சீதையின் பூக்காடு - 19

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 19


பொதுவாக மனித உயிர்களை கையாள தகுதி உள்ளவர்கள் மட்டுமே வேண்டும் என்பதால், மருத்துவப் படிப்பில் இறுதி ஆண்டில் பெருமளவு மாணவர்களை வடிகட்டி விடுவார்கள். எனவே இறுதி ஆண்டுத் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும்.

அதில் சீதா இரண்டு தேர்வுகளில் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றிருந்தாள். எனவே இரட்டிப்பு மகிழ்ச்சியோடு வழக்கம் போல் செலின் மேடமை சந்தித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டாள். 

பள்ளியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள் அல்லவா? ஏனோ இந்த முறை அவரை சந்திக்கையில் அவரின் உளநிலைக் குறித்து சீதாவின் மனதில் சிறு சந்தேகம் நெருடியது. 

வழக்கம் போல் தன் தந்தையுடன் சந்திக்க வந்திருந்தவளை இன்முகத்துடன் வரவேற்றார் செலின். 

"வாங்க சர்! சீதாம்மா, ஏதோ ஹேப்பி மெசேஜ் கொண்டு வந்திருக்கா போலவே? சம்திங் லைட் ஸீம்ஸ் ஆன் ஹர் ஃபேஸ்!" என்று சீதாவின் விரிந்த புன்னகை முகத்தைப் பார்த்தவாறே கூறினார்.

"ஆமா மேடம்! உங்க சீதாம்மா டாக்டர் ஆகிட்டா. ரெண்டு சப்ஜெக்ட்ல யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்!"

"இஸ் தட் சோ? சந்தோஷம்! சந்தோஷம்! என் ஸ்டூடண்ட் டாக்டர் ஆகிட்டாங்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் சீதாம்மா. இதை கண்டிப்பா செலப்ரேட் பண்ணனுமே…" என்றவர் எழுந்து தன்னறைக்கு சென்று திரும்பினார்.

வந்தவர், "இட்'ஸ் மை ஸ்மால் கிஃப்ட் ஃபார் யூ சீதாம்மா. டேக் இட்!" என்று வண்ணக் காகிதம் சுற்றிய அட்டைப் பெட்டியை நீட்டினார்.

நன்றி கூறி வாங்கிக் கொண்ட சீதா அவர் முன்னேயே அதைப் பிரித்தாள். பிரித்தவளுக்கு சற்றே திகைப்பு! ரகுநந்தனும் கூட சிந்தனையோடு செலினைப் பார்த்திருந்தார். ஏனெனில் உள்ளே இருந்தது ஓர் குழந்தை பொம்மை!

"டூ யூ லைக் தட், சீதாம்மா?"

"ம்ம்?? ம்ம்… எஸ் மேம்!"

"குழந்தைங்களை யாருக்கு தான் பிடிக்காது? ஹாஹா… தென்… ஏன் சீதாம்மா? நீ எம்பிபிஎஸ் முடிச்சிட்டு பீடியாட்ரிக் தானே பண்ண போற?"

"நோ மேம். அனஸ்தடிஸ்ட்-ஆ…."

அவள் வாக்கியத்தை முடிக்கும் முன், "வாட்?!" என்று ஏகத்துக்கும் அதிர்ந்தவர், "அப்ப குழந்தைங்களைக் காப்பாத்துறதுக்கு இந்த படிப்பு படிக்கலையா நீ?" என்று மூச்சிரைக்க, சற்று கடுமையாகக் கேட்டார்.

"இல்ல மேம். இது…"

"ஐ நெவர் எக்ஸ்பெக்டட் ஃப்ரம் யூ, சீதாம்மா…" என்று அவள் முகம் பாராமல் கூறியவரின் குரலில் முற்றிலும் ஏமாற்றம் மட்டுமே!

பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன் நிலைமையை சீராக்கும் பொருட்டு, "நான் அவகிட்ட சொல்றேன் மேடம். உங்க சீதாம்மா பீடியாட்ரிக் தான் எடுத்து படிப்பா." என்று சிரித்துக் கொண்டே கூற, செலினின் முகம் சட்டென மலர்ந்தது.

சீதா திகைத்தவளாய் தந்தையைப் பார்த்தாள். படிப்பானாலும் சரி, உடுப்பானாலும் சரி அல்லது வேறு எதுவானாலும் சரி பிள்ளைகளின் விருப்பத்திற்கே முதலுரிமை வழங்கும் அப்பா இன்று அதற்கு முரணாகப் பேசுவதும் செலின் மேடமின் உளநிலை குறித்த நெருடலை அதிகப்படுத்தியது.

"நல்லது! நல்லது ரகுநந்தன் சர்!" என்றவர், அதன் பின் சாதாரணமாகவே உரையாடி உபசரித்தார்.

ஆனால் இச்சம்பவத்தை அப்போதே ரகுநந்தன், செலினின் தம்பி செபாஸ்டியனிடம் சொல்லியிருக்கலாம்.

அடுத்து சீதாவின் ஒரு மாத கால விடுமுறைக்கு குடும்பத்தோடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்ததால் அதற்கான ஏற்பாட்டில் மூழ்கியவர், இச்சம்பவத்தை அவரிடம் கூற மறந்துவிட்டார். சீதாவும் செலின் மேடமின் இந்நிலை குறித்து அதற்கு மேல் சிந்திக்காமல் இருந்துவிட்டாள்.

சுற்றுலா செல்வதற்கு முன் தங்கள் காட்டு பங்களாவிற்கு வந்த போது, முன்பு ஒருமுறை ரிஷிநந்தன் வாங்கி தந்திருந்த செர்ரி செடியைப் பார்த்த சீதா கவலையானாள். அது இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு சரிவர வளராமலும் பூக்காமலும் வாட ஆரம்பித்திருந்தது. 

பின் வழக்கம் போல் அவள் வாங்கி வந்திருந்த மற்ற பூச்செடிகளை தட்சிணா, கிருஷ்ணாவின் உதவியோடும் மாடித்தோட்டம் அமைக்கும் ஓர் மாணவக் குழுவோடும் சேர்ந்து அங்கே அவள் ஏற்கனவே வைத்திருந்த செடிகளுடன் ஒழுங்குபடுத்தி அழகுற அடுக்கி வைத்தாள்.

ரகுநந்தன், சீதா, தான்யா மூவரும் மாடியில் தோட்ட வேலையின் மேற்பார்வையில் இருக்க, விபுநந்தனும் ரிஷியும் கீழே செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். விபு அப்போது கல்லூரியில் முதல் வருடத்தை எதிர் நோக்கியிருந்தான். 

அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி தயாரித்து எடுத்து வந்தார் வித்யாலட்சுமி.

"நந்தா! இந்த ஸ்நாக்ஸூம், டீ'யும் மேல இருக்க எல்லாருக்கும் குடுத்துட்டு வாயேன்டா… அம்மாவால ரெண்டு மாடி ஏறி இறங்க முடியாது."

"ப்ச்! போங்கம்மா. உங்க ஹீரோவுக்கு கால் பண்ணி தட்சிணாவை கீழே அனுப்ப சொல்லுங்க."

ரிஷி, "அவன்தான் செய்ய மாட்டான்னு தெரியும்ல? அப்புறம் ஏன்மா அவனை சொல்றீங்க? குடுங்க நான் போய் கொடுத்துட்டு வர்றேன்." என்று எழுந்தான்.

"ஓகேண்ணா. நான் ஃபாரஸ்ட்'க்குள்ள ஒரு வாக் போய்ட்டு வர்றேன். டாட்டாம்மா." என்று எழுந்தவனை,

"ம்மா! அந்த பக்கம் இருக்க ஊர்ல உள்ள வில்லேஜ் கேர்ள்ஸை சைட்டடிக்க தான் போறான்மா இவன்!" என்று தம்பியை அன்னையிடம் போட்டுக் கொடுத்தான் ரிஷி.

அதற்கு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், "வாட் அபௌட் சைட்டுடா அண்ணா? நீ நம்ம ஹோட்டல்ல பேக்கிங் (baking) செக்ஷன்ல புதுசா சேர்த்திருக்கியே உன் சீனியர் க்ரஷ்… அதுவா சைட்? இல்ல… ஒவ்வொரு வாட்டியும் ஃப்ளைட்ல போகும் போது ஏர்ஹோஸ்டஸ் பார்த்து 'சம்திங் சம்திங்' ரவி மாதிரி 'மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்'னு கேட்பியே… அது சைட்டா?" என்று நிறுத்தவும்,

ரிஷி, "ம்மா! ஹோட்டல்ல என் சீனியர் க்ரஷ்… ச்ச! சீனியர் பொண்ணு வேலை கிடைக்கலனு சொன்னதால தான் சேர்த்தேன்மா." என்று தன்னிலையை விளக்க வர, 

அதற்கு விடுவேனாவென்று, "அது மட்டுமா? போன வாட்டி ஜப்பான் போயிட்டு வந்தப்ப உன் அண்ணியைக் கண்டுபிடிச்சிட்டேன்னு சீதாக்காகிட்ட சொல்லிட்டு இருந்தியே… அது என்ன மேட்டர்?" எனக் கேட்டான் விபுநந்தன்.

"அய்யோ இல்லம்மா.‌ பொய் சொல்றான்."

"நிஜம் தான்மா. அந்த ஊர்ல எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி இருக்காங்களே… அவங்க ஹஸ்பெண்ட்லாம் எப்டி அவங்கவங்க வைஃப்-அ ஐடெண்டிஃபை பண்ணுவாங்க? எனக்கும் இப்டி டவுட் வந்தா என்ன பண்றதுனு சீதாக்காகிட்ட கேட்டான்மா இவன்."

நந்தன், ரிஷியின் சேட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து விட, ரிஷி உள்ளுக்குள், 'ஒரே ஒரு வார்த்தை தானேடா சொன்னேன்? இப்படி என் சீக்ரெட் சீக்வென்ஸஸை சில்லுசில்லாய் சிதறடிக்கிறாயே? அவ்வா அவ்வா…' என்று பாடிக்கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரின் அக்கப்போர்களைக் கண்டு, இருவரையும் தடுக்க முடியாதவராய் மூச்சு வாங்க நின்றிருந்தார் வித்யா. அவர் தயாரித்த தேநீரும் அவரைப் போலவே ஆறி அலன்று போயிற்று. 

ரிஷியைப் பற்றிய கவலை அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. அன்னை கவலைப்படுவதைப் போல் அவனும் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை. 'கடைசியாய் பிறந்து என் ஆவியைக் குறைக்கவே வந்திருக்கிறான் இந்த நந்தா. பதினெட்டு வயதிலேயே என்னென்ன பேச்செல்லாம் பேசுகிறான்?' என்று இளைய மகனைக் குறித்து தான் கவலையுற்றார். 

அதனை கவனியாமல் அண்ணனின் நிலையை மட்டும் திருப்தியாகப் பார்த்துவிட்டு மேலும், "விடுகதையா... இந்த வாழ்க்கை…." என்று பாடி அவனை வெறுப்பேற்றிவிட்டே வெளியேறினான் விபுநந்தன்.

சீதா அந்த முறை அன்றைய மாடித்தோட்ட வேலைகள் முடிந்ததும் தட்சிணாவிடம் புதிய செடிகள் வேர் பிடிக்கும் வரை கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டுமென ஆயிரம் பத்திரங்கள் கூறி, மனமேயின்றி தன் தோட்டத்தை விட்டுச் சென்றாள்.

மேலும் ஒரு வாரம் சென்றது. இந்த விடுமுறைக்கு கனடா செல்ல வேண்டுமென்பது விபுநந்தனின் விருப்பம்! எனவே தன் கடைக்குட்டியின் விருப்பத்தை விழுக்காடு அளவு நிறைவேற்ற முடிவெடுத்திருந்தார் ரகுநந்தன்.

அதன்படி, அவர்கள் பயணம் தொடங்கியது. கனடாவில் மூன்று வாரங்களை முழு திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் சுற்றிவிட்டு ஊர் திரும்பினர்.

நிற்க! இங்கு இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தான் சீதா, ஆரவியைப் பார்க்க செய்கிறாள். அதைக் கொண்டுதான் ஆரவி, விபுநந்தனின் வில்லத்தனத்தைக் கண்டறிகிறாள்.

கனடா சென்று வந்து மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த வருடம் சீதாவிற்கு ஹவுஸ் சர்ஜன் எனும் பயிற்சி காலம்.

இவளுக்கு முதல் மூன்று மாதம் குழந்தை நலப் பிரிவில் பயிற்சி! நல்லவேளை எடுத்ததுமே அவசர சிகிச்சை பிரிவில் போடவில்லை என நிம்மதியானாள்.

குழந்தை நலப் பிரிவில் பயிற்சி என்று சொன்னால் செலின் மேடம் மகிழ்வார் என்றெண்ணி அவரிடம் கூற, அவர் தன் சீதாம்மாவின் மருத்துவ செயல்முறைகளைக் காண நேரடியாகவே அந்த அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

சீதா அன்றைய பயிற்சியில் இருக்கையில் அவசரம் என்று வரிசைக்கு இடையில் ஓர் இளம்பெண்ணை அனுப்பினர். தன் மூன்று மாத கைக்குழந்தையின் உடல்நிலையை காட்ட வந்திருந்தாள் அவள். குழந்தை மூச்சிற்கு திணறிக் கொண்டிருந்தது. 

அவசரமாக எழுந்த சீதா, "என்னாச்சு?" எனக் கேட்க,

"குளிக்க வைக்கும் போது சோப்பு நுரை மூச்சுல ஏறிடுச்சு மேடம். அப்போ இருந்து மூச்சு விட சிரமப்படறா…" என அழுது கொண்டே கூறினாள்.

அவளைப் பார்க்கையிலேயே தெரிந்தது மிகவும் சிறு பெண், வயது இருபதிற்கு கீழ் தான் இருக்குமென்று!

"ஏம்மா? பெரியவங்க யாரும் வீட்ல இல்லையா?" கேட்டவாறே சிகிச்சையை ஆரம்பித்திருந்தாள்.

"இல்லீங்க மேடம்." என்றவளின் குரல் சின்னதாகியிருந்தது.

அவளிடம் பேச்சு கொடுத்ததில் இவள் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கையிலேயே தன் சீனியர் மாணவனை காதலித்ததாகவும், அவனின் வற்புறுத்துதலின் பேரில் வீட்டினரை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சொன்னாள். 

பின் குழந்தை பிறந்தால் இருவரின் பெற்றோர்களும் மனம் மாறி தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்து போனதாகவும், தற்போது குழந்தையைத் தனியாக கவனித்துக் கொள்ள சிரமமாக இருப்பதாகவும் கூறி வருந்தினாள்.

அநேக இடங்களில் நாம் கேள்விப்படுகின்ற கதை தான்! ஆனால், இப்பொழுது உள்ள பெண்கள் புத்திசாலிகள் என்று நினைத்திருக்க, இவளைப் போன்ற வருங்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செயல்படும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள் போலும் என்றெண்ணி சீதாவால் அவளுக்காக வருந்த மட்டுமே முடிந்தது.

குழந்தைக்கு தேவையான சொட்டு மருந்தை கொடுத்தவள், குழந்தையின் கழுத்தடியில் இருந்த தேமல் போன்ற அடையாளத்தை பற்றிக் கேட்டாள்.

"அது குழந்தை பிறக்கும் போதே இருந்ததுக்கா. பார்த்தவங்க எல்லாரும் இந்த மாதிரி இருந்தா ரொம்ப அதிர்ஷ்டம்னு சொன்னாங்க." என்று பூரிப்பாகக் கூறினாள்.

கேட்டுக்கொண்ட சீதா சிகிச்சையைத் தொடர்ந்து, ஒவ்வொரு வேலையின் போதும் குழந்தையை எப்படி கையாள வேண்டும், நோய் தாக்காமல் இருக்க எப்படி பராமரிக்க வேண்டுமென கற்றுக் கொடுத்தாள். 

பின் கிடைத்த சற்று நேர இடைவெளியில், இவளைப் பார்க்க வந்திருந்த செலின் மேடமை சந்தித்தாள். அவர் ஆர்வமாகக் கேட்க, அன்று இவள் கவனித்த குழந்தைகள் பற்றியும் அவர்களுக்கு அளித்த சிகிச்சை முறைகள் பற்றியும் சொன்னாள். அவரிடம் கிட்டத்தட்ட கேஸ் பிரெசண்டேஷன் செய்தாள் எனலாம்.

அவ்வாறே மூச்சு திணறல் என வந்திருந்த குழந்தைப் பற்றியும், குழந்தையின் அன்னையைப் பற்றியும் சொன்னாள். செலின் மற்ற கேஸைக் கேட்டதைப் போலவே இதையும் சாதாரணமாகவே தான் அப்போது கேட்டிருந்தார்.

ஆனால் அந்த பெண் அவரின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டாள் என்பதை சீதா மட்டுமல்ல, செலின் மேடமும் கூட அப்போது அறியவில்லை.

பூக்கும்🌻🌺 


Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)