
அத்தியாயம் 27
அன்றிரவு அம்ருதா அப்பாவுடன் வீட்டிற்கு வந்தபோது ஹரிஷ், ஸ்வேதாவுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் இன்று மருத்துவமனையில் விடுப்பு சொல்லியிருந்ததால் அவனோடு பேசும் ஆவலை அடக்கிக்கொண்டு தன்னறைக்குச் சென்றாள்.
நேற்று மாலையில் கோவிலிலிருந்து அஸ்வத்தை அழைத்துச் சென்றவனை இப்போதுதான் பார்க்கிறாள். காலையில் அழைத்தபோது தானே மீண்டும் அழைப்பதாகச் சொல்லி வைத்தவன், பின்னர் அழைக்கவே இல்லை. அதனால் அவனிடம் தனியே பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹரிஷுக்கு இன்றைய நாளெல்லாம் அலைச்சல். காவல்நிலையத்தில் தேவா பேசியதே ஏகத்துக்கும் எரிச்சலைக் கிளப்பியிருந்தது. அனைவரும் அஸ்வத்திற்கே சாதகமாக பேசுவதில் கோபம் கொதிநிலையை அடைந்திருக்க, முழுநாளும் விடுப்பு எடுத்துக்கொண்டு கண்ணெதிரே தெரிந்த ஒரு திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டான்.
டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருக்கையை ஆக்ரமித்தவனின் தலைக்குள் இனி தங்கை கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்ற சிந்தனை! தேவாவிடம் கோபமாகப் பேசியதைப் போல் தங்கையிடம் பேசிவிட முடியாது. நீ அஸ்வத்தின் மேல் வன்மத்துடன் பேசுகிறாய் என்று சண்டை போடுவாள். நம்ப மறுப்பாள். ஹரிஷிற்கு ஆயாசமாக இருந்தது. படம் முடிந்தும் கூட மாலையில் தாமதமாகவே வீட்டிற்கு வந்தான்.
“நேத்தெல்லாம் வீட்டுக்கே வரல. ஃபோனையும் எடுக்கல. என்ன வேலையா இருந்தாலும் அஞ்சு நிமிஷம் கூட பேச முடியாமலா போய்டுச்சு? பெத்தவ தேடுவா; நம்மள நம்பி வந்தவ தேடுவான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்குதா உனக்கு?” என்று இரைந்த அம்மாவிற்கு சமாதானமாக பதிலுரைத்துவிட்டு அறையில் போய் படுத்தவன், இரவு உணவிற்கு தான் எழுந்து வந்தான்.
சாப்பிட்டு முடிந்ததும் ஸ்வேதாவுடன் சிறிது நேரம் செலவழித்து அவளைக் கொஞ்சி தூங்க வைத்துவிட்டு வெளியே வர, அதற்காகவே காத்திருந்தாற் போல் நகத்தைக் கடித்து துப்பியபடி மாடி ஹாலில் போடப்பட்டிருந்த மெத்திருக்கையில் அமர்ந்திருந்தாள் அம்ருதா. கீழே அம்பிகா தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“தூங்கலயா நீ?” - அண்ணன்.
“நீ தூங்கலயா?”
“நீ தூங்க விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்ப!”
“தெரியுதுல்ல? வந்து உட்கார்!”
மீண்டும் எட்டி கீழே அம்மாவைப் பார்த்தவன், “ரீடிங் ரூம்க்கு வா!” என்றுவிட்டு அருகேயிருந்த அறைக்குள் நுழைந்தான்.
ஒரு மேசை, இரு நாற்காலிகள், இரு புத்தக அலமாரிகள் கொண்ட சிறிய அறை அது.
“சொல்லுண்ணா! ஏதாவது தெரிஞ்சதா? அஸ்வத் ஏன் என்கிட்ட திடீர் திடீர்னு அப்டி நடந்துக்கறார்?”
அமரும் வரை கூட பொறுமையில்லாமல் படபடக்கும் தங்கையைக் கண்டவன் அவளை அமரும்படி இருக்கையைக் காட்டிவிட்டு சொன்னான். “ஆரம்பத்துல நீ பீடியாட்ரிக்ஸ் படிக்கறன்னு தெரிஞ்சதும் அந்த தாரகேஷ் டீமோட சேர்த்து உன்னையும் எலிமினேட் பண்ணனும்ன்ற விஷயத்துல ஸ்டிக் ஆகிட்டான். அப்புறம் நீ அவனுக்கு ஹெல்ப் பண்றன்னு புரிஞ்சு உன்கிட்ட நல்லவிதமா நடந்துருக்கான். இனி நீ தேவையில்லைன்னு தோணும்போது கொல்ல நினைக்கறான்.”
“அவ்ளோதானா?” நீ சொல்வதை நான் நம்பவே இல்லை எனும் பார்வையுடன் கேட்க, உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டுமா எனும் இறுக்கத்துடன் இருந்த ஹரிஷ் பதிலுரைக்கவில்லை.
“சரி, நான் தேவையில்லன்னு தோணுச்சுன்னா எப்பவோ என்னைக் கொன்னுருக்கலாம். ஆனா அஸ்வத் அப்டியில்ல. நேத்து… நேத்து… அவர் என்னை அப்டி பார்க்கல… ஐ மீன் ஒரு கொலைகாரனோட பார்வையைப் புரிஞ்சிக்க முடியாதளவுக்கு நான் தத்தியில்ல ஹரி!”
ஹரிஷின் அமைதி அம்ருவைக் குழப்பியது.
“அண்ணா, ப்ளீஸ் டெல் மீ வாட்எவர் இட்’ஸ்!”
ஹரிஷ் நீண்ட மூச்செடுத்துக் கொண்டான். “சொல்றேன் அம்மு. ஆனா திரும்பவும் அவனுக்கு ஹெல்ப் பண்றேன்னு கிளம்பக் கூடாது நீ!”
பிடிவாதம் பிடிக்கவில்லை அவள். ஆனால் மொத்த ஜீவனும் கண்களில் வந்து துடிக்க இவனைப் பார்த்தாள் ஒரு பார்வை! அஸ்வத் விடயத்தில் அம்ரு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிட்டாள் என்றது அந்த இறைஞ்சல் பார்வை! அதில் தங்கையைக் கண்டு பயம் எழுந்தது அவனுக்கு!
அவன் முகம் பார்க்காமல் மேசையின் முனையைக் கீறியபடி முனகலாகச் சொன்னாள். “யூ ஆர் தி பெஸ்ட் அண்ணா; பட், நான் உனக்கு ரொம்ப மோசமான தங்கச்சி ஹரி!”
தாங்குமா அண்ணனுக்கு? எழுந்து மேசையைச் சுற்றி வந்தவன் அவள் தோளணைத்துக் கொண்டான். “டேய்! என் அம்முடா நீ! என் அம்மு என் மேல உயிரே வச்சிருக்கான்னு எனக்குத் தெரியாதா?”
விழியுயர்த்திப் பார்த்தவளின் தேங்கியிருந்த கண்ணீர் அவளின் கன்னக்குழித் தேடி உருண்டோட, அது அஸ்வத்திற்கான கண்ணீர் என்று புரிந்தாலும், ஹரிஷின் பெருவிரல் துடைத்து ஆதரவளிக்கவே செய்தது.
நெடுமூச்சுடன் மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தான். “ஆல்ரைட்! அஸ்வத் எப்போ எல்லாம் உன்னைக் கொல்ல நினைக்கறான்னு யோசிச்சியா?”
“முதல்ல உன்னைப் பார்த்தப்போ! அன்னிக்கு அவரோட பர்ஸனலை நான் உன்கிட்ட சொல்லிட்டேன்ற மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல! அப்புறம் நேத்து கோயில்ல…”
“ம்ம்!” மேலே சொல் என்பதாகத் தலையசைத்தான்.
“உன்னைப் பார்த்த அப்புறம்தான்...”
“தட்’ஸ் இட்!”
“குழப்புறடா ஹரி! பீடியாட்ரிஷனை… அதுவும் மெடிசின் ரிசர்ச்ல இருக்கறவங்களை தானே அஸ்வத் கொல்ல நினைக்கறார்?"
இல்லையென தலையாட்டிய ஹரிஷ், "அது மத்தவங்களுக்கு மட்டும்! ஏன் அவனோட வெளிமனசு கூட அதைத் தான் நம்புது. ஆனா உன் விஷயத்துல அவன் சப்கான்ஷியஸ் மைண்டைப் பொறுத்தவரை நீ அம்முக்குட்டி, அம்ருதான்னு ரெண்டு ரோல் பண்ற!” என்றிட,
புரியாமல் விழித்தாள் அம்ருதா.
“அவனோட பேபி பேரென்ன?"
“அமிழ்தயாழினி! அம்முன்னு கூப்பி…" என்று சொல்ல வந்தவளுக்கு பொட்டில் அடித்தாற்போல் விஷயம் விளங்கியது.
“மை காட்!” என்றவள் சிறிதுநேரம் அதிர்ச்சியைச் சமாளிக்க எடுத்துக்கொண்டாள்.
அஸ்வத்திற்கு நடிக்கவே தெரியவில்லை. தன்னைக் கொன்றுவிட நினைத்தாலும் அவன் தன்னிடம் உள்ளார்ந்த நட்புடனே பழகினான். அவனின் மறுபக்கத்தையும் எவ்வித விகல்பமுமற்று, நட்பு சார்ந்த எல்லைக் கோட்டிலிருந்தே சொன்னான். ரேவதியுடனான அந்தரங்கமெல்லாம் இவளாகத் தானே ஊகித்தாள்! அதனாலல்லவா இவளுக்கு அவன் மேலிருந்த அடிப்படை நம்பிக்கை அபாரமாக மாறியது!
ஒவ்வொரு முறையும் தன்னுடன் ஹரிஷையும் சேர்த்து பார்க்க நேரிட்ட போதுதான் அவன் பார்வை தன் மீது வன்மமாகப் படிந்தது. அதைத் தவிர்த்து ஒருபோதும் அஸ்வத் இவளை சிறு பார்வையிலும் நோகடிக்கவில்லை.
முன்கூட்டியே திட்டமிட்டிருந்தாலொழிய அஸ்வத்திற்கு பொய் சொல்ல வராது என்று ஹரிஷுக்கும் தெரிந்ததுதான்! ஆனால் அவனே அயர்ந்துபோகும் வகையில் நேற்று அஸ்வத் தேவாவிடம் பொய் குடோனைத் திறந்து விடவில்லையா?
அதுவும் எப்போது? இவன் ‘என் அம்முக்குட்டி’ என்று சொல்லி அவனைச் சீண்டி விட்டான். அதன்பின்னர் தான் அவனுக்குள்ளிருந்து எதுவோ செலுத்துவதைப் போல், ஹரிஷே ஆச்சர்யப்படும் வகையில் அஸ்வத் தன்னையும் காத்து, அம்ருவின் பெயரும் வெளிவராமல் மிக நேர்த்தியாகப் பொய்யுரைத்தான். அது தன் அம்முக்குட்டியைப் பாதுகாத்துவிட வேண்டுமென்ற முனைப்பு! ஒன்றை இழந்தவன் மற்றொன்றை இறுக்கிக்கொள்ளும் ஆவேசம்!
அஸ்வத்தை ஒரு அழுத்தக்காரனாக அணுகும்போது, ‘அம்முக்குட்டி’ அவனுள் செய்யும் மாயம் குறித்து இந்த மருத்துவனுக்கு இன்னமும் பிரமிப்புதான்!
‘இவன் பிரச்சினையை வச்சே ஒரு முழு தீஸிஸ் எழுதலாம் போல!’ - நேற்று அஸ்வத்தின் அட்டகாசம் கண்டபோது இப்படித்தான் தோன்றியது.
ஹரிஷ் அவளின் சிந்தனையில் குறுக்கிடாமல் பார்த்திருக்க, திகைப்பு மாறாமல் அம்ரு கேட்டாள். “எப்போ தான் நிதர்சனத்தைப் புரிஞ்சிப்பார்?”
“நீ அம்முக்குட்டில இருந்து அம்ருதாவா மாறுற வரைக்கும்!”
“அண்ணா…”
“அவன்கிட்ட இருந்து தள்ளி இரு அம்மு! நீ அவனுக்கு ஹெல்ப் பண்ற அம்முக்குட்டி இல்ல; டாக்டர் அம்ருதான்னு அவன் புரிஞ்சுக்கணும்!”
“பொய் சொல்ற நீ! இதுல உன்னோட வெஞ்சன்ஸ் தான் தெரியுது. அவரைக் குணப்படுத்தணும்னு நினைக்க மாட்டேங்கற!”
“ஏற்கனவே சொல்லிட்டேன். பெர்சனல் வெஞ்சன்ஸ வேலைல காட்டறளவுக்கு உன் அண்ணன் கேவலமானவன் இல்ல!”
“அப்புறம் ஏன் பொய் சொல்ற?”
“என்ன பொய் சொல்றேன்னு சொல்ற?”
“அவரோட பொண்ணு அம்முக்குட்டி! அப்டி பார்த்தா வேற அம்முக்குட்டி மேலயும் அவருக்கு பாசம்தான் அதிகமா இருக்கணும். கொலைவெறியை ஏன் காட்டணும்?”
ஆயாசமாக மூச்சிழுத்த ஹரிஷ் அந்த மேசை அலமாரியைத் திறந்து இரண்டு பரிசுப் பெட்டிகளை எடுத்து மேலே வைத்தான். “ஓப்பன் போத்!”
“இப்போ எதுக்கு?” எனக் கேட்டபடி இரண்டு பெட்டிகளையும் பிரித்தாள். உள்ளே அடுக்கடுக்காய் வெள்ளை மணிகள் கோர்க்கப்பட்டிருந்த திறப்பு சங்கிலி (keychain) இருந்தது.
“வாவ்! கிரிஸ்டலா?”
“ம்ம்! இது என் ஃப்ரெண்ட் மாறன் இல்ல? வாஷிங்டன்ல இருக்கானே? அவன் அங்கே ஏதோ கண்காட்சின்னு சொல்லி லைவ் வீடியோ போட்டுட்டு இருந்தான். அப்போ இந்த கீ செயின் பார்த்து பிடிச்சதால வாங்கி அனுப்ப சொன்னேன். உனக்கும் ஸ்வேதாவுக்கும்!”
அவன் சொன்னதைக் கேட்டவாறு ஒன்றை மட்டும் கையில் வைத்து அதன் அழகை, மினுமினுப்பை ரசித்துக் கொண்டிருந்த அம்ருதா, “இட்’ஸ் ஸோ பியூட்டிஃபுல்… ஸோ ரேடியன்ட்!” என்று பரவசமாக வியந்த நொடியில், அவள் கையைப் பட்டென்று தட்டிவிட்டு அதைத் தன் கைக்கு மாற்றிய ஹரிஷ் அதனை அங்கிருந்த சிறிய பிளாஸ்டிக் குப்பைக் கூடையில் எறிந்தான்.
திகைத்துப் போனாள் அவன் தங்கை. “குரங்கே! ஏண்டா?”
“ஸாரிடா அம்மு! உன்னோடது ஸ்பாயிலாகிடுச்சு. இது ஸ்வேதாவுக்கு மட்டும்தான்!” என்றவன் மற்றதை எடுத்து பெட்டியில் வைத்து பத்திரப்படுத்த,
“ஹரீ!! என்னோடதை ஏன் குப்பைல போட்ட?” எனக் கேட்டவளுக்கு கோபமும் குழப்பமும்!
“கோவம் வருதா? ஸ்வேதாவோடதை ஆட்டையப் போட்டு உன்னோடது மாதிரியே ஸ்பாயில் பண்ணனும்னு தோணுதா?”
“ச்ச! என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டிருக்க? உன்னோட பீத்த கீ செயினுக்காக நான் ஏன் அப்டி நினைக்கப் போறேன்?”
“ஆனா அவன் நினைப்பான்.” என்றான் தீவிர பாவத்தில்!
“வாட்?! யாரு?”
“அஸ்வத்! அவன் நினைப்பான். ஏன்னா அவன் இழந்தது வெறும் கீசெயின் இல்ல; அவனோட பொக்கிஷத்தை! அவனுக்கு கடவுள் கொடுத்த வரத்தை! தான் வாழ்ற மொத்த நாட்களோட நம்பிக்கையும் சந்தோஷமும் தன்னோட அம்முக்குட்டி கிட்ட தான் இருக்குதுன்னு நம்பிட்டிருக்கும் போது, அந்த நம்பிக்கை நெருப்புல விழுந்த மெழுகு மாதிரி உரு தெரியாம கரைஞ்சு போயிடுச்சு! அது இயற்கையா கரையல. ஆகப் பெரிய துரோகத்தால கரைஞ்சது! அது முழுசா கரைஞ்சிடுச்சுன்ற அவதியோட அந்த சூட்டை விரல்ல தொட்டு பார்த்துட்டு இருக்கும்போதே, அவனுக்கு சொந்தமே இல்லாத இன்னொரு அம்முவை, இன்னொரு நம்பிக்கையை, இன்னொரு சந்தோஷத்தைப் புத்தம் புதுசா வேறொருத்தன் வச்சிருக்கான்னு தெரிய வருது. அப்போ அவன் அந்த புது அம்முவைப் பாசமா பார்ப்பான்னா நினைக்கற?”
அஸ்வத் அன்று மகளுக்கான துக்கத்துடன், தற்கொலை செய்துகொண்டுவிடும் மிக மோசமாக பிசகிய மனநிலையில் இருந்தான் என்பதை நினைவுகூர்ந்தாள் அம்ருதா.
“ஸோ?”
“இங்கே அந்த வேறொருத்தன் யாரு?”
“நீயா?”
“எக்ஸாக்ட்லி! அவன் ரணப்பட்டு கிடந்த அந்த நேரத்துல நானும் தவிச்சுப் போய் உன்னை அம்முக்குட்டின்னு கத்தினது அவனை ரொம்பவே பாதிச்சிருக்குது.”
அன்று திக்குத் தெரியாத அந்தக் காட்டினருகே ஹரிஷ் இவளைக் காணாமல் ஒரு தந்தையின் பரிதவிப்புடன் ‘அம்முக்குட்டி!’ என்று உரத்தக்குரலில் தேடி அழைத்ததையும், அப்போது அஸ்வத்தும் இவளருகே தான் இருந்தான் என்பதையும் நினைவில் மீட்டினாள் அம்ருதா.
‘நீங்களும் உங்கண்ணனுக்கு அம்முக்குட்டி தானே?’ என்று அன்றொரு நாள் அஸ்வத் வில்லங்கமாகச் சிரித்ததை நினைவுகூர்ந்தபடி சொன்னாள். “நானே ஒருமுறை அவர்கிட்ட எங்கண்ணாவுக்கு நான்தான் முதல் குழந்தைன்னு டமாரம் அடிச்சிருக்கேன்.”
“அதேதான்! அவனைப் பொறுத்தவரை என் குழந்தை நீ! நீ உன்னோட கீ செயின் குப்பைக்கு போன மாதிரி ஸ்வேதாவோடதும் வீணாகணும்னு நினைக்கல. ஆனா அவன் நினைக்கறான். இது ஒருவிதமான அதீத பொறாமை! தனக்கு கிடையாதுன்னு சொன்ன பொருளை வேற ஒருத்தன் வச்சிருக்கான்ற பொறாமை! மெடிக்கல்ல இது ஆதெல்லோ சின்ட்ரோம்க்கு (Othello syndrome) நெருக்கமா வரும். பாதலாஜிக்கல் ஜெலஸி ட்ரெய்ட்ஸ். அவனோட இழப்பும் வலியும் பெரிசு இல்லையா? அதோட அவன் தனியா இருக்கான். தேத்தியெடுக்க ஆளில்லை. ஸோ இட்’ஸ் அ ரூட் ஆஃப் காம்ப்ளிகேடட் ட்ராமா!”
அண்ணனின் முன்னால் சுரக்கும் கண்ணீர் சுரப்பிகளைத் திட்டி, கொட்டிவிடாமல் அடக்கி வைத்தாள்.
“ஏன் எனக்கு மட்டும் இப்டி ஆச்சு?, ஏன் என் சந்தோஷம் மட்டும் ஸ்பாயில் ஆச்சுன்னு தனிமைல கிடந்து தவிக்கறவனுக்கு துக்கத்தோட உச்சத்துல ஒரு வெறி வரும். அந்த வெறி நீயும் ஒரு பீடியாட்ரிஷனா மெடிசின் ரிசர்ச் டீம்ல இருக்கன்னு தெரிஞ்சப்போ இன்னும் அதிகமாகி உன்னைக் கொன்னே தீரணும்ங்கற வெறியை ஸ்திரப்படுத்திருக்குது.”
“ஹரி, ரொம்ப பயமுறுத்துறடா நீ! அஸ்வத்… அவர் அப்டிலாம்…”
“உன்கிட்ட அவன் நார்மலா பழகினதை வச்சு அவனை ஜட்ஜ் பண்ணாதே அம்மு! ஹீ இஸ் அ வெரி டேன்ஞ்சரஸ் பர்ஸன்!”
“எல்லாம் உன்னால தான்! உன்னை யாரு அன்னிக்கு அம்முக்குட்டி அம்முக்குட்டின்னு ஏலம் விட சொன்னது?”
“அது சரி!” என்று தலையில் கை வைத்துக்கொண்டான் ஹரிஷ்.
“அப்போ அஸ்வத் ஊர்ல இருக்க எல்லா அம்முக்குட்டியையும் கொல்ல நினைப்பாரா என்ன?” அப்பாவியாகக் கேட்டாள்.
“நீ ஏன் அவன் விஷயத்துல இவ்ளோ தத்தியா இருக்க அம்மு?”
மீண்டும் விழித்தாள்.
“தோலைப் பிச்சுக்கிட்டு இரத்தமும் சதையுமா வலி தர்ற புது புண்ணு மேல ஒட்டுற மண்ணுதான் உள்ளே போய் செப்டிக் ஆகும். நீயும் அப்டித்தான் அவன் மனசு சிதைஞ்சு கிடந்தப்போ உள்ளே போயிருக்க! காய்ஞ்ச புண்ணு மேல எந்த மண்ணும் ஒட்டாது. அவன் நார்மலா இருக்கும்போது எந்த அம்முவும் அவனைப் பாதிக்கமாட்டா!”
“ச்சை ச்சை! என்னையும் அஸ்வத்தையும் எதோட கம்பேர் பண்ற நீ!” என்று அங்கிருந்த ஒரு புத்தகத்தால் ஹரிஷை மொத்தினாள்.
அவளைத் தடுத்து அமர வைத்தான். “உண்மையைத் தான் சொல்றேன் அம்மு. தப்பு செஞ்சவங்களைச் சும்மா விடக்கூடாதுன்னு நினைக்கறதெல்லாம் நம்ம எல்லாருக்கும் வர்ற கோபம்தான். அதுமாதிரி தான் அவன் கோகிலா டீமை பழிவாங்க நினைக்கறதும்! மத்தபடி ஹீ’ஸ் அ கம்ப்ளீட் நார்மல் பர்ஸன்! பட் அது உன்னைப் பார்க்காத வரைக்கும்; உன் கூட சேர்ந்து என்னைப் பார்க்காத வரைக்கும்! உன்னை அம்முன்னு நான் கூப்பிடறதைக் கேட்காத வரைக்கும்!”
“கடவுளே! இதைச் சரி பண்றதுக்கு என்ன தான் வழி?"
“சிம்பிள்! நீ அவனோட அம்முக்குட்டி இல்லன்னு அவன் புரிஞ்சுக்கிட்டாலே போதும். அதுக்கு நீ அவன் கண்ணுல படாம இருக்கணும்.”
தலையசைத்த அம்ரு சோர்வுடன் வெளியேற போக,
“ஹேய் அந்த கீ செயினை எடுத்துட்டு போ! அதுல குப்பையில்ல வெத்து டப்பா தான்!”
“தேவையில்ல!” என்றுவிட்டு விருட்டென திரும்பியவள் மீண்டும் வந்து, “சரி எடுத்துக்கறேன்.” என்று அதையெடுத்து உள்ளங்கைக்குள் பத்திரப்படுத்த,
“அதைக் கொண்டு போய் அவன்கிட்ட கொடுக்கப் போற இல்ல?” என்று மருத்துவராக சரியாக நாடி பிடித்து சொன்ன ஹரிஷ், தங்கை திருதிருப்பதைப் பார்த்துவிட்டு, “கீ செயினும் நீயும் ஒண்ணு இல்ல அம்ரு!” என்றான் ஆழ்ந்த பார்வையுடன்!
அண்ணனின் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து நின்றவள், “காயத்துல ஒட்டின மண்ணு செப்டிக் தான் ஆகும்ன்னு இல்லை. மருந்தாகவும் ஆகலாம்ல ஹரி?” என்றுவிட்டு மறுமொழி கேட்காமல் ஓடிப்போக நினைக்க,
பட்டென்று எழுந்து அவள் முன் வந்து நின்றான். “என் பேச்சைக் கேட்கறதா இல்லல நீ?”
“அண்ணா…”
“இன்னிக்கு அவனைத் தேடி அவன் வீட்டுக்கு தேவா வந்தான்."
“என்… என்ன? எதுக்கு?"
தன்வீர் இறந்த விடயத்தைச் சொன்னான். காவல் நிலையம் வரை சென்று வந்ததைச் சொன்னான். "நானும் தேவாவும் அவன் மேல சந்தேகம் வராதபடி பார்த்துக்கிட்டோம். அதனால தப்பிச்சான்.”
‘தாங்க்ஸ்டா ஹரி!’ என்று சொல்லுவாளென்று எதிர்பார்த்திருக்க,
அவள் அஸ்வத்தின் நினைவில் தீவிர சிந்தனையிலிருந்தாள்.
“திரும்பவும் சொல்றேன். உன் விஷயத்துல மட்டும் அவன் மோசமான சைக்கோ! நீ டாக்டர் அம்ருதான்னு அவன் மனசு நம்பற வரைக்கும்தான் உன்னை உயிரோட விட்டு வச்சிருப்பான். ரொம்ப டேன்ஜர்ன்னு இன்னிக்கு தேவா கூட சொன்னான். புரிஞ்சு நடந்துக்கோ அம்மு! அண்ணா எப்பவும் உன் நல்லதுக்கு மட்டும்தான் யோசிப்பேன்.”
அவன் சொன்ன மற்ற எதுவும் அவள் காதில் ஏறவில்லை. "அஸ்வத்தை சைக்கோன்னு சொல்லாதே! எனக்கு கோவம் வரும்.”
எரிச்சலுடன் கண்மூடித் திறந்தவனின் கையைப் பிடித்துக்கொண்டாள். “அவர் மோசமில்ல’ண்ணா! எனக்கு எப்டி சொல்றதுன்னு தெரியல. ஆனா…”
"ப்ச்!” எனக் கையை உருவிக்கொண்டவன், "திரும்பவும் அவனைப் பார்க்க போய் நீ முழுசா திரும்பி வருவியா இல்லையான்னு என்னால பதறிட்டு இருக்க முடியாது. ஸோ அவன் எப்டியிருந்தாலும் அவன் ஃப்ரெண்ட்ஷிப் உனக்கு வேணாம். டாட்!” என்று தந்தையின் கண்டிப்புடன் சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டான்.
Brake hard; breathe harder🚗❤️🩹…
தெய்வீக அண்ணன்
ReplyDelete