கருவறை கீதம் -2

 


அத்தியாயம் 2

 

வருடம் 2002


"ஹாய்! அனுராதா? இட்’ஸ் மீ பாஸ்கர்." என அழகாய் புன்னகைத்தான் பாஸ்கரன்.


அவன் புன்னகையைப் போல அவனும் அழகாக, இளமையாக, கம்பீரமாக இருந்தான். அவன் கண்கள் அனுவை ஈர்த்தன.  


"பேசணும்னு சொன்னீங்களாம்." அவன் அமர்வதற்கு இடமளித்தாள்.


அமர்ந்தான். "ம்ம்… எஸ்! ஒரே ஒரு கேள்வி, இல்ல ஜஸ்ட் அ க்ளாரிஃபிகேஷன்."


"??"


"உங்களுக்கு கல்யாணத்தைப் பிடிக்கலையா? இல்ல என்னையா?"


"!!"


"சும்மா சொல்லுங்க அனு. கல்யாணம் செஞ்சுப்பேன். ஆனா குழந்தைப் பெத்துக்க முடியாதுன்னு எக்ஸ்ட்ரீம் லெவல் கண்டிஷன் போடறளவுக்கு கல்யாணத்து மேல வெறுப்பா? இல்ல என்னைப் பிடிக்காம எஸ்கேபிஸத்துக்காக சொன்னக் காரணமா?"


'எஸ்கேபிஸம்!'


எப்படி சரியாக கணித்தான்? ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்வை உணர்ந்தாள் அனு.


அம்மாவுடன் தர்க்கம் செய்தது நினைவிற்கு வந்தது.


"என்னதாண்டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நானும் உன்னை மாதிரி யோசிச்சிருந்தா நீ பொறந்தே இருக்கமாட்ட!"


"பொறந்தே இருக்கலன்னா இந்த போராட்டமும் இருந்தே இருக்காதும்மா."


"அப்பா இல்லாத பொண்ணு தன்னம்பிக்கையோட வாழணும்னுதான் உன்னைப் படிக்க வச்சு வேலைக்கு போக அனுமதிச்சேன் அனு. இப்டி வாய்க்கொழுப்பு கூடிப் போய் எடுத்தெறிஞ்சு பேசறதுக்கோ, மனசுல ஈரமே இல்லாம கண்டிஷன் போடறதுக்கோ இல்ல. ஒழுங்கா கல்யாணம் கட்டி, குழந்தை குடும்பம்னு வாழப் பாரு!”


"ஏன்மா புரிஞ்சிக்க மாட்டேங்கற? ஒரு பொண்ணுக்கு கல்யாணமோ குழந்தையோ மட்டும் வாழ்க்கை இல்ல! அதையெல்லாம் தாண்டி சுதந்திரம், லட்சியம்ன்னு நிறைய இருக்குது. உங்களுக்காக, உங்க டார்ச்சர் தாங்க முடியாம கல்யாணத்துக்கு சரின்னு சொல்றேனே...‌ இப்பவும் மாட்டேன்னா எப்டி? யூ ஆர் ட்டூ கன்ஸர்வேட்டிவ்'மா."


"பொண்ணுங்க கல்யாணம் செஞ்சுக்கறதே குடும்பம் தழைக்கணும்னு தான் அனும்மா… உனக்கு தான் இது புரியல. ஒருநாள் குழந்தையோட அருமைப் புரியும். காலம் புரிய வைக்கும்."


"ப்ச்!"


"சரி போகட்டும். நான் மாப்பிள்ளை வீட்டுல பேசறேன். அவங்களும் என்னை மாதிரி கன்ஸர்வேட்டிவ்'ஆ இல்லாம இருந்தா உன் கண்டிஷனுக்கு ஒத்துப்பாங்க இல்ல?"


"அவங்க இதுக்கு ஒத்து வரலன்னா கல்யாணத்தை நிறுத்திடலாம்மா."


"அதுதானே உன் ப்ளான்?"


வாய்மூடிக் கொண்டாள் இவள். 


"ஆனா இந்த பிடிவாதம் நல்லதில்லை அனு." என்ற அம்மா, பிற்பாடு இவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அந்தப் பக்கம் என்ன பேசினார்களோ அதுவும் தெரியவில்லை.


ஒரு வாரம் கடந்த பின், இன்று பெண்ணுடன் தனியே பேசலாமா என்ற மாப்பிள்ளையின்(?) கோரிக்கையையடுத்து அம்மா இவளிடம் தகவல் சொல்ல, இதோ இவளெதிரே அவன்! பாஸ்கரனின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். அனுவைப் பார்ப்பதற்காக திண்டுக்கல் வந்திருந்தான்.


அந்த கோவில் குளத்தங்கரையில் கம்பி கேட் போட்டிருந்ததைப் பேரார்வத்துடன் தாண்ட முயற்சித்துக் கொண்டிருந்த, பட்டுப் பாவாடைக் குட்டிப் பெண்ணைச் சற்று நேரம் பார்த்திருந்துவிட்டு, தன் மௌனம் கலைத்தாள் அனுராதா. 


"எஸ்கேபிஸம்தான்! ஆனா உங்களைப் பிடிக்கலன்னா முதல்லயே சொல்லிருப்பேன்." - அவளிதழ்கள்.


'அந்த கட்ஸ் எனக்கிருக்குது.' - அவள் கண்கள்.


அவள் எதையும் மறுக்கவில்லை; அவள் கர்வத்தையும் மறைக்கவில்லை.


அனுவிற்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்! அவர் ஏற்கனவே அனுவைப் பற்றி உள்ளது உள்ளபடி சொல்லியிருந்தார். இருந்தும் அனுவிடம் நேரடியாகப் பேச நினைத்தான் பாஸ்கரன்.


சின்னதாகச் சிரித்துக் கொண்டான். "அப்போ கல்யாணம்தான் பிடிக்கல?"


"நான் ஆன்ஸைட் போறதுக்கு ஆஃபர் வந்திருக்குது. இதுக்கு மேல ப்ரமோஷன் அது இதுன்னு நிறைய இருக்குது. இந்த நேரத்துல வைக்கற கல்யாணம்தான் பிடிக்கல." தெளிவாகவே பேசினாள்.


"கல்யாணத்துக்கப்புறம் வேலையைக் கன்டினியூ பண்ணலாமே?"


"ம்ஹூம். கல்யாணம் ஆனதுக்கப்புறம் ஹனிமூன், ஃபேமிலி, கன்ஸீவ், சிக்னெஸ் லீவ், மெட்டர்னிடி லீவ்'ன்னு சர்வீஸை ஸ்பாயில் பண்ணிட்டு, திரும்ப முதல் கோட்டுல இருந்து ஆரம்பிக்கற நிறையப் பொண்ணுங்களைப் பார்த்தாச்சு. நானும் அந்த லிஸ்ட்ல சேர விரும்பலங்க." 


"ஓ! அதுக்குத்தான் இந்த யாக்கர் ஷாட்'ஆ?"


"ஐ ஹேவ் நோ அதர் வே. அம்மா என்னைச் சுத்தமா புரிஞ்சுக்கலை."


இவன் புரிந்துகொண்டான். அனுராதா ஒரு இரண்டுங்கெட்டான் கேரக்டர்.  தன்னொருத்தியால் எல்லாம் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையில், 'தான்' என்ற அகங்காரத்தை நூலிழை இடைவெளியில் தன்னையுமறியாமல் நுழையவிட்டுக் கொண்டிருக்கும் புரிதலில்லா வளர்ந்த குழந்தை.


இதற்காக அனுவை நிராகரிக்க எண்ணவில்லை. இப்படியானவர்களிடம் வேறு நல்ல குணங்களும் இருக்கும். தவிர, பாஸ்கருக்கு அனுராதாவைப் புகைப்படத்தில் பார்த்தபோதே பிடித்துப்போனது.


ஆக திருமணம் வேண்டாமென மறுத்தவளை பாஸ்கரன் எளிதாக கையாண்டான். திருமணம் முடித்தாலும் குழந்தைப் பெற்றுக் கொள்வதில்லை என்ற அவளின் உடன்படிக்கைக்கு உடன்படுகிறேன் என்றான். 


ஆச்சரியமாக ஏறிட்டவள் படக்கென கேட்டாள். “உங்க வீட்டுல இதுக்கு எப்டி சம்மதிப்பாங்க?”


“சம்மதிக்கவே மாட்டாங்கன்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தியா?”


“இல்… இல்லை… அது…”


“ரிலாக்ஸ்! அவங்க சம்மதிச்ச பிறகுதான் இங்கே வந்தேன்.” புன்னகை மாறாமல் சொன்னவனை நம்ப இயலாமல் பார்த்தாள் அனுராதா.


“ஆனா எப்டி?”


“எனக்கு அனுராதாவைப் பிடிச்சிருக்குதுன்னு சொன்னேன். இனி வேற பொண்ணைப் பார்க்க வர்ற ஐடியா இல்லைன்னு சொன்னேன்.”


அனுராதாவின் இமைகள் ஆச்சரியத்தில் விரிந்து, அனிச்சமாய்த் தாழ்ந்தன.


அவளின் முகத்தில் ஒரு நொடி வந்து போன விகசிப்பை ரசனையுடன் பார்த்திருந்தவன் கேட்டான். “ஏன் உனக்கு என்னைப் பிடிக்கலையா?”


“அப்டி இல்ல… அதான் சொன்னேனே… கல்யாணம்தான்…”


பாஸ்கரனின் எண்ணம் வேறாக இருந்தது. அனு இப்போது பிடிவாதமாக இருந்தாலும் பின்னாட்களில் விரைவில் மனம் மாறிவிடுவாள் என்றும், தன் அன்பும் தன் குடும்பம் சூழ் உறவுகளும் ஒற்றைப் பெண்ணாக வளர்ந்த அனுவின் எண்ணத்தை நிச்சயம் மாற்றுமென நம்பினான். அதையே அவளிடம் சொல்லவும் செய்தான்.


“உனக்கு உன் கேரியர்க்கு குழந்தை ஒரு தடையா இருக்கக்கூடாது. அவ்வளவுதானே?”


“ம்ம்.”


“அப்போ அம்பது வயசு வரைக்கும் உன் டார்கெட்டை எட்டிப் பிடிக்க ஓடிட்டே இருப்பியா என்ன?”


“!?”


“ஆல்ரைட்! உன் வழிக்கே வர்றேன். நாம ரெண்டு பேரும் ஏன் ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கக் கூடாது?”


“உங்களுக்கும் ஏதாவது கண்டிஷன்ஸ் இருக்குதா?”


“கண்டிஷன் இல்ல; என்விஷன் இருக்குது.”


“என்ன என்விஷன் பாஸ்கர்?” - சிறு ஆவல் அவள் குரலில்.


அவளிடமிருந்து வந்த உரிமையான அழைப்பில் உள்ளூற புன்னகைத்துக் கொண்டவன் சொன்னான். “எனக்கு ஒரு ப்ரின்ஸ் மகனா பிறப்பான்னு!”


குழந்தையே கூடாதென்கிறாள் இவள். இளவரனை மகனாக எதிர்நோக்குகிறான் அவன். பாஸ்கரனின் முரணான பதிலில் புரியாமல் பார்த்தாள் அனுராதா.


“யூ நோ என்விஷன் நெவர் லைஸ், அனு!” அவள் விழிகளை ஊடுருவியபடி சொல்ல, வேறுபுறம் விழி திருப்ப சில விநாடிகள் தேவைப்பட்டது அனுராதாவிற்கு!


பின் கோவில் கோபுரத்தைக் கண்டவாறு, “யூ ஆர் மெஸ்மரைஸிங் மீ!” என முணுமுணுத்தாள்.


பக்கென சத்தம் வராமல் சிரித்தவன் சொன்னான். “ஓகே இதுதான் அக்ரிமெண்ட்! நீ உன் டார்கெட் அச்சீவ் பண்ற வரைக்கும் குழந்தை வேணும்னு கேட்டு நான் தொந்தரவு செய்யமாட்டேன். இட்’ஸ் மை ப்ராமிஸ். உனக்கு உன் கேரியர்ல எப்போ ஜெயிச்சிட்டோம்ன்னு தோணுதோ… அப்போ எனக்கு பிள்ளைப் பெத்து கொடுக்கணும், அது நாற்பது வயசா இருந்தாலும்! இட்’ஸ் மண்டேட்ரி, மை லவ்!”


‘லவ் என்கிறான். என்விஷன் என்கிறான். அக்ரிமெண்ட் என்கிறான்.’ குனிந்து மடியிலிருந்த கைப்பையில் பார்வையைப் பதித்திருந்த அனு, தன்னிச்சையாகக் கண்கள் மூடி வலது கையின் இரு விரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டாள்.


“ரொம்ப கன்ஃப்யூஸ் பண்றேனா அனு?”


“இல்ல ப்ரெய்ன் வாஷ் பண்றீங்க. எங்கம்மாவை விட நீங்க டேஞ்சரோ’ன்னு தோணுது.”


“ஹஹ்ஹஹா… ஒண்ணும் அவசரமில்லை. நிதானமா யோசிச்சு நாளைக்கு சொல்லு.”


நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். ‘எதுவும் உன் விருப்பம்தான்’ என்பதாகத் தலையசைத்தான்.


“நீங்க சொல்றது கேட்க நல்லா இருக்குது. ஆனா ப்ராக்டிக்கலா இது எப்டி சாத்தியப்படும் பாஸ்கர்?”


“வை நாட்? நம்ம நாட்டைப் பொறுத்தவரை வீட்ல ஒரு வயசு பொண்ணு இருந்தா அவளுக்கு கல்யாணம் செஞ்சு பார்க்கணும்ன்னுதான் எல்லா பேரண்ட்ஸூம் நினைப்பாங்க. இல்லையா அனு? வரன் தேடறது, அது அமைஞ்சா ரெண்டு வீடும் பரஸ்பரம் பார்த்து உறுதி செய்றது, நிச்சயம், கல்யாணம், ஹனிமூன், குழந்தை… இந்த ப்ரொஸீஜர்தான் நார்மல். ம்ம்?”


“ம்ம்!” என்ன சொல்ல வருகிறானென புரியாமல் தலையாட்டினாள்.


“ஆனா நம்ம விஷயத்துல இது எல்லாமே அப்நார்மல்தானே அனு?”


“ப்ளீஸ் கம் டூ தி பாயிண்ட் பாஸ்கர்.” பொறுமையற்றவளாய் பொருமினாள்.


“ம்ம் வந்துட்டேன். இப்டி நம்ம விஷயத்துல ஆரம்பத்துலயே அப்நார்மல் ஹேப்பனிங்ஸ் சாத்தியமா இருக்கும்போது, நம்ம அக்ரிமெண்ட் மட்டும் எப்டி சாத்தியமில்லாம போகும்?”


சில நொடிகள் அவன் பேச்சு திறமையைக் கண்டு பேச்சற்றுதான் போனாள் அனு. பின், “நீங்க ஆடிட்டர் கிட்ட வொர்க் பண்றதா சொன்னாங்க?” எனச் சம்பந்தமில்லாமல் கேட்டாள்.


இப்போது பாஸ்கரன் அவளைக் குழப்பமாகப் பார்த்தான். “ஆமா.”


“ஆனா எல்ஐசி ஏஜெண்ட் மாதிரி பேசறீங்க பாஸ்கர்.” என சிரிக்காமல் சொன்னவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தான் பாஸ்கரன்.


வருடம் 2034


"அனூ… அனூ‌…” என அடித்தொண்டையில் இரைந்தபடி அந்த விஸ்தாரமான பலகணிக்கு சென்றான் பாஸ்கரன்.


சாவகாசமாக நிமிர்ந்து பார்த்த அனுராதா, மீண்டும் தன் தியானத்தைத் தொடர, பாஸ்கரன் சற்று நிதானித்தான். ‘கோபமாக இருக்கிறாள் போலும். ஏனாம்?’ சிந்தித்தவனுக்கு ஒன்றும் நினைவிற்கு வரவில்லை.


“கோவமா இருக்கியா என்ன? எவ்ளோ நேரம் கூப்பிடறேன்?”


பேச வேண்டாமென நினைத்திருந்த அனுராதா, கணவனின் ஞாபகமறுதியைக் கருத்தில் கொண்டு வாயைத் திறந்தாள். “காலைல என்ன நடந்தது?”


“என்ன நடந்தது?”


பற்களின் நறநறப்புடன், “உங்க வீட்டாளுங்ககிட்ட இருந்து கால் வந்ததா?” எனக் கேட்க,


“யார்…” எனக் கேட்க வந்து, “ஓ! நிர்மலா கால் பண்ணிருந்தாளே… அதைக் கேட்கறியா?” என்றான்.


நிர்மலா பாஸ்கரனின் தங்கை.


“நானும் விஷயமென்னன்னு நீங்களே சொல்லுவீங்கன்னு வெய்ட் பண்ணேன். நீயெல்லாம் எனக்கொரு ஆளே இல்லைன்ற மாதிரி கிளம்பி போயாச்சு.” என்றாள், நாசி விடைக்க!


பத்து வருடங்களுக்கு முன்பு அனுவின் உடல்நிலையின் பொருட்டு அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டி, தன் வேலையை விட்டுவிட்டிருந்தான் பாஸ்கரன். கையிலிருந்த ரொக்கப் பணத்தின் மூலம் முதலில் இரண்டு வீடுகள் வாங்கி வாடகைக்கு விட, அதன்மூலம் பெருகிய வருமானத்தால் இப்போது சென்னையில் பல வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், போன்ற பல கட்டிடங்களுக்கு முதலாளி பாஸ்கரன். அத்துடன் நிலங்களின் மீதும் பெரும் முதலீடு செய்துள்ளான். 


“ஸாரிடா. நம்ம அனகாபுத்தூர் வீட்டுல பக்கத்து வீட்டுக்காரன் ஏதோ பிரச்சினை பண்றான்னு டெனன்ட் சொல்லவும், அவசரத்துல கிளம்பிப் போனவன் காலைல அவ பேசினதையே மறந்துட்டேன். நம்ம அவிக்கு (அவினாஷ்) மேட்ரிமோனில வந்த ஒரு அலையன்ஸ் அமையற மாதிரி இருக்காம். நேத்து அவளோட கொழுந்தன் ரமேஷ், பொண்ணு வீட்டுல பேசினாராம். நெக்ஸ்ட் வீக் ஸ்ரீரங்கம் போய் கோவில்ல வச்சு பொண்ணு பார்க்க போறதா சொன்னா!” 


“தாய்மாமன் நீங்க! உங்களைப் பேச சொல்லாம அவ கொழுந்தனைத் தான் எல்லாத்துக்கும் முன்னாடி நிறுத்துறா!”


“நமக்கு வேலை மிச்சம்ன்னு நினைச்சுக்க வேண்டியதுதான், விடேன்! எப்டியும் கல்யாண வேலையெல்லாம் நாமதானே பார்க்கணும்?”


“ஆமா! அவிக்கு எல்லாம் நான்தான் செய்வேன். நிர்மலா என்னை ஒதுக்கி வச்சாலும் நான் தான்‌ முன்னாடி நிற்பேன்.”


“நீயாச்சு! உன் மருமகனாச்சு!”


“வாட்எவர்! இந்த மேட்ரிமோனில ரிஜெஸ்டர் பண்ற வேலையெல்லாம் அவியோட நிறுத்திக்கணும். சனாவுக்கு வெளி இடத்துல பார்க்க நினைச்சா… நான் மனுஷியா இருக்கமாட்டேன் பாஸ்கர்!”


“ஹாஹா… நீ கவலையே பட தேவையில்லை அனு. வீட்டுல பொண்ணு இருக்கும்போது முதல்ல பையனுக்கு பார்க்கறாளே… இதுல இருந்தே தெரிய வேணாமா அவ மனசை?”


“இருந்தாலும்… எப்போ பாருங்க அர்ஜூனையே சேர்த்து வச்சு பேசறா!”


“நீ என்னை நம்புவ தானே? நான் சொல்றேன். சனா கல்யாணம் நம்ம விருப்பப்படி தான் நடக்கும்.” என்றான் ஆணித்தரமாக!


நெடுமூச்சொன்று கிளம்பியது அனுவிடமிருந்து! அழுதழுது நீர் வற்றிப் போனக் கண்களில் ஏக்கம் சுமந்துக் கேட்டாள். “நாம அச்சாணி இல்லாதத் தேரை இழுக்க நினைக்கறோமா பாஸ்கர்?”


“டேய்…”


“உண்மையைச் சொல்லுங்க. நான் பைத்தியக்காரி ஆகிட்டேன்னுதானே எனக்கு ஃபேவரா பேசறீங்க? சனாவை எத்தனை நாளைக்கு நாம இப்டியே வச்சிருக்க முடியும்?”


பாஸ்கரனுக்குமே இதற்கு விடைத் தெரியாதுதான்! இத்தனை நாட்கள் தனக்குள்ளேயே கேட்க பயந்த கேள்வியை மனைவி பட்டென்று கேட்டதில் சிறு தடுமாற்றம் தோன்றியதென்றாலும், அவனின் நம்பிக்கையில் கிஞ்சித்தும் கீறல் உண்டாகவில்லை. ஆதலால் முன்பைவிட நிரம்ப உறுதியுடன் சொன்னான். “சனா நம்ம சஞ்சுவுக்குதான் அனு! அர்ஜூன் தான் பார்த்துட்டிருக்கானே? நாமளும் நம்ம முயற்சியை விட்டுட வேணாம்.”


“ம்ம்…” என்றாலும் அனுவிற்கு மனம் சமாதானமாகவில்லை‌. நிர்மலாவின் அலட்சியம்தான் இவளுக்கு மிகப் பரிச்சயமாயிற்றே!


மனைவியின் குழப்ப முகம் கவலையைத் தர, அவள் எண்ணங்களைத் திசைதிருப்ப முயன்றான். “சரி, நாம இதை அப்புறம் பேசுவோமே? இப்போ அவி கல்யாண விஷயத்தைப் பார்ப்போம்.”


“இன்னும் பொண்ணே பார்க்கலை. அதுக்குள்ள‌ என்ன?”


“பொண்ணு பார்க்க தான் நெக்ஸ்ட் வீக் போறாளாம். நமக்கு அன்னிக்கு அடையார்ல ஒரு ஃப்ளாட்க்கு ரிஜிஸ்ட்ரேஷன் இருக்குது…”


“ஸோ, நாம போக முடியாது! அதுக்குதானே இப்டி சுத்தி வளைச்சு பேசிட்டிருக்கீங்க?”


“அனு ப்ளீஸ் இவ்ளோ டென்ஷன் தேவையில்லடி…” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே போய் கதவைத் தாளிட்டுக் கொண்டாள் அவன் மனைவி!

இசைக்கும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25