டும் முதல் வெளிச்சம்.

"அய்யாவுக்கு தெரியுங்களா தம்பி?"

"இப்ப என்ன? எனக்கு ஹெல்ப் பண்ணுவியா மாட்டியா? உங்க அய்யா சொன்னா தான் கேட்பியோ?"

"அய்யோ! அப்டி இல்ல தம்பி… எதுலனாலும் வெளாடலாம். பொண்ணு சமாச்சாரத்துல மட்டும் வெளாடக் கூடாதுன்னு…"

"எல்லாம் எங்களுக்கும் தெரியும். இட்'ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன் தம்பி. ஜஸ்ட் ஆஃப் ஆன் ஆர்! ஓகே? அதுக்கப்புறம் நீயே வந்து கதவைத் திறந்துடுவியாம். தட்'ஸ் ஆல்!" என்று முடிக்கப் பார்க்க, தட்சிணாவிற்கு இந்த செயலில் மனம் ஒப்பவே இல்லை. முகம் சுணங்க நின்றிருந்தான்.

"தட்சிணா! லுக் அட் மீ!!"

தயங்கியவாறே முகம் பார்த்தவனிடம், "அவ உள்ள வந்ததுல இருந்து, நீ கதவைத் திறக்கற வரை… அந்த அரைமணி நேரத்துல என் விரல் நுனி கூட அவ மேல படாது. ம்ம்?? பிலீவ் மீ." எனவும்,

சட்டென முகம் தெளிந்தவன், "ச்சச்ச… உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா தம்பி? நானொரு மடையன்! சீதாம்மாவோட வளர்ப்பு நீங்க! உங்களைப் போய்…." என்றுவிட்டு தலையை சொறிந்தாலும், இது போன்ற விளையாட்டு இதுவே கடைசியாக இருக்கட்டுமென நந்தாவை எச்சரிக்கவும் தவறவில்லை.

பின் ஆரவி வரும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு, தட்சிணாவின் அலைபேசியிலிருந்து அவளுக்கு அழைத்து சாலையின் உள்ளே வரச் சொன்னான் விபுநந்தன்.

திட்டமிட்டபடி ஆரவி வருவதை வீட்டின் பக்கவாட்டில் இருந்து பார்த்திருந்த தட்சிணா, அவள் உள்ளே செல்லவும் சத்தமில்லாமல் வெளியிலிருந்து கதவைப் பூட்டிவிட்டான்.

செய்யக்கூடாத ஏதோ ஒன்றை செய்ததுப் போல் மனம் பதைபதைத்தது. கைகள் நடுங்கியது. உடல் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. கொஞ்சம் தீர்த்தத்தை உள்ளே இறக்கினால் சரியாகிவிடும் என்று இடையில் வைத்திருக்கும் பாட்டிலை எடுத்துப் பார்க்க, அதில் உள்ள திரவம் தீர்ந்து போயிருந்தது.

அந்த செம்மண் சாலையில் இருந்து வெளியே சென்று, நெடுஞ்சாலையைக் கடந்து, அங்கிருந்து சிறிது தூரம் சென்றால்தான், அங்குள்ள கடையில் குடிமகன்களுக்கு தேவையானது கிடைக்கும். எனவே அரைமணி நேரத்தில் சென்று வந்துவிடலாமென எண்ணி, தன் இருசக்கர வாகனத்தை சற்று தொலைவு வரை தள்ளிக் கொண்டே போய், அதன் பின் வேகமெடுத்தான். மழை வேறு நசநசவென பெய்து கொண்டிருந்தது.

செல்லும் வழியெங்கும் தட்சிணாவிற்கு விபுநந்தனைப் பற்றிய எண்ணமே! என்ன தான் விளையாட்டுக்காரனாக இருந்தாலும், தனக்குத் தெரிந்து இதுவரையிலும் ஒழுக்கம் பிறழ்ந்தவனல்ல. இவ்விடயத்தில் ரிஷியையும் நந்தாவையும் எப்போதும் மனதிற்குள் மெச்சிக் கொள்வான்.

ஆனால் இன்று அந்த பெண்ணைப் பற்றி பேசும் போது நந்தாவின் முகத்தில் குறும்பு, காதல், மயக்கம் என உணர்வுகள் அலையலையாய் வந்து வந்து போனதை நினைத்து, "ஹ்ம்ம்… எல்லாம் வயசுக் கோளாறு!" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு சென்றான்.

பின், 'நாம இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்லி புரிய வச்சிருக்கலாமோ? இதெல்லாம் ஒரு விளையாட்டா? திரும்பி போய் திறந்து விட்டுடலாமா?' என்று மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

சிந்தித்தவாறே நெடுஞ்சாலையைப் பிடித்திருந்தான். பின்னும் தன் குட்டி முதலாளியையும் ஆரவியையும் நினைத்து, 'எதுவும் தவறாக நேர்ந்துவிடக் கூடாது' என்று தன் குல தெய்வத்திற்கு ஓர் வேண்டுதலை வைத்தபடியே சாலையைக் கடந்தவன், தனக்கு வலதுபுறம் வந்த கனரக வாகனத்தை கவனிக்கத் தவறிவிட்டான்.

அது தேசிய நெடுஞ்சாலையாதலால் சற்று வேகத்துடன் வந்தது அந்த வாகனம்! நொடிப் பொழுதில் நடந்தேறியது அந்த விபத்து!! தட்சிணா நூறு மீட்டர் தொலைவில் தூக்கி வீசப்பட்டிருந்தான்.

எதிர்ப்புறத்தில் கடைக்கு சென்று வந்து கொண்டிருந்த சிலர் தாம் ஓடி வந்து கவனித்து பலவீனமான சுவாசத்தில் போராடிக் கொண்டிருக்கிறானென உறுதிபடுத்தி, ஊருக்குள் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். 

மனிதம் இன்னமும் சாகவில்லை. அவர்கள் பயந்து கொண்டு, ஆம்புலன்ஸிற்கு தெரிவித்து விட்டு காத்திருந்தார்களேயானால், காத்திருக்கும் நேரத்திலேயே தட்சிணாவின் உயிர் பிரிந்திருக்கும். ஆம்! மனிதம் இன்னமும் சாகவில்லை.

மருத்துவமனையில் ஆள் யாரென்று தெரியாத நிலையில் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி, அதன் பின்னரே சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. அதுவரையில் முதலுதவி மட்டுமே செய்திருந்தனர்.

பின் தலையில் அடிபட்டிருந்தவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், கோமா நிலைக்கு சென்றுவிட்டானென தெரிவித்திருக்கின்றனர்.

விபத்தில் தட்சிணாவின் அலைபேசி நொறுங்கியிருந்தது. காவலர்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து சற்று உள்தள்ளியிருந்த கடையில் விசாரிக்க, தட்சிணாவை நன்கு தெரியுமெனக் கூறி, 'ஹோட்டல்காரர் ரகுநந்தன் வீட்டில் காவலுக்கு இருப்பவன்' என தெரிவிக்க, காவலர்கள் உணவகப் பெயரைக் கேட்டுவிட்டு, அவ்வீட்டைக் கூட பார்க்காமல் நேரடியாக ரகுநந்தனிற்கு அழைத்துவிட்டனர்.

அவர் விஷயம் கேள்விப்பட்டதும் வித்யாலட்சுமியுடன் நேரில் மருத்துவமனை சென்றார். பல வருடங்களாக தங்களிடம் இருந்தவன், இப்போது மருத்துவமனை படுக்கையில் இருப்பதைக் கண்டு இருவரும் மனம் வருந்தினர். 

எப்போது வேண்டுமானாலும் உடல்நிலையில் முன்னேற்றம் காணலாம் என மருத்துவர்கள் கூறியதைக் கேட்டுக் கொண்டு, தட்சிணாவின் வீட்டிற்கு தெரிவித்தனர்.

தட்சிணாவிற்கு அவன் அன்னை யசோதா மட்டுமே! முரடனாக வளர்ந்திருந்தவனுக்கு திருமணம் செய்தால் சரியாகிவிடும் என தூரத்து சொந்தத்தில் ஓர் பெண்ணை மணமுடித்து வைத்திருந்தார், யசோதா. தட்சிணா இங்கு வேலையில் இருப்பதால் அவள் அடிக்கடி பிறந்தகத்திற்கு சென்றுவிடுவாள். வார இறுதியில் இவன் விடுமுறையில் வரும் போது மட்டும் இங்கு வருவாள்.

இப்போது விபத்து குறித்து தெரிவிக்க மாமியார், மருமகள் இருவரும் வந்து சேர்ந்தனர். 'குடியால் தான் இவனுக்கு அழிவு வருமென்று எப்போதும் தான் கூறுவது போல், தன் வாய் முகூர்த்தமே மகனை இந்நிலையில் தள்ளிவிட்டது' என்று அழுது தீர்த்தார், யசோதா.

'குடிகாரனாகவும், முரடனாகவும் இருந்தாலும் தனக்கு எந்த குறையும் வைக்காமல், தன்னை மகிழ்ச்சியாகவே வைத்து பார்த்துக் கொண்டவன் தன் கணவன்! அவனுக்கு இப்படியோர் நிலை ஏற்பட்டிருக்க வேண்டுமா?' என தினமும் தான் தொழும் தெய்வத்திடம் முறையிட்டு கதறினாள், அவன் மனைவி.

இருவரையும் ஆசுவாசப்படுத்தி, ஆறுதல் கூறி தட்சிணா ஒரே வாரத்தில் உடல்தேறி எழுந்து விடுவான் எனத் தேறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்தனர், ரகுநந்தன் தம்பதியர். 

தினமும் மருத்துவமனை சென்று தட்சிணாவின் நிலையை தெரிந்துகொண்ட ரகுநந்தனுக்கு, நேற்று அதாவது புதன் கிழமை மாலையில் அவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவித்தார் யசோதா.

ஏதோ மீட்டிங்கில் இருந்தவரால் உடனே வர முடியாத காரணத்தால் ரிஷியை அனுப்பி வைத்தார். 

வந்தவனிடம், நினைவு திரும்பியிருந்த தட்சிணா, 'சின்னத்தம்பி, சின்னத்தம்பி' என்றானே தவிர அதற்கு மேல் அவனால் பேச முடியாது போக, அவனை இப்போது ஏதும் பேச வேண்டாமென மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ரிஷி, 'நந்தாவை தான் தட்சிணா பார்க்க விரும்புகிறான் போலும்' என்று புரிந்து கொண்டு, விஷயத்தை ரகுநந்தனிடம் தெரிவித்தான். 

வீட்டில் விபுநந்தன் இந்த வாரம் காட்டு பங்களாவிற்கு செல்ல வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருந்தான். தான்யாவை செக்கப்பிற்கு அழைத்து செல்லும் பொருட்டு, வித்யாலட்சுமி இந்த முறை வரவில்லை என்றுவிட்டார்.

மேலும் தட்சிணாவிற்கு விபத்து ஏற்பட்ட அன்று, விபுநந்தனை அழைக்க அவன் அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் இவன் இப்படி யார் தொந்தரவும் இருக்கக்கூடாது என்று அலைபேசியை அமைதி பயன்முறையிலோ (silent mode) அல்லது அணைத்துப் போடுவதோ வழமை தான் என்பதால் வீட்டினர் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அவனே அழைப்பான் என்று இருந்துவிட்டனர். 

அத்தோடு ரகுநந்தன் நந்தாவிற்கும் தட்சிணாவிற்கும் உள்ள பிணைப்பையும் நட்பையும் அறிந்தவராகையால், 'தட்சிணாவின் இந்நிலையை அறிந்தால் நந்தா வருந்தக்கூடும். அவன் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றிருப்பதாகவே எண்ணிக் கொள்ளட்டும். விடுமுறையில் சென்றிருக்கும் கிருஷ்ணாவும் இப்போதைக்கு வருவதற்கில்லை. எனவே பிள்ளை நிம்மதியாக இருந்துவிட்டு வரட்டும். அதற்குள் தட்சிணாவின் உடல்நிலையும் சரியாகிவிடும்.' என்று சொல்லியிருந்தார்.

விபுநந்தனின் நாடகமும் அதற்கு தட்சிணாவை அவன்‌ பகடைக் காயாக்கியதும் இவர்களுக்கு தெரியாதல்லவா?

முதலில் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் ஆகியும் நந்தனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அந்த வீட்டில் இருக்கும் தொலைபேசியும் வேலை செய்யவில்லை. அவனையும் காணவில்லை என்று வீட்டினர் கவலையடைந்தனர். எப்போதும் போல், பொறுப்பில்லாத மகனைப் பெற்றுவிட்டேனென்று வித்யாலட்சுமி புலம்பித் தள்ளினார்.

நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை, மாலை! தட்சிணாவின் கால்சட்டை பாக்கெட்டில் வீட்டின் சாவி ஒன்று இருந்ததாகவும் சற்று முன்னர்தான், தான் அதை கவனித்ததாகவும் கூறி, அவன் மனைவி ரகுநந்தனிடம் தந்தாள்.

பார்த்ததுமே அது தங்கள் வீட்டுச் சாவி தான் என்பது தெரிந்து போனது. சாவி இவனிடம் இருக்க மகன் எங்கு சென்றிருப்பான் என்று, இப்போது விபுநந்தனைக் குறித்து இன்னும் கவலையாகிப் போயிற்று. மீண்டும் அவனை அழைக்க, அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. 

அவன் நண்பர்களிடம் விசாரித்தனர். யாருக்கும் எந்த விபரமும் தெரிந்திருக்கவில்லை. ஒருவன் மட்டும், "இந்த வீக்எண்ட் நானும் நந்தாவும் உங்க வைல்ட் ஹவுஸ் போக ப்ளான் பண்ணிருந்தோம் அங்கிள். எனக்கு லாஸ்ட் மினிட்ல வேலை வந்துட்டதால வர முடியல. அதை சொல்றதுக்கு அவனுக்கு கால் பண்ணேன். பட் நோ ஆன்சர் ஃப்ரம் ஹிம்." என்றான்.

அன்று முழுவதும் அவன் செல்லும் இடங்கள் மற்றும் தங்கள் ஹோட்டல் அறைகளில் தங்கள் குடும்பத்தினருக்கென உள்ள அறையைக் கூட விடாமல் தேடியாயிற்று. எங்கும் விபுநந்தன் இல்லை. 

வெளியூருக்கு செல்வதானால் தகவல் தெரிவிக்காமல் இருக்க மாட்டானே? சரி அப்படியொன்றும் தொலைந்து போகும் சிறுவனுமல்ல; அவன் வரவிற்காக இன்று ஒருநாள் காத்திருப்போம் என பொறுத்திருந்தனர்.

புதன்கிழமை, மாலையில் தான் தட்சிணாவிற்கு நினைவு திரும்புகிறது. ரிஷியிடம் நந்தனைக் குறித்து கூற முயல்கிறான். துரதிர்ஷ்டவசமாக அவனால் எதையும் உரைக்க முடியவில்லை.

இதை ரிஷி தந்தையிடம் கூற, இதற்கு மேல் காத்திருக்க முடியாது என எப்போதும் தனக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் தன் நண்பர், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வெங்கட்டிற்கு அழைத்து விஷயத்தைச் சொன்னார்.

பின் நந்தனைத் தேட ஏற்பாடுகள் நடந்தேறின. அவன் அலைபேசியை ட்ராக் செய்து கண்டுபிடிக்க பார்க்கலாம் என்று சொன்னார் வெங்கட். அதன்படி சைபர் க்ரைமின் உதவியோடு இன்று காலையில் நந்தனின் அலைபேசி இருக்குமிடம் தெரியவந்தது. அதாவது அவன் அலைபேசி கடைசியாக அணைந்து போனதாக காட்டிய இடம்!

ரகுநந்தனும் ரிஷியும் பரபரப்பாகிவிட்டனர். அலைபேசி இருக்கும் இடம் என்று தங்கள் காட்டு பங்களாவை அல்லவா காட்டுகிறது? பிள்ளைக்கு என்னானதோ ஏதானதோ என்று பதறிவிட்டனர். 

விஷயம் தெரிந்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இதோ… பதறிப் போய் வர, நம் ஆள் குளுகுளுவென ஓர் அட்டகாச ஃபிகரோடும், காதில் வித்யாலட்சுமியின் வாக்மேனோடும், 'நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே! ஆஹா!!!' என்று பாடிக் கூத்தடித்துக் (ஹிஹி... அவர்களைப் பொறுத்தவரை அப்படி தானல்லவா?) கொண்டிருக்கிறான்.

பூக்கும்🌻🌺 


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...