
அத்தியாயம் 22
தெருமுனை விநாயகர் காலை பூஜை முடிந்து, பூமாலை சகிதம் தன் பாதமருகே போடப்பட்டிருந்த பூக்கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தார். பழைய காம்பவுண்ட் சுவர்கள் ஈரளிப்பில் இருந்தது. தெருக்களைக் கடந்து பிரதான வீதிக்கு வந்தால், விளம்பர பலகையில் கையில் 7UP உடன் நின்றிருந்த அனிருத் தேநீர் கடையின் வாசனையையும் மக்களின் சுவாரஸ்ய பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். தள்ளுவண்டியில் சாம்பார் வெங்காயம் மூன்று கிலோ நூறு ரூபாய் என கூவிக் கொண்டிருந்தார் அதன் விற்பன்னர்.
அப்பா, மகன் இருவரும் காலை நேர நடைப்பயிற்சியில் இருந்தார்கள்.
லெதர் தொழிற்சாலையிலிருந்து வந்த மணத்தினை உள்வாங்கியபடி மெதுவே ஆரம்பித்தான் ஹரிஷ். “என் ஃப்ரெண்ட் ரிஷி பிரகாஷ் தெரியும்ல’ப்பா? கைனோ ஸ்பெஷலிஸ்ட்!”
“ஆ… போன வருஷம் வில்லிவாக்கத்துல புதுசா மெட்டர்னிடி கிளினிக் திறந்திருக்கான்னு போயிட்டு வந்தியே…”
“ஆமாப்பா, அவன்தான்! என் கல்யாணத்துக்கு வந்திருந்தப்போ உன் கல்யாணம் எப்போடா’ன்னு கேட்டேன். அவங்க வீட்லயும் அலையன்ஸ் பார்த்துட்டு இருக்கறதா சொன்னான். அதான்… நம்ம அம்முவுக்கு பார்க்கலாமான்னு தோணுச்சு…”
நடராஜன் பாதையிலிருந்து திரும்பி மகனைப் பார்த்தார். “அம்முக்குட்டிக்கா? என்ன திடீர்னு? அவ படிக்கணும்; அப்புறம் ரெண்டு வருஷம் ப்ராக்டீஸ் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்த?”
நடராஜனின் சொந்தத்தில் சில வம்பு பேசும் பெண்மணிகள் பெண்பிள்ளை இருக்க, அண்ணனாகவே இருந்தாலும் முதலில் ஆண்பிள்ளைக்கு திருமணம் முடிப்பது ஆகாது என்று பேசியபோது, ஹரிஷ் தன் தங்கை குழந்தை என்றும், அவள் படித்து முடித்து இரு வருடங்கள் கழித்துதான் திருமணப் பேச்செடுக்க வேண்டும் என்றும் சொல்லி அவர்கள் வாயை அடைத்திருந்தான்.
நடராஜனும் இந்த காலத்தில் இருபத்துமூன்று வயதிலேயே பெண்பிள்ளைக்கு என்னத்திற்கு திருமணம் என்று மகனையே வழிமொழிந்தார். தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் ஸ்வேதாவிற்கு கூட இருபத்தியாறு வயதாகிறது. அதனால் மகளுக்கும் இன்னும் மூன்று வருடங்கள் சென்று வரன் பார்க்க ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.
இப்போது இவன் ஏன் அவசரப்படுகிறான் என்ற சம்சயம் அவர் வதனத்தில்!
அப்பாவின் தீர்க்கப் பார்வையில் உள்ளுக்குள் தடுமாறிய ஹரிஷ் வெளியே திடமாகப் பேசினான். “ரிஷியை விட்டுட மனசில்லப்பா! அதுதான் மெய்ன் ரீஸன்! நீங்க கேட்ட மாதிரி டாக்டர். ஃபேமிலி பேக்ரௌண்ட்டும் நல்லாவே இருக்குது. எல்லாத்துக்கும் மேல ரிஷிக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. இப்போ விட்டுட்டா இதுமாதிரி வரன் அப்புறம் அமையுமோ என்னவோ!”
அனுபவஸ்தரான நடராஜனுக்கு ஹரிஷ் சொல்வது புரிந்தது. ஆனால் மனத்தில் ஏதோவோர் அலைகழிப்பு! அக்வேரியம் அருகே வந்திருந்த போது நின்று சர்ச்சின் உச்சியிலிருந்த சிலுவையைப் பார்த்தவரின் சிந்தனையுடன் கூடிய குரலில் சிறு தவிப்பு!
“ஆனா அம்ரூ… அவகிட்ட கேட்டியா? என்ன சொன்னா?”
“உங்ககிட்டேயே இப்போதானேப்பா சொல்றேன்?” எப்போதும் முறைப்புடன் சுற்றும் அப்பாவின் இந்த தவிப்பு ஹரிஷுக்கு ஆச்சரியம்தான்!
எத்துணை கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் மகள் என்று வந்துவிட்டால், இதுபோன்ற பொழுதுகளில் பாசம் முதலாவதாய் நின்றுகொண்டு கண்டிப்புகளை, கடுமைகளை வழுக்கிவிட்டு விடுகிறது. அம்ருதா அவர்கள் வீட்டின் தேவதை; செல்லக் குழந்தை! எனவே நடராஜனுக்கும் இந்த பொழுதைத் தாண்ட சற்று நேரம் தேவைப்படுகிறது.
அவர் வதனத்தில் துயரச்சாயல் மேவியது. “குழந்தைன்னு சொல்லி இத்தனை நாளும் நம்ம கைக்குள்ளேயே வச்சு வளர்த்திட்டோமேடா ஹரி… அதுக்குள்ள கல்யாணமா?”
எந்தவித முன்னறிவிப்புமின்றி திடுமென அம்ருதாவின் திருமணப் பேச்சை எடுத்ததும், மகளைப் பிரிய வேண்டுமென்ற அப்பாவின் நெஞ்சைக் கிள்ளும் உணர்வு புரியத்தான் செய்தது. தன் கம்பீரம் குலைந்து, குழைந்து நிற்கும் அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டான்.
“உடனே கல்யாணம் இல்லப்பா! முதல்ல பேசுவோம். அப்புறம்…”
“ஆனா அம்ரு படிப்பு… உங்கம்மா என்ன சொல்லுவாளோ…” எல்லா பக்கமும் பாதையடைக்கப் பார்த்தது அந்த தந்தை உள்ளம்!
“அப்பா! நாளைக்கேவா கல்யாணம் முடிக்க போறோம்? முதல்ல அம்மு கிட்ட பேசி அவ சம்மதம் வாங்கணும். அப்புறம் ரிஷிகிட்ட பேசிட்டு, அவங்க வீட்டுலயும் பேசணும். எல்லாம் சரியா வந்தா நிச்சயம் பண்ணிக்கலாம். அப்புறம் நாலஞ்சு மாசம் கழிச்சு கூட கல்யாணத்தை வச்சுக்கலாம். அம்முவுக்கும் இன்னும் ஆறு மாசத்துல இருபத்து நாலு முடிஞ்சிடும். படிப்பும் அடுத்து ஒரு வருஷம்தான். அவ பேட்ச்லயே பாதிப் பொண்ணுங்க கல்யாணம் ஆனவங்கதான்! இவளும் கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும்ப்பா! ரிஷி பார்த்துப்பான்.”
மகனின் கூற்றில் நடராஜன் ஒருவாறு தேறினார். என்றாவது ஒருநாள் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைதானே இது! மீண்டும் நடையைத் தொடர்ந்தவர், “சரிதான்! பையன் ஃபோட்டோ எதுவும் வச்சிருக்கியா? ரொம்ப முந்தி பார்த்தது…” என்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு நகர்ந்திட,
அவருடன் பேசியபடி நடந்த ஹரிஷின் எண்ணங்கள் தற்சமயம் தங்கையிடம் தஞ்சம் கொண்டது. அம்ருதா அஸ்வத்தைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை தனக்குத் தெரிந்த அளவில் அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
அவள் அஸ்வத்தைப் பார்க்கும் பார்வையில் வெறும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என்பதை நம்புமளவிற்கு முட்டாளில்லை இவன். அதனாலேயே அவளை அஸ்வத்திடமிருந்து தள்ளி நிறுத்த நினைத்தான்.
ஹரிஷ் ஒன்றும் பொத்தாம் பொதுவாக யோசிக்கும் பத்தாம்பசலி அல்ல! ‘ஒருவனை மனத்தில் நினைக்கிறாளா? உடனேயே நான் தேர்ந்தெடுக்கும் ஒருவனைக் கட்டி வைத்து அவளின் ஆசையை முறித்துப் போடுகிறேன் பார்!’ என்பது போன்ற தட்டையான எண்ணம் கொண்டவனும் அல்ல!
இவர்கள் குழந்தை என்று சொன்னாலும், ஹரிஷின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கும் அம்ருதா ஆட்களைப் படிக்கத் தெரிந்த அறிவார்ந்த பெண்தான்! ஆனால் அவளின் இளமனது அஸ்வத் என்பவனின் முகத்தைப் பார்க்கும் முன்பே ‘ஸ்கார்பியோகாரன்’ என்று அவனின் திறமையிடம் விழுந்திருந்தது. அவன் குமரனோ, கிழவனோ யாராகவாயினும், அவள் அவனின் திறமையை மட்டும் சிலாகித்துவிட்டு நகர்ந்திருந்தால் ஹரிஷ் கவலைகொள்ள அவசியமே இல்லை.
ஆனால் அவனின் திறமையில் துவங்கிய பெண்ணின் இளமனம், அவனை நேரில் பார்த்தபோது சூழ்நிலையின் கனத்தில் அவனுக்கான இரக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அங்கிருந்து திரும்பிய பின் அவனுக்கான அல்லலைச் சுமந்திருந்தது. மீண்டும் சந்தித்தபோது அவன் கதையைக் கேட்ட பின்னர், அவனுக்கு உதவிட வேண்டி எந்த எல்லைக்கும் சென்றுவர தயாராக இருக்கிறது.
இதில் முக்கிய விடயம்… அஸ்வத் கிழவனல்ல; குமரன் என்பதில் இளமனம் மிதமாக அசைந்திருக்கிறது. நம்மூரில் ஆண்கள் மாநிறத்துக்கும் கூடுதல் நிறத்தில் இருந்தாலே ‘நல்ல நிறம்’ என்றுதான் சொல்வார்கள். அப்படியோர் நிறம் அஸ்வத்திற்கு! சிகையும் சீரிய வதனமும், ஆளுமையும் கம்பீரமுமென, ‘அழகன்டா நீ!’ வகையறாவில் வருபவன்! ஆக அந்த குமரன் சுந்தரனும் கூட என்பதில் இளமனத்தின் தடுமாற்றம் மிதமிஞ்சி இருக்கிறது. அவ்வளவே!
இதுதான் அம்ருவின் இளமனம் பற்றிய ஹரிஷின் கணிப்பு!
அஸ்வத்தை அந்தக் காட்டினருகே சந்தித்ததைத் தன்னிடம் மறைத்ததற்காகவே அவளிடம் கோபம் கொண்டான் ஹரிஷ். அதற்கான மன்னிப்பை வேண்டியவள் தற்போது அவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருப்பதே ஹரிஷிற்கு கவலையளிக்கிறது. அதிலுள்ள அபாயங்கள் அவளுக்கு தெரியவில்லை. ஆழம் தெரியாமல் காலை விட்டிருக்கிறாள். அதையும் தனக்கு தெரியாமல் விட்டிருக்கிறாள் என்பது ஹரிஷின் ஆகப்பெரிய ஆற்றாமை!
என்னதான் தன் பேச்சிற்கு கட்டுப்பட்டு அஸ்வத்தை விட்டு விலகியிருக்க அவள் சம்மதித்திருந்தாலும், அதில் அவளின் உறுதித்தன்மை ஸ்திரமாக இல்லை என்பது தன்னைக் காணும்போது அலைபாயும் அவள் விழிகளிலேயே தெரிகிறது. அந்த அலைபாய்தலில் சுழல்வது அஸ்வத் அல்லவா? அவனின் நிலையைத் தெரிந்துகொள்ளும் தவிப்பல்லவா? ஆக எப்போது வேண்டுமானாலும் இவன் தங்கை தன் கட்டை அவிழ்த்துக்கொண்டு அஸ்வத்தின் கையை இறுக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
சரி! தங்கைக்கு பிடித்திருக்கிறது.
அஸ்வத் எப்படி?
அவன் இருக்கும் அபாயக் கட்டங்களையெல்லாம் தாண்டி பார்த்தால் அஸ்வத்திடமும் குறையொன்றுமில்லை தான்! ஆனால் எல்லா வகையிலும் சிறந்த, தன் தங்கையைத் தூக்கிக் கொடுக்குமளவிற்கு தகுதியானவனும் அல்ல என்று சராசரி அண்ணனாக நினைத்தான் ஹரிஷ்! அதற்கு முதல் காரணம் அஸ்வத் ஏற்கனவே திருமணமானவன்; ஒரு குழந்தைக்கு தகப்பன்! குடும்பம் என்ற அமைப்பு இல்லை! சொல்லிக் கொள்ளும்படியான பிண்ணனியற்றவன்! அம்ருதாவிற்கு இவர்கள் தேடுவது மருத்துவத் துறையில் இருக்கும் மாப்பிள்ளையை! ஆக அந்த வகையிலும் அஸ்வத் பொருத்தமில்லை.
அதனால் அம்ருதாவிற்கு அஸ்வத் வேண்டாம் என்பது ஹரிஷின் முடிவு!
அதற்கு ஏன் திருமணம்?
அவளுக்கு இவன் அண்ணன், தந்தை, நண்பன் என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனநல மருத்துவராக, சர்வ நிச்சயமாக அம்ருதாவின் உள்ளம் அஸ்வத்தின்பால் சாய்ந்திருக்கிறது என்று தெள்ளெனப் புரிந்திருக்கிறான். ஆனால் அந்த உணர்வு காதல் என்ற பெயரில் தீவிரமடையும் முன்னர், தான் ஏதேனும் செய்தாக வேண்டும். ஏனெனில் அஸ்வத் இருக்கும் ஆபத்து பாதையில் தங்கையை இறக்கிவிட இவன் தயாராக இல்லை. அதற்கு அவளை அஸ்வத்திடமிருந்து விலக்கி வைத்தால் மட்டும் போதாது. அவள் வாழ்க்கையை மட்டும் பார்த்து கொள்ளும்படியான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு அவள் திருமணமே சிறந்த வழி!
என்ன ஆபத்து?
அது பிறகு! இப்போது அம்ருதா தன் வாழ்வில் ரிஷி பிரகாஷிற்கு இடமளிக்க சம்மதம் சொல்வாளா?
காலை ஆறரை மணிக்கே தயாராகியிருந்த அம்ருதா அம்மாவிடம் சிணுங்கிக் கொண்டிருந்தாள். “ரிஸர்ச் கேஸ் டிஸ்கஷன் இருக்குது. எஸ்ஆர் (Senior Resident) காலைல சீக்கிரம் வர சொல்லிருக்கார்ன்னு நேத்தே சொன்னேன்ல’ம்மா? இன்னும் டிஃபன் ரெடியாகலன்னு சொன்னா என்ன அர்த்தம்? போங்க நான் பக்கத்துல இருக்க கேஃபடேரியா’ல பார்த்துக்கறேன்.”
அப்பாவும் அண்ணனும் நடைபயிற்சி முடித்து வருவதைப் பார்த்துவிட்டு வெளியே ஓடினாள். “அண்ணா என்னை…” என்று ஆரம்பித்தவள் அப்பாவின் முறைப்பில், “அது வந்துப்பா… இன்னிக்கு சீக்கிரம் போகணும். என்னை ஹாஸ்பிடல்ல டிராப் பண்றீங்களா?” என்றிட,
“குளிச்சிட்டு வர்றேன். டிஃபன் எடுத்துக்கிட்டியா?”
“இல்ல… ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்க கேஃபடேரியா’ல பார்த்துக்குவேன்.”
“முதல்ல உள்ளே வா!” என்றவாறு உள்ளே செல்ல,
“ப்ச்! ப்பா… டைமாகுதுப்பா…” கெஞ்சலுடன் அவர் பின்னே சென்றாள்.
“எத்தனை மணிக்கு வர சொல்லிருக்கார்?” - ஹரிஷ்.
“செவன் தர்ட்டின்னு சொன்னார். இப்போ கிளம்பினா சரியா இருக்கும். அப்புறம்ன்னா பீக் அவர் டிராஃபிக்ல மாட்டிக்கணும்!”
“ஸ்வேதா எப்டியும் இன்னும் ஆஃப் அன் ஆர்’ல கிளம்பிடுவா! வெய்ட் பண்ணு. சேர்ந்தே போகலாம்.”
தோள்கள் தளர, முகச் சிணுக்கத்துடன் போய் நீள்விரிக்கையில் அமர்ந்தாள். பத்து நிமிடங்களில் வந்த அம்பிகா, ஊடலுடன் அமர்ந்திருக்கும் மகளுக்கு தோசையைப் பிய்த்து ஊட்ட முறுக்கிக் கொண்டாள் அவள். “இதுக்குத்தான் எனக்கு கார் தாங்கன்னு சொல்றேன். அட்லீஸ்ட் டூவீலராவது வாங்கிக்கறேன்’ம்மா!”
“வாங்கலாம். முதல்ல சாப்பிடு.”
முசுமுசுவென்ற கோபத்துடன், “ஒண்ணும் வேணாம்.” என்றவள் அப்பாவின் தலை தெரியவும், சமத்துப் பிள்ளையாக வாய் திறந்து தோசையை வாங்கிக்கொண்டாள்.
அம்பிகா சிரிக்க, அம்மாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கும் மகளை வாஞ்சையுடன் பார்த்தபடி வந்த நடராஜன், மகனின் அறைப்பக்கம் தலை திருப்பிப் பார்த்தார். ஸ்வேதாவுடன் வந்த ஹரிஷும் அப்பாவைப் பார்த்து தலையசைத்தான்.
நடராஜன் எதிரே அமர, ஹரிஷ் தங்கையின் அருகே அமர்ந்தான்.
“இங்கே ஏன் உட்காருற? அம்மா எனக்கு மட்டும்தான் தருவாங்க. உனக்கு வேணும்னா அண்ணியை ஊட்டி விடச் சொல்லு!”
அவளை வெட்கமும் முறைப்புமாய்ப் பார்த்த ஸ்வேதா உணவு மேசையில் தனக்கும் கணவனுக்கும் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டிருக்க,
ஹரிஷ், “அம்ரு! நானும் அப்பாவும் உனக்கு மேரேஜ்க்கு பார்க்கலாம்ன்னு நினைக்கறோம்.” என்றதில் அம்ருதா மட்டுமல்லாமல் மற்ற இரண்டு பெண்களும் கூட தத்தமது வேலைகளை நிறுத்திவிட்டு ஹரிஷைப் பார்த்தார்கள்.
‘கல்யாணமா?!’ என்ற கணநேர அதிர்ச்சி, அண்ணன் ஏன் இப்போது திருமண பேச்சை எடுக்கிறான் என்று புரிந்ததும் இதழ்கள் இறுகிட அவள் கன்னக்குழி கோபத்தால் நிரம்பியது. மறுகணம் தோசையை மென்று அதனை மறைத்தவள், இலகுவாக அம்மாவிடம் அடுத்த விள்ளலுக்கு வாய் திறந்தாள்.
தங்கையின் அலட்சியத்தில் எரிச்சலடைந்த ஹரிஷும் தன்னுணர்வை மறைத்துக்கொண்டு மேலே தொடர்ந்தான். “என் ஃப்ரெண்ட் கைனோ ஸ்பெஷலிஸ்ட் ரிஷி பிரகாஷ் தெரியும்ல?”
தோசையால் நிரம்பி உப்பலாகிவிட்ட கன்னத்துடன், “ஓ! ரிஷி அண்ணாவா? தெரியுமே!” என்று ஒரே வரியில் தன் விருப்பமின்மையை மறைமுகமாகத் தெரிவித்த அம்ருவின் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டாள் ஸ்வேதா.
“அம்ரூ!”
“வாய்க்கு வாய் குழந்தைன்னு சொல்லிட்டு இப்போ என்னத்துக்குடா அவளுக்கு கல்யாணம்?” என கணவர் மற்றும் மகனின் தீர்மானத்தை ஆட்சேபித்தார் அம்பிகா.
“நல்ல மாப்பிள்ளை இப்போ விட்டா அப்புறம் கிடைக்கமாட்டான்மா!”
“இன்னும் படிச்சு முடிக்கலயேடா? நாங்க முதல்ல அவளுக்கு பார்க்கலாம்னு சொன்னப்போ நீதானே இப்டி சொன்ன?”
“கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டுமே… அந்தப் பையனும் டாக்டராம்! அம்முவுக்கு சப்போர்டிவ்வா இருப்பான்ல?” - நடராஜன்.
“டாக்டர்ன்னு சொல்லிட்டா போதுமே… வேற எதையும் யோசிக்க மாட்டீங்களே!” எனக் கணவரிடம் ‘வள்’ளென்று விழ,
அம்ரு மற்றும் மாமியாரின் பதில் தெரிந்ததும் ஸ்வேதாவும் தன் மனதில் பட்டதைச் சொன்னாள். “தப்பா எடுத்துக்காதீங்க மாமா! என்னதான் கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கலாம்னு சொன்னாலும், அதுல இருக்க கஷ்டத்தை நான் நேர்லயே பார்த்திருக்கேன். படிக்கணும்னு உட்காருற அன்னிக்கு தான் வீட்டுல பூஜை, கோவில்னு ஏதாவது காரணம் சொல்வாங்க. அனுசரிச்சு போற ஃபேமிலியா இருந்தா கூட நமக்கே கில்டி ஃபீல் வர வச்சிடுவாங்க. அம்ரு இங்கே செல்லமா வளர்ந்த பொண்ணு! நாளைக்கு அவ மாமியார் வீட்டுல ஏதாவது தொந்தரவு, படிக்க முடியலன்னு சொன்னா நமக்குத்தான் மனசு கேட்காது மாமா.”
“கரெக்ட் அண்ணி! என் பேட்ச்மேட் லின்ஸி லேப் ரிப்போர்ட்ஸ் வெரிஃபை பண்ணிட்டு இருக்கும்போது, அவ மாமியார் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத வெங்காய சாம்பார் வச்சிருக்காங்கன்னு புலம்பிட்டிருப்பா! வீட்ல அவளை அவ்ளோ டார்ச்சர் பண்றாங்க. பாவம் டென்ஷன்ல எங்கே, என்ன பேசறோம்னு கூட புரியாம புலம்புவா! பாவமா இருக்கும். இந்த ஆட்டத்துக்கு நான் வரல! அப்பா டைமாச்சுப்பா..!”
ஹரிஷ் மனைவியை ஆட்சேபமாய்ப் பார்க்க, “இன்னும் வயசு இருக்கேங்க? அப்புறம் ஏன் அவசரப்படறீங்க?” எனக் கேட்டாள் அவள்.
ஏற்கனவே சதிராடிக் கொண்டிருந்த நடராஜனின் மனம் பெண்களின் முடிவில் அவர்கள் பக்கம் சாய்ந்து திடமானது. மகனைப் பார்த்து கை விரித்தவர், “இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்டா. அப்புறம் பார்ப்போம்.” என்றவாறு மகளை அழைத்துச் செல்ல புறப்பட்டார்.
இமைகள் இடுங்க அம்ருவின் பின்னால் வந்த ஹரிஷ் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவனை முந்திக்கொண்டு தன் கோபத்தைக் கொட்டும் விதமாக, “இந்நேரம் அஸ்வத் இருந்திருந்தா ஏழு மணி வேலைக்கு ஆறு அம்பத்து அஞ்சுக்கு கூட கிளம்பி போகலாம். இல்ல ஹரி?” என்றவள் திமிராகச் சிரித்துவிட்டு போனாள்.
A brake on the road; a breakthrough in the heart🚗💗… (இதுக்கு தான் மண்டையை உடைச்சிட்டு இருந்தேன் இன்னிக்கு🙁🙁 நாளைக்கு next episode போடுவேனாம்💪)
Comments
Post a Comment