ஸ்கார்பியோ காதல்🚗💌 - 11.1

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 11.1

இத்தனை நாட்கள் பக்குவம் தவறிய பாகாய் தன்னுள் சேர்த்து வைத்திருந்த கோபதாபங்கள் அனைத்தையும் அம்ருதாவிடம் கொட்டி தீர்த்துவிட்டதால், அன்று எவ்வித அழுத்தமும் இல்லாமல் நிச்சலனமாய் உறங்கினான் அஸ்வத். கனவில்லை; கற்பனையில்லை. ‘உறக்கமா? விழிப்பா?’ எனும் குழப்பம் இல்லை. துஞ்சா இரவுக்கு தூக்க மாத்திரையைத் தேடவில்லை. அப்படியோர் ஆழ்ந்த உறக்கம்!

அவன் கண்விழித்தபோது நேரம் முற்பகல் பதினோரு மணி!

சோம்பலாக விழிகளைத் திறந்தவன் அலைபேசியில் நேரம் பார்த்துவிட்டு அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான். “ஓஎம்ஜி! எப்டி இவ்ளோ நேரம் தூங்கினேன்?”

கலைந்திருந்த சிகையைப் பரபரவெனத் தேய்த்துவிட்டு, தவறிய அழைப்புகளைப் பார்வையிட்டான். அவன் பணிபுரியும் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர் இருவரிடமிருந்து தான் நான்கைந்து அழைப்புகள் வந்திருந்தன. வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சாந்தி ஒருமுறை அழைத்திருந்தார். அவனை அழைப்பதற்கு வேறு யாருமில்லை.

எழுந்து சென்று தன்னைச் சுத்தம் செய்துகொண்டு வந்தான். உடலும் உள்ளமும் புத்துணர்வாக இருந்தது. கடைசியாக எப்போது இப்படி தூங்கினோம் என்று யோசித்துப் பார்த்தான். திருமணத்திற்கு முன்பு பகுதி நேர வேலை முடித்து வந்த அலுப்பில் உறங்கியிருக்கிறான். வேறெப்போதும் இப்படி ஆழ்ந்து உறங்கியதாய் நினைவேயில்லை.

அம்ருதா ஒரு சிறந்த தூக்க மாத்திரை என்று நினைத்து சிரித்துக்கொண்டான்.

‘இதுக்குத் தான் மனசுல எதையும் அழுத்தி வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்களோ? ப்ச்! சொல்றதுக்கு யாராவது இருந்தா தானே!’

தன் நிலை குறித்து ஏதேதோ சிந்தித்தபடி, நிறுவனத்திற்கு அழைத்து மதியத்திற்கு மேல் வருவதாகச் சொன்னான்.

மீண்டும் அலைபேசி அழைப்பு! வீட்டு வேலைக்கு வரும் பெண் சாந்தி அழைத்தார். அன்றாடம் சமையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு செல்வார்.

அழைப்பை ஏற்றவனிடம், ‘மற்ற வீடுகளின் வேலைகளை முடித்துவிட்டேன். இப்போது இங்கே வரட்டுமா?’ என்று கேட்க, வரச்சொல்லி விட்டு கதவைத் திறந்து வைத்தான்.

அவர் வந்ததும், “டீ கொடுங்க. பிரேக் ஃபாஸ்ட்க்கு எதுவும் வேணாம். லன்ச்க்கு சிம்பிளா செஞ்சா போதும்.” என்றவன் தேநீர் தயாராகும் முன் குளித்து வந்தான்.

பால்கனியிலிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து தேநீரைப் பருகியபடி கண்மூடியவனுக்கு, நேற்று அம்ருதாவிடம் தன் மகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் குறித்து பகிர்ந்த ஞாபகம்!

இன்னும் சற்று நேரத்தில் இருட்ட துவங்கிவிடும் என்பதால் நேரம் பார்த்தவன், “உங்களுக்கு நேரமாகிடுச்சே டாக்டர்?” என்று கேட்க,

அவளும் புறங்கைத் திருப்பி மணியைப் பார்த்துவிட்டு, “ம்ம்…” என்று இதழ் மடக்கி இழுத்தாள்.

மல்லி மொட்டாய்த் தெரிந்த அவளின் கன்னக்குழியில் அக்கறையில்லாதவன், “அடுத்து நீங்க எப்போ ஃப்ரீன்னு சொல்லுங்க டாக்டர். அப்புறம் பார்க்கலாம்.” என்றவாறு எழுந்து நின்றான்.

அதற்கும் தெளிவில்லாத, “ம்ம்!” மட்டுமே கிடைக்க, அஸ்வத் யோசித்தான்.

இவனுக்கும் அவளுடனான சந்திப்பைக் குறைக்க வேண்டுமே? அதற்காக தற்போதைய நேரத்தை நீட்டித்துக்கொள்ள நினைத்தான். “இல்லைன்னா அன்னிக்கு மாதிரி நான் டிரைவ் பண்ணவா?”

சட்டென்று கேட்டாள் அவள். “அப்போ ஸ்கார்பியோ?”

அந்த கேள்வியில் இவன் நெற்றியில் சுளிவுகள்! 

இப்போதும் கூட அதையே தான் நினைத்து தனக்குத்தானே பேசிக்கொண்டான். “உன் காரை என்னடா செய்யப் போறன்னு கேட்டிருக்கலாம். என்னை விட்டுட்டு நீ எப்டி ரிட்டர்ன் வருவன்னு கேட்டிருக்கலாம். அதை விட்டுட்டு ஏன் கார் மாடலை மென்ஷன் பண்ணினா? சம்திங் ஃபிஷ்ஷி!”

“தம்பி…” புருவ மத்தியில் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டிருந்தவனை சாந்தி அழைக்க திரும்பிப் பார்த்தான்.

அவர் கையில் துடைப்பம்!

“ஷோகேஸ் க்ளீன் பண்ணியாச்சா?” எனக் கேட்டவாறு எழுந்து அவர் பெருக்குவதற்கு ஏதுவாக ஒதுங்கி நின்றான்.

“பண்ணிட்டேன் தம்பி.” என்று அவன் முகம் பார்த்தவர், வேலையைத் தொடர்ந்தவாறு கேட்டார். “எப்போ தம்பி நம்ம பாப்பாவுக்கு படையல் போடறது?”

நெடுமூச்சுடன் நின்றவனின் பார்வை அவர் பெருக்கி தள்ளும் குப்பையில் பதிந்திருந்தது.

“பொதுவா பதினாறாம் நாள் போடுவாங்க. சிலர் முப்பதாம் நாள் கூட போடுவாங்க. அதான் கேட்டேன்.”

“ஓ…” என்றிழுத்தவன் குப்பைகள் அறையை விட்டு வெளியே செல்வதைப் பார்த்தபடி சொன்னான். “நாம முப்பதாம் நாள் போடலாம். பக்கத்துல இருக்கவங்க கிட்டேயும் சொல்லிடுங்க.”

சாந்தி அஸ்வத் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்கு வருகிறார். கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறானென்று அஸ்வத்தைக் கண்டு இரக்கப்பட்டிருக்கிறார். வேறு திருமணம் செய்து கொள்ளலாமே என்று ஓரிரு முறை மனத்தாங்கலாய்க் கேட்டதும் உண்டு. 

அஸ்வத் சாந்தியிடம் அதிகம் பேசுவதில்லை. வேலையாள் என்ற எண்ணத்தில் இருக்கலாம். ஆனால் மற்ற வீட்டு முதலாளிகளைப் போல் இவனிடம் உதாசீனமோ, அதிகாரமோ இருக்காது. அவசரத்தேவை என்றால் ஓரிரு நாட்கள் விடுமுறை கேட்டுக் கொள்ளலாம். அதனாலேயே அவன் வீட்டில் கூடுதல் சுத்தத்துடன் வேலை செய்வார்.

சாந்தி வேலையில் சேர்ந்த புதிதில் ஒரு வயதான அம்மாள் தான் வீட்டில் குழந்தையைப் பராமரித்துக் கொண்டிருந்தார். குழந்தைக்கு இரண்டு வயதாகும்போது அவருக்கும் உடல்நலம் பின்தங்கியதில் அஸ்வத் குழந்தையைத் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, கணிசமானதொரு தொகை கொடுத்து அந்த அம்மாளை நன்முறையில் அனுப்பி வைத்துவிட்டான். 

அதன்பின் சாந்தி தான் மனமுவந்து கூடுதல் நேரம் ஒதுக்கி குழந்தையைப் பார்த்துக் கொண்டார். சிறிது நாட்களில் அஸ்வத் ஒரு கர்ப்பிணியை அழைத்து வந்தான். இவரிடம் அவள் தன் சொந்தக்காரப் பெண் என்றான். ஆனால் வந்தவளோ குழந்தையிடம் தன்னை ‘அம்மா’ என்றழைக்க சொல்லிக் கொடுத்தாள்.

இத்தனை நாட்கள் இந்த வீட்டிற்கு வந்து போவதால் அஸ்வத்தின் குணம் பற்றி, நடத்தைப் பற்றி நன்கு தெரியும். அப்படியிருக்கையில் இந்தப் பெண் அவன் குழந்தையிடம் தன்னை அம்மா என்று அழைக்கச் சொல்வதில், அவள்தான் அஸ்வத்துடன் ஒட்டிக்கொள்ள முயல்கிறாள் என்று ஓரளவு ரேவதியைப் பற்றி கணித்தார். இருந்தும் இவ்வேலையில் இத்தனை வருட அனுபவமாக அவர்களின் சொந்த விடயத்தில் தலைக்கொடாது இருந்துவிட்டார்.

இரண்டு மாதங்கள் கடக்க, ரேவதிக்கு குழந்தைப் பிறந்தது. சாந்தி தான் உடனிருந்து கவனித்துக் கொண்டார். சாந்தி காலையில் அஸ்வத் வீடு உட்பட ஐந்து வீடுகளில் வேலை செய்கிறார். அங்கே வேலைகளை முடித்துவிட்டு, இங்கே வருபவர் மாலை அஸ்வத் வரும் வரை இங்கேயே ரேவதிக்கு உதவியாய் இருந்தார். அதற்காக அஸ்வத் அவருக்கு இரட்டை சம்பளம் கொடுத்தான்.

அஸ்வத்திற்கு ரேவதியைப் புரிந்ததோ அல்லது அவள்மேல் அதிருப்தியோ தெரியவில்லை. திடுமென அவன் குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டேன் என்று காலையில் அழைத்துப் போய்விட்டு, மதியமும் தன்னுடனே வைத்திருந்து மாலையில்தான் அப்பாவும் மகளும் வீடு திரும்புவார்கள். பின்னர் என்னானதோ தெரியவில்லை, அந்த ரேவதியே அஸ்வத்தின் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வர ஆரம்பித்தாள். சில நாட்கள் அவள் வர நேரமாகும். கேட்டால் கடைவீதி சென்றேன்; குழந்தைக்காக பூங்கா சென்றேன் என்பாள்.

ஒருநாள் அஸ்வத் தற்செயலாக சாந்திக்கு அழைத்து, குழந்தை வீட்டிற்கு வந்துவிட்டாளா என்று கேட்க, இவரும் ரேவதியின் கபடச்செயல் அறியாது, வரும் வழியில் இருவரும் அடிக்கடி வெளியே சென்றுவிட்டு வருவார்கள் என உண்மையை இயம்பியிருந்தார். 

அப்போதுதான் அஸ்வத்திற்கு ரேவதி மேல் சந்தேகம் வந்திருக்கக் கூடும். இருப்பினும் சாந்தியிடம் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் ரேவதியைக் கண்காணிக்க எண்ணினான்.

அப்படியே சில நாட்கள் கடக்க, திடுமென ஓர் நாள் ரேவதி அவள் குழந்தையுடன் காணாமல் போய்விட்டாள்.

அஸ்வத்திடம் கேட்டதற்கு, “அவ ஃபேமிலியோட ராசி ஆகிட்டா போல…” என விட்டேற்றியாக ஒரு அரைகுறை பதிலைத் தந்தவன், “இனி நீங்க மார்னிங் மட்டும் வந்தா போதும். நைட் டிஃபன் நான் பார்த்துக்கறேன்." என்றுவிட்டான்.

அதன்பின்னர், அஸ்வத் அலுவலகம் கிளம்பும் முன்னரே அவன் வீட்டில் வேலையை முடித்துவிட்டு சென்றுவிடுவார். பின்னர் ஒருநாள் பிற்பகல் நேரத்தில் வேலைகளை முடித்துவிட்டு தன் வீட்டில் விச்சராந்தையாகப் படுத்திருந்த சாந்தியை, அஸ்வத் அழைத்தான். 

அந்த நேரத்தில் அவன் அழைப்பை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. “என்ன தம்பி?”

“நீங்க மதியம் நம்ம ஏரியா பக்கம் வேலையா இருக்கும்போது ரேவதியை அந்தப் பக்கம் பார்த்தீங்களா?”

“இல்லயே தம்பி…” 

“ஓ! ரேவ்ஸ் மறுபடியும் சென்னை வந்திருக்கறதா கேள்விப்பட்டேன்…”

“அப்டியா? நான் வேணும்னா பக்கத்து வீட்டுல கேட்டு நம்ம வீட்டு கதவு திறந்திருக்குதான்னு பார்க்க சொல்லவா?”

“ப்ளீஸ் சொல்லுங்க. நானும் அங்கேதான் வந்துட்டிருக்கேன்.”

அவனின் பதற்றப் பேச்சில், எதுவோ சரியில்லை என்று புரிந்த சாந்தியும், விரைந்து விசாரித்துவிட்டு செய்தியை அஸ்வத்திற்கு கடத்தினார். “தம்பி, நம்ம வீடு பூட்டி தான் இருக்குதாம். காலைல நீங்க பாப்பாவைக் கூட்டிட்டுப் போனதுக்கப்புறம் யாரும் வரலயாம்.”

“தாங்க்ஸ்.” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

அதுவரை தான் சாந்திக்கு தெரியும். சாந்தி கடைசியாக அஸ்வத்தின் குழந்தையை முழுதாகப் பார்த்தது அன்று காலையில்தான்! பின்னர் மறுநாள் காலையில் உயிரற்ற பிண்டமாகத் தான் பார்த்தார். உள்ளம் சிதறிப் போய் உருக்குலைந்திருந்தான் அஸ்வத். சாந்தி தான் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அஸ்வத்தைத் தேற்றி குழந்தையின் உடலை நன்முறையில் அடக்கம் செய்ய வைத்தார். 

மற்றவர்களின், ‘எப்படி?’ என்ற கேள்விக்கு, “ஹார்ட் ப்ராப்ளம். கவனிக்காம விட்டுட்டேன்.” என்று சுருக்கமாக பதிலியம்பினான். அதற்கேற்ப குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதும் சாந்தி மூலம் அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்களும் வேறெதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

கடந்த ஒரு வாரமாக தான் அஸ்வத் பணிக்கு திரும்பியிருக்கிறான். இன்று போல் அவன் தனிமையில் அமர்ந்திருப்பதைக் காணும்போது சாந்திக்கு வருத்தமாக இருக்கும். ஒருமுறை அவன் கண்ணீருடன் துவண்டிருந்ததைப் பார்த்துவிட்டார். அதிலிருந்து அவன்மேல் இன்னும் கரிசனை அதிகமாகிப் போனது.

அஸ்வத் குழந்தை போன பிறகு சில நாட்கள் வீட்டிற்கே வருவதில்லை என்று, அவன் காலையில் சாந்தி வரும்போதுதான் கதவைத் திறப்பதைக் கண்டு அறிந்து கொண்டிருந்தார். அப்போது அவன் முகம் பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகும். குழந்தைக்கு படையல் போட்ட பிறகு, பிறிதொரு நாள் அவன் பேச வாய்ப்பளித்தால் அவனை வேறு திருமணம் செய்துகொள்ள சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார் சாந்தி.

வீட்டை சுத்தம் செய்து சமையலையும் முடித்துவிட்டு வந்தவருக்கு, ‘காலையில் இவர் அழைத்த போதும் அவன் அழைப்பை ஏற்கவில்லையே… அஸ்வத்திற்கு உடல்நிலை சரியில்லையோ? அதனால்தான் இன்று விடுமுறை எடுத்திருக்கிறானோ?’ எனக் கேட்டுவிடும் உந்துதல்!

இரண்டொரு முறை அவனின் அறைப்பக்கம் அவர் தலை தெரிய எழுந்து வெளியே வந்தான். “வேலை முடிஞ்சதா?”

“மு… ம்முடிஞ்சது தம்பி. அது… உடம்பு சரியில்லையா? கசாயம் எதுவும் செஞ்சு கொடுத்துட்டு போகட்டுமா?”

“நோ நீட்! நான் நல்லா தான் இருக்கேன். வெளி வேலை கொஞ்சம் இருக்குது. லேட்டா போவேன்.”

“ஓ! சரி சரி…வர்றேன் தம்பி.” சாந்தியிடம் வெளிப்பட்ட நிம்மதிப் புன்னகையை விழியகலாதுப் பார்த்தான் அஸ்வத்.

அவர் சென்றதும் கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தவனை அலைபேசி அழைக்க, ‘Ammukutty’ என்றது திரை.

நேற்று இவன் அவளின் மகிழுந்தை ஓட்டி வரட்டுமா எனக் கேட்டதற்கு, “அப்போ ஸ்கார்பியோ?” என்று எதையும் சிந்திக்காமல் துரிதகதியில் கேட்டிருந்தாள் அம்ருதா.

“உங்களை விட்டுட்டு வந்து எடுத்துக்க வேண்டியதுதான்.” என்றிவன் இலகுவாக சொல்ல,

“நோ நோ! வேணாம் சர். நாம இன்னொரு நாள் பேசலாம். உங்களுக்கு டைம் கிடைக்கும்போது சொல்லுங்க.” என்று தலையசைக்க, இவனும் அவளுடன் நகர்ந்து வந்தான்.

இருவரும் அங்கிருந்த ஊழியர்களிடம் ஆளுக்கொன்றாய்த் தங்களின் மகிழுந்து திறப்புகளைக் கொடுக்க, அவர்கள் தரிப்பிடத்தில் இருந்து மகிழுந்தைக் கொணரச் சென்றார்கள். முதலில் வந்தது ஸ்கார்பியோ தான்!

உள்ளே ஏறிய அஸ்வத் கவனத்துடன் அம்ருவின் செயலுக்கு காத்திருந்தான். இவன் எதிர்பார்த்ததைப் போலவே, சரிந்த கைப்பையைத் தோளில் மாட்டியவளின் மற்றொரு கரம் ஸ்கார்பியோவிடம்! 

‘அந்த விரல்கள் என் ஸ்கார்பியோவிடம் என்ன பேசுகின்றன?’

ஒருவேளை இந்த மாதிரி (model) மகிழுந்தின் மேல் அவளுக்கு பிரேமையாக இருக்கலாம் என்று சொல்லி அப்போதைக்கு தன் மனத்திடம் அரைகுறை சமாதானம் செய்திருந்தான்.

இவனின் மகிழுந்தை முன்னகர்த்தினால் தான் அம்ருவின் மகிழுந்து வெளியே வர முடியுமாதலால், வாகனத்தை மெதுவே நகர்த்தியபடி சொன்னான். “பார்க்கலாம் டாக்டர். நாளைக்கு ஃப்ரீ டைம் இருந்தா சொல்லுங்க.” 

“ஷ்யோர் சர்.” என்றவள் மகிழுந்தை வெளியே கொண்டு வரும் வரை ஓரமாய் காத்திருந்தவன், அவளுக்கு கையுயர்த்தி விடைகொடுத்து அவள் சென்ற பின்னரே புறப்பட்டிருந்தான்.

அஸ்வத்தின் அந்த சிறு அனுசரணை செயலில், அழையா விருந்தாளிகளாய் அம்ருவின் உதடுகளில் சிரிப்பும் கன்னக்குழியில் பூரிப்பும்!

இந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியை வாசிக்க கீழேயுள்ள இணைப்பைத் திறக்கவும்🔗📖


Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)