
அத்தியாயம் 31.1
ஒன்றரை வருடத்திற்குப் பிறகு…
ஒரு ஞாயிறு தினம்!
ஆரவி, தான்யாவின் மகள் சீதாலட்சுமியோடு காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஒன்றரை வயது மழலையின் மொழியில் இவளுக்கு என்ன தான் புரியுமோ! இருவரும் மணிக்கணக்கில் அரட்டையடித்துக் கொண்டிருப்பர்.
"மன்னி, இன்னிக்கு நீ என்ன சாப்பிட்ட? உங்கம்மா தர்ற அந்த பட்டர் சாண்ட்விச்சை சாப்பிடவே கூடாது. நன்னா மசிச்ச, நெய் போட்ட பருப்பு சாதம் வேணும் சொல்லு! சரியா?"
"ம்ம்… யம்மி…"
"ம்ஹூம்! உன் அம்மா சமையல் டம்மி! உன் விபு மாமா செய்ற கீரை கூட்டுதான் யம்ம்மி…" அந்த 'யம்மி' பிரபஞ்சத்திலுள்ள மொத்த ஏக்கத்தையும் தன்னுள்ளே அடக்கியிருந்தது. அது அவளின் விபுவிற்கான ஏக்கம்.
குட்டி சீதா பிறந்த அன்று இருவரும் சந்தித்ததுதான். அதன்பின் இந்த ஒன்றரை வருடத்தில் சொற்பப் பொழுதாய் தொலைபேசி உரையாடல்கள் மட்டுமே! எப்பொழுதேனும் சில நிமிடங்கள் காணொளி அழைப்பில் பேசிக்கொள்வார்கள்.
ஆரவி இப்பொழுது பகுதி நேர வேலைக்கு செல்வதோடு, பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் ப்ரூஃப் ரீடராகவும் பணியாற்றுகிறாள். எனவே நந்தனுடன் பேசும் நேரங்கள் மிகக் குறைவே! அப்படி பேசும் அவனுடனான ரகசிய பேச்சுக்களை அசைபோட்டு அசைபோட்டே தன்னியல்பாய் சிரித்துக்கொள்வாள். பின் திருதிருப்பாள். நல்லவேளை யாரும் தன்னை கவனிக்கவில்லையென நிம்மதி கொள்வாள். எல்லாம் இவனால் தானென்று அவனைப் பொறுப்பாக்குவாள். காதலில் கிறுக்குத்தனங்களுக்கு தான் பஞ்சமேது?
எத்தனை பக்குவப்பட்ட பெருங்காதலாயினும், கிறுக்குத்தனங்களும் யாருமறியா ரகசிய சண்டைகளும் இல்லையெனில் நட்சத்திரங்களில்லா வெற்று வானமாய்த் தானிருக்கும்.
தனியே வெளியே செல்லும் போதெல்லாம் காட்டு பங்களா சென்று, புதிதாய் அமைத்திருக்கும் மொட்டைமாடி பூக்காட்டைப் பார்வையிடுவாள். ஏதேனும் செடி சிறியதாய் தலைகவிழ்ந்திருந்தாலும் கூட, தட்சிணாவையும் கிருஷ்ணாவையும் பாடாய்படுத்தியெடுப்பாள்.
இவளுக்கு பயந்தே இருவரும் செடிகளை நன்முறையில் பராமரித்து வந்தனர். விபுவையும் திரும்பி வருகையில் செர்ரி செடி வாங்கிவர வேண்டுமென கட்டளையிட்டிருக்கிறாள்.
"டீ ஆரவி! எத்தனை நேரம் அந்த கோந்தேயோடவே (குழந்தை) அரட்டையடிச்சிண்டிருப்ப? கிளம்பு, கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்." பின்னிருந்து பரமேஸ்வரியின் குரல் கேட்டது.
"நான் வரலம்மா." என்றவள் குழந்தையிடம் பேச்சைத் தொடர, திரையில் தான்யாவின் முகம் தோன்றியது.
அதைத் தொடர்ந்து தான்யா, "ஹலோ… என்ன? என் பொண்ணுக்கிட்டயே என் சமையலைக் குறை சொல்றியா?" என்று கோபப் பறவையானாள்.
அவளிடம் அசடுவழிந்து கொண்டிருக்கையிலேயே பரமேஸ்வரி மீண்டும் ஒருமுறை அழைத்தார்.
ஆரவி வரவில்லையென அலுத்துக் கொள்ள, "ஹே ஆரவி! கோவிலுக்கு போ. அங்கே உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்குது." என்றாள் தான்யா.
"என்ன சர்ப்ரைஸ் க்கா? வழக்கம் போல வித்யா ஆன்ட்டியை பார்க்க போறதா தான் அம்மா சொன்னா. நான் லாஸ்ட் வீக் ஆன்ட்டியைப் பார்த்தேன். சோ இப்ப இன்னும் கொஞ்சம் நேரம் என் மன்னியோட தான் பேசிண்டு இருக்கப் போறேன்."
"உன் பெரிய மன்னியோட பேசினது போதும் தாயே! இங்கே இப்ப டைம் எட்டாகிடுச்சு. சாப்பிட்டு தூங்கற நேரம். நீ கிளம்பு காத்து வரட்டும்." என்றுவிட்டு பட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள் தான்யா.
ஆரவி முகத்தைத் தூக்கி வைத்தபடி, ஓர் உதட்டுச் சுளிப்போடே அன்னையுடன் கிளம்பினாள். எப்போதும் கோவிலுக்கு சென்றால் இரண்டு நிமிடங்கள் மட்டும் கடவுளை சேவித்துவிட்டு, சுற்றி நிற்கும் கலைநயமிக்க தூண்களையும் சிற்பங்களையுமே நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்று… தூண்களும் தெரியவில்லை; துதிப்போரும் தெரியவில்லை. தீபமும் தெரியவில்லை; அம்மனின் ரூபமும் தெரியவில்லை. அவளுக்கு பிரியமான வித்யா ஆன்ட்டியும் தெரியவில்லை; ஓடியாடும் மழலைகளும் தெரியவில்லை. அவள் கண்கள்தான் மற்றவைகளுக்கு பழுதடைந்து போய், ஒருவனுக்காக மட்டுமே பணிபுரிந்து கொண்டிருந்ததே! தான்யா ஆச்சரியம் என்று சொன்னது இதைத் தானா?
ஓ, மாயவனே!
மழைத் தாரையாய் வந்து,
கொட்டித் தீர்க்கின்றாயே!
கொட்டமடிக்கும் மனதை
கொஞ்சம் மறைப்பதெப்படி?
வீடு திரும்பும் தந்தையைக் கண்ட மழலைப் போல், இந்த நெஞ்சம்தான் என்னமாய் சந்தோஷத்தில் குதிக்கின்றது! சந்தோஷ உயிரூற்று பிரவாகமாய் முகத்திற்கு வந்து நின்றது. முகம், சந்தோஷத்தால் அதிக வேலை தருகிறாயென்று பூரிப்பாய் புலம்பியது. பூரிப்பில் இமைகள் ஈரமாகியது. அத்தனை அணுக்களும் விபு விபு என அவன் பெயரையே ஜெபிக்கின்றன.
ஆம்! வித்யாவோடு விபுநந்தனும் வந்திருந்தான். தந்தை தனக்களித்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று தான் தாயகம் திரும்பியிருந்தான். வந்தவன் ஜெட்லாக் தீரும் முன்னமே அவசர அவசரமாய் ஆதவனை மேற்கே துரத்திவிட்டு, அன்னையை நச்சரித்து, இதோ! அவன் தேவதையை தரிசிக்க வந்துவிட்டான்.
அடி என் காதல் புதையலே,
முகை விரிக்கும் மலராய் - உன்
முகம் விரியும் கணம் காணவே
மௌனமேற்று வந்தேனடி!
விபுவிற்கு இப்போது ஓரளவு பக்குவம் வந்திருந்தது. ஆரவி விஷயத்தில் தவறிழைத்தப் பின், விளையாட்டுத்தனத்தை விடுத்து எதிலும் நிதானமாக செயல்பட கற்றுக் கொண்டுள்ளான். அவளைப் பார்க்கும் அவன் பார்வையிலும் கூட அடுத்தவருக்கு மிகையாக தோன்றாவண்ணம் மிகுந்த கவனமிருந்தது.
ஆனால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்ததால், ஆரவியின் வதனம் அவன்மீதான காதலை பரமேஸ்வரிக்கு படம் பிடித்துக் காட்டியது.
காதல் பொழுதுகளில் எப்போதும் பெண்ணானவள் தன்னவனின் மீதான பிரியத்தை ஒற்றைப் புன்னகையில் ஏந்தி, பேரலையாக ஓங்கி வந்து கண்களெனும் கரையில் சேர்ப்பித்துவிடுகின்றாள். அச்சமயத்தில் அவனுக்கிருக்கும் சுற்றுப்புற கவனம் அவளுக்கு அறவே இருப்பதில்லை.
இப்போது வித்யாவும் கூட பரமேஸ்வரியை திசைதிருப்ப முயன்றவாறே, ஆரவியை எச்சரிக்கும் பார்வைப் பார்த்தார். அவளின் கண்களுக்கு அவர் தெரிந்தாலல்லவோ எச்சரிக்கையை ஏற்பதும் மறுப்பதும்? அவள்தான் மனதிற்கினியவனைப் பார்த்த மயக்கத்தில் தனக்கென ஓர் உலகை சிருஷ்டித்துக் கொண்டு, சிறப்பாய் காதல் செய்கிறாளே? பரமேஸ்வரி அவளின் அன்னையல்லவா? மகளின் மனதை நொடியில் கண்டுகொண்டார்.
இருப்பினும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அம்பாளை தரிசித்தார். விபுவிடம் நலம் விசாரித்து, வித்யாவிடமும் எப்போதும் போல் அளவளாவினார். வீட்டிற்கு வந்ததும் அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியே சென்ற மகளை ரகசியமாய்க் கண்காணித்தார்.
மேலும் இரு வாரங்கள் கடந்தன. இன்று ஏனோ பரமேஸ்வரியின் முகம் அந்த அம்பாள் பரமேஸ்வரியின் வதனத்தின் தேஜஸைத் தத்தெடுத்திருந்தது. விஷயம் என்னவென்று தான் ஆரவிக்கு புரியவில்லை. அத்தோடு இன்று புதிதாக தங்களோடு அப்பாவும் கோவிலிற்கு கிளம்ப, ஆரவி என்னவாக இருக்கும் என்று தீவிரமாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
இருப்பினும் அதை தள்ளி வைத்துவிட்டு, அன்று போல் இன்றும் வித்யாலட்சுமியோடு விபுநந்தனும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பேராசையில் மறுக்காமல் கிளம்பினாள்.
கோவிலில் இரு குடும்பத்தினரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். ரகு, வித்யா, விபு மூவரும் வந்திருந்தனர்.
'ரகு அங்கிளும் வருவதால் தான் அப்பாவும் வந்திருப்பாரோ?' என்று சிந்தித்தவள், விபுவிடம் ரகசியமாய்ப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, கண்களால் இருவரையும் காட்டி, 'என்னவாம்?' என்று கேட்க,
அவன், 'தெரியாது' எனும் விதமாய் லேசாக தோள் குலுக்கினான்.
இருவரின் விழிகள் வரையும் மொழிகளைப் பார்த்த பரமானந்தன் தான் எடுத்த முடிவு சரி தானென்று நினைத்துக்கொண்டு, மெதுவாக வார்த்தைகளைக் கோர்த்து வெளிக்கொணர்ந்தார்.
"ரகு… ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வர சொன்னேன்…"
"சொல்லுங்க பரமா. நீங்க கூப்பிட்டப்பவே ஏதோ முக்கியமா இருக்கும்னு நினைச்சேன்."
"அது… வேற ஒண்ணுமில்ல. நாம இத்தன நாள் பழகிருக்கோம். அந்த உரிமைல தான் கேக்கலாம்னு நினைக்கறேன். ம்ம்…" என்று மேலே பேச தயங்கியவரை,
"எதுவா இருந்தாலும் சொல்லுங்க பரமா. டோண்ட் ஹெஸிடேட் வித் மீ." என்று ஊக்கினார், ரகுநந்தன்.
"போன வருஷம் என் தங்கை பொண்ணு விவாகத்துக்கு போயிருந்தேனோல்லியோ? அப்பவே நம்ம ஆரவிக்கும் நல்ல வரன் பார்க்கணும்னு நினைச்சிண்டிருந்தேன். அப்புறம் ஏனோ தள்ளி போட வேண்டியதாப் போயிடுத்து." என்று விட்டு விபுவை ஒரு பார்வை பார்த்தார். அவன் பட்டென ஒற்றைக் கண் சிமிட்டி சிரிக்க, பாராமலே இருந்திருக்கலாமென நொந்து போனார் மனிதர்.
"என் தங்கை பொண்ணு மஞ்சரி நம்ம ஆரவியை விட ரெண்டு வயசு இளையவ தான். அதான் இப்ப இவளுக்கும் நல்ல இடம் பார்க்கணும்னு நினைச்சப்ப… நேக்கு உங்க ஞாபகம்தான் வந்தது ரகு…"
"என்னது நானா?! எனக்கு முப்பத்து மூணு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிடுச்சே பரமா!"
அடக்க நினைத்தும் முடியாமல், "ஹஹ்ஹஹ்ஹ…" என்று வாய்விட்டு சிரித்த ஆரவியை பார்வையால் அடக்கினார் பரமேஸ்வரி.
"அட நேரங்காலம் தெரியாம ஜோக் பண்றேளே ரகு? உங்க ஆத்துல இருக்க, உங்க புள்ளையாண்டான் நந்தன் ஞாபகம் வந்ததுன்னு சொல்ல வந்தேன்." என்று ஒருவாறு சொல்ல வந்ததை சொல்லி முடித்தார்.
அன்று ஆரவி தன் தந்தையிடமிருந்து விபுவை காத்திருந்தாலும், ஏனோ இவனுக்கு குற்றவுணர்வு ஆட்டிப் படைத்தது. எனவே வெளிநாடு செல்லும் முன், ஒரு நாள் பரமானந்தத்தை சந்தித்து ஆரவியை அழைத்துக் காட்டு பங்களாவிற்கு வர செய்தவன் தான் தானென்றும், தான் அவ்வாறு வரச் செய்தது தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாது எனவும் உண்மையை ஒப்புக்கொண்டான்.
பரமானந்தத்திற்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. கொதித்தெழுந்தவர் பொது இடம் என்றும் பாராமல் அவன் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் அறைந்து கடுமையாக சாடினார். அனைத்தையும் தவறிழைத்தவன் அமைதியாக ஏற்றுக்கொண்டான். ரகுநந்தனிடம் உன் வண்டவாளத்தைப் புகாரளிப்பேன் என்றார்.
"பை ஆல் மீன்ஸ்! டாடிக்கு தெரிஞ்சா உடனே வெங்கட் அங்கிள்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணி என்னை ஜெயிலுக்கு கூட அனுப்புவார். ஆனா அதுக்கு காரணம்னு என் லவர் கேர்ள் ஆரவி பேரை இழுக்க வேண்டி வருமே'ன்னு தான் பார்க்கறேன்." என்று அனாயாசமாக போக்ரானைத் தூக்கிப் போடவும் அரண்டுவிட்டார் மனிதர்.
அவர் திகைப்பிலிருந்து மீளக் கூட அவகாசம் தராமல், "ஆரவியை ரொம்பவும் விரும்புறேன் சர். அவ இல்லாம நான் இல்லன்னு சொன்னா சினிமா டயலாக் சொல்ற மாதிரி இருக்கும். ஆனா அதுதான் உண்மை. ஷி'ஸ் எவ்ரிதிங் டூ மீ. ஐ நீட் ஹர் இன் மை லைஃப் டெரிபிளி! நான் இப்ப ஃபாரின் போறேன். திரும்பி வர ரெண்டு வருஷம் ஆகலாம். ஹோப் ஐ கெட் யுவர் கான்சென்ட் டூ மை விஷ் பை தென். (அதற்குள் என் விருப்பத்திற்கு உங்கள் சம்மதம் கிடைக்குமென நம்புகிறேன்.) அதுக்குள்ள உங்க கோபத்தையும் விட்டுடுங்க சர் ப்ளீஸ்ஸ்…" என்றவன், அழகாய் புன்னகைத்து, இறுகக் கட்டியணைத்து விட்டுச் சென்றுவிட்டான்.
அவனின் இறுகிய அணைப்பு 'உன் மகளை அத்தனை சுலபத்தில் விட்டுவிட மாட்டேன்' என்பதாக பட்டது, பெண்ணைப் பெற்றவருக்கு.
அதன்பின் பல நாட்கள் விபுவைப் பற்றிய சிந்தனையிலேயே கழித்தார். அனைத்தையும் கூறும் ஆருயிர் தோழன் ஃபெர்னாண்டஸிடம் இவ்விடயத்தையும் சொன்னார்.
"என்ன நெஞ்சழுத்தம் இருந்தா ஆரவி பேரை இழுப்பேன்னு மிரட்டுவான்? கொஞ்சம் கூட பயமே இல்லாம அழுத்தமா நான்தான் செஞ்சேன்னு என்னான்டயே வந்து சொல்றான்டா. இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் விட்டு வைக்கவே கூடாது. அவனை உள்ளே தள்ளுறதுக்கு அவன் மேல எத்தனையோ பொய் கேஸ் போடலாமே?" என்று குமுறினார்.
"அவன் ஏன் உன்கிட்ட வந்து உண்மையை சொல்லணும்னு யோசிச்சியா பரமா?"
பரமானந்தன் பதிலில்லாது பார்த்தார். "அவன் நினைச்சிருந்தா விஷயத்தை மறைச்சு, ரகு சர் பையனாவே இருந்து உன் மனசுல இடம் பிடிச்சிருக்கலாம். முதல்ல ஏதோ ஆர்வத்துல தப்பு செஞ்சிருந்தாலும் இப்ப அவன் காதல்ல பொய் இருக்கக் கூடாதுன்னு நினைக்கறான்."
To be continued👇...
Comments
Post a Comment