ஸ்கார்பியோ காதல்🚗💌 - 6.2

 

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 6.2


பத்து நாட்கள் கடந்திருந்தன. அவன் தனது வலது கையில் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலுக்கு இடையில் அம்ருதாவின் விலையுயர்ந்த மோதிரத்தைத் தூக்கி பிடித்து பார்த்தவாறு நீள்விரிக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.


“அம்ம்…முக்…குட்டி…” என நீட்டி முழக்கியவனின் இதழ்களில் நூறு விழுக்காடு கேலிப் புன்னகை!


தன் நீளக் கால்களை விச்ராந்தையாக நீட்டிக்கொண்டு மனநிலை பிறழ்ந்தவன் போல் ஏதோவோர் பாடலைப் பாடியவன், “எப்டிடீ அந்த அத்துவான காட்டுக்குள்ளே என்னைத் தேடி வந்து என்கிட்ட சிக்கின?” என மோதிரத்தைப் பார்த்துக் கேட்டான்.


“ப்ச் ப்ச்! கடவுளா பார்த்து எனக்கு அனுப்பி வச்ச முதல் கிஃப்ட் நீ!” என்று எள்ளல் நகை புரிந்தவனின் பார்வை சடுதியில் விகாரமாக மாறி, சட்டென ஏக்கம் கொண்டு அருகிலிருந்த தன் மகளின் புகைப்படத்திற்கு தாவியது. அம்ருதாவின் மோதிரத்தைச் சட்டைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு மகளின் புகைப்படத்தைக் கையில் எடுத்தான்.


மூன்று வயதுக் குழந்தை! பிஞ்சு முகத்தில் அப்படியே அவனைப் பிரதியெடுத்திருந்தாள். புகைப்படத்தில் சின்னப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் வழிந்தோடும் உவகை! துரோகமிழைக்கும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து சாதிக்க போவது ஒன்றுமில்லை என்று நினைத்தாளோ என்னவோ, சடுதியில் வந்த தேவதையைப் போல் மறைந்து போனாள்.


“வெல்லக்கட்டி, டாடி வர்ற வரை வெய்ட் பண்ணிருக்கலாம்ல? ஏண்டா அவ கூட போன?” என்று கேட்டவனின் கண்களில் ஈரம்!


“டாடி வேணாமாடா உனக்கு?” எனக் கேட்டு விசித்து அழுதான்.


“டாடி மேல தான்டா தப்பு… அப்பாவை மன்னிச்சிடுடா…” என்றவன் பின்னால் சாய்ந்து ஈர இமைகளை மூடிக்கொண்டான்.


மனக்கண்ணில் அவனும் அவனின் காதலியும்! 


“எனக்கு தான் பிடிக்கலன்னு சொல்றேன்ல? அப்புறம் ஏன் லவ் அது இதுன்னு டார்ச்சர் பண்ற?” - அவள்


“இப்போ பிடிக்கலன்னா அப்புறம் பிடிக்கும்டீ… கல்யாணம் பண்ணிக்கலாமா ரேவ்ஸ்?” - இவன்.


“உனக்கு அவ்ளோதான் மரியாதை! பேசாம போய்டுடா!” என வெறுப்பை உமிழ்ந்த அவள் கண்களைக் கண்ட பின்னும் அவளைத் துரத்தி துரத்தி காதலித்து திரிந்தானே இவன்!


‘போய்விடு!’ என்று லட்சத்தியோரு தரம் சொன்னாளே… அப்போதே அவளை விட்டு போயிருந்தால் இன்று நெஞ்சில் உதிரம் வடிக்கும் இந்நிலை வந்திருக்காதே! அன்று இளமையின் வேகத்தில் காதல் கண்ணை, அறிவை, மனத்தை என எல்லாவற்றையும் மறைத்துவிட்டது.


“காதல் இல்ல; அது உன் திமிர்!” என்று தன் கன்னத்தில் அறைந்துகொண்டான்.


ரேவதி! அவள் கல்லூரி பயிலும் போதே பேருந்தில் ஒருமுறை பார்த்துவிட்டு, அவள் அழகில் புத்தி பேதலித்து, காதலிக்கிறேன் பேர்வழி என்று அவள் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை அவள் போகுமிடமெங்கும் அவளையே சுற்றி திரிந்தான். அவளின் விருப்பு, வெறுப்புகளை ஆர்வமாகத் தெரிந்து கொண்டவனுக்கு, அவளின் வெறுப்பு பட்டியலின் முதலிடத்தில் தாம்தான் இருக்கிறோம் என்று தெரியாமலே போனது.


அவள் படிப்பை முடித்ததும் அவளுடைய வீட்டில் பேசி திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டு, “இப்போ என்னடி சொல்றே?” எனக் குறும்பாகச் சிரித்திட, வெறுமையானப் பார்வையைத் தந்துவிட்டு போனாள் ரேவதி.


நாள் குறித்து, திருமணம் முடியும் வரையிலான காலகட்டத்தில், அவள் இவனுடன் பேசவேயில்லை. இவனே பேச முயன்றாலும் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும். மஞ்சள் கயிறு தன் மாயாஜாலத்தைக் காட்டிவிடும் என்று தமிழ் சினிமாவைப் பார்த்து முட்டாள்தனமாக நம்பினான். 


ஆண்களுக்கு அரைகிழம் வயதானால் கூட பெண்ணின் மனமும் உணர்வுகளும் புரிந்து தொலையாது. இவனுக்கும் அந்த இருபத்தைந்து வயதில் வாழ்க்கை குறித்த அறிவு அவ்வளவுக்குதான் வேலை செய்தது. கல்யாணக் கனவுகளில் மிதந்தான்.


திருமணமும் முடிந்தது. வீட்டினரின் வற்புறுத்தலால் களிமண்ணில் செய்து வைத்த பொம்மை போல் இவன் கையால் தாலியை ஏற்றிருந்தாள் ரேவதி. அவள் எந்த எதிர்ப்பையும் காட்டாததால் அப்போதும் அனைத்தும் சரியாகிப் போகும் என்று நம்பி தொலைத்தான் இவன்.


முதலிரவில் இவன் கேட்கும் முன்னரே அவள் ஆயத்தமாகி நின்றதில் திகைத்துப் போனான். “ஹேய் ரேவ்ஸ்!”


அன்று மேலே வந்து விழுந்தவள் இவனைப் பேசவே விடவில்லை. “ரேவ்ஸ் எனக்கு வேணாம்டீ…”


“ப்ச்! பின்னாடி சுத்தும்போது சொல்லிருக்கலாம்ல வேணாம்னு? தாலி கட்டும்போது சொல்லிருக்கலாம்ல வேணாம்னு?” என்றவள் இதழ் கொண்டு அவன் பேச்சை நிறுத்தினாள். 


அவன் வேண்டி விரும்பி கட்டிக்கொண்ட பெண்ணின் முதல் முத்தம் கசப்பாய் இருந்தது.


அவன் கைகளை எடுத்து தன் வெற்று உடலின் மீது படரவிட, அசூயைக் கொண்டு கையை உதறினான். அவளின் புது பரிமாணத்தைக் கண்டவன் அவளுடன் ஒன்ற முடியாமல் திணறினான்.


“ஆம்பளை தானாடா நீ?” என்று கேட்டு அவன் ஆண்மையை இழிவுபடுத்தினாள்.


“ரேவ்ஸ்! நீ ஏன் இப்டி? நமக்கு லைஃப் ஃபுல்லா இருக்குது. இப்டி… இப்டி வேணாம் ரேவ்ஸ்…”


“வேற எப்டி? உன் காதலுக்கு மதிப்பு கொடுத்து நீ தொட, நான் சிலிர்க்கன்னு இருக்கணுமா? பாரு! தொட்டு பாரு. சிலிர்க்கவே இல்ல பாரேன்.” என்று பைத்தியம் போல் சிரித்தாள்.


தன்னிடம் கெஞ்சியவனைக் காலில் போட்டு மிதித்தாள். தன் காதலை அவள் குப்பையைப் போல் கசக்கி எறிவதாக உணர்ந்தவன் வேதனைக் கொண்டான். “நீ என் கூட இருந்தாலே போதும். இதுலாம் வேணாம் ரேவ்ஸ்.”


மனைவியை திருப்திப்படுத்த வக்கில்லை என்று சொல்லி காறி உமிழ்ந்தாள். “உனக்கெல்லாம் எதுக்குடா காதலும் கல்யாணமும்?” என்று கேட்டு அவனை மட்டுமல்லாது அவன் காதலையும் சாகடித்தாள்.


அன்று விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமாக அவளோடு இணைந்தான்.


முடிவில் எகத்தாளமாக சிரித்தவள், “இதுக்காக தானே இந்தக் கல்யாணம்? வாயேன் இன்னொரு முறை!” என்று அவன் மேல் காலைத் தூக்கிப் போட,


பட்டென்று உதறித் தள்ளிவிட்டு ஆற்றாமையாகக் கேட்டான். “ச்ச! இத்தனை நாள்ல ஒருமுறை கூட என் லவ் உனக்கு புரியவே இல்லையா ரேவ்ஸ்?” 


“லவ்? ஒரு பொண்ணை விடாம சுத்தி சுத்தி டார்ச்சர் பண்றதுக்கு பேர் லவ்வாடா? அவ மனசுல என்ன இருக்குதுன்னு ஒரு நிமிஷம் நின்னு யோசிச்சிருப்பியா? உனக்கு விருப்பம் இல்லன்றதால இப்போ இந்த கால் மணி நேரத்தைக் கூட உன்னால தாங்க முடியலயே… அப்போ ரெண்டு வருஷமா எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லியும் விடாம டார்ச்சர் செஞ்சு, இதோ கல்யாணம் வரை இழுத்துட்டு வந்து என் வாழ்க்கை மொத்தத்தையும் விருப்பமில்லாததா மாத்தி வச்சிருக்கியே இதுதான் உன் லவ்வா?” என்று ஆவேசமாகக் கேட்டு அவனை உலுக்கி எடுத்தாள் ரேவதி.


தன் வாழ்வில் ரேவதி காலடி எடுத்து வைத்ததிலிருந்து ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தவன், “ஆஆஹ்!!” என உடலைக் குறுக்கி தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்.


இளம் பிராயத்தில் ரேவதி விடயத்தில் காதலென்று இவன் செய்த தவறு இன்று இவனின் உயிர்நீரில் பிறந்த மழலையைக் காவு வாங்கிவிட்டது. அழுதான். எல்லாவற்றுக்கும் சேர்த்து அழுதான். 


விசும்பிக் கொண்டிருந்தவன் திடுமென எழுந்து முகம் துடைத்துக்கொண்டு விகாரமானப் பார்வையுடன், “இனி ஒருத்தரையும் விடமாட்டேன். ரேவ்ஸ், உனக்கு துணைக்கு இன்னும் நிறைய பேரை அனுப்பிவிடறேன்டீ!” என்று மீண்டும் அம்ருதாவின் மோதிரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்மம் மிளிர வசீகரமாகப் புன்னகைத்தான்.


“வந்துகிட்டே… இருக்கேன். கௌண்ட் யோர் டேஸ் டாக்டர் அம்ம்…முக்குட்டி!”


Shift the gear... story accelerates.

Comments

  1. Ammadiyoo...idhu ena bayangarama iruku😯

    ReplyDelete

Post a Comment

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)