ஸ்கார்பியோ காதல்🚗 - 10.1

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 10

இசைத்துக் கொண்டே இருக்கும் தன் அலைபேசியை மேசைக்கு கீழே கையில் வைத்துக்கொண்டு விழித்திருந்தாள் அம்ருதா. அழைப்பில் வந்தவன் அவளின் அண்ணன் ஹரிஷ்! சப்தமில்லாமல் வைத்திருந்ததால் எதிரேயிருந்த அஸ்வத்திற்கு அம்ருதா சாதாரணமாக அலைபேசியைப் பார்வையிடுவது போலத்தான் தெரிந்தது.

அம்ருதா அம்மாவிடம் வேலை முடிந்ததும் மதியம் ஒரு தோழனைப் பார்க்க போகிறேன். பொழுது சாய தான் வருவேன் என்று சொல்லிவிட்டு தான் வந்திருந்தாள். ஆனால் அந்த தோழனின் பெயரைச் சொல்லவில்லை. அம்மா அண்ணனிடம் சொல்லியிருப்பார்கள்.

படிக்கும் காலத்திலிருந்தே அம்ருவின் நண்பர்கள் அனைவரையும் ஹரிஷூக்கு தெரியும். அதனால் யாரென கேட்கத்தான் அழைக்கின்றான் என்று புரிந்தது.

‘என்னத்தைச் சொல்ல?’ என்று இவள் விழித்துக் கொண்டிருக்கும்போதே அழைப்பு நின்று போக, நிம்மதியுற வழியில்லாமல் அண்ணனிடம் அஸ்வத் குறித்து மறைக்கின்றோம் என்ற குற்றவுணர்வு தலைதூக்கியது. 

“ஆர் யூ ஓகே டாக்டர்?” அவளின் முகபாவங்களை அளந்து கொண்டிருந்த அஸ்வத் கேட்க,

“அது… அண்ணா…” என்று அலைபேசியை உயர்த்தி காண்பித்தாள்.

“பேசுங்களேன். ஆனா என்னைப் பத்தி வேணாம் டாக்டர்.” அன்று அந்த அந்தகாரத்தில் ஒலித்த அதே அழுத்தக்குரல்!

எதிரிலிருப்பவர்கள் நம்மைப் பொய்யுரைக்க செய்பவர்களாக இருப்பின், அவர்களின் சகவாசம் நம்மை நல்வழியில் இட்டுச் செல்வதாக இராது என்பதை அறியாத அப்பாவிப் பெண் அல்ல அம்ருதா! இருப்பினும் எதை வைத்தோ தன்னை ஈர்க்கும் அஸ்வத்தின் முன் மனதளவில் பலமற்றவளாக இருந்தாள்; சிந்திக்கும் புத்தியை அடியோடு மறந்திருந்தாள். 

அதனாலல்லவா எவனோ ஒருவனாக அறிமுகமாகியவனுடன் அலைபேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டு, அவனின் சொந்தக் கதையும் நொந்த கதையும் கேட்டு பரிதாபம் கொண்டு, இதோ அவளுக்கு எல்லாமாக இருக்கும் அவளின் அண்ணனுக்கே தெரியப்படுத்தாமல் இவனுடன் தனியாக வெளியே செல்லுமளவிற்கு வந்திருக்கிறாள்!

அவனின் சொல்லுக்கு மேல் கீழாக தலையசைத்தவள் அவளாகவே ஹரிஷை அழைத்தாள். “ஹனிமூன் போயிட்டும் எனக்கு ஏண்டா கால் பண்ற?”

“.........”

“ஹான் சாப்பிட்டேன்.”

“.......”

“***** ஹோட்டல்ல!”

“.......”

“ம்ம், ஃப்ரெண்ட் தான்! ஒரு புது பேஷண்ட்…”

இன்னும் வேறு என்ன சொல்லப்பட்டதோ, ‘உம்’ கொட்டிவிட்டு வைத்தாள்.

அவள் பேசி முடிப்பதற்குள் சாப்பிட்டதற்கு உண்டான பணத்தைச் செலுத்தியிருந்தான் அஸ்வத். அதைக் கூட உணராத அம்ருவின் முகம் தெளிவற்றிருந்ததைக் கவனிக்கவே செய்தான்.

“டாக்டர் அம்ருதா!” என்ற அஸ்வத்தின் அழைப்பில், பட்டென்று பார்வை அவனில் நிலைக்க, கவனமும் அவன்புறம் சாய்ந்திருந்தது.

“போகலாமா? ஏதோ யோசனைலயே இருக்கீங்க?”

கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு எழுந்து அவனுடன் நடந்தாள். “அண்ணா கிட்ட நான் எதையும் மறைச்சதே இல்ல சர். இப்… இப்போ…”

அஸ்வத் நின்றுவிட்டான். “டாக்டர், ஏற்கனவே எனக்கு ஏகப்பட்ட ப்ராப்ளம்ஸ்! உங்ககிட்ட கூட எதையும் ஷேர் பண்ணிக்கனும்னு அவசியமில்ல. ஏதோ எமோஷனல் பாண்ட்’ல உங்களோட கனெக்ட் ஆகிட்டேன். அதான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன் போல… எனக்கே என்னை நினைச்சா ஆச்சரியமா இருக்குது.”

முணுமுணுத்தாள். “எனக்கும்தான்!”

“என்ன?”

“ஒண்ணுமில்ல!”

“ம்ம்! இப்போ என்னைப் பத்தி உங்க அண்ணன் கிட்ட சொன்னா, என் பொண்ணைப் பத்தியும் சொல்ல வேண்டியது வரும். நான் அதை விரும்பல டாக்டர்.”

அம்ருதா அவன் உணர்வுகளை மதித்தாள். அதனால் அவளின் குற்றவுணர்வு தற்காலிகமாக விடைபெற்றது.

“ஏன்னா நான் உங்களை மாதிரி மத்தவங்கள நினைக்கல.” என்றுவிட்டு அஸ்வத் முன்னே நடக்க ஆரம்பித்துவிட, இதழ் மடக்கிய அம்ருவின் கன்னக்குழிகள் அங்கிருந்த அலங்கார விளக்கின் வெளிச்சத்தில் பளிச்சிட்டன.

அந்த அரையிருளில் இருந்து வெளியே வர, மாலை நேர வெயில் சுள்ளென்று காய்ந்தது. அந்த உணவகத்தின் வளாகத்தில் சுற்றிலுமிருந்த மரங்களின் உபயத்தால், உணவகத்திற்கு உட்பட்ட அந்த பூங்காவில் உஷ்ணம் தணிந்திருந்தது. ஓரிரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்தவாறு அம்ருதா, அஸ்வத் இருவரும் அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தனர்.

அம்ருதா அலைபாயும் கேசத்தை அடக்கிவிடும் உத்தேசத்தில் கூந்தலை மொத்தமாக ஒருபுற தோளில் இழுத்து வைத்துக்கொண்டு திரும்ப, இவர்களுக்கு சற்றுத் தொலைவிலிருந்த இருக்கையில் ஒருவன் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். இவளுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும், அவன் இத்தனை நேரம் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் என்று! அந்த உந்துதலில் தானே இவளே திரும்பிப் பார்த்தாள்!

‘எவ்ளோ டீசன்ட்டான இடமா இருந்தாலும் இந்த ரோமியோக்கள் இல்லாத இடம்னு எதுவுமே இல்ல போல!’ சில பல வார்த்தைகள் சேர்த்து அவனை மனதிற்குள் திட்டியவள், அத்துடன் அவனை அலட்சியம் செய்துவிட்டு, கழுத்தைச் சாய்த்து அஸ்வத்தைப் பார்த்து கேட்டாள். “நீங்க கூப்பிட்டதுக்கு ரேவதி என்ன சொன்னாங்க?”

“நான் கூப்பிட்டதும் உடனே வர்றேன்னு சொல்லிட்டா… அப்பவும் எனக்கு எந்த சந்தேகமும் வரல டாக்டர். ப்ரக்னென்ஸி ஸ்ட்ரெஸ், ரெஸ்ட் எடுக்க விரும்பறான்னு நினைச்சேன். வீட்டுக்கு வந்ததும் அம்முவைப் பார்த்து தப்பு செஞ்சிட்டேன்னு ரொம்ப அழுதா! அம்முகிட்ட தன்னைக் காட்டி அம்மான்னு சொல்லிக் கொடுத்தா! இனி அம்முக்குட்டியை க்ரீச்ல விட வேணாம். நானே பார்த்துக்கறேன்னு சொன்னா…”

“நீங்க என்ன சொன்னீங்க? பேபி அவங்களை அம்மான்னு அக்செப்ட் பண்ணிக்கிட்டாளா?”

“ஏற்கனவே அம்முவை க்ரீச்ல விட்டுட்டு வேலைக்கு போறதுல நானுமே ஒரு மாதிரி அழுத்தத்துல தான் இருந்தேன். அவளைப் பிறந்ததுல இருந்து கூட இருந்து பார்த்துக்கிட்ட அம்மாவுக்கு வயசாகிடுச்சு. அவங்க பையன் கூப்பிடறதா சொல்லி சொந்த ஊருக்கே போய்ட்டாங்க. 

வீட்ல மத்த சர்வண்ட்ஸ் இருந்தாலும் யாரும் ஸ்டே பண்றவங்க இல்ல. அப்டி யாரையும் என்னால நம்பவும் முடியல. ஸோ ரேவ்ஸ் பார்த்துக்கறேன்னு சொன்னதும் நான் ரிலாக்ஸ்டா தான் ஃபீல் பண்ணேன் அண்ட் அம்முக்குட்டியும் ரேவ்ஸோட ஈஸியா ஒட்டிக்கிட்டா!”

“ஓ…” அம்ருவின் குரல் தேய்ந்ததில் அவன் கவனம் இல்லை.

“ட்டூ மன்த்ஸ்ல அவளுக்கு டெலிவரி. அம்முக்குட்டி மாதிரியே ஒரு பேபி கேர்ள்…”

அஸ்வத்தின் வதனத்தில் சற்று முன்பு கண்ட ஆக்ரோஷத்திற்கு எதிராக தற்சமயம் மென்னுணர்வுகளின் வியாபிப்பு!

இவன் குழந்தைகள் மேல் பேரன்பு கொண்டவனாக இருக்கவேண்டும். இல்லையெனில் தனக்கு துரோகமிழைத்தவர்களின் குழந்தையைத் தன் குழந்தைப் போல் என்று சொல்லி ஏற்க முடியுமா என்ன? 

“ஆனா அதுக்கப்புறம் தான் ரேவ்ஸ் கிட்ட நான் வித்தியாசத்தைப் பார்த்தேன். அம்முவையும் அந்தக் குழந்தையையும் சதா கம்பேர் பண்ணிக்கிட்டே இருந்தா! அம்முவுக்கு கிடைக்கற நல்ல டிரெஸ், டாய்ஸ் எதுவும் இந்தக் குழந்தைக்கு கிடைக்காதுன்னு புலம்பினா! நான் பார்த்துக்கறேன் ரேவ்ஸ்ன்னு சொன்னேன். அவ ஒத்துக்கல. நீ என்னைக் காம்ப்ரமைஸ் பண்றதுக்கு தான் இப்டி சொல்ற! எப்போ வேணாலும் எங்களைத் துரத்தி விட்டுடுவ’ன்னு ஒரே அழுகை.”

“இன்செக்யூரிடி ஃபீல் சர்… ப்ரக்னென்ஸில மட்டும் ஸ்ட்ரெஸ் இல்ல; போஸ்ட் டெலிவரிலயும் சில ஹார்மோன் சேன்ஞ்சஸ்ல பொண்ணுங்களுக்கு அழுத்தம் இருக்கும். மூட் ஸ்விங்ஸ் இருக்கும். அவங்க ஹஸ்பண்ட் பக்கத்துல இல்லாததால அவங்களுக்கு அந்த அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும்.” என்று ஒரு மருத்துவராக அம்ரு சொல்ல, அஸ்வத்திடம் நீண்ட அமைதி.

பின்னர் விழியுயர்த்தி அம்ருதாவின் அழகிய கரிய விழிகளை அர்த்தத்துடன் பார்த்தான். 

தவறாக ஏதும் சொல்லிவிட்டோமோ என இவள் இதழ் மூடி கன்னங்களில் குழியேற்படுத்திக் கொண்டிருக்க, அஸ்வத் அந்த தர்ம சங்கடமானக் கேள்வியைக் கேட்டான். “நான் சொல்லிட்டு வர்ற கதைல, நான் ரேவ்ஸோட ஹஸ்பண்ட் ரோல் செஞ்சிருப்பேன்னு நீங்க நினைக்கலயா டாக்டர்?”

அம்ருவின் கரிய விழிகள் மெதுவே விரிந்தன.

“என் மேல அவ்ளோ நம்பிக்கையா?”

அவள் மேல் சந்தேகம் இருந்தாலும், எல்லா விதத்திலும் இந்தப் பெண் தன்னை அளவுக்கதிகமாக நம்புகிறாள் என்று அஸ்வத்திற்கு புரிந்தே இருந்தது. அதை இன்று வாய்விட்டு கேட்டுவிட்டான்.

என்ன பதில் சொல்லுவாள்? நிச்சயம் அவள் அஸ்வத்தை அங்ஙனம் எண்ணியிருக்கவில்லை. நினைத்திருக்க வேண்டுமோ? அந்த ரேவதி அவனின் பழைய காதலி; ஒருநாள் மனைவி! இரண்டு வருடங்கள் பிரிந்திருந்துவிட்டு அபலையாக வந்து நின்றவள் மீது இரக்கம் சுரந்து மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான். அவளுக்கான தன் பழைய செல்ல விளிப்பையும் அவன் இக்கணம் வரை மாற்றிக் கொள்ளவில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது அவனுக்கு அவள் மேல் ஆசை மட்டும் வராமல் இருந்திருக்குமா?

மனதுக்குள் அனைத்தையும் அலசிக் கொண்டிருந்தவளுக்கு ஏனோ எதிரிலிருப்பவனைக் கன்னங்கன்னமாய் அறைந்து தள்ளச் சொல்லி ஆத்திரம் பொங்கியது. எங்கே தன்னை மீறி அடித்துவிடுவோமோ என்று பயந்து இரு உள்ளங்கைகளையும் மடித்து மடி மீது வைத்து அழுத்திக்கொண்டாள்.

அஸ்வத், “ஸாரி டாக்டர்… ஸாரி ஃபார் மேக்கிங் யூ அன்கம்ஃபர்டபிள். உங்ககிட்ட நான் இதைக் கேட்டிருக்கக் கூடாதுதான்! பட் ஐ’ம் வொர்த்தி ஃபார் யோர் டிரஸ்ட் டாக்டர்.” என்றதில் அம்ருவின் கை இறுக்கம் தானாக தளர்ந்தது.

அவள் கண்களே கேள்வியைக் கேட்டன.

இந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியை கீழேயுள்ள இணைப்பைத் தொட்டு வாசிக்கலாம்📖✨


Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)