Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 11.2

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 11.2

நேற்று அவளிடம் தன் உள்ளக்கிடக்கையைக் கவிழ்த்துவிட்டதில் அஸ்வத் ஆழ்ந்து உறங்கியிருக்க, அவனின் குழந்தையை நினைத்து அம்ருதா உறக்கத்தைத் தொலைத்திருந்தாள். ஏனெனில் அவனைச் சந்தித்துவிட்டு வந்த பின்னும் அவளிடம் அதே சிந்தனை! 

என்று அஸ்வத்தைச் சந்தித்தாளோ, அன்றிலிருந்து அவளுக்கு அரைகுறை உறக்கம்தான்! கண்ணை மூடினாலே கனவாகவோ கற்பனையாகவோ, அன்று கானகத்தில் பார்த்தபோது நாசியில் உறைந்த குருதியுடன் அந்தக் குழந்தை உறக்கத்தில் இருப்பதைப் போல் வாய் பிளந்து படுத்திருந்த காட்சியே வந்து அவளை உலுக்கியது. 

உறக்கம் வராமல் இரவில் தன் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தவளுக்கு ஆத்திரம் நெஞ்சையடைத்தது. துரோகத்தின் விளைவால் அந்த பிஞ்சு அக்கதிக்கு ஆளாகியிருக்கிறாள் என்று தெரிந்த பின்னர், அந்த ரேவதியைக் கண்டு கழுத்தைத் திருகிவிடும் வேகம் பிறக்க, ‘தனக்கே இவ்வளவு கோபம் வருகிறது. அஸ்வத் எப்படித்தான் அவளைச் சும்மா விட்டு வைத்திருக்கிறானோ!’ என்றெண்ணிய மனம் அஸ்வத்திடம் திரும்பியது.

தன் வாழ்வில் அரிதாய்க் கிடைத்த குறிஞ்சிப் பூவொன்றை இழந்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் அவன் நிலை நெஞ்சை உருக்குவதாய் இருந்தது. வெளியே திடமாக காட்டிக்கொள்ளும் அந்த கம்பீரமான ஆண்மகன் உள்ளுக்குள் எத்துணை உடைந்திருப்பான் என்று அவன் ஒவ்வொரு முறை உணர்ச்சிவசப்படும் போதும் அருகேயிருந்து காண்கிறாள் இவள்.

“அஸ்வத்!” என்று ஆதூரமாகச் சொல்லிப் பார்த்தாள். 

பசுஞ்சோலைக்குள் புகுந்து அதன் குளுமையில் சுகித்து, வெளியே வர மனமற்று உள்ளேயே கிறங்கி கிடக்க தோன்றுமே… அவ்வுணர்வில் லயித்து ‘அஸ்வத்’ எனும் பெயரை விட்டு நகராமல் சண்டித்தனம் செய்தது அம்ருதாவின் அந்தராத்மா!

அவன் இவளை, ‘டாக்டர்!’ என்றழைப்பதை நினைத்தவள், 
‘ஏன் டாக்டர் டாக்டர்ன்னு ஏலம் விடறான்? அம்ருதான்னு கூப்பிட்டா என்னவாம்?’ என்று மனம் சிணுங்க புரண்டு படுத்தவள் உறங்க முயன்றாள். அக்குழந்தையின் பிளந்து வெளுத்திருந்த சின்னஞ்சிறு உதடுகளும் நாசியில் உறைந்து கருத்திருந்த குருதியும் அவளின் உறக்கத்துடன் மீண்டும் கண்ணாம்மூச்சி ஆடின. 

படக்கென எழுந்தவளின் இதழ்களில், ‘பேபி!’ எனும் முணுமுணுப்பு; முகமெங்கும் வியர்வையின் பிசுபிசுப்பு!

கசிந்து வந்த கண்ணீருடன் படபடத்த நெஞ்சத்தை அழுத்திவிட்டு தண்ணீரை எடுத்து பருகினாள். 

‘உன் கேரியர்ல நீ இதுமாதிரி நிறைய கேஸ் பார்க்க வேண்டி வரும் அம்ரு! நீ இந்த விஷயத்துல மெச்சூரிட்டி இல்லாதவன்னு அண்ணா சொல்றது நிஜமாகிட கூடாது. பீ ஸ்ட்ராங்!’ என்று தன்னைத் தேற்றிக்கொள்ள முயன்றவளின் நினைவு ரேவதியிடம் திரும்பியது. 

இவர்களும் இவளின் மருந்து ஆராய்ச்சியில் குழந்தையை உபயோகிப்பார்கள்தான்! ஆனால் அதற்கு முறைப்படி பெற்றோர்களின் ஒப்புதல் பெற வேண்டும். ‘Parents/guardians informed consent’ என்று அதற்கு தனி நடைமுறையே இருக்கிறது. 

அத்துடன் இதுபோன்ற ஆராய்ச்சியில் பங்கு பெறும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வுப் பணியாளர்களுக்கு முன்பே மருத்துவ பரிசோதனையில்(Phase 1–4) பங்கேற்ற அனுபவமும், பயிற்சியைத் தொடர்ந்து ஆராய்ச்சி படிப்பில் சான்றிதழ் (Diploma / Certificate in Clinical Research), Good Clinical Practice (GCP) சான்றிதழ் போன்ற கூடுதல் தகுதிகளும் இருக்கவேண்டும்.
 
எந்த புதிய மருந்து ஆராய்ச்சியும் இந்தியாவில் DCGI’இன் (Drugs Controller General of India) அனுமதி பெற்றே செய்ய வேண்டும். Pharmacology / Drug Development’இன் ஒப்புதல் மற்றும் ICMR’இன் (Indian Council of Medical Research) விதிமுறைகளுடன் நெறிமுறைகள் குழுவின் (Ethics Committee) அங்கீகாரத்தையும் பெற வேண்டும். 

பின்னும் மருந்து இயங்கும் விதம், பக்க விளைவுகள், பரிசோதனை கட்டங்கள் என்று எத்தனையோ இருக்கின்றன.

குழந்தையைக் கொன்ற இவர்கள் இதில் ஏதேனும் ஒன்றையாவது கடைபிடித்திருப்பார்களா? புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள், 2019 மற்றும் ICMR வழிகாட்டுதல்களின்படி, குழந்தையின் தகப்பனுக்குத் தெரியாமல் ரேவதியும் அந்தக் குழுவினரும் செய்தது முற்றிலும் சட்ட விரோத செயல்! பணத்திற்காக என்றாலும் தன் வயிற்றில் வைத்து வளர்த்த குழந்தையை அப்படி சட்ட விரோதமாக எப்படி அவளால் தூக்கிக் கொடுக்க முடிந்தது? 

முடிகிறதே! வயிற்றில் வளரும் சிசுவைக் கலைக்கவென, குழந்தை நல மருத்துவப் படிப்பில் சின்னப் பெண் என்று தன்னிடமே மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் சட்ட விரோதமாக செய்ய எத்தனை பேர் கேட்டிருக்கிறார்கள்! இருந்தும் ரேவதியின் செயல் கொடூரத்தின் உச்சமாக தெரிந்தது. அம்மா என்று நம்பிய அந்த அம்முக்குட்டியின் மழலை முகம் அவளைப் பாதிக்கவில்லையா?

“யூ ஆர் டெவில் ரேவதி!” என்றவளுக்கு கோபம் கனன்றது.

எந்த மருத்துவரிடம் சென்றிருப்பாள்? எந்த மருந்தைக் குறித்து ஆராய்ச்சி செய்திருப்பார்கள்? அவர்கள் இடம் எந்த ஊரில் இருக்கிறது? அஸ்வத் அவர்களிடமிருந்து குழந்தையை எப்படி மீட்டு வந்திருப்பான்? ரேவதி இப்போது எங்கே இருக்கிறாள்? இதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் தலைவேதனையாக இருந்தது அந்த மருத்துவப் பெண்ணுக்கு!

அதனால்தான் காலையில் பணிக்கு வந்த பின்னர் கிடைத்த இடைவெளியில் அஸ்வத்திற்கு அழைத்துவிட்டாள். 

‘Ammukutty' என்ற பெயரைப் பார்த்ததும், “ப்ச்! இந்த பேரை முதல்ல மாத்தணும்.” என்றவாறு அழைப்பை ஏற்றான். “டாக்டர்!”

“சர், ஸாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ. சும்மா உங்க லன்ச் டைம் எப்போன்னு கேட்கலாம்ன்னு…” ஆர்பாட்டமில்லாமல் அல்லியால் வருடிய உணர்வைத் தரும் அம்ருவின் குரலை அவன் மனம் சிலாகிக்க மறுத்தது. 

“எதுக்கு டாக்டர் ஸாரி? நானே உங்களைக் கூப்பிடலாம்னு தான் நினைச்சேன். இன்னிக்கு நான் ஆஃப் தான்! எங்கே வரணும்னு சொல்லுங்க?”

“லீவா? ஏன் சர்? ஹோப் யூ ஆர் டூயிங் வெல்…”

ஏனிந்த பதற்றம் பெண்ணே?

‘மருத்துவச்சியல்லவா?’ என்றொரு எள்ளல் நகை இவனிடம்! 

ஆனால் யாருமற்ற அனாதையான தனக்காக அம்ருதா பதறுவது நன்றாகத்தான் இருக்கிறது. நாளை என் கையில் உயிர் விடும்போது இன்னும் நன்றாக இருக்கும். நினைவின் முடிவில் அஸ்வத்தின் புன்னகை அகலமானது.

சற்றுமுன் சாந்தியும் இவனுக்காக பதறத்தான் செய்தார். இவன் நன்றாக இருக்கிறானென்று தெரிந்ததும் நிம்மதியடைந்தார். அதனை ஓர் வெறுமையானப் பார்வையுடன் கடந்தவனுக்கு, இப்போது தனக்காக அம்ருதா கவலைக்கொள்வது நன்றாக இருக்கிறதாம்! மனத்தில் முகிழ்க்கும் அந்த இதம் குறித்து சிந்திக்க வழியற்று, மனம் முழுவதும் அம்ருதாவை எப்படி, எங்கே வைத்து தாக்குவது என்ற சிந்தனையே!

“ஐ’ம் டூயிங் வெரி வெல் டாக்டர். இன்ஃபாக்ட் இத்தனை நாள் சுமந்த பாரத்தை உங்ககிட்ட இறக்கி வச்சதுனாலயோ என்னவோ ரொம்ப நாளைக்கப்புறம் நேத்து நல்லாவே தூங்கினேன். காலைலயும் எழுந்துக்க லேட்! ஸோ லீவு சொல்லிட்டேன்.”

“ஓ… அப்டீன்னா…”

“சொல்லுங்க டாக்டர். எங்கே பார்க்கலாம்? ஹாஸ்பிடல் வரவா?”

“இல்ல… நான்… நான் அங்கே வரட்டுமா சர்?”

அஸ்வத் இதனை முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை. மீண்டும் அம்ரு விரைவில் தன்னை நெருங்கி வருவதைப் போன்ற பிம்பம்! அடிமனதில் சொல்லத் தெரியாத ஓர் நெருடல்! இவள் என் திட்டத்தை அறிந்திருப்பாளோ? ஆனால் அதெப்படி சாத்தியம்?

‘முதல்ல எப்டி என்னை இவ்ளோ தூரத்துக்கு நம்புறா?’

“சர்?”

“ஹாங்? யாஹ்… வாங்களேன். அட்ரஸ் சென்ட் பண்றேன்.” முயன்று இயல்பு போல் பேசிவிட்டு வைத்தவன், ‘அவளுக்கு தெரிய வேண்டியதுவரை சொல்லியாயிற்று. இதற்கு மேல் இந்த டாக்டரை விட்டு வைக்க வேண்டுமா? இன்றே, இப்போதே நாள் குறித்தாலென்ன?’ என்ற ரீதியில் சிந்தித்தான்.

Scorpio’s engine will roar🚗🔥...


Comments

  1. Kandippa ketpom. Scorpio kum Amrutha kum enna connection. sari adhu kooda medhuva sollunga. Ashwath plan enna aga pogutho therila. Adha mattum sollunga please. adutha update seekiram thangalen.

    ReplyDelete
    Replies
    1. First impression! அதுதான் அம்ருவுக்கும் ஸ்கார்பியோவுக்கும் உள்ள connection. பெரிசா வேறொன்றுமில்லை. சீக்கிரம் போட முயற்சிக்கிறேன் சிஸ்🙂🙂 மிக்க நன்றி 🫶🫶

      Delete
  2. தன்னில் முகிழ்ந்திருக்கும் காதலை அறிந்துகொள்ள அஸ்வத்திற்கு நேரமில்லை,
    ஸ்கார்பியோவின் மீதுள்ள காதலை விளக்கிச்சொல்ல அம்ருதாவிற்கு நேரமில்லை,
    அடுத்த updateயை சீக்கிரம் தர ஆசிரியைக்கு நேரமில்லை,
    'ஸ்கார்பியோ காதலின்' அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கும் வாசகிக்கு ஒவ்வொரு பொழுதும் யுகமாக நீள்கிறது.😉

    ReplyDelete
    Replies
    1. அட அட அட! கவிதைங்க கவிதை! மிக்க நன்றி 🫶🫶 சீக்கிரமே அடுத்தது போட முயற்சிக்கறேன்🙂🙂

      Delete

Post a Comment

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.