Disclaimer
இந்நாவலில் குறிப்பிடப்படும் கட்டிடங்கள், தொழிற்துறை சேமிப்பு வளாகங்கள் (Industrial Storage Bay), பணியிடச் சூழல் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே.
உண்மையான எந்த நிறுவனத்தையோ, அதன் உள்கட்டமைப்பையோ, பாதுகாப்பு அமைப்பையோ, பணிமுறைகளையோ நேரடியாகக் குறிக்கவில்லை.
பெயர்கள், சூழ்நிலைகள், சம்பவங்கள் அனைத்தும் கதைத் தேவைக்காக உருவாக்கப்பட்டவை மட்டுமே. மேலும் கதை சொல்லும் வசதிக்காக மட்டுமே வர்ணனைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்தியாயம் 26
அஸ்வத் தான் அந்த இடத்திற்கு பொறுப்பு என்பதால் தேவா அவனைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்ல, ஹரிஷும் உடன் சென்றிருந்தான்.
வெளிவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்த கணமே, மங்கலான க்ரீஸ் மணமும் டீசல் வாசனையும் காற்றோடு கலந்து நாசியை நிரடியது. மேலே ஒரே ஒழுங்கில் ஓடிச்சென்ற இரும்புக் குழாய் வரிசைகள்; சிவப்பு நிற அவசரத்தேவை விளக்குகள். அந்தப் பெரிய ஹாலின் முழு கட்டமைப்பும் உயர் இழுவிசை கொண்ட உலோகச் சட்டங்களால் நிறைந்திருந்தன.
அடுக்கடுக்கான ரேக்குகள் ஒவ்வொன்றிலும் பார்கோடு டேக்கள், RFID ஸ்கேனர்கள், மங்கலான நீல ஒளியில் துடிக்கும் சிறிய இண்டிகேட்டர் விளக்குகள், ஸ்பேர் பாகங்கள் என்று இன்னும் அவர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களும் வயரிங் ஹார்னஸ் டிரம்களும் இருந்தன.
ஒருபுறம் Vehicle Diagnostic Corner. ஹைட்ராலிக் லிஃப்ட், கருவிகள் தொங்கும் டூல் போர்டுகள், சில பகுதிகளில் கருப்பு, மஞ்சளில் ‘Restricted. Test Components’ என்று ஒட்டப்பட்டிருக்கும் எச்சரிக்கை பசைப்பட்டைகள். அத்துடன் மேலே ‘ஹம்’ செய்தபடி சுழலும் தொழிற்சாலை காற்றோட்ட டர்பைன்கள்.
ஹைட்ராலிக் லிஃப்டின் அருகே தன்வீர் கீழே விழுந்து கிடந்த இடம் சுண்ணத்துண்டால் வரையப்பட்டிருக்க, பக்கவாட்டில் போடப்பட்டிருந்த ஃபைபர் ஷீட் சுவர் உடைந்திருந்தது. காவல்துறை ஊழியர்களும் தடயவியல் நிபுணர்களும் அவ்விடத்தைச் சோதித்ததில் ஒரு துணுக்கு துப்பும் அங்கே கிடைக்கவில்லை.
அக்கம்பக்கத்தில் மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையிலும் ஆங்காங்கே இருந்த கேமரா காட்சிகளிலும் கூட யார் தன்வீரை அங்கே வரவழைத்தார்கள் எனும் தடயம் கிடைக்கவில்லை. அவன் மகிழுந்து வெளிவாயிலின் பக்கக் கதவு வழியே நுழையும் காட்சி மட்டும் கிடைத்தது. ஓட்டுநர் இருக்கையிலும் அவன்தான் அமர்ந்திருக்கிறான்.
உண்மையில் அஸ்வத் எல்லாவற்றையும் முன்பே திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டிருந்ததால் அங்கே அவனைச் சந்தேகப்பட வழியிருக்கவில்லை. முன்புமொருமுறை அவன் அம்ருதாவைத் தாக்க நினைத்தபோதும் கூட, அவனுடைய ஸ்கார்பியோவை எடுத்து வரவில்லை. அதேபோல் தான் தன்வீரை இங்கே வரவழைத்த போதும் ஸ்கார்பியோவைத் தவிர்த்திருந்தான்.
அஸ்வத் ஏற்கனவே கோகில லக்ஷ்மியைத் தொடர்ந்திருந்ததால் அவளோடு சுற்றிய இந்த தன்வீரை இலகுவாக அடையாளங்காண முடிந்தது. பெண்பிள்ளையை அணுகுவதை விட ஆணவனை அணுகுவது சுலபமாக தெரிய, அஸ்வத்தின் பட்டியலில் தன்வீர் முதலிடத்திற்கு வந்தான்.
அஸ்வத் ஒன்றும் பெரும் பணக்காரனோ, தாதாவோ இல்லை. அதனால் அவனுக்கு தனிப்பட்ட பண்டகசாலையோ, பண்ணை வீடோ அல்லது வேறு மறைவிடங்களோ இல்லாததால், அவன் பொறுப்பிலிருக்கும் அந்த இடத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தான். முதலிலேயே தன்வீரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டால் அவன் எச்சரிக்கையடையக் கூடும் என்றெண்ணி, கடைசி நேரத்தில் கத்தி முனையில் மிரட்டிதான் அழைத்து வந்தான்.
முந்தைய நாள் அந்தக் வளாகத்தின் வாயிற் காப்பாளர் அவசரத் தேவை என்று வெளியே சென்றிருந்த இரவு நேரம். அதுவே அஸ்வத்துக்கு போதுமானதாக இருந்தது. யாருக்கும் சந்தேகம் வராதபடி தன்வீருடன் அவன் மகிழுந்தில் தன்னை மறைத்து வந்திருந்தான். பிரதான வாயிலில்தான் காப்பாளர் இருப்பார். பகலில் வாகனங்கள், பணியாளர்கள் வருகை இருக்கும். காப்பாளர் இல்லாத பழுது பார்க்கும் அணுகலுக்கும், சரக்கு ஏற்றி இறக்கும் உபயோகத்திற்குமெனப் (Repair access, loading shortcut) பக்கத்திலிருக்கும் சிறிய வாயிலின் வழி உள்ளே சென்றிருந்தான்.
மறுநாள் செக்யூரிட்டி இருப்பதால் சந்தேகம் வராது. உள்ளே வந்ததைப் போல அவர் இல்லாதபோது இரவு நேரத்தில் தன்வீரின் உடலையும் சந்தேகம் வராமல் அப்புறப்படுத்திவிடாலாமென நினைத்திருந்தான்.
மகிழுந்து உள்ளே நுழைந்த கணத்தில் தன்வீரைப் பிடறியில் அடித்து மயங்கச் செய்து, பின்னர் பூட்டைத் தொடாமல் கைரேகை பதியாதவாறு பக்கச் சுவரை உடைத்தான். அவன் பொறுப்பிலிருக்கும் அந்தக் கட்டிட வாயிலில் எந்தக் கோணத்தில் கேமரா இருக்கிறது என்று அவனுக்கு திட்டமாக தெரிந்திருந்தது. அதுவே அவனுக்கு வசதியாக போய்விட்டது.
அங்கே தன்வீரைக் கட்டி வைத்து தன் உள்ளக்கொதிப்பு மட்டுப்படும் மட்டும் அடித்துக் காயப்படுத்தி, மயக்க மருத்தையும் செலுத்தினான். மறுநாள் வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டியிருந்ததால் அஸ்வத் நிறுவனத்திற்கு செல்லும் தேவையிருக்கவில்லை. அது இன்னும் வசதியாகிப் போனது. முன் மாலையில் வாடிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும், ஸ்கார்பியோவை வேறொரு இடத்தில் நிறுத்திவிட்டு இங்கே வரும் டெலிவரி வாகனத்தில் ஓட்டுநருக்கு கையூட்டு கொடுத்து, அவருடன் உள்ளே வந்தான்.
தன்வீரிடம் உண்மைகளைச் சொன்னால் உயிரோடு விடுகிறேன் என்று சொல்லி, அவர்கள் செய்யும் சட்ட விரோத செயல்கள் குறித்து வாக்குமூலம் பெற்று, அதனைக் காணொளியாகச் சேமித்துக்கொண்டான். பின்னர் அவனைக் கொன்று வீசும் வெறியில் இருந்தவனை அம்ருதாவின் அழைப்புதான் தடுத்து நிறுத்தியது.
அவள் முக்கியமாகப் பேச வேண்டும் என்று சொல்லி, அவர்கள் வீட்டினருகே இருக்கும் சிவன் கோயிலுக்கு வர முடியுமாவென கேட்க, இவன் அப்போதைக்கு செய்யவிருந்த அந்த மாபாதகச் செயலைத் தள்ளி வைத்தான்.
இருப்பினும் தன்வீரை அன்றிரவே அப்புறப்படுத்தியாக வேண்டும் என்றதில் உறுதியாகவே இருந்தான். ஏனெனில் வளாகத்தின் முன்புறம் இருக்கும் வாயிற் காப்பாளர் எப்போது வேண்டுமானாலும் உள்ளே பக்கவாட்டில் உடைக்கப்பட்டு, இப்போது இவன் வந்து போகும் வழியையும், வாகனங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டிருக்கும் தன்வீரின் மகிழுந்தையும் கண்டறியலாம். அதற்குமுன் இவன் வேலையை முடித்தாக வேண்டும்.
இப்படியான திட்டமிடலில் இரவு நேர பகுதி மட்டும் மாறிப்போனது.
இதில் இரு குழுவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தன்வீரை அழைத்து வந்ததுதான் அஸ்வத்தின் திட்டமிடுதலுக்கும் சாமர்த்தியத்திற்கும் சான்று!
இரு குழுவினர்கள்?
ஆம்! ஒன்று அஸ்வத்தைக் கண்காணிக்க தாரகேஷின் அப்பா ஏற்பாடு செய்திருந்த குழுவினர். மற்றொன்று காவல்துறையைச் சேர்ந்த தேவா மற்றும் அவனின் உயரதிகாரிகள் குழு! அவர்கள் ஹரிஷ் தேவாவிடம் சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்து உண்மை நிலவரத்தை அறிந்ததைத் தொடர்ந்து, வலுவான ஆதாரங்களைத் தேடி தன்வீர், கோகிலா மற்றும் அவர்களின் அணித்தலைவர் டாக்டர் பத்ரிநாத்தையும் தாரகேஷின் அப்பா சத்யநாதனையும் தங்களின் கண்காணிப்பு வட்டத்திற்குள் வைத்திருந்தார்கள். அவர்களின் செயல்பாடுகளை, இயக்கங்களை மிகத் தீவிரமாக அதேநேரம் ரகசியமாகவும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதனாலேயே தங்கள் கண்காணிப்பில் இருந்த தன்வீர் திடுமென காணாமல் போனதில் குழம்பியிருந்தார்கள்.
இரு குழுவினருக்கும் புகைப் போட்டுவிட்டான் அஸ்வத்.
ஏற்கனவே தன்னையும் அம்ருதாவையும் யாரோ கண்காணிக்கிறார்கள் என்று ஓரிரு முறை புத்தியில் எச்சரிக்கை மணி அடித்ததைத் தொடர்ந்து, அவனுடைய டிடெக்டிவ் வேந்தன் உதவியுடன் அது சத்யநாதன் ஏற்பாடு செய்திருக்கும் ஆட்கள் என்று அறிந்துகொண்டான்.
அதனாலேயே அம்ருவை விட்டு விலக முடிவு செய்தான். அத்துடன் தன் மனம் போகும் பாதையும் சரியில்லை என்று தோன்றிவிட, ஹரிஷ் தன் தங்கையோடு பேசக்கூடாது என்றபோது அம்ருவின் நலனுக்காக முழு மனத்துடன் அவன் நிபந்தனைக்கு ஒத்துழைத்தான்.
நேற்று அம்ருவைக் காணச் செல்லும்போது சத்யநாதன் ஏற்பாடு செய்திருந்த ஆளின் கண்ணில் இலகுவாக மண்ணைத் தூவிவிட முடிந்தது. ஆனால் சிவன் கோயில் வாசலில் அம்ருதாவைக் கண்காணிக்க அனுப்பப்பட்டிருக்கும் ஆளைக் கண்டதும் ஆத்திரம் எல்லை மீறி விட, அவனோடு பேச்சுக் கொடுத்தவாறு கார்கள் நிற்கும் பகுதிக்கு அழைத்து வந்து அடித்துப் போட்டவன், அருகேயிருந்த ஆளில்லா மிதிவண்டி கடையினுள்ளே பக்கவாட்டில் தள்ளிவிட்டிருந்தான்.
சரி, இதில் தேவா எப்படி சரியாக தன்வீரைத் தேடி அஸ்வத் பொறுப்பிலிருக்கும் கட்டிடத்திற்கு வந்தான்?
தன்வீர் ஒரு மருத்துவராக மட்டும் இருந்திருந்தால் காவல்துறை சந்தேகத்தின் பேரிலேனும் அவனைப் பிடித்து ஆதாரங்களைத் திரட்டி எப்போதோ அவனைக் கைது செய்திருக்கும். ஆனால் தன்வீர் ஆளுங்கட்சியிலுள்ள பெரிய தலையான சத்யநாதனின் கையாளாகப் போய்விட்டதாலேயே இந்த தாமதம்!
அவன் காணாமல் போன முதல் நாளே காவல்துறை ஆட்களுக்கு சந்தேகம் வந்திருந்தது. அவனுக்கு தாங்கள் அவனைக் கண்காணிக்கிறோம் என்று தெரிந்து விட்டபடியால், தங்களை ஏமாற்றி ஓடியிருப்பான் என்ற கோணத்தில் அவர்கள் நினைத்தனர். அதனைத் தொடர்ந்து அவன் அலைபேசி சிக்னலைக் கொண்டு, ஒரு குப்பைத் தொட்டியில் அணைந்த நிலையில் அதனைக் கண்டெடுத்தார்கள். அதை வைத்து அந்த வழித்தடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியால், அவனின் மகிழுந்து நேற்றைக்கு முந்தைய நாள் இரவில் அந்த தொழிற்துறை சேமிப்பு வளாகம் இருக்கும் பகுதிக்குள் நுழைவதும் தெரிந்தது.
அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அதேநேரம், அவ்வளாகத்தின் வாயிற் காப்பாளர் உள்ளே ஓரிடத்தில் பக்கச் சுவர் உடைந்ததாக தனது மேலிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் இரு தரப்பிற்கும் அங்கே நடந்த அசம்பாவிதம் தெரிந்தபோது, அவ்விடத்தின் பொறுப்பாளர் என்பதால் அஸ்வத்தின் மேலதிகாரி அவனுக்கு அழைத்தார். நேற்றிரவு ஹரிஷ் கோபத்தில் அவனின் அலைபேசியை அணைத்திருந்ததால் அவனைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதற்கிடையே அங்கே பொறுப்பிலிருப்பவன் என்று அஸ்வத்தின் பெயர் அடிபட்டதைத் தொடர்ந்து, இந்த மறைமுக வழக்கில் ஆய்வு செய்யும் காவல் குழுவின் ஒருவனான தேவா, தானே முன் வந்து அஸ்வத்தை விசாரிப்பதாகக் கேட்டு, அந்த வேலையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டான்.
இப்போதும் தேவாவின் குழு அஸ்வத்தின் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அவர்களின் நோக்கமே சத்யநாதன் தான்! அவர் அஸ்வத்தை இவ்வழக்கில் சிக்க வைக்க முயல்கிறார் என்பதே அவர்களின் ஊகம்! ஏனெனில் இவ்வழக்கின் அடிப்படையில் அஸ்வத் தான் தன் குழந்தையை இழந்திருக்கிறான். அவன் வாய் திறந்தால் அது அந்த அரசியல்வாதி நபருக்கு பெரும் கரும்புள்ளியாகப் போய்விடும். அதனால் அவனைக் குற்றவாளியாக சித்தரிக்க முற்படுகிறார்கள் என்பது காவல்துறையின் கணிப்பு!
மேலும் அஸ்வத் இதுவரை மருத்துவ தரப்பினர் மேல் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதனால் அவனுக்கு இவர்களின் சட்ட விரோத செயல் தெரியவில்லை என்றும், தன் மகளின் இறப்பிற்கு உடல்நலக் குறைபாடே காரணம் என்று நம்பிக் கொண்டிருக்கிறான் என்றும் தேவாவின் குழு நினைத்தது. அத்துடன் தூசியளவில் கூட அஸ்வத்திற்கு எதிரான ஆதாரம் அங்கில்லை. அதனால் அவர்களின் பட்டியலில் அஸ்வத் பாதிக்கப்பட்டவன் இடத்தில்தான் இருக்கிறானே அன்றி, அவனைக் குற்றவாளியாக அவர்கள் நினைக்கவில்லை.
இதில் தேவாவிற்கு ஹரிஷ் மூலம் வழக்கைப் பற்றி மட்டுமல்லாமல் அஸ்வத்தைப் பற்றியும், கூடுதலாக அவன் தன் அத்தை மகளின் மனம் கவர்ந்தவன் என்றும் தெரியும். இருந்தும் அவன் தன் குழுவினரிடம் பாதிக்கப்பட்டவன் என்றே அஸ்வத்தை அடையாளப்படுத்தியிருக்கிறானே தவிர, அவனைப் பற்றி வேறு ஒரு தகவலும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
ஆனால் தேவாவும் கூட அஸ்வத்தை நேரில் சந்திக்கும் வரை அவன் இந்த காரியத்தைச் செய்திருப்பான் என்று நினைத்திருக்கவில்லை. சந்தித்த பின், தன்வீர் மரணத்தைக் கேட்ட பிறகு அஸ்வத்தின் மன எழுச்சி மூலம் அவனின் முக மாற்றத்தை வைத்தே காவல்காரனின் மூளை விடையை எழுதிவிட்டது. ஆனாலும் அப்போதைக்கு தெரிந்தாற் போல் காட்டிக்கொள்ளவில்லை. இப்போதும் தன் மேலதிகாரியின் அருகே துளியளவும் பதற்றமில்லாமல், தன்வீர் விழுந்து கிடந்த இடத்தைப் பார்த்து குழப்ப பாவனையில் ஏதோ பேசிக்கொண்டிருந்த அஸ்வத்தை தான் பார்த்திருந்தான் தேவா.
‘கட்டிப்போட்டிருந்தவன் எப்டி கீழே விழுந்து செத்தான்ற குழப்பம் போலருக்குது!’ என்று மனதோடு பேசிக்கொண்டான்.
கீழே விழுந்து?
ஆம், அஸ்வத் கட்டி வைத்துவிட்டு சென்றது போல் நாற்காலியோடு அமர்ந்திருந்தால் தன்வீர் உயிரோடுதான் இருந்திருப்பான். நேற்றிரவு அவனுக்கு மயக்கம் தெளிந்ததும் வாயில் கட்டியிருந்த துணியைத் தாண்டி கத்த முடியவில்லை. எனவே தப்பிக்கும் பொருட்டு தன்வீர் தானேதான் நாற்காலியுடன் உருண்டிருந்தான். உருண்ட வேகத்தில் அருகேயிருந்த ஹைட்ராலிக் லிஃப்டின் உயர்ந்த இரும்பு மேடை ஓரத்தில் தலை தட்டியிருந்தது. அதிகப்படியான இரத்த இழப்பினாலும் உடனடி முதலுதவி கிடைக்காத காரணத்தினாலுமே தன்வீரின் உயிர் பிரிந்திருந்தது.
அதனால்தான் தேவா சொன்ன ‘க்ரைம் சீன்’இல் நேற்றிரவு மரணம் என்று சொல்லப்பட்டது. நேற்றிரவு அஸ்வத் ஹரிஷுடன் இருந்ததால் இங்கும் அவன் மீது சந்தேகப்பட வழியில்லாமல் போனது.
அத்துடன், கட்டப்பட்ட நிலையில் ஏற்பட்ட இந்த விபத்து மருத்துவ ரீதியில் ‘தடுக்கக்கூடிய மரணமாகவே (preventable death)’ கருதப்படும்.
ஆக, அஸ்வத் கொலையாளி அல்ல! என்றாலும், எப்படி ரேவதியின் இறப்பிற்கு அஸ்வத் மூலகாரணமாக இருந்தானோ அதேபோல் தன்வீரின் இறப்பிற்கும் அவனே மூலகாரணம்!
தன் சந்தேகங்கள் அனைத்தையும் கோர்த்துப் பார்த்த தேவா, தற்போது கீழே விழுந்து கிடந்த தன்வீரைக் கண்ட அஸ்வத்தின் குழப்ப முகத்திலிருந்தும் நடந்ததைச் சரியாகவே ஊகித்தான்.
அவனருகே வந்த ஹரிஷ் குரலைத் தாழ்த்திக் கேட்டான். “ஒரு எவிடென்ஸ் கூடவா இல்ல?”
அஸ்வத்தின் மீதிருந்த பார்வையைத் திருப்பாமல் உதட்டைப் பிதுக்கினான் தேவா.
“பாடி ஜீ.ஹெச் போயிருக்குதா?”
அதற்கும் ஆமோதிப்பாய் ஓர் தலையசைப்பு மட்டுமே!
ஹரிஷின் எரிச்சல் வார்த்தைகளில் தெறித்தது. “நேத்து நைட் ஒண்ணா இருந்தீங்களான்னு என்னைக் கேட்ட? இப்போ நீதான் அவனை அப்டி பார்க்கற!”
சின்னதாய்ச் சிரித்துக்கொண்டவன், “என்ன மாதிரி ஆளுன்னு பார்க்கறேன் அத்தான். ஹீ இஸ் ஹார்ம்லெஸ்; அட் தி சேம் டைம் ஹீ இஸ் வெரி டேஞ்சரஸ்!” என்றிட, அவனின் அலைபேசி இசைத்தது.
“சர்!”
“......”
“எஸ் சர்!”
பேசிவிட்டு வைத்தவன், “நீங்க கிளம்புங்க அத்தான். நாங்க ஸ்டேஷன் போகணும்.” என்றபடி அஸ்வத்தின் அருகே செல்ல,
“நானும் வர்றேன்.” என்றான் ஹரிஷ்.
அவனை விநோதமாகப் பார்த்துவிட்டு, அஸ்வத்திடமும் அவனின் மேலதிகாரியிடமும் விடயத்தைச் சொல்ல, சம்மதமாகத் தலையாட்டியவர்கள் புறப்பட்டனர்.
ஹரிஷ் தன்னை ஒட்டிக்கொண்டே வருவதில் அஸ்வத்தும் கூட அவனை வித்தியாசமாகப் பார்த்தான். “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை மிஸ்டர் ஹரிஷ் நட்ராஜன்! ஸோ, உங்க தயவும் எனக்குத் தேவையில்லை; உங்க டீலும் எனக்குத் தேவையில்லை!”
அலுங்காமல் ஒரு கொலையைச் செய்துவிட்டு எப்படி சிரித்த முகமாய்ப் பேசித் தொலைக்கிறான் என்று ஹரிஷூக்கு வயிறெரிந்தது. ஆனாலும் தற்போது பொறுமையோடிருப்பதே சிறந்ததென்று அவனின் மருத்துவ மூளை எடுத்துரைக்க, நிர்மலமான முகத்துடன் சென்றான்.
காவல் நிலையம்!
வளாகத்தின் உள்ளே சில இரு சக்கர வாகனங்கள், ஒரு சுமோ தத்தம் தலையில் ‘Police’ என்று சிவப்பெழுத்தில் எழுதப்பட்டு நின்றிருந்தன. அதனை வந்தவர்களின் வாகனங்கள் பவ்யமாய் பார்த்திருக்க, ஓரிரு வக்கீல்கள் தத்தம் கிளையண்ட்டுடன் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். வேப்ப மரத்தினடியே மூதாட்டியொருவர் சோகம் கப்பிய முகமாக அமர்ந்திருந்தார். காக்கி உடுப்புகளுக்குரியவர்களின் சில தலைகளைக் காண முடிந்தது. வழக்கமாக தேநீர் கொடுக்கும் பையன் தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனான்.
அஸ்வத்தும் அவனின் மேலதிகாரியும் உள்ளே போய், தங்கள் இடத்தில் இப்படியோர் அசம்பாவிதம் நடந்ததற்காக அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துவிட்டு வந்தார்கள்.
வெளியே நின்று, ‘யார் இதைச் செய்திருக்கக் கூடும்? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? உடைந்த பக்கச் சுவர், சோதனைக்கான பகுதிக்குள் ஏற்பட்ட அனுமதியில்லா நுழைவு, அதனால் நிறுத்தப்பட்ட பணிகள் ஆகியவற்றை எப்படிக் கையாளுவது, காப்பீட்டு நிறுவனத்திற்கு எப்படிப் பதிவு செய்வது?’ என்பது போன்ற மேலதிக விடயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு எதிர்ப்புறமாக தேவாவை அழைத்து வந்த ஹரிஷ், “நிஜமாவே ஒண்ணும் பிரச்சினையில்லயாடா? அடாப்ஸி ரிப்போர்ட் வந்தா அவன் மேல சந்தேகம் வராதா? இல்ல, உங்க இன்வெஸ்டிகேஷன்ல சிக்கிட்டான்னா என்ன பண்றது?” எனக் கேட்க,
“இப்போ அவர் மாட்டிக்கணும் நினைக்கறீங்களா? தப்பிக்கணும்னு நினைக்கறீங்களா?” என உண்மையிலேயே புரியாமல்தான் கேட்டான் தேவா.
அஸ்வத்தைக் கணித்ததைப் போல ஹரிஷையும் கணித்திருந்தான் அவன். அதன்படி ஹரிஷிற்கு அஸ்வத்தைப் பிடிக்கவில்லை. தங்கையின் மனம் கவர்ந்தவன் என்பதாலா? தெரியவில்லை. ஆனால் அவனுக்கு அஸ்வத்தைச் சிறிதிலும் சிறிதாகக் கூடப் பிடிக்கவில்லை என்று தேவாவிற்கு தெளிவாகப் புரிந்தது.
ஆனாலும் அவனைக் காப்பாற்றவே நினைக்கிறானே! ஏன்?
“மாட்டிக்கிட்டா எனக்கு சந்தோஷம்தான்! ஆனா அப்டி சிக்கிட்டான்னா உன் அத்தை மவ என்னைச் சும்மா விடமாட்டா! அவன் மேல எந்த தப்புமில்லன்னு உங்க ஏசிபி கிட்டேயே வந்து அவனுக்காக குரல் கொடுத்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. அந்த ஒரு காரணத்துக்காக தான் அவன் மாட்டிக்க வேணாம்னு நினைக்கிறேன்.”
“ஹாஹா… இது பத்தி ரோலர் பொட்டட்டோ கிட்ட பேசணும்னு நினைச்சேன் அத்தான். ‘ஏண்டி ஸ்கார்பியோவைப் பிடிக்குது; இந்த காக்கி டிரெஸ்ஸைப் பிடிக்கலயா?’ன்னு கேட்கணும்.”
அவன் பேச்சைக் காதில் வாங்காத ஹரிஷ் குரல் எழுப்பாமல், ஆனால் தீவிரத்துடன் கேட்டான். “ஏன் தேவா, உங்க டீம்ல ஒருத்தர்க்கு கூடவா அவன் மேல சந்தேகம் வரல?”
ஏற்கனவே அனைவரையும் விட்டு தூரமாக தான் நின்றிருந்தனர். இருப்பினும் மீண்டுமொருமுறை சுற்றிலும் பார்த்துவிட்டு மெதுவாக இயம்பினான் தேவா. “அஸ்வத்தைப் பத்தி சொன்னா எனக்கெப்டி எல்லாம் தெரியும்னு, அம்ருவைப் பத்தியும் சொல்ல வேண்டி வரும். சொல்லவா?”
“டேய்!!”
“அப்புறமென்ன? அடங்குங்க! அஸ்வத் மேல சந்தேகம் வர நான் விடல! அப்டியே வந்தாலும் நியாயம் எந்தப் பக்கம்னு தான் பார்ப்பாங்க! என்ன பார்க்கறீங்க? காசுக்கு அடிபணியாத நிறைய நல்ல ஆட்களும் எங்க டிபார்ட்மெண்ட்ல இருக்காங்க அத்தான். அவங்களுக்கு தேவை மக்களுக்கு எதிரா செயல்படறவங்களை முடிஞ்சவரை சத்தமில்லாம களையெடுக்கறது! அதனால தான் என் பேச்சை நம்பி இந்த விஷயத்தைத் தோண்டினாங்க. தனிப்பட்டு இந்த கேஸையும் எடுத்தாங்க. இப்போ வரை நாங்க இந்த கேஸை டீல் பண்றோம்னு அதிகாரப்பூர்வமா யாருக்கும் தெரியாது. நிறைய நேரம் கண்ணைக் கட்டிக்கிட்டு தப்புக்கு துணைப் போனாலும், இந்த மாதிரி அண்டர்கிரௌண்ட் வேலை பார்க்கும்போது, இப்டிப்பட்டவங்களுக்கு கீழே வேலை செய்யறேன்னு எனக்கு அவ்ளோ திருப்தி அத்தான்!”
“ஷ்ஷ்! உன் சொற்பொழிவைக் கேட்கவா’டா வந்தேன்?”
“சரி இதை மட்டும் கேளுங்க. தன்வீரைக் கொன்னது இந்த ஸ்கார்பியோ இல்ல!”
“வாட்?”
“ஐ மீன் இட் அத்தான். அவனை ஸ்டோரேஜ் பே கொண்டு போனது அஸ்வத் தான்! ஆனா அவனே தான் உருண்டு விழுந்திருக்கான். மெடிக்கலி இதை ‘ப்ரிவென்டபிள் டெத்’ன்னு தானே சொல்லுவோம்?”
“ஓ…” என்றவன் சிறிய அமைதிக்கு பின் சொன்னான். “சரி, அப்போ அம்ருவுக்கு கால் பண்ணி அவன் ஸேஃப்’ன்னு சொல்லிடு. இப்போலாம் என்னையே அவ நம்ப மாட்டேங்கறா!” அவன் வார்த்தைகளில் சிறு வலி!
“ம்ம்! அன்னிக்கே உங்ககிட்ட கேட்டேன். அம்ரு லவ் பண்றாதானே இந்த ஸ்கார்பியோவை?” என்று திரும்பி அஸ்வத்தைக் கண்காட்டிக் கேட்க,
“நோப்! ஜஸ்ட் அவன் மேல ஒரு பரிதாபம்!” என்றான் அலட்சியமாக!
தேவாவிற்கு சிரிப்பு வந்தது. “அப்பப்போ ஒரு போலீஸ்காரன் கிட்ட பேசறோம்ன்றதை மறந்துடறீங்க அத்தான்!”
ஹரிஷ் எரிச்சலுடன் அவனை முறைக்க,
“என்ன பிரச்சினை உங்களுக்கு? நான் விசாரிச்ச வரை நல்ல டைப் தான்! தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கறவர்!” என்றான்.
“ஆனா எனக்கு பிடிக்கல தேவா! அவன் பிள்ளை செத்துருச்சுன்றதை வச்சு அம்ரு கிட்ட ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கறான். அவ மனசைக் கலைக்க பார்க்கறான். அது புரியாம இவளும் அஸ்வத் அஸ்வத்ன்னு அவன் மேல ஹீரோ வொர்ஷிப்ல சுத்தறா! மோர்ஓவர் உனக்கே தெரியும் எங்கப்பா அம்ருவை ஒரு டாக்டருக்குத் தான் கட்டிக் கொடுப்பார். நிச்சயமா ரெண்டாந்தாரமா இல்ல!”
“வில்லன் மாதிரி பேசறீங்க! அம்ரு இதையெல்லாம் யோசிக்காம இருப்பாளா? எப்பவும் உங்க பேச்சையே கேட்டு, உங்க கைப்பிடிச்சே நடந்த உங்க தங்கச்சி இப்போ சுயமா ஒரு முடிவெடுத்ததை உங்களால ஏத்துக்க முடியல. அதுதான் உங்க பிரிச்சினை!”
“ஆமா அப்டித்தான்! அதை விட கோவத்துல கொலை செய்ய கூட நினைக்கற சைக்கோ அவன்! ஒரு சைக்கோவுக்கு என் அம்முவைக் கொடுக்க எனக்கு விருப்பமில்ல.”
“ஒரு சைக்யார்க்டிஸ்ட் நீங்களா இப்டி பேசறீங்கன்னு ஷாக்கா இருக்குது அத்தான்! அவருக்கு கோபம் வரலன்னா தான் தப்பு! என்ன… அந்த கோபம் யாரும் எதிர்பார்க்காத அளவு எக்ஸ்ட்ரீமா போயிட்டு இருக்குது. அம்ருவுக்கு நல்லது பண்ணனும்னா நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்! அவரை ட்ரீட் பண்ணி, கம்ப்ளீட்டா க்யூர் பண்ணுங்க. இன்னும் மூணுன்னு சொன்னாரு. அது அந்த கோகிலா டீம் அண்ட் சத்யநாதன்னு நினைக்கறேன். ஆனா அஸ்வத்துக்கு தெரிஞ்சது அவ்ளோதான்!” என்றவன் இன்னுமாய்க் குரலைத் தாழ்த்தி ஒரு மருந்து நிறுவனத்தைக் குறிப்பிட்டான். “சத்யநாதன் கூட **** ஃபார்மாஸூடிகல் கம்பெனி கம்பைன் ஆகிருக்குது.”
Rash turns; racing pulse🚗🔥…
Comments
Post a Comment