ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -1.

அத்தியாயம் 1


"ஹேய் மியா!" தன் புதுமனைவியின் ஈரக்கூந்தலை கையிலிருந்த ஹேர் டிரையரால் உலர்த்திக் கொண்டிருந்த ரித்திஷ் அழைத்தான்.


"ஹ்ம்ம்…" - கூந்தலுக்கிடையே உலாவும் அவன் விரல்கள் தந்த இதத்தில் விழிமூடியிருந்த மியா!


"நேத்து பார்ட்டிக்கு வந்த உன் ஃப்ரெண்ட் பத்தி சொல்றேன்னியே?"


"நீதான் நேத்து ஃபுல்லா என்னை சொல்லவே விடலயே…"


அசடு வழிந்தவன், "ஹேய் சரி சரி ரொம்ப ஓட்டாத! இப்ப சொல்லு கேட்கறேன்." என்றான்.


இருவருக்கும் பத்து நாட்கள் முன்பு திருமணம் முடிந்திருந்தது. தேனிலவுக்கு செல்லுமுன் நண்பர்கள் கேட்ட ட்ரீட் தந்துவிட வேண்டி, நேற்று வீட்டிலேயே சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர்.


அதற்கு வந்திருந்த ஒரு பெண்ணைப் பற்றி தான் தற்போது தம்பதிகளுக்கிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணத்தன்றும் இவனிடம் அவளைக் குறித்து தீர்க்கமானப் பார்வையோடு ஏதோ சொன்னாள் மியா. நேற்றும் அதே போன்ற பார்வையில், "இவங்க…" என்று என்னவோ சொல்ல வந்தவளை மற்றொரு விருந்தினரின் வரவு தடை செய்திருந்தது.


இப்போது அவள் இவர்களுக்கு தந்த பரிசுப் பொருள் கண்ணில்படவும், நினைவு வந்தவனாக அவளைப் பற்றி விசாரித்தான்.


கூந்தலில் அலைந்து கொண்டிருந்த அவன் கரத்தைத் தடுத்த மியா, எழுந்து ஹேர்டிரையரின் ஸ்விட்சை அணைத்துவிட்டு வந்து, சோபாவில் வாகாக சம்மணமிட்டு அமர்ந்துகொண்டாள். கணவனும் அவளைப் பின்பற்றி அவளருகே அமர்ந்துகொள்ள, அவன் தோள் சாய்ந்துகொண்ட மியாவிடம் சற்று நேரம் மௌனம்!


எப்போதும் துறுதுறுவென சுழன்றபடியே இருக்கும் மியாவின் விழிகள், திடுமென பெரியவளாகிப் போனது போல் ஏதோ ஓர் தீர்க்க பாவனையில் மின்னியது.


ஆழ்ந்த சுவாசத்தோடு சொன்னாள். "எங்க அக்கா ப்ரியாவோட ஃப்ரெண்ட் தான் இந்த யமிகா, ரித்தி."


"வாட்? ப்ரியாக்கா ஃப்ரெண்டா? பார்த்தா அப்டி தெரியலயே?" என்று வியந்தவன், "ஒருவேளை சந்தூர் மம்மியோ?" என்று விளையாட்டாகக் கேட்டான்.


மியாவிற்கே இருபத்தேழு வயதாகிறது. இருந்திருந்து இப்போதுதான் இவளுக்கு திருமணம் பற்றிய எண்ணமே வந்திருந்தது. மியாவின் அக்கா பிரியாவிற்கு இவளை விட ஐந்தாறு வயதேனும் அதிகமாயிருக்கும்.


அவளின் தோழி என்றால் இந்த யமிகாவிற்கும் அவள் வயதேதான் இருக்க வேண்டும். ஆனால் அவளைப் பார்த்தால் இன்றும் மியாவை விடவும் சிறிய பெண்ணாகத்தான் தெரிகிறாள். பால்நிற தேகம்; வட்ட விழிகள்! யாரையும் வசீகரிக்கும் சின்ன முகம். நான் என்றும் வாடவே மாட்டேன் என்பது போல் உதட்டில் சதா ஒட்டிக்கொண்டிருக்கும் ஓர் மென்னகை! 


ரித்திஷின் நண்பர்களில் ஒருவன் இந்த முப்பது வயதிலும் திருமணமே வேண்டாமென இருந்தவன், இவர்கள் திருமணத்தில் அந்த யமிகாவிற்கு நூல்விட்டுக் கொண்டிருந்தான். அதையும் மற்ற நண்பர்கள் கேலி பேசி கலாட்டா செய்தது ரித்திஷிற்கு தெரிந்திருந்தது. 


ஆக அந்த யமிகா… பிரியாவின் தோழி எனில், கண்டிப்பாக திருமணம் ஆனவளாகத்தான் இருக்க வேண்டும். இதை தன் நண்பனிடம் சொன்னால் அவன் முகம் என்னமாய் டாப்பிங்ஸ் இல்லா பீட்ஸாவாக மாறும் என்று மனக்கண்ணில் ரசித்துச் சிரித்துக்கொண்டான் ரித்திஷ்.


"ஹாஹா… யமுனாக்காவை ஃபர்ஸ்ட் பார்க்கற எல்லாரும் இப்டி தான் கேட்பாங்க." 


"வெய்ட்! வெய்ட்!! இப்ப நீ என்ன பேர் சொன்ன?"


"யமுனா சொன்னேன். ஏன்?"


" அப்போ யமிகா?"


"அய்ய… யம்மி அக்கா தான், யமிக்கா ஆகிட்டாங்க." 


"ஓஹோ! சரி உங்க யமுனாக்கா கிட்ட வேறென்ன ஸ்பெஷல்?"


அவன் முகத்தை ஒருவித லயிப்போடு பார்த்தவள், "காதல்!" என்றாள். 


அப்படியாவென புருவங்கள் தூக்கியவனை அருகே இழுத்து தாடையை இரு உள்ளங்கைகளிலும் தாங்கி, தாடியை பெருவிரல்களால் வருடி, அவன் விழிகளிரண்டையும் தன் விழிகளுக்குள் சுருட்டிக்கொள்ள முயன்றபடியே, "நாம ரெண்டு பேரும் கூட யமுனாக்கா மாதிரி காதலிக்கணும் ரித்தி…" என்று உதட்டுக்கு வலிக்காமல் மென்மையாக சொன்னாள் மியா.


                                    ******


தன் அலைபேசியில் புலனச் செய்தி வந்ததற்கு அடையாளமாகக் கேட்ட ரிதத்தில், அத்தனை நேரம் வாழ்வியலின் அழகியல் எனும் ஆங்கில டாகுமெண்டரியைப் பார்த்து ரசித்திருந்த ப்ரித்வி, அதன் மீதிருந்த கவனம் கலையாமலேயே, அலைபேசியின் முகப்புப் பக்கத்தில் வந்திருந்த குறுஞ்செய்தியின் அறிவிப்புப் பட்டியலைப் பார்த்தான்.


யமுனாவிடமிருந்து ஒரு தகவல் பெறப்பட்டதாகக் காட்டியது அந்த சின்னத்திரை! அவசரகதியில் டாகுமெண்டரியை மறந்தவன் சுறுசுறுப்பாகி யமுனாவின் தகவலைத் திறந்தான். 


'வருகிறேன்.' என்றது தகவல்!


நாம் சற்றுமுன்னர் பார்த்த மியாவின் பள்ளிக்கால தோழன் இந்த ப்ரித்வி. எம் பார்ம் முடித்திருப்பவன் நகரில் பிரதான வீதியில் பெரிய பார்மஸி வைத்திருக்கிறான். கடந்த இரு மாதங்களாக, சரியாக சொன்னால் மியாவின் திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கும் போதிருந்துதான் மியா இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தியிருந்தாள்.


ஆண்களுக்கான திருமண வயதைத் தொட்டிருக்கும் ப்ரித்விக்கு, யமுனாவைப் பார்த்த கணத்தில் இருந்தே காதல் கன்னாபின்னாவெனப் பற்றிக்கொண்டது. அதைவிட தன் மீது படரும் இவன் பார்வையை உணர்ந்தேயிருந்த யமுனா, இவனைத் தன் சின்னத்தம்பியாக பாவித்து ஒவ்வொரு முறை இவன் காதல்(?) பார்வையை நிராகரிப்பதும் மலையளவு எரிச்சலை மூட்டிக்கொண்டேயிருந்தது ப்ரித்விக்கு!


இவனும் எவ்வளவோ முயற்சித்துவிட்டான். யமுனா மசிவதாகக் காணோம். மாறாக, இவன் அவளுக்கு தம்பி என்பதை மணிக்கொருமுறை இவன் மூளைக்குள் ஏற்றிவிடத் தான் பார்க்கிறாள்.


முதன்முதலாக யமுனாவைப் பார்த்துவிட்டு விழிவிரித்து நெஞ்சின் மீது கை வைத்துக்கொண்டான் ப்ரித்வி. 'இவள் தான், இவள் தான்! என் கனவுக்காதலி இவள் தான்!!' என உள்ளுக்குள் ராப் ஆட்டம் போட்ட காதல் அணுக்கள், மியா இவனிடம் அவளை தன் அக்காவின் தோழி 'யமுனா அக்கா. எனக்கு மட்டும் யமிகா.' என்று அறிமுகப்படுத்தியபோது காய்ச்சல் கண்ட காகத்தைப் போல் சற்றே சுணங்கிதான் போனது.


சுணங்கிப் போன இவன் முகத்தைப் பார்த்து சின்னதாய் சிரித்த யமுனா, தன்னை பரிகசிக்கிறாளென நினைத்துக் கொண்ட ப்ரித்வி, 'ஏன் பெரியவளாக இருந்தாலென்ன? காதலிக்கக் கூடாதா?' என காய்ச்சல் கண்ட காதல் அணுக்களை இன்சுலின் செலுத்தி மீண்டும் ராப் ஆட்டம் போட வைத்துவிட்டான்.


இவன் நோக்கம் புரிந்த யமுனா இவனைத் தவிர்க்க, அவளின் நிராகரிப்பை ஏற்க மனமில்லாத ப்ரித்விக்கு அதுவே மீண்டும் மீண்டும் அவளிடம் காதலை யாசிக்கச் சொன்னது.


முதல் சில நாட்கள் கல்யாணத்திற்கானப் ‘பர்சேஸிங்’ என்று மியா அழைத்திருந்ததால் தான் யமுனா வந்திருந்தாள். அந்த இரு நாட்களும் பார்வையாலேயே காதல் பேசிக்கொண்டிருந்தவன், அன்று வாய்மொழியாக சொல்லிவிட வேண்டும் என்று மியாவிற்கு தெரியாமல் யமுனாவை தனியே அழைத்துக் காதலை சொல்ல, அவளும் தன்‌ மறுப்பை சொன்னாள். 


இவன், "ஓவரா சீன் காட்டாத யமுனா!" என்று வார்த்தைகளை உணராமல் உரைக்க, இவன் திசைக்கே பெரிய கும்பிடு போட்டவள் அதன்பின் ஊருக்கு புறப்பட்டுவிட்டாள். 


மியாவின் திருமணத்தில் கூட இவனிடம் பேசவில்லை. இவனாக ஓரிரு முறை பேச எத்தனித்தும் கூட, நாசுக்காக தவிர்த்திருந்தாள். அதையும் மீறி அன்று பேசியதற்கு மன்னிப்பு வேண்டியிருந்தான். அதையும் சிறு புன்னகையில் தாண்டிச் சென்றிருந்தாள் யமுனா. 


மீண்டும் நேற்று பார்ட்டியில் பார்த்த போது மதிய உணவிற்கு அழைத்தான். நேரமிருந்தால் சொல்கிறேன் என்றிருந்தாள் அவள். வருவாளோ அல்லது வழக்கம்போல் நிராகரிப்பாளோ என்று தவித்துப் போனவனின் காதல் அணுக்கள், தற்போதைய குறுஞ்செய்தியில் அவளின் 'வருகிறேன்' என்ற ஒற்றைச் சொல்லில் 'சிங்கம் போல ஸ்டெங்க்த் எனக்கு!' எனும் சிறுவனாய் மாறிப்போனது.


அந்த உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியின் தனியறையில் அமர்ந்திருந்தான் ப்ரித்வி. பிரத்யேகமாக உடையுடுத்தியிருந்தவன் சிகையை கோதிக் கொண்டிருந்தான். 


எண்ணங்கள் யமுனாவின் பின்னேயே ஓடியது. அவள் ஞாபகம் வரும்போது கூடவே பன்னீர் பூவின் ஞாபகமும் வந்துவிடும். தலையில் பூச்சூடாமல் ஒருநாளும் அவளை இவன் பார்த்ததேயில்லை. எந்நாளும் ஐந்து, ஆறு பன்னீர் பூக்களை ஒரேயொரு இலையோடு சேர்த்து, குட்டிப் பொக்கே போல் செய்து தலையில் சூடியிருப்பாள். இப்போது இவன் ஞாபகத்திலும் பன்னீர் பூ வாசம்! 


இவனுக்கு வயது இருபத்து ஏழு. அவளுக்கு முப்பத்து இரண்டு. ஐந்து வருட வித்தியாசம்.


இருக்கட்டுமே! என்ன வந்துவிட்டது இப்போது? இவன் சமீபமாய் படித்த நாவலாசிரியர் தன்னை விட எட்டு வயது மூப்புடைய பெண்ணின் மேல் காதல் கொண்டிருந்தாராம். அவளின்மேல் கொண்ட மையலாலேயே அக்கதையை எழுதியதாய்ச் சொல்லியிருந்தார். கதையில் நாயகியை பத்து வயது பெரியவளாகக் காட்டியிருப்பார். அக்கதை எழுதிய காலகட்டம் 1955. 


அழகைப் பாருங்களேன்… அக்கதை நாயகியின் பெயரும் யமுனா. இவன் மனதைக் கவர்ந்தவளின் பெயரும் யமுனா. என்ன ஒரு தற்செயல்!


அப்போதே இது போன்ற நிகழ்வு நடந்திருக்கும்போது, இப்போது இன்னமும் இதெல்லாம் சகஜமாகிவிட்டதல்லவா? அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பவர்கள் அருகி வரும் காலம் இது. அதுவும் இவனைப் போல் மேல்மட்ட சமூக ஆட்களின் வாழ்வில் இதெல்லாம் மிகச் சாதாரணம்.


எனவேதான், வயது வித்தியாசத்தை பெரிதுபடுத்தாமல் அவளை சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்து அமர்ந்திருக்கிறான். வந்து என்ன சொல்லப் போகிறாளோ என இவன் நகத்தைப் பதம் பார்த்து கொண்டிருக்க, வந்தாள்; சிரித்தாள்; இவன் வரவழைத்த உணவினைச் சாப்பிட்டாள். 


பின், "தம்பி மா, வரவர பேக் பெய்ன் அதிகமாகற மாதிரி இருக்குது. வேறொன்னுமில்ல மெனோபாஸ் ஆக இன்னும் அஞ்சாறு வருஷம் தானே இருக்குது? அதனால இருக்கும் நினைக்கறேன். நீ கொஞ்சம் சைட் எஃபெக்ட் வராத மாதிரி ஏதாவது மெடிசின்ஸ் தர்றியா?" எனவும், ப்ரித்வி தன் காதல் அணுக்களைக் காயம்படாமல் பார்த்துக்கொள்ள படாதபாடு பட்டுப் போனான்.


"யமுனா, இப்டிலாம் பேசினா நான் உன்னை விட்டுடுவேன்னு நினைக்கறியா?" எனக் காட்டமாக கேட்க,


"ஷ்ஷ்! ரெஸ்பெக்ட் ப்ரித்வி! மியா முன்னாடி நான் எதுவும் வெளிக்காட்டிக்க விரும்பல. அதனால உன்கிட்ட இயல்பா இருக்கணும்னு நீ ஒருமைல பேசறதைக் கண்டுக்காம இருந்தேன். அதுக்காக எப்பவும் அப்டியே இருப்பேன்னு நினைக்காதே!" என்று நிமிர்வுடன் கண்டிப்பைக் காட்டினாள் யமுனா.


அவளின் ஊடுருவும் தீர்க்கப் பார்வையில் தத்தித் தாவியது இவன் சொற்கள். "அ… வந்து… யம்… யமுனா… ப்ச்! நீங்களே சொல்லுங்க பெரிய பொண்ணைக் காதலிக்கறதென்ன அவ்ளோ பெரிய தப்பா?"


நிதானமாக முள் கரண்டியைக் கீழே வைத்து விட்டு, தண்ணீர் பருகியவள் டிஷ்யூவால் அதரங்களை ஒற்றிவிட்டு சொன்னாள். "தப்பில்ல ப்ரித்வி." எனவும் சற்று பிரகாசமடைந்த ப்ரித்வியின் காதல் அணுக்கள், அவள் அடுத்து சொன்னதில் சுற்றம் மறந்து எரிமலையாய் வெடித்துவிட்டது.


"தப்பில்ல ப்ரித்வி! அபத்தம்; அதுவும் நீ என்னை விரும்புறங்கறது படு அபத்தம்! உன் அக்கா வயசுல…" என்றவளை இடைமறித்து,


பொறுமை இழந்தவனாக பட்டென்று எழுந்தவன், "ஏய் நிறுத்துடி! என்ன சும்மா சும்மா அதையே சொல்லிட்டிருக்க? இருந்தா என்ன இப்போ? ஹான்? யாரு இங்கே நம்மளைக் கேக்க போறா? இங்கே பாரு யமுனா, உனக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலயா சொல்லு. அதை விட்டுட்டு உப்பு பெறாத காரணத்தையெல்லாம் சொல்லி மனுஷனைச் சாவடிக்காத! இதைத் தவிர நீ என்னைத் தவிர்க்கறதுக்கு வேற என்ன காரணம் சொன்னாலும் சரி. நான் ஏத்துக்க தயாரா இருக்கேன். அப்டி ஒண்ணும் பிடிக்காத பொண்ணைக் கட்டாயப்படுத்தற அளவுக்கு மோசமானவன் இல்ல நானு! நானும் டீசண்டான ஃபேமிலி பையன்தான்." என்று அவளுக்கு பேசவே இடங்கொடுக்காமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுபவனை இமைக்காது பார்த்திருந்த யமுனா, எதுவுமே சொல்லாமல் மியாவை அழைத்தாள்.


யாரை வேண்டுமானாலும் கூப்பிடு. கவலை இல்லை. எனக்கு வேண்டிய பதிலை மட்டும் சொல் என்று தடித்த பார்வை பார்த்திருந்தான் இவன். 


திருமண வீட்டில் யமுனாவிடம் மன்னிப்பை வேண்டியிருந்தவன், நேற்று மியா வீட்டு பார்ட்டியில் மீண்டும் அவளிடம் பேசிப் பார்க்க எண்ணி குறுஞ்செய்தி அனுப்பினான். அதைப் பார்த்துவிட்டு, 'இன்னும் நீ இதை விடவில்லையா?' என்பதைப் போல் ஓர் பார்வை பார்த்தாள். இவனும் தன் பிடிவாத முகத்தைக் காட்டியிருந்தான். 


அதன்பின்னரே நேற்று இவன் அழைத்ததும் இதற்கு முடிவுக் கட்டிவிடலாம் என்றெண்ணி வந்திருந்தாள் யமுனா. இனி எப்படி எடுத்துச் சொன்னாலும் ப்ரித்வி புரிந்துகொள்ள மாட்டானென தெரிந்ததும் மியாவை அழைத்துவிட்டாள்.


சற்று நேரத்தில் மியா வந்தாள். "ஹாய் கைஸ்!" என்றபடி யமுனாவின் அருகே அமர்ந்தவள், "யமிகா எனக்கு இட்டாலியன் வொண்டர் + கேரமல் சாஸ் + அல்மாண்ட் நட்ஸ் டாப்பிங்ஸ்." என்று அவள் விரும்பும் ஐஸ்கிரீம் வகையை சொல்ல, எப்போதும் போல் முறுவல் மாறாதிருந்த யமுனா, மியா கேட்டதை ஆர்டர் செய்தாள்.


ப்ரித்வியின் கடுகடுத்த முகம் கண்ட மியா, என்னவென்று யமுனாவைப் பார்க்க அப்போதும் அவள் முகத்தில் புன்னகை வாடவில்லை. அதில் ப்ரித்விக்கு வயிறெரிந்திருக்க வேண்டும்.


"உனக்கு நக்கலா இருக்குதா யமுனா? யமுனா யமுனா'ன்னு உன் பின்னாடியே நாய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன்ல? சுத்தல்ல விடற உனக்கு சிரிப்பா தான் இருக்கும்." என்று காட்டமாய் சொல்ல, 


அவனைத் திகைப்பாக பார்த்த மியா, அடுத்த நொடி யமுனாவிடம், "ஸாரி யமிகா…" என்று மன்னிப்பை வேண்டினாள்.


"நான் கிளம்புறேன் மியா. டிரெயினுக்கு டைமாச்சு!" என்று நிதானமாக எழுந்துகொண்டாள் இவள்.


"ஏய் எனக்கு பதில் சொல்லிட்டு போடி!" யமுனா தன்னை அலட்சியம் செய்வதாக நினைத்து ஆவேசம் குறையாமல் கேட்டான் ப்ரித்வி.


"அடங்குடா ப்ரித்வி!" என்ற மியா, "ஸாரி யமிகா… நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்." என்று வருத்தமாக மொழிந்தாள்.


"ம்ம்… நெக்ஸ்ட் வீக்எண்ட் ஜனனி கல்யாணத்துல பார்க்கலாம். நீயும் அதுக்குள்ள ஹனிமூன் முடிஞ்சு வந்துடுவ இல்ல?"


"ஹ்ம்ம் கா. கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுவேன்." 


திருப்தியாக புன்னகைத்த யமுனா ப்ரித்வியிடம், "ஸீ யூ ஸூன், ப்ரித்வி." என்றுவிட்டு புறப்பட்டாள்.


அதுவரை அமைதியாக இருந்த ப்ரித்வி, "ஆஆ!!! எருமைக்கு எட்டாம் பங்காளியா பொறந்தவளே!" என்று அலறியபடி வலித்த கைப்பகுதியைத் தேய்த்துவிட்டான். 


மியா தான் இவன் யமுனாவை மரியாதையற்றுப் பேசியதில் கடுப்பாகி, வாயைத் திறக்கக் கூடாதென்று எச்சரிக்கும் விதமாக, யமுனா அறியாவண்ணம் கையின் அடிப்பகுதியில் வசமாக பிடித்து கிள்ளியிருந்தாள். இன்னும் சற்று நேரம் அழுத்தியிருந்தால் கால் கிலோ சதை கையோடு வந்திருக்கும்.


"கொரில்லா கோமாளி! எத்தனை நாளா யமிகாவை இப்டி டார்ச்சர் பண்ற?"


"டார்ச்சர் கீர்ச்சர்னு சொல்லாத மியா. ஐ ட்ரூலி லவ் ஹர்!" என்றவனைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டாள் மியா.


"ஏய் என்ன? நீயும் பெரிய பொண்ணுனு லெக்சர் குடுக்க போறியா?" என அவன் எரிச்சலாக,


"நான் அப்டிலாம் சொல்ல மாட்டேன்னு உனக்கே தெரியும் ப்ரித்வி. இப்ப யமிகா எங்க போறாங்கன்னு உனக்கு தெரியுமா?" என இவளும் கடுப்புடனே கேட்டாள்.


"என்ன கேள்வி இது? கேரளா போறா!"


"முதல்ல அவ இவ'ன்னு பேசறதை நிறுத்து! எதுக்கு கேரளா போறாங்க தெரியுமா?"


"ஏன் நீ லூசு மாதிரியே கேள்வி கேட்கற மியா? அவ வேலை அங்கே இருக்குது, அதனால போறா!"


"இல்லடா கஸ்டர் ஆயில்! அவங்க புருஷன் வீட்டுக்கு போறாங்க." என்றதும் ப்ரித்வியின் காதல் அணுக்கள் ஸ்மரணையற்று ஸ்தம்பித்து போயின.


"யம்… யமுனா மேரீட்-ஆ? நீ ஏன் சொல்லல மியா?"


"ப்ரியாக்கா ஃப்ரெண்ட்னு சொன்னேனே… அப்ப இன்னும் கல்யாணம் ஆகாதவங்களாவா இருப்பாங்க? சரி அதுதான் புரியாத வேஸ்ட் எக்-ஆ (கூமுட்டை) இருந்திருக்கன்னா, கழுத்துல தாலி இருக்கறது கூடவா உனக்கு கண்ணு தெரியல, கபோதி ஃபெல்லோ?"


மியாவின் திட்டு வார்த்தைகள் கூட உறைக்காத உறைநிலையில் இருந்தான் ப்ரித்வி!


காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை...

முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு!

தொடரும்🍁🍁🍁



Comments

  1. ரொம்ப நாளைக்கு அப்புறமா படிக்குறேன்.. படிக்க படிக்க ஜாலியா இருக்கு.. தேங்க்ஸ்க்கா 😍

    ReplyDelete
    Replies
    1. Thanks for ur comment 💞💞 நானும் ஹேப்பி🪻🪻

      Delete

Post a Comment

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)