சீதையின் பூக்காடு - 13.1

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 13.1


விபுநந்தனிடம் காதல் சொல்லிவிட்டு வந்த ஆரவி, தனதறைக்கு அடுத்த அறைக்கதவு காற்றில் ஆடியதைக் கண்டு உள்ளே சென்று பார்வையிட எண்ணினாள். இங்கு எந்த அறைகளும் பூட்டப்படாமல் தான் இருந்ததென்றாலும், இன்று சற்று விலகி திறந்திருந்தாற் போல் இருந்தது. 

உள்ளே அந்த அரூபப் பெண் அமர்ந்திருக்க, முதலில் பயந்த ஆரவி பின் அவள் யாரென கோபமாக வினவ, அவள் அங்கிருந்த அலமாரியில் உள்ள புகைப்படத் தொகுப்பைக் காண செய்தாள்.

ஓர் தொகுப்பில் இருந்த முதல் நான்கு புகைப்படங்களைப் பார்த்ததுமே ஆரவிக்கு எதுவோ புரிவதைப் போல் இருந்தது. 

புகைப்படங்களில் இந்த பெண்ணோடு, இன்னும் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் படகு சவாரி செய்பவர்களைப் போல லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தனர். அந்த இரண்டு பெண்களில் ஒருவர் இவர்கள் அன்னையாக இருக்க வேண்டும். அளவான புன்னகையோடு நிமிர்வாய் நின்றிருந்தார். மற்றவள் இவளுடைய சகோதரியாக இருக்கலாம். ஆடவர்களில் ஒருவன் நம் ஆரவியின் மனதை மயக்கிய திருடன், விபுநந்தன்! இன்னொருவர் இவர்கள் தந்தையாக இருக்கக்கூடும். ஆனால் தோழனைப் போல் தம் மக்களோடு உல்லாசமாய் சிரித்துக் கொண்டிருந்தார். மற்றொருவன் விபுநந்தனின் அண்ணனாக இருக்க வேண்டும். பெரும்பாலான புகைப்படங்களில் விபுநந்தன் தன் முருங்கைக்காய் கையை யார் மேலேனும் போட்டவாறு அரும்பு மீசையோடு வாயைக் கோணலாக்கி சிரித்துக் கொண்டிருந்தான். 

பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் திகைப்பிற்கு சென்ற ஆரவி நிமிர்ந்து அந்த பெண்ணைப் பார்த்து, "நீ… நீங்க?" எனக் கேட்டாள். கண்கள் தவிப்பில் விழுந்து, கண்ணீரில் கலங்கி சிவக்க ஆரம்பித்தது.

"நந்தாவோட அக்கா! சீதா… சீதாலக்ஷ்மி ரகுநந்தன்!" இவள் தோரணையில் தான் எத்தனை கம்பீரம்! என்ன ஒரு நிமிர்வு!!

ஆனால் அதையெல்லாம் கவனியாமல், அவள் சொன்னதைக் கேட்டதுமே நெஞ்சை அடைத்த உணர்வை அடக்கவியலாமல் தரையில் தொப்பென்று விழுந்து, மடங்கி அமர்ந்தாள் ஆரவி! ஏதோ ஓர் திடப்பொருள் தொண்டைக்குள் மாட்டிக்கொண்ட உணர்வில் தத்தளித்தாள். 

அவள் பெயரைக் கேட்டதும் மூளை எதையோ 'யோசி! யோசி!!' எனக் கட்டளைப் பிறப்பிக்க, அது என்னவென்று புரியாமல் அறிவு ஒரு பக்கம் திணற, அவள் நந்தனின் தமக்கை என்றதில் மனம் மறுபக்கம் பலமாய் அடிவாங்கியது. இவள் இங்கு இருக்கிறாள் எனில்? இந்த வீடு விபுநந்தனுடையதா? இல்லை… இவள் பாசத்தின் பேரில் அவனை சுற்றி வருகிறாளா?

"ஹேய் ஆரவி! என்னம்மா? வை ஆர் யூ லைக் திஸ்?" என்றவாறே இவளும் அவள் முன் அமர்ந்தாள்.

அன்று அவன் கேட்டதைப் போலவே இப்போது இவளும் கேட்டதில் ஆரவியின் கண்கள் உடைப்பெடுத்த அணையாகிவிட்டது.

"ப்ச்! எதுக்கு இப்ப இந்த அழுகை? பொண்ணுங்க அழறது எனக்கு பிடிக்காது. ஸ்டாப் யுவர் டியர்ஸ் ஃபர்ஸ்ட்!" என்றாள், அதட்டலாக!

வழிந்த கண்ணீரைத் துடைக்காமல், "அப்ப இந்த ஆம் (வீடு) கூட விபுவோடது தானா?" என்று தன் முதல் சந்தேகத்தைக் கேட்க,

'இதென்ன முட்டாள்தனமான கேள்வி? இது தெரியாமலா நாலு நாளா இங்க இருக்கா?' என்றெண்ணிய சீதா, "ஆமா ஆரவி! உனக்கு தெரியாதா என்ன?" என பதில் கேள்வி கேட்டாள்.

நெஞ்சம் முழுதும் பரவிய வலியை ஆரவியின் சின்ன இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காதலைக் கூறி வந்த மறுகணம், கனலை வாரி இறைத்தால் பாவம் பெண்ணவள் என்ன செய்வாள்? விபுநந்தனின் மேல் வந்த சந்தேகத்தைக் கூடத் தோற்கடித்தது இவள் அவன் மீது வைத்த காதலல்லவா? தன் காதல் பொய்த்துப் போனதை எண்ணி அவள் மனம் துவண்டு சரிந்தது. அறிவு சொன்னதை ஏற்காததால் இப்போது பெண்ணவளின் மனம் விண்டு வலித்தது. 

இடையில் அந்த பெண்ணின் பெயர் வேறு மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இம்சித்தது. ஏன்? ஏன்? ம்ஹூம் தெரியவில்லை. அதை யோசிக்க திராணியில்லாது, தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம்; தன் விபு தவறாகிப் போனான் என்ற எண்ணமே முன்னால் நின்று ரணம் தந்தது.

தான் அவள் நெஞ்சில் ஏதோ பாரமேற்றி விட்டோம் என்பதை உணர்ந்த சீதா, "ஆரவி! ப்ளீஸ் அழாத'ம்மா. ஏன் இது நந்தாவோட வீடு'ன்னு உனக்கு தெரியாதா? அப்ப நீ அவன் ஃப்ரெண்ட் இல்லையா?" எனக் கேட்க, தலையை குனிந்தவாறே இல்லையென தலையசைத்தாள். 

"அப்புறம் எப்டி இங்கே வந்த?"

ஆரவி வாயைத் திறப்பதாகக் காணோம்.

"இங்க பாரு... நீ ஏதாவது சொன்னா தானே எனக்கு தெரியும்? இப்ப என்னாச்சுனு இவ்ளோ ஃபீல் பண்ற நீ?" 

இப்போது சீதாவுக்குமே குழப்பமாக இருந்தது. நந்தனின் தோழியென்று, தான் நினைத்திருக்க அவள் இல்லையென்கிறாளே?

"ஆரவி! ப்ளீஸ் அவுட் வித் இட்! பேசினா தான் தெளிவு கிடைக்கும்."

மூக்கை உறிஞ்சிவாறே நிமிர்ந்த ஆரவி, ஏதோ ஓர் அநாமத்தேய தொலைபேசி அழைப்பில் இங்கு வர நேர்ந்ததை அழுதுகொண்டே கூறினாள்.

"விபுவும் அப்டி வந்ததா தான் சொன்னான்." என்றவள், ஏதோ நினைத்தவளாக, "ஆமா… நாங்க இங்கே வந்த சாயங்காலம் நீங்களும் இங்கே தான் இருந்தேளா?" எனக் கேட்டாள். அப்படி இருந்திருந்தால் தம்பியின் தத்ரூபமான நடிப்பைக் கண்டிருப்பாளல்லவா?

"இல்ல ஆரவி! நான் இந்த காட்டிலயும் மொட்டைமாடிலயும், இதோ… இது என்னோட ரூம்! இங்கயும் தான் இருப்பேன்." 

"ஓ! அப்புறம் எப்டி நான் உங்க தம்பியோட ஃப்ரெண்ட்னு நினைச்சேள்?"

"நந்தா எப்பவும் வீக் எண்ட் இங்க தான் இருப்பான். ஃபோட்டோகிராஃபி அவன் ஹாபின்றதால அவன் கேமராவ எடுத்துட்டு பாதி நேரம் இந்த காட்டுக்குள்ள தான் சுத்திட்டு இருப்பான்." 

கேமரா! சற்று முன்னர் விபுவின் அறையில் தான் கண்ட கேமரா! அது அவனுடையதா? அப்போது கருத்தில் பதியாதது இப்போது தான் சிந்தனையில் உறைக்கிறது. 

உங்களுக்கும் நினைவிருக்கிறதா? நம் ஆரவியை, விபுநந்தன் இவ்வீட்டில் பால்கனியில் வைத்து முதன்முதலாய் ரசிக்கும் போது ரவிவர்மாவின் ஓவியத்தைக் கேமரா கண் வழி ரசிப்பவன் போல் ரசித்தான். அவள் காட்டிற்குள் தூரம் தூரமாய் நடக்க வேண்டுமென்றதும் அவன் விழிகளில் ரசனையேறியதும் இதனால் தான்! பின்னும் கூட மரத்தை சுற்றிய பூங்கொடிகளை 'க்ளிக்'க வேண்டுமென்பான். கதையும் கவிதையும் படைப்பவர்களுக்கு மட்டுமல்ல, இவனைப் போன்ற கலைஞர்களுக்கும் ஒப்புவமையும் ரசனையுமுண்டு! 

ஆரவி சிந்திப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள், சீதா. "சில சமயம் அவன் மட்டும் தனியா வருவான். சில சமயம் அவன் ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வருவான். இந்த வாட்டி எனக்கே ஆச்சர்யம் தான். என்னடா ஒரு பொண்ணை அழைச்சிட்டு வந்திருக்கானேன்னு நினைச்சேன். அதுவும் உன்னை மாடி ரூம்ல வேற தங்க வச்சிருக்கான். அவன் ஃப்ரெண்ட்ஸ்'அ கீழே இருக்க கெஸ்ட் ரூம்ல தான் தங்க வைப்பான்‌. இப்ப நீ சொல்றதைப் பார்த்தா...." என்று இழுத்தவள், "ஆனா ஆரவி... நந்தா தப்பான எண்ணத்துல உன்னை இங்கே வரவழைச்சிருக்க மாட்டான்." என்றாள், தம்பியை விட்டுக் கொடுக்காதவளாக!

ஆரவி அழுத விழிகளால் ஓர் தீர்க்கப்பார்வை பார்க்கவும், தன்னைப் போல சீதாவின் விழிகள் தாழ்ந்தன. 

"மொட்டைமாடில மல்லிக் கொடிக்கிட்ட இருக்கச்ச நீங்க தான சிரிச்சு என்னை பயமுறுத்தினேள்? சோ, நீங்களும் உங்க தம்பியோட ப்ளான்ல ஒரு பார்ட்? ம்ம்??"

"ஆரவி ப்ளீஸ்... நான் இப்டி இந்த நிலைமைல இருக்கேன்றதே எங்க ஃபேமிலில யாருக்கும் தெரியாது. அண்ட் மோர்ஓவர் சத்தியமா உன்னை மட்டுமில்ல, வேற யாரையுமே நான் பயமுறுத்த நினைச்சதில்ல. என் குரல் உனக்கு கேக்கும்னு கூட எனக்கு தெரியாது ஆரவி." எனத் தன்னை புரிய வைத்து விடும் வேகத்தோடு பேசினாள் சீதா.

"ம்ம்! அன்னிக்கு நான் உங்க சத்தம் கேட்டு தான் மயங்கினேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா அதுக்கப்புறமும் சிரிச்சேள். பாட்டு பாடினேள். யூ ரியலி ஸ்கேர்ட் மீ அ லாட்!" என்று மீண்டும் குற்றம் சாட்டினாள்.

"அது இந்த நந்தா எரும ஏதாவது ஜோக்கடிச்சதும் என்னை அறியாமலேயே சிரிச்சிட்டேன். எப்பவும் நந்தா ஃப்ரெண்ட்ஸ் கூட்டிட்டு வரும் போது நான் அவங்களோட இருக்க மாட்டேன் ஆரவி. அவங்களோட மட்டுமில்ல, வேற வெளியாட்கள் யார் இருக்கப் பக்கமும் நான் போக மாட்டேன். உன்னை மாதிரி யாராவது நான் இருக்கறத, அவங்க இன்ட்யூஷனால உணர சான்ஸ் இருக்குது. ஆனா, அன்னிக்கு நான் இங்க என் ரூம்ல இருக்கும் போது நந்தா வந்தான். என் கப்போர்ட்ல இருந்து செஸ் போர்ட் எடுத்துட்டு போனான். எனக்கு செஸ்னா ரொம்ப இஷ்டம். அதான் நீங்க விளையாடறதைப் பார்க்க ஆர்வமா கீழே வந்தேன்."

மிச்சத்தையும் கூறி முடி என்று ஆரவி அவள் முகத்திலிருந்து பார்வையை அகற்றாமல் இருந்தாள்.

"தென்? பாட்டா? நான் ஷாருக் ஃபேன்." எனவும்,

ஆரவி அன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்தாள். 'ஷாருக் ஃபேன் தில்வாலே துல்ஹனியா பார்க்காம இருப்பாளா?' என்றதும், விபுநந்தனின் குரல் ஏன் அப்படி வேதனையில் குளித்து வெளிவந்ததென்று இப்போது புரிந்தது.

இந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியை கீழேயுள்ள இணைப்பைத் தொட்டு வாசிக்கலாம் 🌿🌸


Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)