Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 30

 



அத்தியாயம் 30

அம்ருதாவை அடித்தப் பின்னும் கோபம் குறையாமல் மறுபக்கம் திரும்பி, இடையில் கை வைத்து, கீழே கிடந்த கல்லை உதைத்துத் தள்ளி தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினான் அஸ்வத். 

தேவாவுடன் அவர்களைப் பார்த்தவாறு வந்த ஹரிஷ், “என்ன செஞ்ச அம்மு?” எனக் கேட்டவன், பதிலை எதிர்பாராமல் அஸ்வத்தைத் தன்புறம் திருப்பி, “அவ என்ன செஞ்சிருந்தாலும் அவளை அடிக்கற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?” என்று முஷ்டியை மடக்கி அவன் முகத்தில் குத்த போக,

“அண்ணா ப்ளீஸ்…” அவனைத் தடுத்து இருவருக்கும் இடையே வந்து நின்றாள் அம்ருதா.

“எல்லாம் நீ கொடுக்கற இடம் அம்மு! யாரோ எவனோ எப்டி போனா உனக்கென்ன?” என்று பல்லைக் கடிக்கையில், அம்ரு மீது அஸ்வத்தின் பார்வை மாற்றத்தைக் கண்டுவிட்டு தன்னை நிலைப்படுத்தினான் ஹரிஷ்.

ஹரிஷ் அம்ருதாவின் அருகே இருக்க, அதிலும் அவனின் அம்மு என்ற அழைப்பு வழக்கம்போல அஸ்வத்தின் உளநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இது அதற்கான நேரமல்ல! அஸ்வத்தை உடனடியாக அமைதிபடுத்தியாக வேண்டும்! அதனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான் ஹரிஷ்.

என்னதான் காதலை வெளிப்படுத்தியிருந்தாலும், சற்றுமுன் நிகழ்ந்த அந்நிகழ்வினை அஸ்வத்தின் ஆழ்மனம் நம்புவதற்கு நேரம் வேண்டுமல்லவா? எனவே ஹரிஷின் மீதான, அவனுடைய அம்மு மீதான பொறாமை தலை நீட்ட ஆரம்பித்தது.

சட்டென்று அமைதியாகிவிட்ட அண்ணனைப் பார்த்தாள் அம்ரு.

அவளைக் குறிப்பாகப் பார்த்து, “அவனை என் கண்ணு முன்னாடி நிற்காம போய் தொலையச் சொல்லு!” என்று கோபம் போல் அவளை அஸ்வத் புறமாகத் தள்ளிவிட்டு திரும்பிக்கொள்ள, 

தன் நெஞ்சில் மோதிய அம்ருவின் வாசத்திலும் ஸ்பரிசத்திலும் நடப்பை உணர்ந்துகொண்டது அஸ்வத்தின் உள்மனம்! அவன் இமைதட்டி விழித்ததிலும் நொடியில் அவன் தேகம் சிலிர்த்தடங்கியதிலுமே அதனை ஆச்சரியமாக கிரகித்தாள் அம்ருதா. முன்பொருமுறை கோயிலினருகே அவன் இவள் கழுத்தை நெரிக்கையில், இவளின் கரம் அவன் முகத்தை வருடியபோது அஸ்வத்தின் ஆவேசம் குறைந்ததை நினைவு கூர்ந்தாள்.

ஆக, தன் அண்மை மட்டுமே அஸ்வத்தின் மன எழுச்சிக்கான மருந்தா? இவள் அவனுக்கே அவனுக்கு என்று அவன் மனம் நம்பினால் மட்டும், ஹரிஷின் மேலுள்ள பொறாமை குறைந்து, அவனின் ஆவேசமும் மறைந்து போகிறது. அவனின் அம்முவிற்கு மாற்றாக அவன் மனம் ஹரிஷ் வைத்திருக்கும் அம்முவைக் கேட்கிறது.

இது அவனின் மனக்கோளாறை முழுவதுமாக உள்வாங்கியிருக்கும் அண்ணனுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருக்கும். அதனால்தான் தன்னை, ‘அவனிடமிருந்து விலகியிரு!’ என்று மாற்றி சொல்லியிருக்கிறான்; தான் மறுத்தும் கூட இன்னமும் தன் திருமணத்திலும் தீவிரமாக இருக்கின்றான். அனைத்தையும் நொடியில் புரிந்துகொண்ட அந்த மருத்துவப் பெண் அஸ்வத்தின் கரம் பற்றி ஹரிஷின் மகிழுந்தின் பின்னால் அழைத்துச் சென்றாள்.

அதனைக் கண்டும் கையாலாகாத்தனமாய்ப் பல்லைக் கடித்து நிற்கும் ஹரிஷைக் குழப்பத்துடன் பார்த்தான் தேவா. வந்த வேகத்திற்கு அஸ்வத்தை அடித்துவிடுவான் என்றே நினைக்க, அவன் சட்டென சமாதானம் பேசுபவன் போல் மாறி, அதற்கும் அவன் தங்கையைத் தூது விட்டதுதான் பிரதானமாகத் தெரிந்தது தேவாவிற்கு!

“ஆர் யூ ஆல்ரைட் அத்தான்?”

“ஏதாவது சொல்லிடப் போறேன். பேசாம இரு!”

“இல்ல, எனக்குத் தெரியாம ஏதோ விஷயம் இருக்குது. இல்லன்னா ஒருவேளை பைத்தியக்கார டாக்டருக்கே…” என்று அவனைச் சந்தேகமாகப் பார்க்க,

“போலீஸுன்னு பார்க்காம அடிச்சிடுவேன் தேவா!” என்று எகிறினான் ஹரிஷ்.

“அப்போ சொல்லுங்க. எதுக்கு ஸ்பிளிட் பர்ஸ்னாலிட்டி மாதிரி நடந்துக்கறீங்க? நம்ம ஸ்கார்பியோவுக்கு என்ன பிரச்சினை? அதுவும் அம்ருவால மட்டும்தான் தீர்க்க முடியும் போலருக்குது?”

“கொஞ்ச நேரம் கூட உன் போலீஸ் மூளையைக் கழட்டி வைக்க மாட்டியாடா?” என ஆச்சரியத்தை விழுங்கி ஆற்றாமை போல் கேட்டவன், அஸ்வத்தின் உளநிலை பற்றி சுருங்கச் சொன்னான்.

“இன்ட்ரஸ்டிங்! அப்டீன்னா இப்போ அம்ரு அவர் பக்கத்துல இல்லாம உங்க பக்கத்துல இருந்திருந்தா பொறாமைல அவளைப் போட்டுத்தள்ள நினைப்பாரா என்ன?”

“ம்ம், அதுக்குத்தான் அவனை ரிலாக்ஸ் பண்ணி அனுப்பிட்டு வர சொன்னேன். இப்பவும் அந்த சைக்கோவுக்கு அம்ருவைக் கொடுக்கலாம்னு சொல்லுவியா?”

“ப்ச்!” என ஆமோதிப்பாய்த் தோள் குலுக்கினான் தேவா. “அம்ருவை அவர்கிட்ட கொடுத்துட்டா தான் அவர் பிரச்சினை சால்வ் ஆகிடுமே? அப்புறம் ஏன் நீங்க சொல்ற மாதிரி சைக்கோவா இருக்கப் போறார்?”

“அவன் எனக்கு வெறும் ஒரு பேஷண்ட்! என் பேஷண்ட் குணமாக மருந்து, மாத்திரை மாதிரி என் தங்கச்சியைத் தூக்கி கொடுக்க முடியாது தேவா!”

“அது உங்க தங்கச்சிக்கு பிடிக்காத பட்சத்துல அத்தான். அவ ‘உங்ங்க பாஷைல’ அந்த சைக்கோ தான் வேணும்னு சொன்னா என்ன செய்வீங்க?”

ஹரிஷின் கோபம் எல்லை மீற, பெரிது பெரிதான மூச்சுக்களுடன், “அவ நான் பார்க்கற மாப்பிள்ளையை தான் கட்டிக்குவா!” என்றான்.

“ஆனா  அஸ்வத் நீங்க பார்க்கற மாப்பிள்ளையை விட ஆயிரம் மடங்கு அவளைப் பத்திரமா பார்த்துப்பார் அத்தான். ஏன்னா அவரைப் பொறுத்தவரை இது அவரோட செகண்ட் சான்ஸ்! செத்துப் பிழைச்சு வந்தவனுக்கு அரிதிலும் அரிதா கிடைச்சிருக்க மூச்சு! அதோட வேல்யூ அவருக்கு தெரியும். நிச்சயம் அம்ருவை அவரோட உயிரா தான் நினைப்பார்.”

“நீ என்ன சென்டிமென்டா உருட்டுனாலும் என் தங்கச்சியை அவனுக்கு கொடுக்கமாட்டேன், போடா!” என்றான் ஹரிஷ் உறுதியுடன்!

அங்கே அம்ருதா புழுதியைக் கிளப்பிக்கொண்டு பறந்த வாகனங்களையும் எதிரே வரிசையாக இருந்த சிறிய, பெரிய கடைகளையும் பார்த்தபடி அஸ்வத்திடம், “நான் சொல்லாம வந்தது தப்புதான். ஆனா செஞ்ச விஷயம் சரின்னு தான் சொல்லுவேன். உண்மையைச் சொல்லிருந்தா அண்ணனும் நீங்களும் என்னைத் தடுத்திருப்பீங்க தானே? அதான் சொல்லாம வந்தேன்.” என்று அவன் பார்வையைத் தவிர்க்க,

“அடிச்சதுக்கு ஸாரி!” என்றதும், இமை உயர்த்திப் பார்த்தாள்.

அவள் பார்வையைச் சந்தித்தவாறே, “டாக்டர் மேடம் அவனுங்களைப் போட்டுத் தள்ள எனக்கு ஹெல்ப் பண்றதா சொன்ன மாதிரி ஞாபகம்!” சிறு புன்னகையில் ஏளனம் இழையோடக் கேட்டான்.

“அஸ்வத் ப்ளீஸ்… முதல்ல நான் ஏதோ கோபத்துல தான் அப்டி சொன்னேன். ஆனா உண்மைலயே ஆரம்பத்துல இருந்து எவிடென்ஸ் கலெக்ட் பண்றதுதான் என்னோட ப்ளானே!”

“ஸோ? மேடம் என்கிட்ட இருந்து அவனுங்களைக் காப்பாத்தி விடப் போறீங்க?”

விழிகள் நீரில் மிதக்க அவனை‌ ஏறிட்டவள் இல்லையெனத் தலையசைத்தாள். “என்னோட அஸ்வத்தை எனக்கே எனக்கா காப்பாத்தி வச்சுக்க போறேன்.”

தன்னைத் தடுமாறச் செய்யும் அவளின் அன்பினைக் கண்டு பெரிய பெரிய மூச்சுக்களாக எடுத்தவன், “டாக்டர், என்னை டைவர்ட் பண்ண டிரைப் பண்ணாதீங்க! அவனுங்களைக் கொன்னு அவனுங்க இரத்தத்தை என் கையில பார்க்காத வரைக்கும் என் ஆத்திரம் அடங்காது.” என்றுவிட்டு சட்டென்று திரும்பி நடந்தான்.

இரண்டெட்டு வைத்துவிட்டு மீண்டும் வந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

அம்ரு திகைத்துப்போய், “ரோட்டுல நிற்கறோம்!” என்று சுற்றும்முற்றும் பார்க்க,

“அட! என் சட்டையைப் பிடிச்சு நச்சுன்னு கிஸ்ஸடிக்கவான்னு கேட்ட டாக்டரை இப்டி கூட பதற வைக்கலாமா?” என்றான் உல்லாச மனநிலையில்!

“அஸ்வத்!”

“ஒண்ணுமில்ல, உங்கண்ணன் கிட்ட ஏதோ சேஞ்சஸ் தெரியுது. இல்லன்னா உன்னை என்கிட்ட பேச அலோவ் பண்ணிருக்க மாட்டாரே? அப்டி பேச அனுப்பிட்டு இவ்ளோ நேரம் சும்மாவும் இருந்துட மாட்டார்.”

உண்மையில் இதைக் கேட்கத்தான் திரும்ப வந்தான். ஆனால் இவன் பேசியதில் அம்ருதா தவிப்புற்று நிற்பது கண்டு அவளை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள எண்ணி, பொது இடம் என்பதால் அதைத் தவிர்த்து ஓர் நொடியில் உச்சந்தலையில் முத்தம் வைத்து விலகியிருந்தான்.

தன் அண்ணனைப் பற்றி எத்தனைக்கு கணிக்கிறான் என்று உள்ளுக்குள் வியந்த அம்ருதா, “அவன் நீங்க என்னை அடிச்சிட்டீங்கன்ற கோவத்துல இருக்கான். எங்கே உங்களைத் திருப்பி அடிச்சிடுவோமோ என்னவோன்னு தான்…” எனும்முன்,

மென்னகை புரிந்த அஸ்வத், “டாக்டர் மேடம் பீடியாட்ரிக் படிக்கறாங்களா? பொய்யாலஜி படிக்கறாங்களான்னு தெரியல. எனக்கு டக்குன்னு பொய் சொல்ல தான் வராது. பொய் சொல்றவங்களை ஈஸியா அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியும், மை டியர் அம்மு! தேர்’ஸ் சம்திங் ஆஃப்…” என ஹரிஷின் புறம் கண்களால் சுட்டினான்.

அவள் விழித்து நிற்பது கண்டு மேலும் சிரிப்பு பொங்கியது.

அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, “உனக்கு ஒரு வீடியோ அனுப்பிருக்கேன்.” என்றான்.

எடுத்துப் பார்க்க அது தன்வீரிடம் வாங்கிய வாக்குமூலம்! அதைக் கண்டு விழிகள் விரித்தாள் அம்ரு! 

“நீ தேடுற எவிடென்ஸ்! எனக்கு அகெய்ன்ஸ்டாவே இருந்தாலும் என் அம்மு கஷ்டப்படறதை நான் விரும்பல. அவனுங்களை என்கிட்ட இருந்து காப்பாத்த தானே டிரைப் பண்ற? ஓப்பன் சேலன்ஞ் டாக்டர்! நீங்களா நானான்னு பார்த்துடுவோம். ஆல் தி வெரி பெஸ்ட், டாக்டர் அம்ருதா நடராஜன்!”

சற்று நேரத்தில் அவளை யாரோ உலுக்க இமை தட்டி விழித்தாள். தேவாவும் ஹரிஷூம் நின்றிருந்தனர்.

“ஒரு
ரோலர் பொட்டட்டோவே
ரோட்ரோலரைப் பற்றிய
பயமில்லாமல்,
நடுரோட்டில் 
கண்ணைத் திறந்து
வைத்துத் தூங்குகிறது.
அடடே ஆச்சர்யக்குறி!” இரு விரல் குவித்து ஒன்றுக்குக் கீழ் ஒன்றாகக் கவிதை(?) வரைந்த தேவாவை முறைத்தாள் அம்ருதா.

“பின்ன? உன் ஆளு போய் ஒரு மாமாங்கம் ஆச்சு. இன்னும் அங்கேயே முறைச்சு பார்த்துட்டு இருக்க?”

“உன்னை அவன் எதுக்கு அடிச்சான் அம்மு? சொல்லாம கொள்ளாம நீ ஏன் இங்கே வந்த?” 

தங்களை அப்படி அலைகழித்ததற்காக ஹரிஷே அவளை அடித்துவிடும் கோபத்தில்தான் இருந்தான். ஆனால் அதையே அஸ்வத் செய்தது கண்டு தங்கை மேலிருந்த பாசம் முண்டியடித்து கொண்டு வந்துவிட, அந்தக் கோபம் அஸ்வத் பக்கமாய்த் திரும்பிவிட்டது.

“அச்சோ! ஆமாண்ணா! நாம ரொம்ப நேரம் இங்கே இருக்க வேணாம். நம்ம ஹாஸ்பிடலும் வேணாம். வேற எங்கேயாவது போய் பேசலாம்.”

“ம்ம்! உன்னால இன்னிக்கு எனக்கும் வேலை ஓடல. ஒரேடியா லீவு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான். நீங்களும் பேசாம எங்க வீட்டுக்கு வாங்க அத்தான்.”

“அத்தைக்கு பதில் சொல்ல முடியாதுடா. வேற எங்கேயாவது...” 

“அம்மா எங்க பாட்டி வீட்டுப்பக்கம் கல்யாணம்னு நேத்தே கோயம்புத்தூர் போயிட்டாங்க. அப்பாவும் தம்பியும் நைட் தான் வருவாங்க.” என்றிட, மூவருமாக தேவா வீட்டிற்கு சென்றனர்.

                *********

தன் முன்னால் முகம் முழுவதும் வீங்கி அழுது களைத்த முகத்துடன் அமர்ந்திருந்த கோகிலலக்ஷ்மியைச் சாந்த ஸ்வரூபியாய்ப் பார்த்திருந்தார் சத்யநாதன். 

அருகேயுள்ள மடிக்கணினி திரையில், அவரது மருத்துவமனையில் அம்ருதா நடமாடுவது, அஸ்வத் உள்நுழைவது பின்னர் அவன் அம்ருவை வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.

“நிஜமா அவளுக்கு எந்த எவிடென்ஸையும் கொடுக்கற எண்ணம் எனக்கில்ல அங்கிள். தன்வீர் இனி இல்லன்னு தெரிஞ்சதும் என்னால தாங்க முடியல.” 

அழுதாள். 

“நிச்சயம் அந்த அஸ்வத்தும் அம்ருதாவும் சேர்ந்துதான் அவனைக் கொன்னிருக்கணும்! முதல்ல அவளைத் தூக்கினா பின்னாடியே அவனும் வருவான்னு நினைச்சுதான் எல்லா டீடெய்ல்ஸூம் கொடுத்திடறேன்னு ஏமாத்தி அவளை வர சொன்னேன்.” 

குமுறி அழுதாள்.

“முதல்ல என் வீட்டுக்கு தான் வர சொன்னேன். அவ அப்டிலாம் தனியான இடத்துக்கு வர முடியாது. பொதுவான ஒரு இடம்… உங்க ஹாஸ்பிடலா இருந்தா கூட பரவாயில்லன்னு சொன்னதும்தான், நம்ம ஹாஸ்பிடல்னா எனக்கு இன்னும் வசதின்னு நினைச்சு வர சொன்னேன். அவ்ளோ காலைல வந்தா யாருக்கும் சந்தேகம் வராம முடிச்சிடலாம். அப்புறம் எனக்கு செக்யூரிட்டிக்கு நீங்க அனுப்பின உங்க ஆளுங்களை வச்சு பாடியை டிஸ்போஸ் பண்ணிடலாம்னு நினைச்சு… ஆனா அவ அப்டி செடடிவ்ஸ் எடுத்துட்டு வருவான்னு நான் யோசிக்கல!”

வந்ததிலிருந்து மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்லி அழுது கொண்டிருக்கிறாள். 

எரிச்சலுற்றவர் கேட்டார். “இப்போ மொத்த எவிடென்ஸையும் தூக்கிட்டு போயிட்டாளே? என்னம்மா செய்ய போற? உன்னோட சேர்ந்து நானும்ல கம்பி எண்ணனும்?”

அவரின் நிதானப் பேச்சில் இன்னும் தங்களுக்கு வாய்ப்பிருக்கிறது என்றெண்ணி, “நமக்கு டிபார்ட்மெண்ட்ல ஆளுங்க இருக்காங்க, அவ்ளோ சீக்கிரம் மாட்டிக்க மாட்டோம்னு சொன்னீங்களே அங்கிள்?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

“அதுக்காக என்னை ஒரு வார்த்தை கூட கேட்காம நீயே இவ்ளோ பெரிய முடிவெடுப்பியாம்மா? என்ன பொண்ணும்மா நீ! உங்க டீம் ஹெட்டுன்னு ஒரு உதவாக்கரை வெள்ளரிப்பழம் இருப்பானே… அவனை எங்கே? இருக்கானா? இல்லை அந்தாளும் ஒரு ஊசிக்கே சிதறிட்டானா?”

“அவருக்கு ஓவர் டோஸ் இன்ஜெக்ட் பண்ணிருக்கா அங்கிள். பெட்ல அட்மிட் பண்ணி டிரிப்ஸ் போட்டிருக்கோம். இன்னும் கான்ஷியஸ் வரல. அப்சர்வேஷன்ல தான் இருக்கார்.”

கடுப்பாகிவிட்டார் மனிதர். "ஒரு சின்னப்பொண்ணு உள்ளே வந்து நம்ம ரகசியமா வச்சிருக்க பொருளை அத்தனை நேக்கா எடுத்துட்டு போயிருக்கா... நீங்க எல்லாம் அவ போட்ட ஒரு ஊசியில மல்லாந்து கிடந்திருக்கீங்க? ம்ம்? உங்களை நம்பி இந்த வேலையை ஆரம்பிச்சான் பாரு என் புள்ள... ****! செத்துத் தொலைஞ்சிட்டான். இல்ல... அவனை நானே…” 

எப்போது அஸ்வத் கோயிலினருகே உள்ள மிதிவண்டி கடையில் இவர்கள் ஆட்கள் ஒருவனை மூர்க்கமாகத் தாக்கியது தெரிந்ததோ, அப்போதே அவனுக்கான நாளைக் குறித்துவிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அதனைச் செயல்படுத்த நினைக்கையில், மறுநாள் காலையிலேயே தன்வீரின் மர்மமான இறப்புச் செய்தி வந்ததில் நிதானித்தார் சத்யநாதன். 

மறுபுறம் இவரின் மகன் தாரகேஷ் உடன்படிக்கை செய்திருந்த மருந்து நிறுவனம், ஆராய்ச்சி எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிய தங்களின் டெக்னிக்கல் குழுவை நேரில் அனுப்ப இருப்பதாகத் தெரிவித்தது. முன் கிளினிக்கல் டேட்டா, எதிக்ஸ் அப்ரூவல் மற்றும் நிதி விடுவிப்புக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான அறிக்கை வேண்டும் என்றும், எந்தத் தாமதமும் ஒப்பந்த மீறலாகக் கருதப்படும் என்றும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

அடுத்து என்ன செய்வது? எந்தத் தடுக்கில் புகுந்து தங்களைப் பாதுகாப்பான இடத்தில் இருத்திக் கொள்வது என்றும், ஒப்பந்தம் போட்டிருக்கும் மருந்து நிறுவனம் தரும் அழுத்தத்தின் பொருட்டு, செய்து கொண்டிருக்கும் மருந்து ஆராய்ச்சியை நிறுத்தி வைக்க முடியாமலும், புதிதாக மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கவும் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் பெண் இப்படியொரு அனர்த்தத்தை இழுத்து வைத்திருப்பதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் அவர்.

“க்ராஸ் வெரிஃபிகேஷன் ஃபைல் மட்டும் தான் அங்கிள் அவ எடுத்துட்டு போயிருக்கா! மெய்ன் டாக்யூமென்ட்ஸ் எல்லாம் பத்ரி சர் அவர் சொந்த பாதுகாப்புல வச்சிருக்கார். அப்புறம் ஒரிஜினல் டாக்யூமென்ட்ஸ் எல்லாம் கூட தாரகேஷ் கிட்ட தான் இருந்துச்சு. அதனால நாம உடனே மாட்டிக்கமாட்டோம் அங்கிள்.”

தனக்கே ஆறுதல் சொல்பவளைப் பார்த்து கொண்டே இருந்தார் சத்யநாதன்.

அவரின் பார்வையின் பொருள் புரிந்த “வலதுகை’ சண்முகம், “சரிம்மா, எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். நீ கிளம்பு!" என்றிட, இப்போது அவர் பார்வை இடம்மாறி சண்முகத்தில் நிலைக்க,

"இல்லைங்கய்யா அது… சின்னப் பொண்ணு…” என்று தலையைச் சொறிந்தார் அவர்.

கோகிலா எதையும் கவனிக்காமல் தன் போக்கில் பேசினாள். “நாம முதல்ல இந்த அஸ்வத், அம்ருதா கணக்கை முடிப்போம் அங்கிள். அப்போதான் நிம்மதியா…”

அதுவே அவளின் கடைசி வசனம் ஆகிப்போனது.

"நிம்மதியா போய்ச் சேரும்மா!” என்றபடி, பெரிய விடயத்தைச் செய்துவிட்டு தன்னடக்கத்துடன் அவர் கையில் தவழ்ந்த அவரது தனிப்பட்ட துப்பாக்கியை இதமாகத் தடவியவர், "சந்தேகம் வராம தூக்கிப் போடச் சொல்லு சண்முகம். இவ அப்பனாத்தாளுக்கு சொல்றதுக்கு சரியான ஸ்கிரீன்ப்ளே ரெடி பண்ணி நம்ம ஆஸ்பத்திரிலயும் எல்லாரையும் அதையே சொல்லச் சொல்லு.” என்றார்.

“செஞ்சிடலாங்கய்யா.”

“அந்த ஏசிபி வந்தானா?”

“இல்லீங்க! அரைமணி நேரத்துக்கு முன்னாடி பேசினேன். நம்ம மேல எந்தப் புகாரும் இல்ல. ஐயாவைக் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்கன்னு சொன்னாப்டி!”

“எதுவோ சரியில்லயே…” என்று தாடையைத் தடவியபடி மடிக்கணினி திரையைப் பார்த்தவர், “சண்முகம்! எனக்கு இந்தப் பொண்ணு வேணும்.” என்று அம்ருவைச் சுட்டிக்காட்டிட,

சண்முகம் கேள்வியாகப் பார்த்தார். அஸ்வத் தானே அவர்களின் நோக்கம்? இப்போது ஏன் அம்ருதாவைக் கைக்காட்டுகிறார்?

“என்ன முழிக்கற? அஸ்வத், நோட்டம் விடற நம்மாளு ஒருத்தனைக் கோயில் பக்கத்துல அடிச்சு போட்டானே? எதுக்கு?" 

"நம்மாளுன்னு தெரிஞ்சுப் போய்…”

"#@#... உன் அறிவு அவ்வளவுதான்! இவனை நோட்டம் விடும்போது மட்டும் சும்மா இருந்தானே... ஏன்?”

எப்படியும் தவறான பதிலைத்தான் சொல்லுவோம் என்று புரிந்த சண்முகம் விவரமாக ஏதும் பேசாமல் வாய்மூடி நின்றார்.

சத்யநாதன் சொன்னார். "நாம அவனைக் கண்காணிக்கலய்யா! நாம கண்காணிக்கறோம்னு தெரிஞ்சு, அவன்தான் நம்ம ஆளை அவன் பின்னாடி லோ லோன்னு சுத்த விட்டிருக்கான். அதுவே அந்தப் பொண்ணுக்குன்னு வந்ததும் தனக்கு மாதிரி சும்மா இருக்காம வெளுத்துவிட்டிருக்கான் பார்த்தியா?”

‘அட ஆமால்ல!’ எனச் சிந்தித்தார் சண்முகம். 

திரையைக் காட்டி, “இதுல பாரு, அவளை எவ்ளோ பத்திரமா பாடிகார்ட் மாதிரி கூட்டிட்டு போறான்!” என்றவர், கீழே விழுந்து கிடந்த கோகிலாவைக் காட்டினார். "இவ சொன்னமாதிரி அந்தப் பொண்ணைத் தூக்கினா அஸ்வத் தானா நம்ம இடத்துக்கு வருவான். அவளைக் காட்டியே அவ எடுத்துட்டு போன அத்தனை எவிடென்ஸையும் திரும்ப வாங்கணும்.”

அவரின் அரசியல் புத்தி அத்தனைக் கூர்மையாக வேலை செய்தது.

ஆனால்…

“செஞ்சிரலாங்கய்யா!" என்று சண்முகம் சொல்லிக் கொண்டிருக்கும் போது மாலை செய்திகளில், சத்யநாதனின் பல்நோக்கு மருத்துவமனை சீல் வைக்கப்படுவதாக அவசரச் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

No road back. No escape!🚙🔥…


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...