Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 29

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 29


இரவில் வேலை முடிந்த பின்னும் அண்ணனை அழைக்காமல், மருத்துவமனையிலேயே இருந்தாள் அம்ருதா. குழந்தைகள் நல பிரிவின் டியூட்டி அறையின் ஜன்னலோரம், நாற்காலியில் கால்களை நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டு அதில் கன்னம் சாய்த்து அமர்ந்திருந்தாள். நாசி அவ்விடத்தின் மருந்து வாசனைக்கு பழகிப்போயிருக்க, பார்வை வெளியே அசைந்தாடும் வேம்பின் இலைகளைப் பற்றியிருந்தது. வெளி விளக்கின் வெளிச்சம் அவள் முகத்தில் ஓவியக்கோடுகள் வரைந்திட, அவளின் மனோரதம் அஸ்வத்தையே விரட்டிக் கொண்டிருந்தது.

ஹரிஷ் அவனின் உளநிலை குறித்து சொன்னதிலிருந்து, அஸ்வத் அவன் மகளுக்கு நிகரான… இல்லை! அதையும் விட ஆழமானக் காதலை, அன்பைத் தேக்கி வைத்திருக்கும் இடத்தைத் தனக்கு தந்திருக்கிறான் என்று பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இருந்தும் இவளை, இவள் காதலை மறுதலித்துள்ளான். 

அதுவும் ஏனாம்? அவனுக்கு துரோமிழைத்த ரேவதியை மறக்க முடியவில்லையாம்!

இவளை என்ன இவளிடம் ஊசி போட்டுக்கொள்ள அழும் குழந்தை என்று நினைத்துவிட்டானோ!

அஸ்வத் அப்படி பதறாமல் பொய்யுரைத்ததிலிருந்து அவன் ஏற்கனவே இந்த நிராகரிப்பு நாடகத்திற்கு தயாராகியிருக்கிறான் என்று தெரிகிறது. தன் பிடிவாத மனம் கண்டு அண்ணன்தான் ஏதேனும் சொல்லியிருப்பான்.

ஏதோ என்ன ஏதோ? அஸ்வத்தின் பலவீனத்தைச் சொல்லி, இதெல்லாம் உன் குறைகள் என்று அவன் ரேவதியைத் தான் சொல்லியிருப்பான்‌. நீ ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருந்தவன் என்று அஸ்வத்திற்கு நினைவுபடுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவன் மனத்தை வார்த்தைகளால் கிழித்திருப்பான்.

இந்த கூமுட்டையும் தனக்குள்ளேயே அழுது, அரற்றி இவளை விட்டுக்கொடுப்பதாக நினைத்து… கருமம் போயும் போயும் அந்த ரேவதியின் பெயரைச் சொல்லி இவளை நிராகரித்துள்ளது.

இவளின் பிடிவாதம் அறிந்து, இவளை விலக்குவதற்காகவே அவன் அகத்தின் இஷ்டப் பக்கத்திலிருந்து எப்போதோ மறைந்துபோன ரேவதியின் பெயரைச் சொல்கிறான் என்றால், அது இவளின் நலத்திற்காக அல்லாமல் வேறென்ன இருக்கக்கூடும்? நலத்தினை நாடுபவன் எங்ஙனம் தகுதியில்லாதவனாக ஆவான்?

தனக்கு அஸ்வத்தை விட சிறந்த துணை வேறு யாரும் இருந்துவிட முடியாது. இதை அவனும் அண்ணனும் எப்போது புரிந்துக்கொள்ளப் போகிறார்கள்?

இப்படியாக அவன் நினைவுகளில் கரைந்துக் கொண்டிருந்தவளுக்கு அவளின் அலைபேசியின் ரீங்காரம் திட சித்தத்தை உணர்த்தியது. திரையில் பெயரைக் கண்டவளின் முகம் நொடியில் மாறிப்போனது.

                  ********

அஸ்வத்திற்கு அன்றைய விடியலே அவனுடைய டிடெக்டிவ் வேந்தனின் அழைப்புடன்தான் புலர்ந்தது. வேந்தன் என்றதுமே வேகமாக எழுந்தமர்ந்தான்.

“சொல்லுங்க வேந்தன், எனி அப்டேட்?”

“இல்லாம கால் பண்ணுவேனா, அஸ்வத் சர்?” எனக் கேட்ட வேந்தன் நான்கு நிமிடங்கள் செலவழித்து, புதிய தகவல்கள் சிலவற்றைச் சொன்னான்.

அவன் சொல்ல சொல்லவே, இவன் தனது மடிக்கணினியில் அதற்குரிய விவரங்களைப் படித்தான். 

“ரெண்டு வருஷமா ஹெவி லாஸ்ல போயிட்டு இருந்திருக்குது.”

“லாஸ்ல இருக்க கம்பெனி இப்டி ரிஸ்க் எடுப்பாங்களா வேந்தன்?”

“அதனாலதான் சர் ப்ராப்பர் அப்ரூவல், கன்சென்ட் எதுவுமில்ல. குறுக்குவழி தான் ஒரே வழி! ரிசல்ட் வேணும்ல? அதோட பேக் டோர்ல பொலிடிக்கல் சப்போர்ட்டும் இருக்கும்போது செய்றதுக்கென்ன அஸ்வத் சர்? ஆனா இது நாம நினைச்ச மாதிரி சிம்பிள் கேஸ் இல்ல!”

“ரைட்! இனி நான் பார்த்துக்கறேன். எதுவும் டௌட்ன்னா கூப்பிடறேன். நீங்களும் இன்னும் ஏதாவது விஷயம் கிடைச்சா எனக்கு அப்டேட் பண்ணுங்க ப்ளீஸ்...” 

“கண்டிப்பா செய்வேன் சர். இதுக்கு எதுக்கு ப்ளீஸ்? பாப்பாவுக்கு அப்டி ஆனதை நினைச்சு எனக்கு இன்னுமே மனசு ஆறல. அதனாலதான் எங்க ஏஜென்ஸிக்கு கூட தெரியாம அன்அஃபீஷியலா உங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். மொத்தப் பேரையும் ஒழிக்கற அன்னிக்குதான் எனக்கும் நிம்மதியான தூக்கமே வரும்.”

சில நொடி மௌனத்திற்கு பின், “தாங்க்ஸ் வெரிமச், வேந்தன்.” என்றான் மனதார!

பின் எழுந்து பல்லை விலக்கிவிட்டு, சாந்தி வருவதற்காக வெளிவாசல் கதவையும் உள்ளேயும் திறந்து வைத்துவிட்டு வந்தவனின் சிந்தனை வேந்தன் சொன்ன விடயங்களிலேயே நிலைத்திருந்தது. பெருமூச்சுடன் மகளின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

எத்தனை நேரமோ!

தன் தோளை ஏதோ உரசிச் செல்வதை உணர்ந்து புகைப்படத்திலிருந்து விழிகளை நிமிர்த்தி பார்த்தான். 

சாந்தி நின்றிருந்தார். அவர்தான் தன் முதலாளியைத் தொட்டு அழைப்பதற்கு பயந்து ஒற்றை விரலால் அவன் தோளைச் சுரண்டியிருந்தார். “அஹ்… அது… ரெண்டு, மூணு முறை கூப்பிட்டேன் தம்பி.”

“என்ன?”

அவன் கையிலிருந்த குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு தயக்கத்துடன், “எம்மவன் காலேஜ்ல ஏதோ பரீட்சைக்கு பணம் கட்டணும்னு… சொன்னான்… இன்னும் நாலு வீட்ல கேட்டிருக்கேன் தம்பி… இன்னிக்கு கடைசி தேதியாம் அதான்…” என்றவர் மீண்டுமொருமுறை குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டார். 

அவனின் மகளுடனான நேரத்தில், தான் உள்ளே நுழைந்ததில் உண்டான சங்கடம் அவர் முகத்தில்!

சாந்தியின் இரண்டாவது மகன் பொறியியல் படிக்கிறான் என்று தெரியும். அதனால் பரீட்சை பற்றிய விவரங்கள் கேட்டவாறு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான். செல்லும் சாந்தியின் முகமெங்கும் நிம்மதி படர்ந்திருந்தது. 

ஒவ்வொரு தாய், தகப்பனின் அதிகபட்ச ஆசையே தன் சந்ததிகளின் பாதையைச் செம்மையாக அமைத்துவிட வேண்டுமென்பது தான்! அதற்காக தங்கள் தலையில் எத்தனை சுமைகளையும் சுமக்கத் தயாராகிவிடுகிறார்கள். சாந்தியும் இன்னும் நான்கு வீடுகளில் கையேந்தி இருப்பதாகச் சொன்னாரே!

தானும் தன் மகளின் எதிர்காலம் குறித்து எத்துணை வியாக்கியானங்களுக்கு வியூகம் அமைத்திருந்தோம்? அத்தனையும் வியர்த்தமாகிப் போனதே! மீண்டும் சுயபச்சாதாபத்தில் விழுந்த நேரம், ஹரிஷ் அழைத்தான்.

அதுதான் தனக்குக் கிடைக்கவிருந்த மற்றொரு நிம்மதியைப் பறித்துக்கொண்டானே! இன்னும் எதற்காகவாம் இந்த அழைப்பு? 

எரிச்சலுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்த நொடி, “அஸ்வத்! அஸ்வத்!” என்ற ஹரிஷின் பதற்றக் குரலில் துணுக்குற்றான்.

“என்னாச்சு சர்?”

“அஸ்வத்! அம்ரு அங்கே வந்தாளா?”

“இல்லயே… ஏன் வீட்ல இல்லயா?” இவனும் பதறியபடி, போட்டிருந்த டீ-ஷர்ட், ஷார்ட்ஸுடன் ஸ்கார்பியோவின் திறப்பை எடுத்துக்கொண்டு வெளியேறிட,

“இல்ல, காலைல நான்தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன். அவ இங்கே ட்ரெய்னியா ஜாய்ன் பண்ணினப்பவே அம்ருவைப் பார்த்துக்கணும்னு செக்யூரிட்டீஸ் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இப்போ அவளுக்கு ஆபத்து இருக்கறதுனால எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்க சொல்லி நேத்து கூட சொன்னேன். காலைல நான் அவளை டிராப் பண்ண கொஞ்ச நேரத்துல அவர்கிட்ட, ‘பக்கத்துல ஒரு எமர்ஜென்ஸியாம்’ண்ணா. வந்துடறேன்னு சொல்லிட்டு போயிருக்கா! அரைமணிநேரம் பார்த்துட்டு அவ வரலைன்னதும் எனக்கு சொன்னார். நானும் அப்போ இருந்து அம்ரு நம்பருக்கு டிரைப் பண்றேன். ஸ்விட்ச் ஆஃப்’னே வருது.”

“இவ்ளோ காலைல எதுக்குங்க வரணும்?” எரிச்சல் இழையோடியது இவன் குரலில்!

“அவளோட கேஸ் ஸ்டடிக்காக வந்தா! அடிக்கடி வர்றதுதான். சரி வச்சிடறேன். தேவா கிட்ட சொல்லணும்.”

“இன்னும் சொல்லலயா? அதுக்குள்ள என்னைச் சந்தேகப்பட்டாச்சு.” சூடாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அது இத்தனை நேரம் ஹரிஷ்க்கே தெரியவில்லை. தங்கையைக் காணவில்லை என்றதும் இரண்டாம் சிந்தனையே இல்லாமல், கை தன் போக்கில் அஸ்வத்தை தான் அழைத்தது. தனக்கு பிறகு அவள் மனத்தில் இடம்பெற்றவன் அவன்தானே என்பதைக் கசப்பாய் உணர்ந்தான் ஹரிஷ்.

அஸ்வத் ஒற்றைக் கையால் ஸ்டியரிங்கை வளைத்தவாறு அம்ருவின் எண்ணிற்கு அழைத்தான். ஹரிஷ் சொன்னதைப் போல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அவன் மூளை வேக வேகமாகக் கணக்கிட்டது. வேந்தனின் உதவியுடன் கண்காணித்திருந்த இத்தனை நாட்களில் தாரகேஷின் அப்பாவிற்கும், அந்த மருந்து குழுவின் தலைவருக்கும் எங்கெங்கே கணக்கில் வந்த, வராத இடங்களும் வீடுகளும் இருக்கின்றன? அங்கே ஆட்கள் வசிக்கின்றனரா அல்லது சும்மா பூட்டி கிடக்கின்றதா? காவலுக்கு யார் யார், என்னென்ன நேரத்தில் இருப்பார்கள் என்றெல்லாம் அலசியிருந்தான். 

நிச்சயம் தற்போது அம்ரு காணாமல் போனதில் அந்த அரசியல்வாதி சத்யநாதனின் கை இருக்கவே இருக்க வேண்டும்! அப்படியானால் அவர் அம்ருவை எங்கே கொண்டு சென்றிருக்கக் கூடும்? யோசித்துக் கொண்டிருக்கும் போதே புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ!”

“சர், நான் தேவா!”

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர்!”

“எனி ஐடியா?”

“.......”

“சர் இப்போ நான் இன்ஸ்பெக்டரா பேசல! அம்ருவோட கஸினா கேட்கறேன். இப்போ எங்களுக்கு… ம்க்கும்… உங்களுக்கும் அவதானே முக்கியம்? ப்ளீஸ் ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க.”

“ஐ’ம் சூப்பர் கன்ஃப்யூஸ்ட்! பட்… எனக்கு சில இடங்கள் தெரியும்…” என்றவன் அனுமானமாய் சில இடங்களைக் குறிப்பிட்டுச் சொன்னான்.

அதில் ஒன்று தேவாவிற்கே தெரியாமல் இருந்தது. ஏனெனில் அஸ்வத் சொன்ன ஏனைய இடங்களை, சத்யநானைப் பற்றி துப்பு துலக்கும்போது காவல்துறைக்கு தெரிய வந்திருந்தது. 

அதனால் அந்த ஒரு இடத்தை மட்டும் சொன்ன தேவா, “இந்த ஏரியாவுல உள்ளது எங்களுக்கே தெரியாது சர்… மோர்ஓவர் நம்ம டார்கெட் சிட்டி அவுட்டர்லயே இருக்கும்னு நம்மள டைவர்ட் பண்ணனும்னு கூட அவங்க நினைச்சிருக்கலாம். ஸோ முதல்ல அங்கேயே போய் பார்க்கலாம்.” என்றிட,

“ஓகே, ஆனா உங்களுக்கு நம்பிக்கையானவங்க யாராவது இருந்தா மத்த இடத்தையும் பார்க்க சொல்லுங்களேன்.” என்றதற்கு,

“ம்ம், சிசிடிவியும் செக் பண்ண சொல்லிருக்கேன்.” என்றான் தேவா.

அஸ்வத் சொன்ன இடம் ஒரு ஆங்கில மருந்து கடை. ஒரு தனி நபரின் பெயரில் இயங்கிக் கொண்டிருப்பதால் காவல்துறை பட்டியலில் வரவில்லை. ஆனால் அஸ்வத் இன்னும் இறங்கி வேலைப் பார்த்திருந்ததால் இதுவும் அந்தக் குழுவினரின் தலைவருக்கு சொந்தமான இடம் என்று தெரிந்து வைத்திருந்தான்.

இவன் போனபோது அந்தக் கடை அடைக்கப்பட்டிருந்தது. ஹரிஷூம் தேவாவும் வந்தனர். ஹரிஷின் கண்களில் பயமும் துக்கமும் சரிசமமாக வியாபித்திருந்தது.

அவனை நெருங்கிய அஸ்வத் ஆறுதலாகத் தோள் தட்ட, “பயமா இருக்குது.” என்றான் அவன்.

அஸ்வத்தின் உடல்மொழியில் அசாத்திய தீர்க்கம்! “ஒருத்தன் ஒருமுறை தான் முட்டாள் ஆவான். முட்டாளா இருந்து ஒரு அம்முவை இழந்தேன். இப்போ நிச்சயம் இன்னொரு அம்முவை இழக்க மாட்டேன்!”

அம்முவை இழந்துவிடுவோமோ என்ற அதீத பயத்திலும் அழுத்தத்திலும் அஸ்வத்திற்கு தன்னின் ஆழ் மனநிலை புரிந்துவிட்டதோ என்று பார்த்தான் ஹரிஷ். புரிந்திருக்கலாம். ஆனால் இன்னமும் அவனின் வெளிமனம் அதனை உணரவில்லை என்று தெரிந்தது.

அவனோடு சண்டை பிடிக்க இது நேரமில்லை; ஹரிஷின் துக்கம் அதற்கு இடங்கொடுக்கவுமில்லை. எனவே அமைதியாகவே நிற்க, தேவா கடை ஷட்டரில் காதை வைத்து உள்ளே சப்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தான்.

“கடை பத்து மணிக்கு மேலே தான் திறப்பாங்க சார்.” என்று போகிறபோக்கில் ஒரு மனிதர் சொல்லிவிட்டு நடந்தார்.

அந்த உயர்ந்த படிகளிலிருந்து இறங்கி வந்த தேவா, “உள்ளே யாரும் இருக்கற மாதிரி தெரியல.” என்றிட, 

“அப்டீன்னா அந்தாளோட நீலாங்கரை பங்களா போய் பார்ப்போம்.” என்றான் ஹரிஷ்.

“சேர்ந்து போக வேணாம். ஆளுக்கொரு இடம் போய் பார்க்கலாமே? நமக்கு டைம் இல்ல!” - அஸ்வத்

மூவருக்குமே உள்ளே அடித்துக்கொண்டது. அவன் சொன்னது சரியென பட்டதால் மூவரும் பிரிந்து சென்றனர்.

காலை பத்து மணி ஆனபோது மூவரும் ஆளுக்கொரு திசையில் ஏமாற்றத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தனர். 

மூவரும் அலைபேசி இணைப்பில் இணைந்திருக்க, “ஹாஸ்பிடல் சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தாச்சு. இந்த பொட்டட்டோ அதுவே தான் வெளியே போகுது. இதுக்கு மேல வெய்ட் பண்ண வேணாம் அத்தான். நான் எஃப்ஐஆர் போட்டுடறேன்.” என்றான் தேவா.

“நான் நேரடியா அந்த எம்எல்ஏவைப் பார்க்கற ஐடியால இருக்கேன். அந்தாளை மிதிச்சா உண்மை தெரிஞ்சிடும்.” - அஸ்வத்.

“உனக்கு மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பா?” - ஹரிஷ்.

“எனக்கில்ல சர். ஆனா உங்க தங்கச்சி மனசுல அந்த நினைப்பு இருக்குது. என்னோட அந்த இமேஜ்’அக் காப்பாத்தணும் பாருங்க…” கர்வம் தெறித்தது இவன் குரலில்!

“பெரிய இமேஜ்! உனக்கு ஹெல்ப் பண்ண போய் தான் அவ பிரச்சினைலயே மாட்டிக்கிட்டா! அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு…”

“ஷட் அப்! உங்க மாப்பிள்ளை - மச்சான் சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க. இப்போ என்ன சொல்றீங்க அத்தான்? கம்ப்ளெய்ண்ட் தர்றீங்களா என்ன?”

“மச்சான் மாப்பிள்ளை மண்ணாங்கட்டின்ன… உன்னைக் கொன்னுடுவேன் தேவா…” என்று ஹரிஷ் இரைந்த போது, அவனை அம்ருதா அழைத்தாள்.

அதை இவர்களிடம் சொல்லும் முன்பே அவன் விரல் அவசர செய்கையாக அழைப்பை ஏற்றிருந்தது. ஹரிஷின் இணைப்பு ‘ஹோல்டில்’ இருப்பதாகச் சொல்லப்பட்டதில் மற்ற இருவரும் பதற்றத்தில் இருந்தனர். 

ஹரிஷ் இரு நிமிடங்கள் கழித்து மீண்டும் இணைப்பில் வந்தான். “தேவா டேய்! கிளம்பு! அம்ரு அந்த கோகிலா கூப்பிட்டான்னு அவ வொர்க் பண்ற ஹாஸ்பிடல் போயிருக்கா.” 

அஸ்வத் அங்கே அருகே தான் இருந்ததால் உடனே போய்விட்டான். அவளைத் தேடியவாறே அவள் எண்ணிற்கு அழைக்க, அதன் ரீங்கார சப்தம் இத்தனை நேரம் தவித்தலைந்த மனத்திற்கு குளிர் காற்றைத் தந்தது.

“அஸ்வத்!”

அவள் குரல் பாதி உயிரைத் தருவித்திட, முகம் பார்த்தால் சொச்ச உயிரும் மோட்சம் பெற்றுவிடும். “எங்கே இருக்க?”

“இங்கே பின்னாடி இருக்க ரெக்கார்ட் ரூம்ல! பின்பக்கம் வந்துட்டு லெஃப்ட்ல திரும்புங்க. இந்த பக்கம் அதிக ஸ்டாஃப்ஸ் யாருமில்ல. ஆனாலும் கவனமா வாங்க.”

அவள் சொன்னபடி பின்புறமாக உள்ளே நுழைந்தான்.

“யாரை சர் பார்க்கணும்?” டீ-ஷர்ட்டும் ஷார்ட்ஸும் செருப்புமாக, வியர்வை துளிர்க்க விறுவிறு நடையில் நேரே உள்ளே சென்றவனை நிறுத்தினாள் ஒரு செவிலியர்.

திடுமென கேட்டதும் பதிலை யோசித்திராத அஸ்வத் ஒரு நொடி பதிலைத் தேட, “பத்ரி சர் ஆளுன்னு சொல்லுங்க.” என்று சொல்லிக் கொடுத்தாள் அம்ருதா.

இவனும் அவள் சொன்னதை அப்படியே சொல்ல, மீண்டும் அவன் தோற்றத்தை விநோதமாகப் பார்த்தவள், “ஓ! நேரா போங்க சர்.” என்று வழிகாட்டினாள்.

‘Record Room' என்று செவ்வக பலகையில் அடையாளம் காட்டிய அறைக்கதவைத் தள்ள, அஸ்வத்தின் காலடியில் பொத்தென்று சரிந்து விழுந்தது ஒரு உடல்!

உயிர் கூட்டை விட்டு பறந்ததைப் போல் பதறிவிட்டான். “அம்ருதாஆஆ!?”

“ஷ்ஷ்! அஸ்வத் நான் இங்கே இருக்கேன்.” என்றவள் ஒரு ரேக்கின் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்தாள்.

அதன்பின் கீழே விழுந்திருந்த உருவத்தைப் பார்க்க அது தாரகேஷ், கோகிலா மற்றும் தன்வீர் குழுவினரை வழி நடத்திய தலைமை மருத்துவர் பத்ரிநாத்!

ஆசுவாசம் கொண்டு தளர்ந்து நின்றான். அம்ருதா வெளியே வர உதவியவன், நொடியையும் வீணாக்காமல் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவள் முகமெங்கும் முத்தம் வைத்தான். அவள் கூந்தலில் முகம் புதைத்து அதனைக் கண்ணீரில் நனைத்தான்.

அம்ரு கூட அவனிடம் இந்த அன்பை எதிர்பார்க்கவில்லை. வலுக்கட்டாயமாக விலகி அவன் முகம் பார்த்தாள்.

விழிகள் சிவந்திருக்க, உணர்ச்சி வயத்தால் முகம் கம்பீரம் தொலைத்து சிறுவனாகத் தெரிந்தது. “அம்மு!”

அஸ்வத் தன்னை அங்ஙனம் அழைத்ததில் பரபரத்தாள் அவள். “எஸ், உங்க அம்மு! உங்களுக்கு எல்லாம் புரியுதா, இப்பவும் நான்… நான்… அம்முன்னு..?”

எப்போதும் ஹரிஷ் இருக்கும்போது தானே அஸ்வத் இவளை அம்முவாக உணர்வான்! அப்போதெல்லாம் தானே மன எழுச்சியால் இவளைக் கொன்றுவிட நினைப்பான்?

அவளின் கேள்விக்கு ஆமோதிப்பாய்த் தலையசைத்தான். 

“இப்போ என்னை ஏதாவது செய்யணும்னு தோணுதா?” அவளைக் காயப்படுத்தத் தோன்றுகிறதா என்ற அர்த்தத்தில்தான் அவள் கேட்டாள்.

ஆனால்,

“ம்ம்!” என்றவன் சற்றே குனிந்து அவளின் தாடை உயர்த்தி இதழணைத்துக் கொண்டான்.

நேற்று மனத்தை மறைத்து அவளை அழ வைத்து அனுப்பியவன் இன்று அதே மனத்திற்கு உயிர் வளி வேண்டி, யாரைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் உள்ளத்துக் காதலை அவள்முன் சமர்பித்துவிட்டான். தான் கொண்ட காதல் கை கூடிவிட்டதில் உற்சாகமாகிவிட்ட அம்ரு, குதிங்கால் உயர்த்தி அவனைக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

சில நொடிகளில் மெல்ல பிரிந்தவன் நெற்றி முட்டி சற்றுநேரம் ஆசுவாசம் கொண்டு நிற்க, அம்ரு கீழிறங்கி அவன் நெஞ்சுக்குள் புதைந்து கொண்டாள். அவள் தன்னிடம் தான் இருக்கிறாளா என்று உறுதிபடுத்துபவன் போல் குனிந்துப் பார்த்துக்கொண்டவன், கலைந்திருந்த அவள் கூந்தலை ஒதுக்கி சரி செய்தான்.

அம்ருவின் முகமெங்கும் ஆங்காங்கே தடிப்புகளுடன் சிவந்திருந்ததை அப்போதுதான் கவனித்தான். “என்னாச்சு? அடிச்சானா?”

கோபத்துடன் தனது காயங்களைப் பெருவிரலால் வருடியவனைத் தடுத்த அம்ருதா, துரிதகதியில் அங்கிருந்த தன் முதுகுப் பையிலிருந்து கையுறைகளை எடுத்துக் கொடுத்தாள். 

“சொல்றேன் அஸ்வத்! சீக்கிரம் இதைப் போடுங்க. இவரை அந்த ரேக் பின்னாடி தூக்கிப் போடணும். நமக்கு டைம் வேணும். அதுவரை இவர் மயக்கத்துலேயே இருக்கறது தான் பெட்டர்.” என்றவள், கொண்டு வந்திருந்ததில் மிச்ச மருந்தை ஏற்றி அவருக்கு ஊசியையும் செலுத்தினாள்.

அவள் எல்லாவற்றுக்கும் ஆயத்தமாகி வந்திருப்பதைச் சந்தேகமாகப் பார்த்தான் அஸ்வத். கையுறைகளை அணிந்துக்கொண்டே, “இந்தாளு அவனுங்க டீம் ஹெட் தானே?” என்று வன்மத்துடன் உறுமியவன் அவரின் கழுத்தில் தன் செருப்புக் காலால் மிதிக்கச் செல்ல, பதறி முன்னே வந்து தடுத்தாள் அம்ருதா.

“நீங்க உள்ளே வர்றதை நர்ஸ் பார்த்திருக்காங்க. கிளம்பலாம் அஸ்வத்! யாரும் வந்துட்டா பிரச்சினை ஆகிடும்.” என்றிட,

“எனக்கு என்ன ஆனாலும் எதைப் பத்தியும் கவலை இல்ல! என் அம்முவுக்காக நான் ஜெயிலுக்கு போறதுல எனக்கு நிம்மதிதான்!”

“அப்போ எனக்கு எதுவும் ஆனா கூட உங்களுக்கு பிரச்சினை இல்ல. அப்டித்தானே? இந்தாளுக்கு ஏதாவது ஆச்சுன்னா கோகிலா என் பேரைத் தான் முதல்ல சொல்லுவா!”

அஸ்வத்தின் ஆக்ரோஷம் நிதானத்திற்கு திரும்பியது.

தன்னைச் சுட்டிக்காட்டி, “இந்த அம்முவை விட்டுட்டு ஜெயிலுக்கு போறது நிம்மதின்னா தாராளமா அந்தாள் மேல கை வைங்க!” என்று விருட்டென திரும்பி நின்றுகொண்டாள்.

அவரை அப்போதைக்கு எதுவும் செய்ய முடியாததை எண்ணி வருத்தமுற்றவன் போல் பார்த்துவிட்டு, அவள் சொன்னதைப் போல் அவரைத் தூக்கி ஒரு அலமாரியின் பின்னால் சாய்த்து வைத்தான். 

அவன் செயலைப் பார்த்துவிட்டு அம்ருதா வெளியேறிட, பின்புறம் வழியே சென்று கொண்டிருந்தவளைத் தன் வேக எட்டுக்களுடன் எட்டிப் பிடித்தான்.

“எதுக்கு யார்க்கிட்டேயும் சொல்லாம அவளைப் பார்க்க வந்த?”

“.........”

“அவ எங்கே போயிட்டா? அந்தாள் ஏன் மயங்கி கிடக்கறான்?”

அவனின் எந்தக் கேள்விக்கும் பதிலுரைக்காமல் விறுவிறுவென நடந்தவள், மருத்துவமனையை விட்டு பல அடி தூரம் தள்ளி சென்று, நடைபாதையின் மீதேறி ஒரு மரத்தின் நிழலில் நின்றாள்.

“கேட்டுட்டு இருக்கேன்ல? அங்கே என்னவோ உங்கண்ணன்காரன் நான்தான் உன்னைக் கடத்திட்ட மாதிரி, ‘அம்ரு அங்கே வந்திருக்காளா?’ன்னு கேட்டு கடுப்படிக்கறான். நீயும் இப்போ கேட்கறதுக்கு பதில் சொல்லாம எரிச்சலைக் கிளப்பற!”

தவறிழைத்த பாவனையில் மெதுவே இமைகளை மட்டும் உயர்த்திப் பார்த்தாள் அவள். வில்லங்கமாக எதையோ செய்து வைத்திருக்கிறாள் என்றது அவள் பார்வை!

“என்னடி செஞ்சு வச்சே?”

காரணம் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு உள்ளம் பதறி வெகுண்டெழுந்தவன் அவளை ஓங்கி அறைந்திட,

அக்காட்சியைக் கண்டபடி அவ்விடம் வந்து சேர்ந்தனர் ஹரிஷ் மற்றும் தேவா!


Distance closing🚗; Danger rising⚠️…


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...