ஸ்கார்பியோ காதல்🚗💌 - 7.1

 

ஸ்கார்பியோ காதல்
Second meet!🚗💌

அத்தியாயம் 7.1


வண்ண விளக்குகளாலும் வாசமிக்க பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில், பட்டுக் கட்டி, தங்க நகைகள் பூட்டி தன்னருகே ஜொலிக்கும் சந்தன சிலை போல் அமர்ந்திருக்கும் ஸ்வேதாவின் மீது அவ்வப்போது தன் காதல் பாணத்தைச் செலுத்தி அவளைச் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.


நேற்று வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, இன்று அவனுக்கும் ஸ்வேதாவுக்கும் திருமணம். மாங்கல்ய தாரணத்திற்கு இன்னும் சில கணங்கள்தான் இருக்கின்றன.


“ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ்!” என்று குனிந்து அவள் காதில் உதடுகள் உரசச் சொல்லி, அவளின் வெட்கமெனும் வெப்பத்தில் குளிர் காய்ந்தான்.


தன் அலையாடும் கேசத்தில் குண்டு மல்லிச்சரத்தை அழகுற மடித்து வைத்து, அண்ணன் எடுத்துத் தந்த மயில் கழுத்து நிறக் காஞ்சிப்பட்டு பாவாடை தாவணியில், மழை வேண்டி நிற்கும் மயில் போலவே மிளிர்ந்தாள் அம்ருதா. வந்திருக்கும் விருந்தாளிகளிடம் அவள் பொறுப்புடனும் பொறுமையுடனும் பேசி உபசரிப்பதை திருப்தியுடன் பார்த்து உள்ளூர பெருமிதப்பட்டு கொண்டார் அவளின் அப்பா நடராஜன்.


மாப்பிள்ளை - பெண் என இரு வீட்டாரும் உயர் மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணக் கோலாகலம் அதீத ஆர்பாட்டம் இல்லாமல் அளவோடும் மகிழ்வோடும் நடந்தேறியது. நாத்தனார் முடிச்சு போடுவதற்கு என்று ஸ்வேதாவின் பின்னால் வந்து நின்று அண்ணனை வம்பு செய்து கொண்டிருந்தாள் அம்ருதா.


ஹரிஷ் முன்பே அவளிடம் சொல்லிவிட்டான். “என் பொண்டாட்டிக்கு நான்தான் மூணு முடிச்சையும் போடுவேன் அம்ரு! கல்யாண வீட்டுல பெரிசுங்க ஏதாவது குட்டையைக் குழப்பினா நீதான் அண்ணன் ஆசையை நிறைவேத்தணும்.”


“அதெப்டி நான் என் உரிமையை விட்டுக் கொடுக்க முடியும்? எனக்கு இருக்கறது ஒரே ஒரு அண்ணன்.”


“டேய் டேய் இதுல தான் உன் உரிமையை நிலைநாட்டணுமா? நான் வேணும்னா நீ கேட்ட லெஹங்கா வாங்கி தரேன்டா…”


“ம்ம்… யோசிக்கறேன்.”


“சரி, என்ன வேணும்னு நீயே சொல்லு!”


“சொன்னா வாங்கி தருவியா? அப்புறம் பேக் அடிக்கக்கூடாது.”


“அம்மு பிராமிஸ்!”


“எனக்கு கோல்ட் ஆங்க்லெட் வேணும். தங்கத்தைக் கால்ல போடக்கூடாதுன்னு அம்மா இதுவரை என்னைப் போடவே விடல. அட்லீஸ்ட் உன் மேரேஜ் அப்பவாவது போடணும்னு ஆசையா இருக்குதுண்ணா…” என்று செல்லம் கொஞ்சிய தங்கையின் ஆசையை நிறைவேற்றாமல் இருந்துவிடுவானா இந்த அண்ணன்?


அவள் விருப்பப்படி தங்க கொலுசை வாங்கிவிட்டு அம்பிகாவிடம் காட்டியபோது அவர் தீவிரமாக எதிர்த்தார். “தங்கம் மஹாலக்ஷ்மி! அதைக் கால்ல போடுவாளாமா? நீ வர வர அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கற ஹரி!”


“அம்மா, தங்கம் ஒரு உலோகம். அவ்ளோதான்! அதை ஏன்‌ மஹாலக்ஷ்மின்னு க்ளோரிஃபை பண்றீங்க?”


“இப்டி எதையாவது சொல்லி அவ கேட்கற எல்லாத்தையும் செஞ்சு கொடுத்து நியாயப்படுத்தாதே! இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணுக்கு ஆசையும் அடமும் கூடாது. அப்புறம் அவதான் கஷ்டப்படுவா!”


“இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணுன்னா எதுக்கும் ஆசைப்படக் கூடாதாம்மா? அப்புறம் அண்ணன்னு நான் எதுக்கு இருக்கேன்? அவ கஷ்டப்படறளவுக்கு நான் விட்டுடுவேனா?”


இப்படியாக ஏதேதோ சொல்லி அம்மாவைச் சரிக்கட்டி, சமாதானம் செய்து தங்கையின் ஆசையை நிறைவேற்றி இருந்தான் ஹரிஷ். தன் ரோஜா நிற கணுக்காலில் அந்த தங்க ஆபரணத்தை ஆசையாசையாக பூட்டி, பாதம் நோக நோக நடந்து, அழகு பார்த்து சுற்றி வந்தாள் அவனின் தங்கை அம்ருதா.


ஐயர் மூன்றாவது முடிச்சிட மாப்பிள்ளையின் தங்கையை அழைத்ததின் பேரில் ஸ்வேதாவின் பின்னே வந்து நின்றவள், லஞ்சம் பெற்ற பின்னரும் மூன்றாம் முடிச்சை நான் போடப் போகிறேன் என்பதாகப் போக்குக் காட்டிக்கொண்டு அண்ணனின் முறைப்புகளைப் பெற்றுக் கொண்டிருந்தாள். ஒருவழியாக தாலி கட்டும்போது ஹரிஷ் மூன்று முடிச்சையும் போட, அம்ருதா யார் கவனத்தையும் ஈர்க்காமல் பெயருக்கு தாலி முடிச்சில் கை வைத்து எடுத்து கண்சிமிட்டினாள்.


அவளைச் செல்லமாக முறைத்தவன் ஸ்வேதாவின் உச்சந்தலையில் காதலுடன் குங்குமம் இட்டான். அதன்பின் சடங்கு, சம்பிரதாயங்கள் என்று நேரம் ஓட, அத்தனை நிகழ்வுகளிலும் உள்ளம் பூரிக்க மணமக்களுடன் துணையாக நின்றிருந்தாள் அம்ருதா. தன்னையே ஒருவன் வஞ்சத்துடன் விழியெடுக்காமல் விழுங்கிக் கொண்டிருப்பதை அறியாமல் சந்தோஷம் பூசிய பட்டாம்பூச்சியாகச் வளைய வந்தாள்.


மேலும் மூன்று நாட்கள் நகர்ந்திருந்தன. திருமண களேபரங்கள் ஓய்ந்து நேற்றுதான் ஹரிஷ் மனைவியுடன் தேன்நிலவு சென்றிருந்தான்.


“அந்தக் காலத்துல எல்லாம் பத்து பிள்ளைங்களைப் பெத்து, கட்டி கொடுத்து சீர் செனத்தி செஞ்சுன்னு எப்டித்தான் வாழ்ந்தாங்களோ! நமக்கு ஒரு கல்யாணத்தை முடிக்கறதுக்குள்ளே மலையைப் புரட்டினாப்புல இருக்குது.” காலையில் அம்பிகா கணவரிடம் அலுப்புடன் பேசிக் கொண்டிருந்தார்.


“உங்க பாட்டை அப்புறமா பாடுங்கம்மா! லன்ச் எடுத்து வச்சிட்டீங்களா? நான் கிளம்பறேன். பை’ப்பா!”


“சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குதுல்ல? காரை கவனமா ஓட்டணும். ராத்திரி சீக்கிரம் வந்துடணும்." 


“எத்தனை வாட்டி சொல்லுவீங்க?" என்று கடுகடுத்த அம்ருதா வழமைக்கு திரும்பியிருந்தாள். 


குழந்தை மருத்துவத்தில் MD Pediatrics, DNB Pediatrics என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. அம்ரு MD செய்கிறாள். அத்துடன் அந்த பொது மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளநிலை ஆராய்ச்சியாளராக (junior researcher) இருக்கிறாள். அன்றைய நாள் வழக்கம் போல பரபரப்புடன் நகர்ந்தது.


இரவு நேரம் எட்டு மணியை தாண்டியிருக்க, அம்ரு மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (research block) இருந்தாள். உடன் உதவியாளராக இருக்கும் ஒரு பெண் (Research assistant).


“உன் தீஸிஸ்க்கு இன்னும் எத்தனை கேஸ் ஸ்டடி பண்ணனும் அம்ரு?”


“அது இருக்குது இன்னும் ரெண்டு!” நோய் விவரக் குறிப்புத்தாளைக் (case sheet) கோப்பில் பிணைத்து வைத்தபடி சொல்ல, அங்கிருந்த இண்டர்காம் அழைத்தது.


அதற்கு செவி சாய்த்தாள். 


“வர்றேன்.” என்று சொல்லி வைத்துவிட்டு, “வைஷூ, மாலதி மேடம் கிளம்பிட்டாங்களாம். ஓபிடி’ல ஒரு எமர்ஜென்சி கேஸ்! நான் போய் பார்க்கறேன். இதைக் கொஞ்சம் செக் பண்ணிட்டு நீயும் கிளம்பு. நாளைக்கு சீஃப் கிட்ட காட்டி அவர் ஒப்பீனியன் கேட்கணும்.” என்ற அம்ரு தன் வெள்ளைக் கோட்டை அணிந்து, முதுகுப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது இருள் முதிர்ந்திருந்தது. 


பிரகாசமாய் ஒளிரும் விளக்குகளுக்கிடையே சில மினுங்கிக் கொண்டிருக்க, சாயமிழந்த சுவர்கள் அழுக்காய்க் காட்சியளித்தன. அந்த வெற்றிடத்தில் அவள் காலணியின் ஓசை மட்டும் எதிரொலிக்க, மருந்தும் ஃபினால் வாசனையுமாக அந்த நீளமான காரிடாரைக் கடந்து குழந்தைகள் நல பிரிவிற்குள் நுழைந்தாள்.


தரை தளத்தில் இருக்கும் அந்த வெளிநோயாளிகள் பகுதி (OPD) காலை எட்டு மணி முதலே குழந்தைகளும் பெற்றோர் கூட்டமுமாய் நிரம்பி இருக்கும். இப்போது சந்தடிகள் குறைந்து சில ஸ்டாஃப் நர்ஸ்கள் மட்டுமே ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். 


அம்ருதா இப்போது பயிற்சியில்தான் (PG trainee doctor) இருப்பதால் முழுமையாக குழந்தைகள் நல மருத்துவராக ப்ராக்டீஸ் செய்வதில்லை. மருத்துவமனையில் அன்றாட பணிகளுடன் அவளின் ஆய்வறிக்கைக்காக கேஸ் ஸ்டடி செய்வதால் Good Clinical Practice (GCP) -இன் அடிப்படையில் மருந்து ஆராய்ச்சி குழுவிலும் வாய்ப்பு கிடைத்தது.


மருத்துவரின் அறைக்குள் நுழைந்தவள், பையை வைத்துவிட்டு நோயாளியை உள்ளே அனுப்ப சொல்ல, நான்கு வயது சிறுவனுடன் ஒரு இளம்பெண் வந்தாள். அவன் நிற்கவுமியலாமல் துவண்டிருந்தான். காய்ச்சலும் சளியுமாய் மூச்சு திணறிக் கொண்டிருந்தது. அதனால்தான் இந்த நேரத்தில் அனுமதித்திருக்கிறார்கள். 


அவள் தன்‌ மகனுக்கு அதீத காய்ச்சல், வீட்டிலிருந்த மருந்தைக் கொடுத்தும் சரியாகவில்லை என்றிட, 


அவனைச் சோதித்தறிந்த அம்ருதா செவிலியரிடம், “ஹை டெம்ப்ரேச்சர் ப்ளஸ் எக்ஸஸ் ஃப்ளெம்! பாராசிட்டமால் அண்ட் சால்பூட்டமால் நெபுலைஸேஷன்.” என்றபடி, அதற்குரிய மருந்துகள் மற்றும் ஊசிக்கான பெயர்களை சீட்டில் எழுதி செவிலியரிடம் தந்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் திரும்பினாள்.


“அவங்க கூட போங்க. பயப்பட எதுவுமில்லை. இட்லி, கஞ்சி மாதிரி ப்ளாண்ட் ஃபுட் கொடுங்க. மாத்திரை கொடுத்தப்புறம் நைட் நல்லா தூங்குவான். வீஸிங் கன்டினியூ ஆச்சுன்னா காலைல வாங்க.” என்று மேலும் சில சம்பிரதாய பேச்சிற்கு பிறகு அவர்களை செவிலியருடன் ஊசி போடும் இடத்திற்கு அனுப்பிவிட்டு சாய்ந்தவள் நேரத்தைப் பார்த்தாள்.


எட்டரை! 


தொடர்ச்சியை வாசிக்க கீழேயுள்ள அடுத்த அத்தியாயத்தைக் க்ளிக்கவும்✨ 



Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)