சீதையின் பூக்காடு - 9
அத்தியாயம் 9
அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு விபுநந்தனும் ஆரவியும் தத்தம் அறைகளில் இருந்தனர்.
நந்தன் அவனறை ஜன்னல் வழியாக அந்த மழை வான இருட்டுக்குள் தூரமாய்ப் பார்வையைப் போட்டு நின்றிருந்தான். மனதில் அவள் இயல்பாக இல்லாமலும், சங்கோஜமாகவும் நின்றிருந்த தோற்றமே! தன்னை நேர்பார்வை பார்க்க இயலா அலைபாய்ந்த விழிகள் இவனை இன்னும் பித்தங்கொள்ளச் செய்வதாய் இருந்தது.
இரவு உணவு தயாரித்தலின் போதும் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். பின், இவன் பேச ஆரம்பிக்கவும் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள்.
அதையும் மீறி என்னவென்று கேட்டதற்கு, 'நத்திங் விபு!' என்று கூறி மழுப்பினாள்.
சாப்பிடும் போது இவன் ஏதோ ஜோக் சொல்லவும், மீண்டும் மதியம் போலவே பேயறைந்ததைப் போல முழித்தாள். பின் அப்படியே அரைகுறை உணவோடு எழுந்து ஓடிவிட்டாள்.
"ஓ மை லவ்! வாட் ஜஸ்ட் ஹேப்பண்ட் டூ யூ?" என்று விபுநந்தனின் உதடுகள் தன்னையறியாமலேயே கவலையில் முணுமுணுத்தன.
ஆரவியும் அவளறையில் தூங்காமல் விழித்துதான் இருந்தாள். கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. தேகம் இன்னும் கூட நடுங்கிக்கொண்டிருந்தது. நந்தனின் பார்வையில் அவனை ஏறெடுத்தும் பாராமல் தடுமாறிக் கொண்டிருந்தவளை இயல்பாக்கும் பொருட்டு, இவளிடம் பேச்சுக் கொடுத்தான் அவன். அது இவளுக்கும் புரியவே செய்தது. எனவே, சாப்பிடும் போது அவன் பேசுவதற்கு சும்மாவேணும் தலையாட்டிக் கொண்டிருந்தாள்.
"ப்ச் ஆரவி! இப்ப என்னாச்சுனு மூஞ்சிய இப்டி தூக்கி வச்சிட்டு இருக்க?"
"என் மூஞ்சி. நான் எப்டி வேணா வச்சிக்கறேன். நோக்கு என்ன போச்சு?"
"எனக்கு என்னவா? அந்த அன்னாபெல் மூஞ்சியை விட உன்னோட இந்த உம்மாணம்மூஞ்சி தான் ஓவர் திகிலைக் கிளப்புது." என்று பயந்தவன் போல் கூறவும்,
மீண்டும் 'ஹஹ்ஹ' என சிரிப்பு சத்தம் கேட்டு நீள்விரிக்கையைத் திரும்பிப் பார்த்தாள் ஆரவி. உடனே ஆரம்பித்த நகையொலி பட்டென நின்றுவிட்டது. யாரோ சிரிக்க ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். திகிலடித்த முகத்தோடு பாதி உணவிலேயே கையைக் கழுவியவள் என்ன, ஏதென்று தன்னைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த விபுநந்தனைப் பற்றி கூட கொஞ்சமும் கவலைப்படாமல் எழுந்து வந்துவிட்டாள்.
இதோ இப்போதும் தூங்காமல் கட்டிலில் கால்களை மடக்கி, உடம்பைக் குறுக்கி, தலையணையை இறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவளின் அடிமனம் இங்கே ஏதோ ஆவியோ, பேயோ இருக்கிறது என்று நம்பவே ஆரம்பித்துவிட்டது.
இருப்பினும், எழுத்தாள மூளையல்லவா? அந்த அறிவு, பயத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு மனதிற்கு தைரியம் கூறி, 'வேறு கோணத்தில் யோசித்துப் பார்!' என ஆணையிட்டது.
இப்பொழுது தான் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டதே! ஹோலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நபரின் பொய்த் தோற்றத்தையே உருவாக்க முடியும் போது, ஆளில்லா வீட்டில் இந்த அழகிய சிரிப்பொலியை உண்டாக்குவது தானா பெரிய விஷயம்? ஏற்கனவே ரிக்கார்ட் செய்திருந்த ஒலிநாடாவோ அல்லது வேறு சாதனங்கள் ஏதாவதாகக் கூட இருக்கலாமே? ஏன் தன் வீட்டில் கூட கைத் தட்டினால் ஒலியெழுப்பும் குருவி பொம்மை இருக்கிறதல்லவா?
ஆனால் அப்படி எதுவும் இருந்தால் தனக்கு கேட்கும் ஒலி, ஏன் விபுநந்தனுக்கு கேட்கவில்லை? அதுவும் மிகச் சரியாக அவன் ஏதேனும் ஜோக்கடிக்கும் போதல்லவா கேட்கிறது?!
ஆரவி நன்றாக யோசிக்க ஆரம்பித்தாள். முதலில் நேற்று மொட்டை மாடியில் முதல்முறை, அடுத்து இன்று காலை செஸ் விளையாடுவதற்கு கொஞ்சம் முன்பு, மூன்றாவது இப்போது டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது!
'இந்த மூன்று முறையும் சிரிப்பு சத்தம் கேட்கும் பொழுது விபுநந்தன் என்ன செய்து கொண்டிருந்தான்?' என இவள் அறிவு இன்னும் கூர்மையாக சிந்தித்துக் கொண்டிருக்கையில், தடாலென இடையே வந்த மனது, 'ஆரவி! நீ உன் விபுவை சந்தேகப்படுகிறாயா?' என படபடத்தது.
'என்ன? விபுவை நான் சந்தேகப்படறேனா? நோ! இரு இரு! இப்ப நீ என்ன சொன்ன? 'என் விபு'-வா? ஓ மீனாட்சி! இந்த மனசு என்ன இப்டிலாம் நினைக்கறது?'
'அட முட்டாள் மனமே! அவளை சற்று சிந்திக்க விட்டுத் தொலையேன்…' என்று அறிவு அலுத்துக்கொண்டது.
'இல்லை! இல்லை!! பாட்டொலி கேட்பதற்கு சற்று முன்… நீ ஷாருக்கான் விசிறி என்றதும் அவன் குரல் காட்டிய வேதனையை நீ உணரவில்லையா? அதன் வலி உனக்கு புரியவில்லையா? உன் விபு குற்றமற்றவன்!' என ஆரவியின் மனது நந்தனிற்காக வாதிட்டது.
'ஆரவி! உள்ளுக்குள் வலியையும் வேதனையையும் மறைத்து வைத்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் சைக்கோவாக உருவெடுக்கிறார்கள். விபுநந்தனும் அதே போல் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு உன்னை இங்கே கடத்தி வந்திருக்கலாம்.' என அறிவு தன் மேதாவித்தனத்தைக் காட்டியது.
'இல்லை ஆரவி! அப்படி கடத்தி வந்திருப்பவன் ஏன் உனக்கு சமைத்துக் கொடுத்து, உடுப்பும் கொடுத்து பார்த்துக் கொள்கிறானாம்? நம்பு ஆரவி! அவனுக்கு உன் மேல் இருப்பது காதல் தானேயன்றி வேறு எந்த கெட்ட எண்ணமும் அல்ல. உன்னைப் போல் அவனும் இங்கு ஏமாற்றி வரவழைக்கப்பட்டவனே!' என ஆரவியின் மனது அடித்துச் சொன்னது.
'என்ன? விபுவுக்கு என் மேல் காதலா?!' ஆரவியின் நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது.
'அட பாழாய்ப் போன மனமே! அவளை ஏன் குழப்புகிறாய்? ஆரவியைக் கடத்தி வந்து, மேலுக்கு நன்றாக கவனித்துவிட்டு, மறைமுகமாக அவளை பயங்கொள்ளச் செய்து பலவீனப்படுத்துவதே அவன் நோக்கம்!' என ஒரேடியாக ஆரவியின் அறிவு, விபுநந்தனை குற்றம் சாட்டியது.
'அல்ல! ஆரவியின் பலவீனத்தை உண்மையில் விபு விரும்பவில்லை என்பதே சரி!' என்று அவனில் மயங்கியிருந்த இவள் மனம் சொன்னது.
இங்கு வந்த இரண்டாம் நாள் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று இவள் சொன்னதும், விபுநந்தன் சாவகாசமாக எழுந்து போய் கூடத்திலிருந்த மோட்டார் ஸ்விட்சைப் போட்டான்.
"மோட்டார் ஸ்விட்ச் இங்க தான் இருக்கறதுன்னு நோக்கு எப்டி தெரியும்?" என்று இவள் கேட்டதற்கு, "ப்ச்! கமான் ஆரவி. சர்க்யூட் போர்ட் பக்கத்துல ஸ்விட்ச் இருக்கா பார்த்தேன். இருந்தது." என்று சாதாரணமாக உரைத்திருந்தான்.
அதை இப்போது இந்த அறிவு ஆரவியிடம் போட்டுக் கொடுத்தது.
'விபுநந்தனும் இங்கே புதிதென்றால் அவனுக்கு எப்படி இந்த வீட்டின் ஸ்விட்ச்கள் இருக்குமிடம் தெரியுமாம்?'
'ஏன்? இவள் இந்த அறையின் ஸ்விட்ச்களைத் தன்னைப் போல தெரிந்து கொள்ளவில்லையா? அது போல அவனுக்கும் தெரிந்திருக்கும்.' என்று மனம் சப்பைக்கட்டு கட்டியது.
'அது போலவே ஏதோ ஸ்விட்ச் மூலமாக ஆரவியை பயமுறுத்த அவன் செய்யும் வேலை தான் இந்த சிரிப்பொலி!' என்று அறிவு அறிவாளித்தனமாக உரைத்தது.
'இல்லை! நகையொலிக்கு காரணம் நிச்சயம் ஏதேனும் அமானுஷ்யம் தான்.' - பயமுறுத்தியது மனம்!
'இல்லவே இல்லை! விபுநந்தன் தான்!' - அறிவுறுத்தியது புத்தி!
இறுதியாக நாளை நந்தனின் அறையையும், இந்த தளத்தில் உள்ள மற்ற அறைகளையும் சோதனை செய்ய வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள் ஆரவி.
செவ்வாய்க்கிழமை!
விடிய விடிய மனதிற்கும் மூளைக்குமிடையே போராடித் தோற்றவள், குழப்ப மிகுதியில் உறங்கியும் உறங்காமலும் அதிகாலையிலேயே கண்விழித்துக் கொண்டாள்.
எழுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியே வந்தவளின் பார்வையில் விழுந்தான், பால்கனியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த விபுநந்தன்! அறிவு கொடுத்த தைரியத்தில் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவளும் அங்கு சென்றாள். அருகே சென்றவள் தடுமாற்றமின்றி அவனை ஆராயும் பார்வைப் பார்த்தாள்.
சற்று நேரம் பொறுத்து, "எதுக்கு என்னை இப்டி சைட்டடிக்கற?" கேட்டவாறே திரும்பியவன், அந்த பாசிபயிறு பச்சைநிற டாப்பும் கரும்பச்சையில் வண்ணப் பூக்கள் வாரி இறைத்திருந்த லாங் ஸ்கர்ட்டும் வழக்கம் போல் சம்பந்தமே இல்லாத துப்பட்டாவும் அணிந்து, தலையில் சுற்றிய துண்டோடு தன்னை ஆராயும் பார்வை பார்த்தவளுக்கு வஞ்சனையில்லாமல் காதல் பார்வையை பதிலாக்கினான்.
நேற்று மாலையில் இருந்தே இப்படி தானே பார்த்துக் கொண்டிருக்கிறான்! அவன் பார்வையில், ஆரவியின் மூளையால் முடக்கப்பட்ட வில்லங்கம் பிடித்த மனம் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க பார்த்தது. அதனை மீண்டும் கீழே தள்ளிவிட்டு விட்டு, 'ஆரவி! இது நீ பேச வேண்டிய நேரம்!!' என்று அறிவு அவளை உசுப்பேற்றியது.
விளைவாக, "இன்னிக்கு நாலாவது நாள் விபு. நாம முழுசா நாலு நைட் இங்கே இருந்துருக்கோம். இனியும் இப்டியே தான் இருக்கப் போறோமா?" எனக் கேட்டாள்.
"ஹேய்! என்னாச்சு உனக்கு? நேத்துல இருந்து நீ சரியே இல்ல."
"எத்தனை நாள் இப்டியே இருக்கறது விபு? வெளியேற ஏதாவது வழியிருக்கா'ன்னு பார்க்கலாம். வீ மஸ்ட் டூ சம்திங், ரைட்?"
"ஆல்ரைட்! ஆல்ரைட்! லெட்'ஸ் ஃபைண்ட் தி வே! பட் எனக்கு தெரிஞ்சு வீ டோண்'ட் ஹேவ் அ சாய்ஸ்..."
"அதுக்காக இப்டியே கையைக் கட்டிண்டு சும்மா வேடிக்கை பார்க்க சொல்றியா?"
"ஹேய் ரிலாக்ஸ் பேபி! நீ ஏன் திடீர்னு இவ்ளோ டென்ஷன் ஆகற?"
நிதானித்தவள், "அது… ஜஸ்ட் ஹோம் சிக்!" என்று ஊஞ்சலின் மீது பார்வையை வைத்தவாறு சொல்ல,
ஏதோ அலைப்புறுதலோடு இருக்கிறாளென புரிந்தவன் அவளருகே சென்று, காதோர ஈர முடிகளை ஒதுக்கி, "வாட் இஸ் ஈட்டிங் யூ, ஆரவி?" என்று ஆதரவானக் குரலில் கேட்டான்.
அவன் தன் அருகில் வரப் போகிறானெனப் புரிந்ததுமே அறிவைப் புறந்தள்ளி, மெதுவாக எழுந்துகொள்ளப் பார்த்த மனது அவனின் ஆதரவான தொடுகையிலும் கவலையானப் பார்வையிலும் அவன்பால் சரிய ஆரம்பித்தது; அறிவு மழுங்க ஆரம்பித்தது.
'ஆரவி! முழிச்சுக்கோ!' - கதறும் அறிவு.
"நத்திங் விபு. நான் கீழப் போறேன்." எனத் திரும்பியவளின் இடக்கரத்தை தன் வலது கரத்தால் பிடித்து, மீண்டும் தன் புறம் திருப்பி அவள் கன்னத்தில் தன் இடக்கையின் உள்ளங்கையைப் பதித்து, பெருவிரலால் புருவம் நீவியவனிடம், அறிவை சுத்தமாய் அடித்து வீழ்த்திவிட்டு, மொத்தமாய் குப்புற விழுந்தது அடங்காத மனம்!
"சீக்கிரம் இங்க இருந்து போய்டலாம். டோண்ட் பீ அஃப்ரைட். ம்ம்??" அவனின் தொடுகையில் கள்ளமில்லை; கனிவு மட்டுமே!
மனதிற்கு பிடித்தவனின் ஆறுதலில் ஆரவியின் இயலாமையும் சுயபச்சாதாபமும் கண்ணீரை வரவழைத்தது.
'மனதிற்கு பிடித்தவன்!' இந்த வார்த்தை பிரயோகம் கூட சரியா? தவறா? என்று புரியாத குழப்ப நிலையிலும் ஆரவியின் மனம் ஆறுதலுக்கு அவன் தோள்களையே நாடியது.
அது புரிந்தோ அன்றியோ அவள் கண்ணீரைக் கண்டவன், "ஹேய் பேபி மாமி!" என்று தன் உள்ளங்கை பதிந்த கன்னத்தைத் தலையோடு சேர்த்து, தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான்.
அந்த நொடி ஆரவிக்கு அன்னை மடி சேர்ந்த பாதுகாப்பு உணர்வு கிடைத்ததை, அவளின் அறிவே ஒத்துக்கொண்டது.
"ஆரவி! லெட் மீ நோ, வாட் டூ யூ திங்க்! வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம் பேபி?"
"சம்திங் ஹேப்பன்ஸ் ராங் ஹியர் விபு. தேர் இஸ் சம்திங் ஃபிஷ்ஷி!" - காற்றாகிப் போன கண்ணீர் குரல்.
"எது? ஏதோ சத்தம் கேட்டது சொன்னியே... அதுவா?"
"ம்ம்!! அதுவும் தான். அண்ட் ஐ கேன் ஃபீல் சம்திங்…"
"சம்திங் வாட்?"
"அது…." என்று வார்த்தை வராமல் இழுக்க,
"ப்ச் ஆரவி! ஆஸ் யூ ஸெட், உனக்கு ஹோம் சிக் தான். அண்ட் மோர் ஓவர், இப்டி வந்து மாட்டிக்கிட்டோமேன்ற பயம் வேற! அதான் நீயாவே ஏதேதோ நினைச்சு குழப்பிக்கற. நத்திங் எல்ஸ்." என்று குனிந்து அவள் கண்ணோரம் துளிர்த்திருந்த துளி நீரை ஒற்றை விரலால் சுண்டிவிட்டான்.
"ம்ம்!"
"ஹேய் ச்சியர்அப் அண்ட் பீ ஹேப்பி பேபி மாமி! எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போட்டு வைக்கறியா? நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன். இன்னிக்கு ஒரு புது இட்டாலியன் டிஷ் செய்ய போறேன் பாரு!" என்று வேண்டுமென்றே அவளை சீண்டினான்.
"செஞ்சு நீயே சாப்பிடு. எனக்கு தமிழ்நாட்டு சைவ சாப்பாடு தான் வேணும். வெவ்வவெவ்வ.." என்று பழிப்புக் காட்டி செல்பவளையே காதலாகப் பார்த்திருந்தான்.
அதுவரை காதல் வழிந்த விழிகள் அவள் கீழே சென்றதும், கோபத்தில் இரத்தமென சிவந்தது. ரௌத்திரமாய் மாறிய முகத்தோடு அவனறைக்குள் புயலென நுழைந்து கதவைச் சாத்தினான் விபுநந்தன்.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment