ஸ்கார்பியோ காதல்🚗💌 - 7.2

 

ஸ்கார்பியோ காதல்
Second meet!🚗💌

அத்தியாயம் 7.2


வெள்ளை கோட்டை கழற்றியவள் வீட்டிற்கு புறப்படுவதற்கு ஆயத்தமாகி வெளியே வர, “அம்ரு மேடம், இவர் உங்களைப் பார்க்கணும்னு வெய்ட் பண்றார்.” என்றாள் செவிலியப் பெண்ணொருத்தி!


“யாரு?” முதுகுப்பையைச் சரியாகத் தோளில் பொருத்தியபடி திரும்பிய அம்ருதா, யாரோ உயரமான ஒருவன் தன் முன் நிற்பது கண்டு விழித்தாள்.


அவள் தன்னை அடையாளம் காண இயலாமல் புருவம் சுருக்கியதில், சிறு புன்னகை அவனிடம்! “ஹலோ டாக்டர்! என்னை ஞாபகமில்லையா?”


இப்போதும் அவளுக்கு அவன் முகம் அடையாளம் தெரியவில்லை. ஆனால் குரல் அவன் யாரென மின்னல் வெட்டாய் நினைவடுக்கிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இத்துடன் இலட்சத்தாயிரம் முறைகள் அன்றைய நிகழ்வையும் அவன் குரலையும் அசைப்போட்டிருப்பவளுக்கு அவன் குரல் அடையாளம் தெரியாமல் போகுமா?


“சர்… நீங்களா? கால் பண்ணுவீங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்.” என்றவள், தங்களையே ஆர்வமாகப் பார்க்கும் செவிலியரிடமிருந்து விலகி, வெளியே நீண்ட வராண்டாவில் பழைய குழல் விளக்கிற்கு அடியில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் வந்து அமர்ந்தாள். “உட்காருங்க சர்.”


அவள் துல்லியமாக தன் குரலை ஞாபகம் வைத்திருப்பதில் அதிருப்தி கொண்டவன், அதை மறைத்து மெச்சுதல் போல் பார்த்தான். சன்ன சிரிப்புடன் அவளருகே அமர்ந்தவாறு, “ஃபேஸ் மறந்துட்டீங்க. ஆனா வாய்ஸ் மறக்கல!” என்றிட,


“அஹ்… அது… அன்னிக்கு நீங்க…” என்றவளின் விழிகளில் தடுமாற்றம்.


“ஹாஹா… எஸ்! அன்னிக்கு தாடியும் பரட்டையுமா பிச்சைக்காரன் போல இருந்தேன்.”


அன்று அந்தக் காட்டுக்குள் இருளில், தன் உயிர் துறந்துவிட்ட குழந்தையை வைத்துக்கொண்டு தலை கலைந்து, தாடியுடன் நின்று அழுதுகொண்டிருந்தவன், இன்று உடை மற்றும் சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தி, சுத்தமாக சவரம் செய்து அட்டகாசமாக வந்து நிற்கின்றான். அதனால்தான் நம் அம்ருவிற்கு முதலில் அவனை யாரென தெரியவில்லை.


“அப்டிலாம் இல்ல சர். குழந்தையை அந்த நிலைமைல வச்சிட்டு இருக்கவங்க வேற எப்டி இருந்திருக்க முடியும்?”


“ஹ்ம்ம்…” ஓரிரு நொடிகள் விழி தாழ்த்தி மௌனம் காத்தான்.


மகளை நினைத்துக்கொண்டான் போலும்.


“சர்… ஆர் யூ ஓகே?” என்றவள் பையிலிருந்து தண்ணீர் போத்தலை எடுத்துக்கொடுக்க,


“தாங்க்ஸ் டாக்டர்.” என்று நாசூக்காக மறுத்தான். சில நொடிகளின் பின், “ஆக்சுவலி உங்களுக்கு இந்த தாங்க்ஸ் சொல்ல தான் உங்களைத் தேடிப்பிடிச்சு வந்தேன்.” என்றவனிடம் மீண்டும் பழைய வசீகரப் புன்னகை!


அம்ருதாவின் முகத்தில் கேள்வியைக் கண்டவன் அதே புன்னகையுடனே சொன்னான். “ஃபர்ஸ்ட் கால் பண்ணலாம்னு தான் நினைச்சேன். ஃபோன்ல விட நேர்ல பார்த்து நன்றி சொல்லணும்னு தோணுச்சு. ஆனா ஹாஸ்பிடல்ல விசாரிக்கவாவது உங்க பேர் தெரியணுமே! அதான் ட்ரூ காலர்ல உங்க பேர் பார்த்தேன். டாக்டர் அம்ருதா நடராஜன்!”


அம்ருதா மெதுவாய் தலையசைத்து இதழ் மடித்து சிரிக்க, தன் பெயரை அவன் ஆளுமையுடன் உச்சரித்ததில் அவளின் கன்னக்குழி கூச்சம் கொண்டது.


“அன்னிக்கு மட்டும் நீங்க வராம, நான் தனியா இன்னும் கொஞ்சம் நேரம் அங்கேயே இருந்திருந்தேன்னா… ஐ வுட் ஹேவ் கில்டு மைசெல்ஃப், டாக்டர்! என் பொண்ணோடயே போய் சேர்ந்திருப்பேன்.”


கேட்ட மாத்திரத்தில் அம்ருவின் விழிகள் அதிர்ந்தன. உள்ளூர நடுங்கும் உள்ளத்தை அவனிடமிருந்து மறைக்க கடும் பிரயத்தனம் செய்தாள். ஏனெனில் அன்றும் அதன் பின்னும் அவன் பத்திரமாக வீடு போய் சேர்ந்திருப்பானா அல்லது தவறான முடிவெடுத்து அங்கேயே இருப்பானா என்றெல்லாம் சிந்தித்து கவலைப்பட்டு, தன் கவலையை அண்ணனிடம் மறைக்க போராடி என அவளின் அவஸ்தை அவள் மட்டுமே அறிந்தது. தன் எண்ணைப் பகிர்ந்தாற் போல அவன் எண்ணையும் வாங்கியிருக்கலாம் என்று தன்னையே நிந்தித்த நாட்கள்தான் எத்தனை! அன்று அவசரத்திலும் பதற்றத்திலும் ஒன்றும் தோன்றவில்லை.


இப்போது இன்னும் ஓரிரு நாட்கள் சென்றிருந்தால் தனக்கு மனப்பாடமாகத் தெரிந்த அவனின் ஸ்கார்பியோவின் எண்ணை வைத்து, அவனின் முகவரியைக் கண்டறிந்து அவன் வீட்டிற்கே போயிருப்பாள். இதுவும் அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசிய திட்டம்.


‘நான் ஏற்கனவே அதை நினைச்சு பயந்திருக்கேன். இவன் வேற…’ என்று நினைத்து முடிப்பதற்குள்,


“ஸாரி டாக்டர், நீங்களும் என்னை நினைச்சு பயந்திருப்பீங்கள்ல? யாரா இருந்தாலும் அப்டித்தான் யோசிப்போம்.” என்று வறண்ட சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, “சூஸைட் அரை நிமிஷ முடிவுன்னு சொல்லுவாங்க. நானும் அன்னிக்கு அந்த ஸ்டேஜ்ல தான் இருந்தேன். ஆனா அந்த அரை நிமிஷத்தைத் தாண்ட எனக்கு ஹெல்ப் பண்ணது நீங்கதான் டாக்டர். யூ ஹேவ் சச் அ பாஸிட்டிவ் வைப்!” என்று உணர்ந்து சொன்னான்.


அம்ரு மறுத்து சொல்ல வரும்போதே, “நீங்க பெருந்தன்மையா மறுக்கலாம். ஆனா வேற யாராவதா இருந்தா என் கார் பக்கமே வர தயங்கி இருந்துருப்பாங்க.” என்றபோது,


‘உன் ஸ்கார்பியோன்றதால தான் நானே வந்தேன்.’ என்று தனக்குள் பேசிக்கொண்டாள் இவள்.


“அப்டியே வந்தாலும் என்னை அந்த நிலைமைல பார்த்துட்டு வேற மாதிரி ரியாக்ட் பண்ணிருப்பாங்க. உங்களை மாதிரி கைண்டா யாரும் பேசிருக்க மாட்டாங்க. தாங்க்ஸ் டாக்டர். தாங்க்யூ ஃபார் ஸேவிங் மை லைஃப்.”


“அச்சோ சர்! ரொம்ப பெரிய வார்த்தை சொல்றீங்க.”


“நோ டாக்டர், அன்னிக்கு மட்டுமில்லாம அதுக்கப்புறமும் நான் சொன்ன சொல்லுக்காக இன்னிக்கு வரை என் பர்ஸனல் பத்தி வெளியே சொல்லாம இருந்திருக்கீங்க. அது இப்போ நீங்க எந்த தயக்கமும் இல்லாம என்கிட்ட பேசறதுல இருந்தே புரியுது.”


அம்ரு தர்ம சங்கடமாக உணர்ந்தாள்.


“அன்னிக்கு நீங்க ஐஸ் பாக்ஸ் கூட இல்லாம குழந்தையை அப்டி வச்சிருக்க கூடாதுன்னு சொன்னப்புறம் ஐ டின்’ட் டிலே! உடனே கிளம்பிட்டேன்.” என்றதும், அவள் முகத்தில் பரவிய நிம்மதியை வெறித்தான்.


“அஹ்… பாப்பாவுக்கு எப்டின்னு…?” அன்று அந்தக் குழந்தையை அந்நிலையில் பார்த்துவிட்டு வந்த பின்னர் இவளுக்கு இன்று வரை தூக்கமென்பதே இல்லை. அதற்காகவாவது அவனைக் கண்டுபிடித்து பேசிவிட நினைத்திருந்தாள்.

 

அவளின் கேள்வியில் அவன் முகத்தை வேதனையும் ரௌத்திரமும் ஆக்ரமித்தது. “என் பொண்ணு நல்ல ஆரோக்கியமா இருந்தா டாக்டர். ஆனா சிலரோட பணவெறி அநியாயமா அவள் வாழ்க்கைல விளையாடிடுச்சு.”


“சர்?!” கேள்வியும் அதிர்ச்சியுமாக இவள் பார்த்திருக்க, வேறொரு செவிலியர் வந்து நின்றார், “அம்ருதா!” என்ற அழைப்புடன்.


மருத்துவர், செவிலியர் என்ற தொடர்பைத் தாண்டியும், நட்பு ரீதியாக அங்கே சிலருடன் அம்ருவிற்கு பழக்கம் இருப்பதால், அவர்களும் இவளிடம் உரிமையுடனும் அக்கறையுடனும் பழகுவார்கள். அப்படியோர் தோழி இந்த ஷீலா!


“சொல்லுங்க ஷீலா!” 


அருகே வேறொரு புதியவன் இருப்பதால் அந்த பணியாளர் செவிலியர் தயக்கத்துடன் நேரத்தைப் பார்த்தாள்.


“என்ன ஷீலா? இன்னிக்கு பிஐசியூல நைட் டியூட்டியா உங்களுக்கு?”


“ஆமா அம்ரு. டைமாச்சே? நீங்க..?” என்று இழுத்தவளின் பார்வை அவன்புறம் சென்றது.


“எனக்கென்ன? நான் இப்போ கிளம்பிடுவேன்.”


“இல்ல அம்ரு. ஹரி சர் உங்களை நேரத்துக்கே பத்திரமா அனுப்பி வைக்க சொல்லிருந்தார்.”


தங்கை மேலிருந்த அக்கறையில் கடமை தவறாத அந்த அண்ணன், தேனிலவிற்கு புறப்படும் முன்னரும், தங்கையின் பாதுகாப்பின் பொருட்டு இங்கிருக்கும் சில செவிலியப் பெண்களிடமும் வாயிற் காப்பாளர்கள் இருவரிடமும் தங்கையை முடிந்தவரையில் விரைவாகவும் பத்திரமாகவும் அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருந்தான்.


தன்னைக் குழந்தைப் போல் நடத்தும் அண்ணனை நினைத்துப் பல்லைக் கடித்தாள் அம்ரு. ‘ஒரு மருத்துவருக்கு உண்டான மரியாதை வேண்டாமா? ஒன்றுக்கும் ஆகாதவள் போல் இப்படியா தன்னை மற்றவர்களிடம் சொல்லி வைப்பது? அய்யோ! புதியவன் முன்னால் மானமே போயிற்று!’ என்றெல்லாம் உள்ளுக்குள் கதறிய அம்ரு, வெளியே மிடுக்கான பார்வையால் ஷீலாவை அப்புறப்படுத்தினாள். “நான் என்ன சின்ன குழந்தையா? இப்போ கிளம்பிடுவேன்.”


அதற்கு மேலும் அமர்ந்திருப்பானா அவன்? “ஓகே டாக்டர், ஈவ்னிங்கே உங்களைப் பார்த்துடலாம்னு வந்தேன். இவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்கல.”


அம்ரு மறுக்கும் முன் அவன் எழுந்து விட, “ஓ ஸாரி சர், ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சிட்டேனா? அப்போவே கால் பண்ணிருந்தா நானே வெளியே வந்திருப்பேனே?” என்றாள்.


“அட! எனக்கென்ன? வீட்டுல என்னைத் தேடறதுக்கு யாரு இருக்கா? நான் உங்களுக்கு டைமாகிடுச்சேன்னு சொன்னேன் டாக்டர்.”


“ரொம்ப ஒண்ணும் நேரம் ஆகல. நான் எப்பவும் வீட்டுக்கு போற டைம் தான் சர் இது!” என்றவள், மீண்டும் அவனை அமரச் சொல்லி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்து தானும் பையை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.


இருவரும் பேசியபடி அந்த நீண்ட வாயில் படிகளைக் கடந்தார்கள்.


“வீடு எங்கே டாக்டர்? என் வீடு தாம்பரத்துல…”


“தெரியுமே!”


“என்ன?”


“அது… எங்க வீடு சி.பல்லாவரம்ன்னு சொன்னேன்.” என்றவள் மகிழுந்தின் திறப்பை எடுப்பதைப் போல் முதுகுப்பையை முன்னே இழுத்து, அதற்குள் தலைவிட்டு கண்மூடி நுனிநாக்கைக் கடித்துக்கொண்டாள்.


“கார்? செல்ஃப் டிரைவிங்கா?”


“ஆமா சர், எப்பவும் அண்ணா கூட போவேன். இப்போ அவர் ஊர்ல இல்ல. நீங்க எப்டி போறீங்க?”


“ம்ம், என் காரை சர்வீஸூக்கு விட்டிருக்கேன். கேப் புக் பண்ணனும்.” என்றவாறு அலைபேசி திரையைத் தடவியவன் இயல்பு போல் நிமிர்ந்து, “இஃப் யூ டோண்ட் மைண்ட், குட் யூ கிம்மீ அ ரைட்?” என்று கேட்டுவிட,


அம்ரு சில நொடிகள் மலங்க விழித்தாள்.


உடனேயே, “நோ இஷ்யூஸ் டாக்டர். பார்க்கலாம்.” என்றவன் கொஞ்சமும் புன்னகை மாறாமல் நகர்ந்தான்.


“அச்சோ சர், நில்லுங்க!” என்று சட்டென எழுந்த பதற்றத்துடன் அவன் கையை இழுத்திருந்தாள் அம்ரு.


இழுத்த வேகத்தில் கைக்கு பதிலாக அவன் சட்டை இழுபட்டிருக்க, மார்பு பகுதியில் லேசாக சரிந்த உடை, அவனின் திண்மையான நெஞ்சத்தில் இருந்த சமீபத்திய காயத்தின் தழும்பை அம்ருவிற்கு காட்டிக் கொடுத்தது. அவன் கவனம் சரிந்த உடையில் இல்லை என்றாலும், அனிச்சையாக லேசாக வலது தோள் உயர்த்தி, இடது தோள் தாழ்த்தி உடையை நேர்செய்து கொண்டான்.


“ஸாரி...” என்று மீண்டும் விழித்த அம்ருவைக் கண்டு, அவனே அறியாமல் அவனுதடுகளில் கபடமற்ற புன்னகை விரிந்தது.


“டாக்டர், ரிலாக்ஸ்! தனியா போறீங்களே… தாம்பரம் பக்கம் போற உங்க கூட வந்துட்டு அங்கே இருந்து கேப் புக் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க என்னை மட்டும் எப்டி நம்ப முடியும்? நான் அதை யோசிக்கல.” சிரித்தபடி நெற்றியில் ஒற்றை விரலால் கோடிழுத்தான்.


கன்னக்குழியுடன் அம்ருவின் முகம் சுருங்கியது. “அப்டி ஒண்ணும் நம்பாம இல்ல! சடனா கேட்டதும் நீங்க எப்டி போவீங்கன்னு யோசிச்சேன். நத்திங் எல்ஸ்.” என்றவள் மகிழுந்தை எடுக்க போய்விட, 


செல்லும் அவளைக் கபடமாகப் பார்த்து இதழ் வளைத்தான். “என் மேல அவ்ளோ நம்பிக்கையா என்ன? எப்டிடீ?”


தன்முன் வந்து நின்ற கியா சோனெட்டில் மறுபக்க கதவு திறந்து விடப்பட, ஓட்டுநர் இருக்கையின்புறம் நின்றிருந்தவன் அவளிடம் கேட்டான். “ஹ்ம்ம்… உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் டிரைவ் பண்ணட்டுமா டாக்டர்?”


கேட்டதும் மெலிதாக தான் என்றாலும் அவள் விழிகளில் பரவிய ஆச்சரியத்தை, ஆர்வத்தை, லேசாக பிளந்த உதடுகளை அங்கிருந்த நான்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகொண்டான் அவன். ஆனால் அது ஏனென்று தான் புரியவில்லை.


‘என்ன நிலாவுக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்? எதுக்கு இவ்ளோ எக்ஸைட் ஆகறா?’


A ride that will change everything…



Comments

  1. நானும் அடுத்த அத்தியாயத்தில் பயணிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)