Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 16

ஸ்கார்பியோ காதல்

  அத்தியாயம் 16


விமான நிலையம் அருகே சாலையில் ஓரமாக கோபத்துடன் நின்றிருந்தது, அஸ்வத்தின் ஸ்கார்பியோ!

தன்னருகே இருந்த அம்ருதாவை இமைக்காமல் பார்த்தான் அஸ்வத். அவனைத் தன் கோபப் பார்வையால் நனைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

“பொறுமையா இருக்க வேண்டிய நேரம் இது! இப்டி எடுத்தோம் கவிழ்த்தோம்னு அவசரப்பட வேணாம் அஸ்வத்!”

நெடுமூச்சுடன் முகத்தை இரு கைகளாலும் அழுந்தத் தேய்த்து, தலையைக் கோதி, பிடறியைக் கட்டிக்கொண்டு கழுத்தைத் திருப்பி அவளை அழுத்தமாகப் பார்த்தான். “என் இடத்துல இருந்து யோசிங்க டாக்டர்! ஆள் யாருன்னு தெரிஞ்சப்புறம் நான் இவ்ளோ பொறுமையா இருக்கறதே பெரிய விஷயம்!”

உணர்ச்சி வசப்பட்டிருப்பவனைக் கட்டுப்படுத்தினாள். “ப்ச் புரியுதுங்க சர்! ஆனா இன்னொருத்தனையும் கண்டுபிடிக்கணும் இல்ல? இப்போ நமக்கு இருக்க துருப்புச் சீட்டு இவ தானே? அதையும் 
கிழிச்சு போட்டுட்டா அடுத்த ஆளை எப்டி கண்டுபிடிப்பீங்க?” 

“டாக்டர்!” என செய்வதறியாத பிள்ளை போல் தன்னைப் பரிதாபமாக பார்ப்பவனைக் கண்டு இவளுக்கு அவனைத் தேற்றச் சொல்லி உள்ளம் வருந்தியது. 

மாலையில் தன் தோழி லேகாவைக் காணச் சென்ற அம்ருதாவை ஆர்பாட்டமாக வரவேற்றாள் அவள். சிறிது நேர பொதுவான பேச்சுக்களைத் தொடர்ந்து அம்ருதா வந்த காரியத்தைச் செயல்படுத்த நினைத்து மெல்ல அந்த தாரகேஷைப் பற்றி விசாரிக்க, 

“ஓ அவனா? யூ நோ அப்போலாம் நம்ம சம்யுக்தாவோட க்ரஷ் அவன்! கான்வோகேஷன் முடிஞ்ச அன்னிக்கு அவனுக்கு ப்ரபோஸ் பண்ணான்னு கூட கேள்விப்பட்டேன். ஹாஹா… இப்போ நினைச்சா சிரிப்பா இருக்குது. இப்போ ரெண்டும் என்ன பண்ணுதுகளோ!” என்று லேகா மலரும் நினைவுகளில் மூழ்கினாள்.

“சம்யூவோட க்ரஷ்ஷா? நம்பவே முடியல. ஒருவேளை இன்னமும் ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டுதான் இருக்காங்களா?”

“தெரியலடி. எனக்கும் இப்போ நீ சொன்னதுக்கப்புறம் க்யூரியஸா இருக்குது. இரு, அவகிட்டேயே கேட்போம்.” என்ற லேகா மற்றொரு தோழிக்கு அழைத்துக் கேட்க, அவள் சொன்ன செய்தியில் உறைந்துவிட்டாள். 

தாரகேஷ் இனி இவ்வுலகில் இல்லை என்றிருந்தாள் சம்யுக்தா. அழைப்பு ஸ்பீக்கரில் இருந்ததால் அவள் சொன்னது அம்ருதாவுக்கும் கேட்டது.

“லேக்! லைன்ல இருக்கியா மச்சான்?”

“ஹான்! எப்டி சம்யூ?” தன்னைப் போலவே அதிர்ச்சியில் ஸ்தம்பித்திருக்கும் அம்ருவைப் பார்த்தபடி கேட்டாள் லேகா.

“ப்ச் எப்டியோ! இப்போ ஏன் அவனைப் பத்தின பேச்சு?”

“அது… நம்ம அம்ரு இல்ல? அவளோட ரிசர்ச் சம்பந்தமா பேசிட்டு இருந்தா… தாரகேஷ் கூட டாக்ஸிக் சப்ஸ்டான்ஸ் கேஸஸ் பத்தி தெரிஞ்சவன் தானேன்னு சொல்லிட்டு இருந்தா? அதான் அவனோட ஹெல்ப் கேட்கலாமேன்னு நினைச்சோம்.” 

“அவளுக்கு வேற ஆளே கிடைக்கலயாடீ? போயும் போயும் ஒரு பொறுக்கி கிட்ட தானா ஹெல்ப் கேட்கணும்?” 

“என்ன சம்யூ இப்டிலாம் பேசற? அவன் உன் லவர் தானே?”

“மை ஃபூட்! யாருடி உங்களுக்கு இப்டிலாம் சொன்னா? நீங்களா கற்பனை பண்ணி என் பேரைக் கெடுப்பீங்களா?” என்ற சம்யுக்தா மேலும் கோபம் கொண்டு இரைய, அம்ருதா கண்ணைக் காட்டியதில், லேகா சம்யூவை அமைதிபடுத்தினாள்.

“ஸாரி ஸாரி மச்சி… ஒரு காலத்துல நீ அவனை க்ரஷ்ன்னு சொன்னதை வச்சு நான் அப்டி கேட்டுட்டேன். மன்னிச்சிடு! ஆனா இன்னுமே நீ சொன்னது எனக்கு ஷாக்’ஆ இருக்குது. எப்டி அவன்…”

“ஆமாடா! கேட்டப்போ எனக்கும் ஷாக் தான்! அந்த நாய் எங்கே ஊர் மேய போச்சோ! நீ சொன்ன தானே காலேஜ் டைம்ல எனக்கு அவன் மேல க்ரஷ்ன்னு… அது உண்மைதான்! ஆனா எப்போ அவன் ஒரு வுமனைஸர்ன்னு தெரிஞ்சதோ அப்பவே வெறுத்துட்டேன்.” என்ற சம்யுக்தா, தாங்கள் நினைத்ததை விட தாரகேஷ் பெரும் பணபலம் படைத்தவன் என்றும் பல பெண்களை நாசம் செய்து பணத்தால் அவர்கள் வாயை அடைத்திருக்கிறான் என்றும் சொன்னாள்.

“மெடிக்கல் ரிசர்ச் சைட்ல கூட அவனுக்கு நிறைய ஆளுங்கள தெரியும். ஓசூர்ல அவனுக்காக அவங்கப்பா சீக்ரெட்டா ஒரு லேப்’ஏ கட்டிக் கொடுத்திருக்காராம். இந்த நாய் அதை வேறு எதுக்கோ யூஸ் பண்ணிருக்குது. கார்ல ஒரு பொண்ணைக் கூட்டிட்டுப் போய் என்ன செஞ்சானோ தெரியல. அந்த பில்டிங்க்கு வெளியேவே செத்து கிடந்திருக்கான். அவ தான் கார்ல அடிச்சு போட்டுட்டு போயிருக்கான்னு சொல்றாங்க!” அவள் சொல்ல சொல்ல அம்ருவின் விழிகள் விரிந்தன.

“என்னடி இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்குது. எனக்கு தெரியவேயில்ல?”

“யாருக்கும் தெரியாது. அவன் இல்லீகலா ஏதோ செஞ்சிருக்கணும் லேகா. அதான் விஷயம் வெளியே தெரியாம மூடி மறைச்சிட்டார் அவங்கப்பா! எனக்கே இன்னும் முழுசா தெரியாது. உன்னை மாதிரி நான் அவனோட லவர்னு நினைச்சு ஒரு சிலர் அரைகுறையா என்கிட்ட சொன்னாங்க. அதனாலதான் நீயும் அதேமாதிரி கேட்கவும் கடுப்புல திட்டிட்டேன். ஸாரி மச்சான்!”

“பரவால்லடா… இப்போ அம்ரு கேட்டா என்ன சொல்றது?”

“எனக்கு தெரியல லேக். அந்த நாய் பொம்பளை விஷயத்துல தான் மோசம். அதர்வைஸ் ஹி இஸ் எக்ஸ்ட்ரீம்லி ஸ்மார்ட். தட்’ஸ் வை அம்ருவும் அவனோட கைடன்ஸ் கேட்க நினைச்சிருக்கா போல… ம்ம்… நான் வேற யார்க்கிட்டேயாவது கேட்கறேன். அவளையும் வேற இடத்துல ட்ரைப் பண்ண சொல்லு.” என்றிட, மீண்டும் ஒருமுறை அவளிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு வைத்தாள் லேகா.

“எப்பவோ நடந்ததை வச்சு ஒருத்தரை தப்பா புரிஞ்சிக்கிட்டு, லைஃப் ஃபுல்லா அவங்களைப் பத்தின உண்மை தெரியாம ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்லயே இருந்துடறோம், இல்ல அம்ரு?” என்றொரு வருத்தமூச்சு எழுந்தது லேகாவிடம்!

“உண்மைதான்! சரி நீ ஃபீல் பண்ணாதே! அதான் இப்போ சம்யூ கிட்ட பேசி புரிஞ்சுக்கிட்டோமே… நானும் அப்புறமா அவகிட்ட பேசறேன்.” என்றவளுக்கு தோழியுடன் இன்னும் சிறிது நேரம் அளவளாவிட ஆசையிருந்தது. ஆனால் வெளியே அஸ்வத் காத்திருப்பதால், “டைமாகிடுச்சு லேக்! கிளம்பறேன். அண்ணா வேற ஊர்ல இல்ல. சீக்கிரம் போகணும்.” என்றாள்.

“ஆமா, உங்கண்ணா எனக்கு சான்ஸ் தராம போயிட்டார் பார்த்தியா? போடி அவர்கிட்ட நான் கோவிச்சுக்கிட்டேன்னு சொல்லு.”

“ஹஹ்ஹஹ… அந்தப் பொடிடப்பிக்கு குச்சி மிட்டாய் வாங்கிக் கொடுன்னு சொல்லுவான். ஹாஹா…”

“நான் வளர்ந்துட்டேன். இப்போ நான் ஒரு டாக்டர்ன்னு சொல்லுடி.” என்ற லேகா கையை உதறி சிணுங்கினாள்.

“ஹாஹா… சொல்றேன் மச்சான். எங்க அண்ணி இருக்கும்போது சொல்றேன்.”

“ம்க்கும்!” என்று லேகா உதட்டைக் கோணிக் கொண்டிருக்கையிலேயே, சம்யுக்தா மீண்டும் அழைத்தாள். 

“லேக்! என் ஃப்ரெண்ட் பிருந்தா கிட்ட கேட்டேன். அவ லேப் அனலிஸ்ட்டா இருக்கற ஒரு பொண்ணை சஜஸ்ட் பண்ணிருக்கா! உனக்கு கூட தெரிஞ்சிருக்கலாம். அவளும் தாரகேஷ் ஃப்ரெண்ட் தான்! அவனைத் தேடி அடிக்கடி நம்ம காலேஜ்க்கு வருவா! பேரு கோகிலலக்ஷ்மி.” என்றிட, 

அதுவரை அசட்டையாக இருந்த அம்ருவின் விழிகளும் செவிகளும் கூர்மையடைய, அனிச்சையாக அவளுதடுகள் ‘கோக்!’ என்று அசைந்தன.

“ஹ்ம்ம்… சில சமயம் அவளைத் தாரகேஷ் கூட பார்த்திருக்கேன்.” - லேகா.

“அவளேதான்! உனக்கு அவளோட கான்டாக்ட் ஷேர் பண்ணிருக்கேன், பார்த்துக்கோ!”

சம்யுக்தாவிற்கு நன்றியுரைத்துவிட்டு வைத்தவள் அம்ருதாவை ஏறிட்டாள். “சம்யூ அனுப்பின கான்டாக்ட் உனக்கு ஃபார்வர்ட் பண்றேன் அம்ரு. ஆல் தி வெரி பெஸ்ட் ஃபார் யோர் ஃப்யூச்சர் ப்ளான்ஸ்!”

“தாங்க்ஸ் லேக்!”

“எப்டி போற? என் ஆளு வேற ஊர்ல இல்லன்னு சொல்ற? நான் டிராப் பண்ணவா?” என்றவாறு எழுந்தவளைத் தடுத்து,

“ஆல்ரெடி கேப் புக் பண்ணிட்டேன் மச்சி. பார்க்கலாம், பை!” என்றவள் லேகாவிற்கு சந்தேகம் வராதவண்ணம் எழுந்து வந்துவிட்டாள்.

வெளியே கட்டிடத்தை விட்டு தள்ளி நின்றிருந்த அஸ்வத்தின் ஸ்கார்பியோவில் ஏறியவளிடம் சிறிது பதட்டம் தென்பட, அவளுக்கு ஏதோ தகவல் கிட்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அஸ்வத், மகிழுந்தை இயக்கியபடி கேட்டான். “என்னாச்சு டாக்டர்? அந்த தரு யாருன்னு தெரிஞ்சதா?”

“தரு இல்ல; தாரூ! தாரகேஷ்!”

“அவன்தானா? கன்ஃபர்ம் ஆகிடுச்சா?”

“ம்ம் எஸ்! அதோட அந்த கோக் யாருன்னு கூட தெரிஞ்சிடுச்சு. இப்போ அவளுக்குத்தான் பேசப் போறேன்.” என்று அலைபேசியில் லேகா அனுப்பியிருந்த கான்டாக்ட்டை எடுத்துப் பார்க்க,

“யாரு டாக்டர்? எங்கே இருக்கா?” என படபடத்த அஸ்வத், மன எழுச்சியின் காரணமாக மகிழுந்தைத் தாறுமாறாக வளைத்தான்.

“சர்! ஸ்டாப் தி கார்!! அஸ்வத்!! காரை ஓரமா நிறுத்துங்கன்னு சொல்றேன்.” அடித்தொண்டையிலிருந்து குரலெழுப்பி அவனை நிதானப்படுத்தினாள் அம்ருதா.

அவள் தன் பெயரைச் சொல்லி இரைந்ததில் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தவன், மெதுவே மகிழுந்தை ஓரங்கட்டினான்.

“நீங்க இப்டி ஹைப்பர் ஆனீங்கன்னா நான் உங்ககிட்ட எதையும் சொல்லமாட்டேன் அஸ்வத்!”

அமைதியாக இருந்தான்.

“டேக் அ டீப் ப்ரீத்! கால்ம் யோர் மைண்ட்!”

அவளின் கட்டளைகளை அப்படியே பின்பற்றினான்.

“அஸ்வத்! இப்போ இதே மாதிரி நீங்க அமைதியா இருந்தீங்கன்னா நான் அந்த கோகிலா கிட்ட பேசறேன்.”

அஸ்வத் கருப்பு பட்டையில் ஆடம்பரமாக மிளிரும் ‘டைட்டன்’ அணிந்த தன் இடக்கையின் சுட்டு விரல்‌ உயர்த்தி உதட்டில் வைத்து, ‘அமைதியாக இருப்பேன்.’ என்று காண்பித்தான். 

அதில் கூட அவனின் ஆளுமை வெளிப்பட்டதில், உள்ளம் குமிழிடத் துவங்க அவனை இமைக்காது பார்த்தவள் சட்டென்று திரும்பிக்கொண்டு சொன்னாள். “அன்னிக்கு அந்த ரேவதி கூட கார்ல வந்தவன்தான் தாரகேஷ்!”

“வாட்?!”

அம்ருதா தலையசைத்தாள்.

அஸ்வத் மீண்டும் தன் அமைதியைக் கைவிட்டு, “ஸோ? ஒருத்தன் அவுட்டா?” என்று எகத்தாளமாக சிரித்தான். 

அவன் முகத்தில் அத்துணைப் பிரகாசம்; அப்படியோர் அசாத்திய பரவசம்!

அது அம்ருவின் முகத்தில் சிந்தனையைத் தோற்றுவித்தது. 

“எனக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு அன்னிக்கு ரேவ்ஸே முடிச்சு விட்டுட்டா போல! ஹஹ்ஹஹா…” அவன் கண்களில் நெருப்பாய்க் கொலைவெறி பிரதிபலிப்பதைக் கண்கூடாகப் பார்த்தாள். 

“தாங்க்ஸ் டாக்டர் அம்ருதா… தாங்க்யூ ஸோ மச்! நீங்க இல்லன்னா இவ்ளோ சீக்கிரத்துல எனக்கு இந்த நிம்மதி, இந்த ஆஸம் ஃபீல் கிடைச்சிருக்காது. ஹாஹா…” 

இத்தனை நாட்கள் அஸ்வத்தின் சொந்த விஷயத்தை அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தனக்குள்ளேயே ரகசியமாக வைத்திருந்த அம்ருதா, தற்போது அவனுக்காகவே கட்டாயமாக தன் அண்ணனின் உதவியை நாட வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள். 

இழப்பின் துயரத்தில் இருக்கும் அஸ்வத்தின் மன அமைதிக்காக, அவனை அண்ணனிடம் ஆலோசனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஏற்கனவே நினைத்திருந்தாள். ஆனால், தான் நினைத்ததை விடவும் அவனின் மனநிலை சீரற்று இருப்பதை இப்போதுதான் உணர்கிறாள்.

முதன்முதலில் ரேவதியின் அலைபேசியில் அந்த குழுவினரின் அரட்டைகளை வாசித்தபோது இவளுக்கும்தான் கொலைவெறி கோபம் வந்தது. ஆனால் அது அநியாயத்தைக் கண்டு அனைவருக்கும் இயல்பாக வரும் ஆத்திரம்! அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி மருத்துவ உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று நினைத்தாளே தவிர, உண்மையில் அவர்களின் உயிரை எடுக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

அன்று இவள் அவர்களைக் கொல்லவேண்டும் என்று ஆத்திரத்தில் சொல்ல, அதற்கு அஸ்வத், “கொன்னுடலாமா டாக்டர்?” என்று ஒருவித நிதானத்துடன் கேட்டது நினைவு வந்தது.

ஆக அஸ்வத், தன்னை அவனுடைய திட்டத்தில் ஒருத்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறான். நல்லது! அப்படியே அவனுக்கு இவள் உதவுவதாகவே அவன் நினைத்திருக்கட்டும். 

அண்ணன் வந்ததும் அவனிடம் பேசிவிட்டு மேற்கொண்டு நடப்பதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தவள், தற்போதைக்கு அஸ்வத் கோகிலலக்ஷ்மியைச் சந்திப்பதைத் தவிர்க்க நினைத்தாள்.

அதற்கு முதலில் அவன் தன்னை நம்ப வேண்டும். அதனால் அவன் முன்னேயே கோகிலாவிடம் பேச எண்ணினாள். “ஓகே உங்க எக்ஸைட்மென்ட்’அ குறைங்க சர். நான் இப்போ அவளுக்கு கால் பண்ணிட்டு எப்போ மீட் பண்ண முடியும்னு கேட்கறேன்.”

“இன்னும் அவகிட்ட என்ன பேச்சுவார்த்தை வேண்டிக்கிடக்குது? நீங்க அவ நம்பரை எனக்கு ஃபார்வர்ட் பண்ணுங்க டாக்டர். நான் பார்த்துக்கறேன்.”

“பார்த்து?”

“பார்த்து… பார்த்து போட்டு தள்ள வேண்டியதுதான்! அவ இருந்து இன்னும் எத்தனை உயிரைக் குடிக்கப் போறாளோ!”

“அஸ்வத்!” விழிகளில் கண்டிப்பு ஏறிட அவனை முறைத்தவள், “என்னை நீங்க நம்புறதா இருந்தா கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்…” என்றிட,

அவனும் அவளை முறைத்துவிட்டு முன்னால் இரவு நேர சாலையின் ஜொலிஜொலிப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, அம்ருதா அலைபேசியில் கோகிலலக்ஷ்மியை அழைத்தாள்.

தன்னை அவளிடம் அறிமுகம் செய்துகொண்டு, தான் மருந்துகள் குறித்த ஆராய்ச்சி செய்யும் குழுவில் உறுப்பினராக இருப்பதால் சில நடைமுறைகளுக்கு வழிகாட்டுதல் வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க, அஸ்வத் விழிகள் மூடி ஸ்டியரிங்கை இரு கரங்களால் இறுக்கினான். 

கோகிலாவிடம் பேசி அவளை நாளை நேரில் சந்திப்பதை உறுதிபடுத்திக் கொண்டு நிமிர்ந்தவள், அஸ்வத்திடமும் சொல்ல, தன் அமைதியைத் தூர எறிந்துவிட்டு மீண்டும் படபடத்தான்.

“அவகிட்ட பேசி என்ன ஆகப் போகுது டாக்டர்?”

இதற்கான எதிர்வினையைத் தான் இந்த அத்தியாயத்தின் முதலில் பார்த்தோம்.

அஸ்வத்தின் மனநிலை புரிந்ததும், அவன் கண்களில் தெரியும் நெருப்பை அண்ணன் வரும் வரையிலாவது தன் கைக்குள் அடக்கிக் கட்டுப்படுத்திட வேண்டுமென்று நினைத்தாள் அம்ருதா. 

தன் மனம் அவனுக்காக இளகுவதை வெளிக்காட்டாமல் கண்டிப்புடனே சொன்னாள். “நான் நாளைக்கு மார்னிங் ஓபி வார்ட் பார்க்கணும். மதியத்துக்கு மேல ஒரு சர்ஜரிக்கு அஸிஸ்ட் பண்ணனும். ஸோ ஈவ்னிங் ஏழு மணிக்கு தான் ஃப்ரீ ஆவேன். அவளும் அந்த டைம்க்கு தான் அப்பாய்ட்மெண்ட் கொடுத்திருக்கா! நானே அவளை நேர்ல பார்த்து பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்.”

“ஓகே! நீங்க தனியா போக வேணாம். நானும் வர்றேன்.”

“அய்யோ அஸ்வத்! நாங்க ஒரே ஃபீல்ட்ங்கற முறைல என்னால அவளை ஈஸியா அப்ரோச் பண்ண முடியும். மோர்ஓவர் ரேவதி விஷயத்துல அவ உங்களை இதுக்கு முந்தி பார்த்திருந்தா காரியமே கெட்டுப் போகும். புரிஞ்சுக்கோங்க சர்!”

“ஆனா அவளே ஒரு கேடி! அவளால உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துட்டா? நீங்க எனக்காக ரிஸ்க் எடுத்து போகும்போது நான் எப்டி சும்மா இருக்கறது?”

“உங்க பாசத்துல மெய் சிலிர்க்குது. அவ ஒண்ணும் பேயோ, சிங்கமோ இல்ல! அப்டியே இருந்தாலும் நான் உங்களுக்காக ரிஸ்க் எடுக்கல. தினமும் ராத்திரி கண்ணை மூடினா அத்துவான காட்டுக்குள்ள, இரத்தம் கொட்டிக் கிடக்கற பேபி முகம்தான் ஞாபகம் வருது. என்னால தூங்க முடியல! என் தூக்கம் எனக்கு முக்கியம். அதுக்காக மட்டும்தான் நான் ரிஸ்க் எடுக்கறேன். புரிஞ்சதா? நான் வர்றேன்.”

அவளை இறங்க விடாமல் சட்டென்று ஒரு அழுத்தத்துடன் அவள் கையைப் பிடித்திழுத்து, “ஓகே! நான் வரல; நீங்க மட்டும் போயிட்டு வாங்க. டோண்ட் ஆங்ரி வித் மீ டாக்டர். நானே வீட்ல விடறேன். ப்ளீஸ்!” என இருக்கைப் பட்டியைக் கண்ணால் காண்பிக்க, கோப முகத்துடனே அதனை அதற்குரிய பட்டையில் மாட்டிவிட்டு சாய்ந்தமர்ந்தாள்.

ஆழ்ந்த மூச்சுடன் ஸ்கார்பியோவை உயிர்ப்பித்து நகர்த்தினான். அம்ருதா வேண்டுமென்றே கண்களை மூடிக்கொண்டாள். அவள் முகத்தைப் பார்ப்பதும் சாலையைக் கவனித்து வாகனத்தைச் செலுத்துவதுமாக இருந்த அஸ்வத்தின் கையில் தற்சமயம் ஸ்கார்பியோ மிதவேகத்தில் மிழற்றியது.

நாளை தானும் உடன் வருவதாகச் சொல்லி, மீண்டும் ஆரம்பிக்கக் கூடாது என்றுதான் இந்த டாக்டர் பெண் வேண்டுமென்றே கண்களை மூடிக்கொண்டு தன்னோடான பேச்சைத் தவிர்க்கிறாள் என்று அஸ்வத்திற்கு புரிந்தது. ஆனால் அதனை ஏற்கத் தான் மனமில்லை.

ஏதேனும் பேசி அவளைத் தன்னைக் காணச் செய்யவேண்டும் என்ற உள்ளத்தின் உந்துதலில் அந்தக் கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு ஸ்கார்பியோ மாடல் கார்ன்னா ரொம்ப இஷ்டமா டாக்டர்?”

திடுக்கிட்டு விழித்தவள் அவனைப் பார்த்து திருதிருத்தாள். “ஏ ஏன் கேட்கிறீங்க?”

“இல்ல, என் காரைப் பார்க்கும்போதெல்லாம் உங்க கண்ல ஒரு ஸ்பார்க் தெரியுது. அதான் கேட்டேன்.”

“ஓ… ஆ ஆமா…” அவன்முன் இயல்பாக இருந்துவிட முயன்று தோற்றாள். ‘அத்துணை வெளிப்படையாகவா ஸ்கார்பியோவில் கண் வைத்தாய்?’ என அவள் தன்னையே கண்டித்துக் கொண்டிருக்க,

சாலையில் ஒரு கண் வைத்து, ‘ஏனிந்த பதற்றம்?’ எனும் விதமாக அவள் முகத்தையும் மூடி திறக்கும் விரல்களையும் பார்த்தான் அவன். 

இதுவரை இல்லாத அஸ்வத்தின் குறுகுறு பார்வை அவளைத் தழுவுவதில் அவளின் மொத்த அங்கங்களும், ‘நாங்கள் நாணமுறுகிறோம்.’ என்று கொட்டடித்துச் சொன்னது.

அவன் இதழ்களில் குறுஞ்சிரிப்பு படர்ந்தது. “டாக்டர் எதுக்கோ ப்ளஷ் ஆகற மாதிரி இருக்குது? ஒருவேளை ஈவ்னிங் பார்த்த உங்க கஸினோட ஃபேவரிட்டா இந்த ஸ்கார்பியோ?” என்று சரியான விடை சொல்லி, தவறான கேள்வியைக் கேட்டான்.

‘அவனுக்கு ஏன் பிடிக்கணும்?’ என்று தோன்றிட புரியாத பார்வையுடன் கேட்டாள். “என்ன?”

“அவர்தானே உங்க ஃபியான்ஸே?” அஸ்வத் அரிதானவொன்றைக் கண்டுபிடித்தாற் போல் பார்க்க,

சுர்ரென கோபமேறியது இவளுக்கு. மீண்டும் கடுகடுத்த முகத்துடன், “ஆமா!” என்றுவிட்டு ஜன்னல்புறம் திரும்பிக்கொண்டாள்.

அஸ்வத் அவளுக்கு உபயோகமாக இருக்கக்கூடும் என்றெண்ணி, மிகத் தீவிரமாக ‘pros and cons’ என்று சொல்லி ஸ்கார்பியோவின் சாதக, பாதகங்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்க, யாருக்கு வந்த விருந்தோ என்று தன்னைத் தொடரும் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்ருதா.

வீடு வந்ததும் இறங்கி நின்றவள், “ஐ ஹோப் நாளைக்கு என்னை ஃபாலோ பண்ண மாட்டீங்கன்னு!” என்றிட,

இந்தப் பெண் எத்தனைக்கு தன்னைக் கணிக்கிறாள் என்ற வியப்பு மேலோங்கியது அவனுக்கு. “வரல, போதுமா? பட் ஐ ட்டூ ஹோப் போயிட்டு வந்தப்புறம் எனக்கு கால் பண்ணுவீங்கன்னு!”

பதிலுரைக்காமல் அதே கடுகடுத்த முகத்துடனே திரும்பி நடந்துவிட்டாள் அம்ருதா.

Some paths never lead back 🚙...

Comments

  1. Annan kitta mulusa unmaiya solliru Amru. Etho bayangara danger la sikkika pora

    ReplyDelete

Post a Comment

Popular Posts 💫

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)

  யமுனா 💌 ராஜீவன் இரண்டாம் சந்திப்பு! அன்று சரஸ்வதி பூஜை! இங்கே இதெல்லாம் நாங்கள் நன்றாக கொண்டாடுவோம். அனைத்து அலுவலகங்களிலும் விஜயதசமியன்று புதுக் கணக்கு போடுவார்கள்.  வீட்டில் காலையில் இருந்தே வேலைகள் ஆரம்பித்துவிடும். வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்திலும் வேலைகள் ஜரூராக நடக்கும். அலுவலகத்தை சுத்தம் செய்வது முதல் சாயங்கால பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கி வைப்பது வரை அனைத்திற்கும் அலுவலக ஆட்களே பொறுப்பெடுத்துக் கொள்வர்.  வீட்டில் அம்மாவோடு சேர்ந்து நாங்களும் ஐந்து வகை சுண்டல், விளாம்பழ இனிப்பு, ஊற வைத்த பச்சரிசியில் சீனியும் எள்ளுமாய் கலந்து நைவேத்தியத்திற்காக செய்து எடுத்துக் கொள்வோம். மாலையில் அப்பாவின் அலுவலகம் போய் பூஜை முடித்து, செய்த பதார்த்தங்களை அலுவலக ஊழியர்களுக்கு பரிமாறி, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு என அந்நாள் அத்தனை நிறைவாய் முடியும். அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு பழங்கள், அரிசி பொரியோடு ஐந்து நாட்களுக்கான சம்பளமும் சேர்த்து தர, அவர்களின் முகங்களிலும் திருப்தியின் சாயல் கோடிட்டிருக்கும். அத்தோடு மறுநாள் விடுமுறையும் என்றால் கேட்கவும் வேண்டுமா? ஒவ...

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம்  வருடம் 2034 இடம்: பெங்களூரு. கடிகாரம் பிற்பகல் மூன்று மணி என்றுரைக்க, அதனை மறுத்த வானம் மாலை ஆறு மணி என ஏமாற்றியது. மேகங்கள் மேவிய வானிலையை விழிகளில் ரசனையேற்றிப் பார்த்திருந்தாள் சந்தனா. பிரபல துணிக்கடையையொட்டி, தமிழிலும் கன்னடத்திலும் ஸ்ருதி நாட்டிய நிருத்தயாலயா என்று எழுதியிருந்த கட்டிடத்தின் வெளிவாசலில் இருந்த மகிழம்பூ மரத்தினடியில் நின்றிருந்தாள்.  அவள் தனக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி காரை நிறுத்திவிட்டு இறங்காமல் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஏறக்குறைய ஐந்து நிமிடங்களாக அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.  தலைமுடியை இறுக்கமாகப் பின்னியிருந்தாள். அது ‘ஃப்ரென்ச் ப்ளாட்’ என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. காதில் பெரிய ஸ்டட்! கழுத்தில் ஒன்றுமில்லை. மகிழம்பூ மரத்தினடியில் தூய வெண்மையும் இளநீலமுமான உடையில், அடிக்கும் ஈரக்காற்றில் துப்பட்டா பறக்க நின்று, மேகங்களில் லயித்திருந்தவள் அவன் கண்களுக்கு ஓர் அழகிய மேகத்துணுக்காகவே தெரிந்தாள். அந்த அழகிய மேகத்தினுள் புதைந்துக்கொள்ளும் ஆசை வந்தது. ‘அழகா இர...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.