சீதையின் பூக்காடு - 18

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 18


அந்த பத்திரிக்கை தன் தலைப்பு செய்தியாக, 'குழந்தைக் கடத்தல்! பின்புலத்தில் ****கட்சி தொண்டர்!!' என்று கூறியதை உரக்கப் படித்து விட்டு நிமிர்ந்தார் வித்யாலட்சுமி. ரகுநந்தனின் ஒரே ஒரு மனைவி. சீதாலட்சுமியின் பாசமிகு அன்னை. 

"நீங்க தைரியம்ங்கற பேர்ல இப்டி குருட்டாம்போக்குல விடறதுனால தான் இவ இப்ப கட்சி ஆளுங்களை எல்லாம் பகைச்சிக்கிட்டு வந்து நிற்கறா!" என்று சீதாவின் செயலிற்கு, அவளுக்கு அனைத்திற்கும் துணை போகும் கணவரிடம் தன் கண்டனத்தைத் தெரிவித்தார் வித்யா.

"ம்மா! இவனை மாதிரி ஆளுங்களால எத்தனை அம்மாக்கள் தங்களோட பிள்ளைங்களைத் தொலைச்சிட்டு தவிப்பாங்க தெரியுமா?" - சீதா.

"ஊர்ல உள்ள பிள்ளைங்களைப் பார்த்துட்டு இருந்தா என் பொண்ணை யார் பார்க்கறது? இவன்கிட்ட இருந்து அவன், அவன்கிட்ட இருந்து அடுத்தவன்னு சங்கிலி தொடரா இருக்க இந்த ஆபத்தான வேலைல, எங்கயாவது ஒரு இடத்துல உனக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா நான் என்னடி பண்ணுவேன்?" 

"வித்யா! அதான் எதுவும் ஆகலையே? சரியான நேரத்துக்கு தான் நான் போய்ட்டேனே? உன் பொண்ணு மேல உனக்கிருக்கற அக்கறையும், பயமும் எனக்கிருக்காதா?" - ரகுநந்தன்.

"ம்ம்… இப்டியே சொல்லி சொல்லி தான் இவ இப்ப எதுக்கும் அஞ்சாம சுத்திக்கிட்டு இருக்கா. சரி! அந்த பையன் கிடைச்சிட்டானா?"

"ஆமாம்மா! சாரு தம்பி மட்டுமில்ல, இன்னும் அவனுங்க கூட்டிட்டு போன மத்த பசங்களும் கிடைச்சிட்டாங்க. எல்லாரையும் மும்பைல தான் தங்க வச்சிருந்தாங்க. இன்னும் ரெண்டு நாள் நாம தாமதிச்சிருந்தா வேற வேற வெளிநாடுகள்ல, வேற வேற இடங்களுக்கு பிரிச்சு அனுப்பிருப்பாங்க. அப்டி ஆகிருந்தா கண்டுபிடிச்சு அழைச்சிட்டு வர ரொம்ப கஷ்டமாகிருக்கும்."

"ஆம்பளை பசங்கள கூட கடத்திட்டு போய் என்னங்க பண்ணுவாங்க?"

"அநேக பசங்களை ஃபாரின்ல பாஸ்போர்ட், விசா பிடுங்கி வச்சிட்டு அவங்களுக்கு தேவைப்படற வேலைகள்ல ஈடுபடுத்துறாங்க. சிலரை உடலுறுப்புகளுக்காக கை மாத்தி விடறாங்க. இன்னும் சிலரை செக்சூவல் இன்டர்கோர்ஸ்காக! அண்ட் ஃபாரின் கப்பிள்ஸ்க்காக நம்ம நாட்டு கை குழந்தைகள் கடத்தப்படறாங்க..."

"போதும் போதும்! இந்த கொடுமையெல்லாம் கேட்கறதுக்கு என் மனசு தாங்காது தெய்வமே! ஏதோ ஒரு படத்துல கூட பார்த்தோமே... பச்சைப் பிள்ளையைப் பிச்சை எடுக்கறதுக்காக வாங்கிட்டு போறதை?" என்று கண் கலங்கிவிட்டார்.

"ம்ம்... இதுக்கு தான்! உன்னை மாதிரி என் பொண்ணும் சட்டுனு மனசு உடைஞ்சு போற மாதிரி பலவீனமானவளா இருக்கக்கூடாதுனு தான் நான் அவளை ஜான்சிராணியா வளர்த்திருக்கேன்." என்று பெருமையாகவும், கர்வமாகவும் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார் ரகுநந்தன்.

"ஆமா இப்டியே அவளுக்கு ஜால்ரா அடிக்கறதுனால தான் அவ நாளுக்கு ஒரு பிரச்சினையை இழுத்துட்டு வந்துட்டிருக்கா!" என்று கணவனை முறைத்தவர் சீதாவிடம் திரும்பி, "இதுவே கடைசியா இருக்கட்டும். இனி படிச்சு முடிக்கறவரை எந்த பிரச்சனைலயும் தலையிடக் கூடாது. மதர் ப்ராமிஸ்?" என்று தன் வலது உள்ளங்கையை மகளின் முன் நீட்டினார். படித்து முடித்ததும் திருமணம் செய்து அனுப்பிவிட்டால் நிம்மதி என்ற எண்ணம் அவருக்கு!

"ம்மா…"

"வித்யா!" என்று இருவரும் ஒருசேர ஆட்சேபக் குரலெழுப்பினர்.

"நீங்க சும்மா இருங்க! ப்ராமிஸ் பண்ணுடி! ஒவ்வொரு நாளும் நீ எந்த பிரச்சனைல மாட்டிக்குவியோனு என்னால பயந்துட்டு இருக்க முடியாது."

தந்தையை திரும்பி பார்த்து விட்டு, அவர் கண்ணசைக்கவும் தன் முன் நீண்டிருந்த அன்னையின் உள்ளங்கையைப் பற்றி முத்தம் வைத்தாள் சீதா.

அப்போது இவர்களின் உரையாடல்களை கேட்டவாறே வந்த தான்யலட்சுமி, "ம்மா… சீதாக்கா சொன்ன பசங்களுக்கு நாம ஏதாவது ஹெல்ப் பண்ணுவோமா?" எனக் கேட்டாள். 

அப்போது தான்யா பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்தாள். இவளுக்கு தமிழ்ப் பற்றும் பிறருக்கு உதவும் குணமும் நிரம்ப உண்டு.

"நானும் நினைச்சேன் தானுக்குட்டி. ஏதாவது ட்ரஸ்ட் மூலமா இந்த மாதிரி படிக்க வாய்ப்பில்லாத குழந்தைங்களை படிக்க வைக்கணும்." என்று சிந்தனையில் ஆழ்ந்தவராக வித்யா சொல்ல,

"ஏதாவது ட்ரஸ்ட் மூலமா ஹெல்ப் பண்றதுக்கு நாமளே ஒரு ஃபவுண்டேஷன் ஆரம்பிக்கலாமேம்மா?" என அன்னைக்கு யோசனை சொன்னாள் தான்யா.

"கரெக்ட் டா தானுக்குட்டி! நீ சீதா மாதிரி ப்ரேவ் கேர்ளா இல்லனாலும், இப்டி ஹெல்ப்பிங் மைண்ட்டடா இருக்கறதுல அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்!" தன் இரண்டாம் மகளை நினைத்தும் பூரித்தார் ரகுநந்தன்.

"ஹய்யோ! நீங்க பாராட்டுற லட்சணம் இருக்கே…" என்று தலையிலடித்துக் கொண்ட வித்யா, "எதையாவது சொல்லி பூஞ்சையா இருக்கறவளை பெரியவ மாதிரி அடாவடியா மாத்தி வைக்காதீங்க." என்று குறைபட்டுக் கொண்டார். 

அன்னையிடமிருந்து தந்தையைக் காப்பாற்றி, அதே நேரம் தன் எண்ணுமும் மெய்ப்பட வேண்டுமே என்று ரகுநந்தனைக் கேள்வியால் துளைத்தெடுத்தாள் தான்யா. 

"அப்பா! நம்ம ஃபவுண்டேஷனுக்கு என்ன பேர் வைக்கலாம்? எப்ப ஆரம்பிக்கப் போறோம்? இதுல என்னென்ன ப்ரொஸீஜர் இருக்குதுன்னு சொல்லுங்கப்பா. அம்மாவை ட்ரெஷரரா போட்டுடலாமா?"

"எனக்கு கஜானாவே அவ தானேடா தானுக்குட்டி?"

தான்யாவின் முயற்சியில் அனைவரும் கலந்தாலோசித்து, 'கலைமகள் அறக்கட்டளை' எனும் பெயரில் தங்களின் அறக்கட்டளை துவங்கலாமென முடிவானது.

இக்கணம் இடைபுகுகிறான், நம் நாயகன் விபுநந்தன்! அப்போது அவன் பத்தாம் வகுப்பில் இருந்தான்.

"மாம்! லுக் அட் திஸ்!" என்று வாய்க்குள் சிரித்தவாறே கையில் தான்யாவின் பாடப் புத்தகம் ஒன்றை உயர்த்திப் பிடித்து காண்பித்தான்.

அவன் கையிலிருந்த புத்தகத்தைக் கண்ட தான்யா, அதை எட்டிப் பிடிக்கப் பாய்ந்தோடினாள். "என் புக்-அ நீ எதுக்குடா எடுத்த?"

அவளை விட உயரமாக இருந்தவன் புத்தகத்தை இன்னும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு இங்கும் அங்கும் என போக்குக் காட்டியவாறே சீதாவின் அருகில் வந்து கண்ணைச் சிமிட்டி விட்டு, அன்னையின் கைகளில் பவ்யமாய் புத்தகத்தை வைத்தான்.

"ஏண்டா? நான் படிச்சு என்ன செய்ய போறேன்?" என்றவரைப் பார்த்து தலையிலடித்து, "ஃபர்ஸ்ட் ஓப்பன் இட் மாம்!" என்றான்.

இதற்கிடையில் அம்மாவிடம் இருந்த புத்தகத்தைப் பிடுங்க வந்த தான்யாவின் கையை வளைத்துப் பிடித்துக்கொண்டான். 

சீதா சிரித்துக்கொண்டே, "ஏன் தானு? உள்ளே உன் லவர் ஃபோட்டோ எதுவும் வச்சிருக்கியா என்ன?" எனக் கேட்க,

விபுநந்தன், "இந்த ஔவையாரை எந்த இளிச்சவாயன் லவ் பண்ணப் போறான்? இது வேற மேட்டர் சீதாக்கா." என சிரித்தான்.

"கையை விடுடா! நீ பெரிய இங்கிலிபீசு தொரை! 'அம்மா, அப்பா'னு அழகா என் தமிழ்ல பேசினா நான் ஔவையாரா? எனக்கும் இங்கிலீஷ் தெரியும்டா மவுன்ட்டெய்ன் மங்க்கி!" என்று தமிழை மட்டம் தட்டும் அவனின் அகராதி பிடித்த ஆங்கில செருக்கிற்கு வைத்தாள் ஒரு குட்டு.

ஆனால் அடுத்த கணம் அவள் தலையில் குட்டு விழுந்தது, வித்யாவின் கரத்தின் உபயத்தால்! தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதை எண்ணி, அன்னைத் தந்த குட்டை வாங்கிக்கொண்டு பாவமாய் முகத்தை வைத்தபடி நின்றாள் தான்யா.

புத்தகத்தில் இருந்தது என்னவென்று எட்டிப் பார்த்த சீதாவும் ரகுநந்தனும் பலமாக சிரித்துக் கொண்டிருந்தனர். தான்யா பாட புத்தகத்தினுள்ளே தமிழ் மாத நாவல் புத்தகம் ஒன்றை மறைத்து வைத்திருந்தாள்.

"என்ன நீங்களும் சேர்ந்துக்கிட்டு சிரிக்கறீங்க? பிள்ளைங்களைக் கண்டிச்சு வளர்க்கணும்னு பொறுப்பிருக்கா உங்களுக்கு? இவ ஒவ்வொரு வாட்டியும் பார்டர்ல தான் பாஸ் பண்ணிட்டு இருக்கா. இந்த வருஷம் ப்ளஸ் டூ வேற!"

"அம்மா, இது மாதிரி ஸ்டோரீஸ்லாம் சிலபஸ்ல இருந்தா நம்ம தானு ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துடுவாம்மா!" - சீதா.

"எல்லாம் உங்கப்பாவை சொல்லணும். மார்க் குறையும் போது கண்டிப்பா இருக்காம, ஏண்டா தானுக்குட்டி மார்க் குறைஞ்சதுனு கொஞ்சுவார்." என்று அனைத்திற்கும் கணவனையே பொறுப்பாக்கினார்.

இப்போது ரகுநந்தன், தான்யா இருவரையும் காக்கும் ஆபத்பாந்தவனாக ஒலித்தது தொலைபேசி மணி!

அந்த காலர் ஐடி தொலைபேசியின் சின்னத் திரையில் எண்களைப் பார்த்துவிட்டு, "ரிஷிண்ணா!!!" என்று உற்சாகக் கூக்குரலோடு குதித்தாடி ரிசீவரை எடுத்தான் விபுநந்தன்.

அடுத்த கணத்தின் துவக்கத்தில் அங்கிருந்த அத்தனை பேரும் அத்தொலைபேசியை தொல்லை செய்ய சுற்றி நின்றனர்.

ரிஷிநந்தன்! இக்குடும்பத்தின் மூத்த வாரிசு! அப்போது இவன் இளங்கலை முடித்திருந்தான். தொலைதூரக் கல்வியில் மேற்படிப்பைத் தொடர்ந்தவாறே குடும்பத் தொழிலைப் பார்க்க வந்துவிட்டான். 

ஜப்பானில் இவர்களின் உணவகக் கிளையை ஆரம்பிப்பது குறித்து வியாபார பயணம் சென்றிருந்தான். 

"ரிஷி மா! சாப்ட்டியா கண்ணா?" - வித்யா.

"இப்ப இவ மட்டும் அவ புள்ளையை எப்டி கொஞ்சறா பாரு!" - பொய்யான பொறுமலுடன் ரகுநந்தன்!

வித்யா பிள்ளையின் நலம் விசாரித்து, சீதாவின் அடாவடியை(?) ஒப்புவித்து முடித்ததும், தந்தையும் மகனும் சிறிது நேரம் வியாபாரத் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். பின், அங்கிருந்து வரும் போது வாங்கி வருமாறு அனைவரும் அவரவர் தேவைகளைக் கேட்டனர்.

கடைசியாக சீதா, "ரிஷிண்ணா! எனக்கு செர்ரீ ப்ளாண்ட் வாங்கிட்டு வா!" எனவும்,

"ஏற்கனவே அங்கே வாங்கி வச்சதே நிறைய இருக்கே டி? இப்ப இது வேறயா? அதோட ஃப்ளைட்ல செடியெல்லாம் எடுத்துட்டு வர அலோவ் பண்ணுவாங்களோ என்னவோ?" என்று ஆட்சேபித்த மனைவியை, 

"அதுலாம் பண்ணுவாங்க. செடியை வாட்டர் கன்டெய்னர்'ல வச்சு தான் எடுத்துட்டு வர முடியாது." என்று கூறி அடக்கிவிட்டு, சீதாவிடமிருந்த ரிசீவரை வாங்கி, "ரிஷி! எது மறந்தாலும் செர்ரி ப்ளாண்ட் வாங்கறதை மறக்கக்கூடாது. ரைட்?" என்று மகளதிகாரத்திற்கு மகனிடம் அன்பதிகாரம் எழுதினார் ரகுநந்தன்.

இவர்களின் ஓய்வெடுக்கும் வீடான காட்டு பங்களா -அதாவது தற்போது இந்த நயவஞ்சகன் விபுநந்தன் நம் ஆரவியை ஏமாற்றி தன்னோடு அடைத்து வைத்திருக்கும் வீடு சில தலைமுறைகளுக்கு முன் ரகுநந்தனின் முன்னோர், பிரிட்டிஷ் துரை ஒருவரிடமிருந்து வாங்கியது. அக்காலத்தில் அரசு பொறுப்பில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் ஓய்வெடுக்கவும் தங்கள் உல்லாசத்திற்கும் இது போன்ற அமைதி தரும் இடத்தில் தனியே ஓர் வீட்டைக் கட்டிக் கொள்வார்களாம்.

தலைமுறைகள் தாண்டி ரகுநந்தன் கைகளுக்கு வந்த வீட்டை, பழமை மாறாமல் அதே சமயம் தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்பவும், வசதிக்கேற்பவும் வீட்டின் உள்ளமைப்பை மட்டும் சற்று மாற்றியமைத்திருந்தார் அவர்.

அந்த வீட்டில் தான் தாங்கள் ஓய்வெடுக்கச் செல்லும் ஒவ்வொரு மாதமும், மொட்டைமாடியில் ஏதேனும் பூ வகை செடிகளை வாங்கி நட்டு வைத்து ஓர் பூந்தோட்டத்தை சிருஷ்டித்திருந்தாள் சீதாலட்சுமி.

ரிஷியிடம் பேசி முடித்ததும் சீதா, "ப்பா! நாம இந்த வீக் எண்ட் நம்ம வைல்ட் ஹவுஸ் போகும் போது கார்டனிங் டீம்-அ வர சொல்லலாம்ப்பா. எனக்கு இன்னும் சில பூக்கள் வேணும்ப்பா. அவர் டெரஸ் ஷுட் பீ ஃபுல் ஆஃப் கலர்ஃபுல் ஃப்ளவர்ஸ். என்கிட்ட இல்லாத பூவே இருக்கக்கூடாதுப்பா." என்று ரசனையின் உச்சத்தில் கண்கள் மின்னக் கூறியவளிடம்,

"தோட்டம் அமைக்கறவங்க வந்து அரேன்ஞ் பண்ணதும் நம்ம தட்சிணாவையும் கிருஷ்ணாவையும் அதை எப்டி மெயின்டெய்ன் பண்றதுனு கத்துக்க சொல்லணும்." என்றார் வித்யா.

"இவன் மட்டும் ஜாலியா காட்டுக்குள்ள வாக் போறான்? இந்த வாரம் இவனையும் மாடிக்கு வேலை செய்ய இழுத்துட்டு வாங்கம்மா!" பெண்பிள்ளையென தன்னை தனியே காட்டுக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் தம்பியை மட்டும் அவன் விருப்பப்படி அனுப்புகிறார்கள் என்ற கடுப்பில் கூறினாள் தான்யா.

"அவன் என்னைக்கு மேலே வந்தான்? சரியான சோம்பேறி!" - வித்யா.

"ம்மா! அவ என் மேல இருக்க ஜெலஸ்ல பேசறா. நான் ஒண்ணும் சோம்பேறி இல்ல. நீங்க சொன்னீங்கனு ஒரு நாள் கூட ஸ்கூலுக்கு மட்டம் போடாம போயிக்கிட்டு இருக்கேன் தெரிஞ்சிக்கோங்க!"

விபு சற்று பெரியவனானதும் காட்டிற்குள் சென்று அதன் இயற்கையழகை ரசிக்க பழகியிருந்தான். தன் விரல் நகத்திலும் மிகச் சிறியதாய் இருந்த, நான்கிதழ்கள் கொண்ட இளஞ்சிவப்பு பூக்களைப் பார்த்தவனுக்கு, அதை வாடாத பொக்கிஷமாய் பாதுகாக்க ஆசை வந்தது. உடனேயே தந்தையிடம் தனக்கொரு கேமரா வேண்டுமெனக் கேட்டான். 

அவன் விருப்பத்திற்கு தடை விதித்த வித்யா, பனிரெண்டாம் வகுப்பு வரை ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் ஒழுங்காக வகுப்பிற்கு சென்றால் கேமரா கிடைக்கும் என்று அவன் வைராக்கியத்தைத் தூண்டிவிட்டார். அவருக்கு தெரியும், மகன் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் சென்றாலும் பள்ளியில் முதலாவதாக வந்துவிடுவான் என்று! எனினும் பிள்ளைகளிடம் ஒழுங்குமுறைகளும் இருக்க வேண்டுமென்பார்.

"அவ அதை சொல்லலடா… மாடில இருக்க பூச்செடிகளை பார்த்தாலே மனசு லேசாகிடும். அதுக்கு தான் வர சொல்றா." என்றார், பிள்ளைகளிடம் சிறு பிளவும் வர விரும்பாத ரகுநந்தன்.

"ஸாரி டாட்! வெளியே காட்டுப் பக்கம் நடந்தாலே ஆஸம் ஃபீல் கிடைக்கும்." என்றவன், "சீதாக்கா! நீ நேச்சுரலா இருக்கறதை விட்டுட்டு ஏன் ஆர்ட்டிஃபிஷியலை ட்ரைப் பண்ற?" எனக் கேட்க,

கீற்றாய் புன்னகைத்த சீதா, "ஒரு நாள் நீ மேலே வந்து பாரு! நான் செஞ்சிருக்கறதும் ஆஸம் ஃபீல் கொடுக்கும்." என்றாள்.

"நோப்!" என்று கைகளை விரித்தவன், "நான் காட்டுக்குள்ளேயே போய் ரசிச்சுக்கறேன். அந்த பச்சை செடிங்களோட வாசனையும், பட்சிகளோட ஜாஸ் மியூசிக்குமே தனி சுகம்! ஹ்ம்ம்…" என்று கண்கள் மூடிக் கூறினான்.

தான்யா, "ம்க்கும்! இப்டியே சொல்லிச் சொல்லி மாடியே ஏறுறது கிடையாது." என்று முணுமுணுக்க,

"விடு தானு… சின்னப் பையன் தானே? வீக் எண்ட்-ல கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டும். நீ இங்க வாடா நந்தா." என்று தம்பியை அழைத்து தன்னருகே அமர்த்தி தலைகோதினாள் சீதா.

"என்னாதூஊஊ…. சின்னப் பையனாஆஆ!!??" - வித்யா மற்றும் தான்யா.

இருவரிடமும் அளவம் செய்து விட்டு தமக்கையின் கைகளுக்குள் தன்னியல்பாய் தலையை நுழைத்துக் கொண்டான் விபுநந்தன்.

"ஹாஹா… அவனுக்கு அவ அம்மாவா? இல்ல நீ அம்மாவான்னு தெரியலடா சீதா." - ரகுநந்தன்.

ரகுநந்தனுக்கு தம் மக்களிடம் கோபப்படவே தெரியாது. மகள்களோ அல்லது மகன்களோ தம் நான்கு பிள்ளைகளும் தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும் கூட இன்னும் செல்லம் தான்! எனவே, வித்யா மட்டும் எப்போதும் நால்வரிடமும் அன்போடு கண்டிப்பையும் காட்டுவார். தாய், தந்தை இருவரில் ஒருவரிடமேனும் பிள்ளைகளுக்கு பயமிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு.

அதிலும் சிறு வயதிலிருந்தே வால்தனங்கள் மிகுந்த, கடைக்குட்டி விபுநந்தனிடம் சற்று அதிக கண்டிப்போடே நடந்து கொள்வார். எப்போதும் விபுநந்தனே அவரின் ஒற்றைத் தலைவலி!

அதற்கு மாறாக அவனை சிறு குழந்தையென பாவித்து, அவனின் குறும்புத்தனங்களை ரசிப்பவள் மூத்தவள் சீதாலட்சுமி!

வித்யா, "சரி எல்லாரும் சாப்பிட வாங்க! நந்தா, இன்னிக்கு க்ளாஸ் டெஸ்ட்க்கு பிரிப்பேர் பண்ணிட்ட தானே?" என்று கேட்டபடி எழுந்து உள்ளே சென்றதும், தமக்கையின் காதில் கிசுகிசுத்தான் விபுநந்தன். 

"அக்கா நீ கேட்ட ஷாரூக் சாங்ஸ் எல்லாமே கேஸட்ல ரெக்கார்ட் பண்ணிட்டேன். அம்மாவோட லவ்வபிள் வாக்மேனையும் ஆட்டையைப் போட்டாச்சு."

அந்த வாக்மேன் ரகுநந்தன் தன் காதல் மனைவிக்கு முதல் திருமண நாளன்று பரிசளித்தது. அதை பத்திரமாய் வைத்திருப்பவர் யாரிடமும் கொடுக்கமாட்டார். அதனால் தான் அது இன்றளவும் பழுதில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றது.

ஆனால் சீதாவிற்கு பாடல் கேட்க தற்போதைய சாதனங்களை விட அந்த வாக்மேனில் கேட்கவே பெரும் விருப்பம். எனவே இவன் அன்னையின் அன்புப் பொருளை ஆட்டையைப் போடுகின்ற அரும் பெரும் சாதனையை நிகழ்த்தி, தமக்கையின் விருப்பத்தை அன்று நிறைவேற்றினான். 

பூக்கும்🌻🌺 

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)