சீதையின் பூக்காடு - 11.1
அத்தியாயம் 11.1
ஆரவி மொட்டைமாடியில் குளிர்ந்த காற்றோடு, விபுநந்தனின் நினைவுகளையும் சுவாசித்து, பூக்களின் அழகியலை நேசித்து, வான்மழையின் உறவை யாசித்து, ரசனைகளின் ரசிகையாய் மாறி நின்றிருக்கையில், ஊஞ்சலின் அருகே மழைநீரில் தோன்றிய ஓர் பெண்ணுருவத்தைப் பார்த்து, தொண்டையில் இருந்து சத்தமும் எழுப்ப மாட்டாமல், அப்படியே பின்னால் நகர்ந்து படிகட்டுகளில் உருண்டு விழுந்தாள்.
அவள் பின்னால் நகரும் பொழுதே மயக்கத்தின் துவக்கத்தில் இருந்திருக்க வேண்டும். கடைசிப் படியினருகே வந்து விழும் போது, சுத்தமாய் நினைவற்றுக் கிடந்தாள். கையில் வைத்திருந்த துணிகள் அவளுடம்பை முழுதாக சுற்றிக்கொண்டிருந்தன.
விபுநந்தன் கிச்சனில் சமையலை முடித்து விட்டு அப்போது தான் வெளியே வந்தான். காதில் அன்று போல் வாக்மேன்! எனில்? ஆரவி உருண்டு விழும் சிறு சப்தமும் கேட்டிருக்க நியாயமில்லை.
இவள் இன்னும் மொட்டை மாடியில் தான் இருக்கிறாளா என யோசனையோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு, பின் சோஃபாவில் அமர்ந்து தலையாட்டி பாடலை ரசித்துக் கேட்க ஆரம்பித்துவிட்டான்.
அடடா! அவள் வேறு அங்கு கீழே விழுந்து கிடக்கிறாள்? இவன் பாட்டுக்கும் இங்கு இப்படி பாடலில் லயித்துவிட்டான்? எத்தனை நேரம் தான் நாம் இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருப்பதாம்? நாம் அழைத்தால் கூட இவன் காதில் விழாது போலவே?
ஆமாம்… இங்கே ஒரு பெண் இருந்தாளே? அவள் எங்கே போய்விட்டாள்? அவளாலல்லவோ நம் ஆரவிக்கு இந்த நிலை? இப்போது எங்கே போய் ஒழிந்தாள் அவள்?
அதோ! அங்கே விபுநந்தன் அருகே தான் செல்கிறாள். அவனைத் தான் அழைக்கிறாள் போலும். ஆனால் இவளின் அழைப்பு அவனை எட்டியது போல் தெரியவில்லையே! அவன் தோளைப் பிடித்து உலுக்க முயல்கிறாள். பாவம்! இவளின் இருப்பை அவன் உணரவே இல்லை.
உடனே, சட்டென்று ஒரு நொடியில் ஜன்னலின் வழி வெளியே சென்றுவிட்டாள்! இப்போது மழை வேறு நன்கு வலுத்துவிட்டது. என்ன செய்கிறாள் இவள்? வெளியே போய் வேறு ஆட்கள் யாரையேனும் அழைக்கலாம் அல்லவா? அதை விடுத்து மரங்களோடு விழி பாஷைப் பேசிக் கொண்டிருக்கிறாள்?!
ஆனால்…
மரங்களிடம் என்ன மாயம் செய்தாளோ! இவளின் தீர்க்கப்பார்வை பட்டதும் முழுவீச்சிலும் தன் கிளைகளை அசைத்து, வேகக் காற்றை உண்டாக்கியது அந்த ராட்சத ஆலமரம்.
காற்றின் வேகத்தால் மழைச் சாரல்கள் ஜன்னல்கள் வழி வீட்டினுள்ளும் தெறித்தது. பாடலில் லயித்திருந்தவன் தன் மேல் மோதிய மழைக்காற்றில் கலைந்தான்.
நேற்றும் கூட ஆரவி மயங்கியிருக்கையில் பித்து பிடித்தாற் போல் அமர்ந்திருந்தவனை இந்த காற்று தானே கலைத்தது? எனில்? அதுவும் அந்த பெண்ணின் கைங்கரியம் தான் போலும்! ஹாஹா.. 'கண்'கரியம் என்றல்லவா சொல்ல வேண்டும்?
சரி, இதோ! நம் நாயகன் அந்த வாக்மேனை கீழே வைத்து விட்டு எழுந்துவிட்டான். மீண்டும் மேலே பார்க்கிறான். அதோ! இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி மேலே வருகிறான்.
மேலே வந்தவனுக்கு முதலில் ஆரவியை சுற்றியிருந்த துணிகள் தாம் பார்வைக்கு கிடைத்தது. துணிகளை இப்படி போட்டு வைத்திருக்கிறாள் என்று கோபமாக சற்று அருகே வந்ததும் தான், அவள் விழுந்து கிடப்பது தெரிகிறது.
பார்த்ததும் வேகமாக ஓடினான். "காட்டாமிட்! ஹேய் மறுபடியும் மயங்கிட்டியா? மாமி, முழிச்சு பாரு!" பரபரவென்று எழுந்து ஓடி அவனறையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தான். அவள் கண் விழிக்கும் இரண்டு நிமிட இடைவெளியில் இவன் இதயம் ஈராயிரம் முறை துடித்தது.
மெதுவாக கண்விழித்தவளை அவளறைக்கு அழைத்துச் செல்ல எண்ணி எழுப்பினான். மெல்ல எழுந்தவள் தன்னை மீட்டுக்கொள்ள ஒரு நிமிடம் பிடித்தது. அதற்குள் அறை வாயிலுக்கு அழைத்து வந்திருந்தான் விபுநந்தன்.
அப்போது தான் ஓர் பெண்ணுருவத்தைக் கண்டு கீழே விழுந்தோமென உணர்ந்த ஆரவி, மெல்ல விழிகளை சுழற்றி அவளைத் தேடினாள்.
"ஆரவி! நான் இங்க இருக்கேன்." என்று நந்தனுக்கு பின்னால் இருந்து வந்தவள், "இப்பவும் நான் உன் கண்ணுக்கு தெரியறேனா?" எனக் கேட்டாள்.
ஆம்! தெரிகிறாள். அவளைக் கண்டதும் நந்தனின் கைகளுக்குள் இருந்த ஆரவியின் உடல் கிடுகிடுவென நடுங்கியது. இவள் உருவமுள்ள பெண்ணல்ல! உருவமில்லா அரூபம் என்பதை புரிந்ததால் வந்த நடுக்கம்!
கீழ விழுந்ததில் அடி எதுவும் பட்டிருக்கிறதா என அவளின் கைகளை திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் நடுக்கத்தில் பதறிப் போனான். "வாட்? வாட்'ஸ் அப்? ஆ ர வி!! வாட் ஹேப்பண்ட் ஆரவி?" என்று அவளைப் பிடித்து உலுக்க,
அதற்குள் அந்த பெண், "ப்ளீஸ் என்னை சொல்லாத ஆரவி. நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். ஐ பெக் யூ. ப்ளீஸ் ஆரவி… அவன்கிட்ட எதுவும் சொல்லாத..." என்று கைக் கூப்பினாள். அவள் கண்களில் இருந்த மன்றாடல் ஆரவியை என்னவோ செய்தது. எனவே,
"ஆரவி!!" என்ற நந்தனின் அதட்டல் குரலுக்கு,
பலவீனமான குரலில், "ஹான்? நத்திங் விபு… ஐ… ஐ ஹேட் அ பேட் ட்ரீம்..! நத்திங் எல்ஸ்." என்று புன்னகைக்க முயன்றாள்.
"ட்ரீமா? படிக்கட்டுல நின்னுட்டு இருக்கும் போதும் ட்ரீம்ல தான் இருந்தியா? லூசா மாமி நீ?"
"ப்ளீஸ் விபு! ஃபீலிங் டயர்ட்."
"சரி உள்ள வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு! நான் சாப்ட ஏதாவது கொண்டு வர்றேன்." என்றவனிடம்,
தனியாக இருக்க பயந்து, "இல்ல விபு! நான் உன் கூடவே வர்றேன்... கீழ வச்சே சாப்பிடலாம்." என்று வேகமாக மறுத்தாள்.
ஓய்வெடு என்று கூறியவனிடம் கேட்காமல் அவனை ஒட்டிக் கொண்டே வந்தாள். இவளின் அருகாமையில் அவன் பாடு தான் திண்டாட்டமாகிப் போனது.
ஆரவியிடம் பேச எத்தனித்து இரண்டொரு முறை அவளின் பின்னேயே வந்துகொண்டிருந்த அந்த பெண், இவளின் ஒதுக்கமான செய்கைகளில் கூம்பிய முகத்துடன் ஜன்னலின் வழி வெளியேறிவிட்டாள்.
அவள் ஜன்னலின் வழி காற்றைப் போல் சென்றதை வாயைப் பிளந்துப் பார்த்திருந்தவள், ஓடிப் போய் அவள் சென்ற திசையைப் பார்த்தாள். அந்த பெண் காட்டிற்குள் நீண்ட தூரம் சென்று மறைந்துவிட, ஆரவி அப்படியே திக் பிரமை பிடித்து மிரட்சியுடன் நின்றிருந்தாள்.
"பேபி மாமி, சாப்பிட வா!"
பதிலில்லை.
"நீ தயிர் சாதம் போதும்னு சொன்னாலும் நான் உனக்காக ஸ்பெஷலா லன்ச் ரெடி பண்ணிருக்கேன் தெரியுமா? சீக்கிரம் வா!"
மௌனம்!
"ஆரவி!"
மௌனம்!!
"ஆரவி!!"
அவள் கவனம் முழுவதும் ஜன்னலின் வழி சென்று மறைந்தவளின் மீது மட்டுமே இருந்தது. விபுநந்தனுக்கு ஆரவியைக் குறித்து கவலையாகிப் போனது. என்னவாயிற்று இந்த பெண்ணிற்கு? திடுமென பயந்து, மயங்கி விழுகிறாள்; அழைத்தால் பதிலில்லாது எங்கோ வெறித்துப் பார்க்கிறாள்; கேட்டால் 'நத்திங் விபு' எனக் கூறி மௌனிக்கிறாள்.
'எதிர்பாராதவிதமாக தனிமையில் ஓர் வீட்டில் சிக்கிக் கொண்டதில் அவளுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளதோ? வீட்டு ஞாபகத்தால் அலைப்புறுகிறாளோ? இது தொடர்ந்தால் பின்விளைவு அதிகப்படியாக இருக்குமே?' இப்படி பலவாறாக சிந்தித்தவன் ஆரவிக்கு மன அழுத்தம் தான் என்ற முடிவிற்கே வந்துவிட்டான். எனவே இங்கிருந்து எப்படியாயினும் வெளியேறியே தீருவது என்று தனக்குள்ளாகவே ஓர் தீர்மானத்திற்கு வந்தான்.
'அந்த பெண்ணின் கண்களில் இருந்தது என்ன? தன்னிடம் என்ன கூற முயன்று பின்னேயே வந்தாள்? தன் அச்சத்தைப் பார்த்ததும் ஏன் அவள் முகம் அத்தனை வேதனையைக் காட்டியது? விபுவிடம் ஏன் அவளின் இருப்பைக் கூற வேண்டாமென தன்னிடம் கெஞ்சினாள்?' என்று அரூபப் பெண்ணைக் குறித்து சிந்தித்து கொண்டிருந்த ஆரவியின் அருகே வந்தான், விபுநந்தன்!
வந்தவன் அவளின் வெளிறிய முகத்தைப் பார்த்து திகைத்தான்.
"பேபி மாமி! என்ன தான் ஆச்சு உனக்கு?" குரல் ஏகத்துக்கும் கவலையாய் வெளிவந்தது.
"ஹான்? நத்திங் விபு. சாப்பிடலாமா?"
"நானும் ரொம்ப நேரமா சாப்பிட தான் உன்னை கூப்பிட்டுட்டு இருக்கேன். நீதான் பேயைக் கண்ட மாதிரி மூஞ்சிய வச்சிட்டு நிக்கற!" என்று கடுப்படித்தான்.
'நிஜமாவே பேயை தான் பார்த்தேன் விபு.'
"சரிப்பா… ஏதோ ஒரு ஞாபகத்துல இருந்துட்டேன். கோவிச்சுக்காத, வா!"
இருவரும் அவரவர் சிந்தனைகளில் மௌனமாய் உணவருந்தினர். எப்போதும் சாப்பிட்டதும் டிவியின் முன் அமர்பவன் இன்று, "ஆரவி, மொட்டைமாடிக்கு வா!" என்றழைத்துவிட்டு பதிலுக்கு காத்திராமல் படிகளில் தாவி ஏறினான்.
இந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியை கீழேயுள்ள இணைப்பைத் தொட்டு வாசிக்கலாம்📖 ✨
Comments
Post a Comment