
அத்தியாயம் 25
காலையில் அஸ்வத் வீட்டிற்கு தேவா வந்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தான்தான் செய்தேன் என்று அஸ்வத் வாக்குமூலம் அளித்திட, ஹரிஷ் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் தேவாவிடம் நிதானமாக, “நோ இன்ஸ்பெக்டர்!” என்று திடமாகச் சொன்னவன், “ம்ம்… நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?” என்றிட,
“என்ன பேசப் போறீங்க, மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்?” எனக் கேட்டான் அஸ்வத்.
‘அடங்குறானா பாரு!’
“ரிலேட்டிவ்ஸ் உங்க பர்சனல் பேசறதா இருந்தா தாராளமா பேசுங்க. ஆனா என்னைப் பத்தின விஷயமா இருந்தா என் முன்னாடியே பேசலாம்.”
இந்த இடைப்பட்ட நேரத்தில், அஸ்வத்தைத் தான் முன்பே ஒருமுறை அம்ருதாவுடன் அவள் வீட்டினருகே இருக்கும் தேநீர் கடையில் வைத்து பார்த்திருக்கிறோம் என்று நினைவுபடுத்திக் கொண்டிருந்தான் தேவா. அன்று அம்ருவிற்கு ஒரு கையசைப்பை மட்டும் தந்துவிட்டு விடைபெறும் நோக்கில் இருந்தவன் அஸ்வத்தை ஊன்றி கவனிக்கவில்லை.
அதை எண்ணமிட்டபடியே ஹரிஷிடம் கேட்டான். “சொல்லுங்கத்தான், என்ன விஷயம்?”
ஹரிஷ் அஸ்வத்தின் மேல் பார்வை வைத்துச் சொன்னான். “தன்வீர் விஷயத்துல இவர் எதுவும் செஞ்சிருக்க முடியாது. அப்டியே செஞ்சிருந்தாலும் அது இவர் சுயநினைவோட நடந்திருக்காது.”
என்ன சொல்ல வருகிறானென்று புரிந்த அஸ்வத் தீயாய் முறைக்க,
“விச் மீன்ஸ்?” எனக் கேட்டான் தேவா.
‘சொல்லித்தான் பாரேன்!’ எனும் அஸ்வத்தின் உஷ்ணப் பார்வையை அலட்சியம் செய்து சொன்னான் ஹரிஷ். “ஹி’ஸ் மென்ட்டலி அன்ஸ்டாபிள் இன்ஸ்பெக்டர். என்னோட பேஷண்ட் இவர். அதனாலதான் நேத்து என்னோட க்ளினிக் அழைச்சிட்டு போயிருந்தேன்.”
அஸ்வத்தின் கோபம் வெடித்தது. “யாரு மென்ட்டலி அன்ஸ்டாபிள்? நானும் பேச வேணாம்னு பொறுமையா இருக்க நினைச்சா… உங்க இஷ்டத்துக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டுவீங்களா?”
“ப்ளீஸ்!” எனக் கைக்காட்டி அவனை அடக்கிய தேவா, ஹரிஷிடம் திரும்பினான். “பார்க்க அப்டி தெரியலயே? கான்ஃபிடன்ஸா… கன்ட்ரோலா இருக்காரே?”
“இவர் கேஸ் வேற! அப்பியரன்ஸ், ஆட்டிடியூட்ல எதுவும் தெரியாது.”
அருகிருந்த டீபாயை உதைத்துத் தள்ளி, “உங்களுக்கு அவ்ளோதான் லிமிட், ஹரிஷ்!” என்று சீறினான் அஸ்வத்.
அவன் சீற்றத்தை, ‘பார்த்துக்கோ!’ எனும்விதமாக தேவாவிடம் கண்காட்டிய ஹரிஷ் அஸ்வத்திடம் கேட்டான். “அப்புறம் எதுக்காக நீங்க என்னை அப்ரோச் பண்ணனும் அஸ்வத்?”
“எல்லாம் உன் தங்கச்சியால! அவ ஏதோ பொய் சொல்ல போய், அதை மெயின்டெய்ன் பண்ணனுமேன்னு தான் நீ கூப்பிட்டப்போ உன் கிளீனிக் வந்தேன்.” அவன் ஆத்திரம் அடங்க மறுத்தது.
“சோ? எல்லாத்துக்கும் காரணம் என் தங்கச்சி தான் இல்லயா?” கண்களில் சிரிப்புடன் கேட்டான் ஹரிஷ்.
அந்தக் கேள்வியில் அஸ்வத்தின் சீற்றம் குறைய, தேவாவுடன் வந்திருக்கும் கான்ஸ்டபிளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, இரு கைகளால் கேசத்தை அழுத்தியபடி ஜன்னலருகே போய் நின்று, ஆழ மூச்செடுத்து படபடவென அடித்துக்கொள்ளும் நெஞ்சத்தைச் சமன் செய்தான்.
அவனால் எப்படி அம்ருதாவைப் பொதுவில் வைத்து பேச முடியும்? அவளுக்கும் இவனுக்குமான பந்தமென்பது ஓர் அந்தகாரத்தில் ஆரம்பித்து, துளிதுளியாய் ஒளிக்கீற்றில் புரண்டு இன்று பிரம்மாண்டமாய் இவன் கண்கூசச் செய்யுமளவில் வளர்ந்து நிற்கிறது என்பது புரிந்தும், எப்படி இவனால் அவளைக் கைக் காண்பிக்க முடியும்?
உண்மையில் அந்த ஒளிக்கீற்றை இவன் மறுக்கவே நினைக்கின்றான். அம்ருதாவை தன் மனம் நாடுகிறது என்று புரிகிறது. ஆனால் அதையும் தாண்டி அவளைக் காயப்படுத்திவிடச் சொல்லி இனம்புரியா உணர்வொன்று நெஞ்சத்தை அழுத்துகிறது. அவளை நிராகரித்து ஓடி விடத் துடிக்கும் வேளையில் கன்னங்குழிய, ‘அஸ்வத்!’ என்றழைத்து சிரிக்கும் அந்த மோகினியிடம் தடுக்கி விழுந்து தொலைகிறான்.
ஆனாலும்…
அவள் இவனுக்கு வேண்டாம்தான்!
அஸ்வத்தின் இந்தக் குழப்பநிலையை நேற்றைய ஹிப்னாடிக் நிலையில் தெள்ளென அறிந்துகொண்டதாலேயே ஹரிஷ் இப்போது அம்ருதாவைக் குறிப்பிட்டு பேசினான். இல்லையெனில் அத்தனைச் சாமானியத்தில் தங்கைப் பெயரைப் பொதுவில் பேசிவிடுவானா என்ன?
அவனுக்கு புரிந்தது, நேற்றைய சம்பவத்திற்குப் பிறகு அஸ்வத் அம்ருதாவை விட்டு தூரம் நிற்கவே நினைப்பான்; இனி மூளை உந்தித் தள்ளினாலும் அவன் ஒருபோதும் தன் தங்கைக்கு பாதகமான சிறு செயலையும் செய்துவிட மாட்டான் என்று! பொய்யென்று தெரிந்தும் அம்ருதா சொன்ன ஒரு வார்த்தைக்காக இவனிடம் மருத்துவத்திற்கு வந்தவன்! அப்படி தன்னிடமே அவளை விட்டுக்கொடுக்காத போது காவல்துறையிடமா அவள் பெயரைச் சொல்லப் போகிறான்?
அத்துடன் அஸ்வத்தின் இந்தக் குழப்ப மனநிலையை, அம்ருதா மீது அவனுக்கிருக்கும் நேசத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் ஹரிஷ்.
மீண்டும் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, அஸ்வத் அப்படியே நிற்பது கண்டு ஹரிஷ் போய் கதவைத் திறந்தான். வீட்டில் உதவிக்கு இருக்கும் பெண் சாந்தி! அவர் வெளியிலேயே காவல்துறை வாகனத்தைக் கண்டு மிரண்டிருக்க வேண்டும். கேள்வியும் குழப்பமும் பயமுமாய் உள்ளே வந்தார்.
ஹரிஷ் இலகுவாய் அவரின் பயத்தைப் போக்கினான். “சாந்திம்மா! அதுதானே உங்க பேர்? உங்களைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம். இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ்! எல்லாருக்கும் குடிக்க ஏதாவது தர்றீங்களா?”
ஹரிஷை ஏற்கனவே அஸ்வத்தின் தோழன் என்ற முறையில் இங்கே பார்த்திருந்ததால் அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. அவனின் இலகுவான பார்வையும் அணுகுமுறையும் அச்சப்படும்படி எதுவுமில்லை என்ற நம்பிக்கையைத் தர, அவரும் சின்ன சிரிப்புடனே, “தோ ரெண்டே நிமிஷம் தம்பி!” என்று சமையலறைக்கு ஓடினார்.
தேவாவிற்கு கண்ணைக் காட்டிவிட்டு அஸ்வத்திடம் வந்தவன், குரலைத் தாழ்த்தி அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேசினான். “ம்ம்… உங்ககிட்ட நிறையப் பேசணும் அஸ்வத். ஆனா அதுக்கு இப்போ நேரமில்லை. இப்போ நீங்க உண்மையை ஒத்துக்கிட்டா கண்டிப்பா என் அம்முக்குட்டி பேர் வெளியே வரும்.”
அஸ்வத்திற்கு அவன் வேண்டுமென்றே ‘அம்முக்குட்டி’ எனும் பெயரை அழுத்திச் சொல்வதாகத் தெரிந்தது. அதில் இவன் கண்களில் மீண்டும் பழைய சீற்றம்!
அதைப் பார்த்தவாறு தொடர்ந்தான் ஹரிஷ். “உங்களுக்கு அதுதான் வேணுமா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் அவளும் இப்போ இந்தப் பிரச்சினைக்குள்ளே வந்துட்டா! அவ பேரு வெளியே வராம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்குது. உங்களோட ப்ளான் கூட போலீஸ் கிட்டேயோ அல்லது அந்த கட்சி ஆளுகிட்டேயோ மாட்டிக்கக் கூடாதுங்கறது தான்! ஆம் அ ரைட்?”
கண்கள் சிவந்து முகத்தில் கோப ரேகை ஓட, “எல்லாம் யாரு? உன் அம்முக்குட்டி சொன்னாளா?” என்று அடிக்குரலில் எரிமலையாக வெடித்தான்.
“நீங்க அவ மேல வச்சிருக்க நம்பிக்கை இவ்ளோதானா? அவ தான் பைத்தியக்காரி மாதிரி அஸ்வத்தைக் காப்பாத்தணும்னு புலம்பிட்டு இருக்கா போல!”
மீண்டும் அஸ்வத்தின் கோபம் தன் அலைவரிசையைக் குறைத்து, அவ்விடத்தைச் சாந்தம் கொண்டு நிரப்ப முற்பட்டு, அது முடியாமல் அங்கே குழப்பத்தை நிரப்பி திணறியது.
அவன் மனநிலையை ஏற்றி இறக்கி விளையாடிய அந்த மருத்துவன் கள்ளச்சிரிப்பு சிரித்துக்கொண்டான். “என் அம்முக்குட்டி கழுத்துல ஒருத்தன் கத்தி வச்சதைப் பார்த்தப்புறமும் அவன் யாரு, அவன் பேக்ரௌண்ட் என்னன்னு தெரியாம கிட்ட சேர்க்க என்னைக் கிறுக்கன்னு நினைச்சீங்களா அஸ்வத்?”
சாந்தி மற்ற இருவருக்கும் தந்துவிட்டு, இவர்களிடமும் குளம்பியைக் கொண்டுவந்து நீட்டினார்.
விரிந்தப் புன்னகையுடன், “தாங்க்ஸ் சாந்திம்மா!” என்ற ஹரிஷ், அஸ்வத்தின் கோப்பையையும் சேர்த்து எடுத்துக்கொண்டு, “அப்போ போட்ட காஃபி குடிக்கலயே?” என்றவாறு உள்ளறைக்குச் செல்லும் பகுதியில் போய் நிற்க, அஸ்வத்தும் அவனருகே சென்றான்.
“வெல்… உங்க திட்டப்படியே போகலாம் அஸ்வத். நீங்க, ‘நான் எதுவுமே செய்யல’ன்னு சொன்னா போதும். மிச்சத்தை நானும் தேவாவும் பார்த்துக்கறோம். மோர்ஓவர் கோகிலாவையும் அவ சீஃப் ஹெட்டையும் உங்ககிட்ட ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு.”
அஸ்வத் ஹரிஷின் இந்த அவதாரத்தைக் கண்கள் இடுங்கப் பார்த்தான்.
“ஆனா ஒரு கண்டிஷன்!” என்றபோது,
அஸ்வத்திடம் இகழ்ச்சி நகை! “உங்க அம்முக்குட்டியை விட்டு, அவ லைஃபை விட்டு நான் போயிடணும். அதுதானே?”
உண்மையில், ‘உனக்குத் தேவையானதைச் செய்ய நான் சித்தமாக இருக்கிறேன்; போலவே எனக்குத் தேவையானதை நீ செய்ய வேண்டும்!’ எனும் அற்ப சித்தாந்தம் தான் ஹரிஷ் வகுத்தது. அத்துடன் அஸ்வத்திற்கு ஆபத்து என்றால் அம்ருதா இவனைப் புறக்கணித்துவிட்டு, தானே களத்தில் இறங்குவாள். அந்தவொரு காரணம் அன்றி அஸ்வத்தைக் காப்பாற்றும் எண்ணமெல்லாம் ஹரிஷூக்கு இல்லை. அதனை மிகச் சரியாகப் புரிந்துகொண்டான் அஸ்வத்.
“யூ ஆர் ட்டூ ஷார்ப், அஸ்வத்! இந்த ஷார்ப்னெஸைப் பார்த்துட்டுதான் நீங்க என் பேஷண்ட்ன்னு சொல்றதை தேவா நம்ப மாட்டேங்கறான்.” என்று குறைபட்டுக்கொண்ட ஹரிஷ், அஸ்வத்தின் முடிவு என்னவாக இருக்குமென்று அவன் முகத்தை ஆராய்ந்தான்.
கண்கள் கலங்குகிறதோ! எமகாதகன்! எதையும் வெளிப்படுத்தவில்லையே! இவன் மனமறிய ஒவ்வொரு முறையும் ஹிப்னோ தெரபிக்கு செல்ல முடியுமா என்ன?
ஹரிஷ் மண்டை காய்ந்து நிற்கையில் அவன் கையிலிருந்த தனக்கானக் கோப்பையை எடுத்து ஒரு மிடறு பருகிய அஸ்வத், கோப்பையை லேசாக உயர்த்திக் காண்பித்தான். “எனக்கு வர வேண்டியதை உங்ககிட்ட விட்டு வைக்க நீங்க சொல்ற மாதிரி நான் பைத்தியக்காரன் இல்லை, மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்!” என்று பழைய எள்ளலுடன் சிலேடையும் சேர்த்து அவனை வெறுப்பேற்றியவன், மின்னேற்றியில் இணைத்திருந்த அலைபேசியை எடுத்துக்கொண்டு தேவா முன் போய் மிதப்புடன் நின்றான்.
“ஸாரி மிஸ்டர் இன்ஸ்பெக்டர்! அப்போ நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். ஃபர்கெட் இட்! இப்போ என்ன கேட்கணுமோ கேளுங்க.”
அவனின் மன எழுச்சி மட்டுப்பட்டிருக்க, திடுமென மாறிப்போன அவனின் தோரணையை, ஆளுமையை, திமிரை, தெளிவை ஆச்சரியமாகப் பார்த்தபடி எழுந்தான் தேவா. அன்று தேநீர் கடையிலும் இதேபோல் நின்ற ஞாபகம்! அம்ரு இந்த ஆளுமையில் தான் வீழ்ந்திருக்க வேண்டும் என்று அத்தை மகளின் உள்ளத்தை கணித்தது அந்தப் போலீஸ் மூளை.
ஆனால் சடுதியில் எப்படி இந்த மாற்றம்?
ஹரிஷூம் கூட ஒரு மனநல மருத்துவராக, ‘அம்முக்குட்டி’ எனும் மந்திரம் அவனில் நிகழ்த்தும் மாற்றத்தை உள்ளூர ஏற்பட்ட வியப்புடனே பார்த்தான்.
தேவா அஸ்வத்தை அவதானித்தபடி, “ஏற்கனவே கேட்டேன்னு நினைக்கறேன்?” என்றிட,
“ஹான் யப்! யாரோ ஒரு டாக்டர் மர்டர்… அதுக்கு என்கொயரி!” என்றான் காபியை பருகியபடி!
அஸ்வத்தின் அசட்டை பாவனையை அசந்து போய் பார்த்து, “யாரோ ஒரு டாக்டர் இல்ல சர்… பீடியாடிரிஷன் டாக்டர் தன்வீர்! உங்க பொறுப்புல இருக்க பில்டிங்ல தான் இறந்து கிடந்தார்.” என்ற தேவாவுக்குமே அஸ்வத் என்ன சொல்லி தப்பிக்கப் போகிறானென்ற ஆர்வம் எழுந்தது. அதற்காகவே அவனிடம் விவகாரமாக வியூகம் அமைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க,
“எஸ், அந்த ஸ்டோரேஜ் பே’ல இருக்கற மெய்ன் வேர் ஹவுஸ் சாவி என்கிட்ட தான் இருக்குது. நான் லாஸ்ட் வீக் வேலை விஷயமா எங்க மெக்கானிக் கூட போனேன். அதுக்கப்புறம் அந்தப் பக்கம் போகலையே! நீங்க செக்யூரிட்டி கார்ட் கிட்ட விசாரிச்சீங்களா?” எனக் கேட்டான்.
“நீங்க என்கிட்ட என்கொயர் பண்றீங்களா?”
“ஹாஹா… இல்ல இன்ஸ்பெக்டர், கார்ட் இருக்கறதால அவுட்டர் மெயின் கேட் எப்பவும் அன்லாக் தான். டிரக் மூவ்மெண்ட், டெலிவரி, மெக்கானிக்னு யாரும் யூஸ் பண்ணுவாங்க. அதான் கேட்டேன். இன்னர் ஷட்டர் மெய்ன் லாக் சாவி தான் என்கிட்ட இருக்கும்.”
"அப்போ உங்க ஹெல்ப் இல்லாம தன்வீர் எப்டி அந்த வேர் ஹவுஸ் உள்ளே வந்திருப்பார்?”
“டோன்னோ இன்ஸ்பெக்டர்! சாவி என்கிட்ட இருக்கும்போது ஷட்டர் திறக்க சான்ஸே இல்ல.” என்றவனை தேவா ஆழமாக ஊடுருவினான்.
அஸ்வத்தின் கண்கள் தன் சிரிப்பைச் சிறிதளவும் சிந்தவில்லை.
அவனின் பதிலைக் கேட்ட கான்ஸ்டபிள், “ஷட்டர் திறக்கல சர். சைட்ல உள்ள ஃபைபர் ஷீட் வால் உடைச்சிருக்…” என்று வாயை விட்டுவிட்டு, சட்டென்று திரும்பிய தேவாவின் அழுத்தப் பார்வையில் ‘உடைத்த’ வார்த்தையின் உயிரை உறிஞ்சிக்கொண்டார்.
மீண்டும் அஸ்வத்திடம் திரும்பிய தேவா கேட்டான். “நான் ஷட்டர் திறக்கறது பத்தி பேசவே இல்லை. அப்புறம் எப்டி சரியா பதில் சொன்னீங்க?”
“ஜஸ்ட் அ மினிட் இன்ஸ்பெக்டர்…” என்று இடையிட்ட ஹரிஷை,
அதே அழுத்தத்துடன் பார்த்த தேவா, “அத்தான் ப்ளீஸ்! இட்’ஸ் மை டியூட்டி!” என்று சொல்லி அவன் வாய்க்கும் பசையைக் காட்டிவிட்டு அஸ்வத்தைப் பார்க்க,
வலக்கையில் காபி குவளையை ஏந்தியிருந்தவன், மறு கையின் பெருவிரலை அணிந்திருந்த டிராக் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்து அமர்த்தலாகப் போய் நீள்விரிக்கையில் அமர்ந்தான். “என்ன இன்ஸ்பெக்டர்… நீங்க சாவி பத்தி கேட்டீங்களே… பூட்டு, சாவி இல்லாத ஷட்டர் என்னத்துக்கு? பொதுவா சொன்ன வார்த்தைக்கெல்லாம் உங்க போலீஸ் டிக்ஷ்னரில அர்த்தம் தேடினா எப்டி?”
தேவாவிடம் பேசியபடி திரும்பியவன், அறையைச் சுத்தம் செய்துவிட்டு வந்த சாந்தியிடம், “ரெண்டு ரூம் க்ளீன் பண்ணியாச்சா? இன்னும் ஹால், கிச்சனைச் சேர்த்து மூணு ரூம் குப்பை பாக்கி இருக்குதுல்ல?” எனக் கேட்டான் முதலாளி தோரணையில்!
சாந்தி அவனுக்கு ஆமோதிப்பாய்ப் பதிலளித்துவிட்டு நகர, அவனின் சிலேடை பேச்சில் ஹரிஷ் மற்றொரு முறை எரிச்சலுற்றானெனில்,
‘காக்கி உடையில் நிற்கும் தன் முன்பே இப்படி பேச என்ன துணிச்சல் இவனுக்கு?’ என்று தேவா ஆச்சரியமும் சுவாரஸ்யமுமாய்ப் பார்த்தான். “ஸோ? நீங்க என் கேள்விக்கு பொதுவா தான் பதில் சொன்னீங்க?”
குவளையை டீபாயில் வைத்தவன், “எஸ், அஃப்கோர்ஸ்!” என்றான் அமரிக்கையாய்!
“அப்போ… நேத்து நீங்க எங்கே இருந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? இவர் சொல்றது உண்மையா?”
“ம்ம்! உண்மைதான்!”
சட்டென்று ஓரெட்டு முன்னால் வந்தான் ஹரிஷ். தன் உடன்படிக்கைக்கு அஸ்வத் ஒப்புக்கொண்டால் போதுமென்ற துள்ளல் அவனுள்!
“நேத்து மார்னிங் கம்பெனிக்கு போனேன். அப்புறம் ஆவடி அண்ட் வேளச்சேரில ரெண்டு கிளையண்ட்ஸ் மீட் பண்ண வேண்டியிருந்தது. இது அந்த கிளையண்ட் டீடெயில்ஸ்!” என்று அலைப்பேசி திரையைக் காண்பித்து, அதனை தேவாவிடம் தந்துவிட்டு தொடர்ந்தான்.
“அப்புறம் ஈவ்னிங் என் கேர்ள் ஃப்ரெண்ட்’அ பார்க்க பல்லாவரம் சிவன் கோவிலுக்கு போனேன்.” என்றதில் குனிந்து திரையைப் பார்த்துக் கொண்டிருந்த தேவா நாக்கைச் சுழற்றி, வந்த சிரிப்பை மறைத்துகொள்ள,
“வாட் ரப்பிஷ்?!” என்று பெரிதாக இரைந்த ஹரிஷ், அஸ்வத்தின் டீ-ஷர்ட் காலரைப் பற்றிவிட்டான்.
“அத்தான்!” என்று தேவா அதட்ட வேண்டியிருந்தது.
“பாவம் ஏதோ டிப்ரஷன் போல! நைட் சரியா தூங்கலயா, மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்?” என்று எள்ளலைச் சிதற விட்ட அஸ்வத்தின் இரத்தத்தைக் குடித்துவிடும் ஆவேசம் ஹரிஷிடம்!
தொண்டையைச் செருமிகொண்ட தேவா, “நீங்க நேத்து மீட் பண்ண கிளையண்ட் டீடெயில்ஸ் தந்துட்டீங்க… அப்போ உங்க…” என்றிழுக்க,
ஹரிஷின் ஆவேசப் பார்வை தேவாவிடம் பாய்ந்தது.
ஆனால் அடுத்த வார்த்தையில் அஸ்வத் அவனைக் காப்பாற்றிவிட்டான். “ஸாரி இன்ஸ்பெக்டர்! நான் கிளையண்ட்ட மீட் பண்ணினதுக்குரிய ஜெனரல் டீடெயில்ஸ் தான் உங்களுக்கு கொடுத்திருக்கேன். இதை நீங்க உங்க அத்தாரிட்டி வச்சு கம்பெனில கேட்டாலே தருவாங்க. பட் உங்க சந்தேகத்துக்காக எல்லாம் என் பர்சனலை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”
அவன் பேச்சில் அத்துணை தெளிவு! ஹரிஷ் அவனின் மனநிலை சரியில்லை என்று சொன்ன வார்த்தையை அடித்து நொறுக்கினான். மாறாக இப்போது ஹரிஷ் தான் மனநிலை சரியில்லாதவன் போல் கோபமாக நின்றிருந்தான்.
“அப்போ நேத்து நைட் ஃபுல்லா இவரோட க்ளீனிக்ல இருந்ததா சொல்றது?”
“அந்தக் கோவில்ல தான் இவரையும் பார்த்தேன். இவர் என் கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ஒரு ஹாய் சொல்லிட்டு கிளம்பும்போது என் கார் கொஞ்சம் மக்கர் பண்ணிடுச்சு. ‘அதை விட்டுட்டு என் கூட வா! நான் டிராப் பண்றேன்’னு சொன்னார். நானும் என் காரைக் கோயில் சர்க்கிள்லயே விட்டுட்டு இவரோட கிளம்பிட்டேன். நைட் ஹெவி ரெய்ன்! ஹெவி டிராஃபிக்! அதான் நைட் க்ளினிக்ல இருந்துட்டு காலைல வீட்டுக்கு வந்தோம்.”
“அப்போ உங்களுக்கு முன்னாடியே இவரைத் தெரியுமா என்ன?”
“என்ன இன்ஸ்பெக்டர், என்னோட ஃப்ரெண்ட்ன்னு இவர் கொஞ்சம் முந்தி சாந்திம்மா கிட்ட சொன்னதை நீங்களும் கேட்டீங்க தானே? என்ன மச்ச்…சான்?” என்ற வார்த்தையில் எகத்தாளத்தை ஏகத்துக்கும் தூவி விட,
அஸ்வத் கவிழ்த்து, சாந்தி நேராக எடுத்து வைத்திருந்த டீபாயை இப்போது ஹரிஷ் கவிழ்த்துவிட்டு அவனை அடிக்கப் பாய்ந்தான்.
அஸ்வத்தைத் தன் கைக்குள் போட்டுக்கொள்ளும் பொருட்டு சற்றுமுன் ஹரிஷ் அவனிடம் எப்படி அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேசினானோ, அதேபோல் இப்போது அஸ்வத் அடிக்க வந்தவனின் கையைப் பற்றிக்கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான். “சகவாச தோஷம்! உங்க தங்கச்சி மாதிரி பொய் சொல்ல டிரைப் பண்ணேன். தேறிட்டேனா என்னன்னு அவ அண்ணன் நீங்க தான் சொல்லணும்.”
அவன் சொன்னதை ஒட்டுக் கேட்டுவிட்டு, ‘அடியே ரோலர் பொட்டட்டோ, எங்கே இருந்துடி பிடிச்ச இவரை!’ என்று உள்ளுக்குள் அஸ்வத்தின் அட்டகாசத்தை ரசித்த தேவா தான் ஹரிஷை மீண்டுமொருமுறை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.
Scorpio vibes; Psychiatry strikes🚙…
Comments
Post a Comment