
அத்தியாயம் 17
ஆரவி எழுதிய சீதையின் பூக்காட்டிற்குள் தொலைந்து போன விபுநந்தன் தான்யாவிடம், "இந்த பொண்ணோட ஃபேஸ்புக் ஐடி எதுனு சொல்லு!" என்று கேட்கவே,
முகம் மலர்ந்த தான்யா, "பார்த்தியா... உனக்கே பிடிச்சிடுச்சு! அந்தப் பொண்ணோட ஸ்டோரி இன்னும் கூட இருக்குது. வாசிச்சு பார்க்கறியா?" எனக் கேட்டாள்.
"ப்ச்! முதல்ல ஐடி'அக் காட்டு!"
அவன் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியாதவள் தன் ஐஃபோனிலிருந்து, முகப் புத்தகத்தில் ஆரவியின் சுயவிவரத்தை எடுத்துக் காண்பித்தாள்.
சில நிமிடங்கள் பார்வையிட்டவன் ஐஃபோனை அவளிடமே திருப்பித் தந்துவிட்டு, "ஏன் தான்யாக்கா இந்த கதைல உன் ரைட்டர் சொல்றதைப் பார்த்தா… பொண்ணைக் கடத்தறது ரொம்ப ஈஸி போலவே…" என்று வில்லனைப் போல் தாடையை சொறிந்தான்.
"அது கதைடா நந்தா! நிஜத்துல அப்டிலாம் பண்ண முடியாது. இப்பலாம் பொண்ணுங்க ரொம்ப ஸ்மார்ட்! தற்காப்புக் கலைகள் நிறைய கத்து வச்சிருக்காங்க. பேக்ல (bag) ஆல்வேஸ் மொளகா பொடி, பெப்பர் ஸ்ப்ரே இருக்கும். நான் கூட வச்சிருக்கேன். எதுக்கும் வழி இல்லனா அக்கம்பக்கம் உள்ள வீடுகள்லயோ… இல்ல வேற ஆட்களிடமோ சமயோசிதமா பேசி தப்பிச்சிடுவாங்க. அவங்கக்கிட்ட ஹீரோயிசம்லாம் எடுபடாது."
"அந்த ஸ்மார்ட் பொண்ணை நான் கடத்திக் காமிச்சா என்னை ஹீரோனு ஒத்துக்குவியா?"
இப்போது தான் அவன் தீவிர முகத்திலிருந்த வில்லத்தனத்தைக் கண்டாள் தான்யா!
அடிக்கடி தம்பியிடம் காணும், நினைத்ததை முடிப்பேன் எனும் அழுத்தமான முகம்! விரும்பியது வேண்டும் எனும் பிடிவாத முகம்! செய்தால் என்ன தவறு என்ற திமிர் முகம்!
"அடேய்! இதுக்கு தான் அந்த பொண்ணு ஐடி கேட்டியா? வேணாம்டா நந்தா… நீ ஹீரோ தான். நான் ஒத்துக்கறேன். ஏதோ கற்பனைல உதிக்கறதை கதையா எழுதறாங்க. பொழுது போக என்னை மாதிரி ஆளுங்க அதை வாசிக்கறோம். இதைப் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு கடத்தறேன் அது இதுனு உளறிட்டு இருக்க? ஈவ்டீசிங்னு சொல்லி உள்ளே தூக்கி போட்ருவாங்க. ஜாக்கிரதை!" என உள்ளுக்குள் தம்பியின் அவதாரத்தைக் கண்டு உதறினாலும், அவனை எச்சரிக்கும் விதமாகவேப் பேசினாள்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னால கடத்திட்டு போறவனை அந்த பொண்ணும் விரும்பினா அது ஹாரஸ்மென்ட் இல்ல, லவ் தான்'னு நீ சொல்லல?"
இப்படி தன் வார்த்தைகளையே தனக்கே திருப்பிப் படித்துக் காட்டுவான் என்று நினையாதவள் திருதிருத்தாள். இருப்பினும், "அதுக்கு அந்த பொண்ணும் உன்னை லவ் பண்ணனும்டா." என்றவளின் முகமருகே குனிந்தவன், "உன் தம்பியை எந்த பொண்ணும் வேணாம்னு சொல்லிடுவாளா, தான்யாக்கா?" எனக் கேட்டான், அக்மார்க் வில்லன் பார்வையை மாற்றாமலேயே!
தம்பியின் மேல் மையல் கொண்ட பெண்களைப் பற்றி அறிந்திருந்தவள் வேகமாக படபடத்தாள். "கொன்னுடுவேன் நந்தா! திரும்பவும் சொல்றேன். அது வெறும் கதை! மோர்ஓவர், அவ எழுதினதுல ஹீரோ... ஹீரோயினைக் கடத்த மாட்டான். வில்லன் தான் அவங்க ரெண்டு பேரையும் கடத்தி அடைச்சு வச்சிருப்பான்."
"அது அவ கதை… இது என் கதை! அதுல அவ டைரக்ஷன்… இது இந்த நந்தாவோட டைரக்ஷன்! ஹாஹாஹா…"
'அய்யய்யோ… அப்டியே வில்லன் மாதிரியே சிரிக்கறானே…'
இதென்ன விளையாட்டாக ஏதோ பேசப் போய் இப்படி விபரீதமாக முடிந்துவிட்டதே என்று பதட்டமான தான்யா, "நந்துக்குட்டி, அக்கா சொல்றதைக் கேளுமா…" என்று கெஞ்சலில் இறங்க, அவளைக் கையமர்த்தி விட்டு, "இப்ப நீ உன் நந்துக்குட்டி லவ்'க்கு ஹெல்ப் பண்ணுவியா? மாட்டியா?" எனப் பிடிவாதமாகக் கேட்டான்.
அவன் வார்த்தைகளில் கட்டாயமாக உதவி செய்தே ஆக வேண்டும் என்ற கட்டளையே தொனித்தது. ஆனால் அதையெல்லாம் கவனியாத தான்யா, "வாட்?! லவ்-ஆஆ??" என்று ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.
"ஏன் தான்யாக்கா? உன் நந்துக்குட்டிக்கு லவ் வரக் கூடாதா?" என்று சிறுபிள்ளைப் போல் பாவனையாகக் கேட்டவாறே அவளருகே அமர்ந்தான்.
அதை வில்லத்தனத்தில் குழந்தைத்தனத்தைக் கலந்த குரூர பாவனையாகவே கற்பனை செய்து கொண்டாள் தான்யா!
"நந்தா…"
"ஐ லவ் ஹர், தான்யாக்கா! இதோ இந்த முகம் ஒரு மைக்ரோ செகண்ட்ல மனசுக்குள்ள புகுந்து ஒட்டிக்கிச்சு." என்று புத்தகத்திலிருந்த ஆரவியின் புகைப்படத்தைக் காண்பித்தான்.
ஆனால் தான்யா கலக்கமாகவே மீண்டும், "நந்தா…" என்று இழுக்க,
இவனும் மீண்டும், "லவ் ஹர், தான்யாக்கா!" என்று அதே பாட்டைப் பாடி அவள் பிபியை எகிற வைத்தான்.
'ஹய்யோ! என்ன சொல்லி இவன் மனதை மாற்ற முடியும்?' என்று கலங்கிப் போய் அமர்ந்திருந்தவளைக் கண்டு கொள்ளாமல் அவன் பாட்டுக்கும் பேசினான்.
"ஷி பார்ன் ஃபார் மீ, தான்யாக்கா. ஒன்லி மைன் டூ மீ!" என்றவன், "ம்ம்!! ஒத்துக்கணும் தான். அவ ரைட்டிங்'ல ஏதோ மேஜிக் இருக்குது. இல்லனா ஒரு நாவல் ஃபுல்லா பொறுமையா படிக்கறவனா நானு?" என்று ஆரவியின் மீதான காதலை அழுத்தமாக தெரிவித்து, தான்யாவின் தன்னைக் குறித்த வில்லத்தனம் பொய்யென்று நிரூபித்தான்.
உண்மையிலேயே அவன் குரலில் கசிந்தது காதலே தான்! தம்பியின் கண்களில் தெரிந்த காதலை வாய் பிளந்து பார்த்திருந்த தான்யாவிடம், மேலும் தன்னுள்ளத்தை மறைக்காமல் பேசினான் விபுநந்தன்.
"அதுவும் இந்த கதைல வர்ற அந்த கேரக்டர் சீதா… சான்ஸ்லெஸ்! அப்டியே நம்ம சீதாக்கா மாதிரி. இல்ல? வாட் அ ப்ரேவ்னெஸ்!" என்று வியக்கவும் தான், தான்யாவிற்கு அந்த கதையை தான் இணையத்தில் தொடர்கதையாக வெளிவரும் போது வாசித்தது நினைவு வந்தது.
ஆனால் அவளே கூட தன் உடன் பிறந்த தமக்கை சீதாலட்சுமியை, கதையின் நாயகியோடு சம்பந்தப்படுத்திப் பார்க்காதது தன் தம்பிக்கு தோன்றியிருக்கிறதே! இதைத் தான் விதி என்பதா?
ஆரவியின், 'சீதையின் பூக்காடு' என்ற கதையின் நாயகி மிகுந்த துணிச்சல்காரி. எதற்கும் அலட்டிக்கொள்ளாதவளாய் இருப்பாள். அவளின் அஞ்சா தன்மையில் ஈர்க்கப்பட்டு, அவள் பின்னேயே சுற்றி காதல் கொள்ள செய்வான் நாயகன். வீட்டில் அவளைக் கண்டித்தாலும் அவள் தந்தையின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் சீதா தன் துணிச்சல் குணத்தை சற்றும் மாற்றிக்கொள்ள முயலவில்லை. இந்நிலையில் தான் வில்லனின் சட்ட விரோத செயல்கள் பற்றி அறிந்து மிகுந்த போராட்டத்தின் பின், அவனை சட்டத்தின் முன் நிறுத்துவாள். ஆனால் விசாரணையின் பொழுதே பெயிலில் வெளிவருபவன், தன் வேலை முடியும் வரை சீதாவை கடத்தி வைக்கத் திட்டமிடுவான். அவனின் செயலிற்கு இடையூறாக வரும் நாயகனையும் சேர்த்தே கடத்திச் சென்று மலைவாசஸ்தலத்தில் உள்ள ஆளில்லா வீடொன்றில் அடைத்து வைப்பான். பின்னும் அவ்வீட்டிலிருந்து வெளிவருபவர்கள் அவனுக்கு தண்டனை பெற்று தந்த பின்னரே ஓய்வார்கள். இவ்வாறாக செல்லும் அந்த கதை!
சாதாரண கான்செப்ட் தான் எனினும் அந்த கதாபாத்திரத்தில் தன் தமக்கையைப் பொருத்தி பார்த்து வாசித்ததால் கூட, ஆரவியின் மீது விபுவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.
"நான் உன்னை லவ் பண்றேன்றதையே தான்யாக்கா ஃப்ர்ஸ்ட் நம்பல. அப்புறம் நம்பினாலும் உன்னைக் கடத்தப் போறேன்ற ப்ளானுக்கு ஒத்துக்கவே மாட்டேனுட்டா. 'லவ் பண்றதுனா நேரா போய் சொல்லு. அந்த பொண்ணுக்கும் பிடிச்சா நானே வீட்ல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்'னு தான் சொன்னா. பட், ஐ ஜஸ்ட் வான்டட் டூ சர்ப்ரைஸ் யூ பை ப்ரொபோஸிங் மை லவ்."
எப்படி பேசினாலும் தான்யா, தன் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டாளென உணர்ந்து கொண்ட விபுநந்தன், எப்படியேனும் வித்தியாசமான முறையில் தன் காதலை தெரிவிக்க எண்ணி, தன் முடிவில் பிடிவாதமாக இருந்து தான்யாவிற்கும் தெரியாமல் இக்காரியத்தை செய்யத் துணிந்திருந்தான்.
எனில், ஆரவிக்கு கொடுக்கப்பட்டிருந்த, தமிழ் நாவல் புத்தகங்கள் வைத்திருந்த அறை தான்யாவினுடையது போலும்! அவள் திருமணம் முடிந்து சென்றுவிட்டதால் இங்குள்ள அவளறையில் சிற்சில உடமைகள் தவிர்த்து, மற்றதை காலி செய்திருக்கக்கூடும்.
விபுநந்தன் கூறிய அனைத்தையும் கேட்ட ஆரவிக்கு பெரிதாகக் கோபம் எதுவும் எழவில்லை. அல்லது அடி நெஞ்சில் புகைந்து கொண்டிருக்கிறதோ என்னவோ!
இப்போது அவள் எண்ணமெல்லாம் சீதாவை தான் சுற்றி வந்து கொண்டிருந்தது. அவளின் மிச்ச கதையைக் கேட்க வேண்டும். விபுநந்தன் கூறியதை வைத்து பார்த்தால், உண்மையிலேயே வாழ்ந்திருந்த ஓர் பெண்ணைப் பற்றி ஏதுமறியாமலேயே தன் கற்பனையில் உருவாக்கி, எழுத்தில் வடித்திருக்கிறோம் என்ற எண்ணமே நெஞ்சம் முழுதும் வியாபித்திருந்தது. பெயர் கூட அப்படியே இவளுடையதை உபயோகித்திருக்கிறாளே!
இந்த உணர்வு தான் தனக்கு சீதாவிடம் ஓர் பிணைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அதனால் தான் அவளின் வீட்டினர் கூட அறிந்துகொள்ள இயலாத சீதாவின் தற்போதைய இருப்பைத் தான் உணர நேர்ந்ததோ? அவளுருவம் கண்டப் பின்னும் அவளின் சோக முகம் தன்னை வருத்தியதும் இதனால்தானோ?
இவளைக் காணத் தான் அந்த மீனாட்சிதேவி தன்னை விபுநந்தன் மூலம் இங்கு இழுத்து வந்தாளோ? காரணமின்றி காரியமில்லை என்பது இது தானோ? ஆரவி இன்னதென்று பிரித்தறிய முடியாத ஓர் உணர்வில், நந்தனின் அருகிலிருந்த சீதாவைப் பார்த்திருந்தாள்.
அவள் தம்பியின் விளையாட்டுத்தனத்தை எண்ணி நொந்து கொண்டிருந்தாள். 'ஒரு பெண்ணிடம் காதலை உரைக்க இப்படியா அவளை அலைகழிக்க வேண்டும்? தன் பெற்றோருக்கு தெரிந்தால் என்னவாகும்? முதலில் அவள் பெற்றோருக்கு தெரிந்தால் இவனை சும்மாவிடுவார்களா?' என அவனை கடுகடுத்த முகத்துடன் பார்த்திருந்தாள்.
ஆரவி தன் மேல் கோபம் கொள்வாள் என்று நினைத்திருக்க, எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும் அவள் விழிகள் தாங்க முடியாத வியப்பையும் வேதனையையும் காட்டியதும், நந்தன் தன் மேல் உள்ள ஏமாற்றத்தில் தான் வருத்தப்படுகிறாளென தவறாக புரிந்துகொண்டான்.
"ப்ளீஸ் லிஸன் டூ மீ பேபி! ஏதோ விளையாட்டா ஆரம்பிச்சேன். எங்க தட்சிணாவை ஆஃப் ஆன் ஆர் கழிச்சு வந்து அன்லாக் பண்ண சொன்னேன். ஆனா அவன் எங்கே போய் ஒழிஞ்சான்னு தெரியல." என்று தட்சிணாவின் மீதான கோபம் குறையாது பேசினான்.
'நீ என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்பது போல் எழுந்து கொண்டாள் ஆரவி.
"ஆரவி! நீ கோவப்படறது சரி தான். அதுக்காக இப்டி பேசாம போகாத. ப்ளீஸ்…"
உண்மையில் ஆரவிக்கு தனிமை வேண்டியிருந்தது. நந்தனின் மேல் கோபம் தானெனினும், இப்போது அவனை விட சீதாவே ஆரவியின் மனதை ஆக்ரமித்திருந்தாள். எனவே தான் அவனிடம் மேற்கொண்டு பேச விழையவில்லை.
நேற்றிரவு சீதாவின் கடந்த காலத்தின் மிச்சத்தைக் கேட்டே தீர வேண்டும் என்ற உந்துதல் இப்போது விபுநந்தன் கூறியதைக் கேட்டதும் இன்னும் அதிகமாகவே செய்தது.
யாரோ ஒருவருக்கு நடந்தது என்று கூறியிருந்தால் அன்றைய செய்தியைப் போல், இதுவும் ஒன்று என்று கடந்து வந்திருப்பாளோ என்னவோ! ஆனால் நேற்றைய ஒரு இரவிலேயே ஏதோ தன்னுடனே இருபத்தைந்து வருடங்கள் உடனிருந்தவளைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது ஆரவிக்கு. ஒரு இரவில் தனக்கே இப்படியென்றால், அவளுடன் பழகியவர்கள் அவளை எத்தனை தூரம் விரும்பியிருப்பார்கள்? இப்போது புரிந்தது, அவளைச் சுற்றி இருந்தவர்களுக்கு ஏன் அவளை அத்தனை பிடித்திருந்ததென்று.
விபுநந்தனை விடுத்து தனியே சென்றால் தானே சீதாவிடம் மிச்சக் கதையை கேட்க முடியும்? அத்தோடு இப்போது நந்தனிடம் பேசினாலும் அவனைக் கடித்து வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவனுக்கு தற்போதைய தன் மௌனமே தண்டனையாக இருக்கும் என்றெண்ணினாள்.
எனவே, "நான் கொஞ்ச நேரம் தனியா இருந்துட்டு வர்றேன் விபு. நீ சாப்டு!" என்று விட்டு தன்னறைக்கு சென்று அங்கிருந்த துணிமணிகளையும், ஏனைய தேவையான பொருட்களையும் எடுத்துக்கொண்டு நேரே சீதாவின் அறைக்கு சென்று குளித்து வந்தாள்.
அவள் வந்ததுமே சீதா, "ஆரவி, அவன் ஏதோ விளையாட்டா…" என்று தம்பிக்காக பரிந்து வர ஆரம்பிக்க, அவளை நிறுத்தும்படி கையைக் காட்டிவிட்டு, "உங்களை நான் என் கதைல எழுதிருக்கேன். எனக்கு உடம்பெல்லாம் சிலிர்ப்பா… என்னவோ பண்றது…" என்று உணர்ச்சி மேலிட, மேற்கொண்டு பேச முடியாமல் கண்கள் கலங்க சீதாவைப் பார்த்தாள்.
பின், "எப்...எப்டி ஆச்சு?" என்று கேட்க, மிச்சக் கதையை தொடர்ந்தாள் சீதாலட்சுமி.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment