
அத்தியாயம் 31
தன் தோழர்கள் தன்வீரும் தாரகேஷூம் அநியாயமாய்(?), அகாலமாய் மாண்டு போன சோகத்தில், தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்த கோகிலாவிற்கு பழிவெறி உச்சத்தில் இருந்தது. அதே கோபத்தில் நேற்றிரவு அம்ருதாவிற்கு அழைத்தவள், காலையில் சந்திக்கலாமா என்று கேட்க, அம்ருதா எச்சரிக்கையுடன் முன்பு கேட்டதைப் போல் தங்களது ஆராய்ச்சிக்கான உதவியைப் பற்றியே பேசினாள்.
“இதுக்கு மேலேயும் பொய் வேணாமே மிஸ். அம்ருதா? எல்லாம் எனக்கு தெரியும். நீங்களும் அந்த அஸ்வத்தும் ஆல்ரெடி ஃப்ரெண்ட்ஸ்! ஆம் அ ரைட்?”
“எ எந்த அஸ்வத்?”
“ஓ கமான் கேர்ள்! அவனுக்காக தான் அவன் குழந்தையைப் பத்தின கேஸ் ஃபைல் கலெக்ட் பண்றதுக்காக என்னைக் கண்டுபிடிச்சு வந்த நீ! எப்டி கண்டுபிடிச்சீங்கன்னுலாம் எனக்குத் தேவையில்லை. இப்போ உங்களுக்கு வேண்டியது எவிடென்ஸ்! அதை நான் கொடுக்கறேன்.” என்றிட,
அம்ருதாவிற்கு அப்போதும் நம்பிக்கையில்லை. கோகிலாவின் இந்த திடீர் மாற்றத்தில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என்றெண்ணி அப்போதும் ஏதும் தெரியாதது போலவே தான் பேசினாள்.
ஆனால் தாரகேஷின் அப்பா அஸ்வத்திற்கு நாள் குறித்துவிட்டார் என்றும், தன் தோழர்கள் தன்வீர் மற்றும் தாரகேஷின் இறப்பைக் கண்ட பின்னர், தான் என்ன பிராயச்சித்தம் செய்தேனும் தன் பாவத்தைப் போக்கிட நினைப்பதாகவும் உருக்கமாகப் பேசினாள் கோகிலா. அஸ்வத்திற்கு ஆபத்து என்றதிலேயே அம்ருவின் உள்ளம் ஆட்டம் கண்டுவிட்டது.
ஆனாலும் ஆட்களோடு வந்தால் தனக்குப் பாதுகாப்பில்லை என்ற கோகிலாவிடம், தானும் தனி இடத்தில் சந்திப்பதற்கில்லை என்றுவிட்டாள். பின்னர் பரஸ்பரம் பேசி கோகிலாவின் மருத்துவமனையில் ஆட்கள் அதிகம் இல்லாத வேளையாக அதிகாலை நேரத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
அம்ருதாவும் வழக்கம்போல் வீட்டில் பொய்யுரைத்துவிட்டு விரைவில் மருத்துவமனை வந்தவள், ஹரிஷின் மகிழுந்து கண்ணை விட்டு மறைந்ததும் ஆயத்தமானாள். வாயில் காப்பாளரிடமும் அவசர வேலை என்று சொன்னவள், தன்னைச் சேர்ந்தவர்களிடம் மானசீகமாக மன்னிப்பைக் கேட்டுக்கொண்டு, அங்கேயே அலைபேசியை அணைத்துவிட்டு கோகிலாவைக் காண விரைந்தாள். அலைபேசி இயக்கத்தில் இருந்தால் வேலை முடியும் முன்னரே தேவா தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்றே இந்த அறிவார்ந்தத்(?) திட்டம்!
இவள் சென்றபோது கோகிலாவே வரவேற்பில் வந்து நின்று தன் தனியறைக்கு அழைத்துப் போனாள். அம்ருதா எச்சரிக்கை உணர்வுடன் உள்ளே நுழைய, அவள் பயந்தாற் போல் அங்கே வேறு யாருமில்லை. அவளுக்கு தைரியம் சொல்லி அமர வைத்த கோகிலா, தங்களைப் பற்றி எதுவரைத் தெரியும் என்று மெதுவாக விசாரிக்க, இவள் அதற்கு இடங்கொடாமல் எழுந்து நின்று ஆதாரங்களைத் தந்துவிடுமாறு சொல்ல, இவள்முன் ஒரு கோப்பும் ஒரு பென்டிரைவும் வைக்கப்பட்டது.
அம்ருதா அதனை வேகமாக எடுத்து ஆராய்ந்தாள். எல்லாம் வெற்றுக் காகிதங்கள்!
“ஸாரி மிஸ் அம்ருதா. ஒரிஜினல் டாக்யூமென்ட்ஸ் எல்லாம் சத்யநாதன் அங்கிள் வச்சிருக்கார்.” என்று வருத்தத்துடன் பேசியபடி எழுந்து வந்த கோகிலா சட்டென்று கையிலிருந்த சிறிய அறுவைசிகிச்சை கத்தியால் இவளைத் தாக்க நினைக்க, ஏற்கனவே கடும் எச்சரிக்கை உணர்வுடன் இருந்த அம்ரு குனிந்து நூலிழையில் விலகியிருந்தாள்.
“அவ்ளோ சீக்கிரத்துல எவிடென்ஸ் மொத்ததையும் தூக்கிக் கொடுக்க என்னை என்ன கேனைன்னு நினைச்சியா? நீயும் அந்த முட்டாள் அஸ்வத்தும் சேர்ந்து அடுத்து என்னையும் டார்கெட் பண்றதுக்குள்ள நான் உனக்கு வைக்க நினைச்சேன் டிராப்! அழகா வந்து மாட்டிக்கிட்ட அம்ருதா!”
“ஓ! ஒரு கொலை செஞ்சா என்ன? ரெண்டு கொலை செஞ்சா என்ன? எல்லாத்துக்கும் ஒரே தண்டனை தானேன்னு நினைச்சிட்டீங்க போல!” சிரித்துக்கொண்டே இகழ்ந்த அம்ருவைத் தாக்க அவள் மேலும் நெருங்கிட, அம்ரு முன்பு குனிந்து விலகியபோதே தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து ஆயத்தமாக வைத்திருந்த ஊசியை கோகிலலக்ஷ்மியின் இடையில் செருகிவிட்டு, இடக்கையில் இருந்த கோப்பு கொண்டு அவளின் கத்தி பிடித்த கையையும் தட்டிவிட்டாள்.
பின்னர் அவசர அவசரமாக கையுறை அணிந்துகொண்டு, கீழே விழுந்த கத்தியை எடுத்தவள் கோகிலா மயங்கும் முன்னர் அவள் கழுத்தில் வைத்தாள். “மரியாதையா எவிடென்ஸ் எல்லாம் எங்கே இருக்குதுன்னு சொல்லிடு! இல்லைன்னா மயக்கத்துலயே வலிக்காம போய் சேர்ந்துடுவ!”
கோகிலா ஒரு கண்ணில் வன்மமும் மறு கண்ணில் நீருமாய் விழி சொருகியபடி சொன்னாள். “நி… நிஜமாவே… ஒரிஜினல் எல்லாம்… அங்கிள் கிட்ட தான் இருக்குது…”
“ஜெராக்ஸ் காப்பி? சாஃப்ட் காப்பி?”
“என்கிட்ட டிரையல் ஃபோல்டர்ஸ் உள்ள ஒரு… ஒரு பென்டிரைவ் மட்டும்…” என தன் மேசையைப் பார்க்க,
“ஃபைல் ஃபைல்?” என வேகமாக அவள் கன்னத்தில் தட்டி அவளின் மயக்கத்தைத் தள்ளிப் போட்டாள் அம்ரு.
“ரெக்… ரெக்கார்ட் ரூம்ல ஒண்ணு…” அதற்கு மேல் கோகிலா பயன்படவில்லை.
ஆதாரங்களை எல்லாம் மொத்தமாக வைத்திருக்காமல், பிரித்து வைத்துள்ளனர் என்று தெரிந்தது. அவளை விட்டுவிட்டு துரிதமாக அவளின் மேசையின் இழுப்பறைகளின் திறப்பைத் தேடியெடுத்த அம்ருதா, அதனைத் திறந்து பரபரவென ஆராய்ந்தாள். பென்டிரைவ் தத்தம் உடலில் எழுதிய சங்கேத வார்த்தைகள் கொண்டு தங்களை அடையாளப்படுத்திட, சிலவற்றை எடுத்துப் பார்த்தவள் எதுவென்று புரியாமல் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க அவகாசமுமில்லாமல், பதற்றத்தில் அங்கிருந்த அனைத்தையும் அள்ளிக்கொண்டாள்.
பின் வேகமாக வெளியேறி இயல்பான உடல்மொழியுடனே நடந்தாள். அந்தக் காலை வேளையில் கூட்டமில்லை என்றாலும் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் நடமாட்டம் இருக்கவே செய்தது.
ரெகார்ட் ரூம் பின்புறமாகத் தான் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று அறிந்திருந்ததால் அந்தப் பக்கம்தான் நடந்தாள். அந்த அறைத் திறந்திருக்க யாரும் பார்க்கும் முன் உள்ளே சென்றவளைப் பூட்டி வைத்த லாக்கர்களே வரவேற்றன.
இவள் நகத்தைக் கடித்தவாறு நின்றிருக்கையில் யாரோ ஓடி வரும் சப்தம் கேட்டு, பாக்கெட்டில் இருந்து மற்றொரு ஊசியை ஆயத்தமாக எடுத்துக்கொண்டு அலமாரியின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.
வெள்ளை வெளேரென்று உயரமாக, சுமார் ஐம்பது வயதைக் கடந்த ஒரு மனிதர் அவசரகதியில் வந்தார். அதே அவசரத்துடனே தன்னிடமிருந்த சாவியால் ஒரு அலமாரியைத் திறந்து உள்ளிருக்கும் ஒரு கோப்பை எடுத்து பரபரவென ஆராய்ந்து பின் ஆசுவாசம் கொண்டார்.
அவர்தான் அந்தக் குழுவின் தலைவர் டாக்டர் பத்ரிநாத்! காலையில் வந்ததும் தங்கள் வேலையைப் பற்றி கேட்பதற்கு கோகிலாவை அழைக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை. அதனால் எதார்த்தமாக அவரே அவளைத் தேடி சென்றார். அங்கே மயங்கிக் கிடந்த பெண்ணைக் கண்டு பதற்றம் கொண்டு தண்ணீரைத் தெளிக்க, அவள் எழுந்து அரைகுறையாக நடந்தவற்றைச் சொல்ல, வந்த கோபத்திற்கு ஓங்கி அறைந்துவிட்டார். அதில் அவள் மீண்டும் மயங்கிவிட, அவளை உதைத்துத் தள்ளிவிட்டு அம்ருவைத் தேடி இங்கே வந்திருந்தார்.
அவரின் செயலிலும் உடல்மொழியிலும் அவரும் அந்தக் குழுவில் ஒருவர் என்றறிந்து கொண்டாள் அம்ரு. மெதுவே வெளியே வந்தாள். தனக்கு பின்னால் தன் தோளுக்கு கீழே அசைவை உணர்ந்து அவர் திரும்பிய நொடியில், துல்லியமாக அவர் புஜத்தில் அந்த ஊசியைச் செருகினாள்.
ஆனாலும் திடகாத்திரமான அந்த மனிதர் கோகிலாவைப் போல் உடனடியாக மயங்கி விழவில்லை. அம்ருவை அறைந்து தள்ளி, கையிலிருந்தக் கோப்பினாலேயே தாக்கினார். ஆனாலும் சில நொடிகளிலேயே விழிகள் செருக பலமிழந்தார்.
உடனேயே அவர் கையிலிருந்தக் கோப்பினை எடுத்து துரிதகதியில் சரிபார்த்துவிட்டு வெளியேற நினைக்கையில், வெளியே ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது. மேலும் சில நிமிடங்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலை! அப்படியே யாரும் வந்தாலும் சட்டென தெரிந்துவிடாதபடி அவரை மறைத்து வைக்கவேண்டும். அவர் சீக்கிரம் விழித்துக் கொண்டால் இவள் திட்டம் நிறைவேறாமல் போகலாம். அவளால் ஓங்குதாங்கான அந்த மனிதரைத் தனியே இழுக்க முடியாது.
எனவே அண்ணனை உதவிக்கு அழைக்க எண்ணி அணைத்துப் போட்டிருந்த அலைபேசியை உயிர்ப்பிக்கும் வேளை, மயங்கிக் கிடந்த அந்த மனிதரின் அலைபேசி இசையை வெளியிட்டது. சட்டென அவர் பாக்கெட்டிலிருந்து எடுத்து ஒலியைக் குறைத்தவள், அழைப்பு நின்றவுடன் அணைத்துவிட்டு அதையும் பத்திரப்படுத்தி கொண்டாள்.
பிறகு ஹரிஷூக்கு அழைத்து தான் இருக்குமிடத்தைச் சொன்னாள். தன்னால் முடிந்தவரை அவரை நிமிர்த்தி வைத்துவிட்டு, ஓரமாய் ஒளிந்து நிற்கையில் தான் அஸ்வத் அழைத்தான்.
********
தேவாவின் வீடு!
நபர்கள் : அம்ருதா, தேவா மற்றும் ஹரிஷ்.
அம்ருதா கோகிலாவைக் காண சென்றதற்கான காரணம் தெரிந்ததிலிருந்து, ஹரிஷ் அவளை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தான். அஸ்வத் அடித்ததில் தவறே இல்லையென்று தோன்றியது. ஆனாலும் அவனெப்படி என் அம்முவை அடிக்கலாம் எனும் உரிமையுணர்வும் முசுமுசுத்தது.
அவனைக் கண்டுகொள்ளாமல் அம்ருவும் தேவாவும் பேசிக்கொண்டிருந்தனர். அவள் சத்யநாதன் மருத்துவமனையிலிருந்து, தான் கைப்பற்றிக்கொண்டு வந்த ஆதாரங்களை எல்லாம் கொடுத்தாள்.
முதலில் அள்ளிக் கொண்டு வந்திருந்த பென்டிரைவ்களைக் கொடுக்க,
“என்னடி இது குப்பை மாதிரி?” என்று அவைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான் தேவா.
“இதுல எதோ ஒண்ணுல டிரையல் ஃபோல்டர்ஸ் இருக்குதுன்னு சொன்னா! எதுன்னு தெரியல. பார்க்கறதுக்கு டைமும் இல்ல. அதான் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டேன்.”
“அத்தான், உங்களுக்கு அப்புறமா எங்களோட ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் சொல்லித் தர்றேன். வீட்ல போய் உங்க தங்கச்சிக்கு கொடுங்க சரியா? இப்போ இதுல ஒவ்வொண்ணா அந்த சிஸ்டத்துல போட்டு செக் பண்ணுங்க.” என்று ஹரிஷூக்கு அந்த வேலையைக் கொடுத்தான்.
அம்ரு எடுத்து வந்த கோப்பை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்க,
“அதுல என்ன இருக்குது?” எனக் கேட்டான்.
“இது க்ராஸ் வெரிஃபிகேஷன் ஃபைல்டா! ஆனா எஸ்ஏஇ ரெஜிஸ்டர்னு இருக்கும். அதுதான் மெய்ன்! பேஷண்ட் ஐடிஸ், அட்மிஷன், காம்ப்ளிகேஷன்ஸ், ரிமார்க்ஸ், டாக்டர்ஸ் இனிஷியல் எல்லாம் அதுல தான் இருக்கும்.”
“பரவாயில்ல விடு. எங்களுக்கு இதுவே போதும். ஒரு எவிடென்ஸ் கூட இல்லாம இருந்தோம். எங்க டிசிபி இதை வச்சு இன்னும் என்னென்ன செய்யமுடியுமோ எல்லாம் செஞ்சிடுவார்.” என்றவனிடம்,
பத்ரிநாத்தின் அலைபேசியைத் தந்தாள். “இதுலயும் எதுவும் தேறுமான்னு பாரு. எனக்கு அவரு யாருன்னு தெரியல. அஸ்வத் தான் ‘இவன் அந்த டீம் ஹெட் தானே?’ன்னு கேட்டு அடிக்கப் போனார்.”
அதற்குள் தேவா அதனை உயிர்ப்பித்திருந்தான்.
“ஹெட்’ஆ? அந்தாளு பேரு பத்ரிநாத்! ஸோ பீ?” எனத் தனக்குத்தானே அனுமானுமாய் கேட்டவன், திரையில் கேட்ட ‘பேட்டர்னில்’ B வரைய பட்டென்று பூட்டுத் திறந்தது.
இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
புலனச்செய்திகளில் பார்வையோட்டினான். அவன் விழிகள் வெற்றி கிட்டிய தருணமாய் விரிந்தது. அதைக்கண்டு அம்ருவும் எட்டிப் பார்த்தாள்.
பத்ரிநாத் அந்த அரட்டைகளில் யார் யாரிடமோ உரையாடியிருந்தார்.
‘This SAE shouldn’t escalate outside the team.’
‘Record cause of death as cardiac arrest!’
‘Have you updated the patient ID in the final log?’
‘The file going to the Ethics Committee must be clean. Double-check everything!’
‘Can we proceed with the next trial batch once this is closed?’
இதுபோன்ற பேச்சுக்களுக்கு நடுவே, ‘SAE summary sheets’, ‘revised patient logs’, ‘internal trial expense tracker’ போன்ற மருத்துவப் பயன்பாட்டு பெயர்களில் குறிப்பிடப்பட்ட சில PDF மற்றும் Excel அட்டாச்மெண்ட்களும் இருந்தன.
சந்தோஷத்தில் அம்ரு குதித்தாள். இருவரும் கையைத் தட்டி, கைமுட்டிகளை இடித்து என இன்னும் சில கிறுக்குத்தனங்கள் செய்து தங்கள் வெற்றிக்களிப்பை வெளிப்படுத்த, அவர்களை விரோதியைப் போல் முறைத்தான் ஹரிஷ்.
கோபத்திலும் கூட தங்கையை நினைத்து அவன் குரல் நடுங்கியது. “மனசுல பெரிய வீரமங்கைன்னு நினைப்பு! என்கிட்ட கூட சொல்லாம போறதுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் உனக்கு?”
“ச்சு! சும்மா இருங்க அத்தான். சும்மா பொத்தி பொத்தி வச்சிக்கிட்டு…” என்ற தேவா அம்ருவிடம் திரும்பினான். “ஐ அட்மைர் யோர் கட்ஸ், பொட்டட்டோ! சின்னப் புள்ளைங்க இடுப்புல ஊசியைப் போட்டு புண்ணாக்கறதை விட்டுட்டு எங்க டிபார்ட்மெண்ட்ல இன்வெஸ்டிகேஷன் விங்ல சேர்ந்துடு நீ!”
“அவனை எப்போ பார்த்தாளோ அப்போ இருந்து திமிரேறி போய் ஆடுறா! நீ உன் பங்குக்கு இன்னும் கொஞ்சம் ஏத்திவிடு!” என்று எகிறிய ஹரிஷைக் கண்டுகொள்ளவே இல்லை அவன்.
தன் அலைபேசிக்கு அம்ரு அனுப்பியிருந்த தன்வீர் வாக்குமூல காணொளியை நிசப்த நிலையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான். கீழே அம்ருதா, ‘Don't let my anna know!’ என்று எழுதி அனுப்பியதைக் கண்டு தெரியாதது போலவே இருந்துகொண்டான்.
பின் அம்ருதாவிற்கு ஓர் நன்றியைத் தந்துவிட்டு, இனி இது சம்பந்தமாக எதையும் சிந்திக்கவும் வேண்டாமென்றான். “கண்டிப்பா மயக்கத்துல இருந்து முழிச்ச கோகிலா அந்த எம்எல்ஏ கிட்ட தான் போயிருப்பா! இந்நேரம் அந்தாளுக்கு விஷயம் போயிருக்கும். உங்களுக்கு சேஃப்டிக்கு ரெண்டு காப்ஸ் அனுப்பறேன்.” என்றவன், அதன் பிறகு தாமதிக்கவே இல்லை.
அவன் குழுவுடன் பேசி அத்தனை ஆதாரங்களையும் சமர்பித்தான். அம்ருவின் பெயரைச் சொல்லாமல், ஏற்கனவே சத்யநாதன் மருத்துவமனையில் ஊழியர்கள் சிலரைக் கைக்குள் போட்டுக் கொண்டதால், அவர்களின் உதவியால் இது கிடைத்தது என்று சொன்னான்.
அவர்களும் பொன் போல் கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து, சத்யநாதனுக்கு மூச்செடுக்கும் அவகாசத்தைத் தந்துவிடவே கூடாதென்று, தாமதிக்காமல் அவரை முடக்கத் தேவையான மேலதிக வேலைகளைச் செய்துவிட்டனர்.
அம்ரு வந்துவிட்டு சென்ற பின்னர் நீண்ட நேரம் கழித்து, செவிலியர்கள் உதவியால் மயங்கிக் கிடந்த கோகிலா விழி திறந்தாள். ஆனாலும் உடனடியாக செயல்பட முடியாமல் அவள் உடல் கிறங்கியிருக்க, அவசரமாக மருத்துவமனை படுக்கையில் சேர்க்கப்பட்டாள்.
பின்னர் நன்றாகத் தெளிந்ததும், பத்ரிநாத்தைத் தேடி கண்டுபிடித்து, அவரையும் படுக்கையில் சேர்ப்பித்துவிட்டு மாலை நெருங்கும்போது சத்யநாதனைச் சந்தித்து, அரை மூளைக்காரி போல் பேசி அவர் கையில் உயிரையும் விட்டாள்.
சத்யநாதன் அம்ருவின் நிழற்பிம்பத்தைக் காட்டி, “எனக்கு இந்தப் பொண்ணு வேணும்!” என்றபோது, இங்கே இவர்கள் ஊடகங்களுக்கு செய்தி கொடுத்ததையடுத்து, அவரின் மருத்துவமனை சீல் வைப்பதற்கு தேவையான ஆவன செய்யப்பட்டிருந்தது.
பின்னர் அவரின் மருத்துவமனை மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அத்தனை ஆதாரங்கள் இருந்ததால் உடனடியாக சத்யநாதன் கைது செய்யப்பட்டார். அவர் எழுந்துகொள்ள அவகாசம் தராமல் அடிக்கவேண்டும் என்ற தீவிரத்தில் இருந்த தேவாவின் குழு செய்த பிற காரியங்களால் அவரின் மற்ற தொழில்களும் முடக்கப்பட்டன.
இருந்தும் கைது செய்யப்பட்ட மூன்றாம் நாளே தன் செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்துவிட்டார் அவர்.
அடுத்த நாள் அலுவலகத்திற்கு விரைந்து கொண்டிருந்தவரின் மகிழுந்தை, எதிரே வந்த ‘தார்’ குரோதத்துடன் அடித்துத் தூக்கிவிட்டு பறந்ததுதான் அன்றைய தலைப்பு செய்தியாகிப் போனது.
ஸ்கார்பியோவின் கரங்கள் அன்றேனோ தார்’க்கு சொந்தமாகிவிட்டன போலும்!
When the Scorpio decides, no verdict matters🚗🔥…
Comments
Post a Comment