
அத்தியாயம் 28
அன்றொரு நாள் அம்ருதா தன்னிடம் தவறவிட்ட மோதிரத்தை இரு விரல்களில் பிடித்து வெறித்தவாறு படுக்கையில் சாய்ந்திருந்தான் அஸ்வத். மனத்தின் ரணம் விநாடிக்கு விநாடி கனமேற்றிக் கொண்டே வர, வலியில் நெஞ்சம் பிளந்து போகுமோ என்றஞ்சினான்.
மீண்டும் உறக்கமற்ற இரவு; இரக்கமற்ற இருள்! அழவில்லை; ஆனால் முகம் கன்றி சிறுத்திருந்தது.
யாருக்கும் இரண்டாவது காதல் வரலாம். ஆனால் ரேவதியின் ஆசையைக் கொன்று, அவள் மூலம் கிடைத்தப் பொக்கிஷமொன்றைத் தொலைத்து நிற்கும் சபிக்கப்பட்ட தனக்கு வரலாமா? அது அறமாகுமா? ஆசாரமாகுமா? தர்மம் தானா? நியாயத்தராசில் ஏற்றக் கூட தகுதியுண்டா?
இல்லையாம்! நியாயமேயில்லை; தகுதியேயில்லை என்று இவன் விழியின் தகிப்பை வருடி தண்மையைத் தந்த தேவதைப் பெண்ணொருத்தியின் அண்ணன்காரன் சொல்லிவிட்டான்.
சற்றுமுன்,
அம்ருவுடன் பேசிவிட்டு அறைக்குள் சென்ற ஹரிஷிற்கு, தங்கை தன் பேச்சையும் மீறி அஸ்வத்திற்கு அதீத முக்கியத்துவம் தருவதில் நெஞ்செல்லாம் எரிந்தது. எரிச்சலை அடக்கும் வகையறியாத அந்த மனநல மருத்துவன் தன் ஆற்றாமையை இறக்கி வைக்க வேண்டி, இரவென்றும் பாராமல் அஸ்வத்திற்கு அழைத்தான்.
தூங்காமல் தன் அடுத்த இலக்கான கோகிலாவை எப்படி கட்டம் கட்டுவது என்ற சிந்தனையில் இருந்த அஸ்வத், ஹரிஷின் அழைப்பைக் கண்டு இதழில் எள்ளல் நகையைப் படரவிட்டான். “சொல்லுங்க, மிஸ்டர் ஹரிஷ் நட்ராஜன்! உங்க தங்கச்சி கிட்ட சொல்லிட்டீங்களா?”
மிகைநிலை அடையும் எரிச்சலைப் பல்லைக் கடித்து அடக்கிக்கொண்டு கேட்டான் ஹரிஷ். “என்ன சொல்லணும்?”
“அதான் அஸ்வத் ஒரு பைத்தியக்காரன்; சைக்கோ கொலைகாரன்; பூச்சாண்டி! அவனோட பேசக்கூடாது. அப்புறம் உன்னைச் சாக்குல கட்டித் தூக்கிட்டு போயிடுவான். கண்ணை நோண்டி…”
“இனஃப் அஸ்வத்!” சற்றே உயர்ந்துவிட்ட குரலில், ஸ்வேதாவிடம் அசைவு தெரிய அங்கிருந்து நகர்ந்து பால்கனிக்கு சென்றான்.
“எஸ்! அப்டித்தான் சொன்னேன். என்னன்றீங்க இப்போ? அம்ருவை ரெண்டு முறை கொல்ல டிரைப் பண்ணிருக்கீங்க! நியாயமா நான் உங்க மேல கொலை முயற்சின்னு கேஸ் கொடுத்திருக்கணும். அம்ரு அதை விரும்பமாட்டான்ற ஒரே காரணத்துக்காக தான் அமைதியா இருக்கேன். நீங்களே சொல்லுங்க மிஸ்டர் அஸ்வத். உங்க அம்முக்குட்டியா இருந்தா டாக்ஸிக்னு தெரிஞ்சும் அவளை உங்களை மாதிரி ஒருத்தனோட பழக அனுமதிப்பீங்களா?”
எய்த அம்பு துல்லியமாக அதன் இலக்கை அடைந்துவிட்டது என்றது அஸ்வத்தின் மௌனம்!
“முதல்ல அவளோட பழக உங்களுக்கு என்னங்க தகுதியிருக்குது? அம்ரு இடத்துல உங்க அம்முக்குட்டியை வச்சு யோசிச்சு பாருங்களேன். நெஞ்செல்லாம் பதறும். அப்போ இப்டி என்கிட்ட நக்கலடிக்க தோணுமா?”
அவன் மௌனத்தில் இவன் கோபம் குளிர்காய ஆரம்பித்தது. “நீங்க என்ன நினைப்புல அவளோட பேசறீங்களோ எனக்கு தெரியல. ஆனா ஏற்கனவே கல்யாணமாகி அதுவும் தோத்து போன ஒருத்தர், ஒரு குழந்தைக்கு தகப்பனா இருக்கற ஒருத்தர்… நீங்க இப்டி பண்ணலாமா?”
கத்தியின் முனையால் நெம்பிவிட்ட நெஞ்சத்தை இடைவெளியேயில்லாமல் மேலும் மேலும் குத்தியெடுக்க, அஸ்வத் மனதளவில் பலமிழந்தான். ஆனால் அதனைக் கடுகளவும் குரலில் காட்டி விடவில்லை. திமிர் குறையாமல் கேட்டான். “நான் என்ன நினைப்புல இருந்தா உங்களுக்கென்ன? இப்போ எதுக்கு எனக்கு கால் பண்ணிருக்கீங்க?”
“அம்ருவைக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கணும் நீங்க!”
“வாட்? வை மீ?”
“திரும்பவும் புரியாத மாதிரியே பேச வேணாம் அஸ்வத்! அம்ரு உங்ககிட்ட பேச வரும்போது நீங்க அவளை அவாய்ட் பண்ணனும். இனி எப்பவும் அவளோட ஹெல்ப் உங்களுக்கு தேவையில்லன்னு சொல்லணும்.”
நகத்தை வெட்டுவதைப் போல் அவளுடனான உறவை வெட்டி விடுகிறான் ஹரிஷ். நகத்தை வெட்டுகிறானா? விரலை வெட்டுகிறானா? இத்தனைக்கு வலித்துத் தொலைகிறதே!
“பட், டாக்டர் வில் பீ ட்டூ ஸ்டபர்ன்!” ஸ்ருதி இறங்கியிருந்தது இவன் குரலில்!
“என் தங்கச்சியைப் பத்தி நீங்க எனக்கு சொல்லத் தேவையில்லை. நீங்க எனக்கு கோஆபரேட் பண்ணா நான் அவளைக் கன்வீன்ஸ் பண்ணிடுவேன்.”
மீண்டும் மீண்டும் ஹரிஷ் பேசியதே மனத்தில் நின்று உறுத்தியது.
உண்மையைத் தான் சொல்லியிருக்கிறான். இவன் ரேவதியுடன் வாழவேயில்லை. ஆனால் பார்க்கும் யாருடைய கண்ணிற்கும் இவன் காதல் மனைவியை இழந்துவிட்டு, இப்போது புது மாப்பிள்ளையாக புது பெண்ணைத் தேடுவதாகத்தானே தெரியும்?
தன்னிலையை நினைத்துச் சிரித்துக்கொண்டான்.
அம்ரு இவன் மனதில் சலனமேற்படுத்தியது உண்மை! அவளின் அண்மையும் காதலும் இவனை அடியோடு சாய்ப்பது போன்ற பிரமையெழுவதும் உண்மையே!
ஆனால் அம்ருவை மட்டுமல்ல; வேறு யாரையும் திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இவனுக்கில்லை! இருந்தும் அவள் உறவை ஒரேயடியாக வெட்டி எறிவதை நினைத்தால் உள்ளம் வலி கண்டு துடிப்பதைத் தடுக்கவும் முடியவில்லை; அதற்கு காரணமும் புரியவில்லை.
அதனால்தானோ என்னவோ ஹரிஷ், ‘என் அம்முக்குட்டி!’ என்று வெறுப்பேற்றும் பொழுது அநியாயமாய் வலித்துத் தொலைகிறது. இருக்கும் ஒரே சொந்தமும் நீரில் கரையும் கோலமாய் கரைந்து போவதால் இருக்குமோ?!
வேண்டாம், அம்ருதா பரிசுத்தமான வனிதை! அவள் மனம் தன்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலியால் கலங்கக்கூடாது. அவளுடைய நட்பு, அக்கறை, காதல் என அவள் நினைவுகள் அனைத்தையும் தன்னுடன் ஆழப் புதைத்துக்கொள்வதே நலம்!
ஆழ்ந்த சுவாசத்துடன் விரலிடுக்கிலிருந்த அம்ருவின் மோதிரத்தைப் பழையபடி தனது வாலட்டில் வைத்துவிட்டு வந்து படுத்தான். எப்போதும் போல் மகளின் புகைப்படத்தை அணைத்துக்கொண்டான்.
மறுகையால் அலைபேசியில் அம்ருவின் தொடர்பைத் தேடியெடுத்து, அதில் தெரிந்த அம்முக்குட்டி எனும் ஆங்கில எழுத்துக்களை வருடிவிட்டு நெஞ்சின் இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு கண்மூடினான்.
அவ்விடம் அவ்வெழுத்துக்கள் போதாதென்று தேம்புவதை அலட்சியம் செய்பவனாக வாளாவிருந்தான். தூக்கம் வரவில்லை; துக்கத்திற்கு மருந்துமில்லை.
வலியேற்று பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் வலி மரத்துப் போகுமாம்! இவனுக்கு மரத்துவிடக்கூடாது என்றே அந்தப் பரம்பொருள் இவன் வாழ்க்கையில் வரும் உறவுகளையெல்லாம் கொடுப்பதைப் போல் கொடுத்து, சுவாசிக்கவும் அவகாசம் தராமல் தட்டிப்பறித்து வலியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறதோ! அப்பரம்பொருளிடம் கேள்விக்கேட்டு, கோரிக்கையை யாசிக்கும் திராணியுமற்று, தன்னிரக்கத்தில் வெதும்பிக் கிடந்தான் அஸ்வத்!
**********
பொழுது : மதிய நேரம்.
இடம் : அஸ்வத்தின் நிறுவன உணவகம்.
நபர்கள் : அஸ்வத்தும், உலகிலேயே அவனொருவன் தான் மனித ஜென்மம் என்பது போல் அவன் விழி பார்த்திருக்கும் அம்ருவும்!
“சாப்பிடுங்க டாக்டர். சின்னதா ஒரு ட்ரீட்! நியாயமா நீங்க தான் எனக்கு பேச்சுலர் பார்ட்டி தரணும். ஹஹ்! பரவாயில்ல ஒரு சேன்ஞ்சுக்கு நான் தர்றேன்.” இடையில் ஹஸ்கியாக சிரித்துக்கொண்டான்.
அவன் வாங்கி தந்த உணவுகளை ஆசையாக உண்ட அம்ருதா அவன் பேச்சை செவிமடுக்கிறாளா என்று கூட தெரியவில்லை.
மீண்டும் உதட்டை இழுத்து வைத்து சிரிக்க முயன்றான். “நான் கூட உங்க கஸின் தான் உங்க ஃப்யூச்சர் ஹஸ்பண்ட்ன்னு தப்பா புரிஞ்சிட்டு இருந்தேன். அப்புறம்தான் உங்கண்ணா சொன்னார். எங்க அம்ருவுக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்த்திருக்கோம்னு! எனிவே கங்கிராட்ஸ் டாக்டர்!”
பதிலளிக்காமல் கன்னங்குழிய உணவினை விழுங்குபவளிடம் ஒரு நொடி தடம்புரண்டு மறுநொடி, ‘நான் ஸ்டெடி! நான் ஸ்டெடி!’ என்று குழறும் குடிகாரனாய் மாறியது அஸ்வத்தின் உள்ளம்!
கடைசியாக இனிப்பின் சுவையைச் சிந்தாமல் சிதறாமல் சுகித்துவிட்டு கேட்டாள் அம்ருதா. “கஷ்டமா இருக்குதா அஸ்வத்?”
இவனால் ஹரிஷிடம் போல் இவளிடம் திமிர் முகத்தைக் காட்ட முடியவில்லை. “ஹான்? எ… எதுக்கு?”
“எங்கண்ணா எழுதிக் கொடுத்த டயலாக்ஸை மனப்பாடம் பண்றதுக்கு; அதை என்கிட்ட ஒப்பிக்கறதுக்கு!”
“ஹஹ்!” சிரித்துவிட்டு சும்மா இருந்தான்.
உண்மையில் அம்ருவை எப்படி கையாள்வதென்றே அவனுக்கு தெரியவில்லை. பொய் சொல்லி பழக்கமில்லை என்பதை விட, அம்ரு முகம் பார்த்து பொய்யாக நடிப்பது கடினமாக இருந்தது.
அவளின் கூந்தல் கற்றைக் கூட அவனை வாரி சுருட்டி இறுக்குவதான மாயை! அவள் அண்மையின் வாசனையை நுகர நுகரவே, தன்னுள்ளம் தடம்புரள்வதைத் துல்லியமாக உணர்ந்தான் அஸ்வத். எப்போதிலிருந்து இந்த மாற்றம் என்ற பயம் வந்தது. எங்கே ‘திருமணமே வேண்டாம்’ எனும் தனது உறுதியான நிலைப்பாட்டைக் கூட அவளின் சுவாசமேற்ற காற்று மாற்றிவிடுமோ என்றஞ்சினான்.
இருந்தும் தன் மன உதறலை அவளிடமிருந்து மறைத்து வெற்றி கண்டான்.
அம்ருதா எதிரிலிருப்பவனை, ‘நீ சாப்பிடவில்லையா?’ என்று ஒரு வார்த்தையும் கேட்கவில்லை; உன் உணவு உலர்கிறதே என்று அக்கறையும் கொள்ளவில்லை.
“எப்பவும் நீங்க தர்ற லன்ச் வேற லெவல் டேஸ்ட் அஸ்வத்!” என்று சிலாகித்தவள், நீரை அருந்தி முடித்து கடதாசியால் உதடுகளை ஒற்றிக்கொண்டு கேட்டாள். “அப்புறம்?”
“அப்புறம்… சொல்லுங்க டாக்டர்! அடியேனை இவ்ளோ தூரம் பார்க்க வந்திருக்கீங்க? எதுவும் முக்கியமான விஷயமா?”
“ரொம்ப முக்கியமில்ல; ஜஸ்ட் என்னோட லைஃப் மேட்டர்தான்!” என்று தோள் குலுக்கிட,
‘எதிர்பார்த்த ரியாக்ஷன் கொடுத்தாலாவது மேனேஜ் பண்ணுவேன். ஜஸ்ட் லைஃப்’ஆமா! எப்புட்றா இவளை வச்சு வளர்த்தான் இந்த பைத்தியக்கார டாக்டர்?’ உள்ளுக்குள் அலறித் தவித்தாலும், வெளியே தன் ஹஸ்கி சிரிப்பை நம்பி சாதுவாக அமர்ந்திருந்தான் அஸ்வத்.
“ம்ம்! அப்போ நான் சொன்னது சரிதான் இல்ல? சொல்லுங்க டாக்டர், மாப்பிள்ளையை உங்களுக்கு பிடிச்சிருக்குதா? எப்போ மேரேஜ்ன்னு பேசிருக்காங்க?”
“ப்ச்!” என்று சிணுங்கலாய் உதட்டைக் குவித்து மேசையில் முழங்கை ஊன்றி, கன்னத்தில் கை வைத்த பெண்ணைக் கண்டு இவனுக்கிருக்கும் மிச்ச சொச்ச உயிரும் போய்விடும் போலிருந்தது.
“மாப்பிள்ளையே இன்னும் எனக்கு ஓகே சொல்லல அஸ்வத்! நீங்களே சொல்லுங்க அவன் என்ன அவ்ளோ பெரிய இவனா? நான் ஐ லவ் யூ சொல்லியும் கூட பதிலே சொல்ல மாட்டேங்கறான். ஓவரா கெத்து காட்டறான். பொண்ணு மனசு தவிச்சுக் கிடக்குமே… நாம எஸ் சொல்லி, ஏதாவது ரொமான்டிக்கா பேசுவோம்னு நினைக்கறானா?” அம்ரு பேச பேச, இவனின் ஹஸ்கி சிரிப்பு புளியோதரை கண்ட பக்தன் போல் ஓடிவிட்டது. பதற்றத்தில் வியர்க்க ஆரம்பித்தது.
“ஃப்ளர்ட் பண்ண மாட்டேங்கறான்; க்ரின்ஞ்சியா பேச மாட்டேங்கறான்; கண்ணால கற்பழிக்க மாட்டேங்கறான். செம போரா இருக்கான் அஸ்வத்.”
‘ஆத்தாடி ஆத்தா! முடியலடா டேய் ஹரிஷ்! எங்கேடா இருக்க?’
கண்களை விரித்து தன்னை அதிர்வுடன் பார்த்தவனின் முன்னால் சற்று சாய்ந்தவள் மெதுவாக கேட்டாள். “ஏன் அஸ்வத் நான் வேணும்னா அவன் சட்டைக் காலரைப் பிடிச்சிழுத்து சும்மா ஒரு கிஸ்ஸடிச்சிடவா?”
“ஹேய்!” என பட்டென்று எழுந்துவிட்டவன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, யாரின் கவனமும் தங்களிடம் இல்லையென்பதை உறுதி செய்துகொண்டு மீண்டும் அமர்ந்தான்.
“ஹஹ்ஹஹஹ…” வாய்விட்டு சிரித்தவளை அடக்க வழியில்லாமல் “டாக்டர் ப்ளீஸ்…” என்று அவள் விரல்கள் பற்றி அழுத்தம் தந்தான்.
அம்ருவின் முகத்தில் சிரிப்பு மறைந்து விழிகளில் நீர் கோர்த்தது. அதை மறைத்து இமை தாழ்த்தி கேட்டாள். “உங்களை நினைக்கறதுக்கு எனக்கு உரிமையில்லைன்னு சொல்லாம சொல்றீங்க தானே அஸ்வத்?”
அம்ருவின் குரல் சிதறியதில் அவள் அழத் தயாராகிறாள் என்று தெரிந்தது.
“டாக்டர் அப்டிலாம் இல்ல…”
“டாக்டர் இல்ல; அம்ருதா!” என்று வெடித்தவள், "வேற எப்டி? அன்னிக்கு நான் கோயில்ல வச்சு சொன்னது உங்களுக்கு நல்லாவே கேட்டது. ஆனாலும் பதில் சொல்லல. ஒரு வாரமாச்சு. ஒரு கால் கூட பண்ணல. இப்பவும் நானே வரலன்னா நல்லதா போச்சுன்னு இருந்திருப்பீங்க!” என்று குற்றம் சாட்டினாள்.
“ச்ச! நீங்க கொடுத்த ஷாக்ல இருந்தே நான் இன்னும் வெளியே வரல டாக்டர். ஆனா எனக்கு புரியல. நான்… நான்… உங்களை அவ்ளோ ஹர்ட் பண்ணியும் கூட ஏன் என்னை..? ஐ டோண்ட் ஈவன் டிஸர்வ் ட்டூ ஸே ஐ’ம் ஸாரி. ஏன்னா என்னாலயே என்னை மன்னிக்க முடியல.”
“அன்னிக்கே சொன்னேன்ல? உங்களால என்னை ஹர்ட் பண்ண முடியாது அஸ்வத்! எனக்கு வலிச்சா நீங்க தான் ஃபீல் பண்ணுவீங்க! என் கழுத்துல இரத்தம் வர்றதைப் பார்த்து நீங்க பதறி நின்னது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்குது.”
சில கணங்கள் அவளை இமைக்காமல் பார்த்தவன் இடவலமாகத் தலையசைத்தான். “நீங்க என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கீங்க டாக்டர். உண்மைல நான் அவ்ளோ வொர்த்தே இல்ல. கோவம் வந்தா மறுபடியும்…”
“நான் உங்க…” என்று சொல்ல வந்தவள் அதனை விழுங்கிவிட்டு, “நீங்க என் கூடவே இருந்தா மறுபடியும் அப்டி நடக்காது. நான் இந்த ஃபீல்ட்ல இருக்கறதுனால தான் அப்பப்போ உங்களுக்கு என்மேல கோவம் வருது. ஆனா கூடவே இருக்கும்போது, அதுவும் ஒரு தொழில் தான்னு புரியும்போது கோவம் வராது அஸ்வத்!” என்றாள்.
இவனுக்காக இவனிடமே வாதாடும் உன்னதப் பெண்ணைக் கண்டு நெஞ்சம் விம்மியது. இவள் வாழ்வு சிறக்க வேண்டும். ஹரிஷ் சொன்னதைப் போல் இவளுக்கு தன்னை விட சிறந்த துணை கிடைக்கட்டும்.
இத்தனை நேரம் தொடாத குளிர்பானத்தை எடுத்து உறிஞ்சியவன் முகத்தில் சிறிதும் இளக்கம் காட்டாமல் சொன்னான். “ஸாரி டாக்டர், நீங்க பிஜி படிக்கறேன்னு சொன்னாலும் இன்னும் சின்னப் பொண்ணுதான்! ஏதோ நல்லா கார் ஓட்டுறேன்னு இம்ப்ரஸ் ஆகிருக்கீங்க போலருக்குது. மத்தபடி லைஃப் லாங் ரிலேஷன்ஷிப்லாம்…ப்ச்! கஷ்டம் டாக்டர்!”
அவன் முன்னிருந்த உணவுத்தட்டை அவன் முகத்திலேயே தூக்கி அடித்துவிடும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சுற்றி இருப்பவர்களை வேடிக்கைப் பார்த்தாள் அம்ருதா. கோபமும் அழுகையுமாக சடுதியில் அவள் முகம் சிவந்துவிட்டது. பொது இடத்தில் அழுது வைக்கக்கூடாதென்று அவள் பிரயத்தனப்படுவது புரிந்தது இவனுக்கு!
எழுந்து அவள் கன்னம் பற்றி தன் மார்போடு சேர்த்தணைத்து, ஓலமிடும் தன் சுவாசத்தின் அடர்ந்த சப்தத்தில் அவளை அமிழ்த்திவிட துடித்த நெஞ்சத்திடம் தயவுசெய்து அடங்கியிருக்குமாறு பேரம் பேசினான் அஸ்வத். அவள் கண்ணீர் கண்டும் முகத்தை நிர்மலமாக வைத்துக்கொண்டான்.
வெடித்துக் கிளம்பிய கோபத்தை அடக்கி, தூரமாகப் பார்த்தவாறு மென்குரலில் சொன்னாள் அவள். “டிரைவிங் ஸ்கில்ல இம்ப்ரஸ் ஆகியிருந்தா என் காதலுக்கு ஒரு கால் டாக்ஸி டிரைவர் போதும் சர்! அன்னிக்கு உங்க காரை முந்தணும்னு அண்ணன் கிட்ட சொன்னேன்தான்! ஆனா ஒவ்வொரு முறையும் உங்க ஸ்கார்பியோ கண்ணை விட்டு மறையும் போதும் மனசெல்லாம் அப்டியொரு சஞ்சலம்! ஏதோ கோயிலுக்கு கூட்டிட்டு போனாங்க. சாமியைப் பார்த்ததும் அழணும் போல இருந்தது. அண்ணா, அண்ணி பேச்சு எதுவும் மனசுல பதியல! ஏன் எதுக்குன்னு எனக்குப் புரியவே இல்லை. உங்களைப் பார்த்ததுக்கு அப்புறம் யோசிச்சேன். எங்கேயோ ஒரு குழந்தை இல்லாம போய்… அவங்கப்பா கஷ்டமான நேரத்துல இருந்து… அதை எனக்கு சொல்லத்தான் அலைகழிஞ்சு வந்தேனோன்னு… ஆனா ஏன் என்னைச் செலக்ட் பண்ணனும்?”
“........”
“சத்தியமா அங்கே உங்க ஸ்கார்பியோ இல்லாம வேற காரா இருந்திருந்தா நான் உள்ளே வரை வந்திருக்கவே மாட்டேன்! அதுக்கப்புறமும் உங்க பர்ஸனலை என்கிட்ட ஷேர் பண்ணப்போ வெறும் ஒரு மூணாவது மனுஷியா ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கல. இங்கே வலிச்சது, நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு! அது பரிதாபம் இல்ல சர். அப்டி இருந்திருந்தா என் ஃப்ரெண்ட்ஸ்ல இருக்க பசங்க யாரையாவது ஹெல்ப்க்கு அனுப்பிட்டு என் வேலையைப் பார்த்துட்டு போயிருந்திருப்பேனே?”
“டாக்டர் இதெல்லாம்…”
“நான் பேசி முடிச்சிடறேன் சர்! அப்போ கூட இது லவ்ன்ற கோணத்துல நான் யோசிக்கல. ஏன்னா அப்போ உங்க… அந்த ரேவதி இல்லைன்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சப்பவும் காதல்லாம் வரலதான்! நீங்க ஒருவாட்டி தேவா அத்தான் தான் என்னோட ஃப்யான்ஸேன்னு சொன்னப்போ அவ்ளோ கோவம் வந்தது. அன்னிக்குதான் என்னையே நான் அனலைஸ் பண்ணேன். நிச்சயமா அத்தானை மட்டுமில்ல; வேற யாரையும் கூட என்னால அந்த இடத்துல வச்சு யோசிக்க முடியல, உங்களைத் தவிர!”
துணுக்குகளாகி போகும் இதயம், பூப்பூவாய் அவள் மடியில் போய் விழுவதான பிரமை இவனுக்கு!
“சும்மா க்ரஷ்ன்னு மனசை விடறதுக்கு நான் ஒண்ணும் டீன்ஏஜ் பொண்ணு இல்ல சர். இதெல்லாம் சரி வருமா இல்லையான்னு நிறையவே யோசிச்சேன். எப்பவும் அண்ணாவுக்கு பிடிக்காத எதையும் நான் செய்றதில்ல. இப்போ அவனுக்கு பிடிக்காததுதான் எனக்கு பிடிச்சிருக்குது. அப்போ கண்டிப்பா பிரச்சினை வரும்னும் தெரியும். நான் வீண்பிடிவாதம் பிடிக்கல. என் மனசு அது! உங்க பேர் சொல்லியே செத்துட்டிருக்கற மனசு! ஐ டின்ட் சூஸ் திஸ் லவ்; இட் சூஸ் மீ அண்ட் இட் ஹர்ட்ஸ் இன் எவ்ரி கார்னர் ஆஃப் மீ!”
அஸ்வத் வார்த்தைகளைப் பறிகொடுத்தவன் போல் மௌனியானான்.
“இப்பவும் டிரைவிங்ல இம்ப்ரஸ் ஆகி பேசறேன்னு சொல்லுவீங்களா?”
சற்றுநேரம் நிலவிய மௌன நொடிகளை உடைத்து அம்ருதாவின் அலைபேசி அழைக்க, விழி நகர்த்தி பார்த்துவிட்டு எழுந்துகொண்டாள். “தேவாவோட வந்தேன். அன்னிக்கு கால் பண்ணிட்டு தனியா எங்கேயும் போகக்கூடாதுன்னு சொன்னான். காலைல நான் உங்களைப் பார்க்கணும்னு சொன்னதால அவன்தான் கூட்டிட்டு வந்தான்.”
“ஓ! வெளியே நிற்கறாரா என்ன? அவரையும் உள்ளே வரச் சொல்லிருக்கலாமே?” என்று இவனும் எழுந்து தேவாவை அழைக்க ஓரெட்டு வைக்க,
“அவனுக்கு அறிவு இருக்குது.” என்றாள் சூடாக!
‘உனக்குத்தான் இல்லை.’ என்று மறைமுகமாகக் குட்டு வைத்தவளைக் கண்டு திருதிருத்தான். “வந்து… அவருக்கு…”
“தெரியும். எங்கத்தான் சோ ஸ்வீட்! அவன் சப்போர்ட் எப்பவும் எனக்குத்தான்!” என்று சிலுப்பியவளைக் கண்டு இதழோரம் மென்னகைப் படர்ந்தாலும்,
“அவருக்கு எல்லா உண்மையும் தெரியுமா டாக்டர்?” என்று கேட்டு பேச்சை திசைதிருப்பினான்.
உண்மையில் அஸ்வத் இதையெல்லாம் அலசியிருந்தான். தன்வீரின் இறப்பிற்கு பிறகு காவல்துறை தன்வீரைப் பற்றி துப்பு துலக்கியிருக்கும். அதில் அவர்களுக்கு கண்டிப்பாக உண்மைகள் தெரிந்திருக்கும் அல்லது இனி தெரிய வரலாம்.
விசாரணையின் போது தேவா தன்னிடம் இளக்கம் காட்டவில்லை என்றாலும், அதீத கெடுபிடிகளும் காட்டவில்லை. அது அம்ருவிற்காகவும் இருக்கலாம் அல்லது தன்வீர் குழுவினரைப் பற்றி அறிந்ததாலும் இருக்கலாம். எது எப்படியோ காவல்துறைக்கு இதுவரை தன் மேல் சந்தேகம் வரவில்லை. அதனால் அவர்களுக்கு முன்னர் அந்த நாசக்கார கும்பலை அழிக்க, தான் முந்திக்கொள்ள வேண்டும் என்பதில் ஸ்திரமாக இருந்தான் அஸ்வத்!
அத்துடன் சத்யநாதன் இன்னும் தன்னை விட்டு வைத்திருக்கிறார் என்றால் ஏதேனும் வலுவான காரணம் இருக்கக்கூடும்.
முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தவள், “நான் எதுவும் சொல்லல.” என்றிட,
“டாக்டர் ப்ளீஸ், டோண்ட் மிஸ்டேக் மீ! நீங்க சொன்னீங்களான்னு கேட்கல. இப்போ இந்த நிமிஷம் என்னை விட நான் உங்களை மட்டும்தான் நம்பறேன். அவர் உங்களைத் தனியா எங்கேயும் போக வேணாம்னு சொல்லிருக்காரே… அதான்… அப்போ அவருக்கு அந்த தாரகேஷ் அப்பா பத்தியும் தெரிஞ்சிருக்கும்னு கேட்டேன்.” என அவளிடம் இறங்கித்தான் பேசினான்.
கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றிருந்தவள் இன்னமும் அவன் முகத்தைப் பார்க்கவில்லை.
அவள் பதில் சொல்லப் போவதில்லை என்றறிந்து மேலும் சொன்னான். “ஸ்டே ஸேஃப் டாக்டர்! எனக்கு முன்னாடியே அந்த கோகிலா மேல டௌட்! உங்ககிட்ட கூட ஆரம்பத்துல அவளைத் தனியா பார்க்க போக வேணாம்னு சொன்னேன். நீங்க தான் அவளுக்கு நம்மளப் பத்தி தெரியாதுன்னு சொன்னீங்க. இதைத்தான் நீங்க சின்னப்பொண்ணுன்னு…” அவன் வாக்கியம் அந்தரத்தில் நின்று போனது, சரேலென திரும்பிய அவளின் தழல் பார்வையில்!
லேசாக துள்ளிவிட்ட உள்ளத்தைத் தட்டிக்கொடுத்து, “சரி… ஸாரி!” என்றான் உள்ளே போய்விட்ட குரலில்!
மீண்டும் வேறுபக்கம் திரும்பியவளைக் கண்டு, ‘இவ்ளோ அடி வாங்கிட்டோம். இன்னும் கொஞ்சம்…’ என்று மனத்தைத் திடப்படுத்தி கொண்டு கசப்பு மருந்தை விழுங்குபவனாகச் சொன்னான். “நீங்க இவ்ளோ சொன்னதுக்கப்புறம் உங்க லவ்’அ நான் தப்பு சொல்லல. ஆனா ரேவ்ஸ்’அ என்னால மறக்க முடியல டாக்டர். எஸ், அஃப்கோர்ஸ்! அவ மோசம்தான்! பட் ஸ்டில் என் பர்ஸனல் லைஃப்ல ஒரு பொண்ணுன்னா அது அவ மட்டும்தான்!”
அம்ருதாவிடம் ஓர் மென்னகை! அதில் ஏனோ இவன் ஜீவனின் அடிநாதம் அடிபட்டு துடித்தது.
புரிந்ததென தலையசைத்துவிட்டு நகர்ந்தாள் அவள்.
“டாக்டர்!”
திரும்பினாள்.
“என்னை மறந்துட்டு உங்கண்ணா சொல்றவரை கல்யாணம் செஞ்சுக்குவீங்க தானே?”
அதே மென்னகை! “காதலுக்கு ஓர வஞ்சனை பார்க்க தெரியலயே அஸ்வத்?”
“விச் மீன்ஸ்?”
“உங்களுக்கு உங்க காதல் எப்டி உசத்தியோ அப்டித்தான் எனக்கும் என் காதல்! என் பர்ஸனல் லைஃப்ல ஒரு ஆம்பளைன்னா… அது நீங்க மட்டும்தான்!”
ஈர உடையில் அப்பிக்கொண்ட காட்டு மஞ்சளின் சாயம் ஓர் உதறலில் சிதறிவிடுமா என்ன?
தன்னைத் திகைப்பில் நிறுத்திவிட்டு செல்பவளையே பார்த்திருந்தான் அஸ்வத். ஒரு காலத்தில் ஓயாமல் காதல் செய்தவனின் மனம் முதல்முறையாக காதலிக்கப்படுவதில் உண்டான அழகிய அவஸ்தையில் நெளிந்து, நெகிழ்ந்தது.
வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும்
கண்டதில்லையே…
When Love takes the driver's seat🚙💖…
Comments
Post a Comment