சீதையின் பூக்காடு - 23

அத்தியாயம் 23
இந்த ஒரே ஒருமுறை தனக்காக தன் தம்பியை மன்னித்து விடுமாறும் இனி அவனோடான அவள் வாழ்க்கையில் அவன் என்ன தவறிழைத்தாலும் தக்க தண்டனை கொடுத்துக் கொள்ளுமாறும் சீதா ஆரவியிடம் மன்றாடியிருந்தாள்.
நீண்ட நேர கெஞ்சலுக்கு பின் சரியென்றிருந்தாள் ஆரவி. இங்கே இவள் வரவில்லை என்றால் சீதாவைக் காண முடிந்திருக்காதல்லவா? அந்த ஒரு காரணத்திற்காகவே விபுவை மன்னிக்க ஒத்துக்கொண்டாள்.
இருப்பினும், அவனிடம் வீம்பிற்காகவேணும் முகத்தைத் திருப்பிக்கொண்டே திரிந்தாள். அவனும் சளைக்காமல் காதல் செய்துகொண்டே இருந்தான். சீதாவும் இருவரின் ஊடல்களை ரசித்தவாறே சுற்றி வந்துகொண்டிருந்தாள்.
இப்போது அவ்வீட்டில் மூவரும் ஆளுக்கொரு தூணைப் பற்றி கொண்டு நின்றிருந்தனர்.
விழியோரமாய் ஒரு நீர் துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்...
விபுநந்தனின் உதவியால், ப்ளேயரின் மூலம் ஏற்கனவே தன்னுள் பதித்து வைத்திருந்த காதல் பாடல்களை ஒவ்வொன்றாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது, அந்த குறுந்தகடு.
அவன் மேல் இருந்த கடுப்பைத் தொலைக்காட்சியின் மேல் காட்டியவள், அதை அணைத்துவிட்டு மீண்டும் சென்று தூணில் சாய்ந்து கொள்ள, தன் உள்ளத்தில் உள்ளதை விபுநந்தன் பாட ஆரம்பித்துவிட்டான். இவன் பாடுவதை அவளால் நிறுத்த முடியாதே?
"அஞ்சு நாள் வரை
அவள் பொழிந்தது
ஆசையின் மழை
அதில் நனைந்தது
நூறு ஜென்ன்மங்கள்
நினைவினிலிருக்கும்ம்ம்…
அதுபோல்
எந்த நாள் வரும்!
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
இரத்த நாளங்கள்
ராத்திரி வெடிக்கும்ம்ம்….
ஒரு நிமிஷம் கூட என்னைப்
பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும்!" பாடிக்கொண்டே வந்தவன் அடுத்த வரி பாடாது நிறுத்திவிட்டான்.
'என்ன இருந்த போதும்
அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே…' இப்படி தான் படத்தில் பாடல் வரிகள் இடம் பெற்றிருக்கும்.
விபுநந்தன் இந்த இடத்தில் மறந்துபோய் அந்த வரிகளை பாட்டோடு லயித்து, அதே ஸ்வரத்தில் பாடி விடுவான் என்றுதான் ஆரவி எதிர்பார்த்திருந்தாள்.
ஆனால் பாடிக்கொண்டிருந்தவன் சட்டென்று நிறுத்தியதும், ஒரு கணம் திகைத்தவளின் நெகிழ்ச்சி வார்த்தையில் வடிக்க முடியாததாக இருந்தது. 'அவ்வளவு தானா? நிறுத்திவிட்டானா? என்ன செய்கிறானென கொஞ்சம் எட்டித்தான் பாரேன்!' என்று மான, ரோஷம் இல்லாத மனம் வெட்கமே இல்லாமல் விழிகளிடம் கெஞ்சியது.
சற்று தள்ளி நின்றிருந்த சீதாவும் கூட தன் தம்பி அடுத்து என்ன பாடப் போகிறானென ஆர்வமாய் அவன் முகத்தையும் ஆரவியின் நிலையையும் மாறி மாறி பார்த்திருந்தாள்.
ஆரவி, தன் முழு உருவத்தைக் காட்டினால் கள்வன் களவாடிவிடுவான் என்றெண்ணினாளோ என்னவோ! தூணின் பின்னிருந்து விழிகள் மட்டும் தெரியும் படி தலை சாய்த்து எட்டிப் பார்க்க, தேவி விழி வழியே வழியும் காதல் அமிர்தத்திற்காகவே காத்திருந்த பக்தன், அக்கணத்திலேயே அடுத்த வரியைப் பாடினான்.
"என்ன இருந்த போதும்
இவள் எனதுயிரே - என்னுயிர்
தழுவிப் போ என் மனமே…." என்று வரிகளை தனக்கேற்றாற் போல் மாற்றி பாட, சீதா சத்தமாக சிரித்தாளெனில், ஆரவி உள்ளம் குழைய, கன்னங்கள் கனிய நின்றிருந்தாள். இதழில் வெட்கப் புன்னகை அழையா விருந்தாளியாய் வந்தமர்ந்திருந்தது.
"ம்க்கும்…" சீதாவின் கனைப்பு சப்தத்தில் திடுக்கிட்டு திருதிருவென முழித்தவள், தன்னை சமாளித்துக்கொண்டு அவளைத் தாண்டி செல்ல பார்த்தாள்.
"என் தம்பியை யாரும் இப்டி ஒளிஞ்சு நின்னு சைட்டடிக்க வேணாம். அவன் முன்னாடியே போய் நின்னு ஆசை தீர பார்க்கலாம். அவன் ஒண்ணும் ஒரு ஒருத்தவங்க மாதிரி கோவிச்சுக்கமாட்டான்." என்று சீண்டலாக சொல்ல,
"ச்சு போங்கோ, மன்னி!" என்று கைகள் கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டாள்.
ஆரவியின் மன்னி என்றழைப்பில் சீதாவின் சந்தோஷம் இரட்டிப்பானது. எனினும் அவள் தன் தம்பியோடு வாழ்வதை உடனிருந்து கண்டு, அனுபவிக்க தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று தொண்டையடைத்துக் கொண்டது. தன் சோக முகம் பார்த்தால் ஆரவி வருந்தக்கூடும் என்று சட்டென முகத்தை சீராக்கிக் கொண்டு நகர்ந்தாள், இச்சீதை!
தூணை ஒட்டிக்கொண்டு வெட்கத்தோடு நின்றிருந்த ஏந்திழையை மறுபுறம் வந்து எட்டிப் பார்த்த காதலனவன் கள்ளத்தோடு சிரிக்க, "ஹூம்!" என்று இன்னும் அழகாய் கோபித்துக்கொண்டு திரும்பியவளை, ரசித்து ரசித்தே செத்துக்கொண்டிருந்தவன், "பேபி மாமி! நீ என்ன தண்டனை தந்தாலும் நான் ஏத்துக்கறேன். உன் கோபம் போக நான் என்ன செய்யணும் சொல்லு. ஐ டூ எனிதிங் ஃபார் யூ பேபி." என்றான்.
"எனக்காக என்ன வேணும்னாலும் செய்வியா, விபு?"
"சர்ட்டன்லி!"
"கொலை பண்ணனும். கேன் யூ?"
"வாட்!!!???"
"கொலை பண்ணனும். எனக்காக ஒருத்தனைக் கொலை பண்ணுவியா விபு?"
"ஆரவி?" விளையாடுகிறாளோ என்று அவள் முகம் பார்க்க, தீவிரமான அம்முகத்தில் விளையாட்டுத்தனம் கிஞ்சித்தும் இல்லை.
ஏன் சற்றுமுன் தோன்றிய வெட்க உணர்வை கூட துடைத்துப் போட்டவளாய், விபுநந்தனை நேர்கொண்டு பார்த்திருந்தவள் சொன்னாள். "அவன் சாகணும் விபு. பட், உடனே ஈஸியா செத்துடக் கூடாது. லைஃப்ல வாழற ஒவ்வொரு நொடியும் வலிக்க வலிக்க கடந்து வரணும். வாழ்ந்துக்கிட்டே சாகணும். ஒவ்வொரு நொடியும் செத்துக்கிட்டே வாழணும். முடியுமா உன்னால?"
"ஹேய்! 'என் ரூம்ல பல்லி நிக்குது விபு. வந்து துரத்தி விடு!'ன்னு சொல்லி பயந்த பொண்ணா நீ? இப்டி சொர்ணாக்கா மாதிரி பேசற?" என்று விழிகளில் ஆச்சர்யத்தோடு கேட்க,
"ப்ச்! விளையாடாத விபு! இங்கே பாரேன்!" என்று சீதாவின் அறையில் இருந்து தான் கண்டெடுத்த, ஏழு வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளை எடுத்துக் காட்டினாள். அதில் சீதாவின் முயற்சியால் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்திய அரசியல் தொண்டர் ஒருவர் கைதாகிய செய்தி வெளியாகியிருந்தது. ஏழு வருடங்களுக்கு முன் வித்யாலட்சுமி வாசித்துக் காட்டிய அதே செய்தி. ஆம்! சீதாவைக் கொன்றவனைத் தான் தற்போது நந்தனிடம் கொல்ல வேண்டுமென்கிறாள் ஆரவி.
செய்தியைப் பார்த்த விபுநந்தனின் கண்கள் சிவந்து, கோபத்தில் முகமே ரௌத்திரமாய் மாறியது.
"பாரு! நோக்கே கோவம் வருதுல்ல விபு? இவனைப் போலீஸ்ல பிடிச்சு கொடுக்கறதை விட, அப்டியே கழுத்தை நெறிச்சு சாவடிக்கணும்னு தோன்றதோல்லியோ?"
ஆத்திரத்தில் பேசிக்கொண்டே போனவளை இடைமறித்தான் அவன். "இவனைக் கொல்லணும்னா நான் மறுபடியும் கல்லறையைத் தோண்டணுமே மாமி?"
சற்று திகைத்தவள், "வாட்? வாட் யூ மீன்?" என்றாள்.
"ஐ மீன் இட் ஆரவி. அவன் இப்ப உயிரோட இல்ல. எப்பவோ செத்துட்டான்."
"விபு?"
"என்னை என்னன்னு நினைச்ச? என் சீதாக்கா துப்பட்டாவைப் பிடிச்சிட்டு சுத்தற பச்சைப் பாப்பான்னா? என் அக்காவை கொன்னவனை அப்டியே விட்டுடுவேனா என்ன? போட்டுட்டேன்ல?" என்று உறும, பயந்துதான் போனாள் பெண்.
அவனை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு தோள்களை அழுத்தி சோஃபாவில் அமர செய்தாள். "அவ பொறந்தது வேணும்னா எனக்கு அக்காவா இருக்கலாம். ஆனா அவ வாழ்ந்தது எனக்கு அம்மாவா!" என்றவனின் முகம் குழந்தையாய் மாறி பரிதவித்தது. விரல்கள் அன்னையாய் இருந்தவளின் ஸ்பரிசத்திற்காய் ஏங்கியது. விழிகள் அவளின் ஒற்றை புன்னகைக்காக கசிந்து கசிந்து நசிந்தது.
அவனின் தவிப்பை விட ஆரவிதான் அதிகமாக தவித்துப் போனாள். ஏனெனில் அவனருகில் தான் சீதா அமர்ந்திருந்தாள். தம்பியின் உள்ளக் குமுறலில் உடைந்து கொண்டிருந்தாள். சொல்லவும் முடியாமல், இவர்களின் நிலையை சகிக்கவும் முடியாமல் ஆரவியின் மனம் வலியில் ரணமாகி ரணமாகி கனமானது.
"விபு!" என்று தொண்டையடைக்க அழைத்தவளைப் பார்த்தவன், "ச்சு! உனக்கு சீதாக்காவை தெரியாதில்ல? அது தெரியாம நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் பாரு." என்றுவிட்டு டீபாயில் இருந்த புகைப்படத் தொகுப்பை மீண்டும் விரித்தான்.
அதில் ஆரவிக்கு சீதாவின் மூலம் ஏற்கனவே தெரிந்த நபர்களை மீண்டும் ஒரு முறை அறிமுகம் செய்தான். பின் சீதா கூறிய அவளது இறுதி வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.
'இதில் அக்கயவன் எங்கே செத்தொழிந்தான்?!' என சீதாவை ஒரு முறை பார்த்துவிட்டு நந்தனைப் பார்க்க, அவன் இப்போதுதான் தமக்கையின் இளஞ்சூடான குருதி கையில் பட்டுத் தெறித்ததைப் போல் தவித்துக் கொண்டிருந்தான். உணர்ச்சி குவியலாய் அமர்ந்திருந்தவனை மீட்டெடுக்க வழி தெரியாது விழிக்க, அவன் தலையைக் கோதி விடுமாறு சொன்னாள் சீதா.
ஆரவியும் அவ்வாறே செய்ய மேலும் தமக்கையின் நினைவில் பாலகனாய் உடையவே செய்தான் அவன். அதற்கு மேல் தம்பியின் தவிப்பைக் காண சகியாமல் அவ்விடம் விட்டு அகன்றுவிட்டாள் அவள்.
"விபு! அப்புறம் என்னாச்சு சொல்லு. அவனைக் கொன்னு போட்டியோன்னோ?" என்று அழகாய் அவனை திசைதிருப்பிவிட்டாள் ஆரவி. சிவந்த கண்களோடு சொல்ல தொடங்கினான், அன்றைய நிகழ்வை!
"அன்னிக்கு சீதாக்கா அந்த ஆர்ஃபினேஜ்ல இருக்கும் போது அப்பா மொபைலுக்கு மெசேஜ் பண்ணிருந்தான்னு சொன்னேனே… அதை முதல்ல பார்த்தது நான்தான்!" எனவும் ஆரவியின் விழிகள் விரிந்தது.
"அப்பா எப்டியும் போலீஸ்க்கு சொல்லி கிளம்பி வருவார்னு தெரியும். சோ, அவர்கிட்ட சொல்லி மொபைலைக் கொடுத்துட்டு நான் என் பைக்ல சீதாக்கா மெசேஜ்ல சொல்லிருந்த ஆர்ஃபினேஜ்க்கு போயிட்டேன்."
அங்கே வரவேற்பில் அந்த குருஜியோடு நின்றிருந்த தான்யாவை அவனிடமிருந்து மீட்டு, அவள் வந்த காரிலேயே ஏற்றி இவர்களின் காட்டு பங்களாவிற்கு செல்லச் சொன்னான். ஏனெனில் அந்த வார இறுதியை கழிக்க எண்ணி ரிஷிநந்தனும் வித்யாலட்சுமியும் அங்கு தான் சென்றிருந்தனர்.
அன்று இங்கே வந்த தான்யா தான் சீதாவின் புதுத் துணிகளை அவளறையில் வைத்திருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டாள் ஆரவி.
அன்று விபுநந்தன் தான்யாவை காரிலேற்றி விட்டு உள்ளே நுழைய, மீண்டும் குருஜி எதிர்ப்பட்டான். அவனோடு செல்வம் மற்றும் இன்னும் சில பணியாட்களும் கூடிவிட்டனர். தங்கள் முதலாளியின் மீது கை வைத்தால் சும்மா விட்டுவிடுவார்களா என்ன?
ஆனால் அவர்களையெல்லாம் இலகுவாக தூக்கி விசிறிய விபுநந்தன், திடகாத்திரமான உடலோடு இருந்த குருஜியை முதலில் அசைக்க முடியாமல் திணறினான். பின் அருகில் பதிவேட்டில் இருந்த பேனாவை எடுத்து இமைக்கும் நொடிக்குள் குருஜியின் இடக்கண்ணில் குத்திவிட்டு அவன் அலறலைப் பொருட்படுத்தாமல் அசுர வேகத்தோடு உள்ளே நுழைந்தான், அக்காவிற்கு ஏதும் நேர்ந்திருக்கக் கூடாது என்ற பதைபதைப்போடு!
ஆனால் நந்தன் அவளை சந்திப்பதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. சரிந்து விழ காத்திருக்கும் சீதாவின் சரீரத்தை தாங்க தன் கரங்களை நீட்டியவனிடம், அவள் அஷ்மியின் குழந்தையைத் தந்து விட்டு, "அஷ்மி குழந்தை! செலின் மேடம்!" எனும் வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டு, கடைசி கணங்களில் தன் பிள்ளையாய் எண்ணி வளர்த்த விபுநந்தனின் உருவத்தை கண்களில் நிறைத்துக்கொண்டு, இதழில் உறைந்த உவகையோடு கண்மூடினாள்.
'ஒரு நிமிடம் தானே?' என்று நாம் அலட்சியப்படுத்தும் அந்த ஒரு நிமிடத்தில் தான் நமக்கான நல்லதும் தீயதும் நிகழக் காத்திருக்கும்.
அன்று சீதா தான்யாவையும் குழந்தையையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அரை நிமிடத்தையும் வீணாக்க விரும்பாமல் தன் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்தாள். அந்த அரை நிமிடம் தாமதித்திருந்தால் ஆபத்பாந்தவனாய் விபு வந்திருப்பான். என்ன செய்வது? அரை நிமிடமாயினும் எதிர்காலத்தை முன்னமே அறிந்திருப்பவர் இப்புவியில் எவருமில்லையே?
இன்று போல் அன்றும் விபுநந்தன் கண்களில் நீர் பெருகி நின்றது. 'இல்லை! இல்லை! இது நடக்கவே இல்லை!' என மனம் கூப்பாடு போட்டது. 'அக்கா எழுந்து விடு! இல்லை உன்னைக் கொன்றுவிடுவேன்!' என இயலாமையில் நெஞ்சம் கோபம் கொண்டது. நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் வெறிபிடித்தவன் போலானான்.
மூக்கில் இரத்தம் ஒழுக கத்தியோடு சாவகாசமாக நின்றிருந்த அக்கயவனை, என்ன செய்கிறோம் என்பதைக் கூட அறியாமல் நிதானமாக நெருங்கினான் விபுநந்தன். உடல் மொழியில் நிதானத்தைக் கொண்டிருந்தவனின் உள்ளம் ஆவேசத்தாலும் ரௌத்திரத்தாலும் கொலைவெறியிலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
நிதானமாக தன்னை நெருங்கியவனைப் பார்த்து அசட்டையாகவே நின்றிருந்தான் அவன். அதுவும் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு விடலைப் பையன் நந்தனால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்துவிட்டான் போலும்.
ஆனால்!
விபுநந்தனின் விழிகள், 'என் அக்காவை கொன்ன நீ மட்டும் எப்டி உயிரோட இருக்கலாம்?' என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவனின் வலக்கை கத்திப் பிடித்திருந்த எதிராளியின் கையைப் பற்றி நொடி நேரத்தில் அவன் கழுத்திலேயே இறக்கிவிட்டது.
இடக்கையில் குழந்தையை அணைத்துக்கொண்டு வலக்கையால் அவன் கழுத்தில் கத்தியை குறுக்காக சொருகியிருந்தான் விபுநந்தன்.
ரகுநந்தன், காவலர்களோடு உள்ளே வரும்போது இந்த காட்சியைத்தான் கண்டார். அவனின் கைகள் இரண்டும் துடித்துக் கொண்டிருந்தன. கால்கள் தரையில் நிற்க மாட்டாமல் சரிந்து கொண்டிருந்தன. குழந்தைவேறு ஒரு புறம் வீறிட்டுக் கொண்டிருந்தது.
என்றாலும் விடாமல் கத்தியை அழுத்திக் கொண்டிருந்த மகனை ரகுநந்தன் பாய்ந்து சென்று இழுக்க, மிகுதியான வெறியில் இருந்தவன் இன்னும் இன்னும் ஆழமாய்க் கத்தியை அவன் கழுத்தில் இறக்கினான்.
நான்கு காவலர்கள் போராடி விபுநந்தனை அக்கயவனின் பிணத்திலிருந்து பிரித்து எடுத்தனர். பின்னும் கூட அவன் கழுத்திலிருந்த கத்தியை எடுக்க முடியவில்லை. அவன் உடலைக் கீழே கிடத்தி இரண்டு காவலர்கள் தலையை அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள ஒருவர் பெரும்பாடுபட்டு கர்ச்சீஃப்பை சுற்றி வெளியில் இழுத்தார். இரத்தம் பீய்ச்சியடித்து விழுந்திருந்த சீதாவின் காலை நனைத்தது.
ரகுநந்தன் மகளின் தலையை மடியில் வைத்து மருகிக் கொண்டிருந்தார். காவல் ஆய்வாளர் வெங்கட், சீதாவை ரகுநந்தன் வந்த காரிலேயே ஏற்றி அப்பா, மகன் இருவரையும் கிளம்புமாறு சொன்னார். மறுப்பாக தலையசைத்த ரகுநந்தன், தவறிழைத்தவன் தன் மகனேயானாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றார்.
அவரோடு வெங்கட்டும் சளைக்காமல் போராடினார். 'செத்தவன் ஒன்றும் தியாகியோ, மகானோ அல்ல. ஒரு விதத்தில் விபுநந்தன் புரிந்தது அசுரவதமே! அவனைக் கொல்லாமல் உயிரோடு சட்டத்தின் முன் நிறுத்தினாலும் முன்பொரு முறை நேர்ந்தது போல் அவன் சுலபமாக தப்பித்து விடவேக்கூடும். வெளியே வந்து மீண்டும் இது போல் கடத்தல் வேலையைச் செவ்வனே செய்வான். அத்தோடு கத்தியில் அக்கயவனின் கை ரேகை தான் உள்ளது, விபநந்தனின் ரேகைகள் அல்ல!' என பலவாறு எடுத்துரைத்தார்.
"இருந்தாலும் இவன் செஞ்சதை எப்டி ஏத்துக்க முடியும் வெங்கட்? நம்ம மனசுக்கு தெரியுமே இது இவன் செஞ்சது தான்னு…"
"எல்லாம் கொஞ்ச நாள் தான்டா ரகு! அப்புறம் எந்த நினைவும் இருக்காது. அதுவும் நம்ம சீதாவுக்கு இந்த நிலைமை ஆனதால தான் பையன் உணர்ச்சிவசப்பட்டுட்டான்."
"நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது வெங்கட்! ஏன் சீதாவே இதை ஏத்துக்க மாட்டா."
"ரகு! நந்தா படிக்கற பையன். இப்ப அவனை அரெஸ்ட் பண்ணினா அவனோட ஃப்யூச்சரே ஸ்பாயில் ஆகிடும். மோர்ஓவர், அவன் மேல தப்பில்ல'ன்னு ஒரு சின்ன புரளி கிளம்பினா போதும். ஸ்டூடண்ட்ஸ் அத்தனைப் பேரும் எங்க டிபார்ட்மெண்ட் மேல படையெடுத்துடுவானுங்க தெரியுமா?"
"நீயே அப்டியொரு புரளியைக் கிளப்பி விடுவ போலயேடா…"
"நிச்சயமா செய்வேன்டா. சீதாவை நானும் தானேடா தோள்ல தூக்கி வளர்த்தேன்? பெத்தவனில்லனாலும் வளர்த்த பாசம் இல்லாம போயிடுமா? இப்பவும் அவளை இப்டி கட்டையா பார்த்தப்புறம் நான் என்ன செஞ்சிருப்பேனோ அதைத்தான் நந்தா செஞ்சிருக்கான். அதனால அவன் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல." என்று கர்வமாய் நிமிர்ந்து நின்றவரின் தோள் சாய்ந்து கதறியழுதார் ரகுநந்தன். இருப்பினும் வெங்கட் எவ்வளவு எடுத்துக் கூறியும் ஏற்றுக்கொள்ளவில்லை.
வேறுவழியில்லாமல் ரகுநந்தனை மட்டும் சீதாவின் உடலோடு அனுப்பி வைத்தார். அவர் கிளம்பி சென்றதும் அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடந்தது. விபுநந்தனின் மீதும் குருஜியின் மீதும் வழக்கு பதிவு செய்ய அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த குழந்தைகளை உரிய காப்பகத்தில் சேர்ப்பித்து விட்டு, ஊடகங்களுக்கு தெரிவித்து குழந்தைகளை அவர்கள் பெற்றோர்களிடம் சேர்ப்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவ்வில்லம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அதன்பின் வழக்கு நடந்தது. வெங்கட் தான் விபுவிற்காக வக்கீல் ஏற்பாடு செய்தார். பொதுவாக எந்த நோக்கமும் இன்றி கோபத்தில் கொலை செய்பவர்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு. வக்கீல் சிறப்பாக வழக்காடியதன் மூலம், விபுவிற்கு அபராதத்தோடு மூன்று வருட தண்டனை கிடைத்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் நந்தன் கவலை கொள்ளவில்லை. சீதா இல்லாத ஒரு உலகை விட, வேறெதுவும் பெரிதாக வலி தந்துவிடாது என்று தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொண்டான்.
ஆரவியிடம் அனைத்தையும் கூறிவிட்டு நீண்டதொரு மூச்சை வெளியேற்றிய விபுநந்தன், "அதுக்கப்புறம் நான் படிக்கவே போகல. ரூம்லயே அடைஞ்சு கிடந்தவனை அப்பா தான் அம்மாவும் தான்யாக்காவும் உடையாம இருக்கணும்னா ஆம்பளைங்க நாம தைரியமா இருக்கணும். இப்டி முடங்கி கிடக்கறதை சீதாவே விரும்பமாட்டானு சொல்லி, ரிஷிண்ணா கல்யாணம் முடிஞ்சதும் என்னை ஃபாரினுக்கு அனுப்பி வச்சார்." என்று முடித்தான்.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment