கருவறை கீதம் -3

 



அத்தியாயம் 3


வருடம் 2034

இடம்: திருச்சியிலுள்ள ஓர் நட்சத்திர விடுதி. 


"கூப்பிட்டீங்களா?” என கணவனின் அழைப்பில் நினைவு கலைந்து நிமிர்ந்தாள் நிரஞ்சனா.


“நாலு தடவை! அப்டியென்ன யோசனை உனக்கு?” எனக் கேட்டான் அவள் கணவன் பிரபஞ்சன்.


“வேறென்ன? இந்த ஹோட்டல் வரும் போதெல்லாம் நம்ம அக்னி ஞாபகம்தான்.” என்றவள், “அப்புறம் பிரகதிக்கு இந்த இடம் நல்லபடியா தகைஞ்சு வந்தா, உடனே அக்னிக்கும் பார்க்க ஆரம்பிச்சிடலாம்ங்க!” என ஆர்வமாக கணவன் முகம் பார்த்தாள்.


“அவன் சரின்னு சொன்னா பார்த்துடலாம். இப்போ கிளம்பலாம் வா! அங்கே அம்மா நல்ல நேரம் போயிட்டிருக்குதுன்னு புலம்பிட்டிருக்காங்க.”


“பிரகதி ரெடியாகிட்டாளா?”


“அவ மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டிருக்கா! நீ போய்க் கூப்பிடு.”


அக்னிஸ்வரூபனின் தங்கை பிரகதிக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்ததையடுத்து, இன்று பேசி முடிப்பதற்காக அக்குடும்பத்தினர் பெங்களூருவில் இருந்து திருச்சி வந்திருக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்து பார்த்து பேசுவதாக ஏற்பாடு! 


திருச்சியில் அநேக சொந்தங்கள் இருந்தாலும் இவர்கள் இங்கே ஏதேனும் விசேஷத்திற்கு வரும் போதெல்லாம் தங்குவது இந்த நட்சத்திர விடுதியில்தான்! இப்போதும் பிரபஞ்சன், அவன் அம்மா, மனைவி மற்றும் மகளுடன் வந்திருக்கிறான். தம்பதியர் ஒரு அறையிலும், பாட்டியும் பேத்தியும் ஒரு அறையிலும் தங்கியிருந்தனர். அக்னிஸ்வரூபன் வெளிநாடு சென்றிருந்தக் காரணத்தால் இன்று இவர்களுடன் வரவில்லை. ஆனால் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் குறித்து அடி முதல் நுனி வரை விசாரித்தறிந்த பின்பே, இன்று தாய், தந்தையருடன் தங்கையை அனுப்பி நேரில் பார்த்து பேச அனுமதித்திருந்தான்.


விருப்பமில்லா திருமணத்தில் பெற்றோர் தன்னைப் பிணைத்து வைப்பதாக சொல்லி, யாரோடும் பேசாமல் கோபமுகமாக இருந்தாள் பிரகதி. பிரபஞ்சனின் அம்மா அபிராமி கீழேயிருந்த வரவேற்பறையில் அமர்ந்திருக்க நிரஞ்சனா மகள் இருந்த அறைக்குள் மெல்ல தலைநீட்டினாள். “பிரகதிம்மா…” 


உச்ச பட்ச உஷ்ணமூச்சுடன் அமர்ந்திருந்த பிரகதி, அன்னை முகத்தைக் காணாது திரும்பிக்கொண்டாள். மகளைப் பள்ளிக்கு கிளப்பும் தாயைப் போல் அவள் மோவாயைப் பிடித்து முன்னுச்சி சிகையைச் சரிசெய்தவாறு, “என்ன கோபம்டா உனக்கு? இன்னிக்கேவா கல்யாணம் செய்யப் போறோம்? சும்மா ஒரு ஃபார்மாலிட்டிதானே?” எனவும்,


“என்னம்மா ஃபார்மாலிட்டி? பழைய பட சீன் மாதிரி எவனோ ஒருத்தன் முன்னாடி உங்கப் பொண்ணைக் கொண்டு போய் நிறுத்த நினைக்கறதுதான் உங்க ஃபார்மாலிட்டியா?”என்றாள் கோபம் குறையாமல்!


“உன்னை அந்தப் பையன் கிட்ட பேசுன்னு சொல்லி நம்பர் கூட ஷேர் பண்ணேன்தானே? நீ பிடிவாதம் பிடிச்சு பேசாம இருந்துட்டு இப்போ கிளம்பாம இருந்தா என்ன அர்த்தம்?” 


“இன்ட்ரெஸ்ட்டே இல்லாம எப்டிம்மா ஒருத்தர் கிட்ட பேச சொல்ற? அந்தக் கிழவிதான் சொல்லுதுன்னா நீங்களும் ஏன்மா இப்டி? ரெண்டாயிரத்து முப்பத்தி நாலுல இருக்கோம்மா. இன்னும் நீங்க ஒரு பொண்ணுக்கு கையைக் காலைக் கட்டி கல்யாணம் செஞ்சு வைக்கற கலாச்சாரத்துல இருந்து வெளியே வராம ரெக்ரஸிவ்வா நடந்துக்கறீங்க!”


மகளின் பேச்சில் நிரஞ்சனாவுக்கும் கோபம் வர, கொஞ்சலை விடுத்து கண்டிப்புடன் சொன்னாள். “ஷட் அப் பிரகதி! யாரும் இங்கே உன் கையைக் காலைக் கட்டல! ரெக்ரஸிவ்வாவும் நடந்துக்கல! உன் கல்யாணத்துல முடிவெடுக்கற முழு சுதந்திரமும் உனக்கு இருக்குது. பட் அட் தி ஸேம் டைம் எங்களுக்கும் அதுல இடமிருக்குதுன்னு நான் நம்பறேன்?”


கண்டிப்பும் கேள்வியுமாய் தன் முகம் பார்க்கும் அம்மாவை எதிர்க்க வாய் வரவில்லை. தன் பெற்றோர் ஒருபோதும் கட்டிப்பெட்டியாக இருந்ததில்லை. இந்தத் திருமணம் தவிர்த்து இதுவரை தனக்கு முழு சுதந்திரம் தந்து, தன் விருப்பம் அறிந்துதான் நடந்திருக்கின்றனர். எதுவும் கேட்டால் உடனே கிடைக்கும். ஆனால் பட்டத்தின் நூல் அவர்கள் கையில்தான்! ஆக சற்றுமுன் அம்மாவிடம் காட்டமாக பேசியதற்கு வருத்தமுற்றாள் பிரகதி. 


இருப்பினும் இந்த திருமணப் பேச்சுவார்த்தை? ஏனோ மனம் முரண்டியது.


மகளின் மனநிலையை உணர்ந்த நிரஞ்சனா நிதானமாக சொன்னாள். “இந்த ஒரு முறை அம்மாவுக்காக வாடா! உனக்கு பிடிக்கலைன்னா விட்டுடலாம். பாட்டிக்கிட்ட நான் பேசிக்கறேன். இப்போ ஜஸ்ட் அம்மா கூட கோவிலுக்கு வர்றதா நினைச்சுக்கோயேன்.”


“போகலாம்.” என முணுமுணுத்துவிட்டு முன்னால் நடந்தாள் பிரகதி.


கீழே இறங்கி வரும் பேத்தியைக் கண்ட அபிராமி, “என்ன டிரெஸ்’டீ இது? இதுக்கு உங்கம்மாவே பரவாயில்ல. சுடிதார்தான் போட்டு என்னை வெறுப்பேத்துவா!” என பேத்தியுடன் சேர்த்து மருமகளுக்கும் சிறு குட்டு வைக்க நினைக்க,


அம்மாவைச் சொன்னதும், இருந்த கோபம் இன்னும் கூடியது பிரகதிக்கு. “பாட்டி என்னைச் சொல்லணும்னா என்னைப் பத்தி மட்டும் பேசுங்க. இது போன வாரம் உங்க செல்லப் பேரன் வாங்கி தந்த டிரெஸ்தான்!”


“நீ வச்சிருக்க அத்தனையும் என் பேரன் வாங்கி தந்ததுதான். அதுல புடவையும் இருக்குதுதானே?”


எப்போதும் பிரகதிக்கு பிடித்த உடை புடவைதான். கல்லூரியில் நேர்த்தியாக புடவை கட்டி வருவதில் தோழிகளுக்குள் போட்டியே நடக்கும். ஆனால் இன்று போகும் காரியத்திற்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேண்டுமென்றே சென்ற வாரம் அண்ணன் அக்னி வாங்கி தந்த ஷராராவை அணிந்திருந்தாள். 


அது நிரஞ்சனாவுக்கு புரிந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவள் வர சம்மதித்ததே போதும் என்றிருந்தாள். ஆனால் வீட்டின் பெரிய தலையான அபிராமியால் அப்படி அமைதியாக இருந்துவிட முடியவில்லை.


“அம்மா! அவளுக்கு விருப்பமானதைப் போட்டுக்கட்டுமே… போகலாமா? இப்போ கிளம்பினாதான் நேரத்துக்கு போய் சேர முடியும்.” என்றபடி வந்தான் பிரபஞ்சன்.


“இப்டி வீட்டுல எல்லாரும் அவளுக்கு செல்லம் கொடுக்கறதாலதாண்டா அவ இஷ்டத்துக்கும் ஓவரா ஆடுறா!”


“ப்ச்! சரி நீங்க பாட்டியும் பேத்தியும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம் நல்ல நேரம் போயிடுச்சுன்னு என்னைச் சொல்லக்கூடாது சொல்லிட்டேன்.” என்ற பிரபஞ்சன் அங்கிருந்த நீள்விரிக்கையில் அமர போக,


“நான் வாயைத் திறக்கலடா அப்பா.” என்று முற்பாதியைச் சத்தமாக இரைந்தவர், “இந்நேரம் அவர் இருந்திருந்தா இப்டி நேத்து முளைச்ச காளான் முன்னாடி என்னைப் பேசுவானா இவன்?” எனப் பிற்பாதியை முணுமுணுத்தபடி காரில் ஏறினார்.


அம்மூதாட்டியின் செய்கையில் பின்னால் வந்த மூவருக்கும் தன்னைப் போல் புன்னகை மலர்ந்தது. அதே புன்னகையோடே கோவிலில் போய் இறங்கினாள் பிரகதி.

 

ஸ்ரீஅரங்கநாதர் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம்.


கோவிலின் பிரதான வாசலில் நின்று தன் அலைப்பேசி திரையில் விரல்களால் தாளமிட்டுக் கொண்டிருந்தான் அவினாஷ்.


‘ப்ரோ! பொண்ணு கோவிலுக்குள்ளே நுழைய முன்னாடியே ஓட விடறேன்னு பெட் கட்டி, ப்ராமிஸ் பண்ணியே ப்ரோ? இப்போ எங்கே போய் தொலைஞ்ச?’ எனும் குறுஞ்செய்தியை மறுமுனைக்கு அனுப்பிவிட்டு நிமிர,


தன் பாட்டியின் புலம்பல்களைக் கேட்டபடி வந்ததில், புன்னகைத்தவாறே காரிலிருந்து இறங்கினாள் பிரகதி. அடர் சால்மன் இளஞ்சிவப்பு நிற ஷராராவில் எந்தவித அலட்டலுமில்லாமல் இயல்பான புன்னகையுடன் எதிர்ப்பட்ட ஏந்திழை, அவினாஷின் நெஞ்சினோரம் திடுக்கிடும் சிறு அதிர்வை உணரச் செய்தாள். திடுமென இருதயமிருந்த இடப்பக்கம் இளகியதைப் போலிருந்தது.


அவினாஷின் இமைக்கா பார்வையைச் சந்தித்தவாறே பாட்டியின் கைப்பற்றி நடந்து சென்றாள் பிரகதி. இவள் உடையின் நிறத்திலேயே ஒரு போலோ நெக் டீ-ஷர்ட்டும், கறுப்பு ஜீனும் அணிந்திருந்தான். அடர்சிகைக்கு அதிகம் மெனக்கெடாமல் விரல்களால் கோதி கலைத்துவிட்டாற் போலிருந்தது. காலில் சாக்ஸ் மட்டும் அணிந்திருந்தான். எனில், கோவிலினுள்ளே போய்விட்டு இப்போது வாசலில் வந்து யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கிறான். 


இவள் அவனருகே நின்றால் அவன் தோள் வரை இருக்கலாம். விரிந்த மார்பில் கன்னம் சாய்க்கலாம். ‘சோ ஹேண்ட்சம்! இவன்தான் மாப்பிள்ளையா இருக்குமோ?’


‘அட! இங்கே என்னப்பா நடக்கிறது?’ என்று பார்த்தோமேயானால்,


காரிலிருந்து இறங்கி அவனைக் கடந்து சென்ற மூன்று நிமிடங்களுக்குள், அவினாஷ் அவளைப் பார்த்ததை விட பிரகதிதான் அவனை அதிசிரத்தையுடன் பார்வையிட்டிருந்தாள்.


அவினாஷ், அனுப்பிய குறுஞ்செய்தியை மறந்து, குடும்பத்துடன் கோவிலுக்குள் சென்ற ‘ஷராராப் பெண்ணைப்’ பின்தொடர்ந்தான், ‘இவள்தான் தனக்கு பார்த்திருக்கும் பெண்ணாக இருக்குமோ? உடனே சரின்னு சொல்லிடுவோம்.’ என்ற சிந்தனையுடன்!


உள்ளே…


அவளின் அம்மாவும் அப்பாவும் தன் அம்மாவிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, பாட்டியின் கையைப் பிடித்தபடி அவள் இவனைத் திரும்பிப் பார்த்தாள். இவனைத்தான் பிரத்யேகமாக பார்க்கிறாளென, தனக்கு பின் யாருமில்லாததைத் சுற்றிலும் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டவனுக்கு அரங்கனைப் தரிசிக்காமலேயே துளசித் தீர்த்தம் கிடைத்ததைப் போலிருந்தது.


அவன் அந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே, பேசிக் கொண்டிருந்தவர்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் இவனிடம் வந்து நின்றன அவள் விழிகள்! அவைகள் என்ன உணர்வினைப் பிரதிபலிக்கின்றன? இமையைச் சிமிட்டாமல் அதனை உள்வாங்கினான் அவினாஷ். 


ஷராரா பெண்ணின் விழிகளில் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டதைப் போல் ஓர் திடுக்கிடல்! பின் ஏதோவொரு ஏமாற்ற பாவனையுடன் அவள் விழிகள் இமைக் கவிழ்ந்துகொண்டது.


ஏனாம்? 


குழப்பத்துடன் பேசிக் கொண்டிருந்தப் பெரியவர்களைப் பார்த்தபடி அருகே செல்ல, “ஓ! சரி சரி பரவாயில்லை. உங்களுக்கும் ஆல் தி பெஸ்ட். நல்லதே நடக்கட்டும்.” என்று ‘ஷராரா’வின் அம்மா இவன் அம்மா நிர்மலாவின் கைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.


கடினப்பட்டு புன்னகைத்துக் கொண்டிருந்த நிர்மலா இவனைக் கண்டதும், “இதோ இவன்தான் என் பையன். இவனுக்குத்தான் பார்க்க வந்தோம்.” என்றுவிட்டு, “நாம பார்க்க வந்தவங்கன்னு நினைச்சு அவசரப்பட்டுட்டேன் அவி. இவங்க பார்த்த அலையன்ஸ் வேறயாம்.” எனவும், 


சுர்ரென கோபமேறியது மாப்பிள்ளைக்கு. அந்தளவிற்கு இவன் உள்ளம் ஷராரா பெண்ணும் விவாக சம்பந்தத்திற்காக தான் இங்கே வந்திருக்கிறாளென ஆணித்தரமாக நம்பி இருந்திருக்கிறது. அதை அவன் உணரத் தானில்லை.


பிரகதி முதலில் அவினாஷைச் சும்மாதான் பார்த்தாள். பின், தான் காண வந்திருக்கும் மாப்பிள்ளை அவனாக இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. அதற்கு தோதாக உள்ளே இருந்த பெண்மணி இவர்களை வரவேற்க, இவர்களும் வரன் பார்க்கும் நிகழ்வின் பொருட்டு வந்திருப்பதாகச் சொல்ல, அவர் தன் மகன் வாசலில் அலைபேசிக் கொண்டிருக்கிறான் என்றதும் ‘அவன்தான்! அவன்தான்!’ என இவளுள்ளம் துள்ளாட்டம் போட்டது. உண்மையில் அப்போது இது தனக்கு விருப்பமில்லா நிகழ்வு என்பதை மறந்துதான் போயிருந்தாள்.


அதனாலேயே அவினாஷை மீண்டும் திரும்பிப் பார்த்தாள். இப்போது மாப்பிள்ளை அவனில்லை என்றதும் ஏமாற்றம் சூழ்ந்துகொண்டது. அவனைப் பார்த்தது (சைட்டடித்தது?) சிறிதே அவமானம் போல் தோன்றியதால் விழி தாழ்த்திக்கொண்டாள். அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும்?


மகனின் கண்டனப் பார்வையைக் கண்ட நிர்மலா, கண்களாலேயே பொறுத்துக்கொள்ள வேண்டினாள்.


தொண்டையைச் செருமிக் கொண்ட அவினாஷ், அருகே நின்றிருந்த பிரபஞ்சனைப் பார்த்து, “மாறின அலையன்ஸ் மாறினதாவே இருக்கக்கூடாதா அங்கிள்?” எனக் கேட்டுவிட்டு, ‘ஷராரா’வின் முகத்தை ஆராய்ந்தான்.


விலுக்கென்று நிமிர்ந்த அவள் விழிகள் இப்போது வியப்பையும் விகசிப்பையும் ஒருங்கே சிந்தியது.


“டேய் அவி!” கடிந்துகொண்டாள் நிர்மலா.


சிறிதும் தயங்காமல், தடுமாறாமல், “எனக்கு இந்தப் பொண்ணுன்னா ஓகேம்மா. இல்லைன்னா நாம கிளம்பலாம்.” என்றவன், ஷராராவின்புறம் ஒரு பார்வையை வீசிவிட்டு நகர்ந்தான்.


பிரகதி குடும்பத்தினர் திகைத்து நின்றிருந்தார்கள். மூளையில் சில நிமிட ஸ்தம்பிப்பு! எத்துணை அடாவடிக்காரனாய் இருக்கிறான் இவன்!


இருபுறமும் தர்மசங்கடமான சூழ்நிலை.


நிர்மலா, “மன்னிச்சுக்கோங்க ஸார்… அவன் எப்பவும் இப்டியில்லை. ஸாரி…” என்று விடைபெறும் விதமாய்த் தலையசைக்க,


பிரகதி குனிந்து பாட்டியின் காதில் ஏதோ சொன்னாள். சஞ்சலத்துடன் அவளை ஏறிட்டவர், நிர்மலாவிடம் திரும்பி, “கொஞ்சம் பொறும்மா. நாங்க பேசிட்டு சொல்றோம்.” என்றுவிட்டு தன் மகனையும் மருமகளையும் ஓரமாய் அழைத்துப் போனார்.


நிர்மலாவிற்கும் இச்சூழ்நிலையை எப்படி சமாளிப்பதென்று தெரியவில்லை. திருமணம் வேண்டாம் என்று தவிர்த்த மகனை இவள்தான் வற்புறுத்தி இன்றைய விவாகச் சம்பந்தத்தைப் பார்க்க அழைத்து வந்திருந்தாள். இத்தனை வருடங்கள் தட்டிக் கழித்தவன் இன்று பார்த்தவுடனேயே ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்கிறான். ஆக, அவினாஷின் மேல் கோபம் கொள்ளவும் வழியில்லை. 


இவள் மேலும் தவறிருக்கிறது. பின்னால் வரும் பெண்ணைப் பாராமல், அவசரப்பட்டு அவர்களை அழைத்துப் பேசியது இவள் தவறல்லவா? ஒருவேளை இதுதான் தெய்வ சங்கல்பம் என்பதா? இப்படியாக ஏதேதோ சிந்தித்து தவித்துப் போய் நிற்கையில், முகம் முழுவதும் உண்டானப் பிரகாசத்துடன் பிரகதியின் குடும்பம் வந்தது.


நிரஞ்சனா சொன்னாள். “எங்கப் பொண்ணுக்கும் உங்கப் பையனைப் பிடிச்சிருக்குது. நாம மேற்கொண்டு பேசலாமா?”


நிர்மலா இதை எதிர்பார்க்கவில்லை. தன் மகன் சொன்னதற்காக ஏதோ கண்துடைப்பிற்கு பேசுகிறார்கள் என்று நினைத்திருக்க, இப்போது காட்சி மாறியதைச் சட்டென ஜீரணிக்க முடியவில்லை.


‘முதலில் அவர்கள் என்ன ஜாதி? குடும்பம் எப்படிப்பட்டது?, பெண் குணம் எப்படி? வரதட்சணையாக என்ன வரும்?’ இப்படி எதுவுமே தெரியாமல் எப்படி சம்மதம் சொல்வது?


2100லும் நம் மக்களின் இவ்வித எதிர்பார்ப்புகள் கிஞ்சித்தும் மாற்றம் கொள்ளாது! சந்திரனில் போய் ஜல்லியடித்தாலும் சாதி, மதமும் சாஸ்திரமும் ஒழியாது!


நிர்மலா மனக்குழப்பத்துடன் நின்றிருக்க, ‘ஷராராவைப்’ பார்வையிடும் நோக்கத்துடன் அவளுக்கு எதிரே சற்று தூரமாய் வந்த அவினாஷிடம் கையசைத்தான் பிரபஞ்சன்.


அவன் அருகே வந்ததும் புன்னகையுடன் சொன்னான். “மாறினது மாறினதாவே இருக்கட்டுமேன்னு முடிவெடுத்திருக்கோம்.”


பளிச்சென சிரித்தான் அவினாஷ். சிரிப்போடே அவளைப் பார்க்க, இத்தனை நேரம் அவனையே விழியெடுக்காது பார்த்திருந்த ஷராரா இப்போது வேறெங்கோ பார்த்தது. ஆனாலும் அந்தக் கண்கள் சிரிக்கின்றன என்பதை அவினாஷ் உணர்ந்தான்.


அப்போது பிரபஞ்சனுக்கு அழைப்பு வர, லேசாய் முகம் மாறி ஓரமாகப் போய் இரு நிமிடங்கள் பேசிவிட்டு வந்தான். “நாங்க பார்க்கணும்னு நினைச்ச வரன் இங்கே வரலையாம். அவங்களுக்கு வேற இடம் அமைஞ்சிட்டதா சொல்லி ஸாரி கேட்கிறாங்க.”


உடனே அபிராமியின் முகம் மலர்ந்தது. “இதைத் தான் தெய்வ சங்கல்பம்ன்னு சொல்றது பிரபு.”


பிரபஞ்சன் சொன்னதைக் கேட்ட நிர்மலாவிற்கும் அதே எண்ணம்தான். சற்றுமுன் இவளும் கூட இதையே தானே நினைத்திருந்தாள்!


அவினாஷ் புரியாத பாவனையில், “தெய்வ…” என்று இழுக்க,


“கடவுள் செட்டிங்!” என்று அவனுக்கு தெளிவுபடுத்தினாள் பிரகதி.


அப்போது கோவில் மணி இசைக்க, அனைவரின் அகமும் முகமும் மலர்ந்து, நிறைந்து போனது. 


“சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!” எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் அபிராமி.

இசைக்கும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25