சீதையின் பூக்காடு - 20

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 20


சீதாவிற்கு குழந்தை நலப் பிரிவில் மூன்று மாத காலம் பயிற்சி முடிந்து, அடுத்த மாதம் எமர்ஜென்சி பிரிவில் போட்டிருந்தனர். அதுவும் இரண்டு மாதங்கள் முடிந்த பின் இம்மாதம் விஷமுறிவுப் பிரிவில் பயிற்சி!

இப்பிரிவில், தெரியாமல் ஒவ்வாத பொருட்களை உட்கொண்டவர்கள் அல்லது தெரிந்தே விஷப் பொருட்களை எடுத்து தற்கொலைக்கு முயன்றவர்கள் என வருபவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

சீதா பயிற்சியில் இருந்த காலத்தில் நான்கைந்து தற்கொலை முயற்சி கேஸ்களைப் பார்த்துவிட்டாள். இதில் கடைசியாக வந்த கேஸ், குழந்தை நலப் பிரிவில் இருக்கும் போது குழந்தைக்கு மூச்சு திணறல் என்று வந்த பெண்! அவள் கடுமையான விஷமருந்து எடுத்திருக்கிறாளென அக்கம்பக்கத்தினர் தூக்கி வந்திருந்தனர்.

அவளைக் காப்பாற்றிய பின்னும் கூட மீண்டும் இந்த உயிர் தேவையில்லை எனப் புலம்பியவளிடம், காரணம் கேட்ட சீதாவிற்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. 

அவள் கணவனுக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாகவும், அவனின் சிகிச்சைக்கு தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் குழந்தையை விற்று, சிகிச்சைக்கு அளித்ததாகவும் கூறினாள். மேலும் சிகிச்சை பலனின்றி கணவன் தவறிவிட்டதாகவும் அவனும் போய் குழந்தையும் இல்லாத நிலையில் அவள் இனி வாழ்வதில் அர்த்தமில்லை என இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினாள்.

கேட்டிருந்த சீதாவிற்கு நெஞ்சில் கூர்கத்தியை செருகிய உணர்வு! அவள் கணவனின் இழப்பை விட குழந்தை என்ன ஆனதோ என்ற தவிப்பே மேலோங்கியிருந்தது. உடன் இருந்த சீனியர் செவிலியப் பெண் அழவே ஆரம்பித்துவிட்டார். கூடவே அவளை கடுமையாகத் திட்டினார். 

"உங்களுக்கெல்லாம் என்ன அவசரம்னு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கறீங்க? மேஜர் ஆகிட்டா எல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைப்பா? இத்தனை வருஷம் வளர்த்தவங்க சட்டுனு மூணாவது மனுஷங்க ஆகிடறாங்க இல்ல? இப்ப ஆறு மாசம் கூட வளர்க்க முடியாம குழந்தையை வித்துட்டு வந்திருக்கியே… அப்போ இருபது வருஷம் வளர்த்தவங்க எவ்ளோ கஷ்டத்தைத் தாண்டி வந்திருப்பாங்க? சினிமால பார்க்கற மாதிரி வாழ்க்கை ஒண்ணும் அவ்ளோ ஈஸி இல்லைன்னு ஏன் உங்களுக்கெல்லாம் புரிய மாட்டேங்குது?" என்று ஆதங்கப்பட்டவரை சீதா தான் ஆசுவாசப்படுத்த வேண்டியதாகப் போயிற்று.

"சிஸ்டர்… ப்ளீஸ் ரிலாக்ஸ்!"

"காதல் தப்புன்னு நான் சொல்லலைம்மா. அது அந்த வயசுக்கே உரிய உணர்வு தான். ஆனா பெத்தவங்களைத் தூக்கி போட்டுட்டு ஓடி வர்ற சொல்ற காதல்? அது தப்பில்லயா? பெரியவங்களோட ஆசீர்வாதம் இல்லாம, அவங்களோட கண்ணீர்ல ஆரம்பிக்கற உங்க காதல் வாழ்க்கை அப்டி எந்த விதத்துல உயர்ந்ததாகிடுச்சு?"

"சிஸ்டர்! ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப். அந்த பொண்ணும் பாவம்தான்."

அதன்பின்னே சுற்றம் உணர்ந்தவர், "மன்னிச்சுக்கோங்கம்மா. நானும் பொண்ணைப் பெத்து அவளை இந்த பாழாப்போன காதலுக்கு தாரை வார்த்தவ தான். அதான் கொஞ்சம் இமோஷனலாகிட்டேன்." என்றவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "நீயும் என் பொண்ணு வயசுல தான் இருக்க. குழந்தையை எப்டியாவது மீட்கப் பாரு. என்னாலான உதவியை செய்றேன்." என்று சொல்லி சென்றார்.

அதன்பின் அவளிடம் விசாரிக்க, தன் கணவனுக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்ததாகக் கூறி, அவரைப் பற்றிய விவரங்களையும் சொன்னாள்.

சீதாவும் வழக்கம் போல் தன் தந்தையின் உதவியை நாடினாள். குழந்தையைப் பற்றிய மற்றுமொரு தேடல்! இம்முறையும் சிக்கல் சென்று நின்றது அதே அரசியல் கட்சி தொண்டனிடமே! 

பொதுவாக மருத்துவப் படிப்பில், ஹவுஸ் சர்ஜன் எனும் இப்பயிற்சி காலத்தில் ஓய்வென்பதே அவர்களுக்கு கிடைப்பது அரிதுதான். சில சமயம் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு செல்ல முடியாதென, பெரும்பான்மை மாணவர்கள் கல்லூரி விடுதியிலேயே அந்த வருடம் அறை எடுத்து தங்கிக்கொள்வர்.

எனவே சீதா படிப்பின் காரணமாக இந்த முறை இப்பிரச்சினையை தந்தையிடமே விட்டுவிட்டாள். அத்தோடு படித்து முடிக்கும் வரை எந்த பிரச்சினையிலும் தலையிடுவதில்லை என அவள் அன்னைக்கு வாக்களித்திருக்கிறாளே? அதன் காரணமாகவும் அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று.

மறுநாள் தொலைபேசி அழைப்பெடுத்து முந்தைய தின நிலவரங்களைக் கேட்ட செலின் மேடமிடம் மற்ற விடயங்களைப் போல சாதாரணமாகவே தான் இப்பிரச்சினையையும் பகிர்ந்தாள்.

அதுவும் முன்பு குழந்தை நல பிரிவில் பயிற்சியில் இருக்கும் போது சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பெண் என்று மட்டும் உரைத்துவிட்டு, பின் அவளின் தற்போதைய நிலை பற்றி மட்டும்தான் விரிவாக சொன்னாள்.  

"என்ன? குழந்தையை வித்துட்டாளா? ஓ மை ஜீஸஸ்!" என்றவர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

சீதாவும் கிளம்பி செல்லும் அவசரத்தில் அதை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இவள் மருத்துவமனை செல்லும் முன்னமே அவர் அங்கு வந்திருப்பார் என்று சற்றும் நினைக்கவே இல்லை.

இவள் வரும் போது அந்த பெண் இருந்த வார்டில் கூச்சல் அதிகமாக இருக்கவே, என்ன நடக்கிறது என்று இரவு பணியில் இருந்து வெளிவந்த செவிலியர் ஒருவரிடம் விசாரித்தவாறே அங்கு விரைந்தாள்.

ஏறக்குறைய பாதி மருத்துவமனையே அங்கே தான் நின்றிருந்தது. வார்டு பாய் பணியில் உள்ள இருவர் செலின் மேடமின் பிடியில் இருந்து அப்பெண்ணை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தனர்.

"குழந்தையைக் கொன்னவ மட்டும் உயிரோட இருக்கணுமா? இவளும் சாக வேண்டியது தானே?" எனக் கேட்டு, இன்னும் அதிகமாக அவள் கழுத்திலிருந்த தன்‌ பிடியை வலுவாக்கினார்.

பாய்ந்தோடிய சீதா, "மேம்! ப்ளீஸ் ஸ்டாப் இட்!" என்று இவள் ஒரு பக்கம் பிடித்திழுத்தாள்.

"ஓ! வந்துட்டியா? நீதான இவளைக் காப்பாத்தின? பச்சைக் குழந்தையைக் கொன்னவளை சாகட்டும்னு விடாம ஏன் காப்பாத்தின சீதாம்மா?"

அதற்குள் அங்கிருந்த மருத்துவர் ஒருவர், "மிஸ் சீதா! டூ யூ நோ ஹெர்? ப்ளீஸ் கால் தி மெண்டல் ஹெல்த் கேர் ரைட் நௌ!" எனவும்,

"நோ டாக்டர்! ஐ வில் மேனேஜ் ஹெர். ப்ளீஸ் கிவ் மீ ஃப்யூ மினிட்ஸ்..." என்று கெஞ்சலாய் உரைத்து விட்டு, செலின் மேடமிடம் திரும்பி, "மேம்! குழந்தையை யாரும் கொல்லல. ஜஸ்ட் தெரிஞ்சவங்ககிட்ட கொடுத்து வச்சிருக்கா. அவ்ளோ தான்!" என்றாள்.

"பொய்! காலைல நீ என்கிட்ட என்ன சொன்ன? இவ யாருக்கோ குழந்தையை வித்துட்டதா சொல்லல? இப்ப தெரிஞ்சவங்கன்னு சொல்ற! யூ ஆர் அ லையர் சீதாம்மா!"

சீதாவிற்கு செலின் மேடமின் இந்நிலை சிறிது பதட்டத்தைத் தந்திருந்தது. அவரை அறிந்திருந்த இத்தனை வருடத்தில் அவர் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொண்டதே இல்லை. 

"இல்ல மேம்! நான் நிஜம் தான் சொல்றேன்."

"நோ! ஐ டோண்ட் பிலீவ் யூ! குழந்தையைக் குளிக்க வைக்கும் போது மூச்சு திணறடிச்சு கொல்ல நினைச்சவ… இப்ப வேற யார்கிட்டயோ கொடுத்து சாகடிக்க சொல்லிருக்கா!"

உண்மையில் சீதா அசந்தே போனாள். ஆறு மாதங்களுக்கு முன் அப்பெண்ணைப் பற்றி தான் கூறிய விடயத்தை இவர் இத்தனை தூரம் ஞாபகத்தில் வைத்திருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அத்தோடு அந்த பெண் தான் இந்த பெண் என்று எவ்வளவு புத்திக் கூர்மையாக கணித்துள்ளார்!

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அபார ஞாபகத்திறனல்லவா? உளநிலையில் சிக்கலுள்ளவர்களும் குழந்தைகளுக்கு சமம் தானே? எனவே, இப்போது ஒரு குழந்தையிடம் பேசுவது போல் செலின் மேடமிடமும் பேசினாள் சீதா.

"மேம்! அது அவ வேணும்னு செய்யல. அவளுக்கு குழந்தையை எப்டி குளிக்க வைக்கணும்னு தெரியலயாம். அதான்… அப்டி… இட்'ஸ் ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்! அவளும் சின்ன பொண்ணு இல்லயா? பாருங்களேன்! அவளுக்கு இருபது வயசு தான் ஆகுதாம். உங்க… வந்து… உங்க பாப்பா இப்ப இருந்திருந்தா… அவளுக்கும் இவ வயசு தானே இருந்திருக்கும்? இன்ஃபாக்ட் அவளை விட இவ சின்ன பொண்ணு. இல்ல மேம்?" 

கேட்ட செலின் மேடமின் பிடி இளகலாயிற்று. மெதுவாக அவர் கரங்களை அவள் கழுத்திலிருந்து பிரித்தெடுத்தவாறே, "உங்க பாப்பா தப்பு செஞ்சா கண்டிக்க தானே செய்வீங்க? செத்து போ'ன்னு சொல்லுவீங்களா என்ன? இவளும் உங்க பொண்ணு மாதிரி தானே மேம்?" என 'என்ன எதிர்வினை வருமோ!' என்ற அச்சத்தில் தயங்கியவாறே கேட்கவும்,

ஆசிரியை செலினின் கண்கள் கரகரவென நீரைப் பெருக்க ஆரம்பித்துவிட்டது.

"என் பொண்ணு! என் பொண்ணு செத்து போச்சு. உனக்கு தெரியுமா?" என்று அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு அழுது ஓய்ந்தார். பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் கண்கள் கலங்கியது.

"நான் கைல வச்சிருக்கும் போதே செத்து போச்சு. கர்த்தர்கிட்ட கண்மூடி ஜெபிச்சுக்கிட்டு இருக்கும் போதே என் குழந்தையை அழைச்சுக்கிட்டார். அவ கர்த்தரால ஆசிர்வதிக்கப்பட்டவ! அதான் அவ்ளோ சீக்கிரம் எடுத்துக்கிட்டார்." தெளிவான முகத்தோடு, எங்கோ விழிகள் நிலைக்க பேசிக் கொண்டிருந்தார். கண்ணீர் ஆறாய் ஓடி நெஞ்சை நனைத்தது.

இது சீதாவிற்குமே தெரியாத செய்தி. செலினின் மூன்று மாத குழந்தை திடுமென மூச்சு திணறல் காரணமாக தவறியது என்ற வரையில் செலினின் தம்பி செபாஸ்டியன் கூறியிருக்கிறார். இப்போது இவரின் கூற்றுப்படி பார்த்தால் அநேகமாக தேவாலயத்தில் இருக்கும் போது அச்சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டுமென ஊகித்துக்கொண்டாள்.

பின் அந்த பெண்ணிடம் திரும்பி, "சீதாம்மா சொல்றாளே… நீ என் பொண்ணா? உன் பேர் என்ன?" என்று தலைவருடிக் கேட்டார்.

சற்று முன் அவளிடம் வன்முறையாக நடந்து கொண்டவர் இவர் என்று சொன்னால் யாராலும் நம்ப முடிந்திருக்காது. அத்தனை மென்மையோடும் வாஞ்சையோடும் தாய்மையோடும் குழைந்திருந்தது, அவரின் முகமும் குரலும்!

"கரோலின் அஷ்மி." என்றாள் அவள்.

கண்கள் மூடி நெஞ்சின் நடுவே சிலுவை வரைந்து கொண்டவர், "சீதாம்மா! கர்த்தர் இத்தனை வருஷத்துக்கு அப்புறம் எனக்கு ஒரு பிள்ளைய கொடுத்திருக்கார் பார்த்தியா?" என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், "உங்க அப்பாவுக்கு கொஞ்சம் கால் பண்ணி கொடு!" என்று கேட்டு, ரகுநந்தனிடம் பேசி தன் பேரக் குழந்தையை விரைவில் மீட்டு தருமாறு கேட்டுக்கொண்டார்.

இனி செலின் மேடத்தைப் பற்றிய கவலை இருக்காது என்றெண்ணிய சீதா இமைகள் ஈரமாக புன்னகைத்தாள்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருந்த நிலையில் அஷ்மியை, செலின் தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றிருந்தார். ஒரு நாளைக்கு நான்கைந்து முறை ரகுநந்தனை அழைத்து குழந்தை தேடுதலைப் பற்றி விசாரித்துவிடுவார். 

செலின் மேடமின் முன்னேற்றம் குறித்து மகிழ்ந்திருந்த ரகுநந்தனும் இன்னொரு குழந்தையின் இழப்பை அவர் சந்தித்தால், விளைவு எப்போது இருந்ததை விடவும் மோசமாகும் என்று புரிந்து வைத்திருந்தார். எனவே அஷ்மியின் குழந்தையைத் தேடும் வேலையை முடுக்கிவிட்டிருந்தார். தனக்கு தெரிந்த மேலதிகாரிகள் அனைவரிடமும் கூறி தீவிரமாக செயல்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் குழந்தை இருக்கும் இடம் தெரிந்தது. முதலில் அஷ்மி, நண்பர் என்று கூறிய நபரை விசாரித்தனர். இவர்களைக் கண்டு மிரண்ட அந்நபர், ஏதோ ஒரு போலி முகவரியை தந்துவிட்டு தலைமறைவாகிவிட, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அந்த பகுதி காவல் ஆய்வாளர் வெங்கட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் தலைமையிலான ஒரு வாரத் தேடலில் நகரின் முக்கிய, பெரிய மாலின் எதிர்ப்புற சாலையில் சற்றே உள்ளடங்கி அமைந்திருந்த ஓர் குழந்தைகள் காப்பகத்தை கண்டறிந்தனர்.

அங்கு மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சந்தேகப்படும் படியாக எந்தவொரு நடவடிக்கையும் இருக்கவில்லை. அந்த இல்லம் சட்டபூர்வ நிபந்தனைகள் அனைத்திற்கும் உட்பட்டே செயல்பட்டு வந்தது. மேலும் உள்ளே சென்று சோதனையிடுவதற்கும் ஆணைப்பத்திரம் இல்லா நிலையில் வெங்கட் ஏதும் செய்ய முடியாமல் திரும்பினார்.

குழந்தைத் தேடுதல் நடவடிக்கையின் அன்றைய நிலவரத்தை கேட்டறிந்த ரகுநந்தன், சும்மா இராமல் அதை சீதாவிடமும் பகிர்ந்திருந்தார்.

இயல்பிலேயே எதையும் சட்டென ஊகித்தறியும் திறன் கொண்ட சீதாவிற்கு, அவ்வில்லத்தின் மீது முதல் சந்தேக விதை விழுந்தது. இருப்பினும் அன்னையிடம் செய்த சத்தியத்தை மனதில் நினைத்து, ரகுநந்தனிடம் இல்லத்தை இன்னும் தீவிரமாக விசாரிக்க மட்டும் சொல்லிவிட்டு தன் வேலைகளில் மூழ்கிவிட்டாள்.

பூக்கும்🌻🌺 

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)