சீதையின் பூக்காடு - 13.2

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 13.2


சீதா தொடர்ந்தாள். "அதான் அவன் தில்வாலே துல்ஹனியா படம்னு சொன்னதும் உனக்கு என் குரல் கேட்கும்ங்கற ஞாபகம் கூட இல்லாம எப்பவும் போல கண்ணை மூடி பாடித் தொலைச்சிட்டேன். அப்புறம் தான் நீ மயங்கினதும் என்னையே திட்டிட்டு, இனி நீங்க பேசும் போது அங்கே இருக்கவே கூடாதுனு முடிவு பண்ணி வந்துட்டேன். ஆனா, அதுக்கப்புறம் திடீர்னு நந்தா பயந்து கத்துற சத்தம் கேட்டு தான் என்னவோ ஏதோனு நினைச்சு மறுபடியும் கீழ வந்தேன்."

அவன் அன்னாபெல் என்ற பேய் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஆரவியின் அழைப்பிற்கு கத்தினானல்லவா? அதைச் சொல்கிறாள்.

"ம்ம்... அதான் அன்னிக்கு நாங்க சாப்பிடும் போது சிரிக்க ஆரம்பிச்சு பாதிலயே நிறுத்திட்டேளா?"

"ஆமா ஆரவி! நீங்க இப்டி இயல்பா இருக்கறதை வச்சு தான் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருப்பீங்கன்றதுல எனக்கு சந்தேகம் வரல. அதோட நீங்க லவர்ஸ் மாதிரியும் நடந்துக்கலயே." என்று சிரித்தவள், "நந்தா லவ்லாம் பண்ணுவான்னு நான் நினைக்கல. எத்தனை பெரிசா வளர்ந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை குழந்தை தான் இல்ல? நந்தாவும் எனக்கு அப்டி தான் ஆரவி." என்று பாசத்தில் முகம் விகசிக்கக் கூறினாள்.

குழந்தையாய் நினைப்பவளை தான் என்ன மாதிரி நினைத்துவிட்டோமென குற்றவுணர்வு தோன்றினாலும் அதைப் புறந்தள்ளி, 'நீயும்! உன் பாசமும்!! என் இதயத்தின் திசுக்களை ஒவ்வொன்றாய் பிரித்தெடுத்து, வலிக்க வலிக்கக் கொன்று விட்டானே உன் பாசக்கார குழந்தை?' என்று இறுகிப் போய் அமர்ந்திருந்தாள், ஆரவி.

அதற்கு மாறாக சீதா, "ஆனா நீ நந்தாவை லவ் பண்ற இல்ல? உனக்கு மழைனா ரொம்பப் பிடிக்குமா? நேத்து நீ மொட்டைமாடில ஒரு பட்டாம்பூச்சி மாதிரி சுத்தி வந்ததை நான் பார்த்தேன். இதுவே வேற யாரும்னா நான் எப்பவோ வேறப் பக்கம் போயிருப்பேன். ஆனா உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்குது போல. உன்னைப் பார்த்துட்டே இருக்கணும்னு தோணுச்சு." என்று பேசிக்கொண்டிருந்தவள் திடுமென, "ஆரவி! மொதல்ல இதுக்கு எனக்கு பதில் சொல்லேன். 'டீ டூ ஈ ஃபோர்' (T2E4)-னா என்ன? தெரிஞ்சுக்கலனா எனக்கு தலையே வெடிச்சிடும். ஒரு கவிதை சொன்னியே… 'ஈரெழுத்து பெயர் கொண்டவன்'னு... செம போ! அது என் தம்பி நந்தா தான? அவனை நீ விபு-னு தான கூப்பிடற? சொல்லு ஆரவி!" என்று உற்சாகமாகிவிட்டாள்.

"ம்ம்! உங்க தம்பியை தான் விரும்பினேன். ஆனா இப்ப இல்ல." என்று இறுக்கமாக உரைத்துவிட்டு எழுந்து வெளியேறப் போனவளை வழிமறித்தாள் சீதா.

"ஏன்? என்னாச்சு? அவன் உன்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டான்னு நீ நினைக்கறியா?"

"நினைக்கறது என்னங்க நினைக்கறது? அது தானே உண்மை?" என்று சீறினாள்.

"நோ ஆரவி, அஃப்கோர்ஸ் நாட்! நீங்க ரெண்டு பேரும் உள்ள இருக்கறது தெரியாம எங்க தட்சிணா தான் வீட்டைப் பூட்டியிருக்கணும். இந்த வீட்டுக்கு காவலுக்கும் சுத்தம் பண்றதுக்கும் இருக்கறது அவனும் கிருஷ்ணாவும் தான். கிருஷ்ணா இந்த ஒரு வாரமா லீவு."

இவர்கள் வந்த அன்று வெளியே செல்வதற்கு பூட்டிய கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்களே… அந்த சப்தத்தில் சீதா கீழே வந்தாள். வந்து பார்த்தவள் தன் தம்பி அவன் தோழியோடு வந்திருக்கிறான் போலும்! அதை தட்சிணா பார்க்காமல் வீட்டை சுத்தம் செய்த பின்னர், எப்போதும் போல கதவை வெளிப்புறமாக பூட்டியிருக்க வேண்டும் என இவளாகவே யூகித்துக்கொண்டாள். 

"ஏன்னா நந்தாவோட காரோ, பைக்கோ கூட வெளிய இல்லயே! அப்டி இருந்திருந்தா தட்சிணாவுக்கு தெரிஞ்சிருக்கும். சோ, ஹோட்டல் ஆளுங்க யாராவது ட்ராப் பண்ணிருப்பாங்க. அதை தட்சிணா பார்த்திருக்க மாட்டான்னு நினைச்சேன்." என்று அவள் புரிந்திருந்த வரை எடுத்துக் கூறினாள்.

ஹோட்டல்! ஆம்!! விபு ஹோட்டலில் வேலை செய்கிறேன் என்றானல்லவா? வார இறுதியைக் கழிக்கவே இத்தனை பெரிய வீட்டை வைத்திருப்பவன் வேலைக்கு செல்கிறானா என்ன? எனில்? அந்த ஹோட்டலும் கூட..? ஆரவி இன்னும் குழம்பியும், சீதாவை நம்பாமல் இறுகிய முகத்துடனுமே இருக்க,

"ஆரவி இங்க பாரு! நீங்க உள்ள மாட்டிக்கிட்டீங்கனு தெரிஞ்ச உடனேயே நான் வெளில போய்... தட்சிணா என்ன பண்றான்னு தான் வீட்டை சுத்தியும் பார்த்தேன். ஆளயே காணும். அவன் இப்ப வரை வீட்டுக்கு வரவேயில்ல. எங்க போனான்னும் தெரியல. ஒருவேளை வீக் எண்ட்'க்கு அவங்க வீட்டுக்கு போனாலும் போயிருப்பான்." என்றவள் மேலும் கூறினாள்.

"நிஜமா நந்தாவுக்கும் தட்சிணா மேல கோவம் தான் ஆரவி. தினமும் ராத்திரி அவன் தூங்கறதைப் பார்க்கறதுக்காகவே அவன் ரூம்க்கு போவேன். அப்ப உன்னை நினைச்சு தான் கவலைப்படுவான். 'தட்சிணா எங்கடா போய் ஒளிஞ்ச?'ன்னு வாய்விட்டு கோவத்தை வெளிப்படுத்தறதை பார்த்திருக்கேன் ஆரவி."

"......."

"அவன் உன்னை ஏமாத்தறதா இருந்திருந்தா ஏன் இன்னிக்கு மொட்டைமாடி வழியா கீழ இறங்கி வெளியேறலாம்னு சொல்லணும்? முழுசா நாலு நாள் இந்த வீட்ல நீ அவனோட தனியா இருந்திருக்க. கெட்ட எண்ணம் இருக்கறவனா இருந்திருந்தா அது உனக்கே ஏதாவது ஒரு நிமிஷத்துல புரிஞ்சிருக்குமே?"

"அப்புறம் ஏன் அவனுக்கும் ஃபோன்கால் வந்ததுனு என்னான்ட பொய் சொல்லணும்? வந்ததுல இருந்து இந்த ஆம் கூட அவனோடது தான்னு சொல்லாம, ஏன் அவனும் உள்ள மாட்டிண்ட மாதிரி நடிக்கணும்? லேண்ட்லைன் டெலிஃபோனைக் கூட ஏன் கழட்டி வைக்கணும்?" எப்படி இவளோடு சேர்ந்து ஒன்றுமறியாதவன் போல் வீட்டை கூட சோதனை செய்தான்? கிராதகன்!

இதற்கு பதில் கூற முடியாமல் மௌனித்தாள் சீதா.

"எசன்ஷியல் திங்க்ஸ், வெஜிடபிள்ஸ், நான் போட்டுக்க ட்ரெஸ்ஸஸ்னு ஏன் எல்லாம் ரெடியா வாங்கி வைக்கணும்? ஆல் ஆர் அட்வான்ஸ்ட் ப்ளானிங்!"

"ச்சச்ச… ஆரவி! அவன் எதையும் ப்ளான் பண்ணிருக்க மாட்டான். ஐ'ம் ஷ்யூர் அபௌட் இட். இங்கே எங்க ஃபேமிலில இருந்து யாராவது ஒருத்தர் வந்துட்டே தான் இருப்பாங்க. பிஸினஸ் டென்ஷன்ல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறதுக்கு அப்பா, ரிஷிண்ணா, நந்தா.‌‌.. ஏன் அம்மா கூட சில சமயம் தனிமை வேணும்னு எல்லாரையும் விட்டுட்டு வந்துடுவாங்க. சோ, மளிகை சாமான்லாம் எப்பவுமே இருக்கும். டோர் டெலிவரிக்கு இந்த காட்டுக்குள்ள யாரும் வர மாட்டாங்கனு… காய்கறிகள், மத்த தேவையான பொருள்லாம் வரும் போதே வாங்கிட்டு வந்துடுவாங்க. நந்தாவுக்கு மட்டும் தட்சிணா வாங்கி குடுப்பான். அப்புறம் துணிமணி... நீ போட்டிருக்கறது எனக்கு வாங்கின டிரெஸ், ஆரவி." என்று சந்தோஷமாக புன்னகைத்தாள் சீதா.

ஆரவி விழிகளில் வியப்பை ஏந்தி விழிக்க, புன்னகை மாறாமலேயே, "ம்ம்! நீங்க வந்தன்னிக்கு தட்சிணாவை தேடிட்டு அவனைக் காணோம்னதும் திரும்ப மேல வந்துட்டேன். அப்ப இந்த நந்தா ராஸ்கல் வந்து என்ன பண்ணான் தெரியுமா?" எனக் கேட்கவும்,

தான், அப்பொழுது தானே சமைத்த உப்புமாவை கீழ் தளத்தில் அமர்ந்து உண்டு கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தாள் ஆரவி. 

"என் ரூமுக்கு வந்து என் வார்ட்ரோப் திறந்து பார்த்தான். என் துணி எல்லாத்தையும் என் லைஃப் முடிஞ்சதும் அம்மா ஆர்ஃபனேஜ்க்கு தந்துட்டாங்க. இந்த அஞ்சு ட்ரெஸ் மட்டும் நான் கடைசி நாள் வாங்கினது. என்னோட மத்த திங்க்ஸ் இங்கே இருக்கறதுனால இதுவும் மட்டும் இங்கேயே இருக்கட்டும்னு விட்டுட்டாங்க. அதை தான் அக்கா ஞாபகமா இருக்கறதுனு கூட நினைக்காம கேர்ள் ஃப்ரெண்டுக்காக எடுத்துட்டு ஓடிட்டான். ப்ளடி ராஸ்கல்!" செல்லமாக தமையனின் மேல் கோபம் கொண்டாள்.

அதனால் தான் வாசனை திரவியப் பொட்டலத்தை உள்ளே வைத்திருந்தார்களா? உடுப்புகள் சற்று இளகியும், அணிகலன்கள் நிறம் மங்கியும் இருந்ததா? மெலிந்த தேகம் கொண்ட சீதாவின் உடுப்புகளும் இதனால் தான் இவளுக்கு பொருந்தவில்லையா?

இவள் கூறுவது உண்மையாய் இருந்தாலும் விபுநந்தன் நாடகமாடி நம் ஆரவியைக் கிறுக்காக்கியதும் உண்மை தான் அல்லவா?

ஆனால், இங்கு வந்த அன்று சிறிது நேரத்தில் அவனிடம் உண்மையான பதற்றத்தைப் பார்த்தாளே? மறுநாளும் கூட காலையில் கதவை உடைக்க முயன்று கொண்டிருந்தானே? ஒருவேளை அதுவும் கூட அவனின் நடிப்புகள் தானோ?

ஆரவி ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தாள். அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவள் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை எண்ணி மருகினாள். 

காதல் கிறுக்கு!
அதில், இவள்
மனதின் முதல் மரிப்பு!!

பூக்கும்🌻🌺 



Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)