ஸ்கார்பியோ காதல் - 4

ஸ்கார்பியோ காதல்

 




அத்தியாயம் 4

இருபுறமும் மரங்கள் கிளை விரித்திருந்த அந்த தார்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஹரிஷின் சோனெட்டின் ஹெட்லைட் வெளிச்சம் முன்னே நீளமாக விழுந்திருக்க, பக்கவாட்டில் இன்டிகேட்டர் மினுங்கிக் கொண்டிருந்தது. காட்டுக்குள் எங்கோ தூரத்தில் நரிகளின் ஊளையிடலும், அவ்வப்போது கடந்து செல்லும் வாகனங்களின் ஒலியும் ஒளியும், மழை வானத்தின் உறுமலும், காற்றின் அதீத குளிருமாய் இருந்த அவ்விடத்தில் தங்கையைக் காணாமல் வெலவெலத்துப் போனான் ஹரிஷ். 

ஒரு நொடி தான்! 

சட்டென்று சுதாரித்துக்கொண்டு அலைபேசியில் அவளை அழைத்துப் பார்க்க, அது மகிழுந்தின் உள்ளிருந்து தன் இருப்பைக் காட்டியது.

‘உச்’ கொட்டியவன், “ஸ்வேதா, இறங்கக் கூடாது. உள்ளேயே இரு! வந்துடறேன்.” என்று எச்சரித்து, அலைபேசியில் டார்ச்சை உயிர்ப்பித்துக் கொண்டு அவ்விடத்தை ஆராய்ந்துவிட்டு, பக்கவாட்டில் ஒற்றையடிப் பாதை போல் தெரிந்த சிறிய வழித்தடத்தில் கால் வைத்தான்.

அம்ருதா காரை விட்டு இறங்கி இருபது நிமிடங்கள் இருக்குமா? ஸ்வேதாவை சாப்பிட வைத்து, மாத்திரை கொடுத்து தேற்றி… நிச்சயம் இருபது நிமிடங்கள் இருக்கும். இவன்தான் நேரத்தைப் பார்க்காமல் ஸ்வேதாவுடன் இழைந்திருந்தான். அம்ரு தங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியேயே நின்றிருக்கக் கூடும்.

ஒருமுறை… ஒரேயொரு முறை தங்கை என்ன செய்கிறாளென கழுத்தை வளைத்து பார்த்திருக்க வேண்டும். காதல் மயக்கத்தில் தன் போக்கில் இருந்து தவறிழைத்து விட்டான். அக்காட்டிலுள்ள மொத்த முட்களும் நெஞ்சில் குத்துவதைப் போலிருந்தது. 

அவர்கள் வீட்டில் அம்ருதா தான் செல்லக் குழந்தை. என்ன தான் கண்டிப்புடன் வளர்த்தாலும் அவளுக்கொரு சிறு வலியென்றால் பதறிப் போவார்கள். 

பெற்றவர்களுக்கு ஒற்றைப் பெண், கடைக்குட்டி என்ற வகையில் செல்லமாக இருக்கலாம். ஆனால் ஹரிஷிற்கும் கூட அவள் செல்லக் குழந்தையாகவே தான் வளர்ந்திருந்தாள். அவளுக்கு பல் விளக்கக் கற்று தந்ததில் துவங்கி, பாடம், விளையாட்டு, நளினம், நாகரிகம், நேர்த்தி, தைரியம், துணிவு என்று அம்ருதாவின் வாழ்வியல் அசைவுகள் அத்தனையிலும் இந்த அண்ணன்காரனே நிரம்பியிருக்கின்றான்.

இருவருக்கும் ஆறு வயதுகள் தான் வித்தியாசம்! ஆனால் பின்னாட்களில் தனக்கொரு குழந்தை பிறந்தால் கூட அம்ரு தான் தன் முதல் குழந்தை என்று அடிக்கடி அம்மாவிடம் பகுமானமாய்ப் பேசுவது மனக்கண்ணில் தோன்றி கேலி நகை புரிந்தது. இப்போது அவனின் முதல் குழந்தையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றானே! 

‘உனக்கென ஒருத்தி வந்ததும் உன் குழந்தையைப் பாராமல் இருந்துவிட்டாயல்லவா?’ ஒவ்வொரு செல்லையும் குற்றவுணர்ச்சி அரித்தெடுத்தது.
 
“அம்மூஊ! அம்முக்குட்டீஈஈ!!” அவனுள்ளத்து தேம்பல்களெல்லாம் ஸ்ருதி சேர்த்துக்கொண்டு அவளுக்கான செல்ல விளிப்பாக எதிரொலிக்க, அந்த சின்ன வெளிச்சத்தில் இங்குமங்கும் தேடியவாறு ஒற்றையடி பாதையில் பத்தடி தூரம் வந்திருந்த போது மழை தன் திறமையைக் காட்ட ஆயத்தமானது.

மழையிடமிருந்து தப்பிப்பவளாக தலைக்கு மேல் ஒற்றைக்கை குவித்துக்கொண்டு, “அண்ணா! ஏன் இப்டி கத்திட்டிருக்க?” என்றவாறு வலதுபக்க மரத்தின் பின்னிருந்து வந்தாள் அம்ருதா.

ஏற்கனவே தலைக் கலைந்திருந்தது. இப்போது முகமும் கண்களும் சிவந்திருந்தன.

அழுதிருக்கிறாளோ?

இருட்டின் காரணமாகவும் ஹரிஷின் மிகுதியான பதற்றத்தின் காரணமாகவும் அம்ருதாவின் கலைந்த தோற்றம் அவன் கருத்தில் பதியவில்லை.

நடுங்கிய குரலில், “டேய் அம்மு! எங்கடா போன?” என்றவன் அலைபேசியைக் கீழே விட்டுவிட்டு, பாய்ந்தோடி வந்து தங்கையைத் தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.

“பாத்ரூம் போயிருந்தேன். என்னாச்சு? ஏன் அழற? வலிக்குது விடுண்ணா!” என்றவள் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முன்னே நடந்து தங்கள் வாகனத்தைச் சமீபிக்க,

அவள் கரம் பிடித்து திருப்பியவன், “சொல்லிட்டு போயிருக்கலாம்லடா?” என்று கேட்கும்போதே சங்கடமாக உணர்ந்தான். தானும் தன் காதலியும் உள்ளிருக்கும் போது தங்கை எங்ஙனம் தன்னை அழைக்கக்கூடும்?

மகிழுந்தின் வெளிச்சத்தில் அவன் முகம் பார்த்து, அண்ணனின் சங்கடத்தை உணர்ந்து கொண்டவள், சட்டென தன் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு ஹரிஷின் தங்கையாக மாறி, “அண்ண்…ணா!” என்று பல்லைக் கடித்தாள்.

ஹரிஷ் கீழே விழுந்த அலைபேசியை எடுத்து வந்து வெளிச்சம் காட்டி, அவளின் கையை முன்னும் பின்னும் ஆராய்ந்தான். “உனக்குத்தான் ப்ளான்ட் டெர்மடிடிஸ் (தாவரங்களால் உண்டாகும் தோல் ஒவ்வாமை) இருக்குதுல்ல? அப்புறம் ஏன் செடிகளுக்கு நடுவுல அவ்ளோ தள்ளி உள்ளே போன?” 

வெடுக்கெனக் கையை உருவிக்கொண்டு, பேச்சுக்கள் ஸ்வேதாவிற்கு கேட்காவண்ணம், “ஏன் மூஞ்சியை இப்டி வச்சிருக்க? அப்டியா தொலைஞ்சு போயிடப் போறேன்? ப்ளீஸ் டோண்ட் ட்ரீட்டிங் மீ லைக் அ சைல்ட்! அதுவும் அண்ணி இருக்கும்போது என்கிட்ட இப்டி நடந்துக்காதே ஹரி! இனி நீ அவங்களை தான் கவனிக்கணும்.” என்று பெரிய மனுஷியாக அறிவுரை சொன்னாள் அவன் குழந்தை!

ஹரிஷிடம் குறும்பு பெண்ணாக இருந்தாலும் உண்மையில் அவள் ஓர் அறிவார்ந்த மருத்துவச்சி அல்லவா? அவளும் இன்று ஸ்வேதாவின் முகமாற்றங்களைக் கவனித்திருந்தாள். அதனால்தான் அவ்வப்போது அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து விலகி நின்றாள்.

ஏன் மனநல மருத்துவரான ஹரிஷிற்குமே தன்னவளின் உள்ளக்கிடக்கை புரிந்ததுதான்! ஆனால் அதற்காகவெல்லாம் தங்கையிடம் நடந்துகொள்ளும் முறையை மாற்றிக் கொள்ள முடியுமா? அவளைத் தன்னிடமிருந்து விலகுவதற்கு அனுமதிக்க முடியுமா?

இப்போதும் அடிபட்ட குழந்தையைக் கண்டு அழும் அன்னையைப் போல் கலங்கி நின்ற ஹரிஷிற்கு இன்னும் மூச்சு சீராகவில்லை. “ஸாரிடா குட்டி…” 

“அய்யோ இவ்ளோ நேரம் என்ன சொல்லிட்டிருக்கேன்? திரும்பவும்… ப்ச்! குட்டி கிட்டின்னு கூப்பிட்ட… பல்லைத் தட்டிடுவேன். ஐ’ம் டிவெண்டி த்ரீ யூ நோ?” என்று மூக்கைச் சுருக்கி கோபம் கொள்ள, 

கலங்கிய கண்களுடன் கொஞ்சமாய் சிரித்தான் அவள் அண்ணன்.

ஜன்னலின் வழி ஸ்வேதா தலை நீட்டினாள். “ரெண்டு பேரும் ஏன் மழைல நனையறீங்க? உள்ளே வாங்களேன்!”

அம்ருதா அண்ணனிடம் கோபம் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டு பட்டென்று கதவைத் திறந்து வாகனத்தில் ஏறிக்கொள்ள, அவனும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருக்கைப் பட்டியை இழுத்துப் பூட்டியபடி ஸ்வேதாவிற்கும் புரிவதைப் போல் சொன்னான். “உனக்கும் எனக்கும் எத்தனை வயசு ஆனாலும் என்னோட முதல் குழந்தை நீ தான்’டா அம்மு! இந்த அண்ணன் இல்லாம உன் லைஃப்ல எதுவும் நடக்கக்கூடாது.”

வாகனம் புறப்பட்டது.

“ஸ்ஸ்ஆஆ! அண்ணி சொல்லி வைங்க உங்க ஆளுகிட்ட, ஓவர் சென்ட்டியா பேசினா கடிச்சு வச்சிடுவேன் ஆமா!” என்ற அம்ருதாவிற்கு அண்ணனின் பாசத்தில் அழுகை வந்தாலும், முயன்று கோபமாகவே பேசினாள். 

“முதல்ல தலையைத் துவட்டுங்க ரெண்டு பேரும்!”

“லேசான தூறல் தானே அண்ணி? தலை நனையல.”

ஸ்வேதாவிற்கும் அம்ருதாவைக் காணவில்லை என்றதும், அவளைக் கவனியாமல் நேரங்கெட்ட நேரத்தில் தங்கள் போக்கில் வாகனத்தினுள் இருந்துவிட்டதில் பயமும் குற்றவுணர்வும் வந்திருந்தது.

“ஸாரி அம்ரு. உன்னைக் காணும்னதும் ஐ’ம் ஃபீலிங் பேட்… டயர்ட்னெஸ்ல நான் அப்டியே…”

“அடடா! புருஷனும் பொண்டாட்டியும் பேசி வச்சிக்கிட்டு சென்ட்டீ சீன் ஓட்டுறாங்கப்பா. ஆனா அதைப் பார்க்கறதுக்கு தான் எனக்கு மூட் இல்லை. ஃபீலிங் ஸ்லீப்பி… குட் நைட் அண்ணி. நீங்க அவன் கூட பேசிட்டு வாங்க. இல்லன்னா தூங்கிட போறான்.” என்று இருவர் முகத்தையும் பாராமல் பின்னால் திரும்பி, பையிலிருந்து ஒரு சால்வையை எடுத்து நன்றாக சாய்ந்து போர்த்திக்கொண்டு, காதில் இயர்போட்ஸ் வைத்து கண்மூடிக் கொண்டாள்.

ஸ்வேதா ஹரிஷை விடுத்து அவன் தங்கையின் முகத்தை தான் பார்த்திருந்தாள். அவள் ஒன்றும் தன் நாத்தனாருக்கு வில்லி அல்ல! எல்லா பெண்களையும் போல் தன் கணவனின் கவனிப்பில் தனக்குத் தான் முதலிடம் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் இவளிடமும்! அந்த முதலிடம் அம்ருதாவிற்கு கிடைப்பதில் மனம் சிணுங்கியதென்னவோ உண்மை. மற்றும்படி ஸ்வேதா இயல்பில் நல்ல பெண். அதனாலேயே தற்போது அம்ருதாவின் புரிதலிலும் பெரிய மனிதி தோரணையிலும் தன் செயலை எண்ணி வெட்கினாள். 

இத்தனை நேரமும் தனக்காக தான் அம்ருதா உள்ளே வராமல் வெளியேயே சற்று தள்ளி நின்றிருக்க வேண்டும். அவளுக்கு இருக்கும் அந்த இங்கிதம் தன்னிடம் இல்லாமல் போய்விட்டதில் மனம் அழுத்தியது. 

தயக்கத்துடன் ஹரிஷைப் பார்த்தாள். அவன் பார்வை சாலையில் இருந்தாலும், இன்னும் தங்கையைக் காணாத பொழுதை எண்ணி தனக்குள் உழன்று கொண்டிருந்தான். உணர்ச்சி வேகத்தில் அவன் கையில் வாகனத்தின் வேகம் கூடியிருந்தது.

மெதுவாக அவன் தோள் தொட்டாள். “ஸாரிங்க… நானாவது கவனிச்சிருக்கணும்.”

அவளுக்கு ஆறுதலாகவும், தன் உள்ளத்தின் அலைப்புறுதலை அமைதிபடுத்த வேண்டியும், அப்போது ஸ்வேதாவின் கரத்தின் வெம்மை அவனுக்குமே தேவையாகத் தான் இருந்தது. “ஒரு நிமிஷம் நடுங்கிட்டேன்டீ… நான் வளர்த்த குழந்தை அவ! எங்கே இந்தக் காட்டுக்குள்ளே அவளைத் தொலைச்சிட்டேனோன்னு ஒரு நிமிஷம்…” அவன் குரல் வெகுவாக கலங்கியது.

“ஹரிஷ் டிரைவிங்ல இருக்கீங்க. ரிலாக்ஸ் ஆகுங்க!” என்று தண்ணீர் போத்தலைத் திறந்து கொடுத்தாள்.

ஒரு கையால் வாங்கி அருந்தியவன் சற்று நிதானத்திற்கு வந்தான். “ஓகே பேபி, வேலூர் போயிட்டு சாப்பிட நிறுத்தறேன். நீயும் கொஞ்ச நேரம் தூங்கு!”

“தூக்கம் வரலைங்க.”

“சரி, உன் இளையராஜாவை ப்ளே பண்ணு, கேட்போம்.”

“ச்சு! பாட்டு கேட்கற மூட் இல்லங்க.”

“ஏண்டி? குளிக்கும்போது கூட கேட்பேன்னு சொன்ன?”

“அய்யோ!” என்று அவனுக்கு முகம் காட்டாமல் அம்ருதாவின் பக்கம் ஒருக்களித்து திரும்பி சாய்ந்து கொண்டவள் சற்று நேரத்தில் உறங்கிப் போனாள்.

அப்படியாக தவறிழைத்த பாவனையிலிருந்து அவளை விடுவித்த ஹரிஷ், அதன்பின் மீண்டும் தங்கையின் எண்ணங்களிலேயே உழன்றான். முதலில் பதற்றத்தில் அவன் கருத்தில் பதியாததெல்லாம் பின்னர், அலசி ஆராயும் அவன் கண்களுக்கும் சிந்தைக்கும் இரையாகியிருந்தன. அதனால்தான் உன் வாழ்வில் நான் இல்லாமல் எதுவும் நிகழக்கூடாது என்று சூசகமாக உரைத்தான்.

தற்போது இரண்டாம் முறையாக மீண்டும் சற்றுமுன் நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தான். மரத்தின் பின்னிருந்து வந்த பெண்ணின் நலுங்கிய தோற்றம், சிவந்த முகம், அவளின் தடுமாற்றம், கலங்கிய குரல் என ஒவ்வொன்றாகக் கூர்மையுடன் அவன் சிந்தையில் வலம் வந்தது. இவனுக்கு முகம் காட்டாமல் வேகமாக போய் வாகனத்தில் ஏற நினைக்கையில் இவன் அவளை இழுத்து நிறுத்தி முகம் பார்த்து பேசிட, அவள் சட்டென்று ஓர் நொடியில் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு தனக்கே அறிவுரை சொன்னது ஹரிஷ் மனக்கண்ணில் படம் போல் ஓடியது. 

எல்லாவற்றையும் விட தங்கை தன்னிடம் எதையோ மறைக்க முற்படுகிறாள் என்ற விடயம்தான் அவன் உயிர் வரை தாக்கியது. அண்ணனாக பிறந்தாலும் இவன் அவளின் தகப்பனாக அல்லவா இருந்திருக்கிறான்! தன்னிடமே மறைக்குமளவிற்கு அப்படியென்ன நிகழ்ந்து விட்டது?

சென்ற வாரத்தில்தான் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அறையில் முடங்கிக் கிடந்தாள். அம்மாவும் ஐந்தாம் நாள் அவளின் தலைக்கு எண்ணெய் வைத்து தண்ணீர் ஊற்றி, வீட்டில் விளக்கேற்ற செய்திருந்தார்கள். அதனால் மாதந்திர சுழற்சியாக இருக்கலாமோ என்று எண்ணவும் வழியில்லை. அப்படியே இருந்தாலும் ஒரு மருத்துவராக அதற்கெல்லாம் தடுமாறி நிற்க மாட்டாள்; நாசூக்கு பார்த்து தன்னிடம் மறைக்கவும் மாட்டாள்.

ஒருவேளை விஷப்பூச்சி ஏதேனும் கண்டிருக்கலாமோ? ஆனால் அதனையும் தான் ஏன் மறைக்க வேண்டும்?

வேறு எதுவோ! நிச்சயமாக வேறு எதுவோ இருக்கிறது!

உலகத்தை எதிர்கொள்ள கற்றுத் தந்த தன்னிடமே மர்மமாக நடந்து கொள்ளுமளவிற்கு தன் தங்கை வளர்ந்து விட்டாளா என்ன!

பேசாமல் மீண்டும் வாகனத்தைத் திருப்பிக்கொண்டு அவ்விடத்திற்கு போய் பார்த்தாலென்ன என்று நினைத்தவன், “ரிடிகுலஸ்!” என்று நிந்தனையாகத் தலையசைத்துக் கொண்டான்.

அளவுக்கு அதிகமாக சிந்தித்ததில் தலை வலித்தது. நாளை அவளிடம் நிதானமாக கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, சிந்தனைக்கு தற்காலிக ஓய்வளித்தவன், பின்னால் கண்மூடி தூங்குவதைப் போல் பாசாங்கு செய்யும் தங்கையைத் தான் கண்ணாடியில் பார்த்தான். தன் பிள்ளையின் சேட்டைகள் பற்றி தகப்பனுக்கு தெரியாமல் போகுமா என்ன?

ஆமாம்! அம்ருதா தூங்கவில்லை! இப்போது அவள் யாரிடமும் பேசும் நிலையிலில்லை. அண்ணனின் செல்லத்தில் நனையவோ, அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இயலாத நிலையில் இருக்கிறாள். ஆக அண்ணனுக்கு சந்தேகம் வராமல் நடப்பதாக நினைத்துக்கொண்டு, தூங்குகிறேன் என்று அசையாமல் விழி மூடியிருந்தாள்.

ஹரிஷூம் ஸ்வேதாவும் அம்ருவை நினைத்து குற்றவுணர்வுக்கு ஆளாயிருந்த அதே நேரத்தில்,

இந்த அண்ணன் இல்லாம உன் லைஃப்ல எதுவும் நடக்கக்கூடாது.’ என்ற தன் பாசமிகு அண்ணனிடம், சற்றுமுன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, தான் கண்ட காட்சியைப் பகிராமல் மறைப்பதில் அம்ருதாவும் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகியிருந்தாள்.

காரணம் அவள் அந்தக் காட்டுப்பகுதி துவங்கும் இடத்தில் பார்த்தது - இன்று அவளுக்கு பெரும் பிரேமையை உண்டாக்கியிருந்த பச்சை நிற மஹிந்திரா ஸ்கார்பியோவை! அதன் எஜமானனை! அவன் கரங்களில் இருந்த…

இருந்த?

உயிரற்ற உடலை!


Brake before the truth 🚘🛑



கமெண்ட்டுங்க ஃப்ரெண்ட்ஸ், கமெண்ட்டுங்க! Episode போட interestஏ வரல😌😌

Comments

Post a Comment

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)