Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 24

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 24


கடந்து போனதை ஆரவியிடம் கூறிவிட்டு அதிலிருந்து மீள முடியாமல் தவித்த விபுநந்தன், அவள் ஆறுதலாக மடிதாங்க வந்தாலும் மறுத்துவிட்டு, தனிமையை நாடி செல்ல பார்த்தான்.

உணர்ச்சி மிகுதியில் தவித்தவனின் தோளணைத்து, "கால்ம் டவுன் விபு. ப்ளீஸ் ஜஸ்ட் பீ நார்மல்!" என்றாள்.

"நான் கொஞ்சம் என் ரூம்ல தனியா இருந்துட்டு வர்றேன் ஆரவி." என்று அவன் எழவும், 

அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு, "தனியா அங்கே போய் என்ன பண்ண போற விபு? நேக்கு பசிக்கறது. சாப்பிட ஏதாவது செஞ்சு கொடு!" என்றாள், அதிகாரமாக!

சுள்ளென்ற கோபத்தோடு, "கொஞ்ச நேரம் கூட தனியா விட மாட்டியா? உனக்கு வேணும்னா நீயே சமைச்சு கொட்டிக்கோயேன்." எனக் காய்ந்தவனின் கோபத்தை தூசென புறம் தள்ளியவள், 

அழிச்சாட்டியமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு, "கடத்திண்டு வந்து காதல் பண்ணுனு கம்பெல் பண்றவன் நீ! அப்ப நீதான் நேக்கு சமைச்சுப் போட்டு நன்னா கவனிச்சுக்கணும்." என்றாள்.

அவளை ஒன்றும் செய்ய முடியாமல் அருகிலிருந்த தூணின் மேல் மொத்த கோபத்தையும் காட்டிவிட்டு சமையலறை சென்றான்.

பின்னேயே சென்றவள், "என்ன சமைக்கப் போறியாம்?" எனக் கேட்க,

"ம்ம்… உப்புமா!" என்றான், கடுப்புடன்!

"என்ன? என்னைப் பார்த்தா பஞ்சத்துல அடிபட்டவ மாதிரி தெரியறதா நோக்கு? உப்புமா செய்றானாம் உப்புமா! ஒழுங்கா அன்னிக்கு செஞ்சு தந்தியே மஷ்ரூம் புலாவ்… அது செஞ்சு கொடு!"

"உங்கப்பன் குடுமி தலையனை டெய்லி ஒரு மஷ்ரூம் பாக்கெட் சப்ளை பண்ண சொல்லு! செஞ்சு தர்றேன்."

"எது? எங்கப்பா குடுமி வச்சிருக்கவறா? தினமும் நோக்கு மஷ்ரூம் சப்ளை பண்ணனுமோ?" என்று கோபத்தில் சிவந்துவிட்ட மூக்கை தேய்த்துவிட்டவாறே கேட்க,

"பின்ன? இருந்ததே ஒரு பாக்கெட் தான். அதையும் அன்னிக்கு சமைச்சாச்சு. இன்ஃபாக்ட் இப்ப எந்த காய்கறியுமே இல்ல. மளிகை சாமான் கூட இருக்கறதை வச்சு தான் சமாளிச்சாகணும்." என்றான்.

"ஏன் ஏமாத்தி வர வச்சவன் இதெல்லாம் முன்னாடியே ப்ளான் பண்ணி வாங்கி வச்சிருக்கலாமோன்னோ?" 

"அடியே! நான் உன்னை ஏமாத்தி வர வச்சவன்டி. நீ என்னடான்னா என்னையே பிக்னிக் வந்தவன் மாதிரி ப்ளான் பண்ணிருக்கலாம் தானே'ன்னு கேட்டுட்டு இருக்க?"

"ஹான்… பின்ன சும்மாவா? சோறு சாமி!" என்று உதட்டைச் வளைக்கவும், நந்தன் அதுவரை இருந்த நிலை மாறி வாய்விட்டு நகைத்தான். அவனின் சோக முகத்தில் பளிச்சிடும் புன்னகையைக் கண்ட பின் தான் அடங்கினாள் இந்த இம்சைக்காதலி.

அன்றிரவு உணவை முடித்ததும், இருவரும் மாடி பால்கனியில் ஊஞ்சலில் தோள் சாய்ந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சீதா அவளறையில் இருந்தாள்.

"பேபி!"

"ம்ம்!!"

"உன் ஆளு ஒரு கொலைகாரன், ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன்னு உனக்கு கஷ்டமா இருக்கா?"

"ம்ஹூம்ம்!"

"நிஜமா?"

"ம்ம்!"

"எப்டி மாமி? கோவம் வரல?"

"ப்ச் விபு! நானே தான் உன்னை அவனைக் கொல்ல சொல்லி நியூஸ் பேப்பரைத் தூக்கிண்டு வந்தேன். மறந்துட்டியா?"

"ஆமால்ல! எனக்கே ஆச்சர்யமா இருந்தது, உனக்கு ஏன் அவன் மேல இவ்ளோ… அதுவும் கொலை செய்ற அளவுக்கு கோவம்னு!"

"அது… அது… இப்டி இல்லீகல் வேலை செய்றவனைப் பார்த்து கோவம் வருமோல்லியோ? நேக்கு குழந்தைகளையும், பொம்மனாட்டிகளையும் கஷ்டப்படுத்துறவாள உயிரோட எரிச்சா என்னன்னு தான் தோணும். அதான்…" பேச்சு திசை மாறி, எங்கே தான் சீதாவைப் பற்றி உளறி விடுவோமோ என்று அஞ்சிய ஆரவி, "தூக்கம் வர்றது விபு." என்று எழுந்து கொண்டாள்.

"மாமி!" என்றழைத்தவாறே தானும் எழுந்தவன், அவளை இழுத்து தன் நெஞ்சாங்கூட்டிற்குள் சிறு பறவையைப் போல் பொத்தி வைத்துக்கொண்டான். 

தன் மனதின் காயத்திற்கு மருந்திடும் மயிலிறகாய் இருப்பவளை மிச்சமில்லாமல் காதல் செய்துவிடும் அவசரக்காரனாய் தவிக்கின்றான். காதல் செய்து, காலம் முழுதும் அவள் கூந்தலுக்குள் விரவிக் கிடக்கவே விழைகின்றான். எவ்விதி இவளைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்ததோ அறியான். ஆனால் அவ்விதிக் கண்டால் தன் அத்தனை பக்தியையும் அதன் காலடியில் சமர்பிக்க காத்திருக்கிறான்.

ஆரவியும் தன்னவனை ஆரத்தழுவிக் கொண்டு, "என்னாச்சு விபு?" எனக் கேட்க,

தெளிவில்லாத குரலில், "அது… பேபி… என் ரூம்ல தனியா தூங்க பயமா இருக்கு. சோ… சோ… இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நீ…" என இழுத்தவன் அவள் மூக்குத்தியை வருட, அவன் எண்ணம் புரிந்தவள் பட்டென்று கையைத் தட்டிவிட்டு, "ச்சீ! டர்ட்டீ!" என்று சொல்லி முறைத்தாள்.

"ஹேய்! நீ கேட்டா அது சேஃப்ட்டி! அதுவே நான் கேட்டா டர்ட்டீ-யா?" என இடுப்பில் கை வைத்து கொண்டு கேட்க,

"கொன்னுடுவேன் உன்னை! நான் நிஜமாவே அன்னிக்கு பயத்துலதான் கேட்டேன். இப்ப உனக்கென்ன பயமாம்?" என்று கேட்டுக் கொண்டிருக்கையிலேயே மின்சாரம் தடைபட்டது. கீழே ஹாலில் மட்டும் இன்வெர்ட்டரின் உபயத்தால் விளக்கெரிந்தது. முதல் தளத்தில் அறைகளில் மட்டுமே இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. எனவே பால்கனி முழுதும் இருளில் இருந்தது.

விபுநந்தனின் தேகத் தகிப்பு இன்னமும் கூடிப் போனது. ஏற்கனவே காலையில் இருந்து ஆரவியின் கோபத்தைப் போக்கி, அவளின் காதலுக்காக தவமிருந்தவன், அவள் சமாதானம் ஆனதும் இனி அவளிடம் எதையும் மறைக்கத் தேவையில்லை. தன் பிரியத்திற்குரியவளை நேசிக்க இனி தன் மனசாட்சி கூட தடையாயிருக்காது என்று உவகைக் கொண்டிருந்தான். மறைத்து நாடகமாடுகிறோம் என்ற உறுத்தல் ஏதுமின்றி, உரிமையாய் அவள் மீது பார்வையைப் படரவிட்டிருந்தான்.

அதன் எதிரொலி தான் சற்று முன் அவன் அவளிடம் வைத்தக் கோரிக்கை! அவனுக்கு துணையாயிருந்தது, இந்த மின்தடையும்!

ஜன்னலின் வழி கசிந்த நிலவொளியில் தலைவன் முகம் பார்த்த தலைவி தடுமாறித்தான் போனாள். அவன் விழிகளில் தான் மன்மத அம்பை கோர்த்திருந்தானே! இருளில் அவள் மீது மிகச் சரியாக எய்வதற்கு தான் காத்திருந்தானே! 

இருப்பினும், அவன் பார்வையில் தேகம் குழைந்துவிடக் கூடாது என விழித்திருந்த அவளின் பெண்மை, அவன் பார்வை அம்புகளை தடுக்கும் கேடயமாக மாறி அவனைப் பார்ப்பதை தவிர்த்து, அவ்விடம் விட்டு நகர்ந்து விடக் கூறி எச்சரித்தது.

அவ்வாறே அவ்விடத்தில் இருந்து நகர்ந்தவளை, அவனின் இரும்பையொத்த வல்லின கரங்கள் நீண்டு அவளின் இடையினம் பற்றி அதில் மெல்லினம் பயில வன்மையாய் முயன்றது. 

அப்பழுக்கில்லா காதல் தானெனினும், தலைவனின் உள்ளமது புரிந்தாலும், தமிழ் மரபைப் போற்றும் தலைவியின் பெண்மை தன் எதிர்ப்பையே காட்டியது. ஆயினும் ஏமாற்றத்திலும் கோபத்திலும் முகம் திருப்பிய தலைவனைக் கண்டு விசனப்பட்டு நின்றது.

அவனை அப்படியே விட்டுவிட்டு அவ்விடம் விட்டு நகரவும் முடியாமல், அவன் நாடியில் கை வைத்துத் திருப்பி, "விபு!" என்றவளின் கையைத் தட்டிவிட்டு,

"நம்பிக்கை இல்லல? போடி!" எனவும், விழிகளில் நீர் நிறைந்துவிட்டது பெண்ணவளுக்கு!

நிலவொளியில் மின்னும் அவள் விழிநீரைக் கண்டவனுக்கு இன்னமுமே கோபம் தலைக்கேறியது. "ப்ச்!" என்று தலையை அழுந்த கோதிக்கொண்டு, அருகிலிருந்த சிற்றுண்டி எடுத்து வந்திருந்த பாத்திரத்தை பட்டென தட்டிவிட்டு, அப்படியே தொப்பென ஊஞ்சலில் அமர்ந்து வெளியே இருளுக்குள் வெறிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அவனறைக்கு சென்றால்தான் தன்னால் நிம்மதியாக துயில்கொள்ள முடியும் என்றெண்ணிய ஆரவி என்ன செய்ய என்று சிந்திக்கலானாள்.

தான் இப்போது பேசினாலும் இயலாமையில் இருப்பவனின் கோபம் அதிகமாகவே செய்யும் என நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, பாத்திரம் விழுந்து உருண்ட சப்தத்தில் அறையிலிருந்த சீதா அவ்விடம் வந்திருந்தாள். அதே நேரம் தடைபட்டிருந்த மின்சாரமும் வந்துவிட்டது.

ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துவிட்டு நந்தனிடம், "இப்ப என்னாயிடுத்துனு இப்படி வெறிச்சு பார்த்திண்டிருக்க நீ?" எனவும்,

"அதான் நம்பிக்கை இல்லாம தள்ளி போறியே… நான் எப்டி போனா உனக்கென்ன? போங்க மகாராணி! போய் தூங்குங்க!" என்று அடக்கப்பட்ட குரலில் சீறினான் அவன்.

அவன் வாய்மொழியில் என்ன நடந்திருக்குமென ஊகித்த சீதா, தம்பியை ஆச்சர்யமாக பார்த்திருந்தாள்.

"ஹான்! நீங்க இஷ்டப்படற மாதிரி நடந்துண்டா நாங்க உங்களை லவ் பண்றோம்னு ஒத்துப்பேள். இல்லனா என் மேல நம்பிக்கை இல்லயான்னு கேட்டு எங்க காதலை பதம் பார்ப்பேள்! அப்பவும் விலகி போனா, 'என்னை நம்பாதவ தான நீ?'னு சொல்லி மூஞ்சிய ஒரு முழத்துக்கு தூக்கி வச்சிண்டு திரிவேள்! இது தானே இந்த ஆண் சமூகம் காலங்காலமா கடைபிடிச்சிண்டு வர்றது?" என்று மூச்சுவிடாமல் கையை ஆட்டி ஆட்டி பேசியவளைப் பார்த்து,

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இப்டி மூச்சு புடிச்சிட்டு ஃபெமினிஸம் பேசற மாமி?" என பரிதாபமாக முழித்தான்.

பார்த்துக் கொண்டிருந்த சீதாவிற்கு தம்பியின் நிலை கண்டு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.

"பின்ன என்ன? நம்ம தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் உங்க ஆண் வர்க்கத்துக்கு நன்னா தெரியுமோன்னோ? என்ன தான் நாம இருபத்தியோராம் நூற்றாண்டுல இருக்கோம்னு சொல்லிண்டு வெளிநாட்டு மோகத்துல திளைச்சாலும், விவாஹம் பண்ணிக்காம கெட் டூகெதர் ரிலேஷன்ஷிப்ல இருக்கறது நம்ம கலாச்சாரத்தை பொறுத்தவரை பாப காரியம் தானே? அப்டியே ஒரு பொண்ணு தான் விரும்பின பையனோட ரிலேஷன்ஷிப்ல இருந்தா இந்த சொஸைட்டி அவளுக்கு என்னென்ன கீழ்த்தரமான பேரெல்லாம் குடுக்கும்? அப்டி ரிலேஷன்ஷிப்ல இருக்கறது அந்த பையனும்தான்! ஆனா அவளை மட்டும்தான் இந்த சமூகம் பேசுபொருளாக்கும்! ஏன்னா இது ஆணாதிக்க சமூகம்!" ஆரவியின் கையில் மைக் மட்டும்தான் இல்லை. மற்றபடி அந்த பால்கனி அவளுக்கு பெண்ணுரிமை பேசும் மேடையாகிப் போயிருந்தது.

நந்தன் ஏதும் பேசாமல் கையெடுத்து கும்பிட்டு, 'நீ போய் வா தெய்வமே! நான் வாயை மூடிக் கொள்கிறேன்.' எனும் பாவனையில் கையசைத்து, வாயையும் கையால் மூடிக்கொண்டான்.

'கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ…' என்று காலம் கடந்து சிந்தித்தவள், "விபு… அது வந்து…" என்றவாறே அவனருகே செல்ல, 'வேண்டாம்! நீ பேசிய வரை போதும். காதில் ரத்தமே வந்துவிட்டது!' என்பதையும் பாவனையாகவே கூறி காதை, 'வை ப்ளட்? சேம் ப்ளட்!' என்பது போல் தொட்டுக் காண்பித்தான்.

ஆரவி இதழை மடித்து சிரித்தவாறே நகர, சீதா அடங்காத சிரிப்போடு அவள் பின்னேயே வந்து, "அவனுக்கு ஏத்த பொண்ணுதான் நீ!" என்றாள். அன்றிரவும் ஆரவி சீதாவின் அறையில் தான் தூங்கினாள், என்னருகேயே இருக்க வேண்டும் என்ற கட்டளையோடு!

வியாழன் கிழமை!

ஆரவி மறுநாள் காலையில் குளித்துவிட்டு வெள்ளை நிற பாசிமணிகள் கொண்டு வேலைப்பாடுகள் செய்திருந்த ரெடிமேட் சட்டையுடன், ஆழ்ந்த ஊதா நிற ப்ளைன் ஷிஃபான் சேலை அணிந்திருந்தாள். சீதா தான் வற்புறுத்தி அதை அணியச் செய்திருந்தாள். 

ஆரவி ஈரக் கூந்தலை துவட்டியபடி, "விபு! காஃபி ரெடியா?" எனக் கேட்டவாறே கீழிறங்க,

மிகச் சரியாக அதே நேரம் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு ரகுநந்தன் தன் மனைவி, மக்கள் மற்றும் பேரன் புடை சூழ உள்ளே நுழைந்தார்.

பூக்கும்🌻🌺 


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...