சீதையின் பூக்காடு - 6
அத்தியாயம் 6
மொட்டைமாடியில் மல்லிகைக் கொடியருகில் நின்று பேசிக் கொண்டிருக்கையிலேயே திடுமென அரண்டு போய் அவன் மேல் மயங்கி சரிந்தாள் ஆரவி. சட்டென்று கையிலிருந்த மல்லிகைகளை உதறிவிட்டு, தன் மேல் 'மயங்கி விழுந்த மல்லிகையை' ஏந்திக்கொண்டான் விபுநந்தன்.
"ஆரவி! ஆரவி!!"
"......"
"என்னடா நந்தா இது? இவ மயங்கி விழற அளவுக்கு அவ்ளோ மொக்கையாவா இருந்தது உன் ஜோக்?!" தனக்குள்ளேயே முனகிக் கொண்டவன் மீண்டும்,
"மாமி!" எனக் கன்னம் தட்டிப் பார்த்து அவள் அசையாதது கண்டு பதட்டத்துடன் கீழே தூக்கி வந்தான். சோஃபாவில் கிடத்தி முகத்தில் தண்ணீர் தெளிக்க மெதுவாக கண்விழித்தாள் அவள்.
"ஆரவி! ஆர் யூ ஆல்ரைட்?"
பதிலேதும் சொல்லாமல் அவனையே வெறித்தாள். மனதில் சற்று முன் நிகழ்ந்தது படமாக ஓடியது.
டிவியில் கவனமாக இருந்த விபுநந்தனை தான் ஓர் அறையில் இருந்து பார்த்து ரசித்தது, பின் அச்செயல் ஏனோ தனக்கே பிடிக்காமல் மாடி அறைகளைப் பார்க்கச் சென்றவளின் கண்களில் அந்த ஒடுங்கிய மொட்டைமாடி படிக்கட்டுகள் தென்பட்டது, மொட்டைமாடியில் இருந்து கீழிறங்க வழி இருக்குமோ என்றெண்ணி வேகமாக படிகளில் தான் ஏறியது, கடைசி நான்கு படிகள் இருக்கையில் ஊஞ்சலாட்டத்தின் சத்தம் கேட்டு வேகம் குறைந்து மெதுவாக சென்றது, வாசலில் கால் வைத்ததும் பால்கனியில் இருந்ததைப் போன்ற ஊஞ்சல் அங்கும் இருந்தது, முக்கியமாக அது காற்றில் அசைந்ததைப் போல் அல்லாது யாரோ கால்களால் உந்தி ஆடியதைப் போல் ஆடிக்கொண்டிருந்தது, பின்… ஊஞ்சலாட்டம் தடைப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு நேரம் ஆடிக்கொண்டிருந்து விட்டு, தான் பார்க்கையில் இளைப்பாறுவதைப் போல் ஆட்டம் குறைந்து மெதுவாக நின்றது,
அதைப் பற்றி சிந்திப்பதற்குள் தன் விழிகளில் சுற்றுப்புறம் விழுந்து சுற்றிலும் பூக்களின் ஆட்சியைக் கண்டு, தான் பிரமித்து நின்றது, அதுவும் எத்தனை நேரமோ தெரியவில்லை. திடுமென விபுநந்தன் தன் பெயரைக் கூறி அழைத்துக்கொண்டே மேலே வந்து, அவனும் அவ்விடத்தைப் பார்த்து அதிசயித்து, ஆர்பரித்து, கடைசியாக அந்த வார்த்தையை உதிர்த்தது… ஆம்! அவ்வார்த்தை… 'பூக்காடு!'
அத்தோடு நில்லாமல் தான் கேட்ட சிரிப்பொலி?
இப்போது அனைத்தையும் யோசித்துப் பார்த்த ஆரவிக்கு மீண்டும் மயக்கம் வருவதைப் போல் இருந்தது.
"மீனாட்சி!" என்று முணுமுணுத்துக்கொண்டாள்.
நந்தன் அவளின் சோர்வைக் கண்டு பழரசம் எடுத்து வந்து தந்தான்.
"பேபி மாமி, ஆர் யூ ஆல்ரைட் நௌ?" என மீண்டும் கவலையாக வினவினான்.
"ஹ்ம்ம்! ஐ'ம் ஓகே விபு!"
"என்னாச்சு? ஏன் பேசிட்டு இருக்கும் போதே மயங்கிட்ட?"
சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு, "நத்திங் விபு. ஈவ்னிங் உன் சாலட் சாப்ட்டேனோல்லியோ? அதனால இருக்கும்." என்றாள்.
மூக்கு விடைக்க, "ஒன்னு பத்தலனு ரெண்டு பௌல் வாங்கி சாப்ட்டுட்டு இப்ப என் சாலட்ட நக்கலடிக்கறியா நீ?" எனக் கடுப்பாக மொழிந்தான்.
"சரி சரி! கோவிச்சுக்காதப்பா. நேக்கு நைட் டின்னர் எதுவும் வேணாம். நீ சாப்ட்டுட்டு தூங்கு. குட் நைட்." என்றுவிட்டு மேலே வந்து தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
விபுநந்தன் தந்த பழரசத்தை அருந்தியப் பின் சற்று தெளிவாக சிந்திக்க முடிந்தது.
அவன் 'பூக்காடு' என்றதும் இவள் அதிர்ந்ததற்கு காரணம், ஆரவி எழுதி புத்தகமாக வெளி வந்துள்ள ஒரு நாவலின் பெயரும் பூக்காடு என்று தான் வரும். அது 'சீதையின் பூக்காடு'.
இதிலென்ன அதிர்ச்சி இருக்க முடியும்? இருக்கிறது! அந்தக் கதையில் ஒரு காதல் ஜோடியை வில்லன் கும்பல் சேர்ந்து தங்கள் காரியம் முடியும் வரை மலை வாசஸ்தலத்தில் தனியாக இருக்கும், எந்த வசதியுமில்லாத ஓர் பங்களாவில் அடைத்துவிடுவார்கள். அங்கிருந்து தப்பிச் செல்ல வழி எதுவும் இருக்காது. அந்த பங்களாவில் ஒரு துர் ஆன்மா சுற்றி வந்துகொண்டிருக்கும்.
அங்கே அவர்களுக்கு நடக்கும் கஷ்டங்களும் திகில் அனுபவங்களும், பின் அங்கிருந்து எப்படி தப்பித்துச் சென்று வில்லனைப் பழிவாங்குகிறார்கள் என்பதே ஆரவியின், 'சீதையின் பூக்காடு' கதை.
பல வித்தியாசங்கள் இருந்தாலும் சில விஷயங்கள் கதையில் வருவதைப் போலவே நிஜத்திலும் நடக்கிறது என்று தான் நந்தனின் 'பூக்காடு' என்ற வார்த்தையை கேட்டதும் அதிர்ந்து போனாள் ஆரவி.
கதையில் இருந்து நிஜத்தில் மாறுபடும் வித்தியாசங்கள் என்னவெனில், முதலில் இவர்கள் காதலர்கள் கிடையாது. ஆனால் நிஜத்தில் விபுநந்தனைக் காதலித்து விடுவோமோ என்ற அச்சம் ஆரவியின் மனதில் இன்று காலையிலேயே வந்துவிட்டது. அடுத்து கதையில் அவர்களை வீட்டுச் சிறையில் வைக்கும் வில்லனை அவர்கள் நன்கறிவார்கள். ஆனால் நிஜத்தில் என்ன நோக்கத்திற்காக, யார் தங்களை இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதே இவர்கள் இருவருக்கும் தெரியாது.
மூன்றாவது கதையில் வரும் பங்களாவில் அடிப்படை வசதிகள் தவிர, வேறு ஆடம்பர வசதிகள் எதுவும் இருக்காது. ஆனால் நிஜத்தில் இங்கு தொலைத்தொடர்பு வசதிகள் தான் இல்லையேயன்றி ஏனைய, தொலைக்காட்சி முதல் அனைத்து ஆடம்பர வசதிகளும் நிரம்பிக் கிடக்கின்றன. நான்காவது கதையில் மொட்டை மாடியே கிடையாது. வீட்டை சுற்றிலும், தோட்டத்திலுமே ஓர் பூக்காட்டை தன் கற்பனையில் உருவாக்கியிருப்பாள் ஆரவி. ஆனால் நிஜத்தில் ஊஞ்சல், மொட்டை மாடி, அதில் ஓர் பூக்காடு என்றிருக்கிறது. ஐந்தாவது கதையில் வரும் நாயகியின் பெயர் சீதாலட்சுமி. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதாலும், அவளொரு 'புஷ்ப விரும்பி' என்பதாலுமே, சீதையின் பூக்காடு என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தாள் இவள். ஆனால் இங்கு தன் பெயர் முற்றிலும் வேறல்லவா? அத்தோடு கதையைப் போன்று இவ்விடம் மலை வாசஸ்தலமும் அல்ல! இவள் அவளைப் போன்ற அதீத புஷ்ப விரும்பியும் அல்லவே?
அடுத்தது தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போன்ற அந்த நகையொலி! கதையில் முதல் நாளே ஒரு துர் ஆன்மா அவர்களைச் சுற்றி அட்டகாசம் செய்யும். அதை அவர்கள் இருவராலுமே உணர முடியும். ஆனால் நிஜத்தில் தாங்கள் இங்கு வந்து இன்று மூன்றாம் நாள்! அதுவும் விபுநந்தனின் சாதாரணப் போக்கைப் பார்த்தால் அவனுக்கு சிரிப்பு சப்தம் கேட்கவில்லை போலவே?! எனில், தனக்கு மட்டும் கேட்டது எப்படி சாத்தியமாகும்? இந்த விஷயத்தில் ஆரவி குழம்பித் தவித்தாள்.
சரி! கதையில் வருவது போல் நிஜத்திலும் நடக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், கதையில் வரும் காதலர்கள் இரண்டாம் நாளே பால்கனியில் இருந்து குதித்து தப்பிப்பது போல் எழுதியிருப்பாள்.
இங்கு அப்படி தப்பிக்கக் கூட எந்த வழியும் இல்லையே! சிறை வைத்தாற் போன்று பால்கனி கூட முழுவதும் கம்பிகள் கொண்டு அடைத்தல்லவா இருக்கின்றது?
விபுநந்தனிடம் இவை அனைத்தையும் கூறலாம் என்றால், முதலில் அவன் இவற்றையெல்லாம் நம்ப வேண்டுமே? கதையில் நடப்பது நிஜத்திலும் நடக்கிறது என்றால் கைக் கொட்டி பரிகாசம் செய்து சிரிப்பானல்லவா? நிச்சயம் சிரிக்கத் தான் செய்வான். தன்னைக் கலாய்த்து தள்ள சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு தானே போய் தலையைக் கொடுப்பதாமா?
சும்மாவே பேபி என்று அழைத்துக்கொண்டிருப்பவன், தான் சிரிப்பொலி கேட்டு மயங்கியதாகச் சொன்னால் தன்னை பாலருந்தும் பச்சைக் குழந்தை என்றே எண்ணிவிடுவான்.
அத்தோடு இவளுக்குமே தான் கேட்ட சிரிப்பொலி உண்மையா? அல்லது அவனின் பூக்காடு என்ற வார்த்தையைக் கேட்டு, நடப்பதை கதையோடு சம்பந்தப்படுத்தியதால் உண்டான மாயையா? என்று சரிவரப் புரியவில்லை.
எனவே இப்போதைக்கு எதையும் நந்தனிடம் கூற வேண்டாம் என முடிவு செய்தாள் ஆரவி. ஏதேதோ ஞாபகங்களுடனும் குழப்பங்களுடனும் அன்றைய இரவு கழிந்தது. அந்த குழப்பத்தில் ஆரவி, தான் மாடியேறி செல்லும் போது பார்த்த ஊஞ்சலாட்டம், 'உண்மையிலேயே காற்றிற்கு தான் அசைந்ததா? இல்லை ஏதேனும் உந்து சக்தியால் அசைந்ததா? அல்லது வீட்டில் இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரேனும் இருக்கிறார்களா?' என்பதை சிந்திக்கத் தவறிவிட்டாள்.
ஆரவி மேலே அறைக்குச் சென்றதும் சுருங்கிய புருவங்களோடு நீண்ட நேரம் தீவிர யோசனையில் இருந்தான் விபுநந்தன். பின் எழுந்து தான் மட்டும் எதுவும் சாப்பிடத் தோன்றாமல் அன்றைய மிச்சமிருந்த உணவினை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைத்துவிட்டு, சமையலறையை சுத்தம் செய்தான்.
பின் மேலே உள்ள அவனறைக்குள் சென்று, கட்டிலில் விழுந்து ஆரவியைப் போலல்லாமல் எந்த குழப்பமும் இன்றி கண் மூடிய நிமிடத்தில் தூங்கிவிட்டான்.
அவனருகே அமர்ந்து தூங்கும் நிர்மலமான அவன் முகத்தை ரசித்து, நெற்றியை வருடாமல் வருடி, இதழ் பதியாத ஓர் பாச முத்தத்தைத் தந்து மென்மையாக புன்னகை சிந்தியது ஓர் ஜீவன். இது எதையுமே அறியாமல் நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்திருந்தான் விபுநந்தன்.
திங்கட்கிழமை!
புள்ளினங்களின் கீச்சொலியோடும், கதிரவனின் கரங்கள் செய்த மாயாஜாலத்தாலும் ரம்மியமாய் புலர்ந்தது அதிகாலைப் பொழுது. நேரங்கழித்து தூங்கியிருந்தாலும் இன்று அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது ஆரவிக்கு.
எழுந்து ஜன்னலருகே சென்றவள் நகர வாசனையற்ற அந்த சுத்தமான காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள். அறையை விட்டு வெளியேற சொல்லி உந்தி தள்ளிய மனதைத் தலையில் கொட்டி அடக்கினாள்.
இந்நேரம் அவன் பால்கனியில் தினமும் செய்யும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பான். இந்த பாழாய்ப் போன மனம் அவனில் மயங்கத் தான் திட்டம் தீட்டுகிறது. மனதை வெல்ல ஜன்னல் வழியே தெரிந்த இயற்கையில் விழிகளைப் பதித்து நின்றிருந்தாள். நேற்றிருந்த குழப்பங்கள் ஓர் ஓரத்தில் இருந்தாலும் தற்போது நெஞ்சம் நிர்மலமாய் இருந்தது.
பின் அவன் கீழே சென்றிருப்பான் என்று நேரத்தைக் கணக்கிட்டு உறுதி செய்துகொண்டு, இவளும் குளித்து முடித்து கீழிறங்கினாள்.
இவள் நினைத்ததைப் போலவே விபுநந்தன் சமையலறையில் தான் இருந்தான். இன்று வெள்ளை நிற டீ-ஷர்ட், காக்கி நிற கார்கோ ஷார்ட்ஸ். கூடுதலாக காதில் 'நடை கேட்பி' (walkman).
"அட! இதென்ன வாக்மேன்! எந்த காலத்துல உள்ளது!" என்று கூறி அதிசயித்தாள் இவள்.
"ம்ம்! டிவி ஸ்டாண்ட்ல இருந்தது. இப்பலாம் இத பார்க்கவே முடியறதில்ல இல்ல? மொபைல்லயே எல்லாம் கிடைக்குது."
"ஆமா. நான் சின்னப் பொண்ணா இருக்கச்ச எங்க பக்கத்தாத்துல ஒரு அக்கா வச்சிருந்தா. நான் போகும் போது நேக்கும் பாட்டு கேட்க தருவா. அந்த சமயம் எல்லாம் காதோரமா பிடிச்ச பாட்டைக் கேட்கவே உடம்பெல்லாம் சிலிர்த்திண்டு சந்தோஷமா இருக்கும்." என்று கண்களை மூடி திறந்து பேசியவள், "ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னலோரத்தில்ல்… நிலா நிலா!" என்று பாடி வேறு காட்டினாள்.
"ஹாஹா.. இப்ப கேக்கறியா மாமி? ஒரே ஹிந்தி பாட்டா தான் இருக்குது"
"ம்ம்! அப்புறம் கேக்கறேன். இன்னிக்கு என்ன மெனு?"
அவள் அப்படி கேட்டதும் நிமிர்ந்து ஓர் அமைதிப் பார்வை பார்த்தான். 'இவளென்ன தன்னை முழுநேர சமையல்காரன் என்று நினைத்துவிட்டாளா?'
"ஹிஹி… இல்ல… என்னென்னனு தெரிஞ்சா நோக்கு சித்த ஹெல்ப் பண்ணலாமேனு தான் கேட்டேன்.. ஈஈஈ…"
"ஓ! மெனு தெரிஞ்சா தான் ஹெல்ப் பண்ணுவீங்களோ? ஒழுங்கா சொல்ற வேலைகளை செய்! மொதல்ல அந்த இஞ்சிய க்ளீன் பண்ணி, தோல் சீவிட்டு நல்லா பொடியா கட் பண்ணு!"
"ம்ம்.." முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வேலை செய்தவளை ஓரப்பார்வை பார்த்து சிரித்துக்கொண்டான்.
அவளை எடுபிடி ஆக்கி, வெண்பொங்கலும் சாம்பாரும் செய்தான். இருவருமாக சாப்பிட்டு முடித்ததும் தான் தங்கியிருக்கும் அறையிலிருந்தது என்று கூறி ஒரு சதுரங்க பலகையைத் தூக்கிக்கொண்டு வந்து ஹாலின் ஜன்னலருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
"ஆரவி, செஸ் விளையாடலாம் வா!"
ஜன்னல் கம்பியைப் பிடித்து நின்றிருந்தவள், "நான் வரல. நேக்கு செஸ் விளையாடறதுல இன்ட்ரெஸ்ட் இல்ல." என்றாள், அசுவாரஸ்யமாய்!
"ஹாஹா… பேபி மாமி! விளையாடத் தெரியாதுனா தெரியாதுனு சொல்லு. இன்ட்ரெஸ்ட் இல்லையாம். ஹாஹா.."
"ப்ச்! நிஜமாவே நேக்கு இன்ட்ரஸ்ட் இல்ல, விபு."
"உனக்கு முதல்ல விளையாடத் தெரியுமா? தெரியாதா?"
ரோஷமாக, "அதெல்லாம் உன்னை விட நன்னாவே தெரியும்!" என்றாள் பல்லைக் கடித்து கொண்டு!
அவளை உற்சாகப்படுத்துவதாய் எண்ணிக்கொண்டு, "அப்புறம் என்ன? எப்டியும் நீதான் வின் பண்ணுவ. வா பேபி!" என்றான்.
"எப்டி சொல்ற?"
"எந்த விளையாட்டுக்கும் திறமை தொண்ணூறு சதவீதம் வேணும்னா, பத்து சதவீதம் அதிர்ஷ்டமும் வேணும்னு எங்க தாத்தா சொல்லுவார். ப்ச்! எனக்கு பெரிசா அதுல நம்பிக்கை இல்ல. ஆனா உனக்கு அதிர்ஷ்டம் இருந்தா நீதான் வின் பண்ணுவ. ஏன் ஆரவி, அதிர்ஷ்டத்தைப் பத்தி நீ என்ன நினைக்கற?" என்று கேட்க,
"இப்ப என்ன? அதிர்ஷ்டத்துக்கு ஒரு அறுவையைப் போடப் போறியா?" என்று உதடுகளை பிரித்து பயந்தவள் போல் கேட்டாள்.
'நீ இப்டி சொன்னால் மட்டும் நான் பேசாமல் இருந்து விடுவேனா?' என்று, "ஹே உனக்கு தெரியுமா? எப்பவும் நாம வெளில போகும் போது கல்யாண ஊர்வலமோ அல்லது கர்ப்பிணி பெண்ணோ வந்தா ரொம்ப அதிர்ஷ்டம். நாம போற காரியம் நல்லபடியா நடக்கும்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. ஆனா பாரு! நான் போகும் போதெல்லாம் குப்பை லாரி தான் ஊடால வருது." என்று கூறி அப்பாவியாய் கன்னத்தில் கை வைத்தான்.
'ஹஹ்ஹஹ்ஹா…' - நேற்றுக் கேட்ட அதே நகையொலி!
பட்டென்று சோபாவைத் திரும்பிப் பார்த்தாள் ஆரவி. யாரும் இல்லை. பயத்தில் உடல் உதறலெடுத்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் விபுநந்தனைப் பார்த்தாள்.
தான் கூறிய ஜோக்கிற்கு எந்த எதிரொலியும் இல்லாமல் திகில் பரவிய முகத்துடன் பார்ப்பவளை புரியாமல் பார்த்தவன், "ம்ம்?" என்னவென்பது போல் புருவங்களை உயர்த்தினான்.
தனக்கு கேட்ட நகையொலி அவனுக்கு கேட்கவில்லையோ?
"விபு! டிண்'ட் யூ ஹியர் தட்?"
"எது?"
அவனுக்கு பதிலளிக்காமல் மீண்டும் சோபாவைத் திரும்பிப் பார்த்தாள். யாருமில்லை, எனினும்... அங்கு ஓர் அமானுஷ்ய நிசப்தத்தை உணர்ந்தாள் ஆரவி.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment