சீதையின் பூக்காடு - 16.2

அத்தியாயம் 16.2
"ஓய் தான்யாக்கா! வந்த நாலு நாளா நானும் பார்க்கறேன். ஒண்ணு அந்த ஐ ஃபோனை நோண்டிட்டு இருக்க. இல்ல லேப்புக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க. அப்டி என்ன பிஸினஸ் டீல் பண்ணிட்டு இருக்க? மச்சான் அதுக்குள்ள உன் கையில மேனேஜ்மென்ட்'அ மொத்தமா ஒப்படைச்சிட்டாரா?"
"நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்பாம போடா. அப்டியே உங்க மச்சான் என்னை நம்பி குடுத்துட்டாலும்... எனக்கு இருக்கற ஒரே என்டர்டெயின்மென்ட் இது தான்." என்று அலைபேசியைக் காட்டினாள்.
"ரொம்ப அலுத்துக்கற போலயே?"
"ஹான்! இங்கேயும் என்னைக் கண்டுக்காம எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க போயிடறாங்க. நான் வேற என்ன பண்றதாம்?"
"ஏன் அம்மா கூட ஸ்கூலுக்கு போகலாம். அப்பா கூட ஹோட்டல் போயிருக்கலாம். இல்ல அண்ணியோட ரிசார்ட்டாவது போயிருக்கலாம்."
"அதுக்கு நான் இங்க இருந்து இந்த ஸ்டோரீஸே படிச்சிடுவேன்டா நந்தா."
"படிக்கற காலத்துல தான் கைட்குள்ள (guide) கதை புக்கை ஒளிச்சு வச்சு படிச்சு, அம்மாகிட்ட அடி வாங்குவ. கல்யாணம் ஆனதுக்கப்புறம் கூட திருந்தலயா நீ?"
"திருந்துறதுக்கு நான் என்ன குடிகாரனாடா எரும?"
"நீ அதை விட மோசமா போய்க்கிட்டு இருக்க தான்யாக்கா. மச்சானுக்கு சோறு கூட போடாம கதை படிக்கறியாம். கம்ப்ளெய்ண்ட் வருது. வயித்துல இருக்க என் மருமகளுக்கும் இப்பவே ட்ரைனிங் குடுக்கறியா?" என்றவன், "ஆமா… இதுலாம் என்ன? அதுக்குள்ள ஷாப்பிங்கா?" என்று அருகில் இருந்த பைகளைக் காட்டிக் கேட்டான்.
"ஆமா நான் என்ன பெரிசா ஷாப்பிங் பண்ணிடப் போறேன்? எல்லாமே புக்ஸ் தான்." எனவும்,
பைகளில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் எடுத்து அட்டைப் படங்களைப் பார்த்தவன், "இது என்ன கதை? அது என்ன கதை?" என்று ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவளும் தான் படித்திருந்த கதைகளைப் பற்றியும், நாயக, நாயகிகளைப் பற்றியும் சலிக்காமல் கூறினாள்.
ஒவ்வொரு கதையைப் பற்றி கூறும் போதும் விபுநந்தன் தன் கமெண்ட்களை விளையாட்டாகக் கூறி தான்யாவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். அவளும் தன் பொழுதுபோக்கு ஒன்றும் அத்தனைப் பழுதானதல்ல என்று நிரூபித்து விடும் நோக்கோடு, தம்பியிடம் நல்ல பேரை வாங்கி விட எண்ணி, தனக்குப் பிடித்த நல்ல கதைகளைப் பற்றி எடுத்துக் கூறினாள்.
அப்போது ஆன்டி ஹீரோ என்று சொல்லி, ஓர் கதையைப் பற்றி அவள் சொல்லும் போது விபுநந்தன், "தான்யாக்கா! ஹீரோ… ஹீரோயினைக் கடத்திட்டுப் போறதுக்கு பேரு லவ் இல்ல, ஹாரஸ்மென்ட்!" என்று சொல்ல,
"டேய் அது அந்த பொண்ணுக்கு பிடிக்கலனா தான் ஹாரஸ்மென்ட். அவளும் இவனை விரும்பினா அது லவ் தான்!" என்று அடித்துக் கூறினாள்.
"அதெப்டி கடத்திட்டு போறவன் மேல போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுக்கறதை விட்டுட்டு லவ் வருமாம்?" என்று நக்கலடித்தான்.
"லவ் இஸ் ஆன் ஆக்ஸிடென்ட் நந்தா! அந்த ஆக்ஸிடென்ட் எங்க வேணும்னாலும், எப்ப வேணும்னாலும், எப்டி வேணும்னாலும் நடக்கலாம். மால்ல, தியேட்டர்ல, கோவில்ல, பீச்ல, பால்கனில நிக்கும் போது எதிர்வீட்டு பொண்ணு மேல…"
"ஹான்! மீன் வாங்கப் போகும் போது அந்த மீன்காரி மேல…"
"ஏன் மீன்காரினா லவ் பண்ண மாட்டியா? எத்தனை சினிமால பார்க்கறோம்? லிஃப்ட்ல கூட மீட் பண்ணுவாங்களே… அந்த மாதிரி தான் இதுவும்! கடத்திட்டு போகும் போது வெறுப்பு காட்டினாலும் அப்புறம் அவனோட கண்ணியத்தைப் பார்த்து, அவன் மேல உள்ள நம்பிக்கைல லவ் வரும்."
"தான்யாக்கா! கடத்திட்டு போறவன் எப்டி கண்ணியவானா இருப்பான்? சோ, உன் மொதோ பாயிண்ட்லயே நீ அவுட்!"
"இருப்பான்டா! அப்டி இல்லனாலும் ஹீரோயினோட பழக ஆரம்பிச்சதும் அவ இயல்பையும், குணத்தையும் பார்த்து கண்ணியவானா மாறிடுவான். அவ மேல இவன் வச்ச காதலே இவனை மாத்திடும்."
"ஹாஹாஹா… காதலென்ன கம்ப்யூட்டர் வால் பேப்பரா? பார்த்ததும் மனசை லேசாக்கி மைண்ட மாத்துறதுக்கு?" என்று மேலும் கடுப்படித்தவன், "இப்ப நீ சொன்னது என்னக் கதை? காட்டு பார்ப்போம்?" என்றவாறே அங்கிருந்த புத்தகங்களைப் புரட்டினான்.
ஓர் புத்தகத்தில், 'ஒரே தாவலில் சுவற்றின் மேலேறியவன் அவளும் மேலேற கைக் கொடுத்தான்.' என்றிருந்தது. அதைப் படித்ததும் பேசிக்கொண்டிருந்த தலைப்பை விட்டுவிட்டு, அடுத்த கிண்டலுக்கு ஆயத்தமாகிவிட்டான்.
"ம்க்கும்! இவர் மேல ஏறிட்டு அப்புறம் அந்த பொண்ணு ஏற கைக் குடுத்தாராமாம். இங்க பாரு தான்யாக்கா… இந்த மாதிரிதான் நம்மூர் சினிமாலயும் ஹீரோ, ஹீரோயினைக் காப்பாத்தற மாதிரி காட்டறாங்க. இதெல்லாம் பொண்ணுங்களோட வலிமையை டேமேஜ் பண்ற சீன்ஸ் தெரியுமா? ஏன் பொண்ணுங்களால தனியா தப்பிக்க முடியாதா என்ன?"
"ஹான்! ஏஞ்சலினா ஜோலியும், மிச்சேல் யோ-வும் (மலேஷியன் நடிகை) காத்துல பறந்து பறந்து வில்லனை அடிச்சு போட்டுட்டு தப்பிச்சு போனா நம்மாளுங்க அப்ளாஸ் பண்ணி ரசிப்பாங்க. அதுவே நம்மூர் பொண்ணுங்க சுவத்துலயும், மரத்துலயும் ஏறினா 'ரவுடி பொண்ணு. ஆம்பள மாதிரி திரியுது'னு மட்டமா தான் பேசுவாங்க."
"நானெல்லாம் அப்டி கிடையாதுப்பா. நீ வேணா பாரு… பில்லா-ல வர்ற நயன்தாரா மாதிரி ஒரு ப்ரேவ் கேர்ள்'அ தான் நான் கட்டிப்பேன்."
"போடா அரட்டை! யார் கண்டா… நீயே கூட ஒரு மக்கு பொண்ணைக் கடத்தி, லவ் பண்ணாலும் பண்ணலாம்."
தான்யாவின் வாய் முகூர்த்தம் அச்சு பிசகாமல் அரங்கேறப் போவதை அப்போது இருவருமே அறிந்திருக்கவில்லை.
"யாரு நான் கடத்தப் போறேனா? உன்னை இப்டிலாம் உளற வைக்கற அந்த ரைட்டரை வேணும்னா கடத்தறேன். ஹாஹா…" பேசிக்கொண்டிருந்தவனின் கண்களில் பட்டது அந்தப் புத்தகம்! பின்பக்க அட்டையில் எழுத்தாளரின் புகைப்படத்தோடு கூடிய, கதையைப் பற்றிய சிறு விளக்கவுரை கொண்ட அந்தப் புத்தகத்தை எடுத்தான்.
'ஆவியின் அட்டகாசம்! காதலர்களின் பரிதவிப்பு!! வில்லனின் குரூரத்தால் ஓர் மலைக்காட்டு பங்களாவினுள் அடைக்கப்படும் காதலர்களுக்கு, மேலும் அங்குள்ள தீய சக்தியால் விளையும் அனுபவங்களை என் பாணியிலான எழுத்தில் வடித்திருக்கிறேன். என் கற்பனையோடு பயணிக்க வாருங்கள்.
இப்படிக்கு,
உங்கள் கருத்துக்களை பேராவலோடு எதிர்பார்த்திருக்கும் ஆரவி.' என்று கூறி, கீழே அவளின் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
அவன் கையில் வைத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்ததும், "ஹேய்! இந்தப் பொண்ணு எழுதற எல்லா நாவலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நந்தா! ஃபேஸ்புக், இன்ஸ்டா-ல நான் இவளை ஃபாலோ பண்றேன் தெரியுமா?" என்ற தான்யாவின் பேச்சுக்கள் காற்றோடு கரைந்து கொண்டிருக்க, விபுநந்தனின் ஒற்றை விரல் வருடிக் கொண்டிருந்தது, அந்த விளக்கவுரையின் மேலாக சிறிய படத்தில் இருந்த ஆரவியின் வதனத்தை!
மெதுவாக புத்தகத்தை முன்புறம் திருப்பினான். திருப்பியவனின் விழிகளில் பதிந்து, உதடுகளின் உச்சரிப்பின் வழி ஒலி வடிவமாக வந்தது, 'சீதையின் பூக்காடு' என்ற தலைப்பு!
உடனே, "நான் இந்த புக்-அ படிச்சிட்டு தரேன் தான்யாக்கா!" என்ற வார்த்தைகள் அவனனுமதி இல்லாமலேயே வெளிவந்திருந்தன.
ஆச்சரியத்தில் பெரிதாக விழி விரித்த தான்யா, "என்ன!! நீ ஸ்டோரி வாசிக்கப் போறியா?" எனக் கேட்டாள்.
"ம்ம்!!" அதற்கு மேல் பதிலில்லை தனயனிடம்!
"இதெல்லாம் வேஸ்ட்னு எனக்கு க்ளாஸ் எடுப்ப? இப்ப நீயே வாசிக்கறேன்ற? நம்பவே முடியலடா நந்தா." என்றாள், ஆச்சர்யத்திலிருந்து மீளாதவளாக!
பதிலேதும் சொல்லாமல் தனதறைக்குச் சென்றவன், ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் கழிந்த பின் தான்யாவிடம் வந்தான்.
"தான்யாக்கா!"
"ம்ம்!!" அவள் படித்துக்கொண்டிருந்த நாவலிலிருந்து விழிகளைத் திருப்பாமலேயே 'உம்' கொட்டினாள்.
"இந்த பொண்ணோட…" என்று ஆரம்பித்தவன், அவள் நிமிராததில் கடுப்பாகி பிள்ளைத்தாச்சி என்றும் பாராமல், "ஹே லூசு தான்யாக்கா!" என்று அவள் தோள் பிடித்து உலுக்கினான்.
"ப்ச்! என்னடா இம்சை? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அம்மா வந்து சாப்பிடக் கூப்பிட்டாங்க. இப்ப நீயா? உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கறதுக்கெல்லாம் அநியாயமா என்னை டிஸ்டர்ப் பண்ணாத சொல்லிட்டேன்." என்று கண்களை உருட்டி, விரல் நீட்டி மிரட்டினாள்.
"எப்டி? கூடப் பொறந்தவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கறது உனக்கு அநியாயமா?"
"பின்ன இல்லயா? நிம்மதியா கதை படிக்க விடாம சமைக்க சொல்றாங்க. சமைச்சத எல்லாருக்கும் பரிமாற சொல்றாங்க. அப்புறம், அதை சாப்பிட வேற சொல்றாங்க. இதெல்லாம் அநியாயமில்லயா? அராஜகமில்லயா?" என்று அலுத்துக் கொள்ள,
"அது சரி! நீ நாள் முழுக்க சோறு தண்ணியில்லாம இப்டி கதைகளையேக் கட்டிக்கிட்டு கிட! இப்ப இங்க வா!!" என்றவன், "இந்த பொண்ணோட ஃபேஸ்புக் ஐடி எதுனு சொல்லு!" என்று கையிலிருந்த ஆரவியின் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான், வில்லங்கம் பிடித்த விபுநந்தன்!
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment