Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 23

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 23               


நேற்றைக்கு முந்தைய நாள்! 

ஹரிஷ் அவன் வீட்டிலிருந்து அதிக தொலைவிலிருந்த ஜிம் ஒன்றின் வெளியே தனது மகிழ்வுந்தில் அமர்ந்திருந்தான். அருகே இருபத்தாறு வயதில் வாட்டசாட்டமான உடலமைப்புடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவன்! இப்போதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று, முகம் கழுவியதில் காயாமல் ஆங்காங்கே ஒட்டியிருந்த நீர்த்துளிகளில் தெரிந்தது.

ஜன்னலில் தன்‌ பரந்த முதுகைச் சாய்த்து முழங்கையை இருக்கைப் பகுதியில் பதித்திருந்தவன் சொன்னான். “இந்த ரோலர் பொட்டட்டோக்காகவே செஞ்சு வந்த பிரச்சினை மாதிரி இருக்குது.”

அம்ருவை, ‘ரோலர் பொட்டட்டோ’ என்ற அடைமொழியுடன் பேசும் இவனை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அவளிடம், ‘கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டு வம்பிழுக்கும் அவளின் அத்தை மகன் தேவா. அஸ்வத் பார்த்த இரு முறையும் இவன் அங்ஙனமே பேசி வைத்ததில் அது உண்மையென்று நினைத்து, இவனைத்தான் அம்ருதா திருமணம் செய்ய போகிறாள் என்று நம்பிக் கொண்டிருக்கிறான் அஸ்வத்.

அம்ருதா அண்ணனிடம் அஸ்வத்தைப் பற்றிய அனைத்து விடயங்களையும் தெரிவித்த பின்னர், அவளை வசைபாடிய ஹரிஷ் விடயத்தைப் பகிர்ந்தது இந்த காவல்காரனிடம் தான்! ஆனால் அஸ்வத்தைப் பற்றி எல்லாம் சொல்லாமல், ‘விக்டிம்’ என்றும், ‘அவர் குழந்தை அம்முவோட பேஷண்ட்!’ என்றும் சொல்லி, அம்ருவின் வட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வேலைகள் நடக்கிறது என்று மட்டும் சொல்லியிருந்தான். அதன் பிறகு அலைபேசியில் அழைத்து தேவா சொன்ன செய்தி ஹரிஷின் மென்னியைத் திருகியது. 

“அத்தான், நீங்க சொன்ன இல்லீகல் ரிசர்ச் மேட்டர் உண்மைதான்! நான் எங்க டிசிபி கிட்ட பேசி, அவர் விஷயத்தைக் கமிஷனர் கிட்ட கொண்டு போயிட்டார். சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன்ல நிறைய விஷயம் தெரிய வந்திருக்குது.”

“என்னடா சொல்ற? நீ பேசற டோனே சரியில்ல?”

“விஷயத்தைக் கேளுங்க. அப்புறம் நீங்க உங்க செல்ல தொங்காச்சி கிட்ட பேசற டோனே வேற மாதிரி இருக்கும்.”

ஹரிஷ் மௌனிக்க, அவன் உள்ளம் படபடத்தது. ‘ஏன் இப்டி சொல்றான்?’

தேவா தொடர்ந்தான். “நீங்க சொன்ன கல்பிரிட் தாரகேஷோட அப்பா ஆளுங்கட்சி சர்க்கிள்ல பெரிய கை! யாருன்னு தெரியுமா? மிஸ்டர் சத்யநாதன்!”

“அவரா?!”

“ஆமா! அவர் திடீர்னு புள்ள செத்து போயிட்டான்னு சொன்னா விஷயமென்னனு தோண்டாம இருப்பாரா? தோண்டிருக்கார். அவருக்கு இன்ஸ்டன்ட்டா கிடைச்ச விஷயம் அவர் பையனோட கார் ஆக்ஸிடென்ட் கேஸ்! அதுல ஒரு பொண்ணும் கை குழந்தையும் இருந்திருக்காங்க. தன் பையனைப் பத்தி தெரிஞ்சவருக்கு விஷயம் சென்ஸிடிவ்ன்னும் புரிஞ்சிருக்குது. சோ அந்த கேஸ் வெளியே வராம பண்ணிட்டார். ஆனா அதை அப்டியே விட்டுடல! அந்த பொண்ணு யாரு? தாரகேஷ்க்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? அவ அவனுக்கு ஜஸ்ட் பெட் கம்பானியன் தானா? இல்ல வேற எதுவும் பிரச்சினையான்னு கிளறிருக்கார். ஏன்னா அவ கூட குழந்தையும் இருந்திருக்குதே?”

“அப்போ ரேவதி யாரு, என்னன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா?”

“ரேவதி? அப்போ உங்களுக்கு எல்லாமே தெரியும், அப்டித்தானே? உண்மையைச் சொல்லுங்க அத்தான். அம்ரு எப்டி இதுல போய் சிக்கினா?” என்று எதிர்கேள்வி கேட்டான் அவன்.

“ஏன் அம்ருவுக்கு என்ன?” ஹரிஷ் பதற,

“ஷ்ஷ்! முழுசா புரிஞ்சு பேசறீங்களா, புரியாம பேசறீங்களான்னு தெரியல. நேர்ல பேசலாம் அத்தான்.” என்ற தேவாவிடம், 

அது குறித்து நேரில் சந்தித்து பேசவே இப்பொழுது வந்துள்ளான் ஹரிஷ்.

“நீ என்ன ஃபோன்லயும் அம்முவுக்கு ஏதோ பிரச்சினைன்ற மாதிரியே பேசின?”

“முதல்ல இந்த விஷயம் உங்களுக்கு எப்டி தெரியும்ன்னு சொல்லுங்க! உண்மைலயே அந்த ஸ்கார்பியோ கை(guy)... ம்ம்… பேரு ஏதோ…”

“அஸ்வத்!”

“ஹான் அஸ்வத்! அவரோட குழந்தை அம்ருவோட பேஷண்ட் தானா?”

நெடுமூச்சொன்றிற்கு விடுதலையளித்த ஹரிஷ், அஸ்வத் - அம்ருதாவின் அறிமுகத்தையும், அதைத் தொடர்ந்த அவர்களின் சந்திப்பில் அஸ்வத்தின் கடந்த காலம் தெரிய வந்ததையும், அம்ரு அவனுக்கு உதவிட வேண்டி கோகிலாவைப் பார்க்க சென்றதையும் சொல்லி முடித்தான்.

“இதெல்லாம் எனக்கு முதல்லயே தெரிஞ்சிருந்தா இவளை அவனோட பேசவே விட்டிருக்க மாட்டேன். இடியட்!” திசைதிருப்பியை ஓங்கித் தட்டிப் பல்லைக் கடித்த ஹரிஷின் கோபத்தில், அஸ்வத் மற்றும் அம்ருதாவின் தோழமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கணித்துவிட்டான் காவல்காரனான தேவா!

அத்துடன் அம்ரு புதிதாய் அறிமுகமான அஸ்வத்திற்காக இத்துணை மெனக்கெட்டு வலிய உதவி புரிய சென்றிருக்கிறாள் எனில், அந்த அஸ்வத் அவளுக்கு எவ்வளவு முக்கியமானவனாக இருக்க வேண்டும் என்றும் புரிந்தது. 

“இப்போ சொல்லு! அம்முவுக்கு பிரச்சினை, ஆபத்துன்னு ஏதேதோ சொன்னியே என்னது அது?”

“ம்ம், அதான் அத்தான்! அந்தப் பையனோட ரிசர்ச்’காக புதுசா கட்டிருக்க பில்டிங் அது! இன்னும் உள் வேலை பாக்கி இருக்குது போலருக்குது. வேலை நடந்துட்டு இருந்த இடத்துல ஆளுங்களையும் ரெண்டு நாளைக்கு வர வேணாம்னு சொல்லிட்டானாம். கட்டிடம் கட்ட ஆரம்பிச்சதுல இருந்து சிசிடிவி அவன் கன்ட்ரோல்ல தான் இருந்திருக்குது. அன்னிக்கு அவன் வர்றதுனாலேயோ இல்ல பொண்ணைக் கூட்டிட்டு வர்றதுனாலேயோ, அவனே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேமராவ டிஸ்கனெக்ட் பண்ணிருக்கான். ஆனா அந்த தெருவோட எண்டிங்ல இருக்க பேப்பர் கம்பெனியோட சிசிடிவில ரேவதி வர்ற காருக்கு அடுத்து அஞ்சு நிமிஷத்துல இன்னொரு கார் வெளியே வர்றது தெரியுது. அதுதான் அஸ்வத்தோட க்ரீன் ஸ்கார்பியோ என்!”

அந்தப் பகுதியில் யாரிடமும் பச்சை நிற ஸ்கார்பியோ இல்லையென்று அறிந்ததைத் தொடர்ந்து அஸ்வத்தின் மகிழுந்து எண் குறிக்கப்பட்டு, அது தமிழ்நாட்டு எண் என்று தெரிந்திருக்கிறது. மேலும் அந்த ஸ்கார்பியோ எங்கிருந்து தாரகேஷின் மகிழுந்தைத் தொடர்ந்து வந்திருக்கிறது என்றறிய முற்படுகையில், அந்த ஊருக்கு முன்னதாக அரைமணி நேர தூரத்திலிருந்து தான் தொடர்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. 

தேவா சொடுக்கிட்டு காட்டினான். “டோல்கேட் சர்வலைன்ஸ் கேமரா மூலமா ஸ்கார்பியோவோட மொத்த ஜாதகத்தையும் தூக்கிட்டானுங்க. அதுக்கப்புறம் தீவிரமா மானிட்டர் பண்ணதுல தான் அந்த ஸ்கார்பியோ கையோட (guy) பேபியைத் தாரகேஷ் ரிசர்ச்க்கு யூஸ் பண்ணது தெரிஞ்சிருக்குது. அவரை ஃபாலோ பண்ணதுல சிலமுறை அவரோட நம்ம அம்ருவையும் பார்த்திருக்காங்க. ஆரம்பத்துல இவளைப் பெரிசா நினைக்கல. ஆனா எப்போ இவ தாரகேஷோட ஃப்ரெண்ட்’அ மீட் பண்ணி ரிசர்ச் பத்தி கேட்டாளோ அப்போவே இவளும் லிஸ்ட்ல வந்துட்டா!”

ஒருமுறை அம்ருதா அஸ்வத்துடன் உணவகத்திற்கு சென்றபோது, அங்கே இவளையே ஒருவன் பார்வையிட்டு கொண்டிருக்கிறானென்று உள்ளுக்குள் கடுகடுத்ததை நாம் அறிவோம். அவன் பார்வையிட்டது அவளை அல்ல; அஸ்வத்தை என்பது அவளுக்கு தெரியவில்லை. போலவே அவள் அஸ்வத் வீட்டிற்கு சென்று இறங்கியபோது, சந்தேகப்படும்படியாக ஒருவனை அஸ்வத் பார்த்து அவன் வாகன எண்ணை மனதில் குறித்துக் கொண்டதையும் நினைவுகூரலாம். ஆக, கோகிலாவைச் சந்தித்து வந்த பின்னர் அஸ்வத்துடன் சேர்த்து அம்ருதாவும் எதிர் தரப்பினரின் தீவிர கண்காணிப்பில் தான் இருக்கிறாள்.

“ம்ம்! ஃப்ர்ஸ்ட் டைம்க்கு அப்புறம் அந்த கோகிலா சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலன்னு சொன்னா!”

“எஸ்! அவங்க உஷார் ஆகிட்டாங்க. இந்த கோகிலா அப்புறம் அவளோட ஃப்ரெண்ட்… அவன் பேர் தன்வீர்! இவங்களுக்கு ஹெட் ஒருத்தன் இருக்கான். அவன் இவங்களோட சீஃப் இன்வெஸ்டிகேட்டர் பத்ரிநாத்! இந்த டீம்க்கு இன்னும் ரெண்டு அஸிஸ்டெண்ட்ஸ் இருக்காங்க. இவங்களுக்கு… அதாவது தாரகேஷோட ரிசர்ச்க்கு ஃபினான்ஷியலி ஹெல்ப் பண்றது அவனோட அப்பா சத்யநாதன். அதனால இப்போ சிக்கினா அந்த கேங்கோட சேர்ந்து அவரும் உள்ளே போக வேண்டி வரும். அவரோட பொலிடிகல் லைஃப் பாதிக்கும்.

ஸோ இப்போ எவிடென்ஸா இருக்கற அம்ருவையும் அஸ்வத்தையும் சும்மா விட்டுடுவாங்கன்னு சொல்ல முடியாது. அதோட போலீஸ் வந்தா என்ன மாதிரி ரியாக்ட் பண்ணனும்? எப்டி தங்களோட ரிஸர்ச் டேட்டாவை ஸேவ் பண்ணனும்னு டைம் தேவைப்படலாம். மோர்ஓவர் அம்ருவோ, அஸ்வத்தோ இப்போ வரை போலீஸ் கிட்ட போகல. அதனால கூட அவங்க சைலண்ட்டா இருக்கலாம். இதெல்லாம் நீங்க அஸ்வத்தைப் பத்தி சொன்னதைக் கேட்டப்புறம் என்னோட அனுமானம்தான். லெட்’ஸ் வெய்ட்!” என்றவன் ஹரிஷின் அமைதிக் கண்டு மேலும் சொன்னான்.

“இப்போ அவங்க ரிசர்ச் எந்தளவுக்கு வந்திருக்குதுன்னு தெரியல. தாரகேஷ் டெத்’க்கு அப்புறம் சட்டத்துக்கு பயந்து கை விட்டாங்களா? இல்ல, முடிக்க வேண்டிய ஸ்டேஜ்ல இருக்கறதை சக்ஸஸ் பண்ண நினைச்சு கன்டினியூ பண்றாங்களான்றது இன்னும் தெரியல. ஆனா அத்தான், சில்லறை கேஸ் பார்த்து போரடிச்சு போய் உட்கார்ந்திருந்தோம், இப்போ உங்களால பெரிய மேட்டர் சிக்கிருக்குது. கண்டிப்பா எங்க டிஸிபி இதை சும்மா விடமாட்டார்.”

“........." 

“என்னத்தான் யோசிக்கிறீங்க?”

“அம்முக்குட்டிக்கு ஏதாவது…”

“பெட்டர் அவகிட்ட சொல்லிடுங்க. கொஞ்சம் அலெர்ட்டா இருப்பா இல்ல?”

“இல்லடா தேவா! உண்மை தெரிஞ்சா அஸ்வத்துக்கு ஆபத்துன்னு அவனைக் காப்பாத்துறதுக்கு இன்னும்தான் ஆபத்தைத் தேடி போவா!” என்று புருவ முடிச்சுடன் தங்கையைப் பற்றி தெரிந்தவனாகச் சொல்ல,

“அவரை அவ்ளோ பிடிக்குமா என்ன?” சுவாரஸ்யமாகக் கதைக் கேட்க ஆயத்தமானான் தேவா.

திரும்பி அவனை முறைத்த ஹரிஷ், “ஃபர்தரா என்ன இன்ஃபோ கிடைச்சாலும் எனக்கு சொல்லு!” என்று எரிந்து விழுந்துவிட்டு வந்திருந்தான். 

அன்று தேவாவிடம் பேசிவிட்டு வந்த பிறகு ஒருநாள் முழுவதும் சிந்தித்து, அதன்பிறகே அம்ருதாவிற்கு திருமணம் செய்வதாய்த் தீர்மானித்து வீட்டில் தன் நண்பன் ரிஷி பிரகாஷ் பற்றி சொல்லி அம்ருவின் கோபத்தைப் பெற்றுக்கொண்டான் ஹரிஷ்.

மருத்துவனாகக் கூட அல்லாமல், சராசரி புத்திமானாக இவ்விடயத்தைக் கையாண்டிருக்கலாம். ஆனால் தங்கை என்று வந்துவிட்டால் அவளைப் பொத்திப் பாதுகாக்கும் அண்ணனாக மட்டுமே சிந்திக்கும் ஹரிஷ், தன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நிற்கும் அம்ருதாவைத் திருமணம் என்று சொல்லி சீண்டி விட்டுவிட்டான்.

விளைவு… 

அஸ்வத் விடயத்தில், தான் அண்ணனை நம்பியது போல் அவன் தன்னை நம்பவில்லை என்று மனம் வெதும்பிப் போனாள் அம்ருதா. வருத்தம் மேலிடும் பொழுது அழுது கரையாமல் வீம்புக்கேனும் செய்து வைக்கும் குணமுடையவளாதலால், வாழ்நாளில் முதன்முறையாக அவள் மனத்தினை ஈர்த்திருக்கும் ஆண்மகனான அஸ்வத்தை மறுபரிசீலனையே அல்லாமல் மிகத் தீவிரமாக மனதில் ஏற்றிக்கொண்டாள்.

அதனை மெய்ப்பிக்கும் விதமாக அன்று மாலையிலேயே அஸ்வத்தை அழைத்து தங்கள் வீட்டினருகே இருக்கும் சிவன் கோவிலுக்கு வர சொல்லியாயிற்று. 

திடுமென அம்ரு அழைத்ததில் சிந்தனையுடன் தான் அழைப்பை ஏற்றிருந்தான் அஸ்வத். 

அவள் பார்க்கவேண்டும் என்றதும் ஹரிஷை நினைத்துத் தயங்கியவனை, “நான் கூப்பிட்டா வர மாட்டீங்களா? வேணும்னா எங்கண்ணன் கிட்ட கன்சென்ட் லெட்டர் வாங்கிட்டு வரட்டுமா?” என்று நகைமொழியாகக் கேட்டாள்.

‘டாக்டருக்கு நக்கல் கூடிப் போச்சு.’ என்றாலும் அவள் ஆட்டும் வினைக் கயிற்றிற்கேற்ப ஆடத் தான் செய்தான்.

இவன் சென்ற போது வானம் இருட்டுக்குள் விழக் காத்திருக்க, சாரலின் துவக்கம் தூசி போல் விழுந்தது. அம்ருதா கோவிலில் கொடி மரத்தின் அருகேயே இவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள். பாசிப்பயறு பச்சையில் அனார்கலி அணிந்து, தலைமுடியில் சிறிதைக் கல்வியில் அடக்கி அழகாய் விரித்துவிட்டு அதில் ஜாதி முல்லை சூடியிருந்தாள். அவளின் பூவும் தொங்கட்டானும் வளையலும் அஸ்வத்தை ஈர்த்தன. உயரம் குறைவென்றாலும் அம்ருதாவின் மெத்தென்ற உடல்வாகிற்கு அந்த உடை அழகாக பொருந்தியிருந்தது.

முன்பு அவளின் உடையை எல்லாம் கவனிக்க தோன்றியதில்லை. இப்போது அவளைத் தவிர வேறெதையும் கவனிக்கத் தோன்றவில்லை. முயன்று சூரியனார் சந்நிதி பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டவாறு அவளருகே செல்ல, அதற்குள் அவளும் இவனைக் கண்டு எழுந்து வந்தாள்.

சாமியைக் கும்பிட்டுவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வரலாம் என்று வாய்மொழியாக அல்லாமல் கண்களைச் சுழற்றிச் சொன்னவளிடம், சொன்ன பேச்சு கேளாமல் இவனிதயம் ஓடிப்போய் அவள் துப்பட்டாவில் ஒளிந்துகொண்டது. 

இதற்குத்தான் இவளிடமிருந்து விலகியிருக்க நினைத்தான். அதற்கு ஹரிஷின் நிபந்தனை ஒரு சாக்கு. அவ்வளவே!

இருவரும் சிவன், பார்வதியிடம் சௌபாக்கியம் வேண்டி வந்தபின், சாரலடித்தாலும் அருகருகே நடந்தபடி மெதுவே பிரகாரத்தைச் சுற்றினார்கள். வரிசையாக வீற்றிருக்கும் தெய்வங்களைக் கண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.

தவறென்று சொல்லி அஸ்வத் தன் உள்ளத்தைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், அந்த தெய்வீக சூழலில் மண் வாசனையும், அம்ருவின் அண்மையும் அவளின் ஜாதி முல்லை வாசமும் அவன் நெஞ்சமெங்கும் ஏகாந்த சுகத்தைக் கொட்டிப் பரப்பியது. பிணியில் சுருண்டு, வாடிக் கிடந்தவனின் முன் திடுமென அம்பிகையே நேரில் வந்து அவன் உச்சித் தொட்டு ஆசி தந்ததைப் போல் உணர்ந்தான்.

சந்நிதியில் தந்த குங்குமத்தையும் சாமந்தி பூவையும் உள்ளங்கைக் குவித்து அடக்கியிருந்த அம்ரு பக்கவாட்டில் வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள். “அஸ்வத்!”  

“சொல்லுங்க டாக்டர், கோவமா இருக்கீங்களா என்ன?”

“எனக்கென்ன கோவம்?”

“இல்ல… பேர் சொன்னீங்களே?”

“என்ன அன்னிக்கும் இப்டித்தான் சொன்னீங்க? நான் உங்களை பேர் சொல்லி கூப்பிடறது உங்களுக்கு பிடிக்கலயா?”

“அப்டி இல்…”

“பிடிக்கலனாலும் நான் அப்டித்தான் கூப்பிடுவேன். அஸ்வத்! அஸ்வத்! அஸ்வத்!”

“ஹாஹா… டாக்டருக்கு என்னாச்சு இன்னிக்கு?”

“லவ் மோட் ஸ்டார்ட் ஆகிடுச்சு.”

இரு நொடிகளைப் புருவங்கள் சுருக்குதலில் செலவழித்தான். “பார்டன்?”

அவள் சற்றுநேரம் கோவில் மணியோசையைக் கேட்டபடி மௌனித்து நடந்தாள். மீண்டும் கொடி மரத்தினருகே வந்தபின் அவன் முகம் பார்த்தாள்.

அதற்குள் அஸ்வத் அவளின் கன்னங்களும் அதிலிருந்த சிறு பள்ளத்தாக்கும் நாணம் பூசிக்கொண்டு தன்னிடம் ஏதோ சொல்ல வருவதை ஊகித்தான். அவள் கண்கள் அவனைக் கருந்துளைக்குள் விழச் செய்வதான மாயத் தோற்றம்!

“ஐ ஃபீல் சம்திங் ஃபார் யூ, அஸ்வத்!”

“.........”

“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குது. லவ் யூ டூ தி கோர்.”

“டாக்டர்?”

“டாக்டர் இல்ல; அம்ருதா! அம்ருதா அஸ்வத்! நல்லா இருக்குதுல்ல?”

“அம்மூஊ!!” - ஹரிஷின் குரல்.

இருவரும் குரல் வந்த திசையைப் பார்க்க, மழையையும் அழைத்துக்கொண்டு இவர்கள் நின்ற இடம் நோக்கி வந்து கொண்டிருந்தான் ஹரிஷ்.

அம்ருவிற்கு அண்ணன் மேல் அதிருப்தி இருந்தாலும் அவனிடம் சொல்லாமல் அவளால் எதையும் செய்ய முடியவில்லை. அவன் போட்ட வேலியை உடைத்துச் செல்வதாக அவனிடமே சொல்லிவிட்டு தான் இங்கே வந்திருந்தாள் அவனின் அறிவுவாளி தங்கை அம்ருதா!

மாலையில் விரைவில் வீடு திரும்புவதாகச் சொல்லிவிட்டு அப்பாவை வரவழைத்துச் சென்றவள், சிறிது நேரத்திற்கு முன்பு அழைத்து, “எனக்கு அஸ்வத்தைப் பார்க்கணும் ஹரி. நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்க சிவன் கோயிலுக்கு அவரை வர சொல்லப் போறேன். உன்கிட்ட சொல்லாம போக இஷ்டமில்ல. அதான் கால் பண்ணேன்.” என்றவுடன், ஹரிஷால் அதற்கு மேல் மருத்துவமனையில் தாமதிக்க முடியுமா என்ன? 

வந்துவிட்டான்.

அதுவரை அம்ரு வெளிப்படுத்திய காதலில் திகைத்து, அங்கிருந்த தெய்வீகக் காற்றிலும் அவளின் நேசத்திலும் கரைந்து கொண்டிருந்த அஸ்வத்தின் பார்வை, ஹரிஷைக் கண்டதும் முற்றிலும் மாறிப்போனது. அவனின் மன எழுச்சி சிறிது சிறிதாக உயர்ந்து அசாத்தியமாய் வளர்ந்து, அம்ருவை வன்மமாய் நோக்கியது.

இருவரையும் ஒரு சேர கண்டதும் கொப்பளித்தெழும் கோபத்துடன் வந்த ஹரிஷ், அஸ்வத்தின்புறம் ஒரு முறைப்பை வீசிவிட்டு, தங்கையின் கையை அழுந்தப் பற்றி அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து விடுவிடுவென வெளியேறினான்.

திரும்பிப் பார்த்து தன் பெயரைச் சொல்லி அழைக்கும் அம்ருதாவை சில கணங்கள் பார்த்த விழி பார்த்தபடி நின்ற அஸ்வத், அவள் தன் கண்ணிலிருந்து மறைந்ததும் நான்கே எட்டில் வெளிவாயிலை அடைந்து சுற்றிலும் பார்த்தான்.

பருத்தத்தூறல்கள் பொட்டு பொட்டாய் பூமியை நனைத்தது. குறுகிய, சுறுசுறுப்பான மாடவீதி! வண்ண வண்ண குங்குமக் குவியல்களுடன் நாட்டு மருந்து கடைகள்; மலர்த் தோரணமாய்ப் பூக்கடைகள்; ஓரமாய் அப்பளம் விற்கும் பெண்; கடை முகப்பில் வரிசையாய்ச் சந்தனமாலைகள் தொங்க, முதலாளி இருக்கையில் அமர்ந்து மிடுக்காய்ப் பார்த்திருக்கும் ஓர் சீமான் (பணக்காரர் என்று மட்ட்ட்டும் அர்த்தம் கொள்க)! அந்த குறுகிய வீதியின் நட்டநடுப் பகுதி எங்களுக்குத்தான் எனச் சாணங்களால் பட்டா போட்டுக் வைத்திருக்கும் கோமாதாக்கள்! அத்தனை அடைசலுக்கு நடுவிலும் கோவில் கோபுரம் பார்த்து கன்னத்தில் போட்டபடி நகரும் மக்கள் கூட்டம்!

அந்த அலோபதி மருந்துக்கடையைக் கடந்து அம்ருதாவை இழுத்துக்கொண்டு செல்லும் ஹரிஷைப் பின்தொடர்ந்தான் அஸ்வத்! கோவிலுக்கு பின்புறம் நிறுத்தியிருந்த மகிழுந்தினுள் அவளைத் தள்ளுவதற்காக ஹரிஷ் கதவைத் திறக்க, அவள் உள்ளே செல்லும் முன் அவளைக் கைப்பற்றிக் கொண்டான் இவன். 

தன்னிடம் இழுத்த வேகத்தில் மூர்க்கத்துடன் அவள் கழுத்தை அழுத்திட, அரண்டு போனான் ஹரிஷ். “டேய் விடுடா அவளை!”

“டாக்டர் இருந்து என்னப் பண்ண போறாங்க? மருந்து கண்டுபிடிக்கறேன்னு இன்னும் எத்தனை உயிரைக் காவு வாங்கப் போறாங்க? இனி ஒருத்தரையும் விடமாட்டேன்.” கேட்டபடி அவள் கழுத்தில் இன்னுமின்னும் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான்.

ஹரிஷ் மகிழுந்தை நிறுத்தியிருந்த இடம் கோவிலின் பின்புறம் என்பதாலும், மழை வலுத்ததாலும் அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமில்லை. அத்துடன் சுவரையொட்டி ஓடிய சிறிய வாய்க்காலின் அடுத்துதான் அம்ரு ஏறுவதற்கு கதவைத் திறந்திருந்தான் ஹரிஷ். அந்த அரையிருளில் குறுகிய இடத்தில் அஸ்வத்தின் செயல் பெரிதாய் அங்கே யாரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை.

ஹரிஷ் தான் இருவரையும் சுற்றி வந்தான். அஸ்வத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கினான். அவன் எத்தனை முயன்றும் அம்ருவின் கழுத்திலிருந்த அந்த இரும்புக் கரத்தை அகற்றிட இயலவில்லை.

“அஸ்…வத்! அஸ்… நா… அம்ரு…” என்று இரத்தமாய்ச் சிவந்துவிட்ட கண்களில் நீர் கோர்க்க திணறலுடன் அஸ்வத்தின் கன்னம் வருடினாள் அம்ருதா.

முகம் முழுவதும் மென்கரம் தந்த வருடலில் ஆச்சரியமாய் அவனின் ஆவேசம் மெல்ல தணிய எத்தனிக்க, அவன் பார்வை சற்றுமுன் தன்னிடம் காதலை மொழிந்த கண்களில் நிலைத்தது. “டாக்ட…”

அவன் வார்த்தையை முடிக்கும் முன், ஹரிஷ் அங்கே பூட்டிக் கிடந்த மிதிவண்டி கடையின் வெளியே இருந்த ரிம்களில் ஒன்றை உருவி வந்து அஸ்வத்தின் பின்னந்தலையில் ஓங்கி அடித்திருந்தான். இருள் சூழ்ந்தது அவ்விடத்தில் மட்டுமல்ல; அஸ்வத்தின் நினைவிலும்! எல்லாம் ஐந்தே நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. 

“அச்சோ!” எனப் பதறிய அம்ருதா அவன் நினைவு தப்பி விழும் முன்னர், அவனைப் பிடித்து திறந்திருந்த கதவின் வழி இருக்கையில் சாய்த்தாள்.

“அம்மூ! வலிக்குதாடா?” தங்கையைத் தாங்கி அலைபேசி ஒளியில் அவள் கழுத்தை ஆராய்ந்தான் ஹரிஷ்.

அம்ருதாவால் பேச முடியவில்லை. ஆசுவாசத்திற்காய் அண்ணன் தோளில் சற்றுநேரம் தலை சாய்த்தாள். குழந்தையைப் போல் அவளை அணைத்துக் கொண்ட ஹரிஷுக்குமே மூச்செடுத்துக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

“ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு. இந்தப் பைத்தியக்காரனை இனியும் சும்மா விட்டா…” என்று நினைவற்றிருக்கும் அஸ்வத்தை அடிக்கப் பாய, பின்னிருந்து அவன் சட்டையை இழுத்தாள் அம்ருதா.

வலித்த தொண்டையை இடக்கையால் ஆறுதலாகப் பற்றிக்கொண்டு மெல்ல சொன்னாள். “நான்… அவரை உன்னை… நம்பி தான் ஒப்படைச்சேன்’ண்ணா!”

“அவன் யார் உனக்கு? அவனுக்காக எதுக்கு நீ என்கிட்ட இவ்ளோ ரியாக்ட் பண்ற? சீரியஸ்லீ அவனை விட நீதான் பெரிய பைத்தியம் அம்ரு!” 

அண்ணனின் சாடல்கள் தன்னைப் பாதிக்கவே இல்லை என்பதைப் போல் உள்ளிருந்து தண்ணீரை எடுத்து பருகினாள். “அஸ்வத்துக்கு என்ன ஆகுதுன்னு எனக்கு தெரிஞ்சாகணும் ஹரி. நீ வர்றதுக்கு கொஞ்சம் முந்தி என்கிட்ட நல்லா தான் பேசிட்டு இருந்தார். திடீர்னு ஏன் இப்டி? ஐ டெஃபனட்லி நீட் டு க்நோ வாட் த ப்ராப்ளம் இஸ்!”

“என்ன பெரிய ப்ராப்ளம்? அவன் பிள்ள போன துக்க வெறில அந்த ஃபீல்ட்ல இருக்க எல்லாரையும் போட்டுத் தள்ளணும்னு நினைக்கறான். அதான் ப்ராப்ளம்!”

“சரி, அப்போ அதுக்கு ட்ரீட்மென்ட் கொடு!”

“என் கண்ணு முன்னாடி உன்னை ரெண்டு வாட்டி கொல்ல டிரைப் பண்ணிருக்கான். அவனைச் சும்மாவே விடக்கூடாதுங்கறேன்! நீ என்னை ட்ரீட் பண்ணுன்னு…”

“அவரும் அதைத் தானே செய்ய நினைக்கறார்?”

ஒரு கணம் பேச்சற்று நின்றான் ஹரிஷ். “அம்மு!”

“ஒரு சைக்யாட்ரிஸ்ட் நீயே எனக்கு ஆபத்துன்னதும் அதுக்கு காரணமானவரைச் சும்மா விடக்கூடாதுன்னு சொல்ற! அப்போ அஸ்வத் மட்டும் அந்த ஃபீல்ட்ல இருக்கவங்களைச் சும்மா விடக்கூடாது நினைக்கறது தப்பா?”

ஹரிஷ் திரும்பி தெரு விளக்கின் வெளிச்சத்தில், விழி மூடி, தலை சரிந்து கிடந்த அஸ்வத்தைப் பார்த்தான். அண்ணன் அவதாரம் மறைந்து அவனுக்குள்ளிருந்த மருத்துவன் தலை நீட்டிட, மீண்டும் தங்கை முகம் பார்த்தான்.

கண்களில் இறைஞ்சலை இரைத்து, “ஹி லாஸ்ட் ஹிஸ் சைல்ட்’ண்ணா!” என்றாள் அவள்.

சில கணங்கள் தலையைப் பிடித்துக்கொண்டு நின்ற ஹரிஷ், “சரி, நீ வீட்டுக்கு போ! கிரிட்டிக்கல் கேஸ்ன்னு… ப்ச்! எதையாவது சொல்லி நைட் நான் வீட்டுக்கு வர மாட்டேன்னு அம்மா, ஸ்வேதாகிட்ட சொல்லிடு!” என்று விருட்டென திரும்பி, அஸ்வத்தை நேராக அமர்த்தி இருக்கைப் பட்டியைப் பூட்டிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

சுற்றி அவனருகே வந்த அம்ரு, “அண்ணா…” எனத் தயங்கி நிற்க,

மகிழுந்தின் வெளிச்சம் பாய்ந்த தெருவை வெறித்தபடி சொன்னான் ஹரிஷ். “உன் அண்ணன் ப்ரொஃபஷனல்ல பர்சனலைக் கொண்டு வரமாட்டான்னு என் மேல உனக்கு நம்பிக்கை இருந்திருந்தா, என் பேச்சை மீறி இப்போ அவனைப் பார்க்க வந்திருக்க மாட்டே! கவலைப்படாதே! இப்பவும் என் பேஷண்ட்டோட மைண்ட்செட் எனக்கு முக்கியம்! என்னால அவனுக்கு எந்தக் கஷ்டமும் வராது!” என்றவன், வேகத்துடன் மகிழுந்தை நகர்த்தி அவ்விடம் விட்டு அகன்றான்.

ஹரிஷ் பூட்டியிருந்த மிதிவண்டி கடையின் சற்று உள்ளே சென்று பார்த்திருந்தால் அங்கே ஒருவன் மூச்சற்று கிடப்பதையும் பார்த்திருக்க முடியும்.

இருளில் குழைத்து ஊற்றிய நீர் தாரைகளில் நனைந்து கொண்டிருந்த அம்ருதா, அஸ்வத்தின் ஸ்கார்பியோவை வருடியபடி அவன் சென்ற பாதை பார்த்து நின்றிருந்தாள்.

The road may fall dark; Her love won't!🚗💌…


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.