Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஆசிரியர் தின வாழ்த்துகள்

 

ஆசிரியர் தின வாழ்த்துகள்

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், மகனோடு வந்துவிட்டேன். பேத்திகள் இருவரோடும் என் மீத வாழ்க்கை ஓர் நதியைப் போல அமைதியாகவே செல்கிறது. 


இன்று அருகிலுள்ள பூங்கா வரை சென்று வருகிறேனென, மருமகளிடம் கூறி விட்டு... காலணிகளை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். பாழாய்ப் போன மூட்டு வலி இருபதடி தூரம் கூட நடக்க விடவில்லை. 


பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்புற சாலையைக் கடந்தால் பூங்கா வரும். எனவே, பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து செல்ல எண்ணி போய் அமர்ந்தேன். பேருந்து வருவதும், காத்திருந்த மனிதர்கள் அவசர கதியில் சென்று தொற்றிக் கொள்வதும், மீண்டும் பேருந்து நிறுத்தம் ஆட்களால் நிறைவதுமாய்... அந்த காலை நேரம் பரபரப்பாய் இருந்தது.


அனைத்து நிகழ்வுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் பேச்சைக் கேட்காத மனம்... பிடிவாதமாய் என் கடந்த காலத்திற்குள் சென்று விழுந்தது.


ஆறு வருடங்களுக்கு முன்பு வரை… இதோ என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நானும், காலை அலாரத்தின் அழைப்பில் எழுந்து… வீட்டில் உள்ள அனைவருக்கும் வேண்டிய தேவைகளை முடித்து, நிற்க நேரமில்லாமல் அவசர கதியில் கிளம்பி… பேருந்தைப் பிடிக்க ஓட்டமாய் ஓடி, பேருந்தில் அனைவரின் நெரிசலில் சிக்கி… இரண்டு நிறுத்தங்கள் தள்ளி இருக்கும் பள்ளியின் வாசலில் இறங்கி, மூச்சு வாங்கிக் கொள்ளவும் நேரமில்லாமல் சரியான நேரத்திற்கு உள்ளே சென்று கையெழுத்திட்டு விட்டு… பின் ஆசிரியர்களின் ஓய்வறை சென்று சற்று ஆசுவாசப்படுத்தி கொள்வேன்.


அன்றும் அதே போலவே… பதினொன்றாம் வகுப்பின் முதல் பீரியடிற்கான கணக்குப் பாடத்திற்கு தயார் படுத்திக் கொண்டு, வகுப்பிற்கு சென்றேன். அதுவரை ஆட்டமும், கூச்சலுமாய் இருந்த மாணவ, மாணவிகள் என் வருகையில் வகுப்பில் ஓர் திடீர் நிசப்தத்தை உருவாக்கினர். காலை வணக்கத்திற்கு பின் அன்றைய பாடங்களை நடத்த ஆரம்பித்தேன். 


திடீரென மாணவிகளிடையே சலசலப்பு!


"இங்க நான் பாடம் நடத்தும் போது நீங்க என்ன தனியா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க?" என முன் வரிசையில் இருந்த ஜமீமா மற்றும் ஶ்ரீமகள் அமுதினி இருவரையும் பார்த்து கேட்டேன்.


"மேம்… இன்னிக்கு டீச்சர்ஸ் டே! சோ, ஸ்டூடண்ட்ஸ் நாங்க உங்களுக்கு சின்ன சர்ப்ரைஸ் வச்சிருக்கோம்." என்று தயங்கி தயங்கி ஒரு சிறு புன்னகையோடு கூறினாள், ஜமீமா.


"சர்ப்ரைஸா?"


"எஸ் மேம்…" என்று என்னருகில் வந்த ஶ்ரீமகள், உள்ளங்கைக்குள் அடங்கி விடும் சிறிய இளஞ்சிவப்பு வண்ண வாழ்த்து அட்டையை தந்தாள்.


"இது நம்ம 'கவிதாயினி' உமா உங்களுக்கு எழுதினது மேம்." என்றாள்.


வாங்கி பார்க்க, உள்ளே இரு வரிக் கவிதை உமாவின் முத்தான கையெழுத்தில் ஓடியிருந்தது. 


'கற்று தந்தாய், என்னறிவு முற்று பெற!

பெற்றுக் கொண்டேன் - நான் வாழ்வில் வெற்றி பெற!!"


ஆசிரியர் தின வாழ்த்துக்கள் - உமா'


உமாவைப் பார்த்து, "நைஸ்!" என்றேன், பாராட்டுதலாய்..!


வெட்க புன்னகையோடு தலை சாய்த்து, தோள்களை சுருக்கிக் கொண்டு... என்னை ஓரப் பார்வை பார்த்திருந்தாள்.


இது நம்ம க்ளாஸ் 'சூப்பர் சிங்கர்', 'மொக்க ராஜா' சித்துவோடது!" என்று சிறிய மெமரி கார்டு தந்தாள், ஜமீமா.


அப்போது தான் ஓரளவு புழக்கத்திற்கு வந்திருந்தன, அலைபேசியில் ஸ்மார்ட் ஃபோன் வகைகள்!


அதை வாங்கி முன்னும் பின்னும் புரியாமல் பார்த்திருந்த என்னருகே வந்த சித்து… 'ஈஈஈ' என பற்பசை விளம்பரம் நடத்தி விட்டு, "அத இதுல போட்டா தான் கேக்க முடியும் மேம்" என்று கை மறைவில் இருந்த அலைபேசியை எடுத்துக் காட்டினான்.


"ஸ்கூல்ல மொபைல் நாட் அலௌட்னு தெரியாது?" என்று கண்டிக்கும் பாவனையில் குரல் உயர்த்தினேன்.


"நோ மேம். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான். அதுவும் இது கேக்கறதுக்காக தான். சிம் கார்டு கூட இல்ல மேம்…" என்றவன், என் கையிலிருந்த மெமரி கார்டை வாங்கி… நான் பார்த்திருக்கையிலேயே மடமடவென அலைபேசியில் பொருத்தி, தொடுதிரையை நான்கைந்து முறை தடவி, பாடலை ஒலிக்க விட்டான்.


அனைவரும் கேட்டு ரசித்த சித்துவின் மனதை மயக்கும் குரல்,


'கனவுகள் பழகிய நாட்களை

நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே

இனிவரும் அழகிய நாளிலும்

உன்னைப் பாடுவோம் பாடுவோம்

ஆசிரியத் தோழியே...

உன்னைப் பாடுவோம்...' என்று ஒலித்தது. கடைசி வரியை மாற்றிப் பாடியவனின் திறமையை வியந்து கொண்டிருக்கும் போதே...


'அஞ்சும் அஞ்சும் பத்து!

எங்க டீச்சர் தானே கெத்து!!'


'மிக்ஸர்ல இருக்கும் பருப்பு!

எங்க டீச்சரப் பார்த்தா வரும் பொறுப்பு!!'


'கம்ப்யூட்டர்ல வரும் எக்ஸெல்!

எங்க மேம் வந்தாலே மெர்சல்!!' என்று இன்னும் அவனின் உளறல் பஞ்ச்களை கேட்க முடியாமல் கண்ணீர் வரும் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தேன்.


"இது நம்ம 'உர்ராங்குட்டான்' ஜீவா எழுதினது மேம்!" என்ற ஶ்ரீமகளின் கரங்களில் நீல வண்ணக் காகிதம். நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து இன்று நம் குழந்தைகளுக்கு புதிதாய் அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கும்… அஞ்சல் அனுப்பும் நீல வண்ணக் காகிதம்.


ஜீவா… அமைதியின் மறுஉருவம். படிப்பில் பின்தங்கிய மாணவன். ஆனால், வம்பு செய்பவர்களை தன் ஒற்றைப் பார்வையில் தூர நிறுத்தி விடுபவன். கடிதத்தை வாங்கி பிரித்து வாசித்தேன்.


'வணக்கம் மேம். எனக்கு புரியற மாதிரி பாடம் சொல்லி குடுக்க எப்பவும் ரொம்ப மெனக்கெடுவீங்க. உங்க பொறுமைய நான் ரொம்பவே சோதிச்சிருக்கேன். அப்பவும் நான் சரியா படிக்கலனு எத்தனையோ முறை என்கிட்ட கண்டிப்ப காட்டிருக்கீங்களே தவிர... ஒரு முறை கூட வெறுப்ப காட்டினதில்ல. உங்களோட அந்த குணம் தான் என்னை இப்பலாம் கொஞ்சமாவது புக்ஸ புரட்டி பார்க்க வைக்குது. உனக்கு படிக்கறதுல என்ன பிரச்சனைனு கேட்டு... வழிகாட்டியா இருந்துருக்கீங்களே தவிர, நெகட்டிவ்வா பேசி திட்டினதில்ல. உங்களோட அந்த வழிகாட்டுதல் தான் படிப்புல என்னாலான முயற்சிய செய்ய வைக்குது. நிச்சயம் இந்த முறை எக்ஸாம்ல நான் நல்லா ஸ்கோர் பண்ணுவேன். தாங்க்யூ மேம். ஹேப்பி டீச்சர்ஸ் டே - ஜீவா' இவ்வாறாக முடிந்திருந்தது, அக்கடிதம்.


ஜீவாவை நிமிர்ந்து பார்த்தேன். எப்போதும் உள்ள அந்த உம்மணாம்மூஞ்சியில் இதழோரம் சிறியதாய் மலரத் துடிக்கும் புன்னகை!


என் விழிகள் பிரதிபலிக்கும் உணர்வுகளை உங்களால் மொழி பெயர்க்க முடிந்தால்... நிச்சயம் புரிந்து கொண்டிருப்பீர்கள், இது வெற்றியின் போதையென!!!


இன்னுமாய் ஆச்சர்யங்களை வழங்கிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளிடம் என் அன்பையும், நன்றியையும் உரைத்து விட்டு… "ஒரு வழிகாட்டியா இருக்கறதோட, உங்க எல்லாருக்கும் பிடிச்ச டீச்சராவும் இருக்கேன்ங்கறதே பெருமையா இருக்குது. இந்த பள்ளி வாழ்க்கைய திரும்ப ஒரு முறை பாதி அளவேனும் அனுபவிக்கணும்னா அதுக்கு டீச்சர் வேலை தான் சரியானதுனு நினைக்கறேன். அந்த இனிமையான அனுபவம் எனக்கு இன்னிக்கு உங்க மூலமா கிடைச்சிருக்குது." என்றதும் பிள்ளைகளிடம் கைதட்டல்களோடு, ஆரவாரக் கூச்சல்கள்!!!


அன்றைய நிகழ்வுகளிலிருந்து மீள முடியாமல் இருந்த என்னருகே நிழலாடியது. நிமிர்ந்து பார்த்த என்னிடம் ஏதோ சொல்லத் தவிக்கும் பாவனையில் ஒரு பெண் நின்றிருந்தாள். 


என் தலையசைப்பைப் பார்த்து, "மேம்... என்னை ஞாபகம் இருக்குதா? நான் உங்ககிட்ட படிச்ச ஶ்ரீமகள் அமுதினி." என்று அழகாய் புன்னகைத்தாள்.


எனக்கு வியப்பாய் இருந்தது. சுடிதாரில் ரெட்டை ஜடையோடு, அருகே இருக்கும் ஜமீமாவிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கும் ஶ்ரீமகள்… இன்று என் முன்னால் காட்டன் புடவையில் மிடுக்காய் நிற்கின்றாள்.


வியப்பை மறைக்காதக் குரலில், "ஶ்ரீமகள்! நல்லா ஞாபகம் இருக்குது. எப்டி இருக்க?" என்று கேட்டேன்.


"ரொம்ப நல்லா இருக்கேன் மேம். நீங்க எப்டி இருக்கீங்க?" என ஆர்வமாகக் கேட்டாள்.


"நல்லா இருக்கேன். வேலைக்கு கிளம்பிட்டியா? என்ன வேலை?"


"ஸ்கூல் லைஃப்'அ திரும்பவும் பாதி அளவாவது அனுபவிக்கற வேலை மேம். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்." என்று தலை சாய்த்து சிரித்தாள், சந்தோஷமாய்!


              🌿🌸🌿🌸🌿🌸

Comments

Post a Comment

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...