அத்தியாயம் 14
'விபுநந்தன் காதலென்று கூறி கழுத்தறுத்துவிட்டான்; தானும் மடத்தனமாக அவனிடம் பிரியத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று ஆரவி ஒரு மூச்சு குமுறினாள்.
காதலின் அடிப்படையே உண்மையும் நம்பிக்கையுமல்லவா? இங்கே தன்னிடம் உண்மையாக இல்லாதவனை, தான் எங்ஙனம் நம்புவது? என்று குழம்பி தவித்தாள்.
இதற்கிடையே சீதாவைப் பார்க்க, 'பவித்ரமான மலரைப் போல் இருப்பவளுக்கு எப்படி இந்நிலை வந்திருக்கக்கூடும்? அவள் தன்னிடம் பேச விழைந்த காரணமென்ன?' என்று அது வேறு மூளையின் ஒரு புறம் ஓடிக் கொண்டிருந்தது.
சற்றுநேரம் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சையெடுத்து, தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு விழிகளைத் திறந்து சீதாவைப் பார்த்தாள்.
அவள் அதே புன்னகை மாறாத முகத்தோடு கேட்டாள். "டூ யூ ஃபீல் பெட்டர் நௌ, ஆரவி?"
"நீங்க என்னான்ட ஏதோ பேச வந்த மாதிரி இருந்ததே?"
சின்னதாக சிரித்துக்கொண்டு, "இல்ல... இந்த ஏழு வருஷத்துல முதல்முதலா ஒரு பொண்ணு கண்ணுக்கு நான் தெரிஞ்சிருக்கேன். அதான் சும்மா உன்கிட்ட பேச ஆசை வந்துடுச்சு." என்றாள்.
'ஏழு வருஷமா? அப்ப…' ஆரவியால் வாய்விட்டு கேட்க முடியவில்லை. எனினும் அவள் கண்கள் அதனை வெளிப்படுத்திவிட்டது.
சீதா, "ஹே இங்க பாரு! இந்த பாவமா லுக் விடறதுலாம் இங்க வச்சிக்க வேணாம் சொல்லிட்டேன்!" என்றாள், போலி மிரட்டலுடன்!
"ம்ம்! ஆனா எப்டி ஆச்சுனு தெரிஞ்சுக்கலாமோல்லியோ?" என்று சின்னக் குரலில் கேட்க,
"ஓ! தெரிஞ்சுக்கலாமே… நீ ஸ்ட்ராங் கேர்ளா இருந்தா சொல்றேன்." என்றாள்.
"ஹான்! உங்க தம்பியோடவே இவ்ளோ பெரிய ஆத்துல தனியா இருக்கேனே… போறாதா இவ்ளோ ஸ்ட்ராங்?"
"ஹாஹா… வாலு! எங்க நந்தாவுக்கு ஏத்த பொண்ணா தான் இருக்க நீ!"
"ப்ச்!" என்று சலித்துக்கொண்டவள், "ஆமா… ஏன் முதல்ல நீங்க என் கண்ணுக்கு தெரியல? அப்புறம் மழைல நிக்கும் போது மட்டும் தெரிஞ்சேளே? ஆனா அதுக்கப்புறம் இப்ப ஆத்துக்குள்ள இருக்கச்சயும் கூட தெரியறேள்?" எனக் கேட்டாள்.
"ம்ம்!! எனக்கும் ஏன்னு புரியலயே ஆரவி."
ஏனென்று இதை எழுதுபவளுக்கும் கூட புரியவில்லையாம்! என்ன செய்வது? அவ்வ்வ்..!
ஆரவி, "சரி சரி. உங்க ஃப்ளாஷ்பேக் சொல்லுங்கோ!" எனவும், சீதாவும் சொல்ல ஆரம்பித்தாள்.
விபுநந்தனின் மூத்த தமக்கையான சீதா இயல்பிலேயே தைரியலட்சுமியாக துணிவோடும் நெஞ்சுரத்தோடும் இருந்தாள். கண்முன் சிறு அநியாயம் கண்டாலும் பொறுக்காமல் பொங்கிவிடுவாள். வீட்டிற்கு மூத்த பெண் என்று அவள் தைரியத்தை ஊக்கப்படுத்தவே செய்தார் அவளின் தந்தை ரகுநந்தன். இதனால் அவள் ஏதேனும் சண்டையை இழுத்து வைத்தால் கூட, தன் மகளிற்காக எங்கும் போய் பேசி வருவார்.
அம்மா வித்யாலட்சுமிக்கு பெண்ணை நினைத்து உள்ளூற கவலையாக இருக்கும். அதை கணவனிடம் கூறினால், இந்த காலத்தில் இந்த தைரியம் ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவை தான் என்று சொல்லி அவர் வாயை அடைத்துவிடுவார்.
(இந்த பகுதியில் இடம்பெறும் பள்ளி நிகழ்வுகள் ஓரிரண்டைத் தவிர, மற்ற அனைத்தும் உண்மை சம்பவம்!)
சீதா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம்! சீதாவின் உடற்பயிற்சி ஆசிரியை திருமதி செலின் அவர்கள் திறமையானவர், நோஞ்சான் பிள்ளைகளையும் ஊக்கப்படுத்தி, உற்சாகமூட்டி விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தி விடும் நல்லாசிரியை. நல்லாசிரியை விருது பெற்றவரும் கூட! அதில் சில பொறாமைகளையும் சம்பாதித்திருந்தார். இப்பணியில் இருபத்துமூன்று ஆண்டுகள் அனுபவமுள்ளவர். இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வு பெறப் போகிறார்.
அவரின் திருமணத்திற்கு பின், பல வருடங்களுக்கு பிறகே குழந்தை செல்வம் கிடைத்தது. அதையும் கடவுளாகப்பட்டவன், நீ கொஞ்சி தீர்த்தது போதுமென அதன் மூன்றாவது வயதில் தன்னிடமே அழைத்துக்கொண்டார். அதன் பிறகும் செலினுக்கு பிள்ளை பேறு வாய்க்கவில்லை. அப்போதிருந்தே குழந்தையின் புகைப்படத்தோடு தன் போக்கில் பேசிக்கொண்டிருப்பவரை தனிமை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார் அவரின் கணவர். இப்போது ஆறு மாதங்களுக்கு முன் கணவரும் தவறியிருந்த நிலையில், தனிமையிலேயே உழன்று கொண்டிருக்கிறார் செலின்.
அதன் காரணமாக மேலும் தீராத மனக்குழப்பத்திற்கு ஆளானார். அது சிற்சில நேரங்களில் பள்ளி வேலை நேரத்திலும் வெளிப்பட்டது. உடற்பயிற்சி வகுப்புகள் போக மற்ற நேரங்களில் ஸ்டாஃப் ரூமில் மற்ற ஆசிரியர்களுடன் இருக்காமல், பிள்ளைகள் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் மரத்தடியில் தன் ஜாகையை மாற்றிக்கொண்டார். அப்போது தன் கணவரிடமும் குழந்தையிடமும் மானசீகமாக பேச இன்னும் அதிக நேரம் கிடைத்தது.
இந்நிலையில் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. உடற்கல்விக்கும் தியரி மற்றும் பிஸிக்கல் டெஸ்ட் என்று இருப்பதால், செலின் தியரி கேள்விகளுக்காய் சீதாவின் வகுப்பிற்கு வந்திருந்தார். கரும்பலகையில் கேள்வி பதில்களை எழுதிவிட்டு, மாணவிகளுக்கும் எழுத நேரம் கொடுத்து எப்போதும் போல் தன் போக்கில் தனியே பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மாணவி செலினின் நிலைக் குறித்து சற்று சத்தமாகவே அவர் காதில் விழும்படி கேலி பேசினாள்.
"என்ன ஆச்சு?" என்று கேட்டு, "குழந்தை செத்து போச்சு. உட்வர்ஸ் க்ரைப் வாட்டர் கொடுக்கலயா?" என்று விளம்பரத்தில் பேசுவது போல் பேசிக் காட்டி சிரிக்க,
அடுத்த நிமிடத்தில் அம்மாணவியின் ரிப்பன் கட்டிய இரு ஜடைகளும், செலினின் வலக்கரத்தில் சிக்கியிருந்தது. அவளின் கால்கள் இரண்டும் தரையில் இருந்து அரையடி உயரத்தில் உதறியது. செலின் ரெட்டை ஜடைகளையும் பிடித்து அவளைத் தூக்கி இருந்தார். ஆம்! செலின் மனச்சிதைவின் அடுத்த கட்டத்திற்கு பயணித்திருந்தார்.
மருத்துவர்கள் இதனை உடல்ரீதியான செயல்பாடு மற்றும் சமநிலையில் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக தான் குறிக்கிறார்கள். தங்களை சுற்றி நடப்பவை காரணமாக அழுத்தம் ஏற்படும் போது, அதற்கு எதிர்வினையாக சில இரசாயனங்கள் சுரந்து இரத்தத்தில் கலக்கின்றன. இந்த இரசாயனங்கள் அவர்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் பலத்தை அளிக்கிறது. அதன் காரணமாக சில சமயங்களில் அவர்கள் மிகவும் வன்முறையாக நடந்து கொள்கின்றனராம்.
செலினின் நடவடிக்கைக் கண்டு மாணவிகள் கூக்குரல் எழுப்ப, பக்கத்து வகுப்பறைகளில் இருந்த ஆசிரியைகள் ஓடி வந்தனர். வந்தவரில் ஒருவர் செலினை அழைத்து ஆசுவாசப்படுத்தி பேசிக் கொண்டிருக்கையில், ஏற்கனவே செலின் மேல் பொறாமைக் கொண்டிருந்த ஒருவர், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துவிட்டார்.
அதனையடுத்து செலின் தலைமையாசிரியையிடம் அழைத்து செல்லப்பட்டார். அதற்குள் அவர்மேல் நன்மதிப்பு கொண்டவர்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொண்ட வருத்தங்கள் மூலம், விஷயம் பிள்ளைகளையும் சென்றடைந்தது.
எனவே அந்த வகுப்பு முடிந்ததும் தடாலடியாக நான்கைந்து மாணவிகளோடு, தலைமை ஆசிரியை அறை முன் வந்து நின்ற சீதா, ப்யூனிடம் தாங்கள் தலைமை ஆசிரியையை சந்திக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாள். அவரின் ஒரு கையெழுத்து தங்களின் ஆதர்ச செலின் மேடமின் வேலையை நீக்கி விடுமென்று வருந்தினாள். எனவே தாமதிக்காமல் அவரை சந்திக்க வேண்டுமென்றாள்.
உள்ளே சில ஆசிரியைகளிடையே தீவிர பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில், இச்சிறுமிகளை அலட்சியமாக பார்த்தவர் எச்சரிக்கை செய்து வகுப்பிற்கு செல்ல சொன்னார். அதற்கு இவள் மறுக்க, 'இந்த வயதிலேயே ரவுடியைப் போல் புரட்சியில் ஈடுபடுகிறாயா?' எனக்கேட்டு அவர் கத்த, எதற்கும் அஞ்சாமல் இவளும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, பின்னிருந்த மாணவிகளும் சேர்ந்துகொண்டனர்.
விஷயமறிந்து மற்ற ஆசிரியர்கள் வந்து பிள்ளைகளைக் கண்டித்து, இடத்தை காலி செய்ய சொல்லி அதட்டல் போட்டாலும் கொஞ்சமும் பயமின்றி, ஆசிரியை செலின் மேல் தவறில்லை எனவும், தன் வகுப்பு மாணவி கேலி பேச்சால் அவரை தூண்டியதாலேயே அவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் எனவும், அவரை வேலையில் தொடர்ந்து நீடிக்க செய்ய வேண்டுமெனவும் நிமிர்வாகவும் தன் கீச்சுக் குரலில் மிகத் தெளிவாகவும் கூறினாள்.
பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியைகளும் செலினிற்கு ஓய்வு பெற இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் வேலை நீக்கம் செய்ய வேண்டாமென தலைமையாசிரியையிடம் கேட்டுக்கொண்டனர்.
அதன்படியே ஆசிரியை செலினைக் கண்டித்துவிட்டு, பத்து நாட்கள் மட்டும் அவரின் மருத்துவ சிகிச்சைக்காக விடுப்பு அளித்தனர். சக ஆசிரியை ஒருவர் செலினின் தம்பி செபாஸ்டியனை அழைத்து, விவரம் கூறி அவரை அனுப்பி வைத்தார்.
இத்தனை நேரமும் தனக்குள் என்ன நிகழ்கிறதென்று புரியாமல், இத்தனை வருடங்கள் கம்பீரம் குறையாமல் நடமாடிய பள்ளியில் இன்று தலைகுனிந்து நின்றிருந்த செலின், தன் தம்பியுடன் செல்கையில் முதன்முறையாக நிமிர்ந்து சீதாவை ஓர் நன்றிப் பார்வை பார்த்துச் சென்றார்.
பள்ளியில் நடந்த இச்சம்பவத்திற்கு பிறகு, செலின் மேலும் தன்னை தனிமைபடுத்திக் கொள்ளவே விழைந்தார். எப்படியோ மூன்று மாதங்கள் கடந்து ஓய்வு பெற்ற பின், தன்னை தடுத்து நிறுத்த எண்ணிய தம்பியிடம், தான் நலமாகவே இருப்பதாகக் கூறி மீண்டும் தன் வீட்டிற்கு சென்று கூட்டிற்குள் ஒடுங்கிய பறவையாய் தன்னை அடைத்துக்கொண்டார்.
பள்ளியில் இச்சம்பவம் நடந்த அன்றிலிருந்தே சீதாவின் வாழ்க்கையில் செலின் மேடமும் ஓர் அங்கமாகிப் போனார். அவர் ஓய்வுபெற்ற பின்னும் அவ்வபோது தன் தந்தை ரகுநந்தனுடன் சென்று பார்த்துவிட்டு வருவாள்.
நாட்கள் செல்லச் செல்ல தினமும் இருவரும் தொலைபேசி வாயிலேனும் உரையாடுவதை வழக்கமாக்கிக்கொண்டனர். அன்றாட நிகழ்வுகளை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர். தன்னால் முடிந்த மட்டும் தன் செலின் மேடமின் தனிமையைப் போக்க எண்ணினாள் சீதா.
அந்த வயதிலேயே நிமிர்வும், தெளிவுமாய் தலைமை ஆசிரியையை அணுகிய சீதாவோடு, வளர வளர அவளின் தன்னம்பிக்கையும் அச்சமின்மையும் சேர்ந்தே வளர்ந்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும் தனக்கு விருப்பமான மருத்துவப் படிப்பில் பிரபலமான கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
அங்கு முதல் நாள் ராகிங் என்று வந்த சீனியர் மாணவிகள் கூறிய சிறு சிறு விளையாட்டுகளை ரசித்து செய்தவள், சற்று கடுமையாகவும் விரசமாகவும் நடந்து கொள்ள சொன்னவர்களிடம், 'எனக்கு வகுப்பிற்கு நேரமாகிவிட்டது. மாலையில் அப்பாயிண்ட்மென்ட் தருகிறேன்.' என அமர்த்தலாகக் கூறி அப்போதிருந்தே அவர்களிடம் பஞ்சாயத்தை இழுத்து வைத்தாள். இங்கும் கல்லூரி மேலிடம் வந்து, பஞ்சாயத்தைத் தீர்த்து சீனியர்களைக் கண்டித்து சென்றது.
ராகிங்'இல் இருந்து தப்பித்தவர்களுக்கு சீதா ஓர் கதாநாயகியாக தெரிந்தாள். நண்பர்களும் ரசிகர்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றனர்.
மருத்துவப் படிப்பில் இரண்டாம் வருடத்தில் இருக்கும் போது ஓர் நாள், உடற்கூற்றியல் (Anatomy) வகுப்பில் பிராக்டிகல் செய்து முடித்து விட்டு வெளிவரும் போது, சோகமே உருவாய் அமர்ந்திருந்த தன் குழுவைச் சேர்ந்த பெண் சாரதாவிடம் சென்று என்ன ஏதென்று விசாரிக்க, அவள் கூறியதைக் கேட்ட சீதாவிற்கு கோபம் வந்தது.
சாரதா ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். பனிரென்டாம் வகுப்பில் மாநில அளவிலான முதலிடத்தைப் பெற்றதால், அவளின் ஊர் பெரிய தனக்காரரின் முயற்சியாலும் ஸ்காலர்ஷிப் ஊக்கத் தொகையிலும், மேலும் ஒரு ட்ரஸ்டின் உதவியாலுமே அவளுக்கு இந்த கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பத்தொன்பது வயது சாரதாவிற்கு எட்டு வருட இடைவெளியில் பிறந்த ஒரு தம்பி இருக்கின்றான். பதினோரு வயதேயான சக்தீஸ்வரனை தங்கள் சக்திக்கு மீறி படிக்க வைக்க முடியாத நிலையில் இருந்தனர் அவளின் பெற்றோர். எனவே ஐந்தாம் வகுப்பு மட்டுமே முடித்திருந்தவனை தங்களோடு விவசாய வேலைகளில் ஈடுபடுத்தியிருந்தனர்.
இந்நிலையில் அவ்வூரில் இருந்த சக்தியைப் போன்று பள்ளி செல்லாத சிறுவர்களுக்கு, பக்கத்து நகரத்தில் புதிதாகத் தோற்றுவித்திருந்த தோல் தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாக ஒரு நபர் வந்து கூறியதும், சாரதாவின் பெற்றோரைப் போல் வறுமையிலும் கடனிலும் மூழ்கியிருந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதைப் பார்த்ததும் இவர்களும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு சக்தியை அனுப்பி வைத்திருந்தனர்.
அவன் சென்று இரு மாதங்கள் கடந்த நிலையிலும் அவனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவன் வேலைக்கான கூலி என்று அவனை அழைத்துச் சென்ற அந்த நபரே இருமுறையும் வந்து பணம் தந்துவிட்டு சென்றுள்ளார்.
கல்லூரி விடுதியில் தங்கிப் பயிலும் சாரதா வார விடுமுறையில் ஊருக்கு சென்று வந்தவள், தம்பியைக் காணாத ஏக்கத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் சிறுவனை வேலைக்கு அனுப்பி தான் பகட்டான கல்லூரியில் படிப்பதில் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியிலும் சோர்ந்து போனவளாய் அமர்ந்திருக்கிறாள்.
இதைக் கேட்ட சீதா சாரதாவையும் அவள் பெற்றோரையும் தாறுமாறாகத் திட்டித் தீர்த்தாள். அவளின் பெற்றோர் தான் படிப்பறிவில்லாதவர்கள். ஆனால் சாரதா பதினோரு வயதேயான சிறுவனை எப்படி வேலைக்கு அனுப்பலாமென கோபம் கொண்டாள்.
கண்ணைக் கசக்கிய சாரதா, "அவன் வேலைக்கு சேர்ந்ததே போன வாரம் ஊருக்கு போனப்ப தான் எனக்கே தெரியும் சீதா. ஆனா அப்பவும் நான் எங்கேனு போய் அவனைத் தேடறது?" என்றாள், நைந்த குரலில்!
"ஜாப் அரேன்ஞ் பண்ணி குடுத்த மனுஷனைப் போய் பிடிக்க வேண்டியது தானே?"
"அவர் சம்பளம் தர்றதுக்கு மட்டும் தான் ஊருக்கு வருவாராம். நான் ஊர்ல எல்லார்கிட்டயும் விசாரிச்சுட்டேன். அவரைப் பத்தின தகவல் யாருக்குமே தெரியல. யார்க்கிட்டயாவது கேட்டா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கை காட்டறங்களே தவிர, யாருக்குமே அந்த ஆள் யாருனு தெரியல."
"இன்னமும் இந்த மாதிரி எதையும் விசாரிக்காம சின்ன பிள்ளைங்களை வேலைக்கு அனுப்பற பேரண்ட்ஸ் இருக்காங்களா?"
"இருக்காங்க சீதா! காரணம் வறுமை. எங்கள மாதிரி ஒரு வேளை சாப்பாட்டுக்காக உழைக்கறவங்களும் கழுத்த நெறிக்கற கடன் வச்சிருக்கவங்களும் எதைத் தின்னா பித்தம் தெளியும்னு தான் நினைப்பாங்க. வேற வழியில்லாம தான் பிள்ளையை அனுப்பிருப்பாங்க. அனுப்பும் போது கண்டிப்பா ரத்த கண்ணீர் வடிச்சிருப்பாங்க. இப்ப ரெண்டு வாரமா எங்க அம்மாவும் சக்திய காணாம நடைப்பிணமா ஆகிட்டாங்கடி…" என்ற சாரதா உடைந்து அழுதாள்.
பசி! இந்த ஒன்றே போதும், எப்பேற்பட்ட மனிதனிடத்திலும் மாயத்தை நிகழ்த்த!
"கவலைப்படாத சாரு. நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன். கண்டிப்பா உன் தம்பி சக்தியைக் கண்டுபிடிச்சிடலாம். டோண்ட் க்ரை!" தோழியை ஆறுதல்படுத்தியவள், தந்தையிடம் அனுமதி பெற்று, தாமே சக்தியைத் தேட வேண்டுமென முடிவு செய்துகொண்டாள்.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment