சீதையின் பூக்காடு - 15

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 15


இதுவரை வகுப்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் பேராசியர்களிடம் பேச தயங்கும் மாணவர்கள் சீதாவிடம் தான் சொல்வார்கள். இவள் மனதிற்கு சரியாகப்பட்டால் உடனடியாக பேசி பிரச்சனையை சுமூகமாக்கிவிடுவாள். இது இரண்டாம் ஆண்டாக இருந்தாலும் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் ராகிங்'ன் போதே சண்டையின் மூலம் சீதாவின் புகழ் கல்லூரியில் ஆங்காங்கே பரவியிருந்தது. எனவே இப்போதும் கஷ்டம் தீருமோ அல்லவோ சீதாவிடம் தன் சொந்த பிரச்சனையைக் கூறியதால் பாதி பாரம் தீர்ந்தாற் போல் உணர்ந்தாள் சாரதா. 

இரண்டாம் ஆண்டின் இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முடிவுகள் வர ஒரு மாத காலமேனும் ஆகும் என்பதால் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

முடிவெடுத்ததைப் போலவே, அந்த வார இறுதியிலேயே சாரதாவுடன் அவளின் கிராமத்திற்கு சென்ற சீதா, ஊர்க்காரர்களை விசாரித்துவிட்டு பயனில்லை என்றதும், சாரதாவையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரங்களில் தோல் தொழிற்சாலை எங்குள்ளது என்று அலசலானாள்.

சீதாவின் இணையதளத் தேடலிலும் அவளின் தந்தை ரகுநந்தன் தந்த தகவலின் அடிப்படையிலும் சாரதாவின் கிராமத்திற்கு அருகில் எந்த தோல் தொழிற்சாலையும் இல்லை எனத் தெரியவந்தது.

சாரதா முற்றிலும் உடைந்துவிட்டாள். சரி! விஷயத்தைக் காவல்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாமென்றால், அதன் மூலம் தம்பிக்கு ஆபத்து நேரலாமென பயந்தாள். சீதாவிற்கு அவளைத் தேற்றுவதே பெரும்பாடாகிப் போனது.

"சாரு! டாக்டருக்கு படிக்கற பொண்ணு நீ! தைரியமா இருக்க வேணாம்? தேடலோட ஆரம்பத்துல தான் இருக்கோம் நாம! இன்னும் கொஞ்சம் தேடினா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். ஸ்டே ஸ்ட்ராங் சாரு!" என்று தோழி சாய தோள் கொடுக்காமல், தைரியத்தை ஊட்டி அவளாகவே எழுந்துகொள்ளச் செய்தாள்.

இறுதியாக தோல் தொழிற்சாலை என்றில்லாமல், அருகே புதிதாக தொடங்கிய வேறு என்னென்ன தொழிற்சாலைகள் இருக்கின்றன என்று தேடலாயினர். 

ரகுநந்தன், 'அங்கு நமக்கு தெரிந்த மனிதர்களிடம் விசாரித்தாயிற்று. பள்ளி செல்லும் சிறுவர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை' என்று சொன்னார்.

இதை சாரதாவிடம் சொன்னால் மனமுடைந்துவிடுவாளே? அதற்காக இல்லையென்று தெரிந்த பின்னும் அங்கு போய் என்னவென்று விசாரிப்பது?

சரி கடைசியாக இப்போது போகும் இடத்தில் மட்டும் விசாரித்துவிட்டு, அங்கும் இல்லையெனில் காவல்துறைக்கு சொல்ல வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டாள். ஊருக்கு அருகே உள்ள கடைசி தொழிற்சாலையிலும் கேட்க சென்றவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ஆனால் இவர்களின் தேடலின் பயனாக, குழந்தைக் கடத்தலைப் பற்றிய ஒரு சிறு பொறி கிடைத்தது. 

குழந்தை தொழிலாளர் முறையில் உண்டாகும் சிக்கல்களால் புதிதாக தொடங்கப்பட்ட அந்த தொழிற்சாலைகள் மிகவும் கவனமாகவே ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

சீதாவின் அச்சமில்லா கத்திப் பார்வையிலும் அவளின்
காக்கி நிற ஜீன்ஸ், வெள்ளை நிற மேல் சட்டை, கருப்பு நிற ரே பான் க்ளாஸ் மற்றும் போனி டெய்லிலும், அவளின் தோற்றத்தைக் கண்டவர்கள் அவளொரு காவலதிகாரியாக இருக்கக்கூடுமென தாங்களே கணித்து, அவள் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையாகவே விளக்கமளித்தனர். 

இருந்தாலும் ஏன் இந்த விசாரணை என்று கேட்ட ஒரு மேலதிகாரியிடம், அதன்பின் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த விபரத்தைக் கூறவும், அருகே இருந்து கேட்டு கொண்டிருந்த யூனியன் லீடர் ஒருவர், இது போல் வேலைக்கெனக் கூறியோ அல்லது பணம் கொடுத்தோ பிள்ளைகளை வாங்கிச் செல்லும் ஏஜெண்ட் பற்றி தனக்குத் தெரியும் என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு வயிற்றில் கத்தி சொருகிய உணர்வு! பிள்ளைகளை பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்களா?

"ஆமாங்க! பிறந்த குழந்தைங்கள்ல இருந்து பதினஞ்சு வயசுக்குள்ள இருக்க நம்மூர் பிள்ளைங்களுக்கு வெளிநாட்டுல ரொம்ப கிராக்கி."

"என்ன அநியாயம் சார் இது? ஏதோ நம்மூர் பொருளுக்கு டிமாண்ட்ங்கற மாதிரி பேசறீங்க? குழந்தைங்க சார்! போலீஸ்ல சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம்ல?" எனவும்,

"என்னம்மா பண்றது? நம்மூர் பெரிய தலைங்க சம்பந்தப்பட்ட விவகாரம். என்னை மாதிரி கூலி ஆட்கள் போய் புரட்சி பண்ண முடியுங்களா? இப்பவும் கூட நீங்க போலீஸா இருப்பீங்களோனு நினைச்சு எதையும் சொல்லாம தான் இருந்தேன். புள்ளைய தொலைச்சவங்க'ன்னு தெரிஞ்சப்புறம் மனசு கேக்காம தான் சொன்னேன். எனக்கும் ரெண்டு புள்ளைங்க இருக்காங்கம்மா. போலீஸுக்கெல்லாம் போனா... சாதாரண வொர்க்கர் என் கம்ப்ளைன்ட் அங்க எடுபடுங்களா?" என்ற அந்த மனிதர் பயத்தோடும் சிறிது விரக்தியோடும் பேசினார்.

பின் அவரிடம் அந்த ஏஜெண்ட்டின் விபரங்களைக் கேட்டுக்கொண்டு அவனைத் தேடி சென்றனர். போகும் பொழுதே சீதா ரகுநந்தனை அழைத்து அனைத்தையும் கூறினாள். 

"இப்ப அவனை தான் பார்க்க போய்ட்டு இருக்கோம்பா."

"சீதா! நீ போ. அப்பா நம்ம ஆளுங்க ரெண்டு பேரைக் கூட்டிட்டு வர்றேன்."

"ப்பா! என் மேல நம்பிக்கை இல்லயா?" என்று இவள் முகத்தைத் தூக்க,

"நம்பிக்கை இல்லாம இல்லடா. இந்த மாதிரி விஷயத்துலலாம் நாம முன்னெச்சரிக்கையோட நடந்துக்கணும். அந்த ஏஜெண்ட் எப்டிபட்டவன் என்னனு தெரியாம குருட்டு தைரியத்துல நீங்க போய் மாட்டிக்கக் கூடாது பாரு?" என்று பொறுமையாக விளக்கியவர், சீதாவின் கோப மௌனம் தொடரவே, "அதோட உன்னை அனுப்பிட்டு நான் இங்க கையைக் கட்டிட்டு உட்கார்ந்திருந்தா உங்கம்மா என்னை டைவர்ஸ் பண்ணிடுவா. அதுக்கப்புறம் எனக்கு யாரு வாழ்க்கை குடுப்பா சொல்லு?" என்று சோகம் போல் கேட்டு சீதாவை சிரிக்க வைத்தார். 

தோழிக்காக சிறுவனைத் தேடி செல்கிறாளென, பெண்ணின் துணிச்சல் மீது நம்பிக்கை வைத்து, அதுவும் அருகிலுள்ள ஊர் என்பதால் மட்டுமே அனுமதித்திருந்தார். ஆனால் இப்போது விடயம் வேறு வடிவம் கொள்வதால், அவளை எங்கோ அனுப்பிவிட்டு கையைக் கட்டிக் கொண்டிருக்க முடியவில்லை.

"சரிப்பா. வாங்க! நான் அதுக்குள்ள அந்த ஆளை மீட் பண்ணிட்டா உங்களுக்கு அப்டேட் பண்றேன்."

தொழிற்சாலை பணியாள் சொன்ன இருப்பிடத்தை அடைந்தவர்கள் முகங்கள் சற்றே ஆச்சர்யத்தைக் காட்டின. அது ஒரு குடிசை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி!

அந்த குடிசையின் வாசலில் வழிந்தோடும் சாக்கடையின் முன்னால் பாத்திரங்களைப் போட்டு தேய்த்துக் கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். 

அவளிடம் இவர்கள் அந்த ஏஜெண்ட்டைக் குறிப்பிட்டு விசாரிக்க, "தோ வூட்டாண்ட தான் இருக்குது. நல்லா குடிச்சினு வந்து கருவாட்டு குழம்பு செஞ்சு குடுனு இம்மா நேரமா ஒரு பாட்டம் ஆடி தீர்த்துட்டு இப்ப தான் மல்லாந்து கிடக்குது. யாரு மேடம் நீங்க? போலீஸா? புடிச்சுகினு போங்க மேடம். புண்ணியமா போகும். நானும் என் புள்ளைங்களும் எப்டினாலும் பொழைச்சுக்குவோம். இத்த கட்டிக்கினு என் வாழ்க்கை ஏரோபிளேன்ல தான் ஏறிக்கினு இருக்கு மேடம். புடிச்சினு போங்க. தூக்குல கூட போடுங்க. இத்தெல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா உசுரோட இருந்துக்கினு? தேவையே இல்ல மேடம். அன்னிக்கே சொன்னேன் கல்யாணமும் வேணாம் ஒரு கருமாந்திரமும் வேணாம்னு… எங்கப்பங்காரன் நல்ல மனுஷன்னு இது கைல புட்ச்சு குடுத்து என்னை இன்னிக்கு இந்த நிலைமைல நிறுத்திடுச்சு." என்று நிறுத்தாமல் சில பல தணிக்கை வார்த்தைகளோடு வாய் மணக்க பேசிக்கொண்டே போனாள்.

"ஷட் அப்! ஐ டோண்'ட் கம் ஹியர் ட்டூ ஹியரிங் யுவர் லேமன்டேஷன்ஸ். அண்டர்ஸ்டூட்? வேர் இஸ் செல்வம்? கால் ஹிம்!!" என்று சீதா அதிகார தோரணையோடு ஆங்கிலத்தில் அமர்த்தலாகக் கேட்கவும் கப்சிப்பென்று வாய் மூடிக் கொண்ட பெண், சீதா பேசியதில் செல்வம், கால் என்ற வார்த்தைகளை மட்டும் புரிந்துகொண்டு உள்ளே சென்று தன் கணவனை அழைத்துவந்தாள். 

குடிபோதையில் இருந்தவன் இவர்களை தரம் தாழ்ந்து பேசவும் ஓங்கி ஓர் அறை விட்டாள் சீதா. இன்னும் வெறியேறியவன் அவளை அடிக்கப் பாய, அவன் மனைவி இழுத்துப் பிடித்து, வந்திருப்பது போலீஸ் என்று சொல்ல, குற்றம் புரிபவன் ஆகையால் போதையிறங்கிய முகத்தில் பயம் வந்தமர்ந்துகொண்டது.

முதலில் அரைமணி நேரமாக வாய் திறக்க மறுத்தவன் 'உன்னை விட்டுவிட்டு உன் மனைவியை பிடித்துச் செல்வேன்' என அவளைப் பிடித்து இழுத்த பின்னர், சீதா கேட்கும் கேள்விகளுக்கு வேகமாக விடை எழுதினான். குழந்தைகளை உள்ளூரிலோ, வெளியூர்களிலிருந்தோ பிடித்துக் கொடுத்தால் அதற்கேற்ப பணம் கிடைக்கும் என்பதால், தான் இந்த மாபாதகச் செயலை செய்ததாக ஒப்புக்கொண்டான்.

ஆனால் தனக்கு வேலை அளிப்பவனை மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் அவனுக்கும் மேல் ஒருவரோ, அதற்கு மேற்பட்டவர்களாகவோ பெரிய தலைகள் இருக்கலாமென்றும் கூறினான்.

மேலும் தன்னைப் போலவே தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலும் குழந்தைக் கடத்தலுக்கென பற்பல கூலி ஆட்கள் இருப்பதாகவும் சொன்னான். தன்னைக் காட்டிக் கொடுக்கவில்லை என்றால் தனக்கு மேலுள்ளவனைப் பற்றிய விபரங்களை அளிப்பதாக சொல்லவே, சரியென உறுதியளித்து, பின் அவனளித்த விபரங்களை பெற்றுக்கொண்டு வேறொருவனைத் தேடிச் சென்றனர். அதையும் ரகுநந்தனிடம் சொல்லிவிட்டே சென்றாள்.

ரகுநந்தனுக்கு பிரச்சனையின் தீவிரம் புரிந்தது. தனியே செல்ல வேண்டாமென சொன்னால் மகள் கேட்கமாட்டாளென புரிந்திருந்தவர், அவள் சொன்ன இடத்தை மட்டும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே பாதி தொலைவு வந்திருந்ததால் வேகமாக அவ்விடத்திற்கு விரைந்தார்.

ஊருக்குள் முக்கிய இடத்தில் இருந்தது அவனது அச்சு தொழிலுக்கான அலுவலகம்! அதற்குள் நுழைந்ததுமே இந்த நிறுவனத்திற்கு எதற்கு இத்தனை ஆடம்பர படோடாபம்? என்ற கேள்வி எழுந்தது. செல்வத்தைப் போல் இவனிடம் அத்தனை சுலபத்தில் விபரங்களைப் பெற முடியாது என கணித்தாள் சீதா.

"சாரு! என்ன நடந்தாலும் பயத்தை முகத்துல காட்டக் கூடாது. புரிஞ்சதா?" என்று சாரதாவை எச்சரித்து விட்டு, அனுமதி கிடைத்ததும் அவனின் அறைக்குள் நுழைந்தனர். 

இவர்கள் இருவரும் உள்ளே சென்று இருபது நிமிடங்கள் கழித்து ரகுநந்தன் அங்கு வந்து சேர்ந்தார். கூடவே டிஸிபி மற்றும் பத்திரிக்கை துறை நண்பர் ஒருவர்!

வந்தவர்கள் தடாலடியாக அவனின் அலுவலக அறைக்குள் நுழைய, அனைவரும் கண்டது சாரதாவின் நெற்றியின் இடப்புறம் அவன் கையிலிருந்த துப்பாக்கியின் முனை முத்தமிட்டுக் கொண்டிருந்ததைத் தான்! சீதா எந்நேரமும் அவனைத் தாக்க தயாராக நின்றிருந்தாள்.

மறுநாள் காலை தினசரி பத்திரிக்கைகள் அனைத்திலும், 'குழந்தைகள் கடத்தல்! பின்புலத்தில் அரசியல் கட்சி தொண்டர்!!' என்ற தலைப்பு செய்தி பிரசுரமாகியிருந்தது.

"அப்புறம் என்னாச்சு? அவனை அரெஸ்ட் பண்ணிட்டாளா? அவனோட ஹெட் மாட்டினானா?" இவ்வளவு நேரமும் கதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆரவி, சீதாவிடம் கேட்டாள்.

"பின்ன? அவனை போலீஸ் நல்லவிதமா விசாரிச்சு அந்த கேங் மொத்தத்தையும் பிடிச்சிட்டாங்க."

"சாரதா தம்பி சக்தி கிடைச்சானோன்னோ?" ஆரவியின் கண்களில் ஆர்வம் தெரிந்தது.

"மிச்சத்தை நாளைக்கு சொல்றேன் ஆரவி. இப்ப நீ தூங்கு. ரொம்ப லேட்டாகிடுச்சு." எனவும்,

"அதெல்லாம் பரவால்ல. நீங்க சொல்லுங்கோ!" என அடம்பிடித்தாள்.

"ப்ச்! லெட்'ஸ் மீட் டுமாரோ. இப்ப நீ கிளம்பு!" என்று எழுந்தவள் அவளை விட பிடிவாதமாகக் கூற,

சில நொடிகள் தயக்கத்திற்கு பின் முகத்தை சுருக்கிக்கொண்டு, "நான் அந்த ரூம்க்கு போகல. நேக்கு பயமா இருக்கறது." என்று நந்தனிடம் கூறியதைப் போலவே இவளிடமும் சிணுங்கினாள். 

சின்னதாக சிரித்த சீதா, "அப்ப என்னைப் பார்த்து பயமில்ல, ம்ம்??" என்றுவிட்டு, "சரி. இங்கேயே படுத்துக்கோ! நான் உன் பக்கத்துலயே இருக்கேன்." எனவும், வேகமாக தலையாட்டி விட்டு சீதாவின் கட்டிலிலேயே ஒரு பூனைக்குட்டியைப் போல் சுருண்டு படுத்துக் கொண்டாள் ஆரவி.

ஏதோ ஒன்று சீதாவுடன் தன்னை பிணைத்து வைப்பதாய் ஆரவியின் அடி மனம் உணர்த்தியது. ஆனால் அதை என்னவென்று பெரிதாக ஆராய விழையவில்லை அவள். கண்ணை சுழற்றிய தூக்கமும் ஆராயவிடவில்லை.

கடிகார முட்கள் இரண்டும் எண் இரண்டைக் கடந்து ஆலிங்கனம் செய்யும் கணத்தில் ஆரவி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தாள். அவளருகே அமர்ந்திருந்த சீதா, 'விபுநந்தனே தனக்கு குழந்தை தான். இவள் அவனினும் குழந்தையாய் இருக்கிறாள்.' என ஆரவியை வாஞ்சையோடுப் பார்த்திருந்தாள்.

பூக்கும்🌻🌺 

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)