சீதையின் பூக்காடு - 10
அத்தியாயம் 10
அன்று காலை பால்கனியில் வைத்து விபுநந்தனிடம் பேசிவிட்டு, கீழே வந்த ஆரவிக்கு திடுமென ஒன்று தோன்றியது. அப்படியும் இருக்கலாமென அவளின் எழுத்தாள அறிவு தூண்டிவிட்டது.
சந்தேகத்தை உடனேயே நிவர்த்தி செய்யும் பொருட்டு, அங்கிருந்த நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு ஏறி, முதலில் ஹாலில் இருந்த ஷோகேஸில் பொம்மையோ அல்லது வேறு எந்த பொருளுமோ வித்தியாசமாக இருக்கிறதாவென ஒவ்வொன்றாக சோதித்தாள்.
முதல் அடுக்கை பார்வையிட்டுவிட்டு அடுத்த அடுக்கை சோதித்துக் கொண்டிருக்கும் போது, விபுநந்தன் கீழே வந்தான். இன்று இரத்த சிவப்பு நிற டீ-ஷர்ட் மற்றும் சந்தன நிற த்ரீ ஃபோர்த் ஷார்ட்ஸ்!
"ஹேய் மாமி! அங்க என்னத்த உருட்டிட்டு இருக்க?"
"சும்மா தான் விபு. ஏதாவது வித்தியாசமா இருக்கறதா'ன்னு பார்த்துண்டு இருக்கேன்."
"முன்னாடி நிறைய ஃபாரின்ல வாங்கின காஸ்ட்லியான ஷோ பீஸஸ் இருக்கும்."
"ம்ம்??" என்று கேள்வியாய் திரும்பினாள்.
"ஐ மீன்... இருந்திருக்கும். வீட்டைப் பார்த்தாலே பெரிய ஆளுங்க'ன்னு தெரியுதே! அதோட ஷோகேஸ்ல வேற நிறைய காலியிடம் இருக்குது. அதை வச்சு சொன்னேன். காஃபி போட்டுட்டியா ஆரவி? உனக்கும் சேர்த்து போடவா?" என்று கேட்டவாறே கிச்சனுக்குள் சென்றுவிட்டான்.
"நான் போடல. நேக்கும் சேர்த்தே போடு. தலையை வலிக்கறது."
'கமான் ஆரவி! விபுவிடம் ஏதோ தவறிருக்கிறது. எதையோ உளறிக் கொட்டி கிளறி மூடுகிறான். திங்க் வெல் அபௌட் தட்!' நன்றாக விழித்துக்கொண்ட ஆரவியின் அறிவு தனக்கொரு பாயிண்ட் கிடைத்ததை எண்ணிக் கூக்குரலிட்டது.
'வேண்டாத மாமியார் கைப்பட்டாலும் குற்றம்; கால்பட்டாலும் குற்றமாம்! அது போலுள்ளது. அவன் ஏதோ அனுமானத்தில் பதில் கூறிவிட்டு போகிறான். அதைப் போய் சந்தேகப்படுவதாமா? ஆரவி! சற்று முன் ஆறுதலுக்காக அவன் தோளைத் தேடிவிட்டு இப்போது நீ அவனையே சந்தேகப்படுவதில் சற்றும் நியாயமே இல்லை.' - அவனுக்காக வக்காளத்து வாங்கும் மனது!
'ஓஹோ! ஆரவி, அப்படியானால் இப்போது நீ எதை தேடுகிறாய் என அவனிடம் சொல்லேன்! நல்லவனாக இருந்தால் உன்னோடு சேர்ந்து தேடுவான். இல்லாவிடில் தன் குட்டு வெளிப்பட்டுவிடுமென பயந்து, அப்படி எல்லாம் எதுவும் இல்லை எனக் கூறி, இன்னமும் உன்னைக் குழப்பவே பார்ப்பான்.' புத்தி ஏதோ தான் பெரியதாக திட்டம் தீட்டியதாக சிலிர்த்துக்கொண்டது.
சமையலறையில் இருந்து வெளியே வந்தவனிடமிருந்து காபியை வாங்கி அருந்தியவள், "விபு! நம்மள ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிருக்கவாளோட மோட்டிவ் என்னவா இருக்கும்னு நினைக்கற? எனி கெஸ்?" எனக் கேட்க,
"இதுக்கு நான் முதல் நாளே பதில் சொன்னேனே ஆரவி? எனக்கு எதுவும் தெரியல? ஏன் நீ ஏதாவது கண்டுபிடிச்சிருக்கியா?" என அவளிடமே திருப்பிக் கேட்டான்.
"ம்ம்.. வந்து… அது…"
"சொல்லு மாமி! என்னவா இருக்கும்னு நினைக்கற?"
"இல்ல… இந்த ஆத்துல... ஏதாவது கண்காணிப்பு கேமரா வச்சு நம்ம ரெண்டு பேரோட ஆக்… ஆக்டிவிடீஸையும் ஒரு கும்பல் வாட்ச் பண்ணலாமோல்லியோ?" அவன் முகம் பார்க்காமல் தரையைப் பார்த்தவாறே கூறினாள்.
"வாட்ட்?? யூ மீன்… நம்மள வச்சு?" என்று தலையிலடித்துக் கொண்டவன், "மை காட்! பேபி!! எப்டி உனக்கு இப்டிலாம் தோணுது?" 'இப்படி யோசிக்கிறாளே!' என்ற அடங்காத வியப்புடன் கேட்டான்.
"......"
"சரி! நீ சொல்ற மாதிரியே இருந்தாலும் அதுக்கெல்லாம் ப்ரொஃபஷனலா ஆட்கள் இருப்பாங்களே? ஏன் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமே இல்லாத நம்மள யூஸ் பண்ணனும்?"
ஆரவி நிமிரவே இல்லை. அவனிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க நேர்ந்ததை எண்ணி விசனப்பட்டு தலைகவிழ்ந்திருந்தாள்.
அதைப் பொறுக்காதவன் போல், "சரி வா! தோசை மாவு இருக்குது. சட்னி மட்டும் செஞ்சு சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் சேர்ந்தே தேடலாம்." என்றுவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டான்.
சட்டென நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் அதீத ஒளி! அகத்தின் துள்ளலாட்டம் முகத்தில் தெரியும் என்பது இது தான் போலும்.
ஆரவியின் அறிவோடு விபுநந்தனுக்காக வாதம் புரிந்த அவள் மனது, வெற்றி பெற்றுவிட்டேனென காலரை உயர்த்திக்கொண்டது. தன்னவன் தவறிழைக்கவில்லை எனும் பெருமிதத்தில் அவனைக் கண்களால் விழுங்கி விடுபவள் போல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அதற்கு பின் ஆரவி சற்று தெளிந்தாற் போல் காணப்பட்டாள். ஆனால் எப்போதும் வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருக்கும் விபுநந்தன், இன்று அவளைப் பற்றிய கவலை அரித்ததால் அமைதியாகவே வேலைகளைப் பார்த்தான்.
இருவரும் சாப்பிட்ட பின், கீழ் தளம் முழுவதையும் தலைகீழாக்கி தேடினர். ஆரவி கூறியது போல் சந்தேகப்படும்படியான எந்த ஒரு சாதனமும் கிடைக்கவில்லை. டிடெக்டிவ் டிவைஸ் இருந்தால் சுலபமாக கண்டுபிடிக்கலாமென கூறினான் விபுநந்தன்.
ஆனால் ஹாலில் இருந்த ஒரு மேஜையை சற்று நகர்த்திப் பார்க்க, தொலைபேசி இணைப்பிற்கான கம்பியை (wire) சொருகும் இடம் இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் மௌனமாய் பார்த்துக் கொண்டனர்.
பின், "பூஜை ரூம்க்குள்ள போனா ஒரு நிலவறை இருக்குது. வா! அங்கயும் போய் பார்ப்போம்." என்றுவிட்டு செல்ல, ஆரவிக்கு சகலமும் ஆட்டம் கண்டுவிட்டது.
காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. இவள் பார்த்த அநேக பேய்ப் படங்களில் நிலவறையும் கண்டிப்பாக முக்கிய இடம் பெற்றுவிடும். என்ன தான் தெளிவாக சிந்திக்க முடிவெடுத்திருந்தாலும், அடி மனதில் தன் கதையோடு சம்பந்தப்படுத்திக்கொண்ட பேயைப் பற்றிய பயமும் இவளுக்கு இருக்கிறதல்லவா? எனவே கல்லாகிப் போய் நின்றாள்.
உள்ளே சென்றிருந்தவன், "பேபி! என்ன பண்ற? வா! நான் கீழ இறங்கப் போறேன்." எனவும்,
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, பூஜையறையின் இடப்புறத்தில் சிறிய கதவு இருந்தது. அன்று பார்த்த போது அது ஏதோ அலமாரி என்று நினைத்து திறக்காமல் விட்டுவிட்டாள் ஆரவி.
"இங்க நிலவறை இருக்கறதுனு நோக்கெப்படி தெரியும்?"
"ஏன் நீ வீட்டை குடைஞ்சு பார்க்கும் போது நான் பார்த்திருக்க மாட்டேனா?" என்று கேட்கவும், அமைதியாகிவிட்டாள். இருவரும் கீழே சென்ற மரப்படிகளில் மெதுவாக இறங்கினர்.
நந்தனின் இடக்கையை சுற்றி வளைத்தவாறே அவனோடு ஒட்டிக்கொண்டே சென்றவள், வெளியே வரும் வரை கையை விடவேயில்லை. அவன் தான் காதலின் அவஸ்தையில் அணைக்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் நெளிந்தான்.
கீழே ஒரு டேபிளில் மருத்துவ சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் அதற்கு சம்பந்தமே இல்லாத தோட்ட பராமரிப்பு புத்தகங்கள் இருந்தன. அந்த காலத்தைய பிரிட்டிஷார் ஒருவரின் கழுத்தளவு சிலை ஒன்று இருந்தது. வேறு பழைய மர சாமான்கள் மற்றும் பெரிது பெரிதான சமையலறை பாத்திரங்கள் சிற்சில இருந்தன. வேறு எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை.
மருத்துவ புத்தகங்களை எடுத்துப் பார்க்கையில், விபுநந்தன் பொம்மையைத் தொலைத்த குழந்தையாகிப் போனான். ஆரவி பாதி முகத்தை அவன் நெஞ்சில் புதைத்து ஒற்றை கண்ணால் தான் அவ்விடத்தையே ஆராய்ந்தாள். எனவே அவனின் இருள் படிந்த முகத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
வெளியே வந்த பின் சமையலறையையும் ஆராய்ந்தனர். தேடலின் முடிவில் ஆரவி மிகவும் களைத்துவிட்டாள். அவள் தான் மிகவும் தீவிரமாக தேடினாள். அவன் ஏதோ மேலுக்கு இரண்டு, மூன்று இடங்களை மட்டும் தேடிவிட்டு சும்மா நின்றுகொண்டான். ஆரவி அதை கவனித்தாலும் தனக்கு போல் அவனுக்கு சந்தேகம் தோன்றவில்லை. அதனால் தான் பட்டும் படாமல் இருக்கிறானென நினைத்துக்கொண்டாள்.
"ஓகே விபு! நீ போய் சமையலை கவனி. நேக்கு எதுவும் வேணாம். நேத்து உறை ஊத்தின தயிர் மட்டும் போறும்."
"ஏன் எதுவும் வேணாம்? அப்புறம் பொசுக்கு பொசுக்குனு மயங்கி விழறதுக்கா?"
"நான் ஒண்ணும் மயங்க மாட்டேன். நேக்கு எதுவும் சாப்பிட பிடிக்கல. நான் மாடில இருக்க மத்த ரூமையும் செக் பண்றேன்." என்று படியேறப் போனவளை,
"முதல்ல மொட்டை மாடில நேத்து காய வச்ச துணியை எடுத்துட்டு வா. மழை வர்ற மாதிரி இருக்குது." எனவும்,
சரியென தலையாட்டி விட்டு, "சும்மா மயங்கின, மயங்கினன்னு அதையே சொல்லிக் காட்டிண்டு இருக்கான்…" என்று முணுமுணுத்தவாறே மேலேறினாள்.
அன்று இங்கு வந்து பார்த்த பின்னர், அங்கிருந்த பூங்கொடிகளை உருவி கயிறாக்கி அந்த பச்சை நிற ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ், துணிகள் காய வைக்க ஏதுவாக கட்டியிருந்தான். அதன் பின் நேற்று இருவருமே அவரவர் துணிகளை அலசியிருந்தனர்.
வானம் பார்க்க மழை வரும் போல் தான் இருந்தது. மழையைத் தன் வயிற்றில் சுமந்து, மிதக்க முடியாமல் மூச்சுத் திணற திணற அணிவகுத்திருந்த கருமேகங்கள் எந்த கணமேனும் மழையை பிரசவித்துவிடும் உத்தேசத்தில் இருந்தன. வெளிச்சம் நிறைந்த, ஆனால் வெயிலில்லாத குளிர்ந்த தென்றல் காற்று வீசிய அந்த ஏகாந்தப் பொழுது ஏனோ மனதிற்கு அமைதி தருவதாக இருந்தது. கூடவே வண்ண வண்ணப் பூக்களின் வாசம் வேறு! கேட்கவா வேண்டும்? சொர்க்கம் போல் இருந்த அந்த இடத்தில் இருந்து கீழிறங்கவே மனமில்லாதவளாய் சுற்றி சுற்றி வந்தாள்ஸஆரவி.
தன் மனம் முழுதாய் புரிந்ததும் விபுநந்தனின் நினைவுகள் நெஞ்சத்தின் அடியாழம் வரை சென்று கற்கண்டாய் இனித்தது. ஏற்கனவே இதோ அதோவென்று மதில் மேல் பூனையாய் இருந்தவள் இன்று முற்றிலும் அவன்புறம் சாய்ந்தேவிட்டாள். கேள்வி கேட்கும் தன் அறிவிடம் எந்த சமாதானமும் சொல்லாமல், விபுநந்தனை தன் மணவாளனாய் மனதில் வரித்துக்கொண்டாள். தன்னவனிடம் தவறில்லை என்று உறுதியாக நம்பினாள்.
அந்த செர்ரி மரச் சின்னக் கிளையில், 'My love T2E4' என்று ஹேர்பின்னால் கிறுக்கி வைத்தாள். கிறுக்கியதைப் பார்த்து கிறுக்கி போல சிரித்துக்கொண்டாள்.
காதல் கிறுக்கு!
அதில் அவள்
மனதிற்கோர் செருக்கு!
தான் ஓர் காட்டு பங்களாவினுள் யாரென்றே அறியாத, அறிமுகமற்ற ஒரு நபரோடு சிறை வைக்கப்பட்டிருக்கின்றோம், அங்கு வினோதமான சப்தங்கள் மற்றும் மனதிற்கு இன்னதென்று பிரித்தறிய முடியாத ஓர் உணர்வு தன்னை ஆட்கொள்கிறது, எப்படி, எப்போது அங்கிருந்து வெளியேறப் போகிறோம்? எதுவும் தெரியவில்லை. இப்படியான ஒரு சூழ்நிலையில் அதைப் பற்றிய எந்த நினைவும் இல்லாமல், காதல் நோய் பீடித்து ஏகாந்தமாய் சுற்றிக்கொண்டிருந்தாள் ஆரவி.
ஏதோ ஓர் மழைப் பாட்டைப் பாடி, அதற்கேற்றாற் போல தலையையும் இடையையும் மெலிதாக அசைத்துக் கொண்டிருந்தாள். இடை இடையே பூக்களை வருடி, அதற்கு முத்தம் வேறு கொடுத்தாள்.
முத்தம் பெற்ற பூக்கள் மோட்சம் கிடைத்ததென குதூகலிக்க, அவளின் இதழொற்றல் கிடைக்காத பூக்கள் ஏக்கத்தில் வாடின, பூ மகளை பார்த்து!
ஊஞ்சலின் சங்கிலியைப் பிடித்து வளைத்துக் கொண்டு,
"இவளிருதயத்தை
இரக்கமின்றிக் கூறுபோட்டு செல்கின்றான் - அந்த
ஈரெழுத்து பெயர் கொண்டவன்!" என்று வெட்கமின்றி, சத்தமாய் கவிதை பேசினாள்.
திடுமென ஓரிரு தூறல்கள் தோரணம் கட்ட ஆரம்பித்தன. "அச்சச்சோ துணி!" என்றவாறே ஓடிப்போய் கொடியிலிருந்த துணிகளை உருவினாள்.
எடுத்துவிட்டு மீண்டும் ஓட்டமும் நடையுமாக வந்து கீழிறங்க மனமில்லாதவளாய், மாடி இறங்கும் முதல் படியில் நின்றுகொண்டாள்.
இப்போது வானம் நன்றாக இருட்டியிருந்தது. அது மதிய வேளை எனக் கூற முடியாதவாறு வானத்திற்கு முகிலினங்கள் கருமை நிற தலைச் சாயம் பூசி விட்டிருந்தன. இதோ! வேகத்துடன் அடிக்கும் காற்று மேகத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கப்போகிறது. காற்றின் தீண்டலின் அழுத்தம் தாங்காமல், மேகங்கள் தன்னுள்ளிருக்கும் நீர் முத்துக்களை சிதறவிடப் போகிறது.
குழந்தையாய் மாறிய ஆரவி சற்று நேரம் மழையை வேடிக்கை பார்க்க எண்ணி, அங்கேயே நின்று கொண்டிருந்தாள். இன்னமும் அவளின் உதடுகள் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
தூறல்கள் சாரலாய் மாறியது. முகத்தில் தெறித்த சாரலை, ஆசையோடு தாடையை உயர்த்தி ஏந்திக்கொண்டாள்.
என்னிமைகளைக் கொஞ்சம் நனைத்துச் செல்!
உன் ஈரத் துளிகளில் கொஞ்சம் இசையை சேர்த்துக்கொள்!
உன் ஸ்பரிசத்தின் ஜில்லிப்பை என் மேனியில் பரிசளித்துப் போ!
உன் முத்தத்தின் தித்திப்பை
என் சித்தத்தில் கரைத்துவிடு!
ஆனால்,
மழையே...
என்னிருதயத்தின் நான்கறைகளை மட்டும் விட்டுவிடு - உள்ளே
நட்சத்திரக் குவியலோடு சிரிக்கின்றான்,
என் பொல்லாக் காதலன்!
துணிகளில் ஈரம் படுவதைக் கூட சட்டை செய்யாமல், அப்படியே கண்கள் மூடி நின்றிருந்தாள். மனதினுள் வான்மழையோடு பேசியவாறே இதழில் மலர்ந்த சிரிப்போடு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்.
இப்போது சாரல் சற்று சிறிய மழையாய் மாறியது. அப்படியே சுற்றிலும் பூக்களிடையே பார்வையை சுழற்றினாள். ஊஞ்சலின் அருகே இருந்த பூக்கொடியையும் பார்த்தாள். அப்போது தான் அது நிகழ்ந்தது.
மழையடிக்கும் போது ஊஞ்சலின் அருகே மேலிருந்து மெதுவாக ஆரம்பித்து, மழையில் முழுதாக நனைந்ததும் ஆரவியின் கண்களுக்கு ஓர் பெண் பிம்பம் தென்பட்டது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆரவியின் பார்வை அப்படியே நிலைத்துப் போனது.
சுவாசிக்கிறாளா? இல்லையா என்றே கணிக்க முடியாதளவு சிலையாகிப் போய் நின்றாள். மழையில் நனைந்து இவள் கண்களுக்கு தென்பட்ட அந்த பிம்பம், ஆரவி தன்னைப் பார்க்கிறாள் என்று புரிந்து, இவளைப் பார்த்து சிரிக்க முயன்றது.
இப்போது கண்கள் தெறித்து விடுமளவு இமைகளை விரித்துப் பார்த்தாள் ஆரவி. இதயம் துடிக்கிறதா? இது நிஜமாக நடக்கிறதா?! இந்த கண்கள் சரியாக தான் இருக்கிறதா?!
ஆரவி அசைவதைப் போல் தெரியவில்லை. எனவே அந்த உருவம் இவளை நோக்கி, "ஆரவி!" என்று அழைத்து, இரண்டடி முன்னால் நகர்ந்து வந்தது. இல்லை! இல்லை!! மிதந்து வந்தது!!!
அவ்வளவு தான்! முதல் படியில் நின்றுகொண்டிருந்தவள், பின்னால் நகர எண்ணி அந்தரத்தில் கால் வைக்க, அந்த கால உறுதி வாய்ந்த கல் படிகள் அழகாய் அவளுடலை ஏந்தி ஒரு தாயக்கட்டையைப் போல் உருட்டிவிட்டது, கடைசி படி வரை!
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment