ஸ்கார்பியோ காதல்🚗💌 - 8.1
![]() |
Scorpio guy's flashback |
அத்தியாயம் 8.1
அன்று அந்தக் காட்டுப்பகுதியில் அம்ருதாவைச் சந்தித்தபோது, அவள் ஒரு மருத்துவர் - அதிலும் குழந்தைகள் நல மருத்துவத்திற்கு படிக்கிறாள் என்றறிந்ததும் ஸ்கார்பியோகாரனின் மூளை தாறுமாறாக வேலை செய்தது. முதலில் அவளைக் கொன்று தன் தீரா வஞ்ச தாகத்தைச் சற்று தணித்துக்கொள்ளவே எண்ணினான். ஆனால் அவள் அவளுடைய வீட்டாட்களுடன் வந்திருப்பதையறிந்து, தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு தன் எண்ணத்தை அப்போதைக்கு ஒத்திவைத்தான்.
ஆனால் அவன் சொன்னதில் ஒன்று உண்மை! அன்று அவளைப் பார்ப்பதற்கு முன்பு அவனின் எண்ணங்களெல்லாம் மரணத்தின் பின்னால்தான் ஓடியது. பூஜ்யமாகிவிட்ட தன் வாழ்க்கையை எண்ணி, சாவின் விளிம்பைத் தேடியவனாய் விரக்தியில் இருந்தவனை அம்ருதாவின் வரவு தான் மீட்டெடுத்தது.
தானாகவே வந்து சிக்கியவளை உயிருடன் விடுவதில்லை என்ற தீய எண்ணமே என்றாலும், இன்று அவன் முழுதாக வந்து இருக்கிறானெனில் அதற்கு காரணம் அம்ரு மட்டும்தான்! காரணமில்லாமல் காரியங்கள் இல்லையல்லவா?
ஆக, அப்போது மனத்தெளிவு பெற்றவுடன் அம்ருதா சொன்னதைப் போலவே உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலையிலேயே தன் மகளுக்கான ஈமச்சடங்குகளை வந்திருந்த அக்கம்பக்கத்து சொற்ப ஆட்கள் முன்னிலையில், எவ்வித குறையுமின்றி செய்து மகளை வழியனுப்பி வைத்தான்.
அதன்பின் கடந்து போன தன் வாழ்வை நினைத்தும், சொர்க்கம் சென்றுவிட்ட மகளை நினைத்தும் தனக்குள்ளே உழன்று மருகிக் கொண்டிருந்தவன், ஐந்து நாட்களுக்கு முன்புதான் மீண்டும் அம்ருவின் நினைவு வந்து, அவள் தந்துவிட்டு போன அலைபேசி எண்ணை வைத்து அவளின் பெயர் ‘அம்ருதா நடராஜன்’ என்று அறிந்துகொண்டான்.
“ஓ! அம்ருதா தான் அம்முக்குட்டியா?” என்று தலையாட்டியவனுக்கு அன்று அவளைக் காணாமல் ஹரிஷ், “அம்முக்குட்டி!” என்று அடிவயிற்றிலிருந்து கேவியது நினைவிற்கு வந்தது.
தெளிவில்லாமல் ஓரிடத்தையே சற்றுநேரம் வெறித்திருந்தான். காரணம் - அம்ருவுடைய அண்ணனின் அந்த தேடலில், தவிப்பில் இவன் தன்னையே பார்ப்பதைப் போல் உணர்ந்தான். இவனும் இவனின் மகளை இப்படித்தானே ஓர் பட்டுப்பூச்சியைப் போல் பொத்தி வைத்து வளர்த்தான்!
இழப்பின் வலி நெஞ்சின் கனத்தையும், ரணத்தையும் மிகையாக்கியதில், “வெல்லக்கட்டி!” என்று ஓர் தேம்பல் அடித்தொண்டையிலிருந்து புறப்பட்டது.
தன் தனிமையைப் போக்க வந்தவள் என்று மகளைக் கொண்டாடி மகிழ்ந்த காலமெல்லாம் நீரிலிட்ட சர்க்கரையாகக் கரைந்துவிட்டதே! மீண்டும் அதே தனிமை! அதே சூனியம்!
“விடமாட்டேன்! ஒருத்தரையும் விடமாட்டேன்!” என்று பல்லைக் கடித்தவன், அன்றே அம்ருவைத் தேடி மருத்துவமனைக்கு சென்றான்.
ஆனால் இவன் சென்றபோது அவளுடைய அண்ணனுக்கு திருமணம் என்று அவள் விடுமுறையில் இருந்தாள். அவளின் பிண்ணனியும் தெரிய வேண்டியிருந்ததால் அவளின் அலைபேசி எண்ணை வைத்து, இவனுடைய டிடெக்டிவ் ஆள் வேந்தன் அவள் வீடு இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்து சொல்லியிருந்தான். அங்கிருந்துதான் உறவினர் ஒருவரைத் தொடர்ந்து மண்டபத்திற்கும் வந்தான் இவன்.
மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த அலங்கார பெயர் பலகையில் ஹரிஷின் பெயரையும் MBBS., MD (Psychiatry) என்ற அவனின் படிப்பையும் மனதில் குறித்துக்கொண்டான்.
அங்கேயே அம்ருதாவைப் பார்த்து சிநேகம் செய்துகொள்ளலாமா என்றெண்ணி விட்டு, பின் அவளைத் தனியே சந்திப்பதுதான் சரியாக இருக்குமென்று அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அதற்கேற்றாற் போல் ஹரிஷூம் அம்ருவை அழைத்து தன்னருகே நிற்க வைத்துக் கொள்ள, அண்ணனுக்கும் தங்கைக்கும் பாசம் தாண்டிய பந்தமொன்றுள்ளது என்பதை அந்த சில மணி நேரங்களிலேயே புரிந்துகொண்டான்.
ஆங்காங்கே புகைப்படக் கருவிகள் சுழன்று கொண்டிருக்க, அதன் கண்களிலிருந்து தப்பி ஓரமாக நின்று அவளை அவதானித்தவாறு இருந்தான். அத்தனை உறவினர்களிடையே அவளைத் தனியே அழைத்து பேசுவது உசிதமாகப் படவில்லை.
அம்ருவின் மீதிருந்து கண்ணெடுக்காமல் இருந்தவனை முன்னே இருந்து ஓர் குரல் கலைத்தது.
ஓர் இளைஞன் மேடையிலிருந்த அம்ருதாவிற்கு கையாட்டியபடி, எதிரிலிருந்த பெண்மணியிடம் கேட்டான். “அத்தை! இந்த ரோலர் பொட்டெட்டோ எப்போ இவ்ளோ அழகா ஆனா? பேசாம நான் உங்க வீட்டோட மாப்பிள்ளையா வந்துடறேன் அத்தை. கல்யாணத்தை அடுத்த மாசம் வச்சிக்கலாமா?”
“அடுத்த வாரமே வச்சிக்கலாம்டா மருமகனே! உங்க மாமா கேட்கற டாக்டர் வேலையை மட்டும் வாங்கிட்டு வந்துடு.”
“அம்ரு, நீ எங்கிருந்தாலும் வா…ழ்க!” என்று தடாலடியாக சோக முகத்துடன் பாடியவனைக் கண்டு சுற்றியிருந்த பெண்கள் கொல்லென்று நகைக்க, அவனுடன் பேசிய பெண்மணிதான் அம்ருதாவின் அம்மா என்று கண்டுகொண்டான் இவன்.
அன்று அம்ருதாவின் குடும்ப பிண்ணனி மட்டுமல்லாமல், அதற்கு முன்னரே இதுவரை வெளியாட்கள் யாருக்கும் அதிகம் தெரிய வராத அம்ருதாவின் மருந்து சம்பந்தமான ஆராய்ச்சி பற்றியும் தகவல்களைத் திரட்டியிருந்தான். அதுவே அம்ருதாவைக் கொல்லவேண்டும் என்ற அவனின் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது.
திருமணம் முடிந்த இரு நாட்கள் ஹரிஷ் விடுமுறையில் இருந்தாலும் காலையிலும் மாலையிலும், அவனே அம்ருவை அழைத்துப் போய் வருவதால் இவனால் அவளை வெளியே தனியே சந்திக்க முடியவில்லை. நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் இன்று ஹரிஷ் தேனிலவிற்கு வெளிநாட்டிற்கு செல்வதை அறிந்துகொண்டு, அம்ரு பணிபுரியும் மருத்துவமனைக்கே வந்துவிட்டான்.
இதோ பேசியபடி அவளோடு மகிழ்வுந்தில் பயணிக்கும் வரை வந்திருந்தவன், தான் அவளின் மகிழ்வுந்தை இயக்குவதில் எதற்கு அவளுக்கு இத்தனை ஆர்வம் என்று புரியாமல் பார்த்தான்.
“ஓட்டுங்களேன்.” என்றவள் மறுபேச்சில்லாமல் இறங்கி மறுபக்கம் சென்றதில் இவன்தான் திருதிருத்து நின்றான். இருப்பினும் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாக அமர்ந்து மகிழுந்தை இயக்கினான்.
குழந்தையைப் பற்றி கேட்டால் அவன் துக்கம் கிளறப்படுமோ என்று மௌனம் காத்த அம்ரு, இப்போதில்லை என்றாலும் பிறிதொரு நாள் கேட்டுக் கொள்ளலாம் என்று, அவனின் அலைபேசி எண்ணைக் கேட்டு மேலும் அவனைத் திகைக்க வைத்தாள்.
அவன் நினைத்ததற்கு மாறாக மிக சுலபமாக அம்ரு தன்னை நெருங்கி வருவதில் அவனுக்குள் சிந்தனை மிகுந்தது. “என் நம்பரா?”
“ம்ம்! என் நம்பர் உங்ககிட்ட இருக்குமே… ஒரு மிஸ்ட் கால் கொடுங்க சர்.”
அவளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாமல் சிந்தனையோடே இடையைச் சற்று தூக்கி, ஜீன் பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்தான். அன்று அவனிடம் தன் எண்ணைப் பகிர்ந்திருந்த அம்ருதா, தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையின் பெயரை மட்டும்தான் சொல்லியிருந்தாள்.
இவனும் மருத்துவமனைப் பெயரிலேயே அவள் எண்ணைப் பதிந்து வைத்திருந்தான். ஆனால் ஏனோ அன்று ஹரிஷின் அழைப்பும் அந்த அழைப்பிலிருந்த ஓர் தந்தைக்கானத் தவிப்பும் இவன் உள்ளத்தைப் புரட்டியெடுத்திருக்க, அந்த பெயர் தன்னியல்பாய் மனத்தில் பதிந்து போய்விட்டது.
எனவே மருத்துவமனை பெயரை அழித்துவிட்டு, ‘அம்முக்குட்டி’ என்று மாற்றி வைத்திருந்தான். அவள் பெயர் அம்ருதா என்று தெரிந்த பிறகும் ‘அம்முக்குட்டி’யை அவன் மாற்றியிருக்கவில்லை.
இதுவரை அதை அவன் லட்சியம் செய்யவில்லை. ஆனால் இப்போது அவளருகே அது ஒரு குற்றம் போல் தெரிந்தது. அவளுக்கு தெரிந்தால் தன்னைப் பற்றி வேறு விதமாக நினைத்துவிடுவாளே!
திரையை அவளுக்கு காட்டாமல் துரிதமாக ஓர் அழைப்பை விடுத்து துண்டித்துவிட்டு சட்டென அலைபேசியைச் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
“உங்க பேரு சர்?”
“ஆங்?”
“பேரு சர்… ஸேவ் பண்ணி வைக்கத்தான்!”
“அஸ்வத்!”
‘அஸ்வத்!’ எனும் இதழசைவுடனும் கண்களில் ஓர் வெளிச்சத்துடனும் கன்னக்குழியைப் பிரசவித்தவாறு, அவன் பெயரின் ஆங்கில எழுத்துக்களைத் தொடுதிரையில் ஆசையாசையாகத் தடவி பதிந்துகொண்டாள்.
அம்ரு அவனின் மகிழுந்து இயக்கும் திறனை மனதினுள் சிலாகித்து, பிண்ணனி இசை இசைத்து அனுபவித்தபடி வந்ததால், அவ்விடத்தில் சற்றுநேரம் நிசப்தம் நடை பயின்றது. சாலையை வெறித்திருந்த அஸ்வத் அவனாகவே பேச்சைத் துவங்கினான்.
“மூணு வயசு டாக்டர்… என் பொண்ணுக்கு!”
குலுங்கி வரும் அவன் குரலில் வேதனையுற்றாள் அம்ருதா. “சர் கஷ்டப்படுத்திக்காதீங்க…”
“இனி என்ன கஷ்டம் வந்துடப் போகுது எனக்கு?”
வேதனையில் கசங்கும் அவன் முகத்தை மௌனமாகப் பார்த்தாள்.
அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தவன், “நீங்க சின்னப் பொண்ணுதான். ஆனா ஏனோ மனசுல கிடக்கறதை உங்ககிட்ட சொல்லலாம்னு தோணுது.” என்றிட,
ஹரிஷைப் போலவே இவனும் சொல்வதில் ரோஷம் மிகுந்தது இவளுக்கு! “நான் ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்ல. எம்பிபிஎஸ் முடிச்சு, பிஜி ஜாயிண்ட் பண்ணிருக்கேன்.”
சப்தம் வராமல் சிரித்தவன், “அப்டி சொல்லல டாக்டர். சொன்னேனே… யூ ஆர் சச் அ பாஸிட்டிவ் பேக்கேஜ்! அதனால சொல்ல தோணுது.” என்று கடந்து போன அவன் வாழ்க்கையைப் பற்றி மேலோட்டமாகச் சொன்னான்.
“என்னோட மேரேஜ் காதல் எழுத்துக்களே இல்லாத டைரி டாக்டர்! எல்லாம் கறை படிஞ்சு வேஸ்டாகி போன பேஜஸ்.”
காரணமில்லாமல் இவன் தன்னிடம் மனம் திறக்கவில்லை என்று புரிந்த அம்ருதா தன் மௌனத்தைத் தொடர்ந்தாள்.
“எல்லாம் என் திமிர் தான்! துரத்தி துரத்தி லவ் பண்ணேன். ஹஹ்!” என்று ஹஸ்கியாக ஒரு வறண்ட புன்னகையுடன் தொடர்ந்தான். “ரேவ்ஸ்… ரேவதி! அவளுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்கல. ஒருநாள் இல்ல; அவ பின்னாடி சுத்தின ரெண்டு வருஷமும் கேட்கல. அந்த வயசுல அது ஒரு ஹீரோயிஸமா தெரிஞ்சது. கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்டி பிடிக்காம போகும்னு அப்பவும் அவ விருப்பத்தைக் கேட்காம, அவங்க வீட்ல பேசி கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.”
முகம் தெரியாத அந்த ரேவதியின் மேல் பரிதாபம் எழுந்தது இவளுக்கு!
“அந்த ஒருநாள் தான் அவ என் கூட இருந்தா! ஒரே நாள்லயே நான் எவ்ளோ பெரிய தப்பு… ப்ச் ப்ச் பாவம்! ஒரு பொண்ணுக்கு நான் எவ்ளோ பெரிய பாவம் செஞ்சிருக்கேன்னு புரிய வச்சா! அவ வாழ்க்கையை, லட்சியத்தை, ஆசையை நான் கொன்னுட்டேன்னு சொன்னா!” அவன் விழிகளில் இருந்து துயரத்துளி ஒன்று தெறித்து விழ, அம்ருவிற்கு காட்டாமல் வலப்பக்கமிருந்த கண்ணாடியில் கவனம் வைத்தான்.
“சர்…”
“அப்புறம் அவளை நான் எதுக்கும் கட்டாயப்படுத்தல. டிவோர்ஸ் கேட்டா! மனசைக் கல்லாக்கிட்டு சரின்னு சொன்னேன். அடுத்த நாள் அம்மா வீட்டுக்கு போகணும் சொன்னா! அவங்க வீட்ல மன்னிப்பு கேட்டு, சமாதானம் செஞ்சு விட்டுட்டு வந்தேன். நாலு மாசம் கழிச்சு என்னைத் தேடி வந்து இனி இங்கேதான்னு சொன்னா… முதல்ல ஏன்னு புரியல. ஆனாலும் என் வீடுதான் அவளுக்கான இடம்னு வழிவிட்டேன். ரெண்டு பேருக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது. நானும் அவ மனசு மாறட்டும்னு வெய்ட் பண்ணேன். அப்பப்போ அவ சாப்பிட்டாளான்னு மட்டும் வீட்டு ஹெல்பர் கிட்ட கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்குவேன். மத்தபடி ஒரே வீட்டுல இருக்க அவளைப் பார்க்கறதே ரேர் தான்!”
Comments
Post a Comment