ஸ்கார்பியோ காதல்🚗💌 - 8.2

 

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 8.2


“ஸோ அவளோட ஹெல்த் கண்டிஷன் கூட தெரியாத முட்டாளா இருந்தேன். அப்புறம் ஆறாம் மாசத்துல ஒருநாள் நான் லீவுல வீட்ல இருக்கறது தெரியாம ரூம் விட்டு அவ வெளியே வந்தப்போ தான், அவ கன்சீவா இருக்கறதே எனக்குத் தெரிஞ்சது. விஷயத்தை மறைச்சதுக்கு ஏனோ அவ மேல கோவம் வரல. சந்தோஷப்பட்டேன். ஏன்னா அதுவரைக்கும் அந்த ஒருநாள் அவ என்கிட்ட சாடிஸ்ட் மாதிரி நடந்துக்கிட்டதை நினைச்சு வருத்தப்படாத நாளேயில்ல! ஸோ விஷயம் தெரிஞ்சதும் அவ அப்டி நடந்துக்கிட்டதால தானே இப்போ என் தனிமை தீரப் போகுது; இனி எல்லாம் சரியாகிடும்னு ரொம்ப அல்பமா சந்தோஷப்பட்டேன் டாக்டர்!”

 

அதிலிருந்து அஸ்வத் எவ்வகையிலும் ரேவதியை வற்புறுத்தவில்லை என்று அவன் சொல்லாமல் விட்டதையெல்லாம் புரிந்துகொண்டாள் அம்ருதா. “உங்க பேரண்ட்ஸ்?”


“அப்டி யாரும் இல்லை டாக்டர். விவரம் தெரிஞ்சதுல இருந்து ஆர்ஃபினிஜ்ல தான் இருந்தேன்.”


அவனை இமைக்காது பார்த்தாள். அதனால்தான் அந்த அத்துவான காட்டிற்குள் உயிரற்ற உடலை வைத்துக்கொண்டு தனியே விடப்பட்ட குழந்தையாக நின்றிருக்கிறான்.


“எங்க ஆர்ஃபினிஜ்க்கு ஹெல்ப் பண்ற ஒரு ஸ்பான்ஸர் உதவியோட, பார்ட் டைம் வேலை பார்த்துக்கிட்டே மெக்கானிக்கல் முடிச்சேன். அங்கிருந்து வெளியே வந்து சின்ன சின்ன கம்பெனில வேலை செஞ்சிட்டு இருந்தேன். ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு மஹிந்திரால சான்ஸ் கிடைச்சது.”


“வாவ்!” வாகனத்தைத் திறம்பட இயக்கும் அவனின் திறமை எப்படி மெருகேறியிருக்கும் என்று கணிக்க முடிந்தது.


“ஹாஹா… டாப் யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்! அண்ட் ரிசர்ச் ப்ராஜெக்ட்ல சாலிட் பேக்ரௌண்ட் இருந்ததால ப்ராஜெக்ட் மேனேஜர் போஸ்ட் கிடைச்சது. ப்ச்! அந்த திமிர்ல தான் ரேவ்ஸ் வீட்ல போய் பொண்ணு கேட்டேன்.”


அம்ருவின் விரிந்திருந்த இதழ்கள் மூடிக்கொண்டு கன்னத்தில் குழி பறித்தது.


வெளியே அத்தனைக் கூட்டத்திலும் ஸ்டியரிங்கை லாவகமாக வளைத்தபடி பேசினான் அஸ்வத். “அதுக்கப்புறம் நான் செக்கப் போகலாம்னு கேட்டாலும், தானே எல்லாம் பார்த்துக்கிட்டதா சொல்லுவா! மனசு கேட்காம குழந்தை பிறக்க கொஞ்ச நாள் இருக்கும்போது ஒருமுறை அவ ஹாஸ்பிடல் போற டேட் தெரிஞ்சு, அவளை ஃபாலோ பண்ணிட்டு போனேன். தப்புதான். ஆனா நான் வர்றேன்னு தெரிஞ்சா அவளுக்கு பிடிக்காதே?”


எந்தப் பெண்ணும் காதல் கொள்ளும் தோற்றத்தில் இருக்கும் இவனை ஏன் அந்த ரேவதிக்கு பிடிக்காமல் போனது என்று அசந்தர்ப்பமாய் சிறுபிள்ளைத்தனமாக யோசித்தாள் அம்ரு.


“அதான் இப்டியாவது போய் டாக்டர் கிட்ட அவளோட ஹெல்த் கண்டிஷன் பத்தி பேசலாம்னு நினைச்சேன். ஆனா அங்கே போனப்புறம்தான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சது.” என்றவனின் இதழ்களில் கசந்த முறுவல்!


“என்ன உண்மை?”


“ரேவ்ஸ் என்னோட ரேவ்ஸ் இல்லன்னு! அவளுக்கு அந்த தாடிக்காரனை தான் பிடிச்சிருக்குதுன்னு!”


அம்ருவிற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. சில விநாடிகள் விழித்துவிட்டு கேட்டாள். “பார்த்தப்போ உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்குமே?”


“கஷ்டமா? ஹஹ்!” மீண்டுமோர் ஹஸ்கி சிரிப்பு. “ஏனோ அவளை இன்னொருத்தனோட பார்க்கும்போது எனக்கு வருத்தமோ கோவமோ வரல. என் லவ்தான் எப்பவோ செத்துப் போச்சே டாக்டர்? அவளைப் புரிஞ்சுக்கலன்ற கில்டி கான்ஷியஸே என் லவ்’அ அழிச்சிடுச்சு. ஸோ அப்போ எந்த உணர்வுமே இல்லாம மரத்துப்போன ஸ்டேஜ்ல தான் இருந்தேன். இல்லைன்னா அத்தனை நாளும் அவளைத் தனியா விட்டுட்டு இருந்திருப்பேனா?”


“......" 


“நான் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்ததை அவளும் பார்த்தா! ஃபர்ஸ்ட் அவன் அவளோட ஃப்ரெண்ட் யாராவதா இருப்பான்னு தான் நினைச்சேன்.”


அஸ்வத்தின் எண்ணங்கள் அன்றைய நாளுக்கு பயணப்பட்டன. 


தாடிக்காரன் தான் ரேவதியிடம் பின்னால் பார்க்கச் சொல்லி கண்காட்டினான். ஆக அவனுக்கு அஸ்வத் அவளுடைய கணவன் என்று தெரிந்திருக்கிறது. ரேவ்ஸின் தோழனாக இருக்குமோ? ஆனால் தங்கள் திருமணத்தில் இவனைப் பார்த்ததைப் போல் நினைவில்லையே!


திரும்பி பார்த்த ரேவதி நாசி விடைக்க இவனருகே வந்தாள். “என்ன வேவு பார்க்க வந்தியா? உன் புத்தியே பொண்ணுங்க பின்னாடி சுத்தி வேவு பார்க்கறதுதானே!”


“ரேவ்ஸ் எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம். இப்போ உன் ஹெல்த் பத்தி, பேபி பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் வந்தேன்.”


“வீட்ல உன் மூஞ்சியைக் கூட பார்க்கக்கூடாதுன்னு தானே ரூமே கதின்னு கிடக்கறேன். உன் வீட்டுக்கு வரவே எனக்கு பிடிக்கல. ஆனா என் அப்பன்தான் நாய் எலும்புத் துண்டைக் கவ்வின மாதிரி, நீ காட்டுன பணத்துக்கு பல்லிளிச்சுக்கிட்டு என்னை உன்கிட்ட துரத்தி விட்டுட்டான்.” என்றாள் மூச்சுவாங்க!


“ரிலாக்ஸாகு ரேவ்ஸ்! நான் யாருக்கும் பணம் தரல. இவ்ளோ டென்ஷன் பேபிக்கு நல்லதில்ல.”


“இந்த சனியனைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? இன்னும் ரெண்டே வாரம்! இந்த அசிங்கத்தைப் பெத்து உன்கிட்ட விட்டுட்டு நான் என் மகியோட போய்க்கிட்டே இருப்பேன்.” என்று அந்த இளைஞனின் மேல் சாய்ந்துகொண்டாள்.


அஸ்வத்தின் உணர்வுகள் தான் எப்போதோ மரத்துப் போயிருந்ததே! அது தெரியாத அந்த மகி என்பவன், அஸ்வத் கோபமடையக் கூடும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். கண்களில் கலவரத்துடன் ரேவதியை விட்டு நகர்ந்து நின்றான். அவள் அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அஸ்வத்தைக் காயப்படுத்துவதிலேயே குறியாக இருந்தாள்.


அஸ்வத்தின் பார்வை அந்த மகியின் மேல் படர்வதைக் கண்டு, “என்ன பார்க்கற? நான் காதலிச்சது இவரைத் தான்! வீட்ல பேசி சம்மதம் வாங்கறதுக்கு முன்னாடி, உன் பணத்தைக் காட்டி என் அப்பனை உன் இஷ்டத்துக்கு தலையாட்ட வச்சிட்டல்ல?” என்று ஆங்காரமாய் முறைத்தாள்.


“ரேவ்ஸ், என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல?”


“கேட்டியா நீ? நான் என்ன சொல்ல வர்றேன்னு காது கொடுத்து கேட்டியா அன்னிக்கு?”


“.......”


“என்ன இப்போ? சந்தேகப்படறியா? இது உன் பிள்ளைதானா என்னன்னு சந்தேகமா இருக்குதா ஆங்?”


கோபம் வந்தது இவனுக்கு. “என்னடி பேசற?”


“என் மகியை எனக்கு கிடைக்க விடாம செஞ்சிட்டன்னு எனக்குள்ளே ஒரு வெறி! காதல் காதல்ன்னு பினாத்திட்டு இருக்க உன் காதலைச் சாகடிச்சே தீரணும்னு தான் அன்னிக்கு உன்கிட்ட நான் அப்டி நடந்துக்கிட்டேன். அதுல இந்த சனியன் வரும்ன்னு கனவா கண்டேன்?” என்றாள் தன் பெரிய வயிற்றை வெறுப்பாக பார்த்தபடி!


“ரேவ்ஸ் போதும்.” எனக் கைக் கூப்பி அவளை நிறுத்த முயன்றான்.


ஆனால் அவனை வலிக்க அடிக்கும் வெறியில் இருந்தவளை அத்துணை சுலபமாக நிறுத்திவிட முடியுமா என்ன? “என் வாழ்க்கை அவ்ளோதான், அப்டியே செத்துப் போயிடலாம்னு நினைச்சப்போ மறுபடியும் மகியைப் பார்த்தேன். என் நிலைமை புரிஞ்சு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னார்.”


அவமானமாக உணர்ந்தான் அஸ்வத். அவனுடைய மனைவியை வேறொருத்தன் திருமணம் செய்ய கேட்கிறானாம். அவன் எலும்பை முறித்துப் போடவியலா கையாலாகா நிலையில் நிற்கின்றான் இவன்!


“அப்போ தான் உன்கிட்ட டிவோர்ஸ் கேட்டேன். நீயும் தர ஒத்துக்கிட்ட! ஆனா டிவோர்ஸ் பேப்பர்ஸ் என் கைக்கு வந்தப்போ எனக்கு நாலு மாசம்! அதுவே எனக்கு தெரியல. தெரிஞ்சிருந்தா முன்னாடியே இதைக் கொன்னிருப்பேன்.” என்றவளிடம் கை ஓங்கிவிட்டான் அஸ்வத்.


அஸ்வத்தைக் கண்டு பயம் படர்ந்தாலும் ரேவதியைக் காப்பவன் போல் அவளை மறைத்து நின்றான் மகி.


எண்ணங்களில் அன்றைய நாளுக்கு பயணப்பட்டுவிட்ட அஸ்வத் மௌனமாகச் சாலையை வெறித்தபடி வாகனத்தை மித வேகத்தில் செலுத்திக்கொண்டிருக்க, அவனைக் கலைத்தாள் அம்ரு. “சர்…” 


“ம்ம்?” எனத் திரும்பியவன், அவளிடம் உள்ளதை உள்ளபடி சொல்லாமல் ஒரு நிமிடத்தைச் செலவழித்து மேலோட்டமாக சொன்னான்.


“அப்… அப்புறம் என்னாச்சு? டிவோர்ஸ் கொடுத்துட்டீங்களா? இல்ல குழந்தையை அவங்க கிட்ட விட்டு வளர்த்தீங்களா?” எனக் கேட்டவளுக்கு சற்றுமுன் ரேவதியின் மீது கொண்ட பச்சாதாபம் மறைந்து, அவள் மீதான மதிப்பும் குறைந்திருந்தது.


“இந்த ஏரியா தானா? உங்க வீடு எந்தப் பக்கம் டாக்டர்?” தெரியாதது போல் வெளிப்பக்கம் வீட்டைத் தேடுவபனாகக் கேட்க,


“ரைட்ல நாலாவது தெரு!” என்றவள், அடுத்து என்னவாயிற்று என்று சொல்லமாட்டானா என அவன் முகம் பார்த்தாள்.


மகிழுந்தைத் தெரு முனையில் திருப்பிக் கொண்டிருந்ததால் அவன் கவனம் இவளிடம் இல்லை.


“எந்த வீடு?” என்றவன் மகிழுந்தின் வேகத்தைக் குறைக்க,


அம்ருதா பதிலளிக்காமல் அவனையே பார்த்தாள்.


“டாக்டர்!”


“ஹான்? இந்த வீடுதான்.” 


வெளி வாயிலிலேயே நிறுத்தியவனை, “உள்ளே வாங்க சர். அப்பாவுக்கு இன்ட்ரோ பண்றேன்.” என்றிட,


“இந்த நேரத்துக்கு வேணாம் டாக்டர். இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்றபடி இறங்கிக்கொண்டவன், அவளும் இறங்கி மறுபக்கம் வந்ததும் சொன்னான். “இவன் பர்ஸனலை ஏன் நம்மகிட்ட சொல்றான்னு உங்களுக்கு தோணலாம்.”


“ச்சச்ச…”


சின்னதாய் சிரித்தவன் அப்போது சொன்னதையே இப்போதும் சொன்னான். “உங்ககிட்ட கிடைக்கற பாஸிட்டிவ் எனர்ஜிதான்… மோர்ஓவர் என் பொண்ணைப் பத்தி சொல்லணும்னா அவ அம்மா எங்கேன்ற கேள்வியும் உங்களுக்கு வரும். இன்ஃபாக்ட் என் பொண்ணு உயிர்விட்டதுக்கு காரணமே…”


சொல்ல வந்ததை முடிக்கவியலாமல் கரகரத்த தொண்டையைச் செருமியவன், மகிழுந்தின் சப்தத்தில் பிரதான வாயில் கதவைத் திறந்துவிட உள்ளிருந்து வந்த அம்ருவின் அம்மா அம்பிகாவின் தலை தெரிந்ததும், “பார்க்கலாம் டாக்டர்.” என்று அவளிடம் தலையசைத்து விடைபெற்று விரைந்துவிட்டான்.


கம்பிக் கதவைத் திறந்து விட்டவாறு, “பரவால்லயே… எங்கே உங்கண்ணன்காரன் இல்லாம ஊர் சுத்த போயிடுவியோன்னு நினைச்சேன்? கரெக்ட் டைம்க்கு வந்துட்டே?” என்ற அம்மாவிடம் கவனம் வைக்காமல்,


அவன் கடைசியாக சொல்லிவிட்டு சென்ற செய்தியிலேயே அம்ருவின் மூளை உறைந்திருந்தது.


Hold tight. The ride’s just begun🚗💥


முந்தைய அத்தியாயம்💝

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)