ஸ்கார்பியோ காதல் - 14.2

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 14.2


“அம்முவுக்கு ஏதாவது ஆச்சு… உன்னை சில்லு சில்லா நொறுக்கிடுவேன்டீ!” என்று எச்சரித்தவனின் குரல் நடுங்கியதை, 

உல்லாசமாக பார்த்துச் சிரித்தாள் ரேவதி. “அப்போ மரியாதையா வழியை விட்டு தள்ளி நில்லு!”

“நீ அம்முவை என்கிட்ட கொடு!”

“நீ உன் கார்ல ஏறு! இவளைக் கீழே விட்டுட்டு நான் என் வழியைப் பார்த்துட்டு போறேன்.” என்றவள் குழந்தையின் பள்ளிப் பையைத் தூக்கி அஸ்வத்தின் முன் எறிந்தாள்.

“நீ முதல்ல அந்த சிரிஞ்சைக் கீழே போடு!”

“எதுக்கு? என்னை அப்டியே காரோட சமாதி ஆக்கவா? போய் உன் கார்ல ஏறு!”

அவளை ஆழ்ந்து பார்த்தவாறு பின்னால் நகர்ந்த அஸ்வத் தன் மகிழுந்தினருகே வந்திருக்க, அவனின் அமைதியைச் சந்தேகமாகப் பார்த்தவள், “திரும்ப என்னை ஃபாலோ பண்ண மாட்டன்னு என்ன நிச்சயம்?” என்றபடி இமைக்கும் நொடிக்குள் ஊசியைக் குழந்தையின் உடலில் செலுத்தியிருந்தாள்.

“****!” ஓர் மோசமான வார்த்தையை உதிர்த்தபடி அஸ்வத் பாய்ந்து வர,

அதற்குள் குழந்தையைத் தூக்கி கீழே எறிந்தவள் சடுதியில் ஓட்டுநர் இருக்கைக்கு தாவி மகிழுந்தை உயிர்ப்பித்துத் திருப்பினாள். அஸ்வத் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்துவிட, அங்கே மயங்கிக் கிடந்தவனின் கழுத்தில் சக்கரத்தை ஏற்றி இறக்கிவிட்டு, தெருவில் இருந்து பிரதான சாலையை அடைய விரைந்தாள் ரேவதி.

அம்முவை ஒரு கையில் பூஜைப் பொருளைப் போல் அணைத்துப் பிடித்திருந்த அஸ்வத், அங்கே குவிந்திருந்த கட்டுமானப் பொருட்களிலிருந்து கூர்முனைக் கொண்ட ஒரு நீண்ட கழியையெடுத்து சரியாக ரேவதி சென்ற மகிழுந்தின் சக்கரத்தைக் குறி வைத்து எறிந்தான். 

ஏற்கனவே எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் பதற்றத்தில் மகிழுந்தைச் சாலைப் பக்கம் திருப்பியிருந்த ரேவதியின் கரங்களில் திடுமென மகிழுந்து தடம் புரண்டதில், திசை திருப்பியை இஷ்டத்துக்கும் வளைத்தாள். அதற்குள் அவளின் மகிழுந்து கட்டுப்பாடற்று பிரதான சாலையைப் பிரவேசித்திருக்க, அது வேகத்துடன் வந்த கனரக வாகனம் ஒன்றில் இடித்துக்கொண்டு சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்து, ரேவதி மற்றும் அவளுடைய குழந்தையின் உயிரைக் குடித்துவிட்டு ஓய்ந்தது. அவளின் மகிழுந்தை மோதிய கனரக வாகனம் உடனடியாக பறந்துவிட்டது.

அஸ்வத் அம்முவின் மயக்கத்தைத் தெளிய வைப்பதில் மும்முரமாக இருக்க, ரேவதி பிரதான சாலையில் பல அடி தூரம் சென்று உயிரை விட்டது அவனுக்கு தெரியவில்லை.

எல்லாம் அரைமணி நேரத்தில் முடிந்து போனது.

தண்ணீரைத் தெளித்தும் குழந்தை விழி திறக்கவில்லை என்றதும், கூட்டை விட்டு பறக்க எத்தனித்த தன்னுயிரைப் பிடித்துக்கொண்டு, “அம்முக்குட்டி! அம்முக்குட்டி! டாடியைப் பாருடா! காட்! என் பொண்ணுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்?” என்று ஏதேதோ அனத்தியபடி குழந்தையைப் பின்னிருக்கையில் கிடத்தி இருக்கைப் பட்டியைப் பூட்டிவிட்டு, அவள் மார்பில் கைவைத்து உயிரின் ஒலியைத் தேடி நிம்மதியடைந்த தந்தையாக முன்னால் வந்து அமர்ந்தான்.

சட்டென்று ஏதோ பொறி தட்ட மீண்டும் கீழே இறங்கி, ரேவதி வைத்திருந்தக் கத்தியை எடுத்துக்கொண்டு பின்னர் மகிழுந்தை உயிர்ப்பித்தான்.

பிரதான சாலையில் ஓரிடத்தில் சிறு கும்பல் கூடியிருக்க, முதலில் அதனை அலட்சியப்படுத்தி, ஒலியெழுப்பி கூட்டத்தை அப்புறப்படுத்தி நகர நினைத்தவன், அங்கே கவிழ்ந்து கிடந்தது ரேவதி வந்த வாகனம் என்று தெரிந்தபோது வேகத்தைக் குறைத்தான். 

சில கன்னடக் குரல்கள் கேட்டன. “ஸ்பாட் அவுட்டா? எத்தனை பேரு?”

“யாராவது போலீஸுக்கு சொல்லுங்க.”

“ஒரு லேடி மட்டும்தான் இருக்குது.”

அஸ்வத் பதறினான். ‘இல்ல. ஒரு குழந்தையும் இருக்கும்.’

அவன் படபடத்து கதவைத் திறந்து இறங்க எத்தனிக்க, கூட்டம் சேராமல் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த ஒருவர், “ஹோகு! ஹோகு!” என்று அஸ்வத்தைக் கதவைத் திறக்கவிடாமல் அழுத்திப் பிடித்து தலையசைத்தார். 

“உள்ளே குழந்தை இருக்குது சர்.” என்ற இவனின் தமிழ் அவருக்கு புரிபடாமல் போக,

“போலீஸரு ஈக பருட்டிடாரே. டூரா ஹோகு!” என்ற அவரின் கன்னடம் இவனுக்கு புரிந்தது.

‘போலீஸ்’ என்ற ஆங்கில வார்த்தையால் அவர் சொல்ல வந்ததில் சொச்சத்தைப் புரிந்துகொண்ட அஸ்வத்,  “உள்ளே பாப்பா… பேபி… இன்ஸைட் தி கார்!” என்று அழுத்தியிருந்த அவரின் கையை எடுத்துவிட்டு கதவைத் திறந்து இறங்கப் பார்த்தான்.

அஸ்வத்திற்கு பின்னால் வந்த வாகனங்கள் வரிசைக்கட்ட ஆரம்பிக்க, கூச்சலும் குழப்பமும் நிலைமையின் தீவிரத்தை அதிகப்படுத்த, அவர் மேலும் இவனிடம் கன்னடத்தில் ஏதோ இரைந்தார்.

அஸ்வத்திற்கும் நிலைமை புரிந்தது. காவல்துறை வந்து அலச ஆரம்பித்துவிட்டால் இவனுக்கும் ஏதேனும் சிக்கலை இழுத்து வரலாம். அதனால் முதலில் இவ்விடத்தை விட்டு நகர்வதே சரியெனப் பட்டது. 

ஒரு பாசமிகு தந்தையாக அம்முக்குட்டியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமையுடன், மகளின் உயிரே பிரதானமாகத் தெரிந்ததில், ‘இவ வயித்துல பிறந்த பாவத்துக்கு ரெண்டு குழந்தைகளும் இவ்ளோ கஷ்டம் அனுபவிக்கணுமா?’ என்று ரேவதியின் குழந்தைக்காகவும் ஒரு நிமிடம் வருத்தப்பட்டுவிட்டு நகர்ந்தான்.

பின்னர் உடனடியாக அம்முவை மருத்துவமனையில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அன்று மகிழுந்தை தாறுமாறாக ஓட்டி வந்து, நம் அம்ருதாவின் கவனத்தை ஈர்த்திருந்தான் அஸ்வத்.

நடந்தவற்றை அம்ருதாவிடம் சொன்னவன், கடைசியில் ரேவதிக்கு விபத்து ஏற்பட்டது என்று சொன்னானே தவிர, அந்த விபத்து நிகழ மூலக் காரணமாக இருந்தது தான்தான் என்று சொல்லவில்லை.

அன்று முதலில் ஸ்கார்பியோவைப் பிடிக்க முடியாமல் அம்ருதா சோர்ந்ததும், பின்னர் திடுமென மீண்டும் தங்கள் முன் தோன்றிய ஸ்கார்பியோவைப் பின்தொடர்ந்தபடி, ‘சாப்பிட நிறுத்திருப்பானா இருக்கும்.’ என்று தன் அண்ணன் ஹரிஷ் சொன்னதும் நினைவிற்கு வந்தது.

ஆக, அவன் சாப்பிட நிறுத்தியிருக்கவில்லை. அவனின் அம்முவை மருத்துவமனையில் காண்பிப்பதற்காக நிறுத்தியிருக்கிறான் என்று இப்போது புரிந்தது. தன் மகவு உயிருக்கு போராட, மற்றொரு குழந்தை ஏன் பிறந்தோம்?, ஏன் இறந்தோம்? என்று எதுவும் தெரியாது பூமியின் வாசமறிய மண்ணுக்குள் சென்றிருக்க, எல்லாவற்றிற்கும் அழுது துடித்த அஸ்வத்தின் உள்ளம் அன்று எத்தனைக்கு சிதைந்திருக்கக் கூடும் என்று நினைத்து வருந்தினாள். 

அன்று அவனின் சிதைந்த உள்ளம் இவளின் ஆன்மாவுடன் அளவளாவியிருக்குமோ?! அதனால்தான் இவளும் அன்று ஸ்கார்பியோ சென்ற தடம் பார்த்து நெஞ்சம் வெதும்பிக் கிடந்தாளோ?!

எப்படியோ! அன்று அவனைத் தேற்றிவிட தனக்கொரு வாய்ப்பு தந்தமைக்காக மானசீகமாகப் பரம்பொருளிடம் நன்றியுரைத்தாள்.

அவனிடம் மெதுவாகக் கேட்டாள். “அப்புறம்… பேபியை ஹாஸ்பிடல்ல காட்டினீங்களா?”

“ம்ம்!” என்றான் புருவச் சுளிப்பில் வேதனைமுடிச்சுடன்! மீண்டும் கண்ணீர் வரப் பார்த்தது. “அவங்க பார்த்துட்டு…”

அம்ருதா இம்முறை தயங்கிக் கொண்டிராமல் அவன் தோளில் ஆதரவாகக் கை வைக்க, அஸ்வத் அந்தக் கையை அழுந்தப் பிடித்துக்கொண்டு தலைத் தாழ்த்தி, கண்மூடி நின்று துக்கக் குரலில் சொன்னான். “என்… எம்… பொண்ணு என்னை விட்டுப் போய்… டிவெண்ட்டி மினிட்ஸ் ஆச்சுன்னு சொன்னாங்க… உடம்புக்கு என்ன பண்ணுச்சுன்னு கேட்டப்போ… எனக்கு டக்குன்னு என்ன பொய் சொல்றதுன்னு தெரியல. 

கொஞ்சம் முந்தி அங்கே ஒரு பேஷண்ட் பாப்பாவுக்கு வைரல் நிமோனியான்னு பேசிட்டு இருந்ததை வச்சு, நானும் அதே காரணத்தைச் சொல்லிட்டு அங்கே உள்ள ஃபார்மாலிடீஸ் முடிச்சிட்டு வந்தேன். என்னால அதுக்கு மேல டிரைவ் பண்ண முடியல டாக்டர். அதனாலதான் அந்த காட்டுக்குள்ளே வண்டியை விட்டேன்.” என்றவன், 

நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். “அன்னிக்கு உங்களைப் பார்க்கலன்னா கார்ல அம்முவோட சேர்த்து என்னையும் எரிச்சிட்டு இறந்திருப்பேன்.”

“அஸ்வத்!” என்றிவள் விழியுருட்டி பிடித்திருந்தத் தோளை அழுத்தினாள். 

அந்த நேர தனிமை அவனின் மனநிலையை மூர்க்கமாக்கி இருந்ததை இவளும் பார்த்தாளே! அதனாலல்லவா அவன் போகச் சொன்னபோது மனம் கேளாமல் அங்கேயே நேரத்தை நீட்டித்தாள்!

“எஸ்! இந்த பிறவிக்கும் கடைசியா எனக்குன்னு இருந்த ஒரு ஜீவன் அவ மட்டும்தான்! அவளே இல்லாதப்போ எனக்கு மட்டும் இந்த லைஃப் எதுக்குன்னு தோணுச்சு. அந்த நேரத்தைக் கடக்க முடியாம நெஞ்செல்லாம் வலிச்சது டாக்டர். நீங்க வந்து பேபியை ஐஸ் பாக்ஸ் கூட இல்லாம இப்டி வச்சிட்டிருக்க கூடாதுன்னு சொன்னப்புறம் தான் ஸ்மரணையே வந்தது. அவளுக்கு செய்ய வேண்டிய கடைசி கடமையாவது உருப்படியா செய்யணும். அதோட அவனுங்களையும் கண்டுபிடிச்சு கொல்லணும்ன்ற வெறில அங்கேயிருந்து கிளம்பினேன்.” என்று அம்ருவை ஒரு பார்வை பார்த்தவன்,

அவள் கையை மேலும் அழுத்திக்கொண்டு ஸ்திரத்தன்மையுடன் சொன்னான். “ஒருத்தரையும் உயிரோட விட மாட்டேன் டாக்டர்!”

One ride. Two hearts. Too many secrets...

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)