ஸ்கார்பியோ காதல் - 14.1

அத்தியாயம் 14.1
அஸ்வத் அடுத்து என்ன சொல்ல போகிறானென்று உள்ளூர பிறந்த ஆர்வத்துடன் அம்ருதா அவன் முகத்தையே பார்த்திருக்க, அவன் சொன்னான்.
“போலீஸ்க்கு போய் விலாவாரியா சொல்லி கம்ப்ளெய்ண்ட் பண்ண டைம் இல்ல. ஸோ அவ விட்டுட்டு போயிருந்த… ஐ மீன் அவளோட பழைய மொபைலைக் கொஞ்சம் நோண்டினேன். டெலிடட் மெசேஜஸ், நம்பர்ஸ் எல்லாத்தையும் க்ளௌட் பேக்கப் மூலமா ரெகவர் செஞ்சேன். நான் ஹெல்ப் கேட்டிருந்த டிடெக்டிவ் ஆளும் வந்துட்டான். அவன்தான் அதுல இருந்து நாலஞ்சு நம்பர்ஸ் எடுத்தான். அப்புறம் போர்ட்டபிள் டிராக்கிங் டிவைஸ் வச்சு அந்த நம்பர்ஸோட சிக்னல் ஃபாலோ பண்ணினான். சிக்னல் ஹேண்ட்ஓவர் லாக்ல ஒரு நம்பர் மட்டும் சென்னை தாண்டி பெங்களூர் திசைப்பக்கம் மூவ் ஆகிட்டு இருந்தது. நல்லவேளை அவனுக்கு ஆபரேட்டர்ல தெரிஞ்சவர் இருந்ததுனால அவர் மூலமா டவர்-லாக் க்ராஸ் செக் பண்ணி கன்ஃபர்ம்’ன்னு சொல்லவும் உடனே கிளம்பிட்டேன். அப்டித்தான் அவளை ஃபாலோ பண்ணி போனேன்.”
கண்மூடிக் கொண்டான் அஸ்வத். அன்று நடந்ததெல்லாம் விழித்திரைக்குள் காட்சியாக விரிந்தது.
“ரோட் வழியா தான் போறாங்க. சோ வெகிகிள் கார், பஸ், வேன்னு எதுவாகவும் இருக்கலாம். ஆனா ரொம்ப தூரம் போயிடுச்சு சர். மேபீ பாப்பாவைக் காலைல பதினோரு மணிக்கே ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு போயிருக்கணும். இப்போ அவங்க அங்கே நிறுத்தினா கூட நீங்க ஆளை மிஸ் பண்றதுக்கு சான்ஸ் இருக்குது. உங்களுக்கு பேங்களூர் பக்கம் தெரிஞ்சவங்க யாரும் இருந்தா இப்பவே அலர்ட் பண்ணி அந்தப் பக்கம் இருந்து வர சொல்லுங்க.” என்றான் அஸ்வத்திற்கு உதவிய டிடெக்டிவ் வேந்தன்!
கதவைப் பூட்டிவிட்டு ஸ்கார்பியோவை உயிர்ப்பித்தவன் துரிதமாக சொன்னான். “தேவையில்ல வேந்தன். எவ்ளோ தூரம்னாலும் அவ போற வண்டி பேங்களூர் போய் சேருறதுக்குள்ள நான் பிடிச்சிடுவேன். நீங்க லைன்ல இருந்து லொகேஷன் மட்டும் சொல்லுங்க. அதுக்கு முன்னாடியே நின்னாலும் கூட பிடிச்சிடலாம். அப்புறம் ஒரு சின்ன ஹெல்ப்! அவளைப் பிடிச்சு உண்மையை வாங்கிட்டு சொல்றேன். அப்புறம் போலீஸ்க்கு போனா போதும். அதுவரைக்கும்…”
“பிரச்சினை இல்ல சர். எங்க ஏஜென்ஸில கிளையண்ட் நாலெட்ஜ் இல்லாம போலீஸ்க்கு போகமாட்டோம்.”
வேந்தன் உறுதியளித்த பின்னர் ரேவதி சென்று கொண்டிருந்த வாகனத்தை அவன் உதவியுடன் பின்தொடர்ந்தான் அஸ்வத்.
பாதி தூரம் சென்று கொண்டிருக்கும்போதே அஸ்வத்தின் மகிழுந்து இயக்கும் திறமையில் மிரண்டு எச்சரித்தான் வேந்தன். “சர், ஐ திங்க் யூ ஆர் புஷ்ஷிங் இட் டூ ஹார்ட். ப்ளீஸ் ஸ்லோ டௌன்!”
“ஐ’ம் ஓகே வேந்தன். எங்க கம்பெனில என் டிரைவிங் ஸ்கில் பார்த்துதான் வேலையே அஸைன் பண்ணானுங்க.”
அதன்பின் இருவருக்குமான இரண்டு மணி நேரங்கள் பாதைகள் பற்றிய உரையாடல்களே தொடர்ந்தது. நான்கு மணி வெயிலில் வானம் எரிந்துகொண்டிருக்க, தார்ச்சாலையில் கானல் நீர் விளையாடி கொண்டிருந்த தருணத்தில், ரேவதி செல்லும் வாகனத்தைச் சமீபித்திருந்தான் அஸ்வத்.
“சர், தட்’ஸ் இட்! யூ’வ் ரீச்ட் தெம்!” என்ற வேந்தனின் வெற்றிக் குரலில்,
தனக்கு முன்னே, அருகே செல்லும் வாகனங்களைப் பார்த்தான். “எது வேந்தன்?” எனக் கண்களால் துழாவிக்கொண்டே கேட்டவனுக்கு, வலதுபுறம் சற்று முன்னே செல்லும் மகிழுந்தில் பின்புற கண்ணாடி வழியாக ரேவதியின் தலைத் தெரிந்ததில், “பார்த்துட்டேன் வேந்தன். இனி தேவைன்னா கூப்பிடறேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கண்களில் வேட்டையாடும் வெறி மினுமினுக்க மகிழுந்தின் வேகத்தைக் குறைத்துப் பதுங்கினான். அதில் தான் தன் மகள் இருக்கிறாள் என்று உள்ளம் அடித்துக்கொள்ள, அந்த வாகனத்தை எப்படி ஓரம் கட்டித் தடுப்பதென்று பார்த்தான்.
அந்த முன் மாலை வெயிலில் சாலையில் அதிக வாகனங்கள் இல்லை. முன்னால் பல அடி தூரத்தில் ஒன்று, மிக அருகில் ஒன்று, அடுத்து ரேவதி செல்லும் வாகனம் தான்! அதனைத் தடாலடியாக முன்னே சென்று நிறுத்தலாம். ஆனால் அதில் தன் மகளுடன் ரேவதியின் குழந்தையும் கூட இருக்கலாம். அதனால் தற்போதைக்கு நிறுத்த நினைக்காமல் பொறுமையாக அதன் பின்னால் சென்றான்.
ஆனால் ரேவதி பக்கவாட்டு கண்ணாடி வழியாக அஸ்வத்தின் ஸ்கார்பியோவை அடையாளம் கண்டுவிட்டாள் என்று, அந்த வாகனம் வேகத்தை அதிகரிப்பதிலிருந்து தெரிந்தது. அஸ்வத் அனாயசமாக அதனைக் குறி வைத்து நகர்ந்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் ஓசூர் எல்லையிலேயே வளைந்து திரும்பி வேறு பாதைக்கு நகர்ந்த மகிழுந்து புறநகர்ப் பகுதியில் இருந்த கட்டிடம் ஒன்றின் முன்னால் நின்றது. ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான கட்டிடங்கள் முளைத்திருக்க, ரேவதியின் மகிழுந்து நின்ற இடம் சிறிய வில்லாவாக இருந்தது. புதிதாக கட்டப்பட்டிருந்த வீட்டின் வெளியே கட்டுமான கழிவுப் பொருட்கள் குவிந்திருந்தன.
ஒடிசலான தேகத்துடன் இருந்த ஒருவன், ஓட்டுநர் இருக்கையிலிருந்து அவசரமாக இறங்கினான். அவனுக்கும் முன்பே அஸ்வத் இறங்கியிருந்தான்.
தன் மேல் பாயக் காத்திருக்கும் அஸ்வத்தைப் பார்த்தபடி, அவனுக்கு மறைத்தாற் போல் நின்றுகொண்டு பின்னிருக்கையின் கதவைத் திறந்தான் அந்த ஓட்டுநர். “சீக்கிரம்!”
உள்ளே தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் ரேவதியையும் தவிர வேறு யாரும் இல்லை. ரேவதியால் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சடுதியில் இறங்க முடியவில்லை. அத்துடன் அஸ்வத்தை நினைத்து அச்சம் வேறு! கீழே இறங்கினால் தன்னைக் கொன்றுவிடுவான் என்று புத்தி அறைந்து சொல்லியது.
தொண்டைக்குள் நின்று துடித்த பயத்தை அழுகையுடன் விழுங்கப் பார்த்து அப்படியே இருக்க, “எவ்ளோ நேரம்?” என்று சீறினான் அவன்.
அவன் ரேவதியை நோக்கித் திரும்பிய அந்த அரைநொடியில் அவனை ஓங்கி அறைந்த அஸ்வத், அவனின் பிடறியை மகிழுந்துடன் சேர்த்து அழுத்தினான்.
“ம்ஹ்ம்ம்… ஹ்ம்ம்!!” அவனின் திமிறி உதறிய உடலைப் பேரச்சத்துடன் பார்த்த ரேவதி விருட்டென இறங்கினாள். “எனக்கு எதுவும் தெரியாது அஸ்வத். இவங்க தான் என் குழந்தையைக் கொன்னுடுவேன்னு பயமுறுத்தி அம்முவைக் கொண்டுவர சொன்னாங்க. நிஜமா எனக்கு எதுவும் தெரியாது.”
பேசிக்கொண்டே கையிலிருந்த சிறு கத்தியால் அஸ்வத்தின் நெஞ்சில் கீறிவிட்டு தள்ளி நின்றாள். ஆனால் தன் கையில் திமிறிக் கொண்டிருந்தவனை மீண்டும் மீண்டும் மகிழுந்தின் மேல் தலையை மோதி மயங்கச் செய்த அஸ்வத்திடம் அத்துணை நிதானம்! நெஞ்சில் கசிந்த குருதியை அவனின் டெனிம் ஷர்ட் உறிஞ்சிக்கொண்டது.
கண்கள் வேட்டையாடும் புலியாய் ரேவதியை விட்டு நகரவில்லை. தன்னுடன் வந்தவன் குருதி வழிய மயங்கி விழுந்ததும் அரண்டு போனாள் ரேவதி.
‘தன் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடலாமா? தன்னை விட அஸ்வத் நன்றாகவே பார்த்துக் கொள்வான்.’ என்றெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, “எனக்கு எதுவும் தெரியாது. என்னை அவங்க பயமுறுத்தினாங்க.” என்று உடல் உதற உளறியபடி கத்தியை அங்கேயே விட்டுவிட்டு பின்னால் நகர்ந்தாள்.
சட்டென பாய்ந்து அவள் முடியைக் கொத்தாகப் பற்றியவன், “என்ன ப்ளானோட என் வீட்டுக்குள்ளே வந்த? என் அம்முவை என்ன செஞ்ச? இவன் யாரு? இது என்ன இடம்? ஒண்ணு விடாம இப்போ சொல்ற!” என்று சிவந்த கண்களுடன் கர்ஜிக்க,
மாலை மாலையாய்க் கண்ணீர் ஊற்றினாள் அவள். “ப்ளான் பண்ணிட்டு வரல அஸ்வத். நிஜமாவே போக்கிடம் இல்லாம தான் வந்தேன். எப்பவும் அம்முவை கஷ்டப்படுத்த நினைச்சதில்ல. அவளும் நான் பெத்த குழந்தை தானே?”
“அப்டி நினைச்சிருந்தா அவளைக் கொல்ல நினைச்சிருப்பியாடீ?”
“இல்ல இல்ல! நான் கொல்ல நினைக்கல. இவங்க பீரியாட்ரிக்ஷன் தான். புதுசா ஏதோ மருந்து பத்தி ரிசர்ச் பண்றதா சொல்லி என் குழந்தையைக் கேட்டாங்க. ரெண்டு மாச குழந்தையை எப்டி கொடுக்கறது? அதான் அம்முவை… நான் எந்த தப்பும் செய்யல அஸ்வத்!”
அஸ்வத்திற்கு அவள் சொன்னதைக் கிரகிக்கவே சற்று நேரம் பிடித்தது. “ரிசர்ச்?”
அவன் அதிர்ந்து நின்ற சில கணங்களைப் பயன்படுத்திச் சடுதியில் அவன் கையிலிருந்து விடுபட்டு மகிழுந்தின் உள்ளே போய் அமர்ந்துகொண்டு, அம்முவைப் பிய்ந்து போன பொம்மையைப் போல் இழுத்து மடியில் வைத்தாள்.
பதறிப்போனான் அஸ்வத். “குழந்தையை என்னடி செஞ்ச? ஏன் முழிக்க மாட்டேங்கறா?”
“பதறாதே! லாங் டிரைவ்ல தொந்தரவா இருக்கக்கூடாதுன்னு தூக்க மருந்துதான் கொடுத்திருக்கேன். ஆனா இப்போ நீ கிட்ட வந்த…”
வந்த கோபத்தில் அஸ்வத் அவளைக் கொன்றுவிடும் உத்தேசத்தில் நெருங்கிட, ஆங்காரமாய் இரைந்தாள் ரேவதி. “கிட்ட வராதே சொன்னேன்! ஒரு அடி எடுத்து வச்சாலும் உன் பொண்ணை நீ பொணமா தான் பார்ப்ப! ஹெவி டோஸேஜ்ன்னு சொன்னான் அந்தாளு! மொத்தத்தையும் ஏத்திடுவேன்.”
அப்போதுதான் கவனித்தான் அவள் கையிலிருந்த மருந்து நிறைந்த சிரிஞ்சை! ரேவதி அஸ்வத்தைக் கண்டவுடனேயே அந்த மருந்துகள் அடங்கிய சிறிய பையைப் பாதுகாப்பிற்காக கையில் எடுத்திருந்தாள். அதில்தான் கத்தியும் வைத்திருந்தாள்.
இவன் அவளைப் பற்றியிருந்த போது தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையிலிருந்து அந்த ஊசியை எடுத்திருக்க வேண்டும். அதனைக் குழந்தையின் கழுத்தினருகே குத்துவதைப் போல் பிடித்திருந்தாள்.
To be continued 👇...
Comments
Post a Comment