
அத்தியாயம் 21
அன்று ஹரிஷின் சிந்தனை முழுவதையும் அஸ்வத்தே ஆக்ரமித்திருந்தான்.
பொதுவாக ஒரு மனநல ஆலோசனை அல்லது சிகிச்சை (Psychiatric session) என்பது ஒரே அமர்வில் முடிவதல்ல. அது ஒரு படிப்படியான செயல்முறை. அதன்படி குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு அமர்வுகள் சென்றால்தான் நோயாளியுடைய மனநிலையின் முன்னேற்றம் பொறுத்து நீண்டநாள் திட்டங்களையும் சொல்ல முடியும்.
ஆனால் நிச்சயம் அஸ்வத் தன்னிடம் முறைப்படி சிகிச்சைக்காக வரப் போவதில்லை. அதனால் குழந்தைக்கு முப்பதாம் நாள் படையல் என்று அஸ்வத் சொன்னதைச் சாக்கிட்டு, அவனைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அவன் வீட்டிற்கு சென்றிருந்தான் ஹரிஷ்.
வீட்டின் உள்வாயிலில் கால் வைத்தபோதே எதிரே இருந்த சுவரின் அடிப்பகுதியில் குழந்தையின் முழு உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. சின்ன பற்கள் காட்டி கன்னம் குழிய சிரிக்கும் குழந்தை முக ஜாடையில் குட்டி அஸ்வத் போலிருந்தாள். வெள்ளை நிற உடையில் அவள் ஓடி வருவதைப் போல தத்ரூபமாக HD செய்யப்பட்டிருந்த புகைப்படத்தின் உயிரோட்டம், பார்த்த ஒரு நொடியில் இந்த மருத்துவனின் மனதையே கலக்கிவிட்டது.
இவளுக்கு இப்படியான முடிவு நிகழ்ந்திருக்க வேண்டாம்தான்! கலங்கும் நெஞ்சத்தை ஆற்றுபடுத்த இயலாமல் மெல்ல விழிகளை நகர்த்தினான். எப்போதும் மனத்தை மயக்கும் சந்தனமும் குங்குமமும் மாலையும் இம்மாதிரி நிகழ்வுகளில் மட்டும் மனத்தை நொறுக்கி ரணத்தைத் தந்து தொலைக்கிறது. படத்தின் முன் போடப்பட்டிருந்த படையலும் உடைத்த தேங்காயும் ஜோதியைக் கக்கும் கற்பூரமும் சாமி கும்பிட்டு முடித்துவிட்டார்கள் என்று சொன்னது.
இன்றைய நாளுக்காக நீள்விரிக்கை, சிறிய மேசைகள், அலங்கார பொருட்கள் எல்லாம் ஓரிடத்தில் நகர்த்தி வைக்கப்பட்டிருந்தது. வயதில் சிறியவர்கள், பெரியவர்கள் என சொற்ப ஆட்கள் மட்டுமே அங்கே இருந்தனர். நாற்காலிகளில் குழுவாக அமர்ந்திருந்தவர்கள் அஸ்வத்துடன் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு நடுத்தர வயது பெண்மணி அனைவருக்கும் அருந்த சிற்றுண்டியும் பானமும் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தார். அஸ்வத் சொன்ன உதவியாளாக இருக்கக்கூடும். ஓரமாக போடப்பட்டிருந்த இருக்கையொன்றில் முடங்கியிருந்த அஸ்வத், ஹரிஷைப் பார்த்ததும் தலையசைத்தான்.
அழுகையை அடக்கியடக்கி அவன் முகமும் கண்களும் சிவந்திருந்தன. குழந்தையின் இன்மையை இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று புரிந்தது. ஹரிஷ் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த குழுவில் சஃபாரி ஸூட் அணிந்து, சிகைக்கு சாயமிட்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் அஸ்வத்தை அணுகி ஆறுதலாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் அவனைச் சூழ்ந்துகொள்ள, அவன் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான்.
அவர்கள் ஆறுதலளிப்பதைக் கேட்டுவிட்டு, உதவி செய்யும் பெண் மெல்ல தயங்கி அவர்களருகே போய் நின்றார். “பிள்ள போனதுல இருந்து தம்பி இப்டித்தான் இருக்காருங்க… எல்லாரும் சொல்லுங்கய்யா. வாழ்க்கைல அசம்பாவிதம் நடக்கிறதுதான். கவலையை ஒதுக்கி வச்சிக்கினு நம்ம பொழப்பைப் பார்க்கணுமில்லயா? சில நேரம் தம்பி தனியா உட்கார்ந்துட்டு இருக்கறதைப் பார்க்கும்போது மனசைப் பிசையுதுங்க! உடனே இல்லாட்டாலும் பின்னாடி அவருக்குன்னு ஒரு துணை இருந்துட்டா…” என்றபோது அஸ்வத் விழியுயர்த்தி அவரை ஒரு பார்வை பார்த்திட, அவர் குரல் அமிழ்ந்துவிட்டது.
சஃபாரி ஸூட் மனிதர் சொன்னார். “பார்ப்போம்மா! நாங்களாம் இருக்கோமில்ல? அப்டியே விட்டுடுவோமா? அஸ்வத் எங்க கம்பெனிக்காக நிறைய உழைச்சிருக்கார். அவருக்கு ஒரு நல்லது செய்ய நிச்சயம் நாங்க எல்லாரும் இருக்கோம்.”
வந்திருந்த அண்டை வீட்டார் சிலர் பட்டும்படாமல் பேசிவிட்டு நகர்ந்துகொண்டனர். வெளியிலிருந்து உணவு வந்தது. நாசூக்காக சாப்பிட்டார்கள். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். ஹரிஷ் வெளியே சென்று அவர்களில் சிலரிடம் தன்னைப் பற்றி சொல்லி, அஸ்வத்தின் தோழனென அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினான்.
சஃபாரி ஸூட் மனிதரிடம் கேட்டான். “அஸ்வத்துக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு சொன்னீங்க. பொண்ணு ஏதாவது…”
“பொண்ணு பார்த்துட்டுலாம் நான் பேசல டாக்டர். ஆனா இனி பார்க்கணும்னு நினைக்கறேன். உங்க ஃப்ரெண்டோட சம்மதம் கிடைச்சா கண்டிப்பா நான் அடுத்த கட்டத்துக்கு போக ரெடியா இருக்கேன்.” அவரின் அக்கறை உண்மை என்று தெரிந்தது.
“வெல்… சமீபமா அஸ்வத் கம்பெனில எப்டி இருக்கான்? ஐ மீன் பர்ஃபாமன்ஸ் எப்டி?”
“வெறும் இருபத்தொன்பது வயசு சர் அவனுக்கு! என் அனுபவத்துல ஜிஇடி(Graduate Engineer Trainee)ஆ சேர்ந்து, ரெண்டே வருஷத்துல அஸிஸ்டண்ட் மேனேஜரா ப்ரமோட் ஆனது அஸ்வத் மட்டும்தான்! ஹீ’ஸ் ரியலி டேலண்டட் கை அட் மெக்கானிக்கல் அண்ட் டிரைவிங்! ஆனா பர்ஸனல் லைஃப்ல அவசரப்பட்டுட்டான்னு தான் சொல்லுவேன்.”
இன்னொரு இளைஞன், “நான் அவன் இந்த கம்பெனில சேருறதுக்கு முன்னாடி இருந்தே வேலை பார்க்கறேன். ஆரம்பத்துல நல்ல கலகலப்பா பழகுவான். அவனோட கல்யாணத்துக்கு அப்புறம்தான் டோட்டலா மாறிட்டான். கம்பெனில அவனோட பர்ஃபாமன்ஸ் ஆல்வேஸ் அவுட்ஸ்டாண்டிங் தான்! ஆனா பர்ஸனலா நிறைய பேச்சைக் குறைச்சிட்டான். அவனோட வைஃப் அவன் கூட இல்லன்ற வரை தெரியும். ஸோ நாங்களும் அவன் பர்ஸனல் எதையும் கேட்டுக்க மாட்டோம். குழந்தை பிறந்தப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்கோயேன்டா’ன்னு நாங்க சொன்னா சிரிச்சிட்டே நகர்ந்திடுவான். இப்போ குழந்தையும் இல்லை. இனி இன்னொரு கல்யாணம்லாம்…” என்று உதட்டைப் பிதுக்கி தோள்கள் குலுக்கி கைகளை விரித்தான்.
குதிரைவாலும் வெள்ளை குர்தி, பைஜாமாவுமாக இருந்த, மேல்தட்டு வர்க்கம் போல் தெரிந்த ஒரு பெண், “அவர் வைஃபால பொண்ணுங்களையே வெறுத்துட்டாரோ என்னவோ!” என்றதும்,
ஹரிஷ் அவளிடம் திரும்பினான். “அப்டிலாம் இல்லயே? பொண்ணுங்களோட நல்லவிதமா தானே பேசுவான்?”
“அது… ஒருவாட்டி நான் அவருக்கு ப்ரபோஸ் பண்ணிருக்கேன். மனுஷன் கண்டுக்கல…”
“நீயுமா?” என்றாள் இன்னொருத்தி.
“அதான் டாக்டர்… அவனை டிஸ்டர்ப் பண்ணாத வரை எல்லார்கிட்டயும் நல்லாதான் பழகுவான்.” என்றான் முந்தைய இளைஞன்.
“ஹ்ம்ம்! நல்லதே நினைப்போம். சீக்கிரம் அவன் மனசு மாறும்.”
“நீங்களே ஒரே சைக்யார்ட்டிஸ்ட் தானே? ஏதாவது செஞ்சு அவன் மனசை மாத்துங்க டாக்டர்! எங்க கம்பெனிக்கு அஸ்வத் ரொம்ப முக்கியம்!” என்ற சஃபாரி ஸூட் மனிதருக்கு, தலையசைத்து விடைகொடுத்தான்.
மீண்டும் உள்ளே வந்தபோது, சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த அலைபேசியையே வெறித்திருந்தான் அஸ்வத். அதில் ஸ்கிரீன் ஸேவராக அவனின் அம்முக்குட்டி! இரு நொடிகளுக்கு ஒரு புகைப்படமென வரிசையாக, குழந்தை பிறந்ததிலிருந்து எடுத்த புகைப்படங்கள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன.
‘கடந்து போ!’ என்று சொல்வதற்கு, நிகழ்ந்தது ஓர் இயற்கை மறைவு அல்ல; துரோகத்தால், சூழ்ச்சியால் நிகழ்ந்தது. ஆக, அஸ்வத்தின் கோபம் நியாயமானது. இதில் இவன் தங்கையும் தலையிட்டிருப்பதால் ஒரு மனநல மருத்துவனாக அவன் மனநிலையை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான் ஹரிஷ்.
இவன் உள்ளே வந்ததும் தலை திருப்பிப் பார்த்த அஸ்வத், “என்ன மிஸ்டர் ஹரிஷ் நடராஜன், என்னைப் பத்தி எல்லாம் விசாரிச்சு முடிஞ்சதா?” என்று வழக்கமான எள்ளலுடன் கேட்க,
“எங்கே? நீங்க ஒரு பூடகமான ஆசாமின்னு சொல்றாங்க. ஒண்ணும் தேறல மிஸ்டர் அஸ்வத்!” என்று இவனும் எகத்தாளம் போல் பாசாங்கு செய்தான்.
அதில் சிறு புன்னகை அவனிடம்!
“ப்ரபோஸ் பண்ண பொண்ணுங்கள எல்லாம் தூர நிறுத்திட்டீங்களாம். உங்களுக்கு அதுலலாம் இன்ட்ரஸ்ட் இல்ல போலருக்குது?”
“உங்களுக்கு அதுல ரொம்ப சந்தோஷம் போலருக்குது? பட்… டாக்டர் கிட்ட பேச எனக்கு ரொம்பவே இன்ட்ரஸ்ட் உண்டு. ஷீ’ஸ் சச் அ கைண்ட் அண்ட் ப்ளஸண்ட் கேர்ள்… நோ வொண்டர் யூ ஆர் ஸோ ப்ரொடக்டிவ்!”
ஹரிஷின் தாடை இறுகியது.
அதை திருப்தியுடன் பார்த்துவிட்டு, “சாந்திம்மா!” என்றழைக்க,
“கிளம்பிட்டேன் தம்பி! உங்களுக்கு மதிய சாப்பாடு இதுல இருக்குது. பசங்களுக்கு கொஞ்சம் சாப்பாடு எடுத்தேன்.” என்று உணவுப் பையை எடுத்துக்கொண்டு வந்தார் சாந்தி.
“எல்லாத்தையும் எடுத்துக்கோங்க. உங்க வீட்டுப் பக்கம் இருக்க பசங்களுக்கு கொடுங்க. நேத்து நீங்க செஞ்ச கை முறுக்கு இருக்குதா?”
“நிறையவே இருக்குது தம்பி. படையலுக்கு வைக்கறதுக்காக தான் முறுக்கும் பணியாரமும் செஞ்சேன். தோ… இலைல இருக்கற எல்லாத்தையும் கட்டாயம் நீங்க சாப்பிட்டுட்டு தான் வெளியே கிளம்பணும்.”
“ம்ம்! அந்த ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வாங்க!”
சாந்தி டப்பாவில் அடைத்து தந்ததை ஹரிஷிடம் நீட்டினான். “டாக்டருக்கு சாந்திம்மா ப்ரிபரேஷன்னா ரொம்ப இஷ்டம்.”
அதை வாங்காமல் அதிருப்தியாய் மூச்சிழுத்தவன் வேறு பக்கம் பார்க்க, அவன் கைப்பிடித்து திணித்தான் அஸ்வத். “ஆஃப்டர் ஆல் ஸ்நாக்ஸ் தர்றதுனால உங்க ரூல்ஸை நான் மீறுறதா ஆகாது மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்!”
அவனைத் தீர்க்கமாகப் பார்த்த ஹரிஷ், “அம்ருவுக்கு அலையன்ஸ் வந்திருக்குது அஸ்வத். மேபீ அடுத்த ஆறு மாசத்துல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிடுவோம்.” என்றிட,
பக்கென வாய்விட்டு சிரித்தான் அஸ்வத். அவன் சிரிப்பை அதிசயம் போல் வாய்பிளந்து பார்த்தார் சாந்தி.
“எவ்ளோ டேலண்டட் ஆன சைக்யார்டிஸ்ட் நீங்க! பட் உங்க அம்முக்குட்டி விஷயத்துல மட்டும் யூ ஆர் ட்டூ இன்செக்யூர்ட், மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்!”
“........”
“பயப்படாதீங்க! எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்கற ஐடியா எல்லாம் இல்ல! டாக்டர் இன்னும் படிக்கணுமே? அவங்க கெரியர் ஸ்டாபிளான அப்புறம் பாருங்க!” என்று அழகாய்ப் புன்னகைத்தான்.
“காட்! ஒரு சைக்யார்டிஸ்ட் என்னையே குழப்பிவிடறான் இவன்! ட்டூ டேன்ஞ்சரஸ் கை!”
“யாரு டாக்டர்?” - ஹரிஷுடன் பணிபுரியும் மற்றொரு மருத்துவர்.
நிகழ்கணம் உணர்ந்து சுற்றுப்புறத்தைப் பார்க்க, ஹரிஷ் மருத்துவமனையின் காரிடாரில் அமர்ந்திருந்தான். ‘இங்கே எப்போ வந்தேன்?’
“டாக்டர் ஹரிஷ்!”
“ஹான்?”
“பணியாரம் செம டேஸ்ட்! இன்னொன்னு எடுத்துக்கவா?” எனும்போது அம்ருதா அழைத்தாள்.
“எல்லாத்தையும் எடுத்துக்கோங்க பரணி.” என்று அவர் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்து வந்து அழைப்பை ஏற்றான்.
“அண்ணா! யூனிட் சீஃப் நைட் இருக்க சொல்லிருக்காரு. கேஸ் ப்ரசன்டேஷன் இருக்குது. நீ வெய்ட் பண்ண வேணாம். நான் கால் பண்றேன். வீட்டுக்கு போயிட்டு அப்புறமா வா!”
“ஓகே! நைட் லேட்டாச்சுன்னா என்ன சாப்பிடப் போற? நான் ஆர்டர் பண்ணிடவா?”
“அவ்ளோ நேரம் ஆகாதுன்னு நினைக்கறேன். பார்த்துட்டு சொல்றேன். உனக்கு வேற கமிட்மெண்ட் எதுவும் இருக்குதா? அண்ணி கூட எங்கேயும் போகணும்னா நீ கிளம்பு. நான் அப்பாவை வர சொல்றேன்.”
“எங்கேயும் போகல! ஸ்வேதா அம்மா கூட கோவிலுக்கு போறதா சொல்லிட்டிருந்தா! நீ முடிஞ்சவரை சீக்கிரம் கிளம்ப பாரு!”
“ம்ம்! அப்புறம்…”
“என்ன?”
“ப்ச்! ஒண்ணுமில்ல. வச்சிடறேன்.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
என்ன கேட்க வந்தாளென்று தெரியாதா என்ன? இங்கு பயங்கொள்ள வேண்டியது அஸ்வத்தை நினைத்து அல்ல; தன் தங்கையை நினைத்து!
அந்த காரிடாரில் சிந்தனையோடு நடந்தவனை மீண்டும் ஓர் அழைப்பு கலைத்தது. அது சுமந்து வந்த சேதி அத்துணை உவப்பானதல்ல! மாறாக, அதிர்ச்சியையும் அச்சத்தையும் தரக்கூடியதாக இருந்தது. அஸ்வத், அம்ருதா இருவரும் எத்துணை பாரதூரமான ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்று புரிந்தவன், அவர்களைச் சிக்கலிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சி வெற்றியடைய வேண்டுமென அவசர வேண்டுதல் வைத்தான்.
*******
அஸ்வத் மலைத்தாலும் ஹரிஷைத் தவிர்க்க நினைக்கவில்லை. சொன்ன பொய்யைத் தொடரும் விதமாக அம்ருவிற்காக என்று அவனிடம் மறு அமர்விற்கும் வரத்தான் செய்தான். அத்துடன் அவனுக்கு மற்றொரு காரியமும் ஆக வேண்டியிருந்தது.
ஹரிஷிற்கும் அம்ருவின் மூலம் உண்மைகள் தெரிய வந்திருந்ததாலும் வேறு சில ஆபத்துக்கள் அஸ்வத்தைச் சூழ்ந்திருப்பதாலும் அவனை இன்னும் கவனமாகக் கையாள வேண்டும் என்ற பொறுப்பு வந்திருந்தது.
வந்தவனைச் சின்னப் புன்னகையுடனே வரவேற்றான். பொதுவான கேள்வி, பதில்களின் பின்னர் அஸ்வத் தலை திருப்பி ஜன்னலருகே இருந்த செடிகளைப் பார்ப்பதும், லேசாக விழியுயர்த்தி சுவரின் மேற்பகுதியைப் பார்ப்பதுமாக இருந்திட,
ஹரிஷ் சொன்னான். “எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க அஸ்வத்!”
தயக்கத்துடன், “திரும்பவும் நான் ரூல்ஸ்’அ ப்ரேக் பண்றதா நினைக்க வேணாம்.” என்றிட,
அவனின் பீடிகையிலேயே ஹரிஷின் முகம் மாறிவிட்டது.
“இல்ல… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ஹரிஷ்… இது வேற! ம்ம்…” என்றிழுத்த வரையில் தான் அவன் தயக்கம்! பின் சட்டென முகத்தில் ஒரு குரூரம் வந்தமர்ந்து கொள்ள வேட்டை மிருகம் போல் கண்கள் பளபளத்தது. “டாக்டர் கிட்ட எனக்கு வேண்டிய ஒருத்தரோட நம்பர் இருக்குது. அதை மட்டும் அனுப்ப சொல்லுங்க!”
இந்த சில நாட்களில் அஸ்வத் அவனின் டிடெக்டிவ் வேந்தனின் உதவியுடன் கோகிலாவை ஒருவழியாக கண்டுகொண்டிருந்தான். எந்த மருத்துவமனை, ஆள் யாரென்று தெரிந்தவனுக்கு அவளைக் கண்டதும் கழுத்தைத் திருகிவிடும் வேகமே மிகுந்திருந்தது.
ஒருநாள் அம்ருதாவையும் இப்படித்தான் தேடி வந்தான். ஆனால் இப்போதைய சீற்றம் அப்போது இல்லையோ! அம்ருவைக் கண்டவுடன் கொல்லத் துணியவில்லையே என்றெல்லாம் சிந்தித்தவனுக்கு மூளைக்குள் பெரும் பிரளயம் ஏற்பட, சுற்றம் உணர்ந்து முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாக ஒருநாள் இவளைத் தீர்க்கவேண்டும் என நாள் குறித்தான்.
அதன்படி முதலில் நாளையிலிருந்து கோகிலாவைக் கண்காணிக்கும் வேலை இருக்க, அவளின் எண் என்று வேந்தன் தந்தது மருத்துவமனையின் பொதுவான எண்ணாக இருந்தது. ஆக அவளின் தனிப்பட்ட எண் கிடைத்தால் இன்னும் வசதி என்று தோன்றியது.
அஸ்வத்தின் கோரிக்கையைக் கேட்ட ஹரிஷின் புருவங்கள் இடுங்கின. அவன் கோகிலலக்ஷ்மியின் எண்ணைத் தான் கேட்கிறான் என்று புரிந்தது.
இருந்தும் புரியாதது போல் கேட்டான். “அம்ரு உங்கப் பொண்ணு அவளோட பேஷண்ட்ன்னு மட்டும்தான் சொன்னா! வேற யாரு உங்க ரெண்டு பேருக்கும் மியூச்சுவலா இருக்கறது?”
ஹரிஷின் ஆர்வத்தில் இவன் உள்ளுக்குள் அம்ருதாவைக் கடிந்துகொண்டான். ‘ஒரு பொய்யைச் சொல்லிட்டு இவ பாட்டுக்கும் போயிட்டா! இவ உடன்பிறப்பு நம்மள வச்சு செய்றான். காட்! அவளை மாதிரி இன்ஸ்டன்ட்டா பொய் சொல்ல வரலயே…’
“அது… வேற ஒரு டாக்டர் சஜஸ்ட் பண்றதா சொன்னாங்க.”
“யாருக்கு?”
“என்… எனக்குத்தான்!”
“உங்களுக்கு உடம்புக்கு என்ன?”
“ஹ்ம்ம்… கொஞ்சநாளா முடி ரொம்ப கொட்டுது அதான்… டாக்டர் யாரோ ஒரு டெர்மடாலஜிஸ்ட் பத்தி சொன்னாங்க.”
அஸ்வத்தின் அடர்ந்த சிகையைப் பார்த்தபடி, “உங்களுக்கு? முடிக் கொட்டுது?” என்று புருவங்களில் கேலியை ஏற்றிக்கொண்டு கேட்டவன், சட்டென அஸ்வத்தை முழுமையாகப் பரிசோதித்துவிடும் வாய்ப்பாக மாற்ற எண்ணி, “இது ஓவர் டிப்ரெஷன் அண்ட் ஸ்ட்ரெஸ் அஸ்வத்! இன்னும் நீங்க என்கிட்ட உங்க பிரச்சினையை டீப்பா சொல்லல. நாம ஏன் ஒரு ஹிப்னோ தெரபி டிரைப் பண்ணக்கூடாது?” என்றிட,
‘தங்கச்சி பொய் சொல்லி அரை பைத்தியம் ஆக்கினா! அண்ணங்காரன் முழு பைத்தியமா ஆக்கிவிட்டுடுவான் போல!’ என உள்ளுக்குள் பொருமிய அஸ்வத், “டிப்ரஷனுக்கே ஹிப்னோவா? அப்போ பைத்தியத்துக்கு எடுத்ததும் எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பீங்களா?” என்று அவனை விட எகத்தாளமாகக் கேட்டான்.
“ஹலோ!”
“நம்பர் கேட்டு வைங்க சர். கண்டுபிடிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமில்ல தான்! என்ன ரெண்டு நாள் வேஸ்ட் ஆகும். சோ மறந்துடாதீங்க மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்! நான் கொடுத்த ஸ்நாக்ஸ்’அ டாக்டர்க்கு கொடுக்காம இருந்த மாதிரி இதையும் டீல்ல விட மாட்டீங்கன்னு நம்பறேன்.” என்று சிரித்துவிட்டு போனான்.
“காட்! இங்கே மைண்ட் ரீடிங் பண்ண வேண்டியது நானா இல்ல இவனா?” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தான் அந்த மனநல மருத்துவன்!
𝕂𝕖𝕖𝕡 𝕘𝕖𝕟𝕥𝕝𝕖? 𝕊𝕠𝕣𝕣𝕪, 𝕚𝕥'𝕤 𝕒 𝕊𝕔𝕠𝕣𝕡𝕚𝕠!🚙...
Comments
Post a Comment