Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 21

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 21


சீதா அந்த வார இறுதியில் செலின் மேடமை சந்திக்க சென்று வந்தாள். இன்னும் குழந்தையைக் காணாமல் அவரும் அஷ்மியும் மிகுந்த வருத்தத்திலிருந்தனர். முடிந்தவரை ஆறுதலாக பேசிவிட்டு வந்தாள்.

மாலையில் ஷாப்பிங் சென்று வரலாம் என்று தான்யா வற்புறுத்த, பயிற்சி காலம் ஆரம்பித்தது முதல் எங்கும் வெளியே செல்லாத காரணத்தால் சீதாவும் இன்று தங்கையோடு கடைவீதி வர சம்மதித்தாள். அவர்கள் சென்ற மால் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு எதிர்புறம் இருந்தது. வழக்கமாகவே சீதாவின் குடும்பத்தினர் அங்கே தான் பர்சேஸிங்கிற்கு வருவது!

ஆனால் ஒருவருமே அந்த இல்லத்தை இதுவரை கவனித்ததில்லை. அன்று பார்த்து மிகச் சிறியதாக தணிந்திருந்த அந்த இல்லத்தின் பெயர்பலகை சீதாவின் கண்களில் பட்டுத் தொலைத்தது.

"வேற எதுவும் வாங்கப் போறியாக்கா? எனக்கு இன்னும் கொஞ்சம் வாங்கணும். இன்னர்ஸ் செக்ஷன் போகணும்." - தான்யா.

"சரி வா! ஐ வன்னா பை தர் ட்டூ."

"நீ வாங்கிருக்க அஞ்சு செட்ல அந்த ஆலிவ் க்ரீன் டாப் அண்ட் மல்ட்டி கலர் ஃப்ளவர்ஸ் லாங் ஸ்கர்ட் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்கா."

"எனக்கு வைட் டாப் அண்ட் பேலஸோ. ப்ளூ சாரி கூட பிடிச்சிருக்கு."

"என்னோட ட்ரெஸ்ல எது நல்லாயிருக்கு?"

இப்படியாக இருவரும் பேசியவாறே மற்ற பொருட்களையும் வாங்கிவிட்டு வெளியே வந்தனர்.

ஓட்டுநரை அழைத்து காரை முன்புறம் கொண்டு வந்து நிறுத்த சொல்லிவிட்டு காத்திருக்கையில் தான் சீதாவின் கவனத்தைக் கவர்ந்தது, அவ்வில்லத்து பெயர்பலகை! அது தந்தை தன்னிடம் கூறிய இல்லம் தான் என்று உறுதிபடுத்திக் கொண்டாள்.

தான்யாவின் இரக்க குணம் தெரிந்த விஷயமேயாதலால், "தானு, அங்கே பாரு!" எனவும்,

திரும்பிப் பார்த்த தான்யா, "ம்ம்! அந்த பக்க ரோட்'ல உள்ளே ஏதோ ஆர்ஃபினேஜ் இருக்குது போல… சீதாக்கா! அங்கே நைட் டிஃபன்-க்கு பணம் குடுப்போமா? ப்ளீஸ்க்கா…" என்றாள்.

இதைத் தானே இவளும் எதிர்பார்த்தாள்? இப்போது அங்கே சென்று விசாரித்து தன் நெருடலைப் போக்கிக் கொள்ளலாம். எந்த சந்தேகமும் இல்லாத பட்சத்தில் இரவு உணவுக்கு பணம் செலுத்திய திருப்தியாவது இருக்கக்கூடும். அதே நேரம் அன்னையிடம் செய்த சத்தியத்திற்கும் பங்கம் ஏற்படாது எனப் பலவாறாக சிந்தித்தவாறே இருந்தாள். பின், கார் வரவும் எதிர்ப்புற சாலையில் ஒரு கிலோமீட்டர் தள்ளி உள்ளே அமைந்திருந்த இல்லத்திற்கு தான்யாவுடன் சென்றாள்.

உள்ளே நுழைந்ததுமே சீதா பார்த்தது, மூன்று வருடங்களுக்கு முன்பு இவளுடன் பயிலும் மாணவி சாரதாவின் தம்பியைத் தேடிச் செல்லும் போது ஓர் குடிசைப்பகுதிக்கு சென்றாளே? அங்கே இவள் விசாரித்த குடிகாரனைத் தான்!

சீதாவிற்கு அவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அன்று குடிபோதையில் இருந்த அவனுக்குதான் இவள் முகம் நினைவிலில்லை. 

அவனை இங்கு கண்ட பின் இவளின் சந்தேகம் வலுப்பட்டது. தான்யா இரவு உணவிற்கான பணம் செலுத்துவதற்கு பேசிக் கொண்டிருக்கையில், இவள் அங்கு மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை நோட்டம்விட்டவாறே வராண்டாவில் பணியாள் உடுப்பில் இருந்த அவனை நெருங்கி, "செல்வம் அண்ணா! எப்டி இருக்கீங்க?" என நன்கு தெரிந்தவள் போல் கேட்க,

அவளை அடையாளம் தெரியாமல் விழித்தவன், "யாருன்னு தெரியலையேம்மா…" என்று இழுத்தான்.

"என்னண்ணா… உங்க வீடு இருக்க ஏரியாவுக்கு நான் ஒருமுறை வந்திருக்கேனே? உங்க வீட்டு அக்காவைக் கூட எனக்கு தெரியும்." என்று அவன் வசிக்கும் பகுதியின் பெயரையும் அவன் மனைவியின் பெயரையும் சொன்னாள்.

ஏதோ யோசித்தவனாய்ப் புருவம் சுருக்கியவன், சீதாவை அளவெடுப்பது போல் பார்த்தான்.

தும்பைப் பூ நிற நூல் வேலைப்பாடுகள் நிறைந்த பருத்தி துணியாலான மேல் சட்டையும் மெஜந்தா, பச்சை, ஊதா என அடர்நிறங்கள் கோடுகளிட்ட பட்டியாலா பாட்டமும் அதே வண்ணங்கள் கொண்ட துப்பட்டாவும் அணிந்திருந்தாள். அவளின் இந்த தோற்றத்தைக் கண்டு, 'இந்த மேல்தட்டு வகை பெண்ணிற்கு நம் கச்சடா பகுதியில் என்ன வேலை இருந்திருக்கும்?' என்ற சிந்தனையோடே கேட்டான்.

"அப்டியா? எனக்கு பார்த்த ஞாபகம் இல்லம்மா? அங்க யாரைப் பார்க்க வந்தீங்க?" 

"எங்க வீட்டு சர்வண்ட் அந்த ஏரியா தான். ஒரு வேலையா அவங்களைப் பார்க்க வந்தேன்." என்றவள் அதற்கு மேல் அவனை சிந்திக்க விடாமல், "நீங்க இங்கே தான் வேலை செய்றீங்களா? இங்கே எவ்ளோ பசங்க இருக்காங்கண்ணா? இன்னிக்கு நைட் சாப்பாடுக்கு பணம் கொடுக்க வந்தோம். எவ்ளோ பசங்க இருக்காங்கனு தெரிஞ்சா நல்லா இருக்கும்." 

"அதெல்லாம் ஆபீஸ் ரூம்ல கேளும்மா சொல்லுவாங்க." எனவும்,

ஏமாற்ற பாவனையில் மாறிய சீதாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, "நான் என் வேலையைத் தவிர, வேற எதுவும் இங்கே பேசக் கூடாதும்மா. அதான் சொல்றேன். பெரிய அய்யா வேற இருக்கார். நான் இப்டி வர்றவங்ககிட்ட நின்னு பேசறதைப் பார்த்தா கோவப்படுவார்." என்றான், தன்னிலை விளக்கமாக!

"சரிண்ணா. பரவால்ல அங்கேயே விசாரிச்சுக்கறேன்." என்றுவிட்டு திரும்ப, அடிபட்ட சிறுத்தையின் வெறியோடு ஒருவன் இவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

ஒரு கணம் யாரென யோசித்த சீதா, பின் அடையாளம் கண்டுகொண்டாள். இவன் மூன்று வருடங்களுக்கு முன் குழந்தைகள் கடத்தலில் பிடிபட்டவன். ஓர் அரசியல் கட்சியின் தொண்டன். 

ஜெயிலுக்கு சென்று வருவதெல்லாம் அரசியலில் சாதாரணம்தான் என்றாலும், ஏனோ இவனால் அதன்பின் அரசியலில் தலையெடுக்கவே முடியாது போயிற்று.

ஏற்கனவே அவன் ஊரில் ரவுடிசம் செய்து கொண்டிருந்தவனுக்கு, அரசியலில் சேர்ந்து கட்சி தலைவனாக ஆக வேண்டும் என்பதே வாழ்க்கை லட்சியம். கட்சி தலைவனாக வருவதென்பது அத்தனை சுலபமில்லை. இருபது, முப்பது வருடங்களேனும் கூழை கும்பிடு போட தெரிந்திருக்க வேண்டும். இன்னவர் தான் என்றில்லாமல், பாரபட்சம் பாராமல் விழுந்து வணங்கத் தெரிந்திருக்க வேண்டும். இவன் அப்போதுதான் அரசியல் கட்சியில் சேர்ந்து கடைநிலையில் இருந்து, பெரிய தலையின் நன்மதிப்பைப் பெற்று, எல்லோரும் அறியும் தொண்டனாக முன்னேறி வந்த காலக்கட்டம். 

அப்போது இவனுடைய சட்ட விரோதமான குழந்தை கடத்தல் தொழில் சீதாவின் முயற்சியால் அம்பலமானதோடு, அப்போது தேர்தல் வருகின்ற சமயமானதால் கைது செய்யப்பட்டவனின் உதவிக்கும் கட்சியில் இருந்து யாரும் ஜாமீனில் விடுவிக்க முன்வரவில்லை.

இவனாகவே அவன் செல்வாக்கை பயன்படுத்தி, தன் வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனைக் குறைப்பை ஏற்று, சிறிது காலம் மட்டும் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வந்திருந்தான்.

வந்தவனுக்கு கட்சியில் முன்பிருந்த மரியாதை கிடைக்காமல் மீண்டும் கடைநிலைக்கே தள்ளப்பட்டான். அந்த கோபம் எல்லாமாக சேர்ந்து சீதாவின் மேலும் ரகுநந்தன் மேலும் பெரும் வன்மத்தை வளர்த்திருந்தது. இருவரையும் வேரறுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே குழந்தைகள் காப்பகம் என்ற போர்வையில் ஏதேனும் ஒரு வகையில் குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து, கைமாற்றி விட்டுக்கொண்டிருந்தவன் சிறையிலிருந்த காலத்தில் தன் வேலைகளை நிறுத்தி வைத்திருந்தான். இப்போது ஆறு மாதங்களாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறான். இங்கு எப்பொழுதேனும் வந்து செல்பவன் இன்றும் வந்திருக்கிறான். 

சிறையில் இருக்கும் போதே சீதாவின் குடும்பத்தைப் பற்றி ஆணி வேர் வரை விசாரித்திருந்தான். உள்ளே சென்றுவிட்டு, விடுதலை ஆகி வரும் போது விடுமுறைக்கு சீதா தன் குடும்பத்தோடு சுற்றுலா சென்றிருந்தாள்.

எனவே பொறுமையாக கவனித்துக் கொள்ளலாமென காத்திருந்தவனின் இடத்திற்கே இன்று வந்து அவன் வலையில் மீனாக விழுந்துள்ள சீதாவை சும்மா விட்டுவிடுவானா என்ன? 

"தேவையில்லாம என் வழிக்கே வந்துட்டு இருக்க... அப்பவும்! இப்பவும்!" என்றவன் அருகிலிருந்த செல்வத்தைப் பார்க்க, அவன் அந்த ஒரு பார்வையிலேயே நடுங்கியவாறு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

சீதா, "அப்போ மாதிரியே இப்பவும் நீ உள்ள போகப் போறங்கறது இதுல இருந்தே‌ தெரியல?" என்று அவன் மனநிலை தெரியாமல் இவள் வேகத்தோடு வார்த்தைகளை விட, மேலும் கொலைவெறியாகிப் போனான். 

எனினும் வராண்டாவில் நிற்பதை உணர்ந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "உள்ளே வா! உனக்கு செய்ய வேண்டிய கைம்மாறு சிறப்பா செஞ்சிடறேன்." என்றபடி உள்ளே செல்ல திரும்பி நடந்தான்.

அசையாமல் நின்ற சீதாவை திரும்பியே பாராமல் நடந்தபடியே, "தான்யாக் குட்டியை நான் எதுவுமே செய்ய மாட்டேன்." எனவும் இவளுக்கு திக்கென்றானது. மறு பேச்சு பேசாமல் அவன் பின்னால் உள்ளே சென்றாள். 

எதிர்ப்பட்ட தான்யா, "சீதாக்கா! இவர் இங்குள்ள குழந்தைங்களுக்கு நீதி நெறி கதைகள் எல்லாம் சொல்லி தர்றவராம். அண்ட் இவர்தான் இந்த ஆர்ஃபினேஜ் நடத்தறவர்‌. பசங்க இவரை குருஜி'ன்னு கூப்பிடறாங்கக்கா." என்று அருகே சாந்தமே உருவாய், நீள தாடி வைத்திருந்த ஒரு மனிதனைக் காட்டினாள். 

ஆனால் அவன் கண்களில் உள்ள கயமைத்தனத்தை சீதா கண்டுகொண்டாள். இவன் பெயரில் நடத்துவதால் தான் இரண்டு வருடங்களுக்கு முன்பும் இப்போது காவல்துறை விசாரணையிலும் கூட இந்த இல்லத்தின் பெயர் வெளிவரவில்லை போலும்‌.

பார்த்ததுமே புரிந்தது, அவன் தான்யாவிற்கு காவலாக நிற்கின்றான் என்று! இவள் இங்கே ஏதேனும் அவர்களுக்கு எதிராக செயல்பட்டால் அது தான்யாவிடம் தான் எதிரொலிக்கும். 

எனவே, "நீ பேசிட்டு இரு தானு! நான் உள்ளே போய் குழந்தைங்களைப் பார்த்துட்டு வர்றேன்." என்றவள் நடந்தவாறே துப்பட்டா மறைவில் அலைபேசியில் தன் தந்தைக்கு ஓர் குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள். அது மட்டுமே அப்போது அவளால் செய்ய முடிந்தது.

ஆங்காங்கே இருந்த சிறு சிறு குடில்கள் போல் வடிவமைக்கப்பட்டிருந்த அறைகளில் சிறுவர்கள் இருப்பது தெரிந்தது. சிறு குழந்தைகள், சிறுவர்கள் என வயதிற்கேற்ப அறைகள் இருந்தன. பார்க்கும் எவருக்கும் சந்தேகமே தோன்றாது. மாறாக, இல்லத்தை நடத்துபவரின் மேல் நன்மதிப்பே உருவாகும்.

சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளவென சில பெண்களும் இருந்தனர். அவர்கள் முகத்திலெல்லாம் மனமுவந்து குழந்தையைப் பராமரிக்கும் அன்பே நிறைந்திருந்தது. எனில், இவனின் செயல்கள் இங்கு வேலையிலுள்ள எவருக்கும் தெரிந்திருக்கவில்லை என ஊகித்துக்கொண்டாள். அதனால்தான் வெளியுலகிற்கும் இந்த இல்லத்தில் நடக்கும் அநியாயங்கள் தெரியவில்லை.

இங்கு தான் அஷ்மியின் குழந்தையும் இருக்க வேண்டும் என்றது, சீதாவின் உள்ளுணர்வு.

அங்குள்ள அனைத்து விடயங்களையும் உள்வாங்கியவாறே அவன் பின்னால் சென்றவள், குடில்களை விட்டு தள்ளியிருந்த ஓர் சிறிய அறைக்குள் அவன் நுழைந்ததும் உள்ளுக்குள் உணர்த்திய எச்சரிக்கை உணர்வை தான்யாவின் பொருட்டு, அலட்சியப்படுத்திவிட்டு தயங்கிவாறே உள்ளே சென்றாள்.

உள்ளே வந்தவன், "உங்கப்பனுக்கு கால் பண்ணி வர சொல்லு! அந்தாள் மட்டும்தான் தனியா வரணும். கேனத்தனமா வேற எந்த வேலை செய்ய நினைச்சாலும் நானும் குருஜிக்கு கேனத்தனமான வேலை கொடுக்க வேண்டியதா இருக்கும்." என்றவனின் நிதானக் குரல் சீதாவின் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது‌.

ஏற்கனவே குறுஞ்செய்தியில் 'Emergency pa. We are in the culprit's custody' என்று கூறி இல்லத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தாள். இப்போது அழைத்து அவன் சொன்னபடியே தனியாக வர சொன்னாள்.

ஆனால் மகளின் குறுஞ்செய்தியைப் பார்த்த கணத்திலேயே ரகுநந்தன், காவல்துறைக்கு விஷயத்தைத் தெரிவித்துவிட்டே கிளம்பியிருந்தார். பாதி வழியில் மகளின் அழைப்பைத் தொடர்ந்து அவள் சொன்னதைக் கேட்டவர், காரியம் சிக்கலாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். எனவே மீண்டும் காவல்துறை நண்பருக்கு அழைத்து, வர வேண்டாமென அவசரமாகக் சொன்னார். 

சீதாவின் தன்னம்பிக்கையையும் தற்காப்புப் பயிற்சியையும் பற்றி தெரிந்திருந்ததால், தானும் அவளுமே சமாளித்துவிடலாமென நினைத்தார். ஆனால் ரகுநந்தனின் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு காவல்துறையினரும் கிளம்பியிருந்தனர்.

சீதா, ரகுநந்தனிடம் பேசியபின் அக்கயவன் அவளின் அலைபேசியைப் பிடுங்கி அணைத்து வைத்துவிட்டு, அவன் அரசியல் வாழ்க்கையில் எப்படியெல்லாம் ஜாஜ்வல்யமாய் ஜொலிக்க நினைத்தான் என்றும், சிறு வயதிலிருந்து மிகப் பெரிய அரசியல்வாதியாவதே தன் கனவு என்றும், அக்கனவை சீதாவும் அவள் தந்தையுமே தகர்த்தெறிந்தனர் என்றும் குற்றம் சாட்டி, தற்போது அவன் நீதிமன்றத்தில் அவன் பாணியில் தண்டனை விதிக்கப் போவதாகத் தெரிவித்தான்.  

அது மட்டுமல்லாமல் அவ்வப்போது இவனைப் பார்க்கும் போதெல்லாம், குருஜியின் முகத்தில் 'ஒரு சிறு பெண்ணின் முயற்சியால் சிறை சென்றிருக்கின்றாய்' என்ற ஏளனம் தெரியும். அது இன்னமும் இவன் பகைக்கு பால் வார்த்தது.

ரகுநந்தனிற்காக காத்திருந்த நேரத்தில் சீதா, "எங்களைக் கொல்லப் போறியா?" எனக் கேட்க,

"பின்ன? உங்களை விட்டு வச்சு வாழ்நாள் முழுக்க என்னை ஜெயில்லயே கிடக்க சொல்றியா?" என்று பல்லைக் கடித்தான்.

"சரி! அதான் கொல்லப் போறியே… சாக முந்தி இங்கே இருக்க குழந்தைங்க முகத்தைப் பார்த்துட்டு சாகறேனே… ப்ளீஸ்…" எனவும், சீதாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

கண்களில் இறைஞ்சலே எஞ்சியிருந்தது. இருந்தும், "ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்க்கலாம்னு நினைக்கறியோ?" என மாறாத கூர்பார்வையோடே கேட்டான். 

"நிச்சயமா இல்ல. தப்பிக்க வழியில்லாம தான் என் தங்கச்சியைப் பிடிச்சு வச்சிருக்கியே? அப்புறம் நான் வேற என்ன செஞ்சிடப் போறேன்? வரும் போது குழந்தைங்களைப் பார்த்தேன். தூக்கணும்னு ஆசையா இருந்தது. அதான்… ப்ளீஸ்…" என இரங்கிக் கேட்க, இரக்கமும் சிரிப்புமற்ற பாறை முகத்தில் அப்போது சிறிது கருணை துளிர்த்தது போலும்.

இப்போது இவனின் வலக்கையான குருஜி இருந்திருந்தால் நிச்சயம் சீதாவின் வேண்டுகோளிற்கு செவி சாய்த்திருக்கமாட்டான். 

ஆனால் இவன், 'சரி வா!' என்பது போல் தலையசைத்துவிட்டு, அறையின் கதவைத் திறந்து வெளியே நடந்தான். சீதாவின் பார்வை வேகவேகமாக அலைபாய்ந்தது.

அஷ்மியின் குழந்தைக்கு இப்போது ஒன்பது மாதங்களேனும் இருக்கும். எனவே முதலில் ஒரு வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்றாள். 

சந்தேகமாகப் பார்த்தவனிடம், "ஏன் உனக்கு கைக் குழந்தைங்களைப் பிடிக்காதா? அவங்களோட முகத்தைப் பார்த்தா உனக்கு இப்டி தப்பு செய்ய தோணுமா?" என்று கேள்வியை அவன் பக்கம் திருப்ப,

"இந்த அன்னை தெரசா வேலையெல்லாம் இங்கே ஆகாது. உன் அட்வைஸ் மூஞ்சியெல்லாம் என்கிட்ட வச்சுக்காத!" என்று கடினப்பட்ட குரலில் மேலும் கடினமாக உடைத்துவிட்டு, குழந்தைகள் இருக்குமிடம் அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த குழந்தைகளை பார்வையிட்டவள் ஒவ்வொரு குழந்தையையும் ஆசை ஆசையாகவேக் கொஞ்சினாள். அதில் அவனின் சந்தேகம் சற்று வடிந்தது.

அஷ்மியின் குழந்தையை அடையாளம் காண்பதில் சீதாவிற்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அன்று குழந்தைக்கு சிகிச்சையளிக்கும் போது கழுத்தினடியில் இருந்த தேமல் போன்ற அடையாளத்தை பற்றிக் கேட்டாளல்லவா? அதையேதான் இப்போதும் அவள் கையில் வாங்கும் ஒவ்வொரு குழந்தையிடமும் தேடினாள்.

அதிர்ஷ்டவசமாக அவள் தூக்கிய நான்காம் குழந்தையின் கழுத்தில் அவ்வடையாளம் இருந்தது. குழந்தை அஷ்மியிடம் இருந்ததைக் காட்டிலும் நல்ல ஆரோக்கியமாகவும் துறுதுறுப்பாகவும் இருந்தாள். பின்னே? சந்தையில் நல்ல பொருளைத் தானே விற்க முடியும்?

குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த சீதா, இக்குழந்தையைக் கண்டால் செலின் மேடம் எவ்வளவு சந்தோஷிக்கக் கூடுமென நினைத்து உவகைக்கொண்டாள்.

அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், "வந்து‌... தான்யாவைப் பார்க்கணுமே…" என்று இழுக்க, 

"நீ இங்கே ஒழுங்கா இருக்கறவரை அவளும் பத்திரமா இருப்பா!" என்றான், எச்சரிக்கும் விதமாக!

"இல்ல… அவளும் குழந்தையைப் பார்ப்பாளே… அதான்…" எனவும், 

"தேவையில்லை. எங்க உங்கப்பனை இன்னும் காணும்?" என்று அசட்டையாகக் கேட்டுவிட்டு மீண்டும் அலைபேசியை பார்வையிடலானான்.

இவள் எப்படி இங்கிருந்து குழந்தையோடு வெளியே சென்று செலின் மேடமிடம் சேர்ப்பிப்பதென சிந்திக்கலானாள். ஒரு வழியும் புலப்படவில்லை. எப்படியும் அப்பாவும் வந்தால் இருவரையும் இவன் உயிரோடு விடப்போவதில்லை.

தனக்கு எது நேர்ந்தாலும் பரவாயில்லை. அப்பாவையும் தான்யாவையும் காப்பாற்றி, குழந்தையையும் அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். எனவே, முயற்சிக்காமல் இருப்பதற்கு ஏதேனும் செய்யலாம் என நினைத்தாள். 

ஐந்து நிமிடங்கள் பொறுத்திருந்து அவன் எதிர்பாராத தருணத்தில், சட்டென கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கையிலிருந்த அலைபேசியின் மூலம், பலங்கொண்ட மட்டும் ஓங்கியடித்து அவன் மூக்கை உடைத்தாள். 

அவன் அலைபேசியைத் தவறவிட்டு, இரத்தம் கொட்டிய மூக்கைப் பிடித்தவாறே தடுமாறிய ஒரு கணத்தை பயன்படுத்தி அங்கிருந்து வேகமாக செல்ல எத்தனித்தாள். மறுகணம் அவன், கத்தி பிடித்து பழகிய தன் கரங்களை லாவகமாக சுழற்றி சீதாவின் கழுத்தை நெறித்தான். அவன் வெறி கூடியிருந்தது. அவள் ஒரு கையாலேயே தனக்கு தெரிந்த கராத்தேயால் சிறிது நேரம் தாக்குப் பிடித்தாள்.

அங்கிருந்த பணியாட்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைக்க குடில்களுக்குள் தூக்கி சென்றனர். ஒரு பெண் சீதாவிடமிருந்த குழந்தையை வாங்க வர, அவரிடம் தராமல் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

இப்போது இவள் அவனைத் தாக்கிவிட்டு தப்பித்து சென்றால், குருஜி தன்னை இன்னமும் அற்பமாய் பார்ப்பான். 'தன்னை ஒரு சிறு பெண் ஏமாற்றுவதா?' என்ற ஆத்திரத்திலும் அவமானத்திலும் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆவேசமாக செயல்பட்டான். 

அதற்குள் ரகுநந்தனும் காவலர்கள் புடைசூழ பரபரப்பாக வந்தார். அவர்கள் அருகே வந்து சேருவதற்கும் சீதாவின் சரீரம் மண்ணில் வீழ்ந்து உயிர் பிரிவதற்கும் சரியாக இருந்தது.

அவளைத் தாங்க எண்ணி, அவள் முன் நீண்ட கரங்களில் குழந்தையைக் கொடுத்து, "அஷ்மி குழந்தை! செலின் மேடம்!" என்ற வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டு, குழந்தையைச் சேர்ப்பித்த திருப்தியோடும் அவ்வுருவத்தை விழியகல நெஞ்சில் நிறைத்துக் கொண்டதில் சந்தோஷப் புன்னகையோடும் சரிந்து விழுந்தாள் சீதாலட்சுமி ரகுநந்தன்.

அனைத்தும் அரைமணி நேரத்தில் முடிந்து போனது.

பூக்கும்🌻🌺 


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...