Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 31.2 (final)

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 31.2 (final)

பரமானந்தன் யோசிப்பதைப் பார்த்துவிட்டு மேலும் சொன்னார். "சரி, அதான் ரெண்டு வருஷம் டைமிருக்கே? அவன் நடவடிக்கை எப்டி இருக்குதுன்னு வெய்ட் செஞ்சு பார்ப்போம். நல்ல பையனா இருந்தா அந்த குடும்பத்துக்கு போக போற நம்ம ஆரவி ப்ளெஸ்ஸிங் கேர்ள் தான்!" என்றவருக்குமே விபுவின் செயலில் ஆத்திரம்தான். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்றால் எதற்கும் துணிந்தவர்களாகவே தான் இருக்கின்றனர். 

இருப்பினும் அவர் நண்பனை பொறுமைக் காக்க சொன்னாரெனில், அதன் காரணம் தவறிழைத்தவனை நம் வீட்டுப் பெண் ஏன் காட்டிக் கொடுக்கவில்லை? என்ற கேள்வியும், ரகுநந்தன் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த மனிதர் என்பதாலும் மட்டுமே!

பரமானந்தன் ஒன்றும் காதலை எதிர்ப்பவரல்லவே? எனவே நண்பனின் கூற்றை ஏற்றுக்கொண்டவர், இந்த ஒன்றரை வருடங்களாக விபுவை டிடெக்டிவ் தேவ் மூலமாக கண்காணித்து வந்தார். விபுவின் செயல்கள் திருப்திகரமாகவே இருந்தது. அத்தோடு பரமேஸ்வரியும் ஆரவிக்கு விபுவின் மேல் விருப்பம் என்று சொல்லவும், சரி தானென்று தாமதிக்காமல் ரகுவை அழைத்துக் கோவிலுக்கு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

விபுவிற்கு மாமனார் தன்னைக் கண்காணிக்கிறார் என்பது, முதல்முறை அவனைத் தொடர்ந்த நபரைப் பார்த்ததுமே தெரிந்து போனது. இருப்பினும் பெண்ணைப் பெற்றவர் என்ற முறையிலும், தான் முன்னதாக செய்த அனர்த்தத்தினாலுமே இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார் என்று நினைத்தான். அவனுக்கு அவரின் இச்செயல் நியாயமாகவேப்பட்டது. அத்தோடு தன்னை மருமானாக ஒத்துக் கொண்டுவிட்டார் என்பது இதிலிருந்தே புரிந்து போனது. எனவே கண்டும் காணாமல் இருந்துகொண்டான். 

அப்படியே ரகுநந்தனிற்கு ஆரவியை அவள் வீட்டில் எப்படி பெண் கேட்க வேண்டுமென வசனம் முதற்கொண்டு கற்பித்தும் வந்தான். அவரும் எங்கும் சொதப்பி விடக்கூடாது என கர்மசிரத்தையாக மகன் கூறியதைக் கற்றுக்கொண்டார்.

ஆனால், இன்று இப்படி திடுமென தன் தந்தையிடம் கேட்பாரென்று விபுநந்தனும் கூட சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

மீண்டும் ஆரவியிடம் விழிகளால், 'நீ சொல்லவே இல்ல?' எனக் கேட்க, அவள் தனக்கு எதுவும் தெரியாது என பதிலுரைத்தாள். இருப்பினும் எத்தனை பேரின் காதல் இப்படி இலகுவாக கைக் கூடியிருக்கிறது? தன் தந்தையிடம் எதிர்ப்பை எதிர்பார்த்திருந்தவளுக்கு அவரே சுமூகமாக பேசியது மட்டற்ற மகிழ்ச்சியளித்தது. 

பரமானந்தன் தொடர்ந்தார். "நான் ஆச்சாரமா இருக்கறவன்தான். அதுக்காக ஜாதி, மதம்னு மத்த மனுஷாள குறைவா நினைக்கறவன் இல்ல. எல்லா ஜீவன்களும் பகவான் படைப்பு தானே? இதுல மதச்சண்டை, குலம், கோத்திரம்னு பிடிச்சு தொங்கிண்டு சக மனுஷாள மதிக்கத் தெரியாம இருக்கறவா தான் அற்ப ஜீவன்கள்னு நான் நினைக்கறேன். வாட் டூ யூ திங் மிஸ்டர் ரகு?"  

"......." ரகுவிடம் பதிலில்லாது போக மேலும் தொடர்ந்தார்.

"என்னோட இந்த எண்ணத்துனால, அந்த காலத்துல எங்கே நான் கலப்பு விவாஹம் பண்ணின்டு வந்து நின்னுடுவேனோ என்னவோன்னு என் தோப்பனார் ரொம்ப சீக்கரத்துலயே பரமியை என் கைல பிடிச்சு குடுத்துன்னுட்டார். அந்த சின்ன வயசுல நாங்க ரெண்டு பேருமே ரொம்ப சிரமத்துக்கு ஆளானோம் ரகு. என் பொண்ணுக்கு அந்த நிலைமை வந்துடக்கூடாதுன்னு நான் ரொம்ப கவனமா இருந்தேன். இப்ப அவ மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை… அதுவும் அவ சரியானதா தேர்ந்தெடுத்திருக்க பட்சத்துல அதை முழுமையாக்க வேண்டியது, ஒரு தோப்பனாரா என்னோட கடமை இல்லியோ?" என்ற தந்தையின் இடக்கைக்குள் தனது வலது கையைக் கோர்த்து, கண்கள் பனிக்க அவர் தோள் சாய்ந்துகொண்டாள் ஆரவி.

"......." இப்போதும் ரகுநந்தனிடம் பதிலில்லை.

"அது… வேற என்ன யோசிக்கறேள் ரகு? உங்க வசதிக்கு நாங்க…."

ரகுநந்தன் இன்னமுமே அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஏன் மற்றவர்களும் கூட பரமானந்தன் வாயைப் பார்த்துக்கொண்டு தான் நின்றிருந்தனர். 

பின்னே? இத்தனை நாட்களும் நாடகத்திற்கு திட்டம் தீட்டி, கஷ்டப்பட்டு வசனங்களை மனப்பாடம் செய்து, ஒத்திகை பார்த்து, இப்போது அதை செயல்படுத்தலாம் என்றெண்ணும் போது இப்படியொரு திருப்பத்தை நிகழ்த்துகிறாரே இந்த பரமானந்தன்? இவருக்கு ஒன்றும் தெரியாது என்று தாங்கள் நினைத்திருக்க ஒரு தந்தையாய் மகளின் காதலைக் கண்டுகொண்டிருக்கிறாரே? அய்யகோ! இப்போது எங்ஙனம் ரகுநந்தன் தன் நடிப்பை வெளிப்படுத்துவார்?

'பரமா! என்னோட ஒரே ஒரு பர்ஃபார்மன்ஸை மட்டும் பாருங்களேன் பரமா!' எனும் ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தவரைக் கலைக்கும் பொருட்டு பரமேஸ்வரி தான் பேசினார்.

"என்னன்னா நீங்க? அவா அப்டிலாம் வசதி பார்த்து பழகறவா கிடையாது. நேக்கு தெரியும் வித்யாவைப் பத்தி!" என்று அருகில் நின்றிருந்த வித்யாவின் கையில் கிள்ள, 

அவர் சட்டென வலித்த இடத்தை தேய்த்துவிட்டவாறே, "ஹான்? ஆமா! ஆமா!!" என்று எல்லாப் பக்கமும் தலையை உருட்டினார்.

"நீ சித்த சும்மா இருடீ. அவாளுக்கும் நம்ம வசதி பத்தி தெரியணுமோன்னோ?" என்று விட்டு ரகுநந்தனின்புறம் திரும்ப, அவர் அதற்குள் வித்யாவின் 'ஆமா'வில் சற்று தெளிந்திருந்தார். ஆனாலும் எதையும் வாயைத் திறந்து பேசினார் இல்லை.

"ரகு, நான் பேங்க்ல சாதாரண க்ளார்க்னு நீங்க நினைக்கலாம். ஆனா என் பொண்ணுக்கு நிரம்பவே நகை சேர்த்து வச்சிருக்கேன். நேக்கு ஊர்ல சொத்து பத்தெல்லாம் கூட நிறைய இருக்கறது. என்னை விரட்டிவிட்ட என் தோப்பனார் என் பேர்ல எங்க பரம்பரை ஆத்தையும் எழுதி வச்சிருக்கார். அதுவும் காமா சோமான்னு இருக்கும்னு நீங்க நினைச்சிடப்படாது. அந்த காலத்து கல் கட்டிட தொட்டிக்கட்டு வீடு. தாராளமா நூறு பேர் தங்கலாம். எல்லாம் என் குழந்தை ஆரவிக்கு தான் தெரியுமோ?"

ஒருவழியாக மனிதர் தெளிந்துவிட்டார். "ச்சச்ச… என்ன பரமா நீங்க? நானும் உங்களைப் போல தான். ஸ்டேட்டஸ் பார்த்தெல்லாம் பழகறதில்ல. நானே இவங்க லவ்வை உங்ககிட்ட சொல்லி முறைப்படி பொண்ணு கேக்கணும்னு நினைச்சேன். இப்ப நீங்களே கேட்டதும் கொஞ்சம் ஷாக்! வேற ஒண்ணுமில்ல. நீங்க சொல்லுங்க பரமா, எப்ப கல்யாணத் தேதி ஃபிக்ஸ் பண்ணலாம்?"

அவரின்‌ பதிலில் பரமானந்தத்தின் முகத்தில் ஒளி வெள்ளம் பாய்ந்தது. "சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவா சொல்லுவா. எதுக்கு டிலே பண்ணனும்? உங்களுக்கு வசதிப்பட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே வச்சிக்கலாமோன்னோ?"

"ஓ யெஸ்! செஞ்சிடலாமே!"

செய்துவிட்டார்கள். அடுத்த ஆறு மாதங்களில் முகூர்த்தம் என நாள் குறிக்கப்பட்டது. ஒருவழியாக திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. ஒரே ஒரு பெண் என்று திருமணத்தை விமரிசையாக செய்ய வேண்டுமென்றார் பரமானந்தன். விமரிசை என்றால் இருக்கும் செல்வங்களைக் கரைத்து கொட்டுதல் என்பதல்ல. மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு, சொந்தங்கள் நிறைந்த சபையில் பெண்ணோடும், சம்மந்தக்காரர்களோடும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்; இதனால் தான் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை என்று உறவுக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றெண்ணினார்.

அவரைத் தூற்றியும், ஒதுக்கியும் வைத்த சொந்தங்களை நேரிலேயே சென்று அழைத்தார். அவர்கள் யாரும் இன்னமும் மாறாமலேயே தான் இருந்தனர். பத்திரிகை வைத்ததற்காய் தலையைக் காட்டிவிட்டு செல்ல வந்தவர்கள் ரகுநந்தனின் செல்வ செழிப்பைக் கண்டு வாயடைத்துப் போயினர். இருப்பினும் மெல்லுவதற்கு அவலைத் தேடும் கூட்டம் இருக்கவே செய்தது. 

உங்களுக்கு தெரியுமா? உண்மையில் அவர்கள் இல்லையென்றால் விசேஷ வீடுகள் சுவாரஸ்யம் இல்லாமல் களையிழந்துதான் போகும். இங்கும் முணுமுணுப்புகள் கேட்ட வண்ணமே இருந்தன. ஆனால் இளைய தலைமுறையினர் பரமானந்தத்தின் பரந்த உள்ளத்தைப்(?) பாராட்டி, சமூக வலைத்தளப் பக்கங்களில் 'ஐயராத்து ஸ்வீட் அபிஷ்டு' என ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து கொண்டாடித் தீர்த்தனர். அவர்களின் சமூகத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு புரட்சி!

மொத்த சொந்தங்களையும் இணைத்து ஒன்றாக பார்க்க வேண்டுமென விரும்பினார். அவ்வண்ணமே சொந்தங்கள் புடைசூழ மகளின் திருமணத்தை நடத்தியும் காட்டியுள்ளார். பரமானந்தத்திற்கு பரம திருப்தியாய் இருந்தது. சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் தம்பதிகளை பெண் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.

"டேய் நந்தா! உன் பொண்டாட்டி என்னடா என்னை அக்கானு கூப்பிடறா. என் பொண்ணை மன்னினு கூப்பிடறா." மண்டை காய்ந்து போனவளாக தம்பியிடம் புகார் வாசித்தாள், தான்யா.

"விடு தானு. அவளுக்கு எப்டி கூப்பிடணுமோ அப்டியே கூப்பிட்டுட்டு போகட்டும்." வழக்கம் போல் மருமகள்களின் புறம் நிற்கும் மாமியாராய் வித்யா!

இவர்களுமே சீதாவே திரும்ப பிறந்திருக்கிறாளென தான் குழந்தைக்கும் சீதாலட்சுமி என பெயரிட்டிருந்தனர். எனவே இப்போது ஆரவி அழைப்பதைப் பார்த்து டியானும், "டான்யா! நானு என் பொண்ணே மன்னி சொல்லுது." என்றாள்.

கடுப்பாகிப் போன தான்யா, "நீங்க எப்ப பொண்ணைப் பெத்தீங்களாம் அண்ணி?" என்று கேட்க, திருதிருத்தாள் அவள். 

மனைவியைக் காக்கும் கணவனாய் களத்தில் குதித்த ரிஷி, "அதெல்லாம் சீக்கிரமே பெத்துக்குவோம்." என்றவன், மனைவியின் பிழையைச் சுட்டிக் காட்டி திருத்த முயன்றான். அவனால் முயல மட்டுமே முடிந்தது. யதுநந்தனும் அழகாய் தெளிந்த தமிழ் பேச ஆரம்பித்த பின்னும் கூட, டியானுக்கு இன்னும் தமிழ் வசப்படவில்லை. அதில் அவளுக்கு நிரம்ப வருத்தம்.

ரகுநந்தன் அவளின் வருத்த முகத்தினை ஏற்காமல், "ஏன் சிரமப்பட்டுக்கற? நீ இங்கிலீஷ்லயே பேசும்மா. நீ ஜப்பான் மொழில பேசுனா எங்களுக்கு புரியக் கூட செய்யாது. ஆனா நாங்க தமிழ்ல பேசறதை அழகா புரிஞ்சுக்கறியே… அப்புறம் என்ன?" என்றார்.

மருமகளின் அறியாமையை மட்டம் தட்டும் இக்காலத்திலும் கூட, இக்குடும்பத்தினர் அவளின் கூடுதல்களை மட்டும் சொல்வது சிறப்பான ஒன்றாக கருதினார் பரமானந்தன். திருமணத்தில் எல்லா சடங்குகளிலும் அவளை முன்னிறுத்தியே செய்ததையும் கவனிக்கவே செய்தார். 

இவர்களின் அந்நியோன்யத்தைப் பார்த்திருந்தவர் எதிர்காலத்தில் 'ஆரவி எப்படி இருக்கிறாய்?' என்ற பொதுவான கேள்விக்கும் கூட தேவையிராது என்பதைப் புரிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.

அதே மகிழ்ச்சியோடே, "டியானுக்கு விருப்பமிருந்தா பரமிகிட்ட தமிழ் கத்துக்க வர சொல்லுங்கோளேன். ஆரவி இன்னிக்கு தமிழ் எழுத்துப் பிழையில்லாம எழுதுறதுக்கும் ப்ரூஃப் ரீடரா இருக்கறதுக்கும் பரமியோட தமிழறிவு தான் காரணம்!" என்று மனைவியை உயர்த்திக் கூறினார்.

ஐந்தாம் வயதில் இருந்த யதுநந்தன், "தமிழ் மிஸ் அடிப்பாங்களா?" எனவும், பரமானந்தன் வீட்டு ஹால் சிரிப்பில் அதிர்ந்தது.

தலைவனும் தலைவியும் இவர்களை கவனித்தவாறே, கிடைக்கும் நொடிப் பொழுதில் தொட்டுக்கொண்டும், பார்வையால் முத்தமிட்டுக் கொண்டுமென தங்கள் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தனர். பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் போதும் இருவரின் காதல் அட்டகாசம் தொடர்ந்து கொண்டிருந்தது. 

மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றதும் பெண்ணை அழைத்து விளக்கேற்ற செய்தனர். பின் அனைவரும் பேசியவாறே ஒருபுறம் அமர, ஆரவி மட்டும் எழுந்து ஹாலின் வலப்புறம் சென்றாள். முதலில் தன் பார்வையை கவனித்து எதிர்பார்வை தராதவளின் மீது கடுப்பான விபு, பின் உள்ளுக்குள் தோன்றிய உந்துதலில் அவளைத் தொடர்ந்து சென்றான். அவனுக்கு ஆரவியைப் பற்றிய பழைய கவலையுணர்வு மீண்டும் மேலெழுந்தது. 

ஏனெனில், அவளின் இந்த முகபாவனையைக் காட்டு பங்களாவில் தனித்திருக்கும் பொழுதுகளில் பார்த்திருக்கின்றான். கூப்பிடக் கூப்பிட திரும்பாலே பயமும் வியப்புமாய் நின்றிருப்பாளே? அந்த முகத்தை இப்போது அவளிடம் திரும்பவும் பார்க்கின்றான். 

ஆனால் இப்போது அவள் முகத்தில் பயம், வியப்பு என எதுவுமில்லை. மாறாக ஏதோ ஓர் சொல்லொணா வேதனை! கண்கள் கூட கலங்குகிறது. திடுமென என்னவாயிற்று இவளுக்கு என்று பார்க்க, ஹாலில் பிரம்மாண்டமாய்த் தொங்கிக் கொண்டிருந்த அந்த புகைப்படத்தை கையுயர்த்தி வருடினாள் ஆரவி.

புகைப்படத்தில் கேசம் அலைபாய உயிரோவியமாய் சிரித்துக்கொண்டிருந்தாள் சீதாலட்சுமி.
                        

           🪻🪻சுபம்🪻🪻


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.