ஸ்கார்பியோ காதல்🚗💌 - 9

 

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 9


‘வந்தோமா சொல்ல வேண்டியதைச் சுருக்கமா சொல்லிட்டு போட்டு தள்ளினோமான்னு இல்லாம, அவகிட்ட ஏன் உன்னோட மொத்த கதையையும் சொல்லிட்டு இருக்க? இத்தனை நாள் நிராதரவா நின்னுட்டு இப்போ ஆள் கிடைச்சதுன்னு ஆறுதல் தேடறியா அஸ்வத்?’ தன்னுள்ளே தோன்றிய கேள்விக்கு,


‘நோ! சின்னப் பொண்ணு! ஈஸியா ஏமாத்தலாம். அவ சர்க்கிள்ல இருந்து நமக்கு தேவையான யூஸ்ஃபுல் இன்ஃபோ ஏதாவது தேறுதான்னு பார்க்கலாம். அதுக்கு அவளுக்கு என் மேல நம்பிக்கை வரணும். ஸோ இந்த ஃப்ரெண்ட்லி அப்ரோச் தான் பெட்டர்! மோர்ஓவர் அவகிட்ட என் விஷயம் சொல்றதால ஒரு கான்ஸூம் (பாதகம்) இல்ல.’ என்று குரூரமாக பதிலளித்தான் அஸ்வத்.


அத்துடன் என்ன இருந்தாலும் அன்று இறப்பை நாடியவனைத் திசை திருப்பியவள் என்ற நன்றியுணர்வும் அம்ருதா மேல் இருந்தது. 


ஆனால் இத்தனை வருடங்கள் உள்ளே அமிழ்த்தி வைத்திருந்த, தன் முன்னாள் மனைவி ரேவதி பற்றி அம்ருவிடம் பாதி பகிர்ந்ததிலேயே, அஸ்வத் மனதில் ஓர் அமைதி வியாபித்திருப்பதை அவன் உணரவில்லை. 


எந்தளவிற்கு அமைதி? 


இதுவரை இல்லாத அளவில் நிதானமாக, மிக நிதானமாக ஒரு கொலையை - அதாவது அம்ருவைக் கொல்வதற்கு எந்த மாதிரியாகத் திட்டம் தீட்டினால் தன் பெயர் வெளியே வராது என நிதானமாக, கூர்மையாகச் சிந்திக்குமளவிற்கு ஆழமான அசாத்திய அமைதியைப் பெற்றிருந்தான் அஸ்வத்.


எதுவாக இருந்தாலும் அவளின் அண்ணன் ஊர் திரும்புவதற்குள் செய்து முடிக்க வேண்டும். அதிகபட்சம் அம்ருவுடன் மூன்று சந்திப்புகள் மட்டும்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தான். அவளை அடுத்து சந்திக்கும் நாளை நாட்காட்டியில் குறித்து வைத்தான்.


அதன்படி அந்த வார ஞாயிறன்று மதியம், அம்ரு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியிலிருக்கும் தனியார் மருத்துவமனையின் வாயிலில் உடல்நிலை சரியில்லாதவனாக, அம்ருவின் பார்வையில் படும்படி நின்றுகொள்வது என இவன் நினைத்திருக்க, அதெல்லாம் தேவையே இல்லை என்பது போல் அன்று மாலையில் அவளே இவனை அழைத்தாள்.


அதில் அஸ்வத்திடம் மீண்டுமொரு தடுமாற்றம்! இவள் எவ்வித மெனக்கெடலுமின்றி தன்னை மிக சுலபமாக, விரைவாக நெருங்கி வருகிறாளோ எனும் சம்சயம்!


சிந்தனையோடே அழைப்பை ஏற்றான்.


“சர், நான் அம்ருதா! *** கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல பார்க்க வந்தீங்களே?”


“என்ன டாக்டர்? உங்களை மறக்குறவனா நான்? அம்ருதான்னு சொன்னாலே அந்த அழகான பேருக்கு உரியவங்க நீங்கதான்னு என் மைண்ட்ல ரிஜிஸ்டரே ஆகிடுச்சு. சொல்லுங்க, என்ன விஷயம்?”


சில கணங்கள் அவளிடம் பேச்சில்லை.


அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டதோ! அதிகப்படியாக பேசிவிட்டோமோ என்று இவனுக்கு இங்கே நெஞ்சம் அடித்துக்கொள்ள,


அம்ரு தயக்கத்துடன் கேட்டாள். “அது… நாளைக்கு லன்ச் அவர்ல மீட் பண்ணலாமா? உங்களுக்கு டைம் செட்டாகுமான்னு கேட்கலாம்ன்னு கால் பண்ணேன்.”


இவனுக்கு அவள்மேல் சந்தேகம் வலுத்தது. அவள் தன்னை மோப்பம் பிடித்துவிட்டாளோ? அதனால்தான் அவளே இறங்கி வருவது போல் வருகிறாளோ என்றெல்லாம் சிந்தித்து குழம்பினான். 


எப்படியாயினும் அவளால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்பு தொற்றிக்கொள்ள ஸ்திரமாகவே பேசினான். “ஷ்யோர் டாக்டர்! எனக்கு சண்டே லீவு தான். வீட்ல தனியா சுவத்தை வெறிச்சிட்டு சும்மாதான் இருப்பேன். பார்க்கலாம் டாக்டர். டைம் பிங் பண்ணுங்க.”


மறுநாள் அம்ருதா சொன்ன நேரப்படி அந்த உயர்தர அசைவ உணவு விடுதிக்கு வர, அவனும் அப்போதுதான் ஸ்கார்பியோவை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியிருந்தான். அம்ருவின் மகிழுந்து உள்ளே நுழைவதைப் பார்த்ததும் அவன் அங்கேயே நின்றுவிட, அவனைப் பார்க்கும்முன் அம்ரு அவனின் ஸ்கார்பியோவைத் தான் முதலில் பார்த்தாள்.


அதனருகேயே இடமிருக்க அங்கே நிறுத்திவிட்டு இறங்கி வந்தவள், “ஹலோ சர்! வந்து நேரமாச்சா?” என்றபடி இவனுக்கு கை தராமல் ஸ்கார்பியோவைத் தழுவ, அவளுக்கு பதிலளித்தாலும் அவன் பார்வை அவள் விரல்களில் தான்!


இதென்ன ஒவ்வொரு முறையும் ஒருவித லயிப்புடன் காரை வருடுகிறாள்? இது அவளின் பழக்கமாக இருக்குமோ? சாதாரணமாக தான் வருடுகிறாளோ? நாம்தான் அதிகமாக யோசிக்கிறோமோ?


சரிதான், ஒரு கொலைகாரனுக்கு இவ்விதமான எச்சரிக்கைகள் இருக்க வேண்டியதுதான்!


உள்ளே இருவர் அமரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குஷன் நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தார்கள். அஸ்வத் உணவுப் பட்டியலட்டையைப் பார்வையிட, அம்ரு அவனைப் பார்வையிட்டாள்.


அன்று பார்த்த பரட்டை தலை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலும், கோதிவிடும் பெண்ணொருத்தியின் கையை மணிக்கட்டின் மேல் வரை மறைக்குமளவிற்கு அடர்ந்திருந்தது அவன் கேசம். அழுத்தமான புருவங்கள் இரண்டும் நேர்கோட்டைப் போல் வளையாமலிருக்க, அதன் கீழிருந்த சின்னக் கண்களில் கத்திப் பார்வை! நறுக்கு தெறித்திருந்த மீசையில் தனி வசீகரம்! அவன் முகத்திற்காகவே செய்து வைத்தாற் போல் அளவான நாசியும் அதரங்களில் ஓர் அழுத்தமும்!


நிறம்?


அம்ரு அதனை வகைப்படுத்தும் முன், நிமிர்ந்தவன் உணவுப் பட்டியலட்டையை அவளின்புறம் நகர்த்தினான். இருவரும் தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்தார்கள். 


தண்ணீரை எடுத்து ஒரு மிடறு பருகியவன் தொண்டையைச் செருமினான். “எப்டி டாக்டர் ஃப்ரீ டைம்ல என் ஞாபகம்?”


அம்ருவின் இதழ் அழுந்திய குறுஞ்சிரிப்பில் கன்னத்தில் குழி விழுந்தது. “நீங்க பாட்டுக்கும் பாதி கதையோட விட்டுட்டு போயிட்டீங்க. க்ளைமாக்ஸ் தெரியாம டென்ஷனாகுது சர்.”


“ஹஹ்ஹஹ… சீரியஸ்லி எனக்கும் கூட என் புலம்பலைக் கேட்கறதுக்கு ஒரு காது கிடைச்சிருக்குதுன்னு… ஐ மீன் உங்ககிட்ட ஷேர் பண்ணதுல மனசுல ஒரு கால்ம்னெஸ்!”


“உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும்ம்…”


“பர்ஸனல் ஷேர் பண்ணிக்கறளவு யாருமில்லை டாக்டர். யாரையும் நான் கிட்டே சேர்க்கல. அதுதான் நிஜம். என்னவோ நீங்க அன்னிக்கு யாருன்னே தெரியாத எனக்கும் என் பொண்ணுக்கும் ஒரு வெல்விஷர் மாதிரி பேசி, என்னோட தப்பான டிஸிஷனையும் மாத்தி மனசுல தெளிவு தந்தீங்க. அதான் ஒரு கம்ஃபர்ட் ஸோன் உங்ககிட்ட!”


“ஆஸ் அ டாக்டர், நான்…”


“நோ டாக்டர்! யாரா இருந்தாலும் அங்கே வேற மாதிரி தான் பிஹேவ் பண்ணிருப்பாங்க.”


சங்கோஜமாய் இதழ் அழுத்தி மீண்டும் கன்னக்குழியின் தரிசனம் தந்தாள் அம்ரு.


உணவு வந்துவிட, தத்தம் தட்டுகளில் பரிமாறிக் கொண்டு உண்ணத் துவங்கினார்கள். “சரி, அப்புறம் என்னாச்சு சொல்லுங்க சர்.”


“ம்ம்…” என உணவை மென்று விழுங்கியவன், டிஷ்யூவால் இதழ்களை நாசூக்காக துடைத்துக்கொண்டு மீண்டும் அவன் கதையை மேலோட்டமாக சொன்னான்.


நமக்காக விரிவாக இங்கே!


இருபது வயதில் ஒரு சிறிய ஊரிலிருந்து பிழைப்புக்காக சென்னை வந்து ஒரு மேன்ஷனில் தங்கி லெதர் தொழிற்சாலையில் பணிபுரியும் ரேவதியின் காதலன் மகி, கடந்த எட்டு வருடங்களில் முழு சென்னைவாசியாகவே மாறிவிட்டான். ரேவதியைக் காதலித்த அவனுக்கும் அவளின் திருமணம் அதிர்ச்சிதான். 


அவளை மறக்க முடியாமல் தவித்திருந்தவன், திருமணமான ஒரே நாளில் அவள் அவளுடைய அம்மா வீட்டிற்கு திரும்பிவிட்டாள் என்று தெரிந்ததும், மீண்டும் அவளை அழைத்து தனியே சந்தித்து, வாடகைக்கு வீடு பார்ப்பதாகவும் தன்னுடன் வந்துவிடும் படியும் சொன்னான். அவளும் சரியென்றாள். ஆனால் அதுவரை மேன்ஷனில் தங்கியிருந்த மகிக்கு அப்போது சரியான வீடு அமையவில்லை.


இதற்கிடையே ரேவதிக்கும் அவள் வீட்டில் மானம், கௌரவம் என்ற பெயரில் அறிவுரைகளுடன் அழுத்தமும் தர, அவளுக்கு மேலும் மேலும் அஸ்வத்தின் மேல் ஆத்திரம் பெருகியது. அத்துடன் தான் கர்ப்பம் என்ற விவரம் தெரிய வந்தபோது நொந்து போனாள். மகியிடம் விடயத்தைத் தெரிவித்த போது அவன் அவளுடன் பேச மறுத்தான்.


“நான் அவனைப் பிடிக்கலன்னு சொல்லிட்டேன் மகி. ஆனாலும் ஃபர்ஸ்ட் நைட்ல அவன் ஆம்பளை புத்தியைக் காமிச்சுட்டான்.” என்ற ரேவதி அழுது கரைய, மனம் தாங்கவில்லை அந்த காதலனுக்கு!


காலம் தாழ்ந்துவிட்டது. இனி பிள்ளையை அழிக்க முடியாது. பெற்றுக் கொடுத்துவிட்டு வா! நம் வாழ்க்கையை நாம் வாழலாம் என்று சொல்லிவிட்டான்.


அவள் கர்ப்பம் என்று தெரிந்ததும் வீட்டினர் அவளை அங்கே இருக்கவிடாமல் கணவன் வீட்டிற்கு துரத்திவிட, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்வித்துவிட்ட பெண்ணிற்கு வேலையும் சுய சம்பாத்தியமும் இல்லை. மகியிடமும் போக முடியாமல், போக்கிடமற்று நிர்கதியாய் நின்றவள் வேறுவழியின்றி அஸ்வத் வீட்டிற்கு போனாள்.


மகியும் அஸ்வத், ரேவதி இருவரையுமே வேவு பார்த்திருந்தான். ரேவதி சொன்னாற் போல் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. முகம் பார்ப்பதும் இல்லை என்று அஸ்வத் வீட்டு பணியாட்கள் மூலம் அறிந்து கொண்டிருந்தான். அதன்பிறகு தான் ரேவதியை திடமாக ஏற்றுக்கொள்ள சம்மதித்து, இப்போது ஓரிரு வாரங்களில் பிரசவம் என்ற நிலையில் தங்களுக்கென ஒரு வீட்டையும் பார்த்து வைத்திருந்தான். 


இப்போது ரேவதியை மறைத்தாற் போல் நின்றவன் அஸ்வத்திடம் சொன்னான். “பிரச்சினை வேணாம். இப்போ அவளை நான் கூட்டிட்டு போகப் போறேன். டெலிவரி ஆனதும் குழந்தையை உன்கிட்ட கொடுத்துடுவா! எங்க வழியை நாங்க பார்த்துக்கறோம். மியூச்சுவல் டிவோர்ஸ் ஞாபகம் இருக்கட்டும்.”


ரேவதி முன் கன்றிய முகத்துடன் நின்றிருந்த அஸ்வத், ‘எவனோ ஒருவன் தன்னைப் பேசுவதா?’ என்ற ஆத்திரத்தில் மகியை ஓங்கி அறைந்துவிட்டான். 


ஆட்களின் கவனம் இவர்களிடம் குவிய, ரேவதி மேலும் பெரிதாக இரைய, எதையும் கணக்கில் கொள்ளாமல், “நீ எப்டி வேணாலும் ஊர் மேய போ! ஆனா குழந்தை பிறக்கற வரை என் கண்ணு முன்னாடி தான் இருக்கணும்.” என்று அவளை இழுத்துக்கொண்டு போய் மருத்துவரையும் சந்தித்துவிட்டு, வீடு திரும்பும் வரை அவளைத் தன் கைப்பிடியிலேயே வைத்திருந்தான் அஸ்வத்.


சாப்பிட்டு முடித்ததும் அந்த உணவகத்தில் பிரபலமான இனிப்பொன்றை வாங்கி அதனை சாவகாசமாக முள் கரண்டியால் குத்தி எடுத்தவாறு கதைச் சொல்லிக் கொண்டிருந்தான் அஸ்வத். இனிப்பை வாயில் வைத்துவிட்டு தன் முன்னிருந்த அம்ருதாவைப் பார்க்க, அவள் இன்னும் உணவையே முடித்திருக்கவில்லை. அவள் கையிலிருந்த சிறு கரண்டி காய்ந்திருந்தது.


பணியாளை அழைத்து வேறு கரண்டி தருவித்து, “டாக்டர், அப்புறமா பொறுமையா ஃபீல் பண்ணிக்கலாம். இப்போ சாப்பிடுங்க.” என்று அவள் கையிலிருந்ததை உருவிக்கொண்டு வேறொன்றைத் திணித்தான்.


அஸ்வத்தின் சொந்த வாழ்க்கையை நாம் மதிப்பிடக் கூடாது என்று அம்ரு நினைத்தாலும் பெண்களுக்கேயுரிய குணத்தால், அஸ்வத், ரேவதி, அவளின் காதலன் மகி ஆகிய மூவரின் செயல்களையும் சீர்தூக்கிப் பார்த்து கொண்டிருந்தது அவள் அறிவு.


ஒரு பெண்ணின் உணர்வை, விருப்பத்தை பொருட்டாக நினையாத அஸ்வத் மேலும் மாபெரும் தவறிருக்கிறது. விருப்பமில்லை எனும் பட்சத்தில் ஆத்திரத்திலும் வெறியிலும் இவனிடம் அத்துமீறிய ரேவதியிடமும் தவறிருக்கிறது. அதை தவறு என்று சொல்லலாமா? 


ம்ஹூம்!


ஒரு மனநல மருத்துவரின் தங்கையாக இப்படி சிந்தித்தாள் அம்ரு - ஒருவேளை அந்த நேரத்தில் ஏமாற்றம் காரணமாக அவள் தாங்கொணா மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம். ஹிஸ்டீரியா வந்தவர்கள் இப்படி நடந்துகொள்ளுவது இயல்புதான் என்று அவள் படித்திருக்கிறாள். ரேவதியும் அந்த நிலையில் இருந்து அஸ்வத்தைக் காயப்படுத்த நினைத்து அங்ஙனம் நடந்துகொண்டிருக்கக் கூடும்.


அப்போதுதான் தன் கையில் திணிக்கப்பட்ட வேறொரு சின்னக் கரண்டியின் சில்லென்ற உணர்வில் சிந்தனை கலைந்து அஸ்வத்தைப் பார்த்தாள். சிட்டிகை அளவு கூட அவனிடம் வருத்தம் தென்படவில்லை.


“முதல்ல சாப்பிடுங்க டாக்டர். ஏசில சீக்கிரம் ஆறிடுச்சு பாருங்க. சூடு பண்ணி தர சொல்லவா?”


“ஹாங்? வேணாம் சர். அப்புறம் என்னாச்சு? டெலிவரி ஆனதும் பேபியை உங்ககிட்ட தந்துட்டாங்களா?”


“சாப்பிட்டுக்கிட்டே கேட்பீங்களாம்.” என்றவன், அவள் சாப்பிடுவதைப் பார்த்த பின்னரே தன் கதையைத் தொடர்ந்தான். “ம்ம் எஸ்! நார்மல் டெலிவரி. அம்மு பிறந்த கையோட நானே தூக்கிட்டு வந்துட்டேன். ரேவதி அவனோட போயிட்டதால, அவளுக்கு டெலிவரி பார்த்த டாக்டர் கிட்ட கேட்டு, அப்புறம் அவங்களே ப்ரெஸ்ட்ஃபீடிங்’க்கு ஒரு லேடியை சஜஸ்ட் பண்ணாங்க. அவங்களால முடியாதபோது மில்க் பேங்க்ல சொல்லி வச்சு வாங்கிப்பேன். அப்டித்தான் நானும் என் பொண்ணும்னு புது எபிஸோட் ஆரம்பிச்சு அப்டியே போயிட்டிருந்தது.” என்றவனின் விழிகள் ஓரிடத்தில் நிலைத்திருந்தது.


அவனின் போராட்டங்களை அவன் விழி வழி படித்துக் கொண்டிருந்த அம்ருவிற்கு மனமெங்கும் வலி!


“குழந்தையை வச்சிக்கிட்டு தனியா எப்டி? உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”


“வீட்ல ஹெல்பரா இருந்த ஒரு வயசான அம்மாவையே, ஃபுல் டைம் வீட்லயே இருந்து அம்முவைப் பார்த்துக்கச் சொல்லி கேட்டுக்கிட்டேன். என் அம்மு சமத்து மேடம். ஆரம்பத்துல கொஞ்சம் மாசம் பாலுக்காக அலைஞ்சதைத் தவிர, எங்களுக்கு வேற எந்த விதத்துலயும் கஷ்டமே கொடுக்கல அவ!” அலைபேசியின்‌ முகப்பிலிருந்த மகளின் புகைப்படத்தை வருடினான். 


அம்ருவின் பார்வையும் அதில் நிலைத்தது. சமீப காலமாக இவள் தினமும் இரவில் கண்ணை மூடினால் மனக் கண்ணில் வந்து நிற்கும் முகம்! அந்தப் பிஞ்சு முகம் பார்க்கும்போது நெஞ்சத்தில் இறுக்கமாய் பாரமேறுகிறது. அந்த நேரங்களில் விடுபட வேண்டி அலையும் ஆன்மாவாய்ப் பரிதவிக்கிறாள் இவள்.


“லாஸ்ட் இயர் மறுபடியும் ரேவ்ஸ்’அ பார்த்தேன். ப்ரக்னென்ட்டா இருந்தா! ஆனா அந்த மகி அவளை விட்டுட்டு வீட்ல பார்த்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னா…”


“வாட்?!” என அம்ரு பெரிதாக அதிர,


“ஷாக்’அ ஸ்டாக் வைங்க டாக்டர். இன்னும் ஷாக் ஆகற ஸீனே வரல. உங்களுக்கு டெஸர்ட் என்ன சொல்லட்டும்?” என உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தபடி கேட்டான் அஸ்வத்.


“மறுபடியும் உங்க முன்னாடி வந்து நின்ன அவங்க மேல உங்களுக்கு கோவம் வரலயா சர்?”


“உங்களுக்கு டெஸர்ட்…”


“ப்ச்!” ஆட்சேபணை பாவம் காட்டியவள், எட்டி அவன் கையிலிருந்த உணவுப் பட்டியலட்டையைப் பிடுங்கி பட்டென்று மேசையின் ஓரத்தில் வைத்தாள்.


அவளின் சிறுபிள்ளைத்தனத்தில் அவன் லேசாக மறுபக்கம் திரும்பி, உதடுகளில் பூத்துவிட்ட குறுஞ்சிரிப்புடன் நெற்றியோரம் இரு விரல்கள் வைத்து, விழிகளை மட்டும் உயர்த்தி அவளைப் பார்க்க, அம்ரு தன் இதயத்தை அவசரமாய்ப் பத்திரப்படுத்த வேண்டிய அவசியமெழுந்தது.


“பரிதாபம் தான் வந்தது டாக்டர்.”


முயன்று அவன் பேச்சில் கவனம் வைத்தாள்.


“நான் வேலை செய்ற பிராஞ்ச்’க்கு வந்து நின்னா! ஏதாவது வேலை கிடைக்குமான்னு கேட்டா! குழந்தையைப் பெத்தெடுக்கணும். அதுக்காகவாவது உயிர் வாழணும்னு அழுதா! அப்புறம் எப்டி என்னால கோவப்பட முடியும்? ஒருவேளை இன்னும் அவளையே நினைச்சிட்டு இருந்திருந்தா திரும்பவும் அவளை என் கூட்டுக்குள்ளே சேர்த்திருப்பேனோ என்னவோ!”


அம்ருவிற்கு ஏனோ இதயம் இருக்குமிடத்தில் அசௌகரியம்! 


நீண்ட மூச்சொன்றுடன் தொடர்ந்தான் அவன். “என் கொலீக் ஒருத்தி கிட்ட ஹெல்ப் கேட்டேன். அவ அவளுக்கு தெரிஞ்ச நர்ஸ் கிட்ட பேசி இவளை அவங்களோட தங்க வச்சோம். அது ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்! ஸோ குழந்தை பிறக்கற வரை அங்கேயே சில வீடுகள்ல வீட்டு வேலை செஞ்சா… அதைப் பார்த்தப்புறம் மனசு கேட்காம என்னோடேயே வந்துடுன்னு கூப்பிட்டேன். அதுதான் நான் செஞ்ச பெர்ரீஈஈ…ய்ய்ய தப்பு டாக்டர்!” என்றவனின் முகம் சாந்தமாக இருக்க, விழிகள் ஆக்ரோஷத்தின் அறிகுறியாய் இரத்த சிவப்பை வாங்கியிருந்தன.


Wait! Every curve has a story🚗


முந்தைய அத்தியாயம்🍂


Comments

  1. ‘︿’ அடுத்து என்ன ஆச்சு?!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் 🫶🫶 நன்றிகள் 💝💝

      Delete

Post a Comment

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)